– 2016 – May | தன்னம்பிக்கை

Home » 2016 » May (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    5 பேருக்கு நன்றி

    பல வளரும் நாடுகளில் சிறு குழந்தைகளுக்கு முதலில் சொல்லித் தருவது- நன்றி சொல்ல  வேண்டும் என்பது தான். ஒருவர் நன்றி சொன்னால், உடனே வெல்கம் என ஆங்கிலத்தில் சொல்லுமாறும் பழக்குகின்றனர்.

    நம்மூரில் நன்றி சொன்னால், அதைப்பெறும் தகுதி உள்ளவர் நோ, தேங்க்ஸ்  என்று முன்னர் கூறியதை நினைத்துப் பார்க்கிறேன். இதனுடைய தமிழ் அர்த்தம் இதற்காக நன்றி எல்லாம் வேண்டாமே என்ற பணிவான பதில்.

    ஆனால் வெளிநாட்டவர்கள் சொல்லித்தரும் வெல்கம் என்ற வார்த்தையின் அர்த்தம் இந்த நன்றியை நான் முழு மனதுடன்  ஏற்கிறேன் என்பதாகும்.

    நம் பாரதப் பண்பாட்டுக்கும், மேலை நாடுகளின் பண்பாட்டுக்கும் உள்ள வேறுபாடு இது தான். இங்கு தான் பணிவு உள்ளது.

    தாழ்ந்தவர் என்றும் கெடுவதில்லை கெடுவதில்லை என்ற பொன் மொழியை நினைத்துப் பாருங்கள் மேலை நாடுகளின் தட்ப வெப்பம், காரணமாக வெல்கம் என்பது அவர்களைப் பொறுத்தவரை சரி என்று நாமும்  ஏற்றுக் கொள்வோம்.

    நம் நாட்டுத் தட்ப வெப்ப நிலை என்றும் சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி, உழைக்க அஞ்சாத ஆர்வமான மன நிலையைத் தந்தது, தருகிறது .

    ஆனால், இலவசங்கள் என்றஎழுத்துக்கள் சோம்பல், பொறாமை, பிறர் பொருளை விரும்புதல், பெற்ற உதவிக்கு நன்றி கூறாமல் ஏன்…? செய்யட்டுமே…! அவர்களுக்கு இல்லையா…?  என்று ஏகடியம் பேசும் மனநிலையை உருவாக்கி விட்டது என்றால், இது மிகையில்லை. இது நல்லதல்ல…

    இன்று  முதல் நம் வாழ்க்கை முறையின் ஒரு பைசா கூட செலவில்லாமல், ஒரு சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் நம் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், பிறர் வாழ்த்துமளவும் அமைந்து விடும். சிறு மாற்றம் தான் நன்றி சொல்லுதல்.

    SAY THANKS… காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை இதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்வதைப் பழக்கமாக்க வேண்டும். பின் இது வழக்கமாகி, நம் குணமாக அமைந்து விடும்.

    சரி…!  யாருக்கு, நன்றி சொல்வது…? இது பெரிய கேள்விதான். காலை எழும்போது இயற்கைக்கு நம் உடலுக்கு நாம் படுத்து உறங்கிய படுக்கைக்கு நன்றி சொல்ல வேண்டும். பிறகு  நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தொடர்புடைய பொருட்களைத் தயாரித்தோர், உற்பத்தி செய்தோர், அதை விற்பனை செய்தோர், நமது உபயோகத்துக்கு வாங்கி வந்தோர் (நாமாகவும் இருக்கலாம்) மற்றும் நாம் அவைகளை உபயோகிக்குமளவு ஏற்பாடுகள் செய்து கொடுத்த நம்முடன் இணைந்து வாழ்ந்துவரும் வீட்டில் உள்ளவர்கள்..

    இப்படி இந்த நன்றி கூறும் படலம் நீண்டு கொண்டே செல்லும். இதற்காக மலைத்து விடக்கூடாது.

    சாதாரணமாக ஒரு பிஸ்கட்டைப் பெற்றுக் கொண்ட நாய் கூடத் தன் நன்றியை எப்படி தெரிவிக்கிறது எனப் பார்க்கிறோமல்லவா…? அதனால்தான் நாயை நன்றியுள்ள பிராணி என்று கொண்டாடுகிறோம்.

    உதாரணத்துக்குச் சில பார்ப்போம். நமக்கு அன்றாடம் அத்தியாவசியத் தேவைகள் என்பது உணவு, உணவு உடை, கழிவு நீக்கம் வீடு, உறவுகள், பணம் ஆகியன.

    இவற்றுள்குள் எல்லாவற்றையும், கொண்டு வந்து விடலாம். பணமிருந்தால் நமக்குத் தேவைப்படும் எல்லாப் பொருட்களையும் விலைக்கு வாங்க முடியும்.

    நன்றி சொல்ல வேண்டிய அந்த 5பேர் யார்…?

    1. இயற்கை (கடவுள்)
    2. உற்பத்தி செய்தோர் அல்லது விளை வித்தோர்
    3. விற்பனை செய்தோர்
    4. நம் வீட்டுக்கு வாங்கி வந்தோர்
    5. நம் உபயோகத்துக்கு ஏற்றவாறு கொடுக்கப்படுபவர்கள்

    இவர்களுக்குத்தான் நாம் மறவாமல் தினமும் பலமுறை மானசீகவும், கேரிலும் தினமும் பலமுறை மானசீகமாகவும், கேரிலும் நன்றி சொல்ல வேண்டும். நம்முடன் வாழ்ந்து, நமக்காகவே இச்செயல் நம்முடன் வாழ்ந்து, நமக்காகவே இச்செயல்களை செய்து வரும்  பெற்றோர் வாழ்க்கைத்துணை உடன்பிறந்தோர் குழந்தைகள் உறவினர்கள் பணியாளர்கள் என இவர்கள் யார் காரணமோ, அவர்களுக்கு வாய்விட்டு, முழுமனதுடன், புன்னகையுடன், மகிழ்ச்சியான மனநிலையில் சொல்ல வேண்டும் நன்றியை…!

    அடபோங்கசார் இது நடக்கிற காரியமா…?

    அவங்க வேலையை அவர்கள் செய்கிறார்கள். இதற்குப் போய் நன்றி சொல்வது ஏளனப்படுத்துவது போல் ஆகாதா…?

    எனச்சிலர் எண்ணலாம்.

    எந்த ஒன்றும் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும்.  CHARITY DEGINS AT HOME என்பது பொன்மொழி.

    வீட்டில் நமக்கு சாப்பாடு தயாரித்து வழங்கும் தாய் அல்லது வாழ்க்கைத் துணைக்கு  வெளிப்படையாக நன்றி சொல்லுதல். அதற்கான பொருட்களை (மளிகை சாமான், காய்கறிகள் போன்றவற்றை வாங்கி வந்தோர் அவற்றை விற்பனைக்காக விளைநிலம் அல்லது தயாரிப்பு இடத்திலிருந்த விவசாயி அல்லது தயாரித்த உழைப்பாளி, மூலப்பொருட்களை வழங்கி, வழிநடத்தும் இயற்கை என எல்லோருக்கும் மானசீகமான நன்றி இந்த ஒருவரை வாழ்த்துவதாலேயே சென்று சேர்கிறது.

    இம்மாதிரி நன்றி சொல்வதால் நமக்கு என்ன கிடைக்கும்…?

    இது நியாயமான கேள்விதான்.

    ஏனென்றால், நமக்கு என்ன ஆதாயம் என எதிர்பார்த்தே வாழும் நிலையை நாம் உருவாக்கிக் கொண்டோம்.

