Home » Articles » குழுநிலவு

 
குழுநிலவு


அனந்தகுமார் இரா
Author:

பின் நவீனத்துவ சிறுகதை ஒன்றை இந்த வார ஆனந்த விகடன் (16.09.2015 தேதியிட்டது) இதழில் கதிரேசன் படித்தார்.  ஆனந்த விகடனில் வந்த முதல் வரியில் குறிப்பிடப்பட்ட சிறுகதையின் தலைப்பு, ‘இரவில் தட்டப்பட்ட கதவு’.  அதனை எழுதியவர் தமிழ்மகன். நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு என்கின்ற வரிசையில் வந்துள்ள கதை இது.  விஞ்ஞானி காரல் சேகன், நோபல் பரிசு பெற்றஸ்வீடிஷ் எழுத்தாளினி ஸெல்மா லாகர்லெவ், தஸ்தாயேவ்ஸ்கி,  ராபின் குக், மதகுரு எனும் ஸெல்மாவின் கதை, செக்காவ் என்னும் இரஷ்ய எழுத்தாளர் ஆகியவர்களைப் பற்றி  படித்துத் தெரிந்து கொள்ள தூண்டுகோலாக தமிழ்மகன் அவர்களின் படைப்பு ஒரு எள்ளல் நடையில் இருந்தது. எத்தனை பேர் இரசித்திருப்பார்கள் என்ற ஆச்சரியம் எழுந்தது.  எண்களில் என்ன உள்ளது? எண்ணங்கள், படம் பிடிக்கப்பட்டுள்ள விதம் அருமை என்றும் தோன்றியது.

கதிரேசனுக்கு, போஸ்ட் மாடர்னிஸ  மற்றும் படைப்புக்கள் மீது மிகவும் ஈர்ப்பு உண்டு.  போஸ்ட் மாடர்னிஸத்தில் ஐன்ஸ்டீன் கூறிய பின்வரும் அறிவியல் கூற்று பின்பற்றப்படுகின்றது.  அவர் கூறியதாவது, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்கின்ற இந்த மூன்றுமே ஒன்றுதான்.  நமது மிகமிக வலிமையான கற்பனை திரைதான் வலுக்கட்டயாமாக, விட்டுவிலகாமல் இம்மூன்றையும் பிரித்துக் காட்டிக் கொண்டு இருக்கிறது.  அவ்வளவுதான்.  இந்த மாதிரியான பொருள்பட ஐன்ஸ்டீன் கூறியதை ஆங்கிலத்திலிருந்து  கதிரேசன் மொழிபெயர்த்து இருக்கிறார்.

குழுநிலவு என்கின்ற தலைப்பில் போஸ்ட்  மாடர்னிஸம் குறித்ததான கதிரேசன்  அவர்களது படைப்பை ஏன் படித்துக்கொண்டு இருக்கின்றோம் என்று வாசகர்கள் ஆச்சரியம் அடையக்கூடும்.  அது மட்டும் அல்ல குழப்பமும் வரக்கூடும்.  போஸ்ட் மாடர்னிஸம் குறித்து கதிரேசன் நிறைய படித்தபொழுது தெரிய வந்த ஒன்று, போஸ்ட் மாடர்னிஸத்தின் குறிக்கோளே குழப்பமூட்டுவது தான் என்பது. நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.  அது ஒரு இனிய அனுபவம். யாம் கண்ட இன்பம் பெறுக இவ்வையகம் என்று, இன்றைய கணினிசார் கம்ப்யூட்டர் யுகத்தில் காலத்தின் வரையரைகளைத்தாண்டி பயணிப்பது சாத்தியமே என்று பேசும் சத்தம் அதிகமாக கேட்கின்றது.

இதே செய்திகள் குறித்து நிறைய கட்டுரைகளில் கதிரேசன் பல்வேறு பெயர்களில் எழுதி இருக்கிறார்.  அதையெல்லாம் குறித்து, இந்தக் கட்டுரையில் இருந்து அவரை படிக்கத் தொடங்குபவர்கள் இவர் இப்படித்தான் எப்பவுமே? எழுதுவாரா?  அல்லது எப்பொழுதுமே இப்படியே தான் எழுதிக் கொண்டே இருப்பாரா? என்று கேட்கத் தோன்றலாம். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய, அவசியத்தைப் பயன்படுத்தி கற்பனை கால திரையை குறித்து எழுதியுள்ள ஐன்ஸ்டீனின் கூற்றைமீண்டும் ஒருமுறை சிரமம் பாராது படித்தீர்களானால் – காலம் தொடர்ச்சியாக ஐந்து பரிமாணங்களில் விரிந்து கிடக்கும் ஒரு வெளி என்று புலனாகும்.

