Home » Articles » காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!

 
காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!


சொக்கலிங்கம் சிவ
Author:

இளமை  முதுமை  மூன்றெழுத்தின் முகவரிகள். இளமை வாலிபத்தின் வயாகரா. முதