Home » Articles » மாதங்களில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்…

 
மாதங்களில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்…


நாகேஸ்வரி சௌந்திரராஜன்
Author:

நித்திரையில் இருந்தாலும் தமிழா…! சித்திரைதானடா உமக்கு தமிழ் புத்தாண்டு என்று சித்திரைத் திருநாளே வருக, எங்கள் சிந்தையில் மகிழ்ச்சிகள் பெருக, நாங்கள் முத்திரை பதித்து வாழ்ந்திட, அனைத்து துறைகளும் உயர்ந்து, அகிலத்தையும் ஈர்த்திட, சீர்பெருகும் மாதம்  சித்திரை மாதம், ஏர்பூட்டும் உழவனின் ஏற்றமிகு நன்னாள், மகிழ்ச்சி பொங்க, மலரட்டும் தமிழ்புத்தாண்டு என்று தமிழ்மணம் கமழ, தரணியெங்கும் நிலைத்து மாதங்களில் முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை மாதம் என்பார்கள்.

கோடை வெயில் தகிக்க, கொன்றை மலர் பூத்துக்குலுங்கி வரவேற்க, ஏர்பூட்டும் உழவனின் ஏற்றமிகு நன்னாளாக போற்றப்படும், சித்திரை மாதத்தின் சிறப்பென்ன…? அலசினோம் என்றால், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாக வைத்தே 12 தமிழ் மாதங்களையும் பகுப்புடன் தொகுத்திருக்கிறார்கள். அதனால்தான், தமிழ் மாதங்கள் சூரியமாதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. அவற்றில் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்க, இளவேனிற்காலம் இன்முகத்துடன் எழ, வசந்த காலத்தை வரவேற்கும் மாதமான சித்திரையில் மாம்மரங்களும், வேப்பமரங்களும் பூத்துக்குலுங்கும். தமிழ் மாதங்களில் முதல் மாதமாக வரும் சித்திரை மாதத்தின் பிறப்பையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் நாள் தமிழகத்தில் தமிழ்புத்தாண்டு, சித்திரைத்திருநாள், சித்திரைக்கனி என்றம் அண்டைய மாநிலமான கேரளாவில் ‘விஷூ’ என்ற பெயர்களிலும் கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழ் புத்தாண்டையொட்டி மக்கள், இல்லத்தூய்மையுடன் உள்ளத்தூய்மை கொண்டு, தங்கள் இல்லங்களில், மஞ்சள் பூசி மாவிலை தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து புதுப்பொலிவுடன் இறைவனை வழிபட்டு மகிழ்கின்றனர். ஒற்றுமை நிலைக்க, உறவினர்கள் படைசூழ பல பதார்த்தங்களுடன் உணவருந்தி அதில் வேப்பம்பூவை சேர்த்து உண்பது இப்பண்டிகையின் கூடுதல் சிறப்பாக இன்றைக்கும் நடைமுறையில் இருந்து வருவதை நாம் அறியமுடியும். அதுமட்டுமல்லாமல், தென்மாவட்டங்களில் சித்திரைத்திருநாளை சிறப்பிக்கும் வகையில் ஏர்பூர்டும் தினமாகவும் கொண்டாடி மகிழ்கின்றனர். இவை, கிராமத்திற்கு கிராமம் மாறுபட்டாலும், சித்திரையில் விதைவிதைத்தால் சிறப்பாக விளையும் என்று காலம் நேரம் கணக்கிட்டு, ராசிபலன் பார்த்து, குடும்பத்துடன் புத்தாடை புனைந்து, உழவனின் உற்ற தோழனாம் எருதையும், ஏர் உழும் கருவியான மேழிச்செல்வத்தையும் தொழுது, நம் குடும்பத்தில் ராசியான நபரின் கையால் முதலில் நவதானியங்களை அள்ளி, ஆத்மார்த்தமாக கழனிகளில் விதைத்து, களம் நிறைய வேண்டி களிப்புடன் கொண்டாடி வருகின்றனர். இவை, உழைப்பின் உன்னதத்தை பறைசாற்ற, உற்சாகம் பொங்க, ஊக்கமே ஆக்கமாகும் என்பதை பறைசாற்றி வருகின்றனர்.

சித்திரைப்பூ பூக்க, சிந்தனைகள் துளிர, தரணியெங்கும் முத்திரை பதித்து, வெற்றிகள் பல குவிய, இன்றைக்கு, விலையாகும் விளைநிலங்கள் விளைந்து வளம் காணட்டும். புதுமைகள் படைத்து, புன்னகை பூத்துக்குலுங்க, வளர்ச்சியும், மகிழ்ச்சியும் நிலைத்து, உற்சாகத்துடன், உன்னத வாழ்வு வாழ அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2016

என் பள்ளி
நம் உயர்வுக்காக சில வழிகள்….
பஞ்சதந்திரம் – 7
உயிர் உலைக் கூடம்
வெற்றி மனப்பான்மை கொண்டவர்களுக்கு மூன்று துணைகள்….
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு
மாதங்களில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்…
வாய்ச்சொல் வீரர்கள்
சிகரமே சிம்மாசனம்
ஜனநாயகத் திருவிழா – 2016
அமைதி
5 பேருக்கு நன்றி….
தன்னம்பிக்கை மேடை
முடியும் என்று புறப்படு ! ஊர் போற்றப் பெயரெடு !!
உள்ளத்தோடு உள்ளம்