இதை வைத்து ஒரு விண்வெளி பயண நாவல் ஒன்றையும் கதிரேசன் புனை பெயரில் எழுதினார்.  விரைவில் வெளியாகவுள்ள அந்தக் கதையும் கொஞ்சம் போஸ்ட் மாடர்னிஸ்டிக்கே.

சில கல்லூரி பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் சில தத்துவங்கள் குறித்துக் கொடுக்கும் விளக்கம் அவர்கள் சொல்ல வந்த தத்துவத்தைக் காட்டிலும் குழப்பமூட்டுவதாக இருக்கும். இந்தக் கட்டுரையில் அதை எளிமைப்படுத்தவே, எப்படி போஸ்ட் மாடர்னிஸ ஸ்டைலில் எழுதப்படும் கட்டுரைகளை சுவைக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதை குறித்து கொஞ்சம் தெளிவுபடுத்திக் கொண்டோம்.

குழுநிலவு என்று நாம் குறிப்பிடப்போவது ‘ரேடியோ’  பெட்டி மற்றும் “ஒரு குழுவின்” தலைவர் பதவியில் இருக்கின்றமனித பிறவி ஒருவரையும் .

ஆல் இந்திய ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேச கதிரேசன் அழைக்கப்பட்டதாக கற்பனை செய்க.  மூன்று மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதாக கதிரேசன் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார். சென்னை, திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நிகழ்ச்சி, சரியாக, பிற்பகல்  இரண்டு  மணி முதல் மூன்று வரை நடைபெற இருந்தது.

அது தெரியாமல் குழு உறுப்பினர்களையும் வழியில் உணவருந்தி செல்லலாம் என்று கதிரேசன் அழைத்தார்.  அவருடைய நண்பர், ஒன்றரை மணிக்கெல்லாம், புத்தக நிலையத்தை அடைந்தாக வேண்டும் என்று கூறினார்.  ஒன்றரை மணிநேரம் முன்னாடி ஏன் போக வேண்டும்? என்ன செய்ய போகின்றோம்? என்று கதிரேசனுக்கு கேட்க தோன்றியது.  ஆனால்  கேட்கவில்லை.  அதுதான் தவறு என்று பின்னர் மிகவும் விசனப்பட நேர்ந்தது.

ஷேக்ஸ்பியர் மூன்று மணி நேரம் முன்னால் செல்வது கூட ஒரு நிமிடம் காலதாமதமாய் செல்வதை காட்டிலும் உயர்ந்தது என்று கூறியுள்ளாராம்.  கதிரேசன் நேரந்தவறாமையால் முன் கூட்டியே நிகழ்ச்சிகளுக்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்ததால் அவரது குழு உறுப்பினர்களும் . . . . அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உணவு உண்ண உடன் அமர்ந்து விடுகின்றனர்.  அவர்கள் இருப்பது சென்னை, கிண்டி பக்கம்.  கதிரேசனை பொறுத்தவரையில் அரைமணி நேரம் முன்னால் போனால் போதுமே.  இரண்டு மணிக்கு கிளம்பினால், இரண்டரைக்கு  செல்லப் போகின்றோம். . . என்று அவரது யோசனை.  ஆனால் உணவு வேளையில் அவசரம் கூடாது என மூவருமே பல சுவையான பேச்சுக்களையும், உணவு பகிர்தலையும் செய்கின்றனர்.

நேரம் ஒரு மணி நாற்பது நிமிடம் என்றநிலையில், நண்பரின் உயர் அதிகாரி கதிரேசனை அழைத்து அன்பு நிமித்தம் நான்கு வார்த்தைகள் பேசினார்.  முந்தைய விழாக்கால சந்தர்ப்பத்தில் கண்ட பழக்கம்.  அவர் எங்கே இருக்கிறீர்கள்?  சென்று சேர்ந்திடுவீர்கள் அல்லவா? என்று கேட்டு வைக்க. கதிரேசன் ஆஹா. . . சரியான நேரத்தில் சென்று விடுவோம் என்று மூன்று மணியை நினைத்து சொல்கின்றார்.

அதன் பின்னர் நண்பரிடம் . . . என்ன இவர்? இவ்வளவு முன்கூட்டி போக சொல்கிறார் என்று சொன்ன பிறகு . . . நிஜம் தெரிய வந்தது.  மணி 1.42.  தயிர்சாதத்தில் இருந்து கை உயர்ந்தது.  வழக்கமாக உணவு உண்கையில் செல்லிட தொலைபேசியை அமைதிப்படுத்தும் கதிரேசன் அன்று, என்று அதை செய்ய மறந்திருந்தார்.  அது பரபரப்பான நாட்களில் ஒன்றாக மெதுவாக மாறிக்கொண்டிருப்பது புரிந்தது.  அவசரம், மிகுந்த ஆபத்து  நிறைந்தது என்று தெரிந்தபொழுதும் அது தொற்றிக் கொள்வதை உணர முடிந்தது.

