துணிந்து முடிவு எடு! தொடர்ந்து சிகரம் தொடு!!
திரு. ஜெயசந்திரன்
மேலாண்மை இயக்குநர்
ஓம் இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்
இந்த உலகம் ஒரு பந்தையக் களம். இதில் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். சிலர் தன்னுடைய இலக்கான வெற்றியை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் எதுக்காக ஓடுகிறோம் என்று தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலரோ நம்மால் முடியாது என்று பாதி வழியிலேயே நின்றுவிடுகிறார்கள். இத்தகைய இலக்கு நோக்கிய பயணத்தில், செல்லும் பாதையை சரியாகக் கணித்து தன்னால் சாதிக்க முடியும் என்று ஓடி சாதித்திருப்பவர்.
கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் என்றவெற்றி விதியை தன் உள்ளத்தில் நிறுத்தியும், எதை நோக்கிச் செல்கிறோம் என்பதில் தெளிவும், இலக்கை எட்டுவோம் என்பதில் நம்பிக்கையும் கொண்டு செயல்படும் தன்னம்பிக்கையாளர்.
இனி எழவே முடியாது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் எழுந்து நிற்பவனே சாதனையாளன் என்பதற்கு ஏற்ப தனக்கு ஏற்பட்ட கடினமான காலத்தை தன்னுடைய விடாமுயற்சியால் வென்று சாதித்துக்கொண்டிருப்பவர்.
அடுத்தவருக்கு உதவி தேவை என்றால் ஓடோடி செய்வது இவரது இயற்கையான குணம். என் உலகம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கக் காரணம் எதையும் சாதிக்க முடியும் என்ற என் நம்பிக்கைதான் என்று கூறும் ஓம் இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.வி.ஏ.ஜெயசந்திரன் அவர்களை சரவணம்பட்டியில் உள்ள அவரது நிறுவனத்தில் வெயில் மெல்ல தனிந்து ஒளி மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் சந்தித்த போது தன்னுடைய இலக்கு, கனவு, அதைச் சாதிக்கத் தான் சந்தித்த சவால்கள் என்று ஒவ்வொன்றையும் பகிர்ந்து கொண்டார்.
பணி அனுபவத்தில் இருந்து மாறி தொழில் தொடங்கியது முதல் அதில் தான் பெற்றவெற்றிகளையும், உண்மையும், நேர்மையும், உயர்பண்புகளும் அந்த வெற்றிக்கு அடித்தளம் இட்டதையும், தான் சந்தித்த கடினமான காலங்களையும், அதில் இருந்து மீள உதவியவற்றைப் பற்றி பகிர்ந்து கொண்டதையும் அவர் மொழியிலேயே படிப்போம்……
உங்களைப் பற்றி?
அன்னூருக்கு அருகில் உள்ள அல்லிகுளத்தில் திரு. அங்கப்பன் திருமதி சுந்தரம்மாள் அவர்களுக்கு மகனாகப் பிறந்தேன். வீட்டில் நான் உட்பட நான்கு பிள்ளைகள். நான் முதல் பிள்ளை.
அன்னூருக்கு அருகில் உள்ள அன்னூர் மேட்டுப்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்தேன். 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிய அன்னூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன்.
எனது தந்தை ஒரு தலைசிறந்த மோட்டார் மெக்கானிக். அவரின் நுணுக்கமான தொழில்நுட்ப அறிவு என்னுடைய ரத்தத்தில் கலந்திருந்தது. சிறு வயதிலேயே எனக்கு தொழில்நுட்பம் தொடர்பாக புதிதாக எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இயற்கையாக இருந்ததால் நான் தொழில் நுட்பக் கல்வியை கோவை அரசு பாலிடெக்னிக்கில் படித்தேன்.
தொழில் நுட்பக் கல்வியை முடித்தவுடன் சற்றும் தாமதிக்காமல் இடிகரைக்கு அருகில் உள்ள செங்காளிபாளையத்தில் இயங்கிக் கொண்டிருந்த வி.ஜே.லக்ஷ்மி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன்.
வி.ஜே.லக்ஷ்மி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தில் உங்களுக்கான அங்கீகாரம் குறித்து…
நான் வி.ஜே.லக்ஷ்மி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தில் பல்வேறு கனவுகளையும், இலக்குகளையும் சுமந்து கொண்டு நியாயமாகவும், நேர்மையாகவும் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பணியில் சேர்ந்து ஆறு மாதம் முடிந்திருந்தது. அப்போது ஒரு நாள் என் நண்பரின் திருமணத்திற்காக சென்னை சென்றிருந்தேன்.
அச்சமயத்தில் எங்கள் நிறுவனம் டெக்ஸ்டைல் இயந்திரங்களை செய்து கொடுக்கும் ஆர்டர்களை அதிக அளவில் பெற்றிருந்தது.
டெக்ஸ்டைல் இயந்திரங்களுக்குத் தேவையான ஸ்பின்டல்களை அதிக தரத்துடன் செய்து கொண்டிருந்த நிறுவனம் குணால் இன்ஜினியரிங் கம்பெனி. சென்னையில் உள்ளது.
நான் சென்னையில் இருப்பதை அறிந்த எங்கள் நிறுவனத்தின் இயக்குநர் திரு. வி.ஜெ.விஜயகுமார் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு நமக்குத் தேவையான ஸ்பின்டல்களை குணால் நிறுவனத்தில் இருந்து விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
சரி என்று கூறிவிட்டேன். கையில் சுத்தமாக பணம் இல்லை. பணிமுடிய எவ்வளவு நாட்கள் ஆகும் என்றும் தெரியவில்லை . பணம் இல்லை என்று சொல்ல சங்கடம். என்ன செய்யலாம் என்று யோசித்த எனக்கு நினைவுக்கு வந்தார் திரு.அன்பரசு அப்போது.
அவர் சென்னை ஐஐடி யில் படித்துக் கொண்டிருந்தார். பின்னாளில் அமெரிக்கா மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பிறகு பல முன்னனி நிறுவனங்களில் சிறப்பான பதவிகளை வகித்தார். அந்த கேம்பஸ்லேயே தங்கிக்கொண்டு தினமும் அம்பத்தூரில் இருந்த குணால் இன்ஜினியரிங் கம்பெனிக்கு சென்று வேலையை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தேன்.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Cover Story