– 2016 – October | தன்னம்பிக்கை

Home » 2016 » October (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    எண்ணத்துப்பூச்சி…

    பட்டாம் பூச்சியை வண்ணத்துப்பூச்சி என்று சொல்வார்கள். ஆர்த்ரோபோடா என்று ஆர்ப்பரிக்கும் அறிவியல் எண்ணம் மரியாதைக் குறைவாக கருதப்பட்டுவிடக்கூடாது. போடாவில் விலங்கினப் பெயர் முடிகிறது என்பது எவ்வளவு பேருக்கு இயற்கையாக தெரியும்…? என மனது உடனே எண்ணிக்கொள்கிறது. பட்டாம்பூச்சி விற்பவன் இறைவனடி சேர்ந்த செய்தி நெஞ்சில் நின்றஇராகங்கள் மீது ஒரு சோக சாய எண்ணத்தைப் பூசியது.

    எண்ணங்களும் பல வண்ணங்களில் படபடவென சிறகடித்து அங்குமிங்கும் பறந்து கொண்டே இருப்பதனால் எண்டமாலாஜியில் சேர்ப்பது போல எண்ணத்துப்பூச்சி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை (பூச்சி எண்டமாலாஜி எனப்படுகிறது). ஆனந்த யாழை மீட்டுகிறாய்…. என்று பாட்டிசைத்த நா. முத்துக்குமார் முதன் முதலாக “பட்டாம்பூச்சி விற்பவன்” என்கிறதலைப்பில் கவிதை எழுதினார் என்று செய்திகளில் படித்தோம்.

    எழுத்தாளர் நாகூர் ரூமி அவர்கள் தமது புத்தகங்களின் அடிப்படை கருத்தாக தெரிவிக்கையில் மனிதர்கள் மூன்று வகையான உணர்வால் வாழ்வதாக தெரிவித்து இருப்பார். ( புத்தகம் அடுத்த விநாடி, இந்த விநாடி) அவை உணவு, மூச்சு மற்றும் கற்பனை ஆகும். அதில் கற்பனை என்பதே எண்ணங்கள் ஆகும். தொடர்ச்சியான நேர்மறைஎண்ணங்கள் சிறகடிப்பதால்தான், எந்த ஒரு செயலையும் உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு செய்பவரால் செய்ய முடிகின்றது. அதிசயமான காட்சிகள் ஒரு நிமிடம் எண்ணத்தை, எண்ண ஓட்டத்தை “டக்கென” நிறுத்தி வேறு திசையில் பயணம் செய்ய வைத்துவிடுகின்றன.

    அத்தகைய ஒரு அதிசயம்தான் ஒரே வயிற்றில் பிறந்த ஒரே மாதிரியான நான்கு குழந்தைகளை நன்கு வளர்த்து, நாடகமாடி ஒன்றாக நடனமாடும்பொழுது காண நேர்ந்தது. அவர்கள் பெயர் அதிதி, அக்ரிதி, ஆப்தி, ஆக்ஷிதி.நடன நாடகம் நடந்தது. சர்ச் பார்க்  கான்வென்டில், அது நாட்டுப்பற்றை அற்புதமாக விளக்கம் அளிக்கும் வண்ணம் அமைந்த நிகழ்ச்சி. புகழ்பெற்ற ஆங்கிலப்பள்ளிக்குள் அழகான தமிழ்வழிப் பள்ளியும், நாகே நாகெல் என்று சர்ச் பார்க் கான்வென்டை 1860ல் நிறுவிய நிறுவனர் பெயரில் அமைந்த படிப்பை நடுவில் கைவிடப்பட்டவர்களுக்காக அவர்கள் மீண்டும் படிக்கும் வண்ணம் அமைந்த சமுதாய கல்லூரியும் அமைந்திருப்பது ஆச்சரியம் தந்த நிகழ்வு ஆகும். நுனிநாக்கு ஆங்கிலம் பேசுகின்ற ஆசிரியர்கள் நிறைந்த இப்பள்ளியில் சுதந்திர கொடி ஏற்றியவுடன் தாயின் மணிக்கொடி பாரீர்…. அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்…. என்று மகாகவியின் மதுரத் தமிழிலே முழங்கிய மாணவிகள் முழு ஆச்சரியம் அளித்தனர்.