    ஒரு 12 நாட்களுக்கு மட்டும் இந்த நன்றி என்ற சொல்லை நம் வீட்டில் மட்டுமல்லாது வெளியிடங்களில்

    பஸ்களில், ஓட்டுநர், நடத்துனர், வங்கிகளில், பணிசெய்வோர், கடைகளில் பொருள் தருவோர், சாலைகளில் வழி கொடுப்போர், பெட்ரோட் நிலையங்களில் பணி செய்வோர், குப்பை அள்ளும் பணிபுரிவோர், வீடுகளுக்கே வந்து காய், கறி விற்போர் வீட்டுப் பணியாளர்கள், உடன் பணிபுரிவோர் எனப் பலருக்கும் சொல்லிவாருங்கள். நமக்க மகிழ்ச்சி, அமைதி, நிறைவு, முக மலர்ச்சி, அன்பு, புது நட்பு எனப்பலவும் போட்டி போட்டுக் கொண்டு வந்து சேரும்நன்றி சொல்லாவிட்டால் என்ன பாதிப்பு…? வெறுப்பு, கடுஞ்சொல், கோபம் போன்றவை பிறர் மனதில் உருவாகி அதனால் நாம் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். இதுஉண்மை.

    சிறுவயதில் நன்றி சொல்லும் மழலைகளை மனம் கோணுமாறு பேசி விடுவதால், அந்த வார்த்தைகள் கருகி விட வாய்ப்புண்டு. வளர்க்க முயலுங்கள்.

    தினைத்துணை நன்றி செயினும் பனைத் துணை

    கொள்வர் பயன்தெறி வார்.

    குறள்  104.

    பொருள்: பிறர் செய்த மிகச்சிறிய உதவியையும், உதாசீனப்படுத்தாமல், அதைப் பெரிதாக நினைத்துப் போற்றி நன்றி சொல்வது. அந்த உதவியைப்பெற்றோர் செய்யும் செயலாகும். இக்குறளுக்கு நல்ல உதாணமாக வாழ்வோம்… உற்சாகமடைவோம்…

    உற்சாகமாக நம்முன் இல்லாதவர்களுக்கு மானசீகமாக மனதுக்குள் நன்றி சொல்ல வேண்டும்.

    தன்னம்பிக்கை மேடை

    நிம்மதியான வாழ்க்கை வாழ நீங்கள் தரும் ஆலோசனை…? 

    மகேஷ்குமார்,உதகமண்டலம். 

    நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ நினைக்கிறோம். சுகத்தைத் தேடுகிறோம், வேதனையைத் தவிர்க்கிறோம். சுகம் என்பதை உடல்ரீதியான சுகம் என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால், சுகமாக இருக்கிறீரா என்று கேட்கும் போதும், இங்கு நான் சுகம் என்று பதில் கூறும்போதும் மகிழ்ச்சி அல்லது நலம் என்ற பொருளில் அதைக் குறிப்பிடுகிறோம்.

    சில வேளைகளில் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்பதோடு, மன நிம்மதியும் இல்லாமல் போய்விடுகிறது. இதுதான் ஒரு வருந்தத்தக்க நிலை. நாம் அனைவரும் சில சந்தர்ப்பங்களில் அமைதியைத் தொலைத்திருக்கிறோம். அதை நாமாகவேக்கூட தொலைத்திருப்போம். மனமகிழ்ச்சி இல்லாமல் போனாலும் பரவாயில்லை, மனநிம்மதி கிடைத்தால் போதும் என்ற நிலை அப்போது மனநிம்மதியைத்தேடி பல புண்ணிய இடங்களுக்குச் சென்று வருபவர்களையும் நாம் பார்க்க முடிகிறது. ஆனால்  பிரச்சனையை எதிர்கொண்டு தீர்வு காணாதவரை நிம்மதி   கிடைப்பது சாத்தியமாகாது என்பது தான் உண்மை.

    இந்த கேள்வி கேட்டமைக்காக உங்களைப் பாராட்டுகிறேன், ஏனென்றால் உயர்ப் பதவிகளில் இருப்பவர்களும், செல்வந்தர்களும், சாதனையாளர்களும் கூட நிம்மதியை இழந்து வாடுகிறார்கள். மக்கள் மனதில் இடம் பிடித்த சினிமா நட்சத்திரங்கள் கூட நிம்மதி இழந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கான விடைகாணும் வகையில் உங்களது கேள்வி, எனவே அது முக்கியத்துவம் பெறுகிறது.

    நிம்மதி இழந்த பலரைச் சந்தித்திருக்கிறேன். சிலரது பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் உதவியிருக்கிறேன். அப்படி அவர்கள் நிம்மதி இழந்ததற்கான காரணங்கள் எனக்கு தெரிந்திருப்பதால், அவற்றை உங்களுடன் பகிர்கிறேன்.

    நிம்மதி இழந்த ஒரு மனிதனுக்கு , உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுவிடுகின்றன. உடல் எடை கூடும், மன அழுத்தம் ஏற்படும், வயிற்றுவலி உண்டாகும், முடி உதிரும், மறதி ஏற்படும், தூங்க முடியாத நிலை ஏற்படும். இதனால், ஒரு தொழிலை ஒழுங்காகச் செய்யவும் முடியாது. வருமானம் குறையும், உறவினர் மத்தியில் மரியாதைச்சரிவு ஏற்படும். மனநிம்மதியை இழந்தவரை எளிதில் கண்டுபிடித்து விடலாம். மனச்சோர்வு, இருதயவலி என 50 க்கும் மேற்பட்ட அறிகுறிகளை விஞ்ஞானிகள் பட்டியல் இட்டுள்ளனர். ஆக நிம்மதி இழந்து தவிப்பது ஒரு ஆபத்தான சூழ்நிலை என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும்.

    மக்கள் எப்படி எல்லாம் தங்களது நிம்மதியை இழக்கிறார்கள்,எப்படி அதிலிருந்து மீள்வது அல்லது அதில் சிக்காமல் இருப்பது தான்  எப்படி…? என்று ஆராய்வோம்.

    (அ) பொருளாதாரம்: பொருளாதாரம் முக்கியமில்லை, ஆன்மீகம் தான் முக்கியம் என்று ஞானிகள் பலரும் (இப்படி உபதேசம் செய்பவர்கள் பொருள் குவித்த மேதாவிகள் என்பதையும் கவனத்தில் கொள்க) உபதேசம் செய்யக்கூடும். ஆனால், மனிதர்கள் கவுரமாக வாழ போதுமான நிதி ஆதாரம் தேவை என்பதுதான் உண்மை. திருமணமாகி மனைவி, குழந்தைகள் என்றாகிவிட்ட பிறகு வீட்டு வாடகை தரவும், துணிமணி வாங்கவும், உணவு வாங்கவும், ஒரு வாகனம் வாங்கவும் பணம் இல்லை என்றால் அந்த குடும்பத்தலைவன் நிலைமை திண்டாட்டம்தான். பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றால் அதற்கு வருமானம் வேண்டும் நோயுற்ற  பெற்றோரைக் கவனிக்க வேண்டும். இவ்வருமானத்தை கவுரமான வகையில் சம்பாதிக்கவும் வேண்டும். அதற்கு தரமான கல்வியும், பயிற்சியும், முயற்சியும் தேவைப்படுகிறது.

    நகையை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, வெளியூருக்குப் போனால், திரும்பி வரும்போது நகை திருட்டுப் போனது என்றால் நிம்மதி போய்விடும். நகையை வங்கியில் வைத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது!.

    சேர்த்த பணத்தை அதிக வட்டி தருவதாகக் கூறும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தாலும் இதே கதிதான். நல்ல நண்பன் என்று நினைத்து கைமாத்தாக ஆயுட்கால சேமிப்பைக் கொடுத்தாலும் இதே நிலைதான். வீட்டை ஒரு அயோக்கியனுக்கு வாடகைக்கு விட்டாலும் அதே சிக்கல்தான். ஆக, இதுபோன்ற விவேகமற்ற நடவடிக்கைகள் மூலம் ஏமாந்து போய்விடுவோம், நிம்மதியை இழந்து விடுவோம். ஜாக்கிரதை.

