Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

படிப்பறிவு இல்லாதவர்களாலும் இங்கு சாதிக்க முடியுமா? அதன் சாத்தியக்கூறுகளைப் பற்றிச் சொல்லுங்கள்?

காமராஜ்

நெல்லை மாவட்டம்

“படிப்பறிவு” என்பது பள்ளியில் படிப்பதையும், கல்லூரியில் படிப்பதையும் பட்டங்கள் பெறுவதையும் குறிப்பிட்டுக் கேட்டிருந்தீர்கள் என்றால், படிப்பறிவு இல்லாதவர்களாலும் இங்கு சாதிக்க முடியும் என்று கூறுவேன். அவ்விதமான பட்டங்கள் இல்லாதவர்கள் வென்று காட்ட சாத்தியக்கூறுகள் இங்கு நிறைய உண்டு என்றும் கூறுவேன்.

உங்களது பெயர் காமராஜ். கர்ம வீரர் காமராசர் (1903 முதல் 1975 வரை) அவர்களே உங்களது கேள்விக்கு விடையாக இருக்கிறார். எந்த வித பட்டங்களும் இல்லாமல், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும், இந்திய தேசத்தின் பாரதப்பிரதமர் யார் என்று முடிவு செய்யும் “கிங் மேக்கராகவும்” அவர் இருந்திருக்கிறாரே! அவரது ஆட்சியைப் பற்றி இன்றும் பேசப்படுகிறதே! ஏன்? அவர் கல்லூரிகளில் படிக்க வேண்டியதை வீட்டிலும், சிறைச்சாலைகளிலும் வேலை செய்த அலுவலகத்திலும் படித்து விட்டார்!.

இத்தாலி நாட்டின் உயர்ந்த கலைஞன், உலகமகா புதுமைப் படைப்பாளி, அறிவாளி, விஞ்ஞானி, சிற்பி லியொனார்டோ டாவின்சி (1452 முதல் 1519 வரை). இவர் பள்ளியில் படிக்க வில்லை, ஆனால் சுயமாகப் படித்து அவரே ஒரு பல்கலைக்கழகமானர். வெளிநாட்டில் இருக்கும் கணித மேதைகளுடன் எந்த தொடர்பும் இல்லாமல் அவருக்கு கிடைத்தப் புத்தங்களை  தானாகவே படித்து மேதையானர் கணித மேதை ராமானுஜம். அமெரிக்காவின் தலை சிறந்த ஜனாதிபதி ஆப்பிரகாம் லிங்கன் சுயமாகப் படித்தவர். மின்சாரம் மின் மோட்டார்,மின்  காந்தவியல் ஆகியவற்றின் ஒப்பற்ற படைப்பாளி மைக்கேல் பரடே (1791 முதல் 1867 வரை) தானாகவே படித்தார். விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் கூட தானாகவே கற்றவர்கள் தான். “Autodidacts” என்ற ஆங்கில வார்த்தை தானாக கல்வி கற்றவர்களைக் குறிக்கும்.

பட்டங்கள் பெறாமல் தனக்குத்தானே கல்வி புகட்டி சாதித்துக்காட்ட வழிமுறைகளைச் சொல்லும் முன்னர், ஒரு அடிப்படை உண்மையை உங்களுக்குத் தெளிவாக்க வேண்டும். படித்துப் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் படித்தவர்கள் அல்ல. அவர்களிடம் பட்டம் இருக்கலாம் , ஆனால் அவர்கள் பட்டம் பெற்றதாகக் கூறப்படும் துறையைப்பற்றி அவர்களுக்கு போதுமான கல்வி அறிவு இருக்காது. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற  பலருக்கும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது! பல ஆங்கில வார்த்தைகளின் பொருளும் அவர்களுக்கு தெரியாது, அதைப்போல கணினிப் பொறியாளர்கள் பலருக்கும் கணினி இயக்கவும் தெரியாது, கணினி மொழிகளும் தெரியாது, ஆகவே தான் பல பொறியாளர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை!.