    அறுநூறுக்கும் மேற்பட்ட  பெண் குழந்தைகள் அணிவகுத்து அமைதியாக அமர்ந்திருந்த பிரமாண்டமான உள் விழா அரங்கில் மிகச்சிறந்த ஒலி ஒளி அமைப்பில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. சில விழாக்களில் பல நேரங்களில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் பேசி முடித்த பின்னர் கண்கவர் அலங்காரத்துடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கும். அங்கே  இனிப்பை பெற்றஇளநெஞ்சங்களின் எண்ணங்கள் ஏற்கனவே தாங்கள் ஒத்திகையின் பொழுது ஓரக்கண்ணால் கேள்விப்பட்டிருந்த பாடல் ஆடல்களைச் சுற்றியே பறந்து கொண்டிருக்கும். ஆனால், சர்ச் பார்க்கின் கவனம் நிறைந்த நூறு வருடங்களை தாண்டிய பாரம்பரியத்தின் சாயல் படிந்த விழா நேர்த்தி… வரிசைப்படுத்தி கலை நிகழ்வுகளை கலை விருந்தினர் கண்முன் நடத்தியது. சில நிகழ்ச்சிகள், அதில் திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு. ஆங்கில பாதிப்போடு உச்சரிக்கப்பட்ட வசனங்கள் ஆங்காங்கே நெருடினாலும் நாட்டுப்பற்றின் கனல் தெறிக்கும் இறுதிகட்ட காட்சிகள் உள்ளத்தை உருக்கியது. கண்களில் நீர் கட்ட வைத்தது. வாட்ச்மேன் உடையில் வந்த அந்தகால ஆங்கிலேய காவல்காரராக நடித்த சின்னப்பெண் ஏனோ?…. பயமுறுத்தவே இல்லை…. பதிலுக்கு புன்முறுவல் பூக்கவைத்தார். அவர் அடித்த போலி வலிக்காத அடிகள் போல…. எண்ணங்கள் அங்குமிங்கும் பறந்து பழைய ஞாபகங்களை கண்முன் கொண்டுவந்தன.

    இந்த இதழை மேலும்

    பருவத்தே பயிர் செய்…

     ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ , நம் முன்னோர்கள் தம் அனுபவத்தால் இந்தச் சொற்களை சொன்னார்கள். விதைப்பது என்பது நல்ல விளைச்சல் தொடர்ச்சியான அறுவடை இவற்றையும் உள்ளடக்கும்.

    இவற்றுக்கு அடிப்படையானது சரியான காலத்தில் விதைப்பது தான். பட்டம் என்பதைப் பருவம் என்றும் சொல்லலாம்.

    ‘பருவத்தே பயிர் செய்’ என்பது இன்னோர் அனுபவச்சொல். ஆழ்ந்து யோசித்தால், பருவம் என்பது பயிருக்கு மட்டுமல்ல; அப்பயிரை விளைவிக்கும் மனிதகுலத்துக்கும் மிகவும் அவசியமானதாகும்.

    மனித வாழ்க்கையில் பருவத்தே செய்ய வேண்டிய செயல்கள் பல இருந்தாலும், மிக முக்கியமானவை, பள்ளிக்குச் செல்வது. பணிக்குச் செல்வது. இல்லறம் துவங்குவது, வாரிசை உருவாக்குவது ஆகும்.

    படிப்பு

    கல்வியின் ஓர் அங்கம் படிப்பு.  ஆனால், படிப்பே கல்வி ஆகாது. கல்வி என்பதை கற்றல் மூலம் பெறலாம். கற்றல் என்பது பார்ப்பது, கேட்பது, படிப்பது, சிந்திப்பது என்று நான்கு வகைப்படும்.

