Home » Cover Story » முடியும் என்று புறப்படு ! ஊர் போற்றப் பெயரெடு !!

 
முடியும் என்று புறப்படு ! ஊர் போற்றப் பெயரெடு !!


ஆசிரியர் குழு
Author:

திருமதி. பிரேமா முருகேசன்

தாளாளர், மாருதி மெட்ரிக் பள்ளி

உழவர் சந்தை, சம்பத் நகர், ஈரோடு

“தன்னம்பிக்கை உள்ளவர் அது இல்லை, இது இல்லை என்று குறையிட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள், தனது குறிக்கோளை அடைய எது தேவை என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டு அவற்றை சேகரிப்பதில் ஈடுபட்டு அவை கிடைக்கும் வரை முயற்சி செய்து சாதிக்கக் கூடியவராக இருப்பார்” டாக்டர் இ.செ.க. அவர்களின் சிந்தனைக்கேற்ப வாழ்ந்து வருபவர்.

எடுத்துக் கொண்ட செயலில் நான் வெற்றிப் பெற்றே தீருவேன், என்னால் அச் செயலை சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்ற தனிமனித நம்பிக்கையை நிரம்பப் பெற்றிருப்பவர்.

நல்ல செயலில் துணிவுக் காட்டுபவர்கள் நாள்தோறும் வெற்றியே காண்பார்கள் என்பார்கள் அதுவாய் நல்ல செயல்களோடே பயனப்பட்டு வெற்றி கண்டுவருபவர்.

கடமைகள் நம்முடையது; நிகழ்ச்சிகள் கடவுளுடையவை என்று கல்விச் சேவையை திறம்பட செய்து வருபவர்.

பெரிய செயல்கள் வல்லமையால் நிறைவேறுவது கிடையாது; விடா முயற்சியினாலேயே நிறைவேறுகிறது. அந்த விடாமுயற்சியைக் கொண்டு பெண்கள் இன்னும் நிறைய சாதிக்கத்தான் வேண்டும் என்று விரும்புபவர்.

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட திருமதி. பிரேமா முருகேசன் அவர்களை நாம் நேர்முகம் கண்டதிலிருந்து இனி…

கே. நீங்கள் பிறந்தது- படித்தது- வளர்ந்தது குறித்து?

கோவை மாவட்டம் காரமடையில் மருதையக்கவுடர் ருக்குமணி தம்பதியனருக்கு தலைமகளாகப் பிறந்தேன். காரமடை பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளியில் முதல் வகுப்பு தொடங்கி மேல் நிலை வகுப்பு வரை பயின்றேன்.

இந்தப்பள்ளிதான், நான் இந்த அளவிற்கு உயர மிகக் காரணமாக இருந்தது. எனக்குள் இருந்த திறமைகளையும், தகுதிகளையும் வெளிக் கொணர வைத்தது. ஆசிரியர்களின் அரவணைப்பு எனக்கு நல்லதொரு ஊக்கத்தையும் உந்துதலையும் கொடுத்தது.

அக்காலத்தில் பி.யூ.சி என்ற கல்வி முறை இருந்தது, இப்படிப்பை நான் அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் படித்தேன். நான் படிக்கின்ற காலத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டார்கள். ஆனால் என் தந்தை அம்முறைக்கு மாறானவர். என்னை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் எனறு விரும்பினார். கோவையிலூள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பி.காம்.,பட்டம் பெற்றேன் பட்டப் படிப்பை முடித்த கையோடு திருமணம் நடந்தது.

கே. ஆசிரியர் பணியை தேர்வு செய்தது குறித்து?

திருமணம் முடிந்ததும் கோவையிலிருந்து ஈரோட்டிற்கு குடிப்பெயர்ந்து விட்டோம். என் கணவர் அப்பொழுது ஒரு தனியாôர் நிறுவனத்தில் பணியில் இருந்தார். காலங்கள் உருண்டோடின. இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தன. குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தேன். இனியும் பொழுதை வீணாகக்கழிக்க விரும்ப வில்லை. நான் படித்தது பி.காம் என்பதால் வங்கி சார்ந்த துறையில் தான் பணியாற்ற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் எனக்கு அப்பணியில்  சற்றும்  ஆர்வம் இல்லை.

