Home » Articles » வெற்றி தரும் விஜய தசமி

 
வெற்றி தரும் விஜய தசமி


மனோகரன் பி.கே
Author:

செய்யும் தொழிலே தெய்வம்’ என்று உழைப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் தொழிலாளர்கள் தாங்கள் செய்திடும் தொழிலுக்கு ஆதாரமான தொழிற்கருவிகளை பூஜைக்குரிய பொருட்களாக வைத்து தங்கள் தொழில் வளர, அன்னையின் அருள் வேண்டி வழிபடும் திருநாளாக ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அன்னை பராசக்தியை, துணிவைத்தரும் துர்கையாகவும், செல்வத்தைத் தரும் திருமகளாகவும் வழிபடுவதோடு அறிவைத் தரும் தலைமகளாகவும் வணங்கி வழிபட்டு சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது.  அன்னை பராசக்தி மகிஷாசுரனை வதம் செய்த வெற்றித் திருநாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம். உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகையும் விஜய தசமி நாளில் தான் கொண்டாடப்படுகிறது. கெட்டவைகளை நல்லவை வெற்றி கொள்ளும் விழாவாக தசரா கருதப்படுகிறது.

இவையனைத்தும், பாரத தேசத்தில் தர்மத்தின் வெற்றிக்காகப் போரிட்டு, நல்லாட்சி புரிந்த சேர, சோழ, பாண்டியர்கள், குப்தர்கள், ராஜபுத்திரர்கள், விஜயநகர மன்னர்கள், மராட்டிய வீரசிவாஜி போன்ற பேரரசர்களும், மன்னர்களும் நாட்டு மக்களுடன் இணைந்து கொண்டாடிய வெற்றித் திருநாட்களாகும்.  ஆகவேதான் இன்றளவும் தேசத்தின் முப்படைகளும், அரசு நிறுவனங்களும், தொழில் மையங்களும், வணிகத் தலங்களும், கல்விக் கூடங்களும், கலைஞர்களும் ஒவ்வொரு ஆண்டும் உவகையுடனும், உற்சாகத்துடன் கொண்டாடும் விடுமுறையுடன் கொண்டாடப்படும் தேசியத் திருநாட்களாக விளங்குகின்றன..

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் ஒன்பது நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரி. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீதுர்கையின் மகாத்மியத்தைப் போற்றுவதே நவராத்திரி வைபவம்.  நவம் என்றால் ஒன்பது. மகிஷாசுரன் என்னும் அசுரனுடன் அன்னை பராசக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு வெற்றிவாகை சூடிய நாளே விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.  அந்த வகையில் அன்னை பராசக்தியை ஒன்பது நாட்களும் வெவ்வேறு வடிவங்களில் வைத்து வழிபடுவார்கள்.  அதாவது முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுவார்கள்.  மகிஷாசுரனை வதம் செய்த வெற்றித் திருநாளான பத்தாம் நாளை விஜயதசமியாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒரு பெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய பராசக்தி, உக்ரரூபம் கொண்டு மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படுகிறார்.

ஆயுத பூஜை அன்று அன்னையின் அருள் வேண்டி வழிபடும் அதே நேரத்தில் நாமும் சில உறுதிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஆக்கபூர்வமான காரியங்களுக்கு மட்டுமே தொழிற்கருவிகளை, உபகரணங்களை, ஆயுதங்களை பயன்படுத்துவோமே அன்றி அழிவுக்கான செயல்களுக்கு ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். ஆயுதங்கள் என்பது வெளியில் இருப்பது மட்டுமன்று.  நமக்குள்ளேயும் பல ஆயுதங்கள் இருக்கின்றன.  சொல்லப்போனால் வெளியே இருக்கும் ஆயுதங்கள் கண்ணுக்குத் தெரியும்.  ஆனால் நமக்குள்ளே இருக்கும் ஆயுதங்கள் பிறர் கண்களுக்குத் தெரியாது.  நம் அகக்கண்களுக்கு மட்டுமே தெரியும்.  ஆம்! பொறாமை, நயவஞ்சகம், சூழ்ச்சி, ஏமாற்றல், பேராசை, வெறுப்பு, அகங்காரம் என்று எத்தனை எத்தனையோ ஆயுதங்கள் நம்முடைய மனக் கிடங்குகளில் இருக்கின்றன.  இந்த ஆயுதங்கள் நம்மைக் காயப்படுத்தாமலும், பிறரைக் காயப்படுத்தாமலும் இருக்க வேண்டியும் அன்னையிடம் பிரார்த்திக்க வேண்டும்.

