நல்ல நேரம் சிந்தனை நிகழ்வு வாழ்க்கை
இறைவனது படைப்பில் மனிதன் ஒரு அரிய படைப்பாகும். அவனுக்குள் மறைந்துள்ள திறமைகள் பற்றியும், அவனுக்குள் புதைந்து கிடக்கும் சக்தியின் மகிமை பற்றியும் அவன் உணர நல்ல நேரமும் நல்ல சிந்தனைகளும் உறுதுணையாக இருக்கின்றன.
“பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது”.
என்பது வள்ளூவர் வாக்கு. காக்கை பகல் நேரத்தில் ஒரு ஆந்தையை வென்று விடும். அதுபோல நல்ல நேரம் ஒரு அரசனுக்கு அமைந்து விட்டால் அவன் தன் எதிரியை எளிதில் வென்று விடுவான். மூன்றுகாலங்களில், நிகழ்காலம் தனித்துவம் வாய்ந்தது. அப்படிப்பட்ட நிகழ்காலம் பயனுடையதாக அமைய வேண்டும் என்றால் மனிதனுக்கு நல்ல மனநிலை வேண்டும். மனம் நலம் பற்றி வள்ளுவர்
“மனநலம் மண்ணுயிர்க்கு அக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்”.
என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மனிதனின் இயக்கம் நல்ல சிந்தனை, நல்ல செயல்களைச் செய்யத்தூண்டும் மனம். அந்த நல்ல மனம் இடும் கட்டளையை ஏற்று செயல்படுத்தும் ஆரோக்கியமான உடல், அதனால் ஏற்படும் ஒரு நல்ல நிகழ்வு இந்த நான்கு செயல்களின் ஒத்துழைப்பில்தான் அடங்கியுள்ளது.
நல்ல செயல் ஒன்றை செயல்படுத்த பெரியவர், சிறியவர் என்ற பேதம் கிடையாது. சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்திருந்தது. ஒரு கிராமத்தில் வெள்ளம் வந்தபோது ஒரு சிறுவன் இரண்டு ஆடுகளை வாழைமட்டையால் ஆன அமைப்பு ஒன்றில் ஏற்றி, ஒரு மரக்கட்டையை துடுப்பாக பயன்படுத்தி அந்த இரண்டு ஆடுகளையும் காப்பாற்றியுள்ளான். அந்த நிகழ்வை அந்த சிறுவனின் புகைப்படத்தோடு அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது… அந்த செய்தியைப் படித்த திரைப்பட இயக்குநர் ஒருவர் அந்த நிகழ்வை வைத்து திரைப்படம் எடுத்துள்ளார். அந்தத் திரைப்படம், அவருக்கு பல விருதுகளை அடைவதற்கான வாய்ப்பை நல்கியது. அதனால், மகிழ்ச்சி அடைந்த அந்த திரைப்பட இயக்குநர் அந்தச்சிறுவனனை புகைப்படம் எடுத்த புகைப்படக்காரரின் உதவியுடன், அந்தச் சிறுவனை நேரில் சந்தித்து அந்தச் சிறுவனின் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவிகள் செய்ததோடு, அந்த கிராமமே மேன்மை அடைய உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
மனிதனின் மூளையில் ஓராயிரம் சிந்தனைகள் ஓடிக்கொண்டேதான் இருக்கும். அவற்றில் நல்லனவும் இருக்கும். தீயனவும் இருக்கும். ஏனென்றால், மனிதவாழ்வில் நிகழும் நிகழ்வுகளும் அப்படி உள்ளன. மனிதன் தன் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறான். எந்தப்பிரச்சனை என்றாலும் தீர்வு என்ற ஒன்று உண்டு அப்படி வரும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு ஒன்றை எடுக்க வேண்டும் என்றால் தெளிந்த நீரோடை போன்ற சலனம் இல்லாத மனநிலை வேண்டும்.