    பரிணாம வளர்ச்சியில் முந்தைய ஆரோக்கிய வாழ்வு சிதைக்கப்பட்டு, செயற்கையாக வாழும் சூழல் உருவாகி விட்டது. உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் நிலை தான் எங்கும் நிலவுகிறது.

    பிறந்த குழந்தைக்கு 5 வயது நிறைந்த பின்பே பள்ளிக்கு அனுப்பிய காலம் 60 ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்தது. அதுவரை தெருவில் குழந்தைகளுடன் விளையாடுவது. இயற்கை வழியில், மூத்தோர்களிடம் கதை கேட்டும், வீட்டில் உள்ளோர் வாழ்க்கை முறைகளைப் பார்த்தும் கற்றனர்.

    இன்று அந்த வாய்ப்பு குழந்தைகளுக்கு மறுக்கப்பட்டு விட்டது. கதை கேட்டும் நீதிமுறைகளை அறிந்தும் கடைப்பிடிக்கும் வாய்ப்பும், வீட்டில் பலரும் இணைந்து வாழும் சூழல், அவர்களது செயல்களைப் பார்த்து, தாமும் அவைகளைச் செய்யும் வாய்ப்பும், பணி காரணமான வெளியிடத் தனிக் குடும்ப வசிப்பால் சாத்தியமில்லாமல் போய்விட்டது.

    பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருந்தாலும், குழந்தைகளுக்கு 2 வயது முடிந்த உடனேயே அவர்களை விளையாட்டுப்பள்ளி, கிண்டர் கார்டன், பால்வாடி எனப் பல நிலைகளில் இயற்கைக்கு முரணாக வளர்க்கிறோம்.

    பருவம் தவறி, முரண்பட்டு, உரிய வயதுக்கு முன்பே பள்ளிக்கு அனுப்பி, அவர்களைப் படிக்க வைக்கிறோம் என்ற பெயரில் நல்ல பண்பாட்டுக் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க மறந்து விட்டோம்.

    பசி வந்தபின் அருந்தும் உணவு முழுமையான பலனைத்தரும். ஆனால், பசிக்காதபோது உண்ணும் உணவு அஜீரணமாகி உடல் நலத்தைக் கெடுத்து விடும்.

    இதுபோலதான், உரிய விளைச்சலுக்குப் பின் செய்யும் அறுவடையால் அதிக மகசூல் பெறலாம். அதற்கு முன்பே அறுவடை செய்தால் பாலையும், பதரும்தான் மிச்சம். இன்று நாம் விரும்பி நம் குழந்தைகளுக்கு வழங்கும் படிப்பு இவை போல்தான் உள்ளன. அன்பை, அரவணைப்பை, கொஞ்சுதலை எதிர்பார்க்கும் பருவத்தில், கண்டிப்பு, கறார், கால அளவுக்கு கட்டுப்படுதல், தண்டனைகள் எனத் தேவையற்றவைகளைத் திணித்து, அந்தக் குழந்தைகளைக் கசக்கிப் பிழிந்து விடுகிறோம்.

    இந்த இதழை மேலும்

    சர்வதேச அகிம்சை தினம்

    சர்வதேச அகிம்சை தினம்

    (International Day against Non-Violence)

    அக்டோபர் 2

    உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் போர்களைத் தடுக்கும் ஐ. நா. சபை தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்தது இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் ஒரு சர்வதேச நிகழ்வாகும். உலகில் வன்முறையை ஒழித்து அமைதியை நிலைநாட்ட இன்றைக்கும் ஏற்புடைய ஒன்று அகிம்சை என்பதை உலகம் ஏற்றுக் கொண்டதற்கான அடையாளம் இது.

    காந்தியடிகளின் பிறந்த  நாளான அக்டோபர் 2 ஆம் தேதி சமூக ஒற்றுமை தினம் என்றும் காந்தி ஜெயந்தி தினம்  என்றும்  பல்வேறு பெயர்களில் தீண்டாமை ஒழிப்பு, சமூக ஒற்றுமை, உலக அமைதி ஆகியவற்றை வலியுறுத்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது. 2007 ஆம் ஆண்டு முதல் அகிம்சை, சகிப்புத் தன்மை, மனித உரிமை, பன்முகத்தன்மையை மதித்தல், பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றையும் முன் வைத்து சர்வதேச அகிம்சை தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    20 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த  மனிதராக விளங்கியவர் மகாத்மா காந்தியடிகள். 21 ஆம் நூற்றாண்டிற்கும் அவரே சிறந்த வழிகாட்டி. காந்தியைப் போன்ற மாமனிதர் இவ்வுலகில் மனித உருவில் நடமாடினார்  என்று வருங்காலத் தலைமுறையினர் நம்புவது அரிதாக இருக்கும் என்று ‘ஆல்பிரட் ஐன்ஸ்டீன்’ கூறியுள்ளார்.

    காந்தியத்தின் சிறப்பு அம்சம் அகிம்சை. உலகெங்கிலும் போராடுவதற்கு வன்முறையையும், அரசியல் தந்திரத்தையும் கையாண்ட  காலகட்டத்தில் இந்த இரண்டு வழிகளுக்கும் அப்பால்  மூன்றாவது ஒரு வழியைக் காட்டியவர் காந்தியடிகள். அகிம்சையை ஆயுதமாகப் பயன்படுத்தி, உலகில் மாபெரும் வல்லரசாகத் திகழ்ந்த இங்கிலாந்தின் போர் வலிமையை எதிர்கொண்டவர் காந்தியடிகள். இதைத்தான் நாமக்கல் கவிஞர் ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது’  என்று பாடினார்.

    சூரியனே அஸ்தமிக்காத பேரரசு என்று பெயர் பெற்ற ஆங்கிலேய அரசு காந்தியடிகளுக்குத் தலைவணங்கியது. அதற்கு காரணம் அவர் மேற்கொண்ட சத்தியாகிரகம். சத்தியத்தையும், அகிம்சையையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதுதான். குறிக்கோளை அடைய நாம் எடுக்கும் வழிமுறையைப் பொறுத்தே முடிவின் தன்மையும் அமையும் என்று கூறிய அவர் இந்தியா அகிம்சை முறையில்தான் விடுதலைப் பெற வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.

    உலக வரலாற்றிலேயே இல்லாத ஒன்றாக வற்புறுத்துகிறீர்களே’ என்று சரித்திரப் பேராசிரியர் கிருபாளானி காந்தியிடம் கேட்டபோது’ இதுவரை நடக்காத ஒன்று இனிமேல் நடக்காது என்பது சரித்திரமல்ல.’

    இதுவரை நடக்காத ஒன்று ஒருநாள் நடக்கும் போதுதான் அது சரித்திரமாகிறது’ என்று அகிம்சை முறையில் சுதந்திரம் பெறுவதைச் சரித்திரமாக்கி காட்டினார் காந்தியடிகள்.

    மகாத்மா காந்தி ஒரு குறிக்கோளை தனக்கெனவகுத்துக் கொண்டு அதன் படி வாழ்ந்துகாட்டினார். அதனால் தான் ‘எனது வாழ்க்கையே எனது’செய்தி’ என்று அவரால் கூற முடிந்தது. தன் குறிக்கோளை நிறைவேற்ற இரண்டு ஆயுதங்களை கையாண்டார். ஒன்று சத்தியம் மற்றொன்று அகிம்சை. இவ்விரண்டும் அவரின் இரு கண்களாயின. சத்தியத்தைக் கண் என்று கொண்டால் அதைக் காக்கும் இமையென அகிம்சை இருந்தது. அகிம்சா தத்துவத்தை காந்தியடிகள் தான் எழுதிய ‘அகிம்சை – தைரியசாலிகளின் ஆயுதம் (Non – Violence – weapon of the brave) எனும் புத்தகத்தில் ‘அகிம்சை ஒரு ஆயுதமாகும்’. ‘அது தைரியசாலிகளின் ஆயுதம்’. மனித இனத்திற்கு அளிக்கப்பட்ட மாபெரும் சக்தி. அகிம்சையினால் உலகையே அடிபணியச் செய்ய முடியும். வன்முறையினால் அடையும் எதுவும் நிலைத்து நிற்காது. தன்னம்பிக்கையை இழந்தவன்தான் கத்தியின் உதவியை நாடுகிறான். தன் உண்மையான பலத்தை உணர்ந்தவன் எதிர்ப்பானேயன்றி உயிர்களை அழிக்கத் துணியமாட்டான். அகிம்சை என்பதன் உண்மையான விளக்கம் கொல்லாமை. அகிம்சையைக் கடைப்பிடிப்பவனுக்கு விரோதிகள் யாருமில்லை. மனதாலும் செயலாலும் தீங்கு இழைக்காதவன்தான் அகிம்சாவாதி என்று எழுதுகிறார்.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    அவசரப்பட்டு விரக்தி அடைந்து விடாதீர்கள்.