ஒரு முறை என் மகள் படிக்கும் பள்ளிக்கு போயிருந்தேன். அப்பொழுது அப்பள்ளியில் ஆசிரியர் தேவை குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். விண்ணப்பித்தேன் என் மகள் படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன்.

கே. மாருதி வித்யாபவன் பள்ளி உருவானது குறித்து?

எனக்குள் தோன்றிய ஒரு சிறிய மாற்றத்தில் தான் இப்பள்ளி உருவானது. நான் பணியாற்றிய காலத்தில் ஆசிரியர் பணியின் அதிசயத்தை என்னால் நன்கு உணரமுடிந்தது. ஒரு மாணவனை இச்சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய அங்கமாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. அதுவாய் நல்லதொரு சமுதாயத்தை நாம் ஏன்…? உருவாக்கக்கூடாது என்று எண்ணினேன். என்னுடைய அந்த இலட்சியத்தை என் கணவரிடம் கூறினேன் அவரும்  அதற்கு சம்மதித்து விட்டார்.

ஆசையிருந்தால் மட்டும் போதாது நல்ல இடவசதி, பேருந்து வசதி, எதிர்காலத்தில் எவ்வித இடையூறும் இல்லாமல், முக்கியமாக குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் வசதியாக இருக்க வேண்டும் இப்படி பல்வேறு திட்டங்கள் மத்தியில் தொடங்கப்பட்டது தான் இந்தப்பள்ளி.

1985ம் ஆண்டு 3 ஆசிரியர்கள் 30 குழந்தைகளுடன் “மாருதி வித்யாபவன்” என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஆண்டுக்காண்டு குழந்தைகளின் சேர்க்கையும், பெற்றோர்களின் நம்பிக்கையும் சேர்ந்து கொண்டிருப்பதால் 25 ஆண்டுகள் மேலாகியும் வெற்றியோடு செய்து வருகிறோம்.

கே: இப்பள்ளியின் மூலம் மாணவர்களிடம் எதிர்ப்பார்ப்பது?

இப்பள்ளியின் தாராக மந்திரம் என்று ஒன்றை வைத்திருக்கிறோம், அதுதான் Truth is Triumph “உண்மையே உயர்வு” என்பது அதன்  பொருள்.

பெற்றோர்கள் எங்களை நம்பி குழந்தைகளை இப்பள்ளியில் வந்து சேர்க்கிறார்கள். அவர்களின் எண்ணமெல்லாம் தங்கள் பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது தான் அவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்கும். அவர்களின் எண்ணத்தை நாங்கள் பொய்யாக்கி விடக்கூடாது என்பதில் நாங்கள்  மிகவும் கவனமாக இருக்கிறோம்.

இதனால் குழந்தைகளின் எதிர்கால நலனில் சற்று கூடுதலாக கவனம் கொடுக்கிறோம். பாடத்தோடு ஒழுக்கத்தையும், பண்பு நலனையும் போதிக்கிறோம்.

எழுதுதல், வாசித்தல், புரிதல் இம்மூன்றையும் மிக அழகாக அவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களை முன்னேற்றம் அடையச் செய்கிறோம்.

கே: பள்ளியை நிர்வகிக்கும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிது?

இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று. இந்தக்கல்வியை அனைவரும் ஒரு சேவையோடு தொடங்க வேண்டும்.

அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பை வைக்காமல் நாம் சந்திக்கும் எல்லா விஷயத்திலும் உண்மையாகவும், நேர்மையாகவும் வழிநடத்துதல் மிக நன்று.

தேவையற்ற பிரமாண்டத்தைத் தேடிப் போகாமல் இருப்பதற்குள் சிறப்பையும், நற்பெயரையும் அடைய வழிதேடுவது நல்லது.