பிரச்சனைகளை எதிர்கொண்டு அதற்கு ஒரு நல்ல தீர்வு காண்கின்ற மனிதனின் மனநிலை மேலும் வலிமை பெறும். மனம் என்பது ஒரு நிலம் போலதான். ஒருவன் தன் மனம் என்ற நிலத்தை ஆழ உழுது அதில் நல்ல எண்ணங்கள் என்ற நல்விதைகளை விதைத்து, நற்செயல்கள் என்ற பயிர்களை வளர்க்கும் போது, அதனால் ஏற்படும் நல்விளைவுகள் (நல்ல நிகழ்வுகள்) நல்ல விளைச்சலுக்குச் சமமாகும். மனிதனின் இந்த உலகில் குழந்தையாய் பிறந்து பல பருவங்களைக் கடந்து முழு மனிதனாகின்றான். அவன் தன்னுடைய ஒவ்வொரு பருவத்திற்கான கட்டுப்பாட்டையும், கடமைகளையும் மனதில் வைத்தால் அவனும் முட்டைப்பருவத்திலிருந்து ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து எப்படி ஒரு வண்ணத்துப்பூச்சி தன் வண்ணங்கள் நிறைந்த சிறகை விரித்து வானில் பறக்கின்றதோ…? அப்படியொரு ஆனந்தமான நல்வாழ்க்கையை ஒவ்வொரு மனிதனும் பெறலாம்…
நற்சிந்தனைகளின் மனம், பூக்கள் நிறைந்த ஒரு பூக்கூடை போன்றது. அதை குப்பைகள் நிறைந்த கூடையாக மாற்றிவிடாமல், பார்த்துக் கொள்வது அவரவர்கள் பொறுப்பில்தான் உள்ளது. தீய சிந்தனைகள் நம்மை நோக்கி வரும் பொழுது, எப்படி வேண்டாத பொருளை குப்பைக் கூடையில் போடுகின்றோமோ, அந்த தீய எண்ணங்களை தூக்கியெறியும் மனப்பக்குவத்தைப் பெறவேண்டும். ராஃபின் சர்மா என்றபுகழ்பெற்றஎழுத்தாளர் மனத்தை பண்படுத்துவதற்கான பத்து யுக்திகளை தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பத்து யுக்திகளை பின்பற்றியவர்கள், அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அந்த பத்து வழிமுறைகள் யாதெனில்…
- அதிகாலையில் எழுந்திருத்தல்
- தனிமையில் சிறிது நேரம் அமைதியாய் இருத்தல்.
- புகழ்பெற்ற பெருந்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகங்களைப் படித்தல்
- இறைவனின் நாமத்தை சொல்லுதல்
- இறைவனின் நாமத்தை எழுதுதல்
- உடற்பயிற்சி செய்தல்
- பொறுமை, சகிப்புத்தன்மை, வாய்மை, நேர்மை, இரக்கம், தைரியம் போன்ற குணாதிசியங்களை நம்மிடம் வளர்த்துக் கொள்ளுதல்.
- ஒவ்வொரு நாளின் முடிவிலும் தன்னைத்தானே பரிசோதித்துக் கொள்ளுதல் (இன்று எத்தனை நல்ல செயல்களை செய்தோம்…? எத்தனை தீயசெயல்கள் அல்லது எண்ணங்களுக்கு ஆளானோம் என்று)
- சிறந்த இசையைக் கேட்டு ரசித்தல்.
- எளிய வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல் என்பதாகும்…
நல்ல நேரமும் நல்ல சிந்தனையும் சேர்ந்தால் நிகழ்ந்த சில நிகழ்வுகள் பற்றிய சிறு குறிப்புகள் சில…
ஒரு பேராசிரியர் தன் மனைவிக்கு ஒரு தையல் இயந்திரத்தை வாங்கும் எண்ணத்தில் சென்று கொண்டிருந்தபோது மற்றுமொரு பேராசிரியர் அவரை வழியில் சந்தித்து, தையல் இயந்திரம் எப்பொழுது வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள்ளலாம். அந்த பணத்தை அவருடைய மனைவியை உயர்கல்வி படிக்க பயன்படுத்தும்படி ஆலோசனை கூறினார். அந்த பேராசிரியரும் அந்த ஆலோசனையை ஏற்று தன் மனைவியை உயர்கல்வி பயில அனுப்பினார். அவர் மனைவி பின்னால் சிறந்த பதவியிலிருந்து பணியாற்றியதோடு, பலர் சிறந்த நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ளவும் உறுதுணையாக இருந்தார்.
