– 2016 – April | தன்னம்பிக்கை

Home » 2016 » April (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  அமைதி

  நிகழும்  2016 – ஆம் வருடத்திற்கான, ஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நண்பர் ஒருவரது பயிற்சி  மையத்தில் கதிரேசன் வழக்கம்போல் வகுப்புகள் எடுக்கச் சொன்னார். அதில் கோ. சரண் என்ற ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதும் மாணவனது ஏ.கே. 47 வேகத்தில் கருத்து மழைபொழியும் சொற்பொழிவை அனுபவிக்கவும், அதில் நனையவும்  நேர்ந்தது. அவருக்கு, யாரோ, நீங்கள் கொஞ்சம் மெதுவாக பேசினால் நல்லது என்று கூறி  இருக்கின்றார்கள். அதைக்கேட்ட சரண் அதிகம் பேசும் தனது இயல்பை குறைத்துக் கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

  இப்படி இருந்தால் நல்லதா…? அல்லதா…? என்று யோசனை செய்து பார்த்தோம். இஸ்பேனிய மொழியில் ஜோர்ஹே லூயி போர்ஹெஸ் என்று உச்சரிக்கப்படும் ஆங்கில மொழியில் ஜார்ஜ் லூயிஸ் போர்ஜஸ் என்று வழங்கத் தலைப்படும் ஒரு அர்ஜென்டீனிய எழுத்தாளரின் நினைவு வந்தது. ஒர்ழ்ஞ்ங் கன்ண்ள் ஆர்ழ்ஞ்ங்ள் என்பது ஆங்கில எழுத்துக் கூட்டமைப்பு. இது வாசகர்களில் பெரும்பாலானோர் இணையதளம் அல்லது நூலகம் வாயிலாக போர்ஹே குறித்து தெரிந்து கொள்ள விரும்புவார்கள் என்னும் நம்பிக்கையில் கொடுக்கப்பட்டு உள்ளது.

  அத்தகைய நம்பிக்கைக்கு காரணம் உம்பர்ட்டோ இகே என்னும் இத்தாலிய நாவலாசிரியர். அவரே, வாசகர்களது அறிவாற்றல் மீது நம்பிக்கை வைத்து எழுத வேண்டும் என்று தற்கால இலக்கிய ஆசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த புகழ்பெற்ற சிலரில் ஒருவராக இருந்தும் முடிவு செய்தவர்.

  மேற்கண்ட நீளமான வாக்கியத்தை கொஞ்சம் பிரித்து பார்ப்போம். வாசகனுக்கு தேவைப்படுவதை கொடு, அவரை சந்தோஷமாக வைத்திரு போதும். புதிது புதிதாக வித்தியாசமாக எழுதுகிறேன் பேர்வழி என குழப்ப வேண்டாம் என்றுதான் நிறைய எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், இகே அப்படியில்லாமல் மாறுபட்டார். வாசகனுக்கு புரியாது என்று நாம் ஏன் முடிவு செய்ய வேண்டும்…? புதிதாக எழுதினாலும், புதிராக எழுதினாலும் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தார். அதன் பெயர் “ரோஜா” என்கிற தலைப்பில் ஒரு துப்பறியும் கதை ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதில் எழுதினார். தலைப்பிற்கும் புதினத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு கதை. பதினான்காம் நூற்றாண்டில் நடப்பது மாதிரி வரலாற்று புதிர் புதினம்.

  வாசகர்களின் புத்திசாலித்தனத்தை அப்படியே பயன்படுத்திக் கொண்டு எழுதிய உம்பர்ட்டோ இகோவைப் போல உங்களையே ஒரு கதாப்பாத்திரமாக எடுத்துக் கொண்டு பின்னப்பட்ட வலைபோல “சிலந்தி” என்று ஒரு நாவலை கதிரேசன் படித்தார். சிலந்தியை அறிமுகம் செய்தவர் பெயர் எம். சரவணன். கோவை வேளாண் பல்கலைக்கழக பட்டதாரியான எம். சரவணன் சொட்டு நீர் பாசன நிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருப்பவர். இவர் இலக்கிய ஆர்வலர். பேச்சு சொட்டு நீர்ப்பாசன கிளை குழாய்கள் போல பிரிந்த பொழுது சொட்டிய ஒரு தகவல்தான் பின் நவீனத்துவ புதினங்கள் குறித்து, சிலந்தி ஒரு பின்  நவீனத்துவ நூல். இது அடையாளம். பதிப்பகத்தினரால் அடையாளம் அடைந்துள்ளது. சரவணன் அண்ணா கூறுகையில் ஒரு பக்கம் படித்தாலே ஒன்பது எழுத்தாளர்களை குறித்து தெரிந்து கொள்கிறோம். அதைத்தவிர அவர்கள் கூறிய மிக மிக முக்கியமான கருத்துக்களின் சாரம் சொட்ட சொட்ட எழுதியிருக்கின்றார் என்று பாராட்டினார். அது புத்தகத்தை பார்த்தவுடன் புரிந்தது. படித்தவுடன் பாராட்டத் தோன்றியது.

  நல்ல எழுத்தாளரை அடையாளம் கண்டறிய உதவிய சரவணனுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும். எம்.ஜி. சுரேஷ் அவர்களது புத்தகம் அடுத்த முறை வரும்போது கொண்டு வருகின்றேன் என்றுதான் அவர் கூறினார். ஆனால், உடனே அவனை வேதவாக்காக எடுத்துக் கொள்ள ஏன் தோன்ற வேண்டும்…? அவர் எழுதியுள்ள ஐந்து புத்தகங்களை தேடிப்படித்து வாங்க வேண்டும்….? அப்படி வாங்கியவற்றை அவசர அவசரமாக தேர்வுக்கு படிப்பது போல் ஏன் படிக்க வேண்டும்…? அதிலிருக்கின்ற பின் நவீனத்து முற்போக்கு, வெளிநாட்டு எழுத்தாளர்கள் குறித்து இணையத்தளத்தில் தேட ஏன் மெனக்கெட வேண்டும்…? என்கின்ற கேள்விகளுக்கெல்லாம்… நாகூர் ரூமி அவர்களின் இந் விநாடி புத்தகத்தில் கூறியுள்ளது போல “தற்செயல்” என்று முடித்துவிடலாம். தற்செயலுக்குள் எவ்வளவு தத்துவம் உள்ளது என்பது மேலே கூறியுள்ள புத்தகம் கண்டவர்களுக்கு புரியும். காணாதோரும் காண இருப்போரும், “Butterfly effect” என்கின்ற எட்வர்ட் லாரென்ஸ் அவர்களது கேயோஸ் தத்துவத்தின் ஒரு பாகமே மேற்கண்ட நிகழ்வுகளும், இக்கட்டுரையும் என்று புரிந்து கொள்வர். போர்ஹேயின் கிளை பிரியும் பாதை கொண்ட தோட்டம் என்னும் புத்தகம் 1948 வெளிவந்தது. இதில் கதையின் ஒவ்வொரு திருப்பத்திலும் உள்ள சாத்தியக்கூறுகளுக்கு தொடரும் சூழ்நிலைகளை கதையாக உருவாக்கி இருப்பார். “அட்லாண்டிஸ்” மனிதன் மற்றும் சிலருடன் என்னும் எம்.ஜி. சுரேஷ் அவர்களின் புத்தகம் தமிழில் இத்தகைய உத்தியை பயன்படுத்தியுள்ளது. புத்தகத்தை படிக்கும் பொழுது சுவாரஸ்யம் கூடிக்கொண்டே செல்கின்றது. ஒரு சதுரங்க விளையாட்டின் விளக்க உரையைப் போல.

  தமிழில் 12B என்பது ஒரு திரைப்படம் 2001ல் வெளிவந்தது. பஸ்ûஸ பிடத்தால், பிடிக்காமல் விட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று சுஜாதாவும், இயக்கநர் ஜீவாவும் சேர்ந்து எழுதி இயக்கிருப்பார்கள். அப்பொழுது இன்னும் ஆறு வருடத்தில் வெறும் 44 வயதிலேயே ஜீவ மாஸ்கோவில் இதயததுடிப்பை நிறுத்திக் கொள்வார் என்று கூறினால், அதற்கான சாத்தியமில்லை என்ல்று அதிர்ச்சியுடன் கூற தோன்றியிருக்கும். காலம் விசித்திரமானது. அசினை அறிமுகப்படுத்திய ஜீவா இப்போது அமரர். ஒரு நிகழ்வில் நாம் என்ன செய்ய போகின்றோம் என்பதை பொறுத்து அதன் வின் நிகழும் நிகழ்ச்சிகள் அடுக்கடுக்கா நடந்து விடுகின்றன. அவற்றை நாம் கவனிக்காமலே கடந்து போய்விடுகின்றோம்.

  திருப்புமுனைகள் என்று கருதப்பட கூடியவை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கூர்மையில்லாத சாதாரண நிகழ்வுகளால் ஆக்கப்படுத்தப்பட்டுள்ளன. இதன் எதிர்மறையும் உண்டு. கோலாகலமான திருமணங்கள் கோர்ட்டுகளில் முடிந்திருப்பதை கூறலாம். திரும்புமுனையாக நாம் கருதும் சந்தர்ப்பங்கள் உண்மையில் அப்படிப்பட்டவைகளாக அடையாளம் காணப்பட வேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லை என்று சொல்ல வருகின்றோம்.

  முக்கியமான திருப்புமுனை என்று ஓவராக (அதாவது அளவுக்கதிகமாக) திப்பிவிட கூடாதல்லவா. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் புத்தகத்தில் ஒவ்வொரு சம்பவத்திற்கும் நான்கைந்து வகையான முடிவுகளை  கொடுத்திருப்பார். அதில் ஒரு கதாபாத்திரமான அஜய் என்னும், நேர்மையான ஐ.ஏ.எஸ்., திருப்பங்களுடன் விவரித்துள்ளார்.

  கிளைவிரியும் பாதையுள்ள தோட்டத்தில் ஒவ்வொரு பாதையிலும் நுனிவரை சென்று திரும்பும் சந்தோஷம் வாழ்விலும் கிடைத்தால் எப்படி இருக்கும். கிரிக்கெட் விளையாட்டில் ஒரு ஃபீல்டிங்க் மிஸ் ஒரு இரன்தானே என்று பார்த்துவிட முடியாது. கால் பந்திலோ எல்லா கால்களுமே, கோல்களுக்கானவையே.

  முதல் பத்தியில் கண்ட, சரணை, அதிக பேச வேண்டாம் என்று வேகத்தடை போட்டுக் கொண்டால் என்ன ஆகும். அப்படித்தான் பேசுவேன், இதுவே எனது உண்மையான இயல்பு… தடுத்தால்… பேச வராது என்று குறைத்துக்கொள்ளாமல்… நயாகரவாக கொட்டினால் என்ன ஆகும்…? என்று இரண்டு கிளை பிரிப்போம்.

  மெதுவாக பேசுவதால் நன்றாக புரிந்து இருநூற்றி எழுபத்தைந்திற்கு இருநூற்றிற்கும் அதிகமான மதிப்பெண் பெற்று வெற்றிபெறலாம். வேகமாக பேசுவதால் நிறைய பேசி நடுவர்களை கவர்ந்து அதிக மதிப்பெண்களை குவித்து வெற்றி பெறலாம் என்கின்ற இரண்டு அடுத்த அடுக்கிலான நேர்மறை விளைவுகளை இங்கே கொடுத்து உள்ளோம்.

  எதிர்மறை விளைவுகள் வேண்டாமே என்று விட்டுவிட்டோம். இப்படி ஒவ்வொரு முடிவுகளுக்கும் ஏகப்பட்ட கிளைகள். இன்றைக்கு காலை உணவு இட்லியா, தோசையா…? என்பதில் ஆரம்பித்து எல்லா முடிவுகளை தொடர்ந்தும் பல கிளைகள் விரிய தொடங்கலாம். அவுட் ஆஃப் தி பாக்ஸ் தீர்வுகள் கிடைக்கலாம்.

  அதன் பெயர் ரோஜா என்கின்ற நாவல் தலைப்புக்கு தொடர்புபடுத்த பல விளக்கங்கள் இகோவின் படைப்புக்கு தேவைப்பட்டது. இந்தக் கட்டுரையை படிப்பதற்கு ஒரு நல்ல அமைதியான மனநிலை உங்களுக்கு தேவைப்பட்டது. அதுவே தலைப்பா கொடுக்கப்பட்டு உள்ளது. நேர்முக தேர்வுகளில் என்ன பதில் சொல்லப் போகிறோம் என்பது வினாடிக்கும் குறைவான கால அவகாசத்தில் முடிவெடுக்கப்பட்டாக வேண்டும் அந்த பதிலில் எதிர்காலம் அடங்கி உள்ளது. சில ஒப்பற்ற முடிவுகள், புதுமையான சிந்தனைகள், கிரியேட்டிவிட்டி எல்லாம் கிளைகளே.

  கேள்விகளை முன்கூட்டியே கணித்து அமைதியா மனநிலையில் பதில்களை தயாரித்து நிதானமாக திருத்தி பேசிப்பார்த்து, தனியாக, தயாரித்து, மாதிரி தேர்வுகளில் சொல்லி கேட்பவர்கள் கொடுக்கின்ற பின்னூட்டத்திற்கு தக்கவாறு நம்மை மாற்றி தயாரித்து கொள்ள வேண்டும்.

  இவை எல்லாமே, மனம் சாந்தமாகவும், முழு நம்பிக்கையுடனும் இருக்கும் பொழுதுதான் சாத்தியம் ஆகிறது. பயிற்சியாளர் பயிற்சியின் பக்கத்தில் இருப்பார். பரீட்சையின் போது…?

