ஆட்டிசம்
ஆட்டிசக் குழந்தையின் வளர்ச்சிப் பாதையின் தன்மைகள்
சமூக வாழ்வுக்குத் தேவையான ஆற்றல்கள் இல்லாமை
இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் சமவயது உடைய குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அதை மேலும் வளர்க்கும் வழிமுறைகள் அறியாதவர்களாக இருப்பார்கள். அதற்காக நல்ல உறவை உருவாக்கிக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை என்று கூறிவிட முடியாது. அதற்கான வழிமுறைகள் அவர்களுக்குத் தெரியாது. சமூக உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல்களை அவர்களுக்குக் கற்றுத்தருவது முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பணி ஆகும்.
தொடர்பு கொள்ளும் ஆற்றல்கள் இல்லாமை
ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பர். இவர்களில் பெரும்பான்மை யோர் பேசும் திறன் அற்றவர்கள். அப்படியே ஒருகால் பேசும் திறன் இருந்து மொழி ஆற்றலும் வாய்க்கப்பெற்றவர்கள் கூட அவற்றைத் திறம்பட கையாளும் வழி தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள். மேலும் பேச்சு மற்றும் முகபாவனைகள், சைகைகள் மூலம் தங்கள் எண்ணங்களை உணர்த்துவதற்கோ அல்லது மற்றவர்கள் உணர்த்துவதைப் புரிந்துகொள்ளவோ இயலாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டுக்கான திறனோ ஆர்வமோ இல்லாமை. சாதாரணமாக விளையாட்டின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமும் கற்பனைத் திறனும் ஆட்டிசக் குழந்தைகளிடம் காணப்படுவதில்லை. தாம் பார்ப்பதைப் போலவே பாவித்துக் கொண்டு அவற்றினை விளையாட்டில் புகுத்தி மகிழும் (Pretend Play) கற்பனைத்திறன் இல்லாதவர்கள் இவர்கள். புலனியக்க ஒருங்கிணைப்பில் உள்ள கோளாறினால் (Disorder of Sensory Integration) சிறிதும் சலிப்படையாமல் தொடர்ந்து ஒரே மாதியான விளையாட்டுகள், அங்க அசைவுகளில் இந்தக் குழந்தைகள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகள் பொதுப்படையானவை, நபருக்கு நபர் மாறுபடக் கூடியவை.
ஆட்டிசத்தினால் பாதிக்கப்படும் ஒரு நபர் அந்தக்கோளாறு இருப்பதையே அறியாது தன் வாழ்க்கையை முடிப்பதுண்டு. இந்தக் குறைபாட்டினால் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
ஆட்டிசத்தின் அறிகுறிகளைக் கண்டறிதல்
ஆரம்பக் கட்டத்திலேயே ஆட்டிசம் இருப்பதைப் பரிசோதித்து கண்டறிதல், சிகிச்சைக்கும் மறுவாழ்வு திட்டங்களை மேற்கொள்வதற்கும் மிக அவசியமானது. மற்றநோய்களைப் போல் படிப்படியாக ஆய்ந்து அறிய உதவும் முறையான பரிசோதனைகள் மற்றும் உடல்ரீதியான அறிகுறிகள் ஆட்டிசத்திற்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குழந்தை நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அதற்கு இருக்கும் அல்லது இல்லாத சில தன்மைகளைக் கவனித்துதான் ஆட்டிசம் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
நோய் பரவல் தன்மை
( Epidemiology )
பொதுவாக எங்கும் வியாபித்துக் காணப்படும் ஆட்டிசம் என்ற கோளாறு பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை அதிகம் தாக்குவது தெரிய வந்துள்ளது. இக்குறைபாடுள்ள குழந்தைகளில் ஆண்குழந்தைகள் மற்றும் பெண்குழந்தைகளின் விகிதம் 4 : 1 என்பது கண்டறியப்பட்டுள்ளது இந்தியாவில் மட்டும் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் ஆட்டிசத்தினால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனாலும், ஆட்டிசம் பற்றிய எந்த விவரமும் பொதுமக்களை இன்று வரை அதிகளவில் சென்றடையவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும்.
காரணங்கள்
அமெரிக்க ஆய்வு
ஆட்டிசம் பாதிப்பிற்கு எந்தக் காரணமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் இது குறித்து பல கோணங்களிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு குழந்தைக்குப் பின் குறுகிய இடைவெளியில் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மேற்கொள்ளப் பட்ட ஆரம்ப கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. முதல் குழந்தை பிறந்த பிறகு, குறைந்தபட்சம் 3-ஆண்டுகளுக்குப் பின் பிறக்கும் குழந்தையை விட, 2-ஆண்டுகளுக்குள் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிச ஆபத்து அதிகம் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அளவுக்கு மீறிய மனஉளைச்சல், மூன்று மாதம் முடிந்த தருணத்தில் ஏற்படும் இரத்தக்கசிவு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் நச்சுக்களின் தாக்கம் போன்றவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை பாதிப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது. குரோமோசோம் கோளாறுகள் (Chromosome 16ல் 11.2 . 15 வ் 24. 11ல் 12 – ல்13) மற்றும் பரம்பரை அல்லது மரபணுக் கோளாறுகளும் காரணங்களாக வகைப் படுத்தப்படுகிறது.
