Home » Articles » சிகரமே சிம்மாசனம்

 
சிகரமே சிம்மாசனம்


சொக்கலிங்கம் சிவ
Author:

தானங்கள் சிறக்கட்டும் – தலைமுறைகள் வாழ்த்தட்டும்

மானுடப்பரப்பை அர்த்தப்படுத்தும் பல நிகழ்வுகள் வாழ்க்கையில் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கிறது. அவற்றில் சில நெஞ்சை நெருடும் சம்பவங்களாக முட்டி மோதிக் கொண்டுதான் இருக்கிறது. தானம் என்பவையே அவை. தானத்தில் சிறந்தது அன்னதானமா? நிதானமா? என்று பட்டிமண்டபம் நாள்தோறும் அனைவர் உள்ளத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ரத்ததானம், கண்தானம், இதயதானம், உடல் உறுப்புதானம் – உடலே தானம் இப்படி பற்ப்பல பூமியை  பூரிப்பில் ஆழ்த்திக்கொண்டுதான் இருக்கிறது. வானம்கூட சிலநேரங்களில் மழைப்பொழிவு இல்லாமல் பொய்த்துப்போகும். ஆனாலும் மேலே கண்ட தானங்களில் உடல் உறுப்புதானம் என்பது பல தலைமுறைகளை வாழ வைக்கும் சாகாத சரித்திரங்கள் வரலாற்றின் வரவு பொக்கிஷங்கள்.

விபத்துகளில் இறந்தவர்கள் (Brain Dead) மூளை இனி செயல் படவே முடியாத நிலையில் அவர்தம் உறுப்புகளை தாராளமாக தானம் கொடுக்கலாம். இரத்த அழுத்தத்தை ஸ்திரப்படுத்தி வைத்து உடனே அறுவை சிகிச்சை செய்து இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் அனைத்தையும் நீக்கி, காத்திருப்பில் உள்ளோருக்கு உடனே பொருத்திவிட வேண்டும். ஆறுமணி நேரத்திற்குமேல் உடல் உறுப்பை பொருத்த தாமதமானால், குறிப்பிட்ட உறுப்பை சில தனிப்பட்ட திரவங்களில் அலம்பி ஸ்டெரிலைஸ் பைகளில் வைத்து கூலரில் வைத்து விடுவார்கள். உடனடியாகப் பயன்படுத்தினால் பலன்தர அதிக வாய்ப்புண்டு. நீண்டநேரம் தாங்காது. ஆறுமணி நேரத்துக்கு மட்டுமே இறந்தவரின் ரத்த அழுத்தத்தை ஸ்திரப்படுத்தி வைக்க முடியும். இது மருத்துவத்தின் மகத்துவமாகவேப்படுகிறது. ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்ற முண்டாசுக் கவியின் முழக்கம் காதில் தெரிக்கிறது. இவன் பாடுபொருளுக்குள்ளும், மானிடப் பிறப்பின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டிருக்கிறது.

மூளைச்சாவு அடைந்த குடும்பத்தார் சம்மதம் என்று தலைசாய்த்தால் மட்டுமே உறுப்புகள் தானமாக பெறப்படும். தானமாக பெறப்பட்ட இருதயம் ஆறுமணி நேரத்திற்குள்ளும், கல்லீரல் பன்னிரெண்டு மணி நேரத்திற்குள்ளும் நுரையீரல் பத்துமணி நேரத்துக்குள்ளும், சிறுநீரகம் இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள்ளும், பொருத்தப்பட வேண்டும் – மனப்பொருத்தம் போல் இங்கே மணிப்பொருத்தங்கள் உயிரின் மேல் ஒட்டப்பட்டிருக்கிறது.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 39 வயதை தொட்ட கோவையை அடுத்த வீர கேரளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். இவரின், உடல் உறுப்பு மூலம் ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. இவரின் உடலை பார்த்த குடும்பத்தார் கதறி அழுதாலும் – வரலாற்றின் வடிவத்தில் ஐந்துபேருக்குள்ளும். இவர் மறு அவதாரம் எடுத்தாகவே மருத்துவ உலகம் மார்தட்டிக்கொள்கிறது.

ஒற்றை மனிதன் தன் இறப்புக்குப் பின்னாலும் ஐந்துபேரை வாழ வைத்த அதிசயத்தை உலகின் பேரதிசயம் என்று சொல்லாமல் வேறு வார்த்தையால் எப்படி விமர்ச்சிக்க முடியும்? இதை அதிசயமாய் அண்ணாந்து பார்த்தாலும். இவரை மருத்துவம் வாழும் – வரலாற்று பெட்டகமாகவே தன் இருப்பு பெட்டியில் நிரப்பி வைத்திருக்கிறது.