நற்பெயரை நாம் தேடிப்போகக் கூடாது. தானாகத் தேடி வரும்படி திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கே: பள்ளி ஆரம்பித்த காலத்தில் வளர்ச்சிக்கும், சேர்க்கைக்கும் முன்னெடுத்த திட்டங்கள் குறித்து… ?

நாங்கள் இப்பள்ளியை தொடங்குவதற்கு முன்பே ஈரோட்டில் பெரிய பள்ளிகள் இருந்தது. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சற்று குறைவாகத்தான் இருந்தது. எனினும் பெரிய பள்ளிகள் இருக்கும் பொழுது நம் பள்ளிக்கு சேர்க்கை விகிதம் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைத்தோம்.

இப்பள்ளி அமைந்துள்ள இடம் அப்பொழுதே நன்கு வளர்ச்சிப்பெற்ற இடமாகத்தான் இருந்தது. இதனால் தொடங்கிய இரண்டு வருடத்திலேயே பள்ளியின் சிறப்பை அனைவரும் புரிந்து கொண்டனர்.

இதனால், பெற்றோர்கள் தங்களின் குழந்தையை எவ்வித தடையுமின்றி எங்கள் பள்ளியில் சேர்த்தார்கள்.

நாங்களும் நல்ல ஆசிரியர்கள், வகுப்பில் நல்ல பயிற்சி, மாணவர்களின் முன்னேற்றம் போன்றவற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தும் அளவிற்கு எங்களின் பயிற்சிகள் இருந்தது.

கே: ஆண்டுக்காண்டு கல்விமுறையில் ஏற்படும் மாற்றங்களை எப்படி பார்க்கிறீர்கள்…?

மாற்றங்கள் மாறிக்கொண்டேதான் இருக்கிறது.  பண்டையக்  காலங்களில் மாணவர்கள் ஆசிரியர் வீட்டிற்கு நேரடியாக சென்று படிக்கும் சூழல்  இருந்தது.

அதுமட்டுமின்றி ஆசிரியர்களுக்கு தேவையான பணிவிடைகள் செய்வது அவர்களின் முதன்மையான வேலையாக இருந்தது. அதன் பிறகு பொது இடங்களில் கல்வி கற்றல், கோவில் மடம் போன்ற இடங்கள் அதன் பிறகு திண்ணைப்பள்ளிகளும் இருந்தது.

குடிசைகளில் பள்ளிகள் நடத்தப்பட்டு வந்தன. பிறகு ஓட்டுக்கட்டிடம், கான்கிரீட் சிமெண்ட் பூசப்பட்ட கட்டிடம், இப்பொழுது வானுயர்ந்த கட்டிடம் மின்சார வசதி, ஏ.சி வசதி என்று வந்து விட்டது.

இப்படி ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றார்போல் கல்வியின் சூழல் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், கல்வி என்பது ஒன்றுதான். அதைத்தான் போதிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் ஒரு இணக்கமான உறவுமுறை இப்பொழும் உள்ளது.

எப்பொழுது வேண்டுமென்றாலும் ஆசிரியர்களை சந்திக்கலாம். சகஜமாகப்பேசலாம். இது எல்லாம் கல்வியின் இன்றைய வளர்ச்சிப்படிநிலைகள்தான்.

கே: எடுத்துக்கொண்ட இலட்சியம் நிறைவேறி விட்டதாக உணர்கிறீர்களா?

வாழ்க்கை சக்கரம் அவரவரின் மனநிலைக்கேற்ப வேகமாகவோ, மிதமாகவோ, மிதவேகமாகவோ சுழலும். ஆனால், எனக்கு மிக வேகமாகத்தான் சுழன்றது என்றே சொல்வேன்.

என் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால் ஒரு நொடிப்பொழுது போல்தான் தெரிகிறது…

ஆனால், எத்தனையோ சாவல்களை, சாதனைகளை மனிதர்களை சந்தித்து விட்டேன்.

ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவம், அனுபவம் எனக்கு ஒரு நல்ல ஆனந்தத்தைக் கொடுத்தது.

நான் வெறுமனே இப்பள்ளியைத் தொடங்கியிருந்தால் என்னால் இத்தனை காலம் இப்பள்ளியைச் சிறப்பாக நடத்தியிருந்திருக்க முடியுமா? சிந்திக்க முடியவில்லை. இப்பள்ளி எனக்கொரு கனவு, என் மனத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நிறைய பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைப் பற்றி பெருமையாகப் பேசும் பொழுது எனக்குள் தோன்றும் பேரானந்தத்திற்கு அளவே இருக்காது.

நான் ஒருநாளும் இப்பள்ளியின் தாளாளராக நினைத்ததே இல்லை. இன்றுவரை நானும் மற்ற ஆசிரியர்கள் போல் பாடம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறேன்.

கே: உங்களின் வெற்றிக்குப் பின்னால் நீங்கள் பார்ப்பது…. ?

என்னைப்பற்றிய  மதிப்பீடுதான் என் வெற்றியாக நான் கருதுகிறேன்.

ஆரம்பத்தில் மூன்று பள்ளிகளை தனி ஒருவராக மேலாண்மை செய்து வந்தேன். இது எனக்கு சவாலாக இருந்தது. எங்கு செல்ல வேண்டுமென்றாலும், எனக்கென்று சொந்தமான இரண்டு சக்கர வாகனத்தில் தான் செல்வேன். எனக்கென்று நான் யாரையும் சார்ந்திருக்க வில்லை.  முடியும் என்ற எதிர்நீச்சல் தான் என்னை இந்தளவிற்கு பயணிக்க வைக்கிறது என்று நினைக்கிறேன். எந்த வேலையாக இருந்தாலும் அது மனதிற்கு பிடித்து செய்வேன். அதுபோல என் கணவரும், மகள்களும் என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக நான் கருதுகிறேன்.

கே: இன்றைய பெண்கள் கல்வி கற்பது எந்தளவிற்கு அவர்களுக்கு  உதவி செய்யும்… ?

பெண்களின் முன்னேற்றம் தான் சமுதாயத்தின் வளர்ச்சி என்பேன். ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே முன்னேற்றம் அடையும்.

ஆண்களைப் போலவே பெண்களையும் சரிநிகரமாக இப்பொழுது பெற்றோர்கள் நன்றாப் படிக்க வைக்கிறார்கள். பெண்ணாகப் பிறந்து விட்டாலே யாரையேனும் சார்ந்து வாழ்தல் அவர்களின் வாழக்கையோடு ஒன்றிணைந்ததாகவே இருக்கிறது.

இந்நிலை இப்பொழுது மாறிவிட்டதாக நான் கருதுகிறேன். பெண்களின் முகம் எல்லா துறைகளிலும் இன்று பதிவாகிவிட்டது. அதற்கு அவர்கள் கற்ற கல்வி மட்டுமே காரணமாக அமைகிறது.

எதிர்காலத்தை தான் சொந்தமாக தீர்மானிக்க பெண்கள் கல்விகற்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதுகிறேன்.

கே: இப்பள்ளியில் படித்து இன்று சாதித்த மாணர்வகளைப்பற்றி… ?

இங்கு படித்த  நிறைய மாணவர்கள், பல துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். இதை, அவர்களின் பெற்றோர்கள், சொல்லியும் மாணவர்களே நினைவு வைத்துக்கொண்டு இப்பள்ளியை வந்து பார்த்து விட்டு எங்களிடம் ஆசி பெற்று சொல்கிறார்கள்.

இதைத்தான் நான் மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கிறேன். சில நாட்களுக்கு முன்னர் கூட ஒரு மாணவனுக்கு வெளிநாட்டில் பணி கிடைத்தது என்பதால் அவர் இப்பள்ளிக்கு வருகை தந்து மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்து விட்டுப்போனார்.

அதுபோலவே நிறைய மாணவர்கள் டாக்டராக, பொறியாளராக ஆசிரியராக இருக்கிறார்கள். வெளிநாடுகளில் நிறையப்பேர் பணியாற்றி வருகிறார்கள்.

கே: குடும்பம் குறித்து … ?

எனது கணவர் திரு. K.S. முருகேசன் Shau Wallance & co கம்பெனியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது பள்ளியை வழி நடத்தி செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார். எனக்கு இரண்டு பெண்கள் மூத்த மகள் லாவண்யா M.C.A., M.Phil. Ph.d., Fathima Engineering கல்லூயில் துறைத்தலைவராக பணியாற்றி வருகிறார். மருமகன் திரு. S. ரங்கநாதன் தனியார் கம்பெனியில் துபாயில் பணியாற்றி வருகிறார்.  பேத்தி R. நிக்ஷிதா Bits Bilani – யில் பொறியியல் படிக்கிறார்.

இளைய மகள் ரம்யா ஸ்ரீ, M.B.A., மருமகன் S. விவேக், M.B.A., கணினித்துறையில் உள்ளார். பேரன் லக்ஷத் பிரணய் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்கள்.

கே: படித்த பிடித்த புத்தகங்கள், மனிதர்கள் பற்றி… ?

புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏற்றத்தைத் தரும் பொக்கிஷங்கள். அந்த வகையில் நான் நிறைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன். முக்கியமாக திருக்குறள், கீதை, தமிழறிஞர்களின் நாவல்கள், சிறுகதை என்று நிறைய புத்தகங்களை வாசித்துள்ளேன்.

மனிதர்கள் என்று பார்க்கும் பொழுது எனது பெற்றோர்கள் மற்றும் இப்பளிக்கு இடமளித்தவர் மற்றும் அவருடைய மகன்கள் என்று நிறையப்பேருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

கே: ஆசிரியரின் பணி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்… ?

ஒரு மாணவனை இச்சமுதாயத்தில் மதிப்பு மிக்கவனாக மாற்றுவதற்கு ஆசிரியரின் பங்கு மிகவும் முக்கியம்.

ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களையும் தங்களின் பிள்ளைகளைப் போல மிகுந்த அக்கறையோடு அரவணைக்க வேண்டும்.

இங்கு பயிலும் நிறைய குழந்தைகளின் பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருப்பார்கள்.  அவர்களால் குழந்தைக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுக்க முடியாது. இதனால் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே பாடம் முழுவதையும் கற்று கொடுக்க வேண்டும்.

வேலை செய்யும் பொழுது சலிப்போடும், வெறுப்போடும் வேலையை சொல்லிக் கொடுக்க கூடாது.

நாம்தான் எதிர்கால உலகின் உருவாக்கம். மிகப்பெரிய ஆயுதம் என்பதை ஒவ்வொரு ஆசிரியர்கள் மனதிலும் பதிய வைக்க வேண்டும்.

கே: உங்களைப் போல் தொழில் முனையும் பெண்களுக்கு நீங்கள் சொல்வது.… ?

“அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு

என்ற மடமையைப் புறக்கணிப்போம்”.

எத்தனை காலம் தான் இப்பழமொழியைச் சொல்லி பெண்களை வளர்ப்பார்கள். இந்நிலை மாறவேண்டும் என்றால் பெண்கள் தனியுரிமை சுதந்திரம் பெற வேண்டும்.

எதிலும் முடியும் என்று முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கைத்தத்துவம் சிறப்பானதாக அமையும்.

முதலில் ஒரு குறிக்கோளுடன் திட்டத்தைத் தீட்டிக் கொள்ளுங்கள். அதற்கு தகுந்தார்போல் பயிற்சி, முயற்சி, உழைப்பு போன்றவற்றைக் கொடுங்கள். வெற்றி கதவைத்தட்டும்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை நான்கும்தான் பெண்களின் குணம் என்பார்கள். இதோடு தொழில், திறன், வளர்ச்சி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கே: தோல்வியை சந்திக்காமல் யாரும் வெற்றி பெற முடியாது என்பது நிதர்சனம், இது பற்றி… ?

