Home » Cover Story » நெஞ்சில் துணிவிருந்தால்! நிலவுக்கும் போய் வரலாம்!!

 
நெஞ்சில் துணிவிருந்தால்! நிலவுக்கும் போய் வரலாம்!!


ஆசிரியர் குழு
Author:

பேராசிரியர். முனைவர். சி.சுப்பிரமணியம்

முன்னாள் துணைவேந்தர், முன்னாள் பதிவாளர்

தலைவர், மேலாண்மை அறங்காவலர்,

புரபசனல் கல்வி நிறுவனங்களின் குழுமம், பல்லடம்

தலைவர், மேலாண்மை அறங்காவலர்,

ஏ.வி.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தெக்குப்பாளையம், கோவை.

தலைவர் மேலாண்மை அறங்காவலர், ஆறுமுகம் அகாடமி,அரவக்குறிச்சி

தலைவர் மேலாண்மை அறங்காவலர்,ஆசான் கலை அறிவியல் கல்லூரி,கரூர்

                  “அறிவாற்றல் அன்புமனம் ஈகைப் பண்பு

                  அளப்பரிய தன்மானம் நேர்மை நெஞ்சம்

                  நெறியோடு வாழுகின்ற வாழ்க்கை யார்க்கும்

                  நெஞ்சத்தால் தீங்கு நினையாத பண்பு

                  வெறியோடு செயல் செய்யும் வேகம் என்றும்

                  வெற்றியையே அணிகின்ற வீரம் அன்பே

                  குறியாக நடைபோடும் வாழ்வு மாறா

                  கொள்கை மனம் குணக்குன்று இவரே சி.எஸ்”

                  – தேசிய நல்லாசிரியர் புலவர். நாகு. ஆறுமுகம்

கே.  தாங்கள் பிறந்து வளர்ந்தது பற்றி?

ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் தென்கிழக்கு மூலையில் கடைக்கோடி கிராமமாக இருந்து, மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது ஈரோடு மாவட்டத்துக்குள்ளும், தற்போது திருப்பூர் மாவட்டத்துக்குள்ளும் இயங்கி வரும் மாமரத்துப்பட்டி என்னும் சிற்றூர் தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். உழுதுண்டு வாழும் விவசாயப் பெருங்குடி மக்கள் பெரும்பாலும் வாழும் கிராமம் மாமரத்துப்பட்டி. அங்கு பாரம்பரியமாக, தீவினை அகற்றி, தானம் விரும்பி, செய்வன திருந்தச் செய்து வேளாண்மை செய்து ,வாழ்ந்து வந்த குடும்பத்தில் திரு. செ. சின்னச்சாமி -திருமதி. செல்லாத்தாள் ஆகியோரின் இளைய மகனாக 4. 5. 1951 ஆம் நாள் பிறந்தேன். தொடக்கக் கல்வியை மாமரத்துப்பட்டி ஓராசிரியர் பள்ளியிலும், நடுநிலைக் கல்வியை அரிக்காரன்வலசு நடுநிலைப்பள்ளியிலும், உயர்நிலை  – மேல்நிலைக்கல்வியை அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் படித்தேன்.

புகுமுகவகுப்பும், இளம் அறிவியல் (வேதியியல்) பட்ட வகுப்பும் பொள்ளாச்சி ந.க.ம. கல்லூரியில்  முடிந்தேன். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம். ஏ (தமிழ் இலக்கியம்) பயின்றேன். தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் பயின்று எம்.ஃபில் பட்டமும், பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பயின்று பி.எச்.டி., பட்டமும் பெற்றேன்.

கே. ஆசிரியப்பணியைத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம் என்ன?

நான் ஆசிரியப்பணியைத் தேர்ந்தெடுத்ததற்கான முழுமுதற்காரணம் எனக்கு வாய்த்த ஆசிரியப் பெருமக்கள்தான். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எனக்குப் பாடஞ்சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் தலைசிறந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுடன்  இன்னும் நான் தொடர்பில் இருக்கிறேன். எனினும், என்னுடைய நெஞ்சில் தமிழ் உணர்வையும், சமுதாய உணர்வையும் ஊட்டியவர்கள் இருவர். .அவர்கள் யாரெனில் நடமாடும் பல்கலைக்கழகங்களாக இருந்து, இன்றுவரை எனக்கு உந்து சக்தியாக இருக்கின்ற, இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற, என் ஆய்வு நெறியாளர் கவிஞர். சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் தேசிய, மாநில நல்லாசிரியர் விருது பெற்றவரும், தொடக்கப்பள்ளியிலும்,  நடுநிலைப்பள்ளியிலும் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவருமான ஆசிரியர் புலவர். நாகு. ஆறுமுகம் ஆகிய இருவரும் ஆவார்கள்.

நானும் எங்கள் குடும்பத்தினரும், உறவினர் குடும்பத்தினரும் தொடங்கி 20 ஆண்டுகளாக நடத்தி வருகின்ற ஆறுமுகம் கல்வியகம், நுழைவுரிமை மேல்நிலைப்பள்ளி என்கின்ற அரவக்குறிச்சியிலுள்ள மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு என் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பெயரும், அங்குள்ள நூலகத்திற்கு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பெயரும் சூட்டுமளவுக்கு அவர்கள் என்னை ஈர்த்தவர்கள். அவர்களின் காலடித்தடத்தைப் பின்பற்றியே ஆசிரியப்பணியை நான் தேர்வு செய்தேன்.