    ஆ) கூடா நட்பு: பலதரப்பட்ட மக்களை நாம் சந்திக்கிறோம். அதில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் பகுத்தறிவு இல்லாமல் போனால் கெட்டவர்களுடன் பழக நேரிடும். அவர்கள் நமது நிம்மதியைக் குலைப்பார்கள். தவறான வழிக்கு நம்மை அழைத்துச் செல்வார்கள் என்பது மட்டுமல்லாமல், நமக்கு கெட்ட பெயரையும் வாங்கித் தந்துவிடுவார்கள். சிலர் வேலை வாங்கித்தருகிறேன், பிள்ளைக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித்தருகிறேன் என்றெல்லாம் கூறிக்கொண்டு பணம் வாங்கி ஏமாற்றி விடுவார்கள். இவன் எல்லாம் ஏமாற்றுவதை தொழிலாகக் கொண்டவன் என்பது பின்னர்தான் தெரிய வருகிறது. இப்படிப்பட்டவர்கள் அண்டாமல் இருப்பதே நல்லது. பணம் என்று வந்துவிட்டால் எளிதில் எவரையும் நம்பாமல் இருப்பதே சிறந்தது. இப்படி பணத்தை விட்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் பலர்.

    இ) நெறிகெட்ட பிள்ளைகள்: நல்லவர்கள் பலருக்கும் பிள்ளைகளால்தான் நிம்மதி போய்விட்டது. பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவரின் மகன் ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால் அவர் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? ஒரு டாக்டரின் மகன் ஊதாரி என்றால் அவருக்கு எப்படி நிம்மதி கிடைக்கும்…? ஒரு அதிகாரியின் மகள் இரவு நேரத்தில் மது அருந்தும் விடுதியில் நடனமாடினால் அவருக்கு எங்கே நிம்மதி…? அன்புடனும், ஆதரவுடனும், பாசத்துடனும் வளர்த்த பிள்ளைகள் பொறுப்பின்றி நடந்து கொண்டால் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் தந்தைக்கும், தாய்க்கும் நிம்மதி இருக்காது.

    அப்படி, பிள்ளைகள் பாதைத் தவறிப்போகாமல் ஆரம்பத்திலேயே கண்காணிக்க வேண்டும். அதையும் மீறி அவர்கள் பாதை மாற வாய்ப்பு உண்டு. அப்போதும் அவர்களை நல்வழிப் படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டுமே தவிர, அவர்களைக் கைவிடக்கூடாது. அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனையைக் கேட்கலாம், தப்பில்லை. அவர்களைப் படிப்படியாக நல்வழிப்படுத்தும்போது நமக்கும் ஒருவித மனநிம்மதி கிடைத்துவிடுகிறது. ஒரு சாதனை படைத்த  உணர்வு ஏற்படுகிறது.

    ஈ) உடல்நலம்: உடல்நலம் கெட்டுவிட்டால் நிம்மதி சுத்தமாகப் போய்விடும். சர்க்கரை நோய் வந்துவிட்டால், அன்றாடம் அல்லல்தான். இருதய நோய் வந்துவிட்டாலும், வாழ்க்கை இருண்டுவிடும் தானே…! சிறுநீரகம் கெட்டுவிட்டால், வாழ்க்கையே சுருங்கிவிடும். இந்த நோய்கள் அனைத்துமே நாமாக காசு கொடுத்து வாங்குகிறோம். விஞ்ஞான மருத்துவம்  சொல்வதைக் கேட்பது கிடையாது. எந்த ஆதாரமும் இல்லாத மருத்துவ முறைகளை நம்பிவிடுவது இதற்கு ஒரு முக்கிய காரணம். அளவான உணவு உண்பதும், பழங்கள், காய்கறிகள், பயிறு வகைகள் உண்பதும், உடல் எடையை குறைவாக வைத்திருப்பதும், ஒரு மணிநேரம் ஓடுவதும் உடல் நலத்தைக் காக்கும். வீட்டு வேலைகளை நாமே செய்வதும் ஒருவகையான உடற்பயிற்சிதான். யோகாசன பயிற்சி செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதில் ஆதாரம் இல்லை. ஒரு மணிநேரம் ஓடிய பின்னர் யோகா பயிற்சிகள் செய்தால் அதில் சில நன்மைகள் ஏற்படக்கூடும்.  அதிக உணவு, அதிக எண்ணெய்ப் பலகாரங்கள், வேலை செய்யாமலிருப்பது ஆகியவற்றால் உடல் பருமனாகி, உடல் தோற்றத்தை இழப்பதுடன், தன்னம்பிக்கையையும் இழந்து வாடுகிறோம். நம் போன்ற நடுத்தர வர்க்க மக்களுக்கு இன்னொரு ஆபத்தும் உண்டு. உடல் பருமன் ஆகிவிட்டால் ஆஸ்பத்திரிக்குச் செலவிட பல லட்சம் ரூபாய்கள் திரட்ட வேண்டும். அதற்கு நகையை விற்க வேண்டும் அல்லது விவசாய நிலத்தை அடமானம் வைக்க வேண்டும். இது நமக்கு தேவையா…?  உடல்நலம் மேம்பட நான் எழுதிய “உடலினை உறுதி செய்” என்ற நூலைப்படியுங்கள். இன்றே, ஒரு ஜோடி காலணி (நட்ர்ங்) வாங்கி, நாளை காலையில் அதை அணிந்து, வீட்டு கதவைத்திறந்து ஓடுங்கள் நீங்கள் தேடும் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

    உ) ஆடம்பர வாழ்க்கை: தகுதிக்கு மீறி ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் பின் ஒருநாள் நிம்மதி இழப்பார்கள். ஆடம்பர வாழ்க்கை வாழ்பவனின் செல்வம் எல்லாம் சூரிய ஒளியின்முன் மாயும் மூடுபனியைப்போல மறைந்துவிடும். மிகப்பெரிய வீடு, சொகுசுக்கார், புடைசூழ வேலையாள், ஆடம்பர திருமண ஏற்பாடு என்று பணத்தை விட்டவர்கள், பின்னர் ஒருநாள் வருமானம் குன்றி, வங்கியில் பணம் செலுத்த முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். அவர்களது வீட்டையும், சொகுசுக்காரையும் வங்கி பறிமுதல் செய்து விடுகிறது. ஆஹய்ந்ழ்ன்ல்ற் ஆகிவிடுவதை விடப் பெரிய அவமானம் வேறு இல்லை.

    நமது தகுதிக்கு உட்பட்டு, சாதாரணமாக வாழ்ந்துவிட்டால் மனநிம்மதியுடன் வாழலாம். இருக்கிற வருமானத்தை வைத்து முழுமையான மனநிறைவான வாழ்க்கை வாழ்வதே வாழ்க்கைக் கலை எனலாம். கோவையில் ஒருவர் ஒரு லிட்டர் தண்ணீரில் சோப்பு போட்டு குளித்து காட்டினார் என்ற செய்தியைப் பத்திரிக்கையில் படித்தேன். தண்ணீரில் அந்த அளவுக்கு சிக்கனம் என்றால், மற்ற விஷயங்களில் எந்த அளவுக்கு சிக்கனமாக இருக்க முடியும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

    மனநிம்மதியைத்தரும் சில செயல்களை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்:

    1. இன்றைய நிமிடத்தில் வாழுங்கள்: இறந்த காலத்தில் நடந்துவிட்ட துயரங்களை நினைத்து சோகமடைவதை விட்டுவிட்டு, எதிர்காலத்தில் என்ன ஆபத்து வருகிறதோ என்று மனக்கலக்கம் அடைவதையும் விட்டுவிட்டு இப்போது, இன்று கண்முன் நடக்கும் காரியங்களில் ஈடுபட்டால் நிம்மதி உண்டு. எனது இந்த பதில் படிக்கும்போதும் கூட வேறு எந்த சிந்தனைகளுக்கும் இடம் தராமல் இருந்தால் உங்களுக்கு இதுவும் ஒரு நிம்மதியான நேரம்தானே…?