    ஏன் என்றால் முயற்சிகள் பல எடுத்திருப்பதே

    ஒரு சிறந்த அனுபவம் தான்.

    அது போர் குணங்கள் பலவற்றை

    உங்களுக்கு தந்திருக்கிறது.

    அதுவே ஒரு வெற்றி தான்.

    கட்டுரை ஆசிரியர் செ. சைலேந்திரபாபு IPS அவர்களை  www.sylendrababu.com இணையத்தில் தொடர்பு கொண்டு உங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்

    நேயர் கேள்வி?

    எவ்வளவு முயற்சி எடுத்தாலும் வாழ்வில் வெற்றி பெற முடியவில்லை. தொட்டது எல்லாம் தோல்வியாகவே அமைகிறது. வாழ்க்கையின் மீது விரக்தி ஏற்படுகிறது ? எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்?

    – சிவக்குமார், தென்காசி

    எவ்வளவு முயற்சி எடுத்தாலும் வாழ்வில் வெற்றி பெற முடியவில்லையா…? தொட்டதெல்லாம் தோல்வியாகவே அமைகிறதா..? வாழ்க்கை மீது விரக்தி  அடைந்து விடுகிறீர்களா..? இந்த நிலைமைக்கு தீர்வு வேண்டுமா..? சரி, ஒரு உண்மைக் கதை சொல்கிறேன் கேளுங்கள்.

    ஷாகிருதீன் முகமது பாபர்: இவர்தான் முகலாய பேரரசை இந்தியாவில் ஏற்படுத்தியவர். டில்லிக்கு 80 கி.மீ தூரத்தில் இருக்கும் பானிப்பட் என்ற இடத்தில் இப்ராஹிம் லோடியின் ஆயிரம் யானைகளையும் ஒரு லட்சம் குதிரைப்படை வீரர்களையும் சமாளித்து முன்னேறி, டில்லி கோட்டையைப் பிடித்தவர். அவரிடம் இருந்தது வெறும்  12,000 குதிரைப் படை வீரர்கள். இது நடந்தது ஏப்ரல் 21, 1526 ஆம் ஆண்டு. பெர்கானா (புக்காரா என்றும் அழைக்கலாம்) நகரை ஆண்ட ஒரு சிற்றரசன் தன்னை விட பத்து மடங்கு பெரிய படையை 1688 கி.மீ தூரம் நடந்து வந்து டில்லி படையை எப்படி வெல்ல முடிந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்  பாபர் நடந்து வந்த பாதையைப் பார்க்க வேண்டும், அவர் சந்தித்த தோல்விகளைத் தெரிந்திருக்க வேண்டும்.