பட்டம் பெற்று விட்ட பலர் சாதிக்க முடியாமல் போவதற்கு இன்னொரு காரணம், இவர்களுக்கு வேலைப் பார்க்க ஆர்வம் இல்லை என்பது! வேலைப் பார்க்கும் இடத்தில் இவர்களுக்கு வேலை செய்ய தெரிந்திருந்தாலும் வேலை செய்ய மாட்டார்கள், மற்ற பணியாளர்களிடம் பேசிக் கொண்டு அவர்களையும் வேலை செய்ய விடமாட்டார்கள். ஒரு சிலர் 10 மணிக்கு வருவதற்குப் பதிலாக 11 மணிக்கு அலுவலக்திற்கு வருவார்கள். ஒரு  சிலர் அலுவலகத்தில் ஒரு கோஷ்டியையே ஏற்படுத்திக் கொண்டு நிர்வாகத்தை எதிர்த்து முழக்கங்கள் எழுப்புவார்கள். சாதி, மதம், இனம், மொழி, சொந்த ஊர் என்ற அடிப்படையில் இந்த குழுக்கள் இருப்பதால் அது ஆபத்தான சூழ்நிலையையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தும். இப்படிப்பட்டவர்களால் அந்த நிறுவனம் பலவீனமாகி, பின்னர் இழுத்து மூடும் நிலைமைக்கு வந்து விடும். ஆக, வேலை தெரியாத பட்டதாரிகளை விட வேலை தெரிந்த பின்னரும் வேலை பார்க்க விருப்பமில்லாத பட்டதாரிகள் இன்னும் ஆபத்தானவர்கள்! அவர்களால் தொழில் சீர்குலைந்து போய் விடும். மொத்தத்தில் இவர்கள் எல்லாம் படிப்பறிவு உள்ளவர்கள் என்று கூறி விட முடியாது.

இனி பட்டங்கள் இல்லாமல் சாதிக்கும் சாத்தியக்கூறுகளைப் பார்போம்;

அ) பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு இன்று தொலைதூர தொடர் கல்வி வந்துவிட்டது. மீண்டும் பதிவு செய்து +2, இளநிலை, முதுகலை, முனைவர் பட்டம் என்று தொடர்ந்து படிக்கலாம். ஆனால் அந்தப் படிப்பு உண்மையுள்ளதாகவும், தரம் உள்ளதாகவும் இருத்தல் வேண்டும். ரசித்துப் படிக்க வேண்டும். ஒரு சிறந்த கல்வி பெற  படிக்க வேண்டுமே தவிர பட்டம் பெற்றால் மட்டும் போதும் என்ற மனப்பான்மையில் படிக்கக்கூடாது.

ஆ) பத்திரிக்கைகளிலும் இணையதளத்திலும் நமக்கு தேவையான எல்லா தகவல்களும் உள்ளன. அறிவுதான் சக்தி என்கிறோம். விவசாயம் செய்பவர்கள் கூட விஞ்ஞான விவசாயம் பற்றிய செய்திகள் சேகரித்து நடைமுறைப்படுத்தினால் விவசாயத்தில் மகசூலை இருமடங்கு பெருக்க முடியும். மீன் பிடிக்கும் மீனவர்கள் கூட விஞ்ஞான முறையைக் கையாண்டு மீன் இருக்கும் இடத்தை Sonar கருவி மூலம் கண்டுபிடித்து அதிக மீன்களைப் பிடிக்கலாம்.