    2. தொடர்ந்து கல்வி பயிலுங்கள்: உங்களுக்கு பிடித்தமான ஒரு பட்டப்படிப்பைத் தொடர்ந்து படிக்கலாம். தமிழ் இளங்கலைப்பட்டம், ஆங்கில இளங்கலைப்பட்டம், மனோவியல் பட்டம் என்று பயின்று பட்டம் வாங்குங்கள். ஒரு புது மொழியைக் கற்கலாம், ஒரு நல்ல நூலைக்கற்கலாம் அதுவும் உலக மகா சாதனையாளர் சுயசரிதையைக் கூட படிக்கலாம். ஒரு நூலைக்கூட எழுதலாம்.

    3. பிறருக்கு உதவலாம்: நம்மையே நினைத்துக் கொண்டிருந்தால் நிம்மதி வராது, நம் மீது பரிதாபம் தான் வரும். நாம் அடைந்த தோல்விகள் நமது ஞாபகத்தில் வந்து நம்மைக் கொல்லும். மாறாக மற்றவர்களை நினைத்து அவர்கள் பிரச்சனைகளில் நம்மை ஈடுபடுத்தி அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். ஓரளவுக்கு வசதி இருந்தால் ஒரு ஏழைச் சிறுவனைப் படிக்க வைக்கலாம். நானும் எனது நண்பர்களும் அதைச் செய்கிறோம். இதனால் எனக்கு மனநிம்மதி கிடைக்கிறது.

    4. சிரித்துப் பழகுங்கள்: உங்களது கணவன் அல்லது மனைவியின் கண்களைப் பார்த்து சிரியுங்கள். அவரை கட்டியணைத்துப்பாராட்டுங்கள். பிள்ளைகளை கட்டியணைத்து ஆதரவு தெரிவியுங்கள். மனைவிகளையும் பிள்ளைகளையும் வார்த்தைகளால் கூட துன்புறுத்தார்தீர்கள். யாரிடமாவது திமிராக நடந்து கொண்டீர்கள் என்றால் மன்னிப்புக் கேளுங்கள். உங்களுக்கு  நிம்மதி பிறக்கும். நீங்கள் செல்லுமிடமெல்லாம் மகிழ்ச்சியைப் பரப்புங்கள். உங்களால் உதவ முடிந்ததை உடனே செய்யுங்கள். எதிரி என்றாலும் மோசமானவன் என்றாலும் நியாயமான உதவி என்றால் செய்யுங்கள். அதற்கு இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்காது.

    5. மன்னியுங்கள்: உங்களுக்கு கெடுதல் செய்தவர்களைக் கூட மன்னியுங்கள், அவர்களுக்காக அல்ல உங்களுக்காக. உங்கள் மனஅமைதிக்காக அதைச் செய்யுங்கள். உங்களது தவறுகளை பிறர் மன்னித்தது போல, மற்றவர் தவறுகளை நீங்கள் மன்னித்து விடுங்கள். 50 ஆண்டுகள் கழித்து இவ்விரோத மனம் உங்களிடம் இருக்காது…! அன்றைய தினம் நமது விரோதம் ஒரு பிரச்சனை அல்ல. அன்று நாம் உயிரோடு இருக்க மாட்டோம்…! 6. வம்பு வழக்கு வேண்டாம்: அண்ணன் தம்பி அல்லது பங்காளிகளுடன் கோர்ட்டு வழக்கு வேண்டாம். ஒரு சென்ட் அல்லது இரண்டு சென்ட் நிலம், கிணற்றுப் பங்கு என்று எதையும் விட்டுக்கொடுங்கள். அது உங்களுக்கு இலாபமே அன்றி நஷ்டம் இல்லை. பக்கத்து வீட்டுக்காரரிடமும் எந்த வம்பு வழக்கும் வேண்டாம், சமரசமாகிவிடுங்கள். தீபாவளி பலகாரங்கள் கொடுத்தனுப்பி சமரசம் செய்யுங்கள், நிம்மதி பிறக்கும்.

    இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். நமக்கு நிம்மதி ஒருநாள் நிச்சயம் வந்து சேரும். அந்த நாளுக்குப்பின் நமக்கு நிரந்தர நிம்மதிதான். அதற்குப்பிறகு, நம்மை யாரும் எந்த தொந்தரவும் செய்யமாட்டார்கள். நம்மை விட்டுவிடுவார்கள். அது நாம் மரிக்கும் நாள். அந்த நாள் வரும் வரை நாமும் மற்றவர்களுக்கு தேவையற்ற சிரமங்களையும், சிக்கல்களையும், தடைகளையும், அவமானத்தையும் தராமலிருந்தாலே நாமும் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ்ந்துவிட்டு போகலாம். நாம் மண்ணோடு மண்ணான பிறகு மறுவாழ்வு ஒன்றுமில்லை என்றாலும், நமது மரபணுக்கள் நமது பிள்ளைகள் என்ற வடிவில் பூமியில் வாழும்.  நமக்கு மரணம் நிரந்தரம் இல்லை…! Richard Dawkins என்பவர் எழுதிய The Selfish Gene  என்ற நூலைப்படியுங்கள்.

    சிரமத்தை விரட்டு! சிகரத்தை எட்டு!!

    திரு. நரேஷ் கார்த்திக்

    நிறுவனர்,

    ‘Seed Reaps’ கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை

    கோவை.

    வெற்றி பெறமுடியுமென்று நம்பும் தன்னம்பிக்கை உடையவர் எப்போதும் வெல்வார் என்பதற்கேற்ப பாதிக்கப்பட்டவர்களுக்கு நற்சேவை புரிவதில் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று செயல்பட்டு பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருபவர்.

    உறுதியாக தீர்மானித்தல் தான் தலைசிறந்த அறிவு என்பார்  மாவீரன் நெப்போலியன். உறுதியான தீர்மானத்தோடு உயர்வான இடத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு தந்து வருபவர்.

    நல்ல விதமாக ஒரு பிரச்சனையை அணுகினால் எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கண்டு விட முடியும் என்று பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்.

    ஆரோக்கியமான நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அவர்களின் மூலமாக வலி நிறைந்தோருக்கு வழிகாட்டும் இளைஞராக செயல்பட்டு வருபவர்.

    கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு நற்காரியங்களை தைரியமாய் கையில் எடுத்து பாதிக்கப்பட்டோரை சாதிக்க வைக்கும் வல்லமை உங்கள் சேவைக்கு உண்டு என்று அ.ட.ஒ. அப்துல்கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றிருப்பவர்.

    இப்படி, பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ள திரு. நரேஷ் கார்த்திக் (நிறுவனர் ‘Seed Reaps’ கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை, கோவை) அவர்களை நாம் சந்தித்ததிலிருந்து இனி… நீங்கள் பிறந்தது வளர்ந்தது குறித்து…?

    கோவை மாவட்டத்திலுள்ள சாய்பாபா காலனி நான் பிறந்த ஊர்.  எனது பெற்றோர் இருவரும் பேராசிரியர்கள். அப்பா திரு. செந்தில்குமார், குமரகுரு கல்லூரியில் பேஷன் தொழில்நுட்பத்துறையிலும், அம்மா திருமதி. கீதா, அமிர்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையிலும் பணியாற்றி வருகிறார்கள். இருவரும் ஆசிரியர் என்பதால் என்னை நன்றாகப்படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். கோவையிலுள்ள லெசியு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தேன்.

    பள்ளிப்படிப்பை முடித்தவுடன் உளவியல் துறையை தேர்ந்தெடுத்துப்படித்தேன். இப்படிப்பின் மூலம் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்து வரும் பிரச்சனைகளை என்னால் ஓரளவிற்கு நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

    படிப்பை முடித்தவுடன், உங்களின் அடுத்த நிலை என்னவாக இருந்தது…?

