Home » Articles » பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்

 
பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்


ராமசாமி R.K
Author:

‘அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்’

நல்லதையே விரும்பி இனிய சொற்களை,    பேசி வந்தால் தன்னிடம் உள்ள பாவங்கள் குறைந்து அறம் வளர்ந்து பெருகும்.

‘நயன்ஈன்று நன்றிபயக்கும் பயன் ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்’

மற்றவர்களுக்கு நல்லப்பயனைத்தந்து நன்றி பாராட்டும் சொற்கள்

எப்போதும் எக்காலத்தும் சொல்பவனுக்கு நன்மையே பயக்கும்.

 -திருக்குறள்

தவம் என்பது மூன்று வகைப்படும்

  1. உடலால் செய்யப்படும் தவம்
  2. வாக்கால் செய்யப்படும் தவம்
  3. மனதால் செய்யப்படும் தவம்

பெரியோர்களுக்கும், குருக்களுக்கும், பெற்றோர்களுக்கும் செய்யும் சேவை, உடல் சுத்தம், ஒழுக்கம், பிரம்மச்சரியம் உடலை வருத்தி கடும் உழைப்பு, மற்ற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமை, சோம்பல் இன்மை, தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் ஆகியவை உடலால் செய்யப்படும் தவம்.

நல்ல நூல்களைப் படிப்பது, உண்மையைப் பேசுவது, மற்றவர்களைப் புண்படுத்தாமல் பேசுவது, பிறருக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் நன்மைதரக்கூடிய இனிய சொற்கள் பேசுவது, வாக்குதவறாமல் இருப்பது, அளவறிந்து பேசுவது ஆகியவை நாவினால் செய்யப்படும் வாக்குதவம்.

உள்ளத்தில் அமைதி, எண்ணங்களிலே தூய்மை, மற்றவர்களுக்கு நல்லதே செய்ய வேண்டும் என்ற நினைப்பு, மௌனநிலை, தன்னடக்கம் என்ற புலடனக்கம், ஆணவத்தை அகற்றி அடங்குதல், மனிதநேயம், மற்ற உயிர்களை நேசித்தல், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை, தர்மமும் தானமும் செய்யும் எண்ணம், பணிவுடன் நடந்து கொள்ளுதல், பாசம், கருணை கருத்து தூய்மை, எண்ணங்களிலே ஜோதியின் சிறகுகள், வாழ்விலே பொன் மயமான மெருகு, பிறருக்கு கேடு நினைக்காமல் இருப்பது, புனிதமான தெய்வீக சிந்தனைகள் இவை மனத்தால் செய்யப்படும் தவம்.

இந்த மூன்று தவங்களும் முக்கரண தவம் என்று பகவத்கீதை சொல்கிறது. கீதையின்படி, இனிய சொற்களால் பாராட்டிப் பேசுவது ஒரு தவம். மற்றவர்களைப் பாராட்டுகிற குணம் ஓர் உன்னதமான குணம். விலைமதிக்க முடியாத இந்தக் குணம் எல்லோருக்கும் இயல்பாக அமைவதில்லை. துரதிஷ்டவசமாக நமது சமூகத்தில் ஒருவரைப் பாராட்டிப் பேசுவது குறைந்து வருகிறது. பல நேரங்களில் நன்றி சொல்லக்கூட மறந்து விடுகிறோம். பாராட்டிப் பேசுவதற்குக் கூட தயங்குகிறோம். சில சமயங்களில் அந்தப் பழக்கத்தை தவிர்த்து விடுகிறோம்.

நம்மை நாமே பாராட்டிக் கொள்வதும், நம்மை மற்றவர்கள் பாராட்டுவதும் குறைந்து வருகிறது. அங்கீகாரம் தருவதும் சமுதாயத்தில் குறைந்து வருகிறது. குடும்பங்களில், தொழில்புரியும் இடங்களில், விளையாட்டுத்துறை, கலைத்துறை, அறிவியல்துறை, விவசாயத்துறை, இலக்கியம் போன்ற எல்லா இடங்களிலும் இந்தப் பாராட்டும் குணம் குறைந்து வருவது வருத்தத்திற்குரியது.

நம்மை நாமே அங்கீகரித்துக் கொள்வதில் குறைவு செய்கிறோம். தாழ்வு மனப்பான்மை காரணமாக நம்மை நாமே பாராட்டிக் கொள்வதும் நம்முடைய வெற்றியை பெருமைப்பட்டுக் கொள்வதும், அங்கீகரித்துக் கொள்வதும் போதுமானதாக இல்லை. அதையும் தவிர்த்து விடுகிறோம்.

வெற்றிகரமாக முடிக்கப்பட்ட ஒரு பணிக்காக நம்மை நாமே பாராட்டிக் கொள்கிறோமா? முன்னிலைப்படுத்திக் கொள்கிறோமா? என்பது மிகப்பெரிய கேள்வி?