  எனவே…

  அமைதியான தணருணத்தில் கிளைபிரியும் சாத்தியக்கூறுகளை நாம் ஆராய்ந்தோமேயானால் பயணிக்கும் பாதை பிரகாசமாக அமையும். உள்ளத்திற்குள் உருவாகின்ற சூழ்நிலைகள்தான் உண்மையிலும் உருவாகப்போகின்றன. உள்ளம் உடைமை உடைமை என்று திருவள்ளுவர் கூறியதையேதான் கதிரேசனும் சொல்ல விழைகிறார். உம்பர்டோ இகோவும், போர்ஹெசும் இங்கே உசுப்பி விடுவற்காகவும் உலக நடப்பிற்காககவும் உதாரணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

  அமைதி தவழட்டும்… சரண் வெல்லட்டும்… கிளைகள் பிரிந்து வளரட்டும்….

  5 பேருக்கு நன்றி….

  பொதுவாக 4 பேருக்கு நன்றி என்பது கிராமப்பழமொழி. முற்காலத்தில் இறந்தபின், உடலை அடக்கம் செய்வதற்கு, பாடை கட்டி 4 பேர் சேர்த்து தூக்கிச் செல்வார்கள்.

  இன்று ரதங்கள், ஊர்திகள் என்ப்பல வந்து விட்டன. வாழும்போது தான் எப்படியோ வாழ்ந்தார்கள், இறந்தபின் விமரிசையாக உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அதீத பொருட் செலவு செய்பவர்கள் பலர் உள்ளனர்.

  மாத்தியோசித்தால், இந்த 4 பேரை – மாதா, பிதா, குரு, தெய்வம் என்றும் சொல்லாம். இந்த 4 பேர்தான் நாம் வாழும் வாழ்க்கையை உருவாக்கித் தந்தவர்கள். தினமும் இவர்களுக்கு நன்றி சொல்வது நல்ல பண்பு.

  எந்நன்றி கொன்றார்க்கும் உயர்வுண்டாம் உய்வில்லை

  செய் நன்றி கொன்ற மகற்கு – குறள் 110.

  பொருள் எந்த விதமான அறத்தை அழித்தாலும், அதிலிருந்து தப்பிப்பிழைத்து விடலாம். ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து, அழித்து விட்டால், மனிதனுக்கு வாழ்வே ( உய்வே) இல்லை என்பதாகும்.

  இன்று நாம் பொதுவாக சொல்கிறோம். காலம் மாறிவிட்டது என்று. காலம் அப்படியேதான் உள்ளது. ஒரு நாளுக்கு 24 மணி நேரம்தான்.

  ஆனால், அற்புத சக்தி வாய்ந்த மனதைப் பெற்றுள்ள மனிதர்களான நாம் நமது தவறான எண்ணங்களால் இயற்கையையே மாற்ற முயற்சிக்கிறோம். இதன் விளைவு, சிலரது சுயநலத்துக்காக, மிகப் பெரும்பாலானவர்கள் இயற்கையால் தண்டிக்கப்படுவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

  நம்மையும், நமக்குத் தேவையான எல்லாவற்றையும் நிறைவாகப்படைத்துகாத்து வரும் இயற்கை நம்மைத் தண்டிக்கவே விரும்பாது.

  ஆனாலும் மழை, வெள்ளம், வறட்சி, பூகம்பம், பெரும் நெருப்பு, அதிக வெப்பம், ஆழிப்பேரலை போன்ற பலவிதமான இயற்கைச் சீற்றங்கûள் அவ்வப்போது ஆங்காங்கே வந்து கொண்டுதானே உள்ளதென பலரும் நினைக்கலாம்.

  தானாக அவை வரவில்லை. நாமாகத்தான் அவைகளை வரவழைக்கிறோம்.

  இதற்கு முதல் காரணமாக முக்கிய காரணமாக அமைவது –  நன்றி சொல்லும் நல்ல பண்பை நாம் மறந்து விட்டது தான்.

  என்றைக்காவது நம்மைப்படைத்து, நமக்கு தேவையான எல்லாவற்றையும் வழங்கி வரும் இயற்கைக்கு (கடவுள்) நன்றி சொல்லியிருக்கிறோமா…?

  பலர் சொல்லலாம். நாங்கள் தினமும் இறைவனை வழிபடுகிறோமே என்று. நமது வேண்டுதல்கள் இல்லாமல் எந்த வழிபாடாவது நடந்திருக்கிறதா…? என்று சிந்தித்தால் பெருகும் பாலும் விடை இல்லை என்பதுதான்.

  எண்ணமே இயற்கையதன் சிகரமாகும்

  இயற்கையும் எண்ணத்தில் அடங்கிப் போகும்

  – வேதாத்திரி மகரிஷி

  இயற்கையின் உச்சமே நமது எண்ணம் என்றதோடு அந்த இயற்கையே எண்ணத்துக்களுள் அடங்கி உள்ளது எனத் தெளிவாக விளக்குகிறான்.

  இதைத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்றார்.

  நாம் பெறுகின்ற வெற்றி – தோல்வி, அனுபவிக்கும் இன்பம் – துன்பம் என எதுவாக இருந்தாலும் முழுக்க முழுக்க நாம் மட்டுமேதான் காரணம்.

  உயிரினங்களின் உயர்ந்த பண்பு நன்றி பாராட்டுதல். இதற்காகவே, பொய்யா மொழி திருவள்ளுவர் செய்நன்றி அறிதல் என்ற 11- அதிகாரத்தில் 10 குறள்களைச் சொல்லி உள்ளார்.

  கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்று உள்ளக் கெடும். குறள் 109 நமக்குத் துன்பம் செய்யும் ஒருவர், இதற்கு முன் ஏதேனும் உதவி செய்திருந்தால், அதை நினைக்கும் போதே இந்தத் துன்பம் கெட்டு (ஓடி) விடும் என்றார். எப்படிப்பட்ட துன்பம் தெரியுமா…?

  ஒருவரைக் கொள்ளுமளவுக்கு துன்பம் என்றார். மனிதர்கள் பயந்து கொள்வது ஒன்றே ஒன்றுக்குத்தான். அதுதான் மரணம். ஒருவர் செத்து விடுமளவுக்கு துன்பம் செய்தாலும் கூட என்றதால், இந்த நன்றி உணர்வின் மேன்மையை மிகவும் பெருமையாகச் குறிப்பிட்டுள்ளார்.

  கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன். – இராமாயணம்.

  தன்னம்பிக்கை மேடை

  படிப்பறிவு இல்லாதவர்களாலும் இங்கு சாதிக்க முடியுமா? அதன் சாத்தியக்கூறுகளைப் பற்றிச் சொல்லுங்கள்?

  காமராஜ்

  நெல்லை மாவட்டம்

  “படிப்பறிவு” என்பது பள்ளியில் படிப்பதையும், கல்லூரியில் படிப்பதையும் பட்டங்கள் பெறுவதையும் குறிப்பிட்டுக் கேட்டிருந்தீர்கள் என்றால், படிப்பறிவு இல்லாதவர்களாலும் இங்கு சாதிக்க முடியும் என்று கூறுவேன். அவ்விதமான பட்டங்கள் இல்லாதவர்கள் வென்று காட்ட சாத்தியக்கூறுகள் இங்கு நிறைய உண்டு என்றும் கூறுவேன்.