    படிப்பை முடித்தவுடன் “டெல் கம்யூட்டர்” நிறுவனத்தில் பணியாற்றினேன். இந்நிறுவனம் சார்ந்து இந்தியா அளவில் பல மாநிலங்களில் பணியாற்றியுள்ளேன். இந்நிறுவனத்தில் பணியாற்றினாலும் உளவியல் துறையின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் உருவானது. உளவியல் என்பது நாம் பார்க்கும் பழகும் மனிதர்களின் மனதில் தோன்றும் பிரச்சனையை அறிந்து அதற்கான தீர்வை விளக்குவதே ஆகும். என்னுள் அடிக்கடி தோன்றிய வினாவை முன்னிலைப்படுத்தினேன். அப்போது சில வேலைகள் உதயமாகியது. நான் செய்யும் எந்த ஒரு வேலையும் எனக்கு மட்டும் நன்மை பயக்ககூடியதாக இல்லாமல் மற்றவர்களுக்கும் பயன் தரக்கூடிய வகையில் அமைய வேண்டும் என்று விரும்பினேன்.

    முதலில் ‘Happe Miles’ என்றஅமைப்பை நிறுவி, இந்த அமைப்பின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் தனி ஆளுமை குறித்த பயிற்சியை வழங்குதல், நுழைவுத்தேர்வை எதிர்கொள்ளும் முறைப்பற்றியும் பல்வேறு பயிற்சிகள் செய்து கொடுத்தோம்.

    அதே போல் கார்பரேட் நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் போன்றநிறுவனங்களுக்கு மேலாண்மைத்துவத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும், ஒரு நிறுவனத்தை வழி நடத்த கற்றுக் கொள்ள வேண்டிய பண்பு நலன்கள் என்னென்ன என்பது பற்றியும் பயிற்சி அளித்து வருகிறோம்.

    அடுத்து ‘I am your brother’ (நான் உங்கள் சகோதரன்) என்றஅமைப்பை தொடங்கினேன். இந்த அமைப்பின் மூலம் வெளிநாடுகளில் வாழும் எத்தனையோ பிள்ளைகள், தங்களின் பெற்றோர்களின் பிறந்த நாளையோ, திருமண நாளையோ தெரிந்தும் அவர்களோடு கொண்டாட முடியாத தூரத்தில், மனப்பாரத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு அங்கிருந்து கொண்டே, எங்களைநாடினால் அவர்கள் இங்கிருந்து என்னென்ன செய்வார்களோ அவை அனைத்தையும் எங்களின் அமைப்பின் மூலம் செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவோம்…

    பின்னர் ‘Acsto proda India Private Limited’ என்னும் தகவல் தொழிற்நுட்ப வடிவமைப்பு நிறுவனத்தை  தொடங்கினோம்.

    ‘SeedReaps’  சேவை மையம் உதயமானது குறித்து…?

    எங்கள் அமைப்பு சார்ந்த எந்த வேலையாக இருந்தாலும், பயனாளிகளை சந்திப்பதாக இருந்தாலும், எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தேனீர் விடுதியில்தான் நடைபெறும். 2011ம் ஆண்டு எங்களுக்கென்று எந்த அலுவலகமும் இல்லாத சூழல் என்பதால் அந்த இடத்தைப் பயன்படுத்திக் கொண்டோம். அங்கு பணியாற்றும் ஓர் இளம் வயது பெண்தான் எப்பொழுதும் எங்களுக்குப் பணி செய்வாள்.

    ஒருநாள் அந்தப் பணிப் பெண் குறித்து விசாரித்தேன். அந்தப் பெண் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கிறாள் என்றும் பொதுத்தேர்வில் 1040 மதிப்பெண்கள் பெற்றுள்ளாள் என்றும்  அறிந்தேன். அதைக்கேட்டவுடன் ஒரு கணம் கலங்கிவிட்டேன்.

    அந்தப்பெண்ணிடம் உனக்கு மேலே படிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறதா…? என்று கேட்டேன்.  கணினி அறிவியல் படிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தைச் சொன்னாள். ஆரம்பத்தில் பணம்தான் இப்பெண்ணிற்குப் பிரச்சனை என்று எண்ணினேன். ஆனால், பிரச்சனை வேறு விதமாக இருந்தது. அந்தப் பெண்ணிற்கு அம்மா இல்லை. அப்பா வேறு திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்லாமல், 33 வயதுடைய ஒருவரிடம் ரூ. 67 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு 17 வயது உடைய இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள தந்தை வற்புறுத்தினார் என்று தம் வாழ்க்கையில் நடந்த பிரச்சனையை கூறினார். இவற்றைஅறிந்த நான் ஏதேனும் ஒரு வகையில் அந்தப் பெண்ணுக்கு உதவ வேண்டும் என்று எண்ணினேன்.  அவரின் தந்தையை நேரடியாக சந்தித்துப் பேசினேன் அவர் அதற்கு மறுப்பு மொழியாக என்னிடம் சில வார்த்தைகள் கூறினார். ஆனாலும் நான் விடாமல் தொடர்ந்து வாதாடினேன், இதனால் பிரச்சனை பெரிதாக மாறியது. அப்பொழுது கோவை மாநகர காவல் துறைஆணையரிடம் இதைப்பற்றி தெரிவித்தேன். ஆணையர் அவர்கள் அந்தப் பெண்ணையும், அவரது அப்பாவையும் அழைத்து வரும்படி என்னிடம் சொன்னார். அவர்களை அழைத்துச் சென்றேன். ஆணையரின் ஆலோசனையின்படி அவரின் தந்தை தவறைஉணர்ந்து கொண்டு பெண்ணைப் படிக்க வைக்கிறேன். ஆனால், அதற்கு வசதியில்லை என்றார்.

    அதற்கு உடனே என் அம்மாவிடம் இதைப்பற்றி தெரியப்படுத்தினேன். உடனே என் அம்மாவின் நெருங்கிய தோழி ஒருவர் ஒரு கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார், அவரின் ஆலோசனைப்படி அப்பெண்ணிற்கு அக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், பிறசெலவுகளை நீங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.

    அன்றைக்கு காவல்துறையில் பணியாற்றி வந்த ஒவ்வொரு உயர் அதிகாரிகளும், துணை ஆணையர்களும், உதவி ஆணையர்களும் உதவிகள் பல செய்து நெகிழ வைத்தார்கள். இது எனக்கு மிகப்பெரிய மகிழ்வைக் கொடுத்தது. எனக்கு உதவி செய்த ஆணையர்  அவருக்கு நன்றி சொல்ல நினைத்தேன். அதற்கு அவர்,  நீங்கள் செய்த உதவி பாராட்டுக்குரியதுதான் ஆனால், இது முடிவல்ல என்று ஒரு வார்த்தையைக் கூறினார்.

    அவரிடம் ஐயா நான் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். இதுபோல எத்தனையோ பிரச்சனைகள், இங்குண்டு இதைக் கவனிப்போர் உங்களைப்போல் ஒரு சிலர் மட்டுமே தான் இருக்கிறார்கள் என்றார். நான் யோசிக்கத் தொடங்கினேன். என்னால் முடிந்த இதுபோன்றபிரச்சனைகளுக்கு உள்ளானவர்களை  இனங்கண்டு, அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தது தான் இந்த சேவை மையம். அதற்கு, ஆணையர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

    இந்தச் சேவை மையத்தின் பெயர்க் காரணம் குறித்து…?

    What you Sow; The sow You Reap!  “வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்” என்றபழமொழி என் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த வரி. நாம் எங்கு, எதை விதைக்கிறோமோ, அதுதான் விளைந்து பயனைக்கொடுக்கும் என்பதால்தான் “சீடு ரீப்ஸ்”  என்றபெயரை வைத்தேன். இன்று நீங்கள் செய்யும் உதவியால் ஒருவன் படிக்கிறான் என்றால் நாளை அவனின் எதிர்காலம் நன்றாக இருக்கும். அதன் மூலம் சமுதாயத்தில் மற்றவர்களைப் போல் மாண்புடையவனாய் அவனால் வாழ முடியும். அவ்வாழ்வின் மூலம் ஓர் ஆரோக்கியமான சமுதாயமாக மாற்றம் அடையும்.

