Home » Articles » சின்னச் சின்ன விசயங்களில் நாம் கவனம் செலுத்துகிறோமா?

 
சின்னச் சின்ன விசயங்களில் நாம் கவனம் செலுத்துகிறோமா?


ராமசாமி R.K
Author:

Great things are not done by impulse

but by a series of small things brought together

– Vincent Van Gogh

 

The spur of delight comes in small ways and in small things

– Robert L. Stevenson

 

Attitude is a little thing that makes a big difference

– Winston Churchill

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாங் கேடு.

ஒருவனிடம் தற்போதுள்ள உட்பகையானது எள்முனை அளவினைவிட சிறிதாக இருந்தாலும் கூட அது எதிர்காலத்தில் அவனுடைய பெருமையையும், புகழையும் பெரிய அளவில் கெடுக்கும் தன்மையுடையதாக அமையும்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.

மிகச் சிறிய அளவு எடையுடைய மென்மையான மயில் இறகுகளை ஒன்று சேர்த்துக் கட்டி அளவுக்கு அதிகமாக வண்டியில் பாரமாக ஏற்றினால் அந்த எடையைத் தாங்காது வண்டியினுடைய அச்சு முறிந்து விடும். – வள்ளுவர்

சிறு துளி பெரு வெள்ளம்

சிறு துரும்பும் பல் குத்த உதவும். – பழமொழி

நாம் சின்ன சின்ன விசயங்களில் கவனம் செலுத்துகிறோமா…? என்பது ஒரு முக்கியமான கேள்வி. பல நேரங்களில் பல காரணங்களினால் நம்மை சுற்றியுள்ள சின்ன விசயங்களையும் நாம் கவனிக்காமல் விட்டு விடுவதுண்டு. சின்ன விசயங்கள் தானே என்று கவனம் இல்லாமல் இருந்து விடுகிறோம். சில நேரங்களில் அந்தக் கவனக்குறைவு பெரும் இழப்பிற்குக் காரணமாக அமைந்து விடுவதுண்டு.

ஒரு போர்க்களத்தில் போர் தொடங்குவதற்கு முன்பாக குதிரையின் காலிலுள்ள லாடத்தைப் பிடித்துக் கொள்கிற சிறிய ஆணி தவறி விடுகிறது. அந்தக் குதிரை வீரன் அந்தச் சின்ன ஆணியைக் கவனிக்காமல் விட்டு விடுகிறான். போர் தொடங்குகிறது. இந்தச் சின்ன ஆணி இல்லாததால் லாடம் விழுந்து விடுகிறது. லாடம் விழுந்து விட்டதால் குதிரை வேகமாக  ஓட முடியவில்லை. குதிரை வேகமாக ஓட முடியாததால் போரிலே குதிரைவீரனால் வேகமாகப் பயணிக்க முடியவில்லை. குதிரை வேகம் குறைவதால் போர்வீரனுடைய வேகம் குறைகிறது. போர் வீரனுடைய வாள் வீச்சு குறைவதால் போரிலே தோல்வி ஏற்படுகிறது. இந்தப் போரிலே ஏற்பட்ட தோல்விக்கு போர் வீரனுடைய திறமையின்மை காரணமல்ல. குதிரையும் காரணமல்ல. லாடத்தை தாங்கிப் பிடிக்கின்ற சிறிய ஆணி இல்லாததுதான் காரணம். ஆணி சிறியதுதான். ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்பு மிகப்பெரியது.

ஒரு சிறிய பாய்மரக்கப்பல் அதன் அடிப் பாகத்தில் சிறிய ஓட்டை இருந்துள்ளது. யாரும் அதைக்கவனிக்கவில்லை. நடு கடல் வழியே அதன் பயணம் போகிறது. அந்த ஓட்டை வழியாக கடல்நீர் உள்ளே புகுகிறது. கப்பல் கவிழ அந்தச் சிறு ஓட்டை காரணம் ஆகிறது. அந்தச் சின்ன ஓட்டையைக் கவனித்து பராமரித்து இருந்தால் கப்பல் மூழ்குவதைத் தவிர்த்திருக்கலாம்.