  உங்களது பெயர் காமராஜ். கர்ம வீரர் காமராசர் (1903 முதல் 1975 வரை) அவர்களே உங்களது கேள்விக்கு விடையாக இருக்கிறார். எந்த வித பட்டங்களும் இல்லாமல், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும், இந்திய தேசத்தின் பாரதப்பிரதமர் யார் என்று முடிவு செய்யும் “கிங் மேக்கராகவும்” அவர் இருந்திருக்கிறாரே! அவரது ஆட்சியைப் பற்றி இன்றும் பேசப்படுகிறதே! ஏன்? அவர் கல்லூரிகளில் படிக்க வேண்டியதை வீட்டிலும், சிறைச்சாலைகளிலும் வேலை செய்த அலுவலகத்திலும் படித்து விட்டார்!.

  இத்தாலி நாட்டின் உயர்ந்த கலைஞன், உலகமகா புதுமைப் படைப்பாளி, அறிவாளி, விஞ்ஞானி, சிற்பி லியொனார்டோ டாவின்சி (1452 முதல் 1519 வரை). இவர் பள்ளியில் படிக்க வில்லை, ஆனால் சுயமாகப் படித்து அவரே ஒரு பல்கலைக்கழகமானர். வெளிநாட்டில் இருக்கும் கணித மேதைகளுடன் எந்த தொடர்பும் இல்லாமல் அவருக்கு கிடைத்தப் புத்தங்களை  தானாகவே படித்து மேதையானர் கணித மேதை ராமானுஜம். அமெரிக்காவின் தலை சிறந்த ஜனாதிபதி ஆப்பிரகாம் லிங்கன் சுயமாகப் படித்தவர். மின்சாரம் மின் மோட்டார்,மின்  காந்தவியல் ஆகியவற்றின் ஒப்பற்ற படைப்பாளி மைக்கேல் பரடே (1791 முதல் 1867 வரை) தானாகவே படித்தார். விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் கூட தானாகவே கற்றவர்கள் தான். “Autodidacts” என்ற ஆங்கில வார்த்தை தானாக கல்வி கற்றவர்களைக் குறிக்கும்.

  பட்டங்கள் பெறாமல் தனக்குத்தானே கல்வி புகட்டி சாதித்துக்காட்ட வழிமுறைகளைச் சொல்லும் முன்னர், ஒரு அடிப்படை உண்மையை உங்களுக்குத் தெளிவாக்க வேண்டும். படித்துப் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் படித்தவர்கள் அல்ல. அவர்களிடம் பட்டம் இருக்கலாம் , ஆனால் அவர்கள் பட்டம் பெற்றதாகக் கூறப்படும் துறையைப்பற்றி அவர்களுக்கு போதுமான கல்வி அறிவு இருக்காது. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற  பலருக்கும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது! பல ஆங்கில வார்த்தைகளின் பொருளும் அவர்களுக்கு தெரியாது, அதைப்போல கணினிப் பொறியாளர்கள் பலருக்கும் கணினி இயக்கவும் தெரியாது, கணினி மொழிகளும் தெரியாது, ஆகவே தான் பல பொறியாளர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை!.

  பட்டம் பெற்று விட்ட பலர் சாதிக்க முடியாமல் போவதற்கு இன்னொரு காரணம், இவர்களுக்கு வேலைப் பார்க்க ஆர்வம் இல்லை என்பது! வேலைப் பார்க்கும் இடத்தில் இவர்களுக்கு வேலை செய்ய தெரிந்திருந்தாலும் வேலை செய்ய மாட்டார்கள், மற்ற பணியாளர்களிடம் பேசிக் கொண்டு அவர்களையும் வேலை செய்ய விடமாட்டார்கள். ஒரு சிலர் 10 மணிக்கு வருவதற்குப் பதிலாக 11 மணிக்கு அலுவலக்திற்கு வருவார்கள். ஒரு  சிலர் அலுவலகத்தில் ஒரு கோஷ்டியையே ஏற்படுத்திக் கொண்டு நிர்வாகத்தை எதிர்த்து முழக்கங்கள் எழுப்புவார்கள். சாதி, மதம், இனம், மொழி, சொந்த ஊர் என்ற அடிப்படையில் இந்த குழுக்கள் இருப்பதால் அது ஆபத்தான சூழ்நிலையையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தும். இப்படிப்பட்டவர்களால் அந்த நிறுவனம் பலவீனமாகி, பின்னர் இழுத்து மூடும் நிலைமைக்கு வந்து விடும். ஆக, வேலை தெரியாத பட்டதாரிகளை விட வேலை தெரிந்த பின்னரும் வேலை பார்க்க விருப்பமில்லாத பட்டதாரிகள் இன்னும் ஆபத்தானவர்கள்! அவர்களால் தொழில் சீர்குலைந்து போய் விடும். மொத்தத்தில் இவர்கள் எல்லாம் படிப்பறிவு உள்ளவர்கள் என்று கூறி விட முடியாது.

  இனி பட்டங்கள் இல்லாமல் சாதிக்கும் சாத்தியக்கூறுகளைப் பார்போம்;

  அ) பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு இன்று தொலைதூர தொடர் கல்வி வந்துவிட்டது. மீண்டும் பதிவு செய்து +2, இளநிலை, முதுகலை, முனைவர் பட்டம் என்று தொடர்ந்து படிக்கலாம். ஆனால் அந்தப் படிப்பு உண்மையுள்ளதாகவும், தரம் உள்ளதாகவும் இருத்தல் வேண்டும். ரசித்துப் படிக்க வேண்டும். ஒரு சிறந்த கல்வி பெற  படிக்க வேண்டுமே தவிர பட்டம் பெற்றால் மட்டும் போதும் என்ற மனப்பான்மையில் படிக்கக்கூடாது.

  ஆ) பத்திரிக்கைகளிலும் இணையதளத்திலும் நமக்கு தேவையான எல்லா தகவல்களும் உள்ளன. அறிவுதான் சக்தி என்கிறோம். விவசாயம் செய்பவர்கள் கூட விஞ்ஞான விவசாயம் பற்றிய செய்திகள் சேகரித்து நடைமுறைப்படுத்தினால் விவசாயத்தில் மகசூலை இருமடங்கு பெருக்க முடியும். மீன் பிடிக்கும் மீனவர்கள் கூட விஞ்ஞான முறையைக் கையாண்டு மீன் இருக்கும் இடத்தை Sonar கருவி மூலம் கண்டுபிடித்து அதிக மீன்களைப் பிடிக்கலாம்.

  இ) இன்று தொழில் சார்ந்த பயிற்சி பள்ளிகள் பல வந்து விட்டன. உயர் ரக லாரி ஒட்டுபவர்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது. அப்படி பயிற்சி பெற்ற ஒரு ஒட்டுநருக்கு மாத சம்பளம் ரூபாய் 50,000 கிடைக்கிறது!. இது இன்று ஒரு கணிப்பொறி பொறியாளரின் வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

  ஈ) ஒருவர் தான் செய்யும் வேலை சாதரண வேலை என்றாலும் அதை அக்கரையுடன், முழுமையாக செய்யும் போது பதவி உயர்வு கிடைக்கிறது. அந்த நிறுவனமே அவருக்கு பயிற்சி தருகிறது, வெளி நாட்டிற்குக் கூட அனுப்புகிறது; தொழில் திறமையால் உயர்ந்த இடத்தில் உட்கார வைத்து விடுகிறது. அதற்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்ய வேண்டும், அதோடு முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல் வேண்டும்.