     அதனால், எதுவாக இருந்தாலும் ஒருவரின் படிப்பிற்கு இயன்றவரை உதவிகள் செய்து விடுங்கள், அது ஒருவரின் வாழ்க்கையை உயர்த்தும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    ஒரு சேவை மையம் தொடங்கும் பொழுது நம்பகத்தன்மை மிகவும் முக்கியம். அதை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்…?

    சேவை என்பது சமுதாயத்திற்கு செய்யும் தொண்டு. பாராட்டியவர்களை விட அதைத் தூற்றியவர்களே அதிகம். ஒரு தனிமனிதன்தான், தன் குடும்பம் தன் பிள்ளை என்று நினைக்காமல், ஒரு சமுதாயத்திற்காக உழைக்க வருகிறான் என்றால், அதை எவரும் உடனுக்குடன் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரின் நோக்கத்தைத் தெரிந்த பின்னர்தான் அந்த நபரைப் பாராட்டுவார்கள். இது மனிதர்களின் இயல்பான குணம்தான்.

    ஆனாலும் நான் எடுத்துக்கொண்ட முயற்சியிலிருந்து பின் வாங்க மனம்  விருப்பம் இல்லை. நான்  ஏன் தொடங்கினேன்? எதற்காக தொடங்கினேன்? இதன் அவசியம் தெரிந்தார்கள். இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு இன்று பலரும் உதவுகிறார்கள்.

    ஒரு தனிமனிதனுக்கு படிப்பின் முக்கியத்துவம் எந்தளவிற்கு தேவைப்படுகிறது…?

    “கற்கை நன்றேகற்கை நன்றே

    பிச்சைப் புகினும் கற்கை நன்றே”

    இவ்வரிதான் படிப்பிற்கான சிறந்த உதாரணம். படிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் பிச்சை எடுத்தேனும் படிக்க வேண்டும்.

    படிப்பு ஒருவனை சிம்மாசனம் போட்டு அமர வைக்கும். ஒருவன் படித்துவிட்டால் யாரையும் எதிர்பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. படிக்காமல் எத்தனையோ பிள்ளைகள் குற்றசம்பவங்களில் ஈடுபடுவது, திருடுவது, கொள்ளை, கொலை, ஆள்கடத்தல் இது போன்றகுற்றத்தின் மூலம் தங்கள் வாழ்க்கை வழிமாறி விடுவதை அனுதினமும், செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் பார்க்கிறோம்.

    இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஒருவர் கல்வி கற்கிறார் என்றால் கல்வியோடு ஒழுக்கம், நற்பண்புகளும் கூடவே கிடைக்கும் என்பதை ஒவ்வொவரும் உணர வேண்டும். ஒருவர் கல்வி கற்றால் அது அவருக்கு மட்டுமல்லாது அந்த சமுதாயத்திற்கும், நம் நாட்டிற்க்கும் நன்கு ஆரோக்கியமான வளர்ச்சியின் படிநிலையாக அமையும்.

    எதுமாதிரியான பிரச்சனையுள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்…?      பிரச்சனையில்லாத மனிதர்களே இல்லை. அனைவருக்குள்ளும், ஏதேனும் ஒரு பிரச்சனை குடிகொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் சிலருக்கு உடனுக்குடனே தீர்வு கிடைத்துவிடும். சிலருக்கு தம் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும், இதை எதிர்கொள்வதுதான் கடினம்.

    இந்தப்பிரச்சனைக்குரியவர்கள் இரண்டு விதமாக முடிவை முதன்மைப் படுத்துவார்கள்…

    1. தவறான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்தல் (களவு, கொலை, பாலியல் தொழில் போன்ற குற்றச் செயல்கள்)
    2. தற்கொலை செய்து கொள்ளுதல்… (வாழ்க்கையின் மீது விரக்தி அடைந்து எடுக்கும் முடிவு)

    இதுபோன்றவர்களைத் தேடி இவர்களின் குறையை அறிந்து உதவி செய்து வருகிறோம்.

    பாலியில் ரீதியாகப்பாதிக்கப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள், கைதிகளின் குழந்தைகள் முதலானவர்கள்.

    இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு முதலில் கவுன்சிலிங் கொடுத்து அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் ஒரு மாற்றுப்பாதையை உருவாக்கித் தருகிறோம்.

    தற்கொலை செய்து கொள்வதற்கும், பாலியல் தொழில் செய்து கொள்வதற்கும்  தனி ஒரு மனவலிமை வேண்டும்.  மனதிடமிருந்தால் தான் இச்செயலை செய்ய முடியும். அவ்வாறு மனதிடம் உள்ள உங்களால் ஏன் சாதிக்க முடியாது…? என்று வாழ்க்கைப் பாடத்தை சொல்லிக்கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்துகிறோம்…

    இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இச்சமுதாயத்தில் எதிரிகளாகவும், குற்றம் அதிகம் ஏற்படுத்தக்கூடியவர்களாகவும் மாறவாய்ப்புண்டு, இது போன்றவர்களை இனம் கண்டு அவர்களின் வழியை ஒரு மேன்மையான பாதைக்கு திசைத்திருப்பி இதே சமுதாயத்தில்  மதிப்பான, பொறுப்பான பாதைக்கு கொண்டு செல்வதே எங்களின்  தலையாயப்பணியாகும்.

    இந்த மையம் தொடங்கும் பொழுது உங்கள் குடும்பத்தின் ஊக்கமும், ஒத்துழைப்பும் எவ்வாறு இருந்தது…?

    தொடக்கத்தில் அவர்கள் மிகவும் பயந்தார்கள். சாதாரண சேவை மையம் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட களம் இது என்பதால் சற்று யோசித்தார்கள்.

    ஆனாலும் நான் தேர்ந்தெடுக்கும் எந்த திட்டமும் சரியாகத்தான் இருக்கும் என்று அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதனால், ஊக்கப்படுதினார்கள்.

    எங்கள் அமைப்பின் மூலம் பயன் அடைந்த எத்தனையோ பேர் அவர்களின் எதிர்காலம் இனிமையாக அமைந்த பின்னர், நன்றி சொல்ல குடும்பத்தினருடன் என்னுடைய வீட்டிற்கே வருவார்கள். தன் வாழ்க்கை மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் இவர்  தான் காரணம் என்று என்னுடைய பெற்றோர்களிடம்  நடந்ததை அவர்கள் விளக்கி சொல்லும் பொழுது என் குடும்பத்தாருக்கு அளவற்றமகிழ்ச்சியே தோன்றும்.

    தவறான வாழ்க்கை முறையால் பாதிக்கப்பட்ட வர்கள், கூடாத உறவுகளினால், குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் இப்படியான பிரச்சனைகள் உள்ளவர்களை எப்படி இனம் காண்கிறீர்கள்…?

    எல்லாப்பிரச்சனையும், காவல்நிலையத்திற்கு வருவதில்லை. தகாத உறவினால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஆண்கள், பெண்கள் ஆகியோர் மருத்துவர்களை நாடி வரும் போது அவர்களின் மூலமும், வழக்கறிஞர்கள் மூலமும், நண்பர்கள் மூலமும், தவறைஉணர்ந்து தானாகவே முன்வருபவர்கள் என்று பல நிலைகளில் தெரியவருகிறார்கள்.

    உடனே அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி மட்டும் சிந்தித்து, நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து வருகின்றோம்..

    இந்த சேவை மையத்தின் தனிப்பண்புகள் குறித்து…?