கே. கிராமப்புறத்தில் பிறந்து ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி உயர்வு அடைந்திருக்கிறீர்கள். அதுபற்றி…

வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கு, நாம் கிராமத்தில் பிறந்தோமா அல்லது நகரத்தில் பிறந்தோமா என்பது முக்கியமல்ல. அமெரிக்கக் குடியரசுத்தலைவராக இருந்த திரு. ஆபிரகாம் லிங்கன் அவர்கள் மிகச் சாதாரணமான செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர்தான். எளிய படகோட்டியின் மகனாகப்பிறந்து, தமிழ்வழியில் கல்வி கற்று, பாரதத்திருநாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்தவர் தான் நம் நேசத்துக்குரிய திரு. அப்துல்கலாம் அவர்கள். இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

நேர்மையும், இடைவிடாத முயற்சியும், நல்லொழுக்கமும், உச்சந்தொட வேண்டுமென்ற உந்துதலும் இருந்தால், வாழ்வில் எண்ணிய எண்ணியாங்கு எய்தலாம். மேற்காணும் தலைமைப்பண்புகளோடு , இறையருளும், தந்தை- தாய் ஆசிகளும், குருவருளும், ஆட்சிப்பொறுப்பிலிருந்த அம்மா அவர்களின் பேராதரவும் எனக்கு கிட்டியமையால் நான் துணைவேந்தராக முடிந்தது.

கே. தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு உங்கள் பணிக்காலத்தில் செய்த சாதனைகள் என்னென்ன?

  • தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், பொய்யான குற்றச்சாட்டின் மூலம் பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு கல்விநிலைப் பணியாளர்கள், மூன்று அலுவல் நிலைப்பணியாளர்களை, மேதகு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் பெற்று மீண்டும் பணியில் அமர்த்தி, அவர்களின் பணிக்காலத்தை ஒழுங்குப்படுத்தி, இழந்த ஊதியத்தை மீண்டும் பெற்றுத்தந்து ஐந்து குடும்பங்களை வாழ வைத்தது.
  • மேற்காணும் ஐவரையும் பணியமர்த்தக்கோரி, ஆதரவுப் போராட்டம் நடத்தி, 89 நாட்கள் வரை ஊதியம் இழந்த அனைத்துப் பணியாளர்களையும் சனிக்கிழமைகளில் கூடுதல் பணியாற்றச் சொல்லி, இழந்த நாட்களை ஈடுகட்ட வைத்து, இழந்த நாட்களுக்கான ஊதியம் அனைத்தையும் வழங்கியது.
  • நான் பணியாற்றியபோது பல்கலைக்கழகத்தில் நிலுவையிலிருந்த 1200 தணிக்கைத் தடைகளை, உள் கணக்குத் தணிக்கைத்துறை மூலம் ஓராண்டில் நீக்கி, 180 தணிக்கைத்தடைகள் மட்டுமே உள்ளதாக மாற்றி, இந்தியாவிலேயே மிகக்குறைந்த தணிக்கைத்தடை உள்ள பல்கலைக்கழகமாக மாற்றியது.
  • பத்தாண்டுகளுக்கு மேல் பதவி உயர்வு பெறாமல் இருந்த 37 பணியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கியது.
  • 15 ஆண்டுகளாக, தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 24 பணியாளர்களை நிரந்தரமாக்கி வாழ்வளித்தது.
  • பத்தாண்டுகளுக்கு மேல், பணிமுன்னடைவு பெறாமல் இருந்த 24 இணைப்பேராசியர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கியது.
  • ஆய்வு உதவியாளர்கள், செல்லடைவுப் பணியாளர்கள், இளநிலை ஆய்வாளர் போன்ற பணிகளில் 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஒப்பளிக்கப்படாத பணியிடங்களில் இருந்து வாழ்வில் ஒளியிழந்து நொந்து போயிருந்த 29 பேரின் பணியிடங்களுக்கு அரசின் ஒப்புதல் பெற்று, அவர்களை விரிவுரையாளர்களாகப் பணிமேம்படுத்த அரசு ஆணை பெற்று, அவர்களுக்கு விரிவுரையாளர் பணி வழங்கியது.
  • எஸ்.சி எஸ்.டி பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பியது.
  • பாராளுமன்ற வடிவில் கட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஒன்றரை லட்சம் நூல்களைக் கொண்ட தஞ்சைப்பல்கலைக்கழக நூலகத்தை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் திறந்துவிட்டு, யார் வேண்டுமானாலும் உறுப்பினராக, புரவலராக ஆகலாம் என ஆக்கி மக்கள் பல்கலைக்கழகமாக மாற்றியது.
  • சுற்றுவட்டாரத்து மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள, பல்கலைக்கழகத்தைத் திறந்துவிட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியதுடன் ஒரு ரூபாய்க்கு மூலிகைத் தேநீர் வழங்கி, தமிழிசையை ஒலிபரப்பி ‘மக்கள் துணைவேந்தர்’ என்ற பெயரைப் பெற்றது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2017

இங்கு இவர் இப்படி
முன்பு எப்போது சொல்லப்படாத ஒரு கதை
படைப்பாற்றல்
ஸ்ரீலங்கா – சுற்றுலா
என் பள்ளி
சோதனைகளை, சோதனை செய்…
பூமிப்பந்து பூத்துக் குலுங்கட்டும்…
உணவு முறைகள்
வாழ நினைத்தால் வாழலாம்
வெற்றி உங்கள் கையில்…37
விரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்
மெய்நிகர்
புத்தாண்டு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
நெஞ்சில் துணிவிருந்தால்! நிலவுக்கும் போய் வரலாம்!!
உள்ளத்தோடு உள்ளம்