  உ) முதன் முதலில் வேலைக்குச் சேரும் போது சம்பளம் என்ன தருவீர்கள் என்று கேட்கக்கூடாது! மேலும் சம்பளத்திலேயே கண்ணாக இருக்கவும் கூடாது! சம்பளத்திற்கு வேலை செய்கிறோம் என்ற மனப்பான்மையினை விட்டுவிட்டு வேலையை கற்றுக் கொள்ள முயற்சிக்கிறோம் என்ற எண்ணத்துடன் வேலை செய்ய வேண்டும். வேலையில் ஏற்படும் சவால்கள் தான் சம்பளம்  என்று நினைக்க வேண்டும். அந்த சவால்களை உடைத்தெறிந்து  காரியத்தை செய்து முடிப்பதையே சம்பள உயர்வாகக் கருதவேண்டும். அப்போது பணியிடத்தில் பட்டம் பெறுவீர்கள். பல பட்டங்கள் பெற்றவர்களை விட தொழில் நுட்பத்தில் உயர்வீர்கள் அப்படியே உங்களுக்குப் பதவி உயர்வு அதுவாக வந்து விடும். “கிடைக்கும் சம்பளத்தை விட அதிக வேலை செய்தால் பின் ஒரு நாள் செய்யும்  வேலையை விட அதிக சம்பளம் நிச்சயம் கிடைக்கும்”.

  ஊ) நேர்மை, நாணயம். பணிவு, நன்றி உணர்வு, தைரியம்,விடாமுயற்சி, தன்மானம்,சுய ஒழக்கம் ஆகியவற்றை உயிராகக் கடைபிடித்தால், வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். படிக்காமல் பட்டங்கள் பல பெறலாம்.

  பட்டம் பெற்றவர்கள் தான் படிப்பறிவு உள்ளவர்கள்; நான் பட்டம் பெறவில்லையே, நம்மால் சாதிக்க முடியாதா?  என்று ஏங்காதீர்கள். பட்டம் பெற்றவர்கள் எல்லாரும் படித்தவர்கள் அல்ல! பட்டம் பெறாதவர்கள் எல்லாம் படிக்காதவர்களும் அல்ல. பட்டம் இல்லையென்றால் வெட்கப்படாதீர்கள்; பின்வாங்காதீர்கள், பட்டம் இல்லாமலும் படிப்பறிவு பெற முடியும், அதற்க்கான முயற்சியில் நீங்களும் இறங்கலாம்! வெற்றியும் பெறலாம். பல வெற்றியாளர்கள் படிக்காத மேதைகள் தான்!.

  வேலை தேட கல்லூரிகளில் படிக்கலாம்!

  வேலை கொடுக்க சுயமாகப் படிக்கலாம்!

  முடியும் என்று புறப்படு ! ஊர் போற்றப் பெயரெடு !!

  திருமதி. பிரேமா முருகேசன்

  தாளாளர், மாருதி மெட்ரிக் பள்ளி

  உழவர் சந்தை, சம்பத் நகர், ஈரோடு

  “தன்னம்பிக்கை உள்ளவர் அது இல்லை, இது இல்லை என்று குறையிட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள், தனது குறிக்கோளை அடைய எது தேவை என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டு அவற்றை சேகரிப்பதில் ஈடுபட்டு அவை கிடைக்கும் வரை முயற்சி செய்து சாதிக்கக் கூடியவராக இருப்பார்” டாக்டர் இ.செ.க. அவர்களின் சிந்தனைக்கேற்ப வாழ்ந்து வருபவர்.

  எடுத்துக் கொண்ட செயலில் நான் வெற்றிப் பெற்றே தீருவேன், என்னால் அச் செயலை சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்ற தனிமனித நம்பிக்கையை நிரம்பப் பெற்றிருப்பவர்.

  நல்ல செயலில் துணிவுக் காட்டுபவர்கள் நாள்தோறும் வெற்றியே காண்பார்கள் என்பார்கள் அதுவாய் நல்ல செயல்களோடே பயனப்பட்டு வெற்றி கண்டுவருபவர்.

  கடமைகள் நம்முடையது; நிகழ்ச்சிகள் கடவுளுடையவை என்று கல்விச் சேவையை திறம்பட செய்து வருபவர்.

  பெரிய செயல்கள் வல்லமையால் நிறைவேறுவது கிடையாது; விடா முயற்சியினாலேயே நிறைவேறுகிறது. அந்த விடாமுயற்சியைக் கொண்டு பெண்கள் இன்னும் நிறைய சாதிக்கத்தான் வேண்டும் என்று விரும்புபவர்.

  இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட திருமதி. பிரேமா முருகேசன் அவர்களை நாம் நேர்முகம் கண்டதிலிருந்து இனி…

  கே. நீங்கள் பிறந்தது- படித்தது- வளர்ந்தது குறித்து?

  கோவை மாவட்டம் காரமடையில் மருதையக்கவுடர் ருக்குமணி தம்பதியனருக்கு தலைமகளாகப் பிறந்தேன். காரமடை பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளியில் முதல் வகுப்பு தொடங்கி மேல் நிலை வகுப்பு வரை பயின்றேன்.

  இந்தப்பள்ளிதான், நான் இந்த அளவிற்கு உயர மிகக் காரணமாக இருந்தது. எனக்குள் இருந்த திறமைகளையும், தகுதிகளையும் வெளிக் கொணர வைத்தது. ஆசிரியர்களின் அரவணைப்பு எனக்கு நல்லதொரு ஊக்கத்தையும் உந்துதலையும் கொடுத்தது.

  அக்காலத்தில் பி.யூ.சி என்ற கல்வி முறை இருந்தது, இப்படிப்பை நான் அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் படித்தேன். நான் படிக்கின்ற காலத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டார்கள். ஆனால் என் தந்தை அம்முறைக்கு மாறானவர். என்னை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் எனறு விரும்பினார். கோவையிலூள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பி.காம்.,பட்டம் பெற்றேன் பட்டப் படிப்பை முடித்த கையோடு திருமணம் நடந்தது.

  கே. ஆசிரியர் பணியை தேர்வு செய்தது குறித்து?

  திருமணம் முடிந்ததும் கோவையிலிருந்து ஈரோட்டிற்கு குடிப்பெயர்ந்து விட்டோம். என் கணவர் அப்பொழுது ஒரு தனியாôர் நிறுவனத்தில் பணியில் இருந்தார். காலங்கள் உருண்டோடின. இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தன. குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தேன். இனியும் பொழுதை வீணாகக்கழிக்க விரும்ப வில்லை. நான் படித்தது பி.காம் என்பதால் வங்கி சார்ந்த துறையில் தான் பணியாற்ற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் எனக்கு அப்பணியில்  சற்றும்  ஆர்வம் இல்லை.