    முதலில் இம்மையமானது குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்தல், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள், ஆண்கள் முறையற்றபெற்றோர்களால் பாதிப்படைந்த குழந்தைகள், கைதிகளின் குழந்தைகள் ஆகியோரின் நலனில் அக்கறைகொண்டே இந்த மையம் தொடங்கப்பட்டது.

    அரசிடம் முறையான அங்கீகாரம் மற்றும் தரச்சான்றிதழ் பெற்று நடத்தப்படுகிறது.

    இம்மையத்தின் மூலம் உயர்ந்தவர்கள், பலர் இம்மையத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

    எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பல நிறுவனங்கள் பல உதவிகளை தானாக முன்வந்து செய்து வருகிறது.

    பிரச்சனையோடு வந்து பிரச்சனையிலிருந்து மீண்டெழுந்தவர்கள், எதிர்காலத்தில் ஓர் உயர்ப் பதவியில் அமர்ந்தால் அவர்களின் நிலைப்பாடு எவ்வாறு மாறுபடும்…?

    வலியை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும் அந்த வலியின் வேதனை. பிரச்சனைகளால் அடைந்த வேதனையையும், துயரத்தையும் அறிந்து வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்றவர்கள் நிச்சயம் தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். தாம் அனுபவத்த கசப்பான அனுபவங்களைப் பிறர்படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று எண்ணுகிறேன்.

    எதையும் நேர்மையான முறையில்  சிந்தித்து, தவறுகள் நடை பெறாத வண்ணம் தங்களை தகவமைத்துக் கொள்வார்கள்.

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண் காவல் துறையில் பணியாற்றும் பொழுது அப்பிரச்சனையை அவர்களால் முழுமையாக ஒழிக்க முடியும் என்று நம்புகிறேன்.

    இத்தருணத்தில் நீங்கள் நன்றிக்குரியவர்களாக நினைப்பவர்கள்…?

    முதலில் என் பெற்றோருக்கும், என்னுடைய மனைவிக்கும்  இத்தருணத்தில் நன்றிக்கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளேன்.

    அதன் பின்னர் 2011 ம் ஆண்டு கோவை மாநகர காவல்துறைஆணையருக்கும், அவர்களோடு பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கும், திரு. அஜய் நவீன் இம்மையத்தின் இணை இயக்குநர், தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றப் பேச்சாளர். எல்லா இடத்திலும், எல்லா வகையிலும் எனக்கு மிகுந்த உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகிறார். திரு. ஷியாம் நோவெல் இனோவேட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர், திரு.சரவணன் ஹீயுமர் பிரேம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர், திரு. கோவேந்தன் வி- கனெக்ட் நிறுவனத்தின் இயக்குநர், ஒவிய வடிவமைப்பில் பணியாற்றும் செல்வி. சசிதா முதலானோர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.

    அதன் பிறகு பல நிலைகளில் உதவி புரிந்த பல நல் உள்ளங்களுக்கும் நன்றி கூறவிரும்புகிறேன்.

    இம்மையத்தின் மூலம் மறக்க முடியாத பாராட்டாக நினைப்பது?

    2013 ம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் மேதகு    A.P.J. அப்துல்கலாம் அவர்கள் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்பொழுது எங்கள் மையத்தைப் பற்றி தெரிந்து கொண்டவர், புதுமையான முயற்சி என்றும் பாதிக்கப்பட்டோரின் வலியைப் புரிந்து கொண்டு அந்த வலிக்கு ஒரு சிறந்த மாற்று சக்தியாக செயல்பட்டு வருகிறீர்கள். உங்களின் இந்த சேவை மேலும் மேலும் வளர்ந்து நல்லதொரு தேசததை உருவாக்க வேண்டும். இந்தியாவிலேயே இதுபோன்றபுதுமையான முயற்சியில் முதன்முதலில் ஈடுபடுவது உங்களின் சேவை மையமாக தான் இருக்கும். உங்களின்  பங்களிப்பை சிறப்பான முறையில் கொடுங்கள் என்று என்னைப் பார்த்து பாராட்டிய வார்த்தை என் வாழ்வின் மிகுந்த பாராட்டாகப் பார்க்கிறேன்.

    வழிதவறி குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுக்கு எது மாதிரியான விழிப்புணர்வு தேவைப்படுகிறது…?

    தவறைச் சுட்டிக்காட்டுவதை விட அந்த தவறேநடக்காமல் காப்பது மிகவும் சிறந்தது என்று நினைக்கிறேன். அதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியமான ஒன்று.

    பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் வெறுமனே பாடத்தை மட்டும் நடத்தாமல் ஒழுக்கம் குறித்தும், பாலியல் சம்பந்தமான கல்வி குறித்தும் அவர்களுக்கு விளக்க வேண்டும். விழிப்புணர்வு மூலம் ஒவ்வொருவரையும் விழிப்படையச் செய்ய வேண்டும்.

    பாதிப்படைந்தவர்களை கடுஞ்சொல் கொண்டோ, கொச்சை சொல் கொண்டோ பேசக் கூடாது. உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பவர்களை மனரீதியாகக் காயப்படுத்தி விடக்கூடாது.

    இந்த சேவை செய்வதன் மூலம் திருப்தி அடைந்து விட்டதாக என்றாவது எண்ணியது உண்டா…?

    இந்த மையம் தொடங்கியதே தன்னாலான உதவிகளை சமுதாயத்திற்கு செய்ய வேண்டும் என்றுதான். ஆனால், இங்கு பலதரப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பிரச்சனைகள் உள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    பிரச்சனைகள் இல்லாமலும், எங்களின் அறக்கட்டளை வங்கி இருப்பில் நிதி அதிகமாகவும் (பாதிக்கப்பட்டவர்களே இல்லாத சூழல்) அதை யாருக்கு கொடுப்பது என்றேதெரியாமல் இருக்கும் நிலை என்று ஏற்படுகிறதோ அன்று தான் இந்நிறுவனத்தை தொடங்கியதன் சிறப்பை என்னால் உணர முடியும்…

    தன்னம்பிக்கை குறித்து தங்களின் கருத்து…?

    தன்னம்பிக்கை எங்கும் எதிலும் பயன்படுத்தப்படும் மந்திரச் சொல். நம்பிக்கை உள்ளவன் பிழைப்பான். தன்னம்பிக்கை உள்ளவன் பிறரையும் பிழைக்க வைப்பான்.

    ஒரு செயலிலோ அல்லது ஒரு கொள்கையிலோ மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் அங்கு முதலாவதாக நீயாக இரு… மாற்றம் உன்னிடமிருந்து செல்ல வேண்டும்.

    குடும்பம் குறித்து?

    பெற்றோர் திரு. செந்தில் குமார், திருமதி.கீதா, மனைவி திருமதி. காயத்திரி தெற்கு இரயில்வே துறையில் கோவை சந்திப்பின் நிலைய மேலாளராக பணியாற்றுகிறார் . தம்பி ராகுல் பி.இ இறுதியாண்டு படிக்கிறார்.

    இவர்கள்தான் எனக்கு தூண்டுதலாக இருந்தார்கள் என்றால்… யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்?

    நான் இந்த மையத்தை தொடங்குவதற்கு தமிழக காவல் துறைஅதிகாரிகள்தான் காரணம். அவர்களிடமிருந்து கற்று கொண்ட அனுபவம் தான். அதில் குறிப்பிடத்தக்கவர் முன்னாள் டி.ஜி.பி வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ் அவர்கள். அவர் காவல் துறைதுணைத்தலைவர் (டி.ஐ.ஜி) இருந்த பொழுது மாவோயிஸ்டுகளை கட்டுப்படுவதற்கு இவரை நியாமித்தனர். இவரின் அணுகுமுறைஅனைவரையும் அப்போது ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. ஆம், மாவோயிஸ்டுகளை அழைத்து அவர்களின் குறையை கேட்டறிந்து 50க்கும் மேற்ப்ட்டவர்களை காவல் துறையில் பணியில் சேர்த்தார்கள்.