இன்னுமொருவர் – கர்நாடகம் தந்த தேவேந்திரன் விபத்தில் மூளைச்சாவு அடைந்து இருப்பதை மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தவுடன் நிமிடங்களை நீட்டிப்பு செய்யாமல் அவர்தம் மனைவி கமலாவும் மகனும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதன்படி கல்லீரல் ஒருவருக்கு, இரு கண்கண் வேறு இருவருக்கும், சிறுநீரகம் ஆளுக்கொருவராக இருவருக்கும் ஆகமொத்தம் ஐந்து பேருக்கு உடல்உறுப்பு தானம் செய்யப்பட்டது. தானம் கொடுத்த பின் மனைவி கமலா “ஐந்து பேரின் உருவில் என் கணவர் என்றும் வாழ்கிறார்” என்று கண்ணீர்க்கோடுகளோடு கதறி இருக்கிறார். வரலாறாகவே வாழ்கிறார்கள் சில தேவேந்திரன்கள். இரண்டு வருடங்கள் 8 மாத குழந்தையும் கூட – இதயத்தை இடமாற்றம் செய்த விந்தை – பெங்களுரில் மூளைச்சாவு அடைந்த குழந்தையின் இதயம் தனி விமானத்தில் சென்னைக்கு வந்து வெற்றிகரமாக ரஷிய குழந்தைக்கு பொருத்தப்பட்ட செய்தி ஒருமைப்பாட்டில் இந்தியா ஓங்கி நிற்கிறது என்பதையே காட்டுகிறது.

பெங்களுரு கம்ப்யூட்டர் என்ஜினியர் அமீத் உபாத்யாயா மகன் எதார்த் மருத்துவ உலகிற்கு மற்றுமொரு சான்றாக நிற்கிறான் நாடுகளுக்குள் போட்டியும், பொறாமையும், போரும் அடிக்கடி ஏற்பட்டாலும் இங்கே – எதார்த் போன்றோரின் இதயம் இணைப்பு பாலம் போட்டிருக்கிறது. இனி போரில்லா சமாதான பூமியாக இந்தியா சிறக்கட்டும் வல்லரசாய் வலம் வரட்டும்.

இங்கே ஒரு இலக்கியக் காட்சி எனக்குள் விரிகிறது. அன்று குமணனின் தலைக்கு தம்பியால் விலை பேசப்பட்டது. காட்டிலிருக்கும் குமணணை புலவர் சாத்தனார் பார்க்க வந்தவுடனே, புலவரை பார்த்து குமணன்,

“அந்தநாள் வந்திலை அருங்கவிப் புலவோய்

இந்தநாள் வந்துநீ நொந்தெனை அடைந்தாய்

தலைதனைக் கொண்டுபோய்த் தம்பி கைக்கொடுத்து

விலைதனைப் பெற்றுன் வறுமைநோய் களையவே!”

நான் அரசுக் கட்டிலில் கொலுவீற்றிருந்த காலத்தில் புலவர் பெருமானே! அன்று நீவீர் வந்திருந்தால் பொன்னும் மணியும் கொடுத்து பூரிப்பில் ஆழ்த்தி உன்னை வணங்கி வழியனுப்பி வைத்திருப்பேனே! இன்றோ நான் நாடுகடத்தப்பட்ட நிலை போல கானகத்தில் அல்லவா தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். என் செய்ய! பரவாயில்லை ஒருசெய்தி என் காது மடலுக்குள் கச்சிதமாய் வந்து விழுந்தது. என்தம்பி என் தலையை கொண்டு வருவோருக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாக அறிவித்திருக்கிறான். என்தலையை கொய்து, கொன்று, கொண்டுபோய் புலவர் பெருமானே! என் தலையைக் கொடுத்து உன் வறுமையைப் போக்கிக் கொள்வாயாக! இல்லை என்று சொல்லாத எனக்கு இருக்கு என்று கொடுக்க என் தலை மட்டுமாவது இப்போது இருக்கிறதே என்று பெருமை அடைகிறேன்” என்றான் வாரிக் வார்க்கொடுக்கும் வள்ளல் பிரான் குமணன்.

இங்கே இருவேறு நிலைகள் – காட்சிப்படலங்களாய் கண்முன்னே விரிகிறது – தலைமுறையை வாழ வைக்கும் உடல் உறுப்பு தானங்கள், தலை கொடுக்க சம்மதித்த வள்ளல்தரும். வாழ்க்கைப் பாடங்களாய் இன்னும் புவிமீது இருப்பதால் தான் பூமி அழகாகவே இன்னும் இருக்கிறது இருக்கட்டும். இதுபோல் உடல் உறுப்பு தானம் கொடுப்போரை சிகர சிம்மாசனத்தில் நிறுத்தி வைப்போம். இதய மாளிகைக்குள் இருத்தி வைப்போம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2016

என் பள்ளி
நம் உயர்வுக்காக சில வழிகள்….
பஞ்சதந்திரம் – 7
உயிர் உலைக் கூடம்
வெற்றி மனப்பான்மை கொண்டவர்களுக்கு மூன்று துணைகள்….
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு
மாதங்களில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்…
வாய்ச்சொல் வீரர்கள்
சிகரமே சிம்மாசனம்
ஜனநாயகத் திருவிழா – 2016
அமைதி
5 பேருக்கு நன்றி….
தன்னம்பிக்கை மேடை
முடியும் என்று புறப்படு ! ஊர் போற்றப் பெயரெடு !!
உள்ளத்தோடு உள்ளம்