  ஒரு முறை என் மகள் படிக்கும் பள்ளிக்கு போயிருந்தேன். அப்பொழுது அப்பள்ளியில் ஆசிரியர் தேவை குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். விண்ணப்பித்தேன் என் மகள் படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன்.

  கே. மாருதி வித்யாபவன் பள்ளி உருவானது குறித்து?

  எனக்குள் தோன்றிய ஒரு சிறிய மாற்றத்தில் தான் இப்பள்ளி உருவானது. நான் பணியாற்றிய காலத்தில் ஆசிரியர் பணியின் அதிசயத்தை என்னால் நன்கு உணரமுடிந்தது. ஒரு மாணவனை இச்சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய அங்கமாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. அதுவாய் நல்லதொரு சமுதாயத்தை நாம் ஏன்…? உருவாக்கக்கூடாது என்று எண்ணினேன். என்னுடைய அந்த இலட்சியத்தை என் கணவரிடம் கூறினேன் அவரும்  அதற்கு சம்மதித்து விட்டார்.

  ஆசையிருந்தால் மட்டும் போதாது நல்ல இடவசதி, பேருந்து வசதி, எதிர்காலத்தில் எவ்வித இடையூறும் இல்லாமல், முக்கியமாக குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் வசதியாக இருக்க வேண்டும் இப்படி பல்வேறு திட்டங்கள் மத்தியில் தொடங்கப்பட்டது தான் இந்தப்பள்ளி.

  1985ம் ஆண்டு 3 ஆசிரியர்கள் 30 குழந்தைகளுடன் “மாருதி வித்யாபவன்” என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஆண்டுக்காண்டு குழந்தைகளின் சேர்க்கையும், பெற்றோர்களின் நம்பிக்கையும் சேர்ந்து கொண்டிருப்பதால் 25 ஆண்டுகள் மேலாகியும் வெற்றியோடு செய்து வருகிறோம்.

  கே: இப்பள்ளியின் மூலம் மாணவர்களிடம் எதிர்ப்பார்ப்பது?

  இப்பள்ளியின் தாராக மந்திரம் என்று ஒன்றை வைத்திருக்கிறோம், அதுதான் Truth is Triumph “உண்மையே உயர்வு” என்பது அதன்  பொருள்.

  பெற்றோர்கள் எங்களை நம்பி குழந்தைகளை இப்பள்ளியில் வந்து சேர்க்கிறார்கள். அவர்களின் எண்ணமெல்லாம் தங்கள் பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது தான் அவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்கும். அவர்களின் எண்ணத்தை நாங்கள் பொய்யாக்கி விடக்கூடாது என்பதில் நாங்கள்  மிகவும் கவனமாக இருக்கிறோம்.

  இதனால் குழந்தைகளின் எதிர்கால நலனில் சற்று கூடுதலாக கவனம் கொடுக்கிறோம். பாடத்தோடு ஒழுக்கத்தையும், பண்பு நலனையும் போதிக்கிறோம்.

  எழுதுதல், வாசித்தல், புரிதல் இம்மூன்றையும் மிக அழகாக அவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களை முன்னேற்றம் அடையச் செய்கிறோம்.

  கே: பள்ளியை நிர்வகிக்கும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிது?

  இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று. இந்தக்கல்வியை அனைவரும் ஒரு சேவையோடு தொடங்க வேண்டும்.

  அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பை வைக்காமல் நாம் சந்திக்கும் எல்லா விஷயத்திலும் உண்மையாகவும், நேர்மையாகவும் வழிநடத்துதல் மிக நன்று.

  தேவையற்ற பிரமாண்டத்தைத் தேடிப் போகாமல் இருப்பதற்குள் சிறப்பையும், நற்பெயரையும் அடைய வழிதேடுவது நல்லது.

  நற்பெயரை நாம் தேடிப்போகக் கூடாது. தானாகத் தேடி வரும்படி திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

  கே: பள்ளி ஆரம்பித்த காலத்தில் வளர்ச்சிக்கும், சேர்க்கைக்கும் முன்னெடுத்த திட்டங்கள் குறித்து… ?

  நாங்கள் இப்பள்ளியை தொடங்குவதற்கு முன்பே ஈரோட்டில் பெரிய பள்ளிகள் இருந்தது. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சற்று குறைவாகத்தான் இருந்தது. எனினும் பெரிய பள்ளிகள் இருக்கும் பொழுது நம் பள்ளிக்கு சேர்க்கை விகிதம் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைத்தோம்.

  இப்பள்ளி அமைந்துள்ள இடம் அப்பொழுதே நன்கு வளர்ச்சிப்பெற்ற இடமாகத்தான் இருந்தது. இதனால் தொடங்கிய இரண்டு வருடத்திலேயே பள்ளியின் சிறப்பை அனைவரும் புரிந்து கொண்டனர்.

  இதனால், பெற்றோர்கள் தங்களின் குழந்தையை எவ்வித தடையுமின்றி எங்கள் பள்ளியில் சேர்த்தார்கள்.

  நாங்களும் நல்ல ஆசிரியர்கள், வகுப்பில் நல்ல பயிற்சி, மாணவர்களின் முன்னேற்றம் போன்றவற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தும் அளவிற்கு எங்களின் பயிற்சிகள் இருந்தது.

  கே: ஆண்டுக்காண்டு கல்விமுறையில் ஏற்படும் மாற்றங்களை எப்படி பார்க்கிறீர்கள்…?

  மாற்றங்கள் மாறிக்கொண்டேதான் இருக்கிறது.  பண்டையக்  காலங்களில் மாணவர்கள் ஆசிரியர் வீட்டிற்கு நேரடியாக சென்று படிக்கும் சூழல்  இருந்தது.

  அதுமட்டுமின்றி ஆசிரியர்களுக்கு தேவையான பணிவிடைகள் செய்வது அவர்களின் முதன்மையான வேலையாக இருந்தது. அதன் பிறகு பொது இடங்களில் கல்வி கற்றல், கோவில் மடம் போன்ற இடங்கள் அதன் பிறகு திண்ணைப்பள்ளிகளும் இருந்தது.

  குடிசைகளில் பள்ளிகள் நடத்தப்பட்டு வந்தன. பிறகு ஓட்டுக்கட்டிடம், கான்கிரீட் சிமெண்ட் பூசப்பட்ட கட்டிடம், இப்பொழுது வானுயர்ந்த கட்டிடம் மின்சார வசதி, ஏ.சி வசதி என்று வந்து விட்டது.

  இப்படி ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றார்போல் கல்வியின் சூழல் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், கல்வி என்பது ஒன்றுதான். அதைத்தான் போதிக்க வேண்டும்.

  ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் ஒரு இணக்கமான உறவுமுறை இப்பொழும் உள்ளது.

  எப்பொழுது வேண்டுமென்றாலும் ஆசிரியர்களை சந்திக்கலாம். சகஜமாகப்பேசலாம். இது எல்லாம் கல்வியின் இன்றைய வளர்ச்சிப்படிநிலைகள்தான்.

