Home » Articles » வாய்ச்சொல் வீரர்கள்

 
வாய்ச்சொல் வீரர்கள்


கவிநேசன் நெல்லை
Author:

சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலம்.

இந்திய விடுதலைக்காக பல்வேறு தளங்களில் இந்திய மக்கள் இயங்கிக் கொண்டிருந்த நேரம். வீரர்களாக, போர்ப்படைத் தளபதிகளாக, ஊருக்கு உதவுபவர்களாக, அகிம்சை வழியில் ஆங்கிலேயரை விரட்டும் தலைவர்களாக, தொண்டர்களாக, பல்வேறு வடிவங்களில் இந்திய மக்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த வேளை.

சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில், சிலர் ஒய்யாரமாய் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

“ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?” என்று எண்ணி தங்களுக்குள் இந்த நாட்டைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்தவகை மக்களில் பலர் வீண் பெருமை பேசி நின்றார்கள். சிலர் பயந்து ஒதுங்கினார்கள். இன்னும்சிலர், வீண் விவாதத்தில் நேரத்தை செலவிட்டு, தங்கள் பொழுதைப் போக்கினார்கள். இதைக் கவனித்த பாரதியார், இந்த வகை செயல்பாடு கொண்டவர்களை “வாய்ச்சொல் வீரர்கள்” என அழைத்தார். இந்த ‘வாய்ச்சொல் வீரர்கள்’ தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்றும், வீணாக பயந்து நடுங்குபவர்கள் என்றும் பாரதியார் வேதனையோடு தம் கவிதை வரிகளில் குறிப்பிட்டார். இதனால்தான் –

நெஞ்சில் உரமும் இன்றி

நேர்மைத் திறமும் இன்றி

வஞ்சனை செய்வாரடி – கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி

– என்று பாடினார். நாட்டு விடுதலைக்கு துணை நிற்காமல் வீணாகப் பொழுதைக் கழிப்பவர்களைப் பார்த்து வேதனைப்பட்டார் பாரதியார்.

அன்று – நாட்டு விடுதலைக்குப் பாடுபடாத மக்களில் சிலரைப்போல இன்றும் சிலர், நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படாமல் வீணாகப் பொழுதைப் போக்குகிறார்கள். வீண் பேச்சுப் பேசுகிறார்கள். பிறரை வம்புக்கு இழுத்து சண்டைப்போடுகிறார்கள். பாரதி குறிப்பிட்டத்தைப்போல இந்த வகை மக்களையும் “வாய்ச்சொல் வீரர்கள்” என்று அழைக்கலாம்.

வளவளவென்று பேசுவதும், பயன்படாத சொற்களை நிரப்பி, வார்த்தைகளை வடிவமைத்து, கருத்து இல்லாமல் கண்டபடி பேசுவதும், நல்ல பேச்சுக்கு அழகல்ல. நாம் பேசுகின்ற பேச்சு மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தர வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். உறவினர்களின் நல்லுறவைப் பேணுவதற்கு நமது பேச்சு பக்கப்பலமாக இருக்க வேண்டும். ஊர்க்காரர்களை இணைக்கின்ற அன்புப் பாலமாகவும் அது அமைய வேண்டும். அப்போதுதான் ஒருவருடைய பேச்சு அவருடைய வாழ்க்கையின் வெற்றிக்கு துணை நிற்கும்.

“எப்படியும் பேசலாம்?” என்று மனம்போன போக்கில் பேசுபவர்களை ‘உளறித் திரிபவர்கள்’ என முத்திரை குத்திவிடுவார்கள். யாரிடம் பேச வேண்டும்? எப்போது பேச வேண்டும்? என்ன பேச வேண்டும்? எந்த இடத்தில் பேச வேண்டும்? எவ்வளவு நேரம் பேச வேண்டும்? எப்படியெல்லாம் பேச வேண்டும்? என்ற நுணுக்கத்தைத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைகிறார்கள்.

வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு, “நான் அப்படி நினைத்து சொன்னேன். இப்படி ஆகும் என்று நான் நினைத்துப் பேச வில்லை” என்றுசொல்லி தங்கள் வாதத் திறமையால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்பவர்களும் உண்டு. இப்படி சமாளிப்பவர்களை யாரும் நம்பமாட்டார்கள்.

ஒரு நாட்டில் ‘புகைப் பிடிக்கும்’ பழக்கம் இல்லாத மக்கள் வாழ்ந்து வந்தார்கள். சிகரெட் பிடிக்கும் பழக்கம் அங்கு இல்லாததால் அந்த மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். திடீரென ஒருநாள் அங்கு ‘சிகரெட் கம்பெனி’ ஒன்று உருவானது. நன்கு திறமையான ஒருவருக்கு அந்தக் கம்பெனி மேனேஜர் பதவி வழங்கியது.

வியாபாரத்தைப் பெருக்குவதற்கு அந்த மேனேஜர் புதுமையான வியாபார யுக்தியைக் கடைபிடித்தார். பத்திரிக்கைகளில் பெரிய அளவில் விளம்பரம் செய்தார்.

“நீங்கள் சிகரெட் பிடித்தால் மூன்று நன்மைகள் கிடைக்கும். 1. உங்கள் வீட்டிற்கு திருடன் வரமாட்டான். 2. உங்களுக்கு முதுமைத் தோன்றாது. 3. உங்களுக்கு பெண் குழந்தைப் பிறக்காது” – என்று தனது கம்பெனியின் விளம்பரத்தில் அந்த மேனேஜர் குறிப்பிட்டிருந்தார்.

