Home » Articles » புத்தாண்டு சிந்தனைகள்

 
புத்தாண்டு சிந்தனைகள்


மனோகரன் பி.கே
Author:

2017 புத்தாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2016 ம் ஆண்டு நம் நினைவலைகளிலிருந்து சற்று விலகிச் செல்கிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக இயல்தானே?

மகிழ்ச்சி, துக்கம், சாதனை, வேதனை, போட்டி, பொறாமை, ஏமாற்றம், ஏக்கம் என எவ்வளவோ சந்தித்திருப்போம். இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக அமையட்டும் என்று எண்ணி புத்தாண்டு சபதங்களை, உறுதிமொழிகளை ஏற்போம். அது நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்.

உலகில் பிறந்த எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் துயரத்தை, சோகத்தை சந்தித்தவர்களாகத் தான் இருப்பார்கள். ஆனால், சிலர் உடனடியாக அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு வந்து விடுகிறார்கள். பலர் அதிலேயே சிலகாலம் தத்தளித்து பிறகு மீண்டு வருகிறார்கள். இன்னும் சிலர் அதிலேயே மூழ்கிவிடுகிறார்கள். மீண்டு வருவதே இல்லை.

சோகத்திற்கு முக்கியமானது காரணம் இழப்பு. பதவி, புகழ், கௌரவம் போன்றவற்றை இழந்து தவிப்பது ஒருவகை. பணம், பொருள், சொத்து போன்றவற்றைப் பறிகொடுத்து தவிப்பது இரண்டாவது வகை. உறவுகளை நண்பர்களை காலனுக்கு கொடுத்துவிட்டு பரிதவிப்பது மூன்றாவது வகை. இம்மூன்றில் இறப்பு ஏற்படுத்தும் சோகம்தான் உச்சம்.

ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒருமுடிவு தவிர்க்க முடியாதது. ஓட்டப்பந்தயப் போட்டியில் ஓர் எல்லை இருக்கிறது. அந்த எல்லையைத் தொட்டு விடலாம் என்ற எண்ணத்தில் தான் ஓடுகிறார்கள். எல்லையே இல்லாவிட்டால் யார் ஓடுவார்கள்? எதை நோக்கி ஓடுவார்கள்? வாழ்க்கையும் ஒரு ஓட்டப்பந்தயம் தான்!.

மண்ணில்  தோன்றிய ஜீவன்கள் அனைத்திற்கும் மறைவு என்பது நிச்சயம் உண்டு. பூத்த பூ, காயாகி, காய் கனியாகி, கனி விதையாகி, விதை விருட்சமாகிறது. ஒன்றின் மரணம் மற்றொன்றின் ஜனனம். இது இயற்கை கற்றுத் தருகிற வாழ்க்கைப்பாடம்.

மனிதன் பிறக்கும்போதே அவனுடைய இறப்பும் நிச்சயிக்கப்படுகிறது ஆனால், வாழும்போது பிறந்த தேதி தெரியுமே அன்றி, மறையும் தேதி தெரியாது. வாழ்க்கையின் ரகசியம் அங்குதான் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது. அந்தநாள் நம்மைத் தீண்டும்வரை இருப்பவர்களை நேசித்து, எஞ்சி உள்ள வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும்.

சோகத்தை விலக்கு

கடந்தகாலம் என்பது எல்லோருக்கும் உண்டு. அதில் மகிழ்ச்சியும் இருக்கும், சோகமும் இருக்கும். மகிழ்ச்சியை நினைத்துப் பார்க்க வேண்டும். சோகத்தை மறக்கப்பார்க்க வேண்டும்.

கால்குலேட்டரை உபயோகிக்கும் போது ஒரு கணக்கு முடிந்த பின்பு அதை அழித்து விட்டு அடுத்த கணக்கு போட்டால்தான் சரியான விடை கிடைக்கும். போட்டு முடித்த கணக்குடன் தொடர்ந்து போட்டுக்கொண்டிருந்தால் தவறான விடைதான் வரும். இது நம் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

கசப்பான பழைய நினைவுகள் நிம்மதி இழக்கச் செய்யும். அவற்றையே நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாழாக்கிக் கொள்வது மடமை. அத்தகைய சம்பவங்களிலிருந்து அனுபவப்பாடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, சம்பவத்தை மறந்துவிட வேண்டும். முழுமையாக மறக்க முடியாவிட்டாலும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட வேண்டும். இத்தகைய சோகத்திலிருந்து வரவில்லையென்றால், நாளடைவில் உடம்பு துருப்பிடித்த எந்திரம் போலாகிவிடும். படிப்படியாக திறமையும், ஆற்றலும் அரிக்கப்பட்டு விடும். எவ்வளவு விரைவாக சோகம் என்ற புதை மணலில் இருந்து மீண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக விடுபட்டு மீண்டு வரவேண்டும். மாறாக, சோகம் நீடித்தால் குடும்பம், தொழில், வருமானம் என அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும். நாளடைவில் மனம் அதிலேயே ஒருவகையான சுகம் காணத் தொடங்கி விடும். போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் அன்றாட வாழ்வை எதிர்கொள்வதற்கே அதிக அளவில் சக்தி தேவைப்படுகிறது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2017

இங்கு இவர் இப்படி
முன்பு எப்போது சொல்லப்படாத ஒரு கதை
படைப்பாற்றல்
ஸ்ரீலங்கா – சுற்றுலா
என் பள்ளி
சோதனைகளை, சோதனை செய்…
பூமிப்பந்து பூத்துக் குலுங்கட்டும்…
உணவு முறைகள்
வாழ நினைத்தால் வாழலாம்
வெற்றி உங்கள் கையில்…37
விரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்
மெய்நிகர்
புத்தாண்டு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
நெஞ்சில் துணிவிருந்தால்! நிலவுக்கும் போய் வரலாம்!!
உள்ளத்தோடு உள்ளம்