  கே: எடுத்துக்கொண்ட இலட்சியம் நிறைவேறி விட்டதாக உணர்கிறீர்களா?

  வாழ்க்கை சக்கரம் அவரவரின் மனநிலைக்கேற்ப வேகமாகவோ, மிதமாகவோ, மிதவேகமாகவோ சுழலும். ஆனால், எனக்கு மிக வேகமாகத்தான் சுழன்றது என்றே சொல்வேன்.

  என் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால் ஒரு நொடிப்பொழுது போல்தான் தெரிகிறது…

  ஆனால், எத்தனையோ சாவல்களை, சாதனைகளை மனிதர்களை சந்தித்து விட்டேன்.

  ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவம், அனுபவம் எனக்கு ஒரு நல்ல ஆனந்தத்தைக் கொடுத்தது.

  நான் வெறுமனே இப்பள்ளியைத் தொடங்கியிருந்தால் என்னால் இத்தனை காலம் இப்பள்ளியைச் சிறப்பாக நடத்தியிருந்திருக்க முடியுமா? சிந்திக்க முடியவில்லை. இப்பள்ளி எனக்கொரு கனவு, என் மனத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நிறைய பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைப் பற்றி பெருமையாகப் பேசும் பொழுது எனக்குள் தோன்றும் பேரானந்தத்திற்கு அளவே இருக்காது.

  நான் ஒருநாளும் இப்பள்ளியின் தாளாளராக நினைத்ததே இல்லை. இன்றுவரை நானும் மற்ற ஆசிரியர்கள் போல் பாடம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறேன்.

  கே: உங்களின் வெற்றிக்குப் பின்னால் நீங்கள் பார்ப்பது…. ?

  என்னைப்பற்றிய  மதிப்பீடுதான் என் வெற்றியாக நான் கருதுகிறேன்.

  ஆரம்பத்தில் மூன்று பள்ளிகளை தனி ஒருவராக மேலாண்மை செய்து வந்தேன். இது எனக்கு சவாலாக இருந்தது. எங்கு செல்ல வேண்டுமென்றாலும், எனக்கென்று சொந்தமான இரண்டு சக்கர வாகனத்தில் தான் செல்வேன். எனக்கென்று நான் யாரையும் சார்ந்திருக்க வில்லை.  முடியும் என்ற எதிர்நீச்சல் தான் என்னை இந்தளவிற்கு பயணிக்க வைக்கிறது என்று நினைக்கிறேன். எந்த வேலையாக இருந்தாலும் அது மனதிற்கு பிடித்து செய்வேன். அதுபோல என் கணவரும், மகள்களும் என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக நான் கருதுகிறேன்.

  கே: இன்றைய பெண்கள் கல்வி கற்பது எந்தளவிற்கு அவர்களுக்கு  உதவி செய்யும்… ?

  பெண்களின் முன்னேற்றம் தான் சமுதாயத்தின் வளர்ச்சி என்பேன். ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே முன்னேற்றம் அடையும்.

  ஆண்களைப் போலவே பெண்களையும் சரிநிகரமாக இப்பொழுது பெற்றோர்கள் நன்றாப் படிக்க வைக்கிறார்கள். பெண்ணாகப் பிறந்து விட்டாலே யாரையேனும் சார்ந்து வாழ்தல் அவர்களின் வாழக்கையோடு ஒன்றிணைந்ததாகவே இருக்கிறது.

  இந்நிலை இப்பொழுது மாறிவிட்டதாக நான் கருதுகிறேன். பெண்களின் முகம் எல்லா துறைகளிலும் இன்று பதிவாகிவிட்டது. அதற்கு அவர்கள் கற்ற கல்வி மட்டுமே காரணமாக அமைகிறது.

  எதிர்காலத்தை தான் சொந்தமாக தீர்மானிக்க பெண்கள் கல்விகற்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதுகிறேன்.

  கே: இப்பள்ளியில் படித்து இன்று சாதித்த மாணர்வகளைப்பற்றி… ?

  இங்கு படித்த  நிறைய மாணவர்கள், பல துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். இதை, அவர்களின் பெற்றோர்கள், சொல்லியும் மாணவர்களே நினைவு வைத்துக்கொண்டு இப்பள்ளியை வந்து பார்த்து விட்டு எங்களிடம் ஆசி பெற்று சொல்கிறார்கள்.

  இதைத்தான் நான் மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கிறேன். சில நாட்களுக்கு முன்னர் கூட ஒரு மாணவனுக்கு வெளிநாட்டில் பணி கிடைத்தது என்பதால் அவர் இப்பள்ளிக்கு வருகை தந்து மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்து விட்டுப்போனார்.

  அதுபோலவே நிறைய மாணவர்கள் டாக்டராக, பொறியாளராக ஆசிரியராக இருக்கிறார்கள். வெளிநாடுகளில் நிறையப்பேர் பணியாற்றி வருகிறார்கள்.

  கே: குடும்பம் குறித்து … ?

  எனது கணவர் திரு. K.S. முருகேசன் Shau Wallance & co கம்பெனியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது பள்ளியை வழி நடத்தி செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார். எனக்கு இரண்டு பெண்கள் மூத்த மகள் லாவண்யா M.C.A., M.Phil. Ph.d., Fathima Engineering கல்லூயில் துறைத்தலைவராக பணியாற்றி வருகிறார். மருமகன் திரு. S. ரங்கநாதன் தனியார் கம்பெனியில் துபாயில் பணியாற்றி வருகிறார்.  பேத்தி R. நிக்ஷிதா Bits Bilani – யில் பொறியியல் படிக்கிறார்.

  இளைய மகள் ரம்யா ஸ்ரீ, M.B.A., மருமகன் S. விவேக், M.B.A., கணினித்துறையில் உள்ளார். பேரன் லக்ஷத் பிரணய் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்கள்.

  கே: படித்த பிடித்த புத்தகங்கள், மனிதர்கள் பற்றி… ?

  புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏற்றத்தைத் தரும் பொக்கிஷங்கள். அந்த வகையில் நான் நிறைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன். முக்கியமாக திருக்குறள், கீதை, தமிழறிஞர்களின் நாவல்கள், சிறுகதை என்று நிறைய புத்தகங்களை வாசித்துள்ளேன்.

  மனிதர்கள் என்று பார்க்கும் பொழுது எனது பெற்றோர்கள் மற்றும் இப்பளிக்கு இடமளித்தவர் மற்றும் அவருடைய மகன்கள் என்று நிறையப்பேருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

  கே: ஆசிரியரின் பணி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்… ?

  ஒரு மாணவனை இச்சமுதாயத்தில் மதிப்பு மிக்கவனாக மாற்றுவதற்கு ஆசிரியரின் பங்கு மிகவும் முக்கியம்.

  ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களையும் தங்களின் பிள்ளைகளைப் போல மிகுந்த அக்கறையோடு அரவணைக்க வேண்டும்.