டேனியல் கோல்மேன் தனது உணர்வுசார் நுண்ணறிவு புத்தகத்தில் SOCS என்னும் எமோஷனலான சூழ்நிலையில் முடிவெடுப்பது எப்படி? என்கின்றகேள்விக்கு பதில் தந்திருப்பது நினைவு வந்தது. S என்பது சூழ்நிலை (Situation), O என்பது நம்மிடம் உள்ள பல்வேறு மாற்று உத்திகள் (Options), C என்பது ஒவ்வொரு மாற்று உத்தியை பயன்படுத்துவதாலும் ஏற்படும் விளைவுகள் (Consequences), கடைசி S என்பது முடிவுகள் (Solution). இதுபோன்றதொரு சிக்கலான சூழ்நிலை நம்மிடம் உள்ள முதல் சிக்கல் நேரம்.

வானொலி… எவ்வளவோ நேயர்கள் கவனிக்கும் ஒரு ஊடகம்.  அதில் பேசும் வாய்ப்பு அமைவது அபூர்வ வகையறாவை சேர்ந்தது.  பல பேருடைய உழைப்பு அந்த நேரலை நிகழ்ச்சிக்கு தேவைப்படுகின்றது. இதில் கால தாமதம் என்கிற பேச்சுக்கே இடமில்லை.  தனியார் நிறுவனங்கள் நேரத்தை விலைகொடுத்து வாங்கி விளம்பரப்படுத்துகையில் நாம் சற்றேபிசகான சிந்தனையால், நினைவுப் பதிவால் எத்தகைய வாய்ப்பை இழக்கின்றோம் என்பதனை யோசித்து பதறியது மனது.

கதிரேசன் முன்பே? ஏன் ஒன்றரை மணி நேரம் முன்னால் போக வேண்டும் என்று ஒரு வார்த்தை கேட்டிருந்தால் . . . நண்பர் சங்கர சரவணன். . . தம்பி இரண்டு மணி நிகழ்ச்சி என்று சொல்லியிருப்பார். கதிரேசன்அனைத்தையும் யோசித்தே உணவு உண்ண அழைத்துள்ளார், அங்கிருந்து திருவான்மியூர் செல்ல குறைந்த நேரமே ஆகும் என்று அவர் நினைத்து விட்டார்.

கதிரேசன் தன் நண்பருக்கெல்லாம் மூன்று – நான்கு என்று சொல்லியது நினைவு வந்தது. வாகன ஓட்டுனர்கள் இடத்தில் சென்று செல்ல வேண்டிய நேரத்தை சொல்வது விரும்பத்தக்கது அன்று. இடத்தை மட்டுமே சொல்வது பாதுகாப்பானது. வேகம் விவேகம் அன்று.  ஆனால் அன்று அதை கவனத்தில் கொள்வதற்கான வாய்ப்பு குறைவென்று மனது அடித்துக்கொண்டது.

போஸ்ட் மாடர்னிஸத்தின் முக்காலமும் ஒன்றே என்னும் தத்துவத்தை முன்பு கண்டோம் அல்லவா? வானொலி நிகழ்ச்சிக்கு இன்னும் பதினைந்து நிமிடத்தில் எப்படி போக முடியும் என்கின்றபிரம்மாண்டமான கேள்விக்கு முன்பு கதிரேசனின் நிலவு போன்றகுளிர்ச்சி சற்றே ஆட்டம் கண்டது.

வானொலி நிலைய நேரலை ஒலிபரப்பு தொழில்நுட்பம் செல்லிடத் தொலைபேசியின் வருகையால் மிகவும் சுலபமாகி இருந்தது.  ஐந்து நிமிட தாமதம் ஒரு இசைப்பாடல் இடைவேளை நிரப்பியால் சரிகட்டப்பட்டது.  முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து நிலா சோறு போல தமிழ்பால் ஊட்டிய வானொலியில் கதிரேசன் படிப்படியாய் எப்படிப் படிப்பது என்று சங்கர சரவணன்  சாரோடு சேர்ந்து பேசினார்.  வானொலியின் குழுவில் எண்ணிலடங்காதோர் கலந்திருந்தனர்.  வானில் இதுபோல எண்ணற்றநிலாக்கள் இருக்கக்கூடும்.  கடந்த செப்டம்பர் 2009 உடன் குறைந்தபட்சம் 145 நிலாக்களை (நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களுக்கு சொந்தமானது) கண்டறிந்துள்ளனர்.  குழு நிலாக்கள் . . . இன்னும் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவை.  காலம் பதில் சொல்லும்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2015

என் பள்ளி
உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்
இளைய தலைமுறை எழுச்சி பெற
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்
பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
வெற்றி தரும் விஜய தசமி
இரத்தசோகை
இசையும் இசைவும்
புத்தக சவால்
குழுநிலவு
வெற்றி பயணங்கள்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…