    சமர்கண்டு: இன்று உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள நகரம் இது. இதற்கு 279 கி.மீ தூரத்தில் இருக்கும் பெர்கானா என்னும் பகுதியை ஆண்டவர் உமர்ஷேர் மிர்ஸா இறந்து விடவே, பதினொரு வயது பாபரை பெர்கானாவின் சிற்றரசராக அரியணை ஏற்றினார். சிறுவன் தானே! இவனை எளிதில் துரத்தி விட்டு ஆட்சி செய்யலாம் என்ற ஆசையில் அவன் மாமன்மார்கள் படையுடன் பெர்கானா வந்தார்கள். “ஆனால்  உயிரே போனாலும் நாம் புறமுதுகுகாட்டக் கூடாது, வெட்டிச் சாயுங்கள் எதிரிகளை”என்று படைக்கு உத்தரவிட்டான் சிறுவன். பாபரின் உற்சாகமான எதிர்ப்பைக் கண்டு எதிரிப்படைகள் ஓட்டம் பிடித்தனர். மிகச்சிறிய பெர்கானாவை மட்டும் ஆள்வதில் கவுரவம் இல்லை என நினைத்த பாபர், சமர்கண்டு நகரை முற்றுகையிட்டார். ஆனால் பலம் பொருந்திய எதிரி அவரை கோட்டைக்குள் நுழைய விடவில்லை. குளிர்காலம் ஆரம்பித்து விடவே பெர்கானா திரும்பினார் பாபர். சில மாதங்கள் கழித்து, பெரிய படையுடன் வந்த பாபர் சமர்கண்ட் நகரை முற்றுகையிட்டார். 7 மாதங்கள் போராடி எதிரிகளை சோர்வடையச் செய்த பின்னர், சமர்கண்டை கைப்பற்றினார். அப்போது பாபருக்கு 14 வயது. இந்த நேரம் பார்த்து பெர்கானா பிரபுக்கள் அவரது தம்பி ஒருவரை அரியணை

    ஏற்றிவிட்டனர். இதை அறிந்த பாபர் சமர்கண்டை விட்டு கிளம்பி பர்கானா திரும்பிய போது அனைத்து பிரபுக்களும் தம்பியோடு கைகோர்த்து நின்று கொண்டு அவரை எதிர்த்தனர். சரி, திரும்பியே போவோம் என்று சமர்கண்டு திரும்பியபோது அங்கே ஷியா இஸ்லாமிய மக்கள் ஆதரவுடன் இன்னொரு பலமான ஷியா மன்னனின் ஆட்சி.

    நாடோடியாகத் திரிந்த பாபர் ஜெண்ட் என்ற நகரின் பாழடைந்த கோட்டையில்  முகாமிட்டார். கடுங்குளிரில் கம்பளி ஆடையின்றி நடுங்கினேன் என்று அவரே “பாபர் நாமா” என்ற சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். பசியில் வாடிய பாபர் கிராமங்களில் புகுந்து உணவு தானியங்களைக் கொள்ளையடிக்க வேண்டியதாயிற்று. இந்த கிராமத்து இளைஞர்களை தனது படையுடன் சேர்த்து பயிற்சி தந்தார் பாபர். அந்த இளம் குதிரை வீரர்களுடன் தம்பி ஆண்ட பர்கானாவை கைப்பற்றினார்.

    இந்த இதழை மேலும்

    மனதின் உயர்வே! மனிதனின் உயர்வு!

    M.K. பழனிசாமி, தாளாளர்

    கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி,

    முத்தூர் ரோடு, செட்டியார்பாளையம், காங்கயம்.

    திறமையான செயல்கள் மூலம் வெற்றியை தன் வசப்படுத்தியிருப்பவர்.

    • மனதில் பொறாமை, வெறுப்பு, சுயநலம் போன்றவற்றைஒதுக்கி, மனிதாபிமானத்துடன் செயல்பட்டு எல்லோரின் ஒத்துழைப்பையையும் பெற்று சமூக நலப்பணிகளை திறம்பட செய்து வருபவர்.
    • உயர்தன்மைக்கு முதல் அறிகுறியே எளிய தன்மை என எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வருபவர்.
    • கல்வியை பணமாக்காமல் பலருக்கும் பயன்படும் பாலமாக்கியிருப்பவர்.
    • கடமையை எப்போதும் துணிந்து செயல்படுத்துங்கள் பெருமை நிச்சயம் வந்தே தீரும் என நம்பிக்கை தந்து வருபவர்.
    • முயன்றால் வெற்றி இல்லையேல் அனுபவம், அனுபவம் தான் ஒருவரை சாதனையாளராக்கிறது என அனுபவ மொழி அதிகம் தரக்கூடியவர்.
    • கஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு தான் பெற்றஎதனையும் பிறர் கஷ்டப்படாமல் பெறவேண்டும் என சதாகாலம் உழைத்து கல்வி வழிகாட்டியாக திகழ்ந்து வருபவர்.

    இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட திரு M.K. பழனிசாமி அவர்களை நாம் சந்தித்த போது.

    நம்பிக்கை குறையும் போது மனம் மட்டுமல்ல, உடலும் சோர்ந்து போகும் என்னுடைய வாழ்க்கையில் மனதையும் உடலையும் நான் எப்பொழுதும் சோர்வாக வைத்ததே இல்லை என்றார். இனி அவரோடு நாம்…

    கே: தங்களைப்பற்றி…?

    வேளாண்மைத் தொழிலும், கால்நடை வளர்ப்பும் முதன்மைத் தொழிலாகக் கொண்டு வாழும் கொடுமுடி என்றஊருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான் முருகம்பாளையம். அங்குதான் 1954ம் ஆண்டு பிறந்தேன்.. மிகவும் ஏழ்மையான குடும்பம், வறுமையின் காரணமாக கொடுமுடிக்கு அருகில் உள்ள அஞ்சூர் என்றபகுதிக்கு குடிப்பெயர்ந்தோம்.

    அங்கு எங்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் இருந்தது. என் பெற்றோர் விவசாயத்தையும் பார்த்துக்கொண்டு தேங்காய் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். மிகவும் கடுமையாக உழைக்கும் என் பெற்றோர்கள் என்னை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணினார்கள். அப்பொழுது எங்கள் ஊரில் பள்ளிகள் எதுவுமில்லை. 6 கி.மீ.,க்கு அப்பால் உள்ள SSV மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தார்கள்.

    அதே பள்ளியில் 11ம் வகுப்புவரை படித்தேன். என் பெற்றோர் என்னை நன்றாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதே அவர்களின் முதல் விருப்பமாக இருந்தது. நானும் நன்றாகப்படித்து தேர்வானேன்.

    கே: அரசாங்கப் பணிக்குள் எப்படி நுழைந்தீர்கள்…?

    நாங்கள் படிக்கின்றகாலத்தில் கல்விமுறைமுற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அக்காலத்தில் 11ம் வகுப்பு முடித்திருக்கிறார்கள் என்றால் மிகவும் பெரிதாக கருதுவார்கள். அந்தப்படிப்பை தான் நானும் முடித்தேன்.  எனக்கு சின்ன வயதிலிருந்தே மின்சாரம் பற்றிய சில நுணுக்கமான வேலைகள் எல்லாம் செய்வேன். என்னுடைய மின்சார கண்டுபிடிப்புகளைப் பார்த்து பலர் வியந்து பாராட்டுவார்கள். இந்தப் பாராட்டு என்னை பெரிதும் ஊக்கப்படுத்தியது.

    இந்தத்துறைதான் எனக்கு ஏற்றது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் படித்து முடித்த கையோடு மின்சார வாரியத்தில் தற்காலிகமாக வேலையில் சேர்ந்தேன். ஆறு ஆண்டுகள் 2. 50 தினக்கூலியாக வேலை செய்து கொண்டிருந்தேன். இந்த  6 ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டது அளப்பறியது. எந்த வேலை செய்தாலும் நம்முடைய உழைப்பை முழுவதுமாக கொடுத்திட வேண்டும் என்றஎன் தந்தையின்  வாக்கை முழுமையாய் பின்பற்றியதால் என்னால் எதையும் சாதிக்க முடிந்தது. ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் எனது பணி நியமனம் மின்சாரத்துறையிலிருந்து கிடைத்தது. என் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக அனைவரும் என்னைப் போற்றினார்கள். காலம் கடல் வெள்ளம் போல் கடந்து சென்றது. 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2012ம் ஆண்டு பணி ஓய்வும் பெற்றுவிட்டேன்.