தோல்விதான் வெற்றியை தீர்மானிக்கும். எடுத்த முதல் தேர்விலேயே வெற்றி பெற்று விட்டால் அது அவரவரின் தகுதிக்கு ஏற்றார் போல் அமையும்.

ஆனால், அந்த வெற்றி அதிக அனுபவத்தை தராது என்று நினைக்கிறேன். எத்தனை முறை தோற்றாய் என்பது முக்கியமல்ல, எத்தனை முறை முயற்சித்தாய் என்பதுதான் முக்கியம்.

இதற்கு நிறைய அறிஞர்களை காரணம் காட்டலாம். வாஸ்கோடகாமா, ஆப்ரகாம்லிங்கன் போன்றவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தோல்வி வந்து விட்டது, எதை  செய்தாலும் தோல்விதான் மிஞ்சுகிறது என்ற வார்த்தையெல்லாம் வீணர்களின் வார்த்தை. இவர்கள்தான் இதைக் கண்டு துவண்டு போவார்கள். ஆனால், போராடப்பிறந்தவர்கள் தோல்வி என்பதை ஒரு ஏணிப்படியைப் போல எத்தனை சறுக்கல்கள் வந்தாலும் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும்.

கே: இப்பள்ளியின் சிறப்பு வாய்ந்த அம்சங்கள் குறித்து… ?

இப்பள்ளியானது 25 ஆண்டுகளுக்கு மேல் கிராமப்புறத்திலுள்ள பெற்றோர்களுக்கு நல்ல பள்ளியாக இருந்து வருகிறது.

ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களின் மேலும் தனிக்கவனம் செலுத்தி நல்லதொரு எதிர்காலத்தைக் கொடுத்து வருகிறார்கள்.

எழுத்துப் பயிற்சியை சிறப்பாக கொடுத்து ஒவ்வொரு பிள்ளைகளின் எழுத்தாற்றலை மேம்படுத்தி வருகிறோம்.

அரசு கொடுக்கும் ஊக்கத்தொகை முழுவதும் மாணவர்களுக்கு நேரடியாக கிடைக்கச் செய்கிறோம்.

தேர்வில், விளையாட்டில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முன்னிலையில் பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி அவர்களை சிறப்பித்து வருகிறோம்.

எங்கள் பள்ளி மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை செலுத்தும் சேவைப்பள்ளியாக இயங்கி வருகிறது என்று சொல்லாம்.

கே : தன்னம்பிக்கை பற்றி… ?

இந்த தலைப்பை முதலில் வைத்தற்கு ஆசிரியர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னம்பிக்கை என்ற ஒன்றிருந்தால் போதும் எதையும் வென்று விடலாம். இமயத்தையும் தொட்டு விடலாம்.

எப்போதும் ஒருவருக்குள் எதிர்த்து போராடும் ஆற்றலை உருவாக்கி, எதிர்கால லட்சியத்தை தனதாக்கிக் கொள்ள தன்னம்பிக்கை பெரிதும் உதவுகிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2016

என் பள்ளி
நம் உயர்வுக்காக சில வழிகள்….
பஞ்சதந்திரம் – 7
உயிர் உலைக் கூடம்
வெற்றி மனப்பான்மை கொண்டவர்களுக்கு மூன்று துணைகள்….
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு
மாதங்களில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்…
வாய்ச்சொல் வீரர்கள்
சிகரமே சிம்மாசனம்
ஜனநாயகத் திருவிழா – 2016
அமைதி
5 பேருக்கு நன்றி….
தன்னம்பிக்கை மேடை
முடியும் என்று புறப்படு ! ஊர் போற்றப் பெயரெடு !!
உள்ளத்தோடு உள்ளம்