படிக்கிற ஒரு மாணவனை அல்லது வியாபாரத்தில் நன்கு வேலை செய்யும் ஒரு தொழிலாளியை உங்கள் நிறுவனத்தில் உங்களுக்கு கீழ் பணியாற்றும் பணியாளர்களை ஒரு நல்ல வார்த்தைகளினால் பாராட்டிப் பாருங்கள் அதனுடைய விளைவு மூன்று மடங்காக உயர்ந்து பலன் தரும். ஒரு வெற்றி பெற்ற மனிதனுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்த்தால் அவர்களின் பாராட்டும் குணம் முக்கியப் பங்கு வகிப்பது தெரிய வரும்.

ஒரு மேடை பேச்சாளன் பேசிய பேச்சுக்கு கைதட்டி அங்கீகாரம் கொடுத்துப் பாருங்கள்

இன்னும் அழகாக அற்புதமாக பேசுவான்.

ஒரு கலைஞனை கைதட்டி ரசித்துப்பாருங்கள் இன்னும் அதிகமாக தன் கலையை மெருகு ஏற்றி உச்சம் தொடுவான்.

ஒரு விளையாட்டு வீரனை வெற்றி பெற்றதற்காகப் பாராட்டுங்கள். அவனுக்கு தருகிற அந்தப் புத்துணர்ச்சி ஒரு தங்க மெடலை நாட்டுக்குப் பெற்றுத் தரும்.

ஒரு மாணவனை ஒரு நொடிப்பொழுது முதுகில் தட்டிக் கொடுத்து ஒரு பாராட்டு தந்தால் அந்த அங்கீகாரம், அந்த அரவணைப்பு, அந்த ஆசிகள் அவனை நூற்றுக்கு நுறு வாங்க வைத்து பல சிகரங்களைத் தொட்டு வியக்கும் நிலைக்கும் உயர்த்தும்.

ஒரு இசைக் கலைஞர் ஒரு பாடல் பாடி முடித்தப் பின்பு பெறுகிற கை தட்டல் அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு இட்டுச் செல்லும். இன்னும் அருமையாகப்பாடி பெருமைப்பட வேண்டும் என்ற வெறி அவரை மிகச் சிறந்த பாடகராக மாற்றும். நாட்டியம், ஓவியம் போன்ற எல்லா துறைகளுக்கும் இது பொருந்தும். ஒரு பணியாளரைப் பார்த்து உங்கள் பணி மிக நன்றாக இருக்கிறது என்ற பாராட்டு தந்தால் இருவருக்குமே அங்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. பாராட்டுபவனும் மகிழ்ச்சியடைகிறான். பாராட்டு பெறுபவனும் மகிழ்ச்சி அடைகிறான். இது ஒரு கலை. ஒரு நிறுவனத்தை நடத்தி செல்பவருக்கு இந்தக்கலை கை வருமேயானல் அந்த நிறுவனம் உற்பத்தியில், உறவுகளில் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதன்மை அடையும் என்பதில் எள்முனை அளவுகூட சந்தேகமில்லை.

ஒருவர் பணியைப் பாராட்டுகிற மனது இருந்தால் ஒரு சில நல்ல வார்த்தைகளினால் பாராட்டுகிற போது பணியாளர்களின் மனம் குதூகளிக்கிறது. மகிழ்ச்சியடைகிறது. தான் பட்ட சிரமத்திற்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தாக பெருமிதம் கொள்கிறான். இது பெரும்  ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கிறது. அடுத்து செய்கிற பணியை இன்னும் அழகாக செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் மனதில் தோன்றுகிறது அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பிக்கிறார்கள். பலன் பல மடங்கு நமக்கு திரும்பி வருகிறது. ஒரு பணியாளரை பாராட்டுவதற்குப் பதிலாக குற்றம் கண்டுபிடித்து, குறை சொல்லி வருவதால் அவன் மனம் வேதனைப்படுகிறது. பணியில் ஈடுபாடு குறைகிறது. வேண்டா வெறுப்பாக ஒரு பணியை செய்யத் தொடங்குகிறான். அந்தப்பணி முழுமை அடைவதில்லை. அவர்களுடைய திறமை மழுங்கடிக்கப்படுகிறது. எதை செய்தாலும் நம் முதலாளி நம்மை பாராட்டுவதில்லை என்ற ஏக்கம் அவன் மனதிலே  குடி கொள்கிறது. நிறுவனத்தின் மேல் பாசமும், நேசமும், பிரியமும் குறைகிறது. அந்த நிறுவனத்தின் மேலே ஒரு வெறுப்பு வருகிறது. அதன் பலனாக நிறுவனத்தினுடைய வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் முதலாளி, தொழிலாளி என்ற உறவு முறை பாதிக்கப்படுகிறது. மனக்குமறல் வெளியே சொல்ல முடியாத வேதனைகளினால் அவனுடைய உடல் நலனும் பாதிக்கப்படுகிறது. உள்ள நலனும் பாதிக்கப்படுகிறது. அன்பும் அமைதியும் குறைகிறது. ஆரோக்கியமான சூழல் மாசுபடுகிறது. உழைக்கும் திறனும், உற்பத்தி திறனும் குறைகிறது.

