தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு தேர்தலுமே ஒரு ஜனநாயகத் திருவிழாதான். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஜனநாயத் தேவதையின் மூச்சுக்காற்றுதான் தேர்தல். இந்தியாவில் பஞ்சாயத்து தலைவர் முதல் பிரதமர் வரை தேர்தலில் ஓட்டளிப்பதன் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியருக்கும் ஓட்டளிப்பது தலையாக கடமை. இதனை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் மக்கள் விரும்பும் உண்மையான மாற்றம் ஏற்படும்.
ஜனநாயக அமைப்பில் நம் எதிர்கால வாழ்க்கையை வரையறுக்கும் உரிமை நம்மிடம்தான் உள்ளது. நம் கையில் வழங்கப்பட்டுள்ள வாக்குச் சீட்டுதான் நம் வாழ்வை நிர்ணயிக்கும் துருப்புச்சீட்டு. ஒரு கணத்தில் நாம் தவறான முடிவெடுத்து, தவறான மனிதர்களுக்கு வாக்களித்தால் அதன் விளைவாக ஏற்படும் தீயவிளைவுகளை நாம்தான் ஐந்து ஆண்டுகளுக்கு அனுபவிக்க வேண்டி வரும். வரங்களோ, சாபங்களோ ஆண்டவன் அளிப்பது அல்ல. வாக்களிக்கும் முறையின் மூலம் நமக்கு நாமே வழஙக்கிக் கொள்கிறோம்.
ஓட்டளிப்பது எவ்வளவு அவசியமோ, அந்த அளவிற்கு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்ப்பது அவசியம். தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா…? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் சராசரி ஓட்டுப்பதிவு 60 சதவீதத்தை தாண்டுவதில்லை. அதாவது 40 சதவீத மக்களின் விருப்பம் எதுவென்று தெரியாமலேயே ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்தல் நடப்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருநாள் மட்டுமே. ஆகவே, அந்த தினத்தில் அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஓட்டுரிமையை நிறைவேற்ற முன்வரவேண்டும்.
ஜனநாயகத்தின் முதுகெலும்பாக விளங்குவது இந்தியத் தேர்தல் ஆணையம். இது ஒரு தன்னாட்சி அமைப்பு. 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் 60 ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் 2011ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் நாளை வாக்காளர் தினமாக அறிவித்து அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இத்தினத்தில் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாக்காளர் தின உறுதிமொழி. ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றம், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்க ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என்று உறுதி மொழிகிறோம்.
இந்தியாவின் ஜனநாயக்பாரம்பரியம் பல நூற்றாண்டு காலப்பழமையும், பெருமையும் உடையது. ஜனநாயகம் என்பதை குறிக்கும் ‘டிமாக்ரசி’ (Democracy) என்ற ஆங்கிலச் சொல் கிரேக்க மொழியிலிருந்து தோன்றியது. மக்களின் ஆட்சி என்பது இதன் பொருள். ஜனநாயகம் என்ற மக்கள் ஆட்சி.
தேர்தல் நடவடிக்கைகள்…
இந்திய வாக்குரிமைச் சட்டப்படி 18 வயது நிறைவடைந்த அனைவரும் சாதி, மதம், சமுதாயம், பாலினம் பிராந்திய வேறுபாடின்றி வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. எவ்வித அச்சமும் இன்றி விருப்பமுள்ள அனைத்து குடிமக்களும் சுதந்திரமாக வாக்களிக்க இந்தியத் தேர்தல் நடைமுறை உறுதி செய்கிறது. ஒரு சில நாடுகளில் இருப்பதைப் போல அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்தியாவில் இல்லை. இந்திôயவில் வாக்களிப்பது உரிமையே தவிர கடமை அல்ல.