ஒரு கார் புறப்படுவதற்கு முன்பு ஓட்டுநர் கார் சக்கரத்தில் காற்று இருக்கிறதா…? இல்லையா…? என்பதைப் பார்க்காமல் விட்டு விட்டால் வண்டி நடுவழியிலேயே நிற்கும் சூழல் ஏற்படும். பயணம் தடைபடும் அதைப்போலவே, காரில் ஓட்டுநருக்கு முன்னால் உள்ள மீட்டரில் எரிபொருள் இருக்கிறதா…? இல்லையா…? என்று காட்டும் மீட்டர் உள்ளது. இதை, கவனிக்காமல் வண்டி ஓட்டிச் சென்று டீசல் இல்லாத காரணத்தினால் நடு வழியிலே கார்கள் நின்ற கதைகள் நிறைய உண்டு.

வீட்டைப் பூட்டிவிட்டு புறப்படும் போது எலக்டிரிக் சுவிட்சுகள், பேன், டி.வி., பிரிட்ஜ் இவைகளை பலபேர் அணைப்பதை சின்ன விசயமாக மறந்து விடுகிறார்கள். அதனால், பாதிப்பு அதிகமாக உண்டாகும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. திறந்து விட்ட தண்ணீர் குழாயை மூட மறந்து போய் டி.வி., சீரியலில் மூழ்கிப்போன பெண்களினால் எற்பட்ட இழப்பு குறைவானதல்ல.

சின்ன தொடு கைபேசியை கவனமில்லாமல் தன் பெண் குழந்தைகளுக்கு வாங்கித் தந்தால் அந்தப் பெண் குழந்தைகளுடைய வாழ்க்கை சீரழிந்து போன நிகழ்வுகளும் ஏராளம்.

வண்டி ஓட்டுநர், பள்ளி வேனில் ஒரு சிறு பலகையிலிருந்த ஆணியைக் கவனிக்காமல் விட்டதால், அந்தப்பலகை நகர்ந்து அந்த ஓட்டை வழியாகப் பள்ளிக்குழந்தை விழுந்து இறந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியதையும் பார்த்திருக்கிறோம். ஒரு பெண் ஓடுகின்ற பேருந்தின் ஓட்டையில் கீழே விழுந்து தப்பித்த நிகழ்வையும் பார்த்திருக்கிறோம்.

ஒரு எல்.கே.ஜி., படிக்கின்ற குழந்தையை காலையில் பள்ளிக்கு அவசரம் அவசரமாக புறப்பட வைக்கும் போது அந்த தாய் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் பட்டுப்பாதத்தைக் காலணிக்குள் நுழைக்கிறாள். காலணிக்குள் ஒரு சிறு தேள் இருப்பதை தாய் கவனிக்கவில்லை. உள்ளே இருந்த தேள் குழந்தையைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. குழந்தை தேள்கடி விஷத்தால் இறந்து விடுகிறது. குழந்தையின் இறப்பிற்கு கவனமின்மை காரணமாக அமைகிறது. அந்தத் தாய் காலணியை குழந்தைக்கு அணிவிப்பதற்கு முன்பு சுத்தம் செய்திருந்தால் அந்த உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். இது உண்மையில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வு. எல்லோருக்கும் ஒரு பாடமாக அமைந்தது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2016

என் பள்ளி
நம்மை நகர்த்தும் நம்பிக்கை
வந்தோரை வாழவைக்கும் வாழ்வியல் பூங்கா
இளமையின் அவசியம்
இள வயதில் உடல் பருமன்
ஆன்மீகம் அறிவோம்
பயன்பட வாழ உறுதி எடு! பாரதம் போற்றப் பெயர் எடு!!
பிரச்சனைகள் தரும் பாதிப்புகள்
பாரிஸ் பருவநிலை மாநாடு-2015
சின்னச் சின்ன விசயங்களில் நாம் கவனம் செலுத்துகிறோமா?
ஒரு பானை சோற்றுக்கு
மழை
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்