    இப்பொழுது காவல் துறைகூடுதல் தலைமை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி) முனைவர்.  செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்  அவர்கள் அடிக்கடி கூறும் ஒரு மந்திர சொல் “நாடு உனக்கு என்ன செய்தது என்பதை எண்ணுவதை விட நாட்டிற்காக நீ என்ன செய்யப் போகிறாய்”

    -என்று எண்ணுவது தான் நாட்டிற்கும் பெருமை உங்களுக்கும் பெருமை” என்று கூறுவார். இந்த வார்த்தை எனக்கு மிகப் பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது.

    தற்போதைய காவல் துறைத்தலைவர் திரு. எம். ரவி ஐ.பி.எஸ் அவர்கள் விழுப்புரத்தில் எஸ்.பியாக பணியாற்றும் பொழுது மூன்றாம் பாலினத்தவர்கள் நடத்தும் கூத்தாண்டவர்  கோவில் திருவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்பொழுது அவர்கள் சமுதாயத்தில் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு அரவாணிகள் என்று சிறப்பான பெயரைக் கொண்டு அழைத்தார். அன்று முதல் தான் அரவாணிகள்  சமுதாயத்தில் சற்று மதிப்பு மிக்கவர்களானர்.

    இப்பொழுது புதுக்கோட்டையில் காவல் துறைகண்காணிப்பாளராகப் பணியாற்றும் திருமதி. இ.எஸ் உமா அவர்களை 2011 ஆம் ஆண்டு மரியாதை நிமிர்த்தமாக அவரை சந்தித்த பொழுது என்னிடம் சில பகிர்வுகளைக்கூறினார்.  காவல் துறைப்பணிக்கு வருவதற்கு முன் பள்ளி ஆசிரிராகப் பணியாற்றும்  பொழுது கோவில் முன் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரகளுக்கு தன்னுடைய சொந்த  செலவில் காலணிகள் மற்றும் ஆடைகளும்,  மாணவர்களுக்கு செருப்பு மற்றும் புத்தகங்களும்  வாங்கிக் கொடுத்தாகக் கூறினார். இதுபோன்றசெயல்கள் தான் என்னை பெரிதும் ஊக்கப் படுத்தியது. எவ்வித எதிர்பார்ப்புமின்றி அவர்கள் செய்த செயல்கள் என்னை என்னை பெரிதாக ஊக்கப்படுத்தியது.

    பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் அவசியம்  என்ன?

    சமுதாயத்தில் பல்வேறு பிரச்சனைகள் பொதிந்து கிடக்கிறது. சில பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு அது சாதாரணமாக மாறி விடும். ஆனால், ஒரு சில பிரச்சனைக்கு தீர்வு என்பதே இல்லை என்றசூழலுக்கு தள்ளப்படும். இப்பிரச்னைகள் தனி ஒருவனை மட்டும்  பாதிக்காது ஒட்டுமொத்த சமுதாயத்தை சீரழித்து விடும். இதை இனங்கண்டு கொள்ளவில்லை என்றால் பெரிய பிரச்னையை சந்திக்க  வேண்டியதாக இருக்கும்.

    பாலியல் ரீதியாக துன்புறும் பெண்கள், அவர்களுக்கு சம்மதம்  இல்லையென்றாலும் சமுதாயத்தில்  ஒடுக்கப்பட்டவர்களாகி விடுகிறார்கள். மேலும்  எவ்வித காரணமும்  இல்லாமல் புறந்தூற்றப்படும் பெண்கள் அவமானம்  தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள், அல்லது நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுவிடுகிறார்கள். இது முற்றிலும்  தவிர்க்கப் பட வேண்டும். அவர்களையும்  இச்சமுதாயத்தில் மதிப்புமிக்கவர்களாக மாற்றவேண்டும் என்றஒரே நோக்கம்  தான் இம்மையத்தின் முதன்மைக் காரணம்.

    பின்பு சில முறைதவறிய பெற்றோர்கள் ஏதேனும்  ஒரு குற்றத்தின் மூலம் சிறைசென்று விடுவார்கள். அவர்களின் குழந்தைகளைப் பாதுக்காக்க யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு வளரும் குழந்தைகள் எல்லாவிதத்திலும் குற்றவாளியாக மாறி விடுவார்கள். இது போன்றவளரும்  இளைஞர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு கொடுத்து அவர்களை செம்மைப் படுத்த வேண்டும் என்பதும் இம்மையத்தின் முதன்மையான காரணங்களாகும்.

    உடல் அளவிலும் மன அளவிலும் பாதிக்கப்படுபவர்களுக்கு வலியும்,  வேதனையும் சற்று அதிகமாவே இருக்கும். இதில் பாதிப்பு அடைபவர்கள் பெரும்பாலானோர் தவறான முடிவை மட்டுமே எடுப்பார்கள். இது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டும். அந்த வலியை எவ்வாறு வெற்றியாக மாற்றவேண்டும் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.

    சமுதாயத்தில் இவர்களைப் போல்  இனி யாரும் இந்த வலியைப் அடைந்த விடக்கூடாது என்று ஒரு மாற்று சக்தியாக இருந்து இவர்களையே வழி நடத்தி வருகிறோம்.

    வாழ எத்தனையோ வழி இங்குள்ளது. அதில் மேன்மை அடைவதும், தாழ்மை அடைவதும் அவரவரின் வாழ்க்கை நடைமுறையில் தான் இருக்கிறது.

    சிரமத்தை விரட்டினால் தான் சிகரத்தை எட்ட முடியும். இயன்றவரை எல்லோரையும் இன்பமான வாழ்வை வாழ வைப்போம்…

    ஜெய்ஹிந்த்

    உள்ளத்தோடு உள்ளம்

    “உடனே கிடைக்கும் வெற்றி உறுதியில்லாதது, உழைத்துக் கிடைக்கும் வெற்றி உயர்வானது, உறுதியானது”.

    சர்.சி.வி. ராமன் அவர்கள் ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றபோது, தன் ஆய்வான “வைரங்கள்” குறித்து உரை நிகழ்த்தியிருக்கிறார்.

    அப்போது ஒரு மாணவன் ஐயா, வைரங்களின் தன்மை, குணம், ஒளிச்சிதறல் பற்றியெல்லாம் சொன்னீர்களே, வைரம் எப்படி…? வைரம் எப்படி செய்வது என்று சொல்லவே இல்லையே என்றிருக்கிறான்.

    அது மிகவும் சுலபம், கரித்துண்டு ஒன்றை எடுத்து பூமியில் புதைத்து விட்டு, ஆயிரம் ஆண்டுகள் காத்திரு வைரம் கிடைக்கும் என்றாராம் சர்.சி.வி. ராமன்.

    ஒவ்வொரு சாதிப்பிற்கும் வெற்றிக்கும் பின்னால் கடின உழைப்பு, அளவற்ற பொறுமையும் இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவருமே உணர்ந்து செயல்பட்டு பெருமை காண வேண்டும்.

    “உழைப்பவர்களின் சொல்லும் சாதனைக்கு வழிவகுக்கும். உழைக்காதவர்களின் சொல்லும் அகந்தைக்கும், ஆணவத்திற்கும் வழிகாட்டும்”.

    நாம் சாதனைக்கு வழிவகுக்கும் உழைப்பின் செல்வத்தையே பெறக்கூடியவர்களாக முன் நிற்போம்.

    அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்…

    2016 மே 16… தேர்தல் நாள். “யார் எதைச் சொன்னாலும், அதனை சிந்தித்து பார்த்துதான் ஏற்றக்கொள்ள வேண்டும். சொல்பவர்கள் எவராயிருந்தாலும் சிந்தித்துப் பார்த்தே அதன்படி நடக்க வேண்டும்” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் சிந்தனை நம்மை சிந்திக்க வைக்கட்டும். அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்…! வாக்களிப்பது நமது கடமை…! அது, நமக்கு பெருமை…!