இந்தியாவின் வாக்காளர்கள் எண்ணிக்கை பல நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தேர்தல்கள் சட்டப்படியே நடைபெறுவதுடன், பெரும்பாலும் அமையாகவே நடைபெறுகின்றன. பல ஆண்டுகளாக கடும் உழைப்பால் உருவாக்கப்பட் நடைமுறைகள் தேர்தல் அனுபவங்கள், தேர்தல் பணியாளர்களுக்க தீவிர பயிற்சி அளித்தல், தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பு ஆகியவற்றால் தேர்தல்களை அமையாக நடத்துவது சாத்தியமாகிறது.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் தயாரிக்கிறது. தேர்லில் அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாக வசதியாக, அறுவடை காலம், திருவிழாக்கள், பள்ளி, கல்லூரிகள் தேர்வு, தட்பவெப்ப நிலை, அமைதி நிலைமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டே தேர்தல் அட்டவணை தயாரிக்கப்படுகிறது…
வாக்கு சாவடிகள்…
வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் வெகு தொலைவு பயணம் செய்வதையோ அல்லது நீண்ட தூரம் நடந்து செல்வதையோ தவிர்க்கும் வகையில் எவ்வளவு குறைந்த தூரத்தில் அமைக்க முடியுமோ அவ்வளவு குறைந்த தூரத்தில் வாக்குச் சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் அக்கறை செலுத்துகிறது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சமாளிக்கக் கூடிய அளவுக்க வாக்காளர்கள் ஒதுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் சராசரியாக 1000 முதல் 1200 வரை வாக்காளர்கள் ஒதுக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியை அமைக்கவும், அதிகாரிகளும், பொருட்களும் தேவைப்படுவதுடன் அனைத்து வகையான கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படுகிறது. தேர்தல் நாளன்று ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஐந்த அதிகாரிகள் அனுப்பப்படுகிறார்கள். வாக்குச்சீட்டுகள், வாக்குப்பதிவுகள் எந்திரங்கள், அழியாத மை மற்றும் இதர பொருட்களும் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் அனுப்பப்படுகிறது.
தேர்தல் சின்னங்கள்
இந்திய தேர்தலில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு அம்சம் அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் சின்னங்களும் ஒதுக்கப்படும் விதமாகும். தேர்தலில் வேட்பாளர்களுக்க சின்னம் ஒதுக்கப்படுவது நிரந்தமான ஒன்றாகி விட்டது. தொடக்கத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதற்குக் காரணம், கல்வியறிவற்ற மக்களால் வேட்பாளர்களின் பெயரை படிக்க முடியாது என்பதால் மற்றவர்களின் துணையின்றி ரகசியமாக வாக்களிக்க வசதியாகவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களே அடையாளமாகி விட்டன. பொதுமக்களைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளை அடையாளம் காணவும், வேட்பாளர்களை வேறுபடுத்திக்காட்டவும், தேர்தல் சின்னங்கள்தான் உதவுகின்றன.
தேர்தல் பிரசாரங்களின்போது பறவைகளும், விலங்குகளும் கொடுமைப்படுத்தப்படுவதைத் தடுக்க அவற்றை தேர்தல் சின்னங்களின் பட்டியலிலிருந்து நீங்குவதென 1991ம் ஆண்டில் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இப்போது சிங்கம், யானை ஆகிய இரு விலங்குகள் மட்டுமே அவற்றை கொடுமைப்படுத்த முடியாது என்பதால் தேர்தல் சின்னங்களாக உள்ளன.
வாக்காளர்கள் தனியார்துறை, அரசுத்துறை என்று எவ்விதப்பணியில் இருந்தாலும் அவர்கள் வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. சில பிரிவினர் மட்டும் தபாலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில்தான் வாக்களிக்க வேண்டும். இராணுவத்தினர் மட்டும் பிரதிநிதிகள் மூலம் வாக்க வகை செய்யப்பட்டிருக்கிறது.