  இங்கு பயிலும் நிறைய குழந்தைகளின் பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருப்பார்கள்.  அவர்களால் குழந்தைக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுக்க முடியாது. இதனால் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே பாடம் முழுவதையும் கற்று கொடுக்க வேண்டும்.

  வேலை செய்யும் பொழுது சலிப்போடும், வெறுப்போடும் வேலையை சொல்லிக் கொடுக்க கூடாது.

  நாம்தான் எதிர்கால உலகின் உருவாக்கம். மிகப்பெரிய ஆயுதம் என்பதை ஒவ்வொரு ஆசிரியர்கள் மனதிலும் பதிய வைக்க வேண்டும்.

  கே: உங்களைப் போல் தொழில் முனையும் பெண்களுக்கு நீங்கள் சொல்வது.… ?

  “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு

  என்ற மடமையைப் புறக்கணிப்போம்”.

  எத்தனை காலம் தான் இப்பழமொழியைச் சொல்லி பெண்களை வளர்ப்பார்கள். இந்நிலை மாறவேண்டும் என்றால் பெண்கள் தனியுரிமை சுதந்திரம் பெற வேண்டும்.

  எதிலும் முடியும் என்று முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கைத்தத்துவம் சிறப்பானதாக அமையும்.

  முதலில் ஒரு குறிக்கோளுடன் திட்டத்தைத் தீட்டிக் கொள்ளுங்கள். அதற்கு தகுந்தார்போல் பயிற்சி, முயற்சி, உழைப்பு போன்றவற்றைக் கொடுங்கள். வெற்றி கதவைத்தட்டும்.

  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை நான்கும்தான் பெண்களின் குணம் என்பார்கள். இதோடு தொழில், திறன், வளர்ச்சி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

  கே: தோல்வியை சந்திக்காமல் யாரும் வெற்றி பெற முடியாது என்பது நிதர்சனம், இது பற்றி… ?

  தோல்விதான் வெற்றியை தீர்மானிக்கும். எடுத்த முதல் தேர்விலேயே வெற்றி பெற்று விட்டால் அது அவரவரின் தகுதிக்கு ஏற்றார் போல் அமையும்.

  ஆனால், அந்த வெற்றி அதிக அனுபவத்தை தராது என்று நினைக்கிறேன். எத்தனை முறை தோற்றாய் என்பது முக்கியமல்ல, எத்தனை முறை முயற்சித்தாய் என்பதுதான் முக்கியம்.

  இதற்கு நிறைய அறிஞர்களை காரணம் காட்டலாம். வாஸ்கோடகாமா, ஆப்ரகாம்லிங்கன் போன்றவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

  தோல்வி வந்து விட்டது, எதை  செய்தாலும் தோல்விதான் மிஞ்சுகிறது என்ற வார்த்தையெல்லாம் வீணர்களின் வார்த்தை. இவர்கள்தான் இதைக் கண்டு துவண்டு போவார்கள். ஆனால், போராடப்பிறந்தவர்கள் தோல்வி என்பதை ஒரு ஏணிப்படியைப் போல எத்தனை சறுக்கல்கள் வந்தாலும் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும்.

  கே: இப்பள்ளியின் சிறப்பு வாய்ந்த அம்சங்கள் குறித்து… ?

  இப்பள்ளியானது 25 ஆண்டுகளுக்கு மேல் கிராமப்புறத்திலுள்ள பெற்றோர்களுக்கு நல்ல பள்ளியாக இருந்து வருகிறது.

  ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களின் மேலும் தனிக்கவனம் செலுத்தி நல்லதொரு எதிர்காலத்தைக் கொடுத்து வருகிறார்கள்.

  எழுத்துப் பயிற்சியை சிறப்பாக கொடுத்து ஒவ்வொரு பிள்ளைகளின் எழுத்தாற்றலை மேம்படுத்தி வருகிறோம்.

  அரசு கொடுக்கும் ஊக்கத்தொகை முழுவதும் மாணவர்களுக்கு நேரடியாக கிடைக்கச் செய்கிறோம்.

  தேர்வில், விளையாட்டில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முன்னிலையில் பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி அவர்களை சிறப்பித்து வருகிறோம்.

  எங்கள் பள்ளி மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை செலுத்தும் சேவைப்பள்ளியாக இயங்கி வருகிறது என்று சொல்லாம்.

  கே : தன்னம்பிக்கை பற்றி… ?

  இந்த தலைப்பை முதலில் வைத்தற்கு ஆசிரியர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தன்னம்பிக்கை என்ற ஒன்றிருந்தால் போதும் எதையும் வென்று விடலாம். இமயத்தையும் தொட்டு விடலாம்.

  எப்போதும் ஒருவருக்குள் எதிர்த்து போராடும் ஆற்றலை உருவாக்கி, எதிர்கால லட்சியத்தை தனதாக்கிக் கொள்ள தன்னம்பிக்கை பெரிதும் உதவுகிறது.

  உள்ளத்தோடு உள்ளம்

  தமிழகத்திற்கு கிறிஸ்தவத்தைத் தர வந்த ஜெர்மானியர் கார்ல் கிரவுலுக்கு, தமிழின் இனிமை கவர்ந்ததால் பல தமிழ் நூல்களை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

  பல ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்றி விட்டு முதுமை நெருங்கிய பின்பு தனது சொந்த நாட்டிற்குத் திரும்பினார். அங்கும் தன் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார். தன் சீடனான வில்லியம் என்பவரின் உதவியோடு திருக்குறளை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடு செய்தார்.

  ஆனால், முதுமை அவரை மரணப்படுக்கையில் தள்ளியது. அப்போதும் அவர் கவலை திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல் வேலைகள் முடிந்து வெளிவராதது குறித்துத்தான் இருந்திருக்கிறது.

  கடைசி நேரத்தில் தனது சீடர் வில்லியத்தை அழைத்து, நான் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்த திருக்குறள் பதிப்பு அச்சாகி விட்டதா…? என்று கேட்டிருக்கிறார்.

  “இரண்டு நாளில்  அந்த வேலை முடிந்து நூல் ஆயத்தமாகி விடும்” என்று கூறியிருக்கிறார் வில்லியம்.

  அதைக் கேட்ட மகிழ்ச்சியில்தான் தம் உயிரையே துறந்திருக்கிறார் கார்ல் கிரவுல்.

  வெளிநாட்டு மனிதரை, வேறு சமயத்தைச் சார்ந்தவரைக் கூட தமிழ் மொழி பெரிதும் கவர்ந்திருக்கிறது ஆனால், தமிழ்தாயின் மக்களாகிய நம்மை “ஆங்கில மோகம்” கவர்ந்திருக்கிறது என்பது சரிதானா…? சிந்திப்போம்…!.

  எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்வோம்.

  ஆனால் தாய் மொழியை நேசிப்போம்!

  தாய்மொழியை இழந்த சமுதாயம் தன் வேர்களை இழந்து தன் அடையாளத்தை இழந்து விடும் என்பதை உணர்ந்து, தாய்மொழி தமிழை நல்லமுறையில் பேசியும், எழுதியும் காப்போம்…! வளர்ப்போம்…!!

  அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!