Home » Articles » என் பள்ளி

 
என் பள்ளி


ஆசிரியர் குழு
Author:

திருமதி. சிவகாமி இராமநாதன்

ஆசிரியர் ( ஓய்வு)

கோவை.

“சட்டங்கள் செய்வதும், பட்டங்கள் ஆள்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டு மறிவினில் ஆணுக்குப் பெண் – இங்கே

இளைப்பில்லை கண்டீர்”.

– மகாகவி பாரதியார்

குடும்பத்தில் பெற்றோருக்கு நல்ல மகளாய், கணவருக்கு நல்ல துணைவியாய், பிள்ளைகளுக்கு நல்ல தாயாய் வாழ்ந்து பலர் போற்றும்படி தன் வாழ்க்கையை அமைத்து வாழும் திருமதி. சிவகாமி அவர்களின் பள்ளி அனுபவங்கள் நம்மோடு…

தற்போதைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தளந்தூர் என்னும் குக்கிராமத்தில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். என் தந்தை திரு. செங்கோடக்கவுண்டர், தயார் பாப்பாயம்மாள். எனக்கு முன் பிறந்த மூத்த சகோதரர்கள் இரண்டு பேர் திரு. நடராஜன், திரு. கிருஷ்ணன். கடைசியாக பிறந்த பெண் குழந்தை நான் என்பதால் பெற்றோருக்கும், சகோதரர்களுக்கும் என்மீது அளவு கடந்த அன்பு எப்பொழுதும் இருக்கும்.

என் தந்தை காவல்துறையில் பணியாற்றினார். சற்று கண்டிப்புடன் இருப்பார். ஏதேனும் தவறு செய்தால் மட்டும் அவரிடமுள்ள கண்டிப்பு வெளியே வரும். நான் ஒருமுறைகூட அவரிடம் திட்டு வாங்கியதே இல்லை என்பதுதான் உண்மை.

காவல்துறையில் இருந்ததால் என் அப்பாவிற்கு அடிக்கடி பணி இடமாற்றம் ஏற்படும். இதனால், வீடும் ஊரும் மாறிக்கொண்டே இருக்கும்.

இதனால் என் தொடக்கப்பள்ளி என் சொந்த ஊரில் அமையாமல் சேலம் மாவட்டம் ஓமலூரிலுள்ள பாத்திமா புனித அன்னைபள்ளியில் படிப்பைத் தொடங்கினேன்.

இப்பள்ளி மற்றும் ஆசிரியர்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

நான் தொடக்ககல்வி பயிலும் போதே படிப்பையும், பாட்டுப்பாடுவதையும் மிக அழகாக கற்றுக்கொண்டேன். குறிப்பாக பாரதியார் பாடல்கள், சுதந்திரப்பாடல்கள் என்று நிறையப்பாடல்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். பள்ளி விழாவில் ஆசிரியர்கள் முதலில் என்னைத்தான் தேர்வு செய்வார்கள்.

அந்தளவிற்கு அப்பள்ளியில் அனைவருக்கும் பிடித்த மாணவியாக மாறிவிட்டேன். நான் 4ம் வகுப்பு படிக்கும் பொழுது என் தந்தைக்கு மீண்டும் பணி இடமாற்றம். இதனால், இப்பள்ளியை விட்டு வேறு பள்ளிக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டது.

என் தந்தைக்கு சற்று மனவருத்தம், நாம் இவ்வாறு இடமாறுவது இவர்களின் படிப்பையும் பாதிக்கிறதே என்று நினைத்தார். ஆனால், என் படிப்பின் மீது மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரின் நம்பிக்கையை நான் ஒரு போதும் வீணடித்ததே கிடையாது. அந்தளவிற்கு என்னுடைய தேர்வுமுடிவுகள் இருக்கும்.

எந்த பள்ளிக்கு போனாலும் ஆசிரியர்களுடன் நான் நெருங்கி பழகி விடுவேன். காரணம் நன்றாக படிக்கும் பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஒரு சமயம் என் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவம் என்றே சொல்லலாம். அது என்னவென்றால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்த தருணம், என் தந்தை ஸ்டேசனில் அவருடன் காவல்துறையில் பணியாற்றும் மற்ற அதிகாரிகளுடன் தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

என் தேர்வு எண்ணை மற்றவர்கள் கேட்க என் தந்தையும் கொடுக்கிறார். ஆனால், அந்த செய்தித்தாளில் என் தேர்வு எண் இல்லை. எனது தந்தை என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதைப் பொய்யாக்கி விட்டேன் என்று என் மனம் மிகவும் வலித்தது. ஆனாலும், எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஒரு வாரம் சென்றது. என்னை அழைத்து நீ தேர்வில் வெற்றி பெற்று விட்டாய் சில காரணத்தால் உன் எண் அன்று வரவில்லை என்ற சொன்னார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, வீட்டிற்கு வந்து சொன்னேன். அனைவரும் மிகுந்த ஆனந்தமடைந்தார்கள்.

பள்ளியில் படிக்கும் பொழுது நிறைய ஆசிரியர்களை சந்திப்போம். அவர்களிடமிருந்து ஏதேனும் ஒன்றைக்கற்றுக் கொள்வோம். அவ்வாறு என் மனதில் நின்றவர்கள் திரு. சிவசண்முகம் காலந்தவறாமை இவரின் முக்கியமான குணங்களில் ஒன்று. தமிழாசிரியராக பணியாற்றிய திரு. பழனியாண்டி அவர்கள் தமிழ் உச்சரிப்பு, இலக்கியங்கள் நடத்துவதில் வல்லவர்.

இப்படியே காலம் சென்றது. ஆசிரியர் பயிற்சிப்படிப்பை முடித்து ஆசிரியராக  பணியில் அமர்ந்தேன். அதன் பிறகு திருமணம், குழந்தைகள், பேரப்பிள்ளைகள் என்று வாழ்க்கைச் சக்கரத்தோடு பயணித்து, தன்னலான அளவு இந்த சமுதாயத்திற்கு பயன்பாடாக இருந்து வருகிறேன்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2016

என் பள்ளி
நம் உயர்வுக்காக சில வழிகள்….
பஞ்சதந்திரம் – 7
உயிர் உலைக் கூடம்
வெற்றி மனப்பான்மை கொண்டவர்களுக்கு மூன்று துணைகள்….
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு
மாதங்களில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்…
வாய்ச்சொல் வீரர்கள்
சிகரமே சிம்மாசனம்
ஜனநாயகத் திருவிழா – 2016
அமைதி
5 பேருக்கு நன்றி….
தன்னம்பிக்கை மேடை
முடியும் என்று புறப்படு ! ஊர் போற்றப் பெயரெடு !!
உள்ளத்தோடு உள்ளம்