“இந்த விளம்பரம் தவறாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிகரெட் பிடிப்பவர்களுக்கு ஏராளமான நோய்கள்தான் வருகிறது. தீமைதான் அதிகம் கிடைக்கும். நன்மை கிடைக்கும் என்பது நம்பத் தகுந்தது அல்ல” – என்று ஒருவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்திற்கு வந்த மேனேஜரை நீதிபதி விசாரித்தார்.

“நீங்கள் செய்த விளம்பரம் நம்ப முடியாமல் இருக்கிறது. அறிவியல்பூர்வமாக இது சரியானதாக இல்லை” என்று சொன்னார்.

மேனேஜர் நீதிபதிக்கு பதில் தந்தார்.

“சிகரெட் பிடிப்பதால் 3 நன்மைகள் உள்ளது. உங்கள் வீட்டிற்கு திருடன் வரமாட்டான் என்பது முதல் நன்மையாகும். ஒருவர் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தால் அவருக்கு முதலில் வரும் நோய் ‘இருமல்’ நோயாகும். இரவு முழுவதும் விழித்துக்கொண்டே இருப்பார். இதனால் இவருக்கு தூக்கம் வராது அல்லவா? இவர் இரவு முழுவதும் விழித்திருப்பதால் அவரது வீட்டிற்கு திருடன் இரவு நேரத்தில் வரமாட்டான். எனவேதான் சிகரெட் பிடித்தால் உங்கள் வீட்டிற்கு திருடன் வரமாட்டான் என்று நாங்கள் விளம்பரம் செய்திருந்தோம்.

சிகரெட் பிடித்தால் உங்களுக்கு முதுமை வராது என்றும் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதுவும் உண்மைதான். அதிகமாக சிகரெட் பிடித்தால் முதுமை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் சிகரெட்டை மிக அதிகமாக பிடிப்பவர்கள் இளம்வயதிலேயே இறந்துபோய்விடுவார்கள். இதைத்தான் நாங்கள் சிகரெட் பிடிப்பவர்களுக்கு முதுமை வராது என்று சொன்னோம். இதில் ஒன்றும் தவறில்லையே!

மூன்றாவதாக, உங்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்காது” என்ற உண்மையைச் சொன்னோம். சிகரெட் பிடிக்கும்போது சிகரெட்டிலுள்ள நிக்கோடின் நச்சுத்தன்மை கொண்டது. இந்த நச்சுத்தன்மை ஒருவரிடம் மலட்டுத் தன்மையை உருவாக்கிவிடும். சிகரெட் பிடிப்பவர்களுக்கு குழந்தைப்பேறு பாக்கியம் கிடைப்பது கடினம். சிகரெட் பிடிப்பவர்களுக்கு குழந்தைப் பெறுவதே பிரச்சினையாகும்போது, பெண் குழந்தை பிறக்காது என்பது உண்மைதானே?” – என்று தனது விளக்கத்தைச் சொன்னார் மேனேஜர்.

நீதிபதி அதிர்ந்து போனார்.

இந்த சம்பவத்தில்வரும் மேனேஜரைப்போலவே, சிலர் நம்மிடம் பொய்யான தகவல்களை உண்மையைப்போல தருகிறார்கள். இதயத்தில் இனிப்பைத் தடவுவது போன்ற உணர்வில் நாம் மயங்கிப் போகிறோம். நம்மை மகிழ்விக்கும் பேச்சு மட்டுமே உண்மை என நாம் நம்புவதால் பலரையும் நாம் எளிதில் நம்பிவிடுகிறோம். சிலவேளைகளில் அவர் பேச்சு உண்மைக்குப் புறம்பானது என்று நாம் உணரும்போது “நான் இப்படித்தானே சொன்னேன். நான் சொன்னது தவறா?” என்று கேள்வி கேட்டு நம்மையே மடக்கும் வாய்ச்சொல் வீரர்களையும் நாம் வாழ்க்கையில் காண்கிறோம்.

வாழ்க்கையின் வளர்ச்சிக்குப் பயன்படாதவற்றை நாம் நம்பத் தகுந்தபடி பேசுபவர்களிடம் எச்சரிக்கை உணர்வோடு இருப்பது அவசியமாகும். பிறரைக் குறை சொல்வதும், அடுத்தவர்கள்மீது ஆதாரமில்லாமல் அவதூறுகளை அள்ளி வீசுவதும் வாய்ச்சொல் வீரர்களின் கைவந்த கலையாகும். இவர்களை இனம்கண்டு கொள்வதும், அவர்களிடம் கொண்டுள்ள தொடர்பை துண்டிப்பதும் நமது வெற்றிக்கு உறுதுணையாக அமையும் செயல்களாகும்.

எனவே, வாய்ச்சொல் வீரர்களோடு இணைந்து செயல்படுவதை நிறுத்துவோம், வெற்றிகளைக் குவிக்கப் பழகுவோம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2016

என் பள்ளி
நம் உயர்வுக்காக சில வழிகள்….
பஞ்சதந்திரம் – 7
உயிர் உலைக் கூடம்
வெற்றி மனப்பான்மை கொண்டவர்களுக்கு மூன்று துணைகள்….
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு
மாதங்களில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்…
வாய்ச்சொல் வீரர்கள்
சிகரமே சிம்மாசனம்
ஜனநாயகத் திருவிழா – 2016
அமைதி
5 பேருக்கு நன்றி….
தன்னம்பிக்கை மேடை
முடியும் என்று புறப்படு ! ஊர் போற்றப் பெயரெடு !!
உள்ளத்தோடு உள்ளம்