இ) இன்று தொழில் சார்ந்த பயிற்சி பள்ளிகள் பல வந்து விட்டன. உயர் ரக லாரி ஒட்டுபவர்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது. அப்படி பயிற்சி பெற்ற ஒரு ஒட்டுநருக்கு மாத சம்பளம் ரூபாய் 50,000 கிடைக்கிறது!. இது இன்று ஒரு கணிப்பொறி பொறியாளரின் வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

ஈ) ஒருவர் தான் செய்யும் வேலை சாதரண வேலை என்றாலும் அதை அக்கரையுடன், முழுமையாக செய்யும் போது பதவி உயர்வு கிடைக்கிறது. அந்த நிறுவனமே அவருக்கு பயிற்சி தருகிறது, வெளி நாட்டிற்குக் கூட அனுப்புகிறது; தொழில் திறமையால் உயர்ந்த இடத்தில் உட்கார வைத்து விடுகிறது. அதற்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்ய வேண்டும், அதோடு முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல் வேண்டும்.

உ) முதன் முதலில் வேலைக்குச் சேரும் போது சம்பளம் என்ன தருவீர்கள் என்று கேட்கக்கூடாது! மேலும் சம்பளத்திலேயே கண்ணாக இருக்கவும் கூடாது! சம்பளத்திற்கு வேலை செய்கிறோம் என்ற மனப்பான்மையினை விட்டுவிட்டு வேலையை கற்றுக் கொள்ள முயற்சிக்கிறோம் என்ற எண்ணத்துடன் வேலை செய்ய வேண்டும். வேலையில் ஏற்படும் சவால்கள் தான் சம்பளம்  என்று நினைக்க வேண்டும். அந்த சவால்களை உடைத்தெறிந்து  காரியத்தை செய்து முடிப்பதையே சம்பள உயர்வாகக் கருதவேண்டும். அப்போது பணியிடத்தில் பட்டம் பெறுவீர்கள். பல பட்டங்கள் பெற்றவர்களை விட தொழில் நுட்பத்தில் உயர்வீர்கள் அப்படியே உங்களுக்குப் பதவி உயர்வு அதுவாக வந்து விடும். “கிடைக்கும் சம்பளத்தை விட அதிக வேலை செய்தால் பின் ஒரு நாள் செய்யும்  வேலையை விட அதிக சம்பளம் நிச்சயம் கிடைக்கும்”.

ஊ) நேர்மை, நாணயம். பணிவு, நன்றி உணர்வு, தைரியம்,விடாமுயற்சி, தன்மானம்,சுய ஒழக்கம் ஆகியவற்றை உயிராகக் கடைபிடித்தால், வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். படிக்காமல் பட்டங்கள் பல பெறலாம்.

பட்டம் பெற்றவர்கள் தான் படிப்பறிவு உள்ளவர்கள்; நான் பட்டம் பெறவில்லையே, நம்மால் சாதிக்க முடியாதா?  என்று ஏங்காதீர்கள். பட்டம் பெற்றவர்கள் எல்லாரும் படித்தவர்கள் அல்ல! பட்டம் பெறாதவர்கள் எல்லாம் படிக்காதவர்களும் அல்ல. பட்டம் இல்லையென்றால் வெட்கப்படாதீர்கள்; பின்வாங்காதீர்கள், பட்டம் இல்லாமலும் படிப்பறிவு பெற முடியும், அதற்க்கான முயற்சியில் நீங்களும் இறங்கலாம்! வெற்றியும் பெறலாம். பல வெற்றியாளர்கள் படிக்காத மேதைகள் தான்!.

வேலை தேட கல்லூரிகளில் படிக்கலாம்!

வேலை கொடுக்க சுயமாகப் படிக்கலாம்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2016

என் பள்ளி
நம் உயர்வுக்காக சில வழிகள்….
பஞ்சதந்திரம் – 7
உயிர் உலைக் கூடம்
வெற்றி மனப்பான்மை கொண்டவர்களுக்கு மூன்று துணைகள்….
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு
மாதங்களில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்…
வாய்ச்சொல் வீரர்கள்
சிகரமே சிம்மாசனம்
ஜனநாயகத் திருவிழா – 2016
அமைதி
5 பேருக்கு நன்றி….
தன்னம்பிக்கை மேடை
முடியும் என்று புறப்படு ! ஊர் போற்றப் பெயரெடு !!
உள்ளத்தோடு உள்ளம்