ஒரு S.S.L.C., மாணவன் பரிட்சையில் ஒரு பாடத்தில் மட்டும் தவறிவிட்டான். அவனுக்குத் தாய் இல்லை. தந்தையின் வருமானம் மிகவும் குறைவு. உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரியும், இரண்டு சகோதர்களும். அது சமயம் அந்த மாணவனின் உறவினர் மகள், வயது 16, ந.ந.க.இ., தான் முடித்திருந்தாள். அந்த மாணவனை அழைத்து, எந்தவொரு அரசாங்க உத்தியோகம் பார்க்க அடிப்படைத் தகுதியாக S.S.L.C. Pass Certificate முக்கியம். ஒரு பாடம்தான். நான் உனக்கு அந்தப் பாடத்தை கற்பித்துத் தருகிறேன் என்றதன்னம்பிக்கையை வளர்த்து, அந்த மாணவனுக்கு வழிகாட்டினாள். அவனும் ந.ந.க.இ. தேர்வில் தேறிவிட்டான். அதன்பின் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் அந்த பெண்ணிற்கு அந்த மாணவன், தான் இராணுவத்தில் உள்ள தபால் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும், அந்த சகோதரியின் அந்த நேரத்தின் உதவி அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளது என்றும் எழுதியிருந்தான்.
படிப்பதற்கான கடைசி பாடத்திற்கான பரீட்சை அன்று. பரீட்சை நடக்கும் அறைக்குள் நுழைய 30 நிமிடங்கள் இருக்கும் தருணத்தில் ஒரு மாணவியின் கணவர் அங்கு வேகமாக வந்து, அரியலூரில் வாழ்ந்து வந்த அந்த மாணவியின் வயதான தந்தை இறந்து விட்டதாகவும், தன்னுடன் உடனே கிளம்பி வரும்படி அழைத்தார். அப்போது அந்த மாணவியுடன் இருந்த சகமாணவி நிலைமையைப் புரிந்து கொண்டு அந்த மாணவியை சமாதானம் செய்து விட்டு, அந்த மாணவியின் கணவரிடம் பரீட்சையை அவர் மனைவி மூன்று மணி நேரத்தில் முடித்தவிடுவார்கள் என்றும். இப்பொழுது எழுத இந்த பரீட்சையைத் தவறவிட்டால், பின் ஆறுமாதங்கள் கழித்துத்தான் எழுத முடியும், அதனால் வேலைவாய்ப்புகளும் தடைபடும் என்று எடுத்துக்கூறினார். அவரும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு மூன்று மணிநேரம் கழித்து வந்து தம் மனைவியை அழைத்துச் சென்றார். அந்த மாணவி சரியான நேரத்தில் பரீட்சையையும் முடித்துவிட்டு தன் தந்தையின் இறுதிச் சடங்கிற்கும் சரியான நேரத்திற்குள் சென்றுவிட்டார். அந்த ஆண்டின் இறுதியில் அந்த மாணவிக்கு கல்லூரியில் உதவிப் பேராசிரியருக்கான பணியும் கிடைத்தது…
கல்வித்துறையில் மட்டும் அல்லாது, விவசாயம், மருத்துவம், வியாபாரம், சுயதொழில் போன்றதுறைகளிலும் தக்க நேரத்தில் தக்க வழிகாட்டுதலைப் பெற்றவர்கள் அவரவரது தனித்திறமையாலும், கடுமையான உழைப்பாலும் அவர்தம் துறையில் உயர்ந்து விளங்குவதை நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பார்க்கின்றோம்… சில ஆபத்தான தருணங்களில் நல்ல நேரம் எப்படி, கைகொடுக்கும் என்பதற்கு உதாரணம் ஒரு நிகழ்வு…