மேலும், 60% ஒற்றைக் கருமுட்டையை (Monozygotic twins) சேர்ந்த இரட்டை குழந்தைகள் இக்கோளாறினால் பாதிக்கப்படுகின்றன. இரட்டைக் கருமுட்டையை (Dizygotic twins) சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் பாதிக்கப்படுவதில்லை. தடுப்பூசி போடுவதினால் இக்குறைபாடு ஏற்படுகிறது என்பது இதுவரை ஆராய்ச்சியில் நிரூபிக்கப்படவில்லை. குறைந்த காலத்தில் பிறத்தல் மற்றும் குழந்தைபருவ (Schizophrenia) மனச்சிதைவு போன்ற கோளாறுகளும் இவர்களுக்கு இணைந்து காணப்படலாம்.
நோயியல் (Pathalogy) குழந்தை பிறந்தவுடன் 2 – மாதங்கள் வரை தலையின் சுற்றளவு சரியான அளவிலோ அல்லது சிறிது குறைந்த அளவிலோ காணப்படும். மேலும் 6 – 14 மாதங்களுக்குள் இயல்பு நிலையை விட தலையின் சுற்றளவு அதிகமான வளர்ச்சியடைந்து காணப்படும். 2-4 வயதில் மூளை யிலுள்ள பாகங்களின் பரிமாண அளவு அதிகரித்துக் காணப்படும். மூளையின் சில பாகங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. அவை பெரும்பாலும் சிந்தனை திறன், மொழி, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மற்றும் சமூக உறவுகளைச் செயல்படுத்தும் பாகங்கள் ஆகும்.
வியாதி நிர்ணயம் (Diagnosis)
ஆட்டிசத்தின் கோளாறுள்ள குழந்தைகளை குழந்தை நல மருத்துவர், மனநல மருத்துவர், தொழில் வழி பயிற்சியளார், பேச்சு பயிற்சியாளர் மேலும் பெற்றோர்கள் முக்கிய அங்கமாக நிர்ணயம் செய்வர். இவர்கள் பலவிதமான அளவுகோல்களை (அறிவுத்திறன் சம்பந்தப்பட்ட, புலனியக்க ஒருங்கிணைப்பு, சமூக உறவு, கல்வி, விளையாட்டு) பயன்படுத்தி இக்கோளாறினை உறுதி செய்வர்.
தீர்வு
ஆட்டிசத்திற்கு மருத்துவ தீர்வு என்பது கிடையாது. ஆரம்பக்கட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து, அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்த முள்ளதாகவும் செய்து கொள்ள உதவலாம். இதற்கான வழிமுறைகள் குறைபாடுகளின் தன்மையைப் பொறுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பொறுத்தும் வேறுபடும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே இந்தக் குறைபாட்டைக் கவனித்து ஆவன செய்வது பெரிதும் உதவும் என்றாலும், அதற்காக தாமதமாகச் செய்தால், பலன் இருக்கப்போவதில்லை என்று அசட்டையாகவும் இருந்து விடவும் கூடாது. தாமதமாகவாவது செயல்படுவது, செயல்படாமலேயே இருப்பதைக் காட்டிலும் சிறந்தது.
இக்குழந்தைகளுக்குக் குழந்தை நல மருத்துவர், தொழில் வழி பயிற்சியாளர், மனநல மருத்துவர், பேச்சுப் பயிற்சியாளர், சிறப்பு ஆசிரியர், சமூக ஆர்வலர் மேலும் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியம் ஆகும்.
(உ.ம்.) தொழில் வழி பயிற்சியாளர், இக்குழந்தைகளின் புலனியக்க ஒருங்கிணைப்பில் (Disorder of sensory Integration) உள்ள கோளாற்றினை சரிசெய்வதன் மூலம் இக்குழந்தை களின் அன்றாட தேவைகளை வெளிப்படுத்தவும், செய்து கொள்ளவும், மேலும் அறிவுத்திறன், கல்வி, விளையாட்டு, நல்லொழுக்கம் போன்றவைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் முடியும்.
மேலும் இத்தொழில் வழி பயிற்சியாளர், சிறப்பு ஆசிரியர், பேச்சுப் பயிற்சியாளர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் ஒரு குழந்தையினை நல்வழிப்படுத்த முடியும்.
சிறப்பு ஆசிரியர்கள், இக்குழந்தைகளுக்குச் சிறப்பான சில விசேஷ வழிமுறைகள் மூலம் கற்றுத் தருவதனால் இக்குழந்தைகளால் சிறப்புப் பள்ளி முதல் இயல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல இயலும். பேச்சுப் பயிற்சியாளர் இக்குழந்தைகளுக்கு ஆரம்பகால கட்டத்திலேயே பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு வார்த்தை முதல் பல வாக்கியங்கள் வரை பேச இயலும்.
தன்னைச் சுற்றி நடக்கும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் மூழ்கிக் கிடக்கும் இக்குழந்தைகளுக்குச் சரியான தீர்வு என்னவென்பது குறித்து மருத்துவத்துறையினரால் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை என்பது தான் வருந்தத்தக்க விஷயம்.
0 comments Posted in Articles