தேர்தல் கால ஒலிபரப்பு…
வானொலியும், தொலைக்காட்சியும் சக்தி வாய்ந்த ஊடகங்கள். பொதுத்துறை நிறுவனமான பிரசார்பாரதி நடுநிலையுடன் செயல்பட கடமைப்பட்டுள்ளது. எனவே தேர்தல் காலத்தில் ஒலிப்பரப்பப்படும் நிகழ்ச்சிகள் எதுவும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சாதகமாக இருந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிமுறை தொடங்குகிறது. அதன்பிறகு தேர்தல் முடியும்வரை ஒலிப்பபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அரசியல் சார்புடைய கருத்துக்கள் தவிர்க்கப்படும். அரசியல் கட்சியினரோ, அவர்களோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடையவர்களோ பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பபட மாட்டாது.
வலிமை மிக்க வாக்குறுதியைப்பயன்படுத்த வாக்குச்சாவடிக்குச் செல்வதற்கு முன்பு, நிதானமாகக் கொஞ்சம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். பணத்திற்காகவோ, பரிசுப்பொருளுக்காகவோ, விலைமதிப்பற்ற ஓட்டுக்களை விற்கக் கூடாது. இது நாட்டை விற்பதற்கு சமம். ஐந்து ஆண்டுகால ஆட்சியில் தவறு நிகழ்ந்தால் வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத ஒவ்வொருவரும் அதற்குப் பொறுப்பு.
நம்மில் பலர் வரிசையில் வெகுநேரம் நிற்க வேண்டுமே என்று சலிப்பில் வாக்களிக்க கொடுத்த விடுமுறையை வேறு வேலைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சினிமாவுக்கு டிக்கெட் எடுக்கையில் கூட்டம் இருக்குமே என்று போகாமல் இருப்பதில்லை. ஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும் ஒரு உன்னதப்பணிக்காக வரிசையில் சற்று நேரம் காத்திருப்பதில் தவறில்லை. பொறுமை இல்லாமல் புறக்கணிப்பவர்களுக்கு இந்த புரிதல் அவசியம்.
ஓட்டுப்போடாமல் மக்கள் தங்களது வாக்குரிமையை அலட்சியப்படுத்தினால் வெளிநாடுகளில் உள்ளது போல் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வரவேண்டி இருக்கும். வாக்களிக்காதவர்களுக்கு சிறை தண்டனை வழங்க வேண்டி வரும். அத்தகையதொரு நிலையை மக்கள் வரவழைத்துக் கொள்ளக்கூடாது.
நம்முடைய ஒரு வாக்கால் எல்லாம் மாறிவிடப்போகிறதா…? என்று சிலர் எண்ணக்கூடும். நாம் நினைப்பதையே ஒரு வேட்பாளர் நினைத்தால் நம் வீடு தேடி வருவார்களா…? என்று சிந்திக்க வேண்டும். ஒரு சிறு நெருப்புத் துண்டும் பெரும் நெருப்பாய் மாறி அழிக்கும். பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் அமைகிறது.
இவ்வளவு அழுக்கை அகற்ற ஒரு துளி போதும் என சலவை விளம்பரங்களில் வருவது போல நம் விரலில் வைக்கப்படும் ஒரு துளி மை, சமுகத்தின் அழுக்கை நிச்சயம் சலவை செய்துவிடும். நாம் அதனை சரியாகப் பயன்படுத்தினால். நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் தனது வாக்குரிமையை தவறாமல் முறையாகப்பயன்படுத்த வேண்டும்.
வெயில் அடித்தால் வியர்வை வழியும். மழை பொழிந்தால் மேனி நனையும் என்று வாக்குச்சாவடிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் தொலைந்து போனால் நட்டம் நமக்குத்தான். எனவே, வாக்காளர்கள் எதற்கும் கலங்காமல், மயங்காமல், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை பொட்டில் அடித்தாற் போல் புரிய வைத்து, வாக்களிப்பது புனிதமான கடமை என்று தேர்தல் நாளன்று பெருமிதத்தோடு வாக்குச்சாவடி செல்வோம். புதிய அரசியல் மாற்றத்துக்கு அடித்தளம் அமைப்போம்….