ஒரு கல்லூரி மாணவி மாடிச்சுவரில் ஏறிதற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் தருணத்தில் இருவரின் வேகமான ஒரு நிமிடச்செயலால் காப்பாற்றப்பட்டார். அந்தப் பெண்ணை மாடியில் பார்த்த கணத்தில் இருவர் விரைந்து மாடிக்கு செல்ல அந்த மாணவி மாடியில் உள்ள சுவரில் ஏறிக்குதிக்கப் போகும் தருணத்தில் அந்த இருவரும் ஒரு நிமிட வேகத்தில் எட்டி அந்த மாணவியின் இரண்டு கைகளையும் பிடித்தபடி இருக்க, அதை கீழே இருந்து பார்த்த மற்றமாணவிகள் ஓடி வந்து அந்த மாணவியின் கால்களை எட்டி சேர்த்துப்பிடித்து ஒரு மீனைத் தூக்கிப்பிடிப்பது போல் பிடித்து அந்த மாணவியை காப்பாற்றினார்கள். அந்த மாணவியின் வெகுளித்தனமான பெற்றோர்கள் கீழே கையை விரித்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அந்த மாணவி தன் குடும்பத்துடன் அயல்நாட்டில வாழ்ந்து வருகிறாள்…
சமீபத்தில் இயற்கையின் சீற்றத்தில் சென்னை மாநகரமே வெள்ளத்தால் சிக்கி அவதிக்கு உள்ளானது. அதில் நல்ல நேரம் பார்த்துக் காப்பாற்றியது. நல்ல நேரம் அமையாதவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். துயரம் ஒருபுறம் இருந்தாலும், சென்னை வெள்ளம், மனிதநேயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது… நம் இளைய சமுதாயம், நம் பாரத நாட்டிற்கே உரிய சிறந்த பண்பு நலன்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்றபெருமையை அவர்களின் சமூகத்தொண்டு, ஒவ்வொரு தமிழனையும் உணர வைத்தது…
இந்த நிகழ்வுகள் மூலம் அறிய வேண்டுவது என்னவென்றால்…? இந்த நல்ல மனம் படைத்தவர்கள் செய்யும் நல்ல செயல்கள் எல்லாம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதோடு செய்யும் செயல்களுக்கு எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்ய முன்வரும் பண்புதான். மேலும், இந்த இளைய சமூகத்தினர் அவர்களாக முன்வந்து சமூக சேவை செய்யும் போது நம் பாரதத்தை உருவாக்கிய மறைந்த பெருந்தலைகள்கள், சமூக நலவாதிகள் மற்றும் இலக்கியவாதிகள் இன்றைய இளைஞர்கள் உருவிலே உலாவந்து கொண்டு இருக்கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது…
இதுபோன்ற நிகழ்வுகள் பற்றிய அனுபவம் நம்மில் பலருக்கும் உண்டு. அதைப்பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மூலம் நல்ல எண்ணங்கள் பற்றிய சிந்தனை அலை பலரிடம் பரவ வாய்ப்புள்ளது. நல்ல சிந்தனைகளைக் கொண்ட நம் இளைஞர்கள் சமூதாயம் நல்ல வழிகாட்டுதலும், நல்ல நேரமும் தன்னகத்தே பெற்றுவிட்டால் நம் பாரதத் திருநாட்டை வளர்ச்சிமிக்க நாடாகவும், வலிமை மிக்க நாடாகவும் இந்த உலக அரங்கில் என்றென்றைக்கும் விளங்கச் செய்வார்கள் என்பது உறுதி…
0 comments Posted in Articles