Home » Articles » நுனிப்புல்

 
நுனிப்புல்


அனந்தகுமார் இரா
Author:

கதிரேசன் சமீப காலமாக இ.ஆ.ப. முதன்மை தேர்வில் ‘தர்மம்’ எனும் பாடத்திட்டத்தில் வகுப்பெடுத்து வருகின்றார்.  நான்கு வகுப்புகள் எடுத்த அனுபவம் அலாதியானது.  தர்மம் என்று  ‘எதிக்ஸ்’ ஐ மொழி பெயர்ப்பதே ஆழ்ந்த சிந்தனைக்கு உரிய விஷயம்.  பணியிலே நியாயம் இருப்பதை விதிமுறைகள் உறுதி செய்யக்கூடும்.  ஆனால் அதில் ஒரு தர்மம் இருக்க வேண்டும். நாலு நல்லது கெட்டது தெரிஞ்சு செயல்பட வேண்டும் என்று சொல்வதை சுருக்கமாக தத்துவ ஞானிகள் கூறும் தகவல்களோடு சேர்த்து எழுதுகின்றமாதிரியான பாடத் திட்டம், இந்த நான்காம் தாளுக்குரியது.

சாக்ரடீஸ் முதல் இராபின் சர்மா வரை சரமாரியாக வகுப்பில் வந்து போகின்றார்கள். அரிஸ்டாடில் மாணவர்களுடன் நடந்து கொண்டே பாடங்களை விவாதிப்பாராம். பிளேட்டோ தனது ரிபப்ளிக் என்கின்றபுத்தகத்தில் சாக்ரடீஸ் உடன் விவாதித்த பொருட்களை  ‘டயலாக்’ என்கின்ற இருவர் பேசுகின்ற உத்தியிலேயே எழுதி இருப்பார்.  இவ்வாறு அவர்கள் கூறியது எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் மேற்கோள் காட்டி பழைய கேள்விகளுக்கான பதில்களாக கூறிச் சென்றார்.  வகுப்புக்கள் முடிந்த பிறகு அதனை கேட்டுக் கொண்டும், கவனித்துக் கொண்டும் (இரண்டுக்கும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது) புரிந்து கொண்டும் (மூன்றும் வேறு, வேறு) இருந்த போட்டித் தேர்வர்கள் கலவையான பின்னூட்டம் (Feed back) கொடுத்திருந்தனர்.

சிலபேர் பாராட்டினர். சிலருக்கு புரியவில்லை.  சிலருக்கு உச்சரிப்பு எட்டவில்லை.  சிலருக்கு குரலே எட்டவில்லை. ஆனால் வகுப்பெடுத்தவருக்கோ? மிகுந்த உற்சாகம்.  சொல்லித் தருவது போல சந்தோஷம் வேறெதிலும் இல்லை.  கச்சிதமாகப் புரிந்து கொள்ளும் ஒரே ஒரு மாணவன் கிடைத்தாலும் அது எதிர்கால இந்தியாவிற்கான ஏராள சேவையாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதை புரிந்து கொண்டோம்.  பாட மேற்கோள்கள்  ‘கியாஸ்’ ‘chaos’ தியரியைப் போல ஒன்றுக்கொன்று தொடர்பின்றி தோரணம் போல தொங்க விடப்பட்டு இருப்பதாக கணிசமானவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.  அதைத்தான் ‘நுனிப்புல்’ என்று வகைப்படுத்துகின்றோம். ஒரு மணி நேர வகுப்பில் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் முழுமையாக சொல்லிவிட முடியாது.  ஆனால் சொன்ன எல்லாவற்றையும் முழுமையாக சொல்லி விடலாம்.  கடந்த வாக்கியம் இரண்டு முறைபடிக்கப்பட வேண்டிய பஞ்ச் டயலாக்.  ஒரு கேள்வியை எடுத்துக்கொண்டு அதனோடு மல்லுக்கட்டி வெல்லும் மனோதத்துவ மல்யுத்தத்தை கண் முன்னர் நடத்திக் காட்டிய வகுப்பு கதிரேசனுடையது.  வகுப்பறைக்குள் தேர்வு நாளை வரவழைத்து ஒரு கேள்வியை சந்திக்கும்பொழுது கலவரமடையாமல் வரவேற்று . . . அதனை பகுதி பகுதியாக கழற்றி மேய்ந்து விளக்கம் கொடுத்து விடையை அடைகின்ற வித்தையை விந்தையான முறையில் நிகழ்த்திக் காட்டியபொழுது ஆச்சரியக் குறியால் உயர்ந்த புருவங்கள் நிறைய.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2015

என் பள்ளி
விவேகம் விடியலைத் தருகிறது
திட்டமிட்டு
கல்வியும் கலையும்
உங்களுக்காக சில உண்மைகள்
நட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி?
எதிர் மறை மனிதர்கள்
தூக்கமும் ஊக்கமும்
வாழ்வாதாரத்தைப் பெருக்கு…! வாழ்க்கைத் தரத்தை உயர்த்து…!!
இளைய தலைமுறை பற்றி இது விமர்சனமல்ல, ஆதங்கம்..
கன்னத்தின் அழியாத அழகு மச்சங்களே பேச்சுக்கலை
அடிப்படை உயிர்க்காப்பு வழிமுறைகள் (Basic Life Support)
எல்லை தாண்டு
நுனிப்புல்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்