    கே: மின்சார வாரியத்துறையில் பணியாற்றிய நீங்கள் ஒரு கல்லூரி தாளாளராக உயர்ந்தது குறித்து…?

    இந்தக் கல்லூரி 1997ம் ஆண்டு நாடார் கல்வி அறக்கட்டளை ஈரோடு மூலம் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி தொடங்கப்பட்ட அன்று உறுப்பினராக இருந்தேன். பல கல்வி நிலையத்தில் இன்றும் உறுப்பினராக  பதவி வகித்து வருகிறேன். என்னுடைய இலட்சியமே என்னைப் போல கல்விக்காக யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதுதான். இதனால், கல்விக்காக பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறேன்.

    சமுதாயம் மேன்மை பெற வேண்டுமென்றால் இது கல்வியால் மட்டுமே முடியும் என்பதை என் அனுபவரீதியாக நான் கற்றுக்கொண்டது உண்மை.

    இந்த சபையில் நிறைய உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் என்னை இக்கல்லூரியின் தாளாளராக உயர்த்திருக்கிறார்கள் என்மேல் நம்பிக்கை வைத்துக் கொடுத்த இந்தப் பொறுப்பை என்னால் முடிந்த அளவு சிறப்பாக செய்து வருகிறேன்.

    கே: இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்து…?

    கல்வியின் மகத்துவத்தைப் பற்றி கல்விக்கண் திறந்த காமராஜர் பல கல்வி நெறிமுறைகளை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார். அவரின் கொள்கையைப் பின்பற்றும் நாங்களும் கல்வியின் அவசியத்தைப் போதிக்க வேண்டும் என்றநோக்கம்தான் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டதன் முதன்மையான நோக்கம்.

    கிராமப்புறத்தில் படிக்கின்றமாணவர்களுக்கு உயர்கல்வி கொடுக்க வேண்டும்.

    கல்வி வசதியில்லை என்று யாருமே சொல்லக்கூடாது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். எவ்வித இலாப நோக்கமுமின்றி முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையோடு தான் இந்தக் கல்லூரியை நடத்தி வருகிறோம்.

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    காந்திஜி ஒரு முறை இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. நல்ல கூட்டம். ஒருவரோடு ஒருவர் முட்டி மோதி நின்று கொண்டு இருந்திருக்கிறார்கள்.

    காந்திஜி நின்ற இடத்தில் பெண்கள் சுற்றி இருக்க, திடீரென்று மயங்கி விழுந்து விட்டார்.

    சட்டென அவரை கைத்தாங்கலாக பிடித்து இருக்கையில் அமர வைத்து விட்டு விசாரித்திருக்கிறார்கள்.

    “நான் குஜராத்திலிருந்து வருகிறேன் எனது பெயர் மோகன் தாஸ் கரம் சந்த் காந்திஜி பக்கத்துக்கு ஊருக்குப் போக வேண்டும் என்று சொல்லிருக்கிறார் காந்தி”.

    காந்திஜி என்ற பெயரைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று அவர் முன் கைகட்டி நின்று இருக்கிறார்கள்.

    பாபுஜி நாங்கள் அறியாமல் உங்களை நிற்க வைத்து வேதனைப்படுத்தி விட்டோம், மன்னியுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார்கள்.

    “தெரியாமல் செய்த தவறை இறைவன் எப்பொழுதும் மன்னித்து விடுவான். எனக்கு இடம் வேண்டாம். நின்று கொண்டிருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உட்கார இடம் கொடுங்கள் அதுவே நீங்கள் எனக்குச் செய்யும் உதவியாகும்” என்றிருக்கிறார் காந்திஜி.

    அடுத்தவர் துன்பத்தைப் போக்குவதையே சதாகாலம் நினைவில் வைத்திருந்து பாடுபட்டதனாலேயே காந்திஜி “மகாத்மாவாக” நம்மோடு அன்றும், என்றும், என்றென்றும்…