சிறுவர்களை விஜயதசமி தினத்தன்று பள்ளியில் சேர்க்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இந்த நாளில் எல்லாச் செல்வங்களும் வேண்டி இறைவனை வழிபடும் இந்நன்னாளில், கல்விச் செல்வத்தின் சிறப்புகளை நினைவு கூர்ந்து, கல்வி வளம் வீட்டிலும், நாட்டிலும் பெருக உறுதி கொள்ள வேண்டும்.

அறிவியல் தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சியின் காரணமாக வாழ்க்கை வசதிகள் பெருகியுள்ளன, மறுப்பதற்கில்லை.  அதே நேரத்தில் வாழ்க்கையில் சிக்கல்களும் பிரச்சனைகளும் பெருகியுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.  ஒருபுறம் அறிவைப் புகட்டும் ஆசிரியர்களே அறத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். கற்பிக்கும் ஆசிரியரையே வகுப்பறையில் கொலை செய்கிறான் மாணவன்.

ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது என்பது காலங்காலமாகவே இருந்து வரும் ஒன்று.  ஒரு வகுப்பில் சில மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மதிப்பெண் குறைவாகப் பெறுபவர்களாக, ஆசிரியர்களிடம் திட்டும், பிரம்பால் அடியும் வாங்குபவர்களாக இருப்பார்கள்.  பிள்ளைகளின் வருங்காலத்தையும் நல்லொழுக்கத்தையும் மனதில் கொண்டு பெற்றோர்களும் ஆசிரியர்களின் செயல்களுக்கு ஆதரவு காட்டி வந்தனர்.

அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி ஆசிரியர்களின் கண்டிப்பு என்பது மாணவர் நலன் கருதி இருந்து வருகின்றன.  ஆனால் எந்த அளவுக்கு கண்டிப்பு இருக்க வேண்டும் என்பதை நூல் பிடித்த மாதிரி சொல்ல முடியாது.  மாணவர்களை நெறிப்படுத்த ஆசிரியர்கள் மேற்கொள்ளும் அணுகுமுறைகளும், கையாளும் செயல் நடவடிக்கைகளும் ஆசிரியருக்கு ஆசிரியர் வேறுபடும்.

மாணவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் மத்தியில் காணப்படும் பொறுமையின்மையும், பிடிவாதங்களுக்கும், ஒழுக்கமின்மையும், இறையுணர்வு இல்லாமையும், மேற்கத்திய நுகர்வுக் கலாச்சாரமும் இத்தகைய செயல்களுக்கு அடிப்படைக் காரணங்களாக உள்ளன.

இத்தகைய பிரச்சனைகளைக் குறைக்க இறையுணர்வு துணைபுரியும். இறையுணர்வு என்பது சமுதாயத்தில் ஒழுக்கத்தையும் நேர்மையையும், தவறு செய்தால் இறைவன் தண்டிப்பார் என்கிற தார்மிக பய உணர்வையும் ஏற்படுத்துவதாகும். ‘கடவுள் என்று ஒருவர் இல்லையென்றால், அப்படி ஒருவரை நாம் கண்டுபிடித்து நிலை நிறுத்தியாக வேண்டும்’ என்கிறார் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர் வால்டேர்.

ஒழுக்கம் உயர்வு தரும்,  இறை நம்பிக்கை உன்னைக் காப்பாற்றும் என்று பிஞ்சு உள்ளங்களில் நல்ல போதனைகளை ஊட்டி வளர்க்கும் திருநாளாகவும் இந்த ஆண்டு விஜயதசமி திருநாள் அமையட்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2015

என் பள்ளி
உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்
இளைய தலைமுறை எழுச்சி பெற
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்
பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
வெற்றி தரும் விஜய தசமி
இரத்தசோகை
இசையும் இசைவும்
புத்தக சவால்
குழுநிலவு
வெற்றி பயணங்கள்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…