இந்தக் குறைகளை எல்லாம் தவிர்க்க பணியில் உள்ளோருக்கு ஒரு நம்பிக்கையும், ஊக்கமும், உற்சாகமும், உத்வேகமும், ஈடுபாடு, உழைக்க வேண்டுமென்ற மனப்பக்குவமும் வரவேண்டுமென்றால் ஒரு நொடியில் ஒரு சிறய வார்த்தையில் பாராட்டிப் பாருங்கள். இந்த சிறு பாராட்டு பெரும் மாற்றத்தை கொண்டு வரும்.

இதனால் மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சந்தோஷ அதிர்வுகளும், மகிழ்ச்சி அலைகளும் அங்கே நிலவும். இனிமையான சூழல் நிரம்பும். மனதிற்கு இதமான புன்சிரிப்புக்களும், ஆனந்த நினைவுகளும் அங்கு அற்புதமாக பெருகும். அந்த மகிழ்ச்சி அலை, அந்த ஆனந்த அதிர்வு, ஒரு தெய்வீக அலையாக மாறும். எப்பொழுதும் உங்கள் பணியாளர்கள் விரும்பி வேலை செய்வார்கள். உங்களையும் விரும்பி நேசிப்பார்கள். அவர்கள் எண்ணங்களும் தூய்மையாகும். மனச்சுமை வெகுவாக குறையும். மனச்சுமை குறையும் போது பணிச்சுமையும் பல மடங்கு குறையும்.

ஒருசிறு வார்த்ததைகளினால் அவர்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரத்தை தருகிற போது, இனிமையான சொற்களினால் மனம் நிறைந்து பாராட்டுகிற போது, அங்குள்ள இறுக்கமான சூழல் மறைந்து இணக்கமான சூழல் ஏற்படும். உறவுகள் பலப்படுகிறது. நேசம் வளர்கிறது. எல்லா இடங்களிலும் எல்லா மனங்களிலும் நிறைவுகள் குடிகொள்கின்றன.

நன்றி கூறுவதும், பாராட்டுவதும் ஒரு உன்னதமாக பழக்கம், இந்தப் பழக்கம் தன்னம்பிக்கையை தருகிறது. உற்சாகத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு முன்னிலையை உருவாக்குகிறது. ஒருவருக்கு தேவை பாராட்டுவதா? அல்லது குறை சொல்வதா? என்றால் உங்கள் தேர்வு பாராட்டுவதற்குத்தான் கிடைக்கும்.

பாராட்டு உரை சக்தியை அதிகப்படுத்துகிறது. நேர்மறை எண்ணங்களை வளர்த்து எதிர்மறை எண்ணங்களை அடியோடு நீக்குகிறது.

ஆதலால் இன்று முதல் ஒரு சபதம் எடுப்போம். நாளை முதல் குறைந்தது ஐந்து பேருக்கு நன்றி சொல்வோம். ஐந்து பேரை பாராட்டுவோம் என்ற பணியை மேற்கொள்வோம். ஒவ்வொரு நாளும் ஐந்து வெற்றிகளுக்கு நம்மை நாமே பாராட்டிக் கொள்வதற்கான  முயற்சியை மேற்கொள்வோம். நமக்கு நாமே அங்கீகாரம் தந்து கொள்வோம். இது  முகத்திலே ஒரு சிரிப்பு அலையை உருவாக்கும். மற்றவர்கள் முகத்திலே ஒரு புன்சிரிப்பை எதிரொலியாக திரும்பப் பெற்றுத்தரும்.

செய்கிற தொழிலில், செய்கிறப் பணி முழுமையாதாக, பலனுடையதாக எதிர்பார்த்ததை விட அதிகமான வெற்றியை தருவதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

‘இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று’

என்ற குறளுக்கேற்ப இனிய வார்த்தைகள் என்ற கனி இருக்கிற போது

கடும் வார்தைகள் என்ற காய்கள் எதற்கு? நீயா ? நானா ? என்றால் அது பகையை வளர்க்கும், அன்பை முறிக்கும், நேசத்தை குறைக்கும். மனதை கெடுக்கும்.

‘நீயும் நானும்’ என்றால் அது உறவை வளர்க்கும், அன்பைப் பெருக்கும், பகையை உடைக்கும், மனதை இணைக்கும், நட்பை இறுக்கும், நன்மை பயக்கும்.

பாராட்டிப் பார்ப்போமே!

பலனை அதிகமாக பெறுவோமே!

நம்பிக்கையோடு முயல்வோமே!

நல்ல வெற்றிக்கு வித்திட்டு மகிழ்வோமே!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2015

என் பள்ளி
உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்
இளைய தலைமுறை எழுச்சி பெற
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்
பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
வெற்றி தரும் விஜய தசமி
இரத்தசோகை
இசையும் இசைவும்
புத்தக சவால்
குழுநிலவு
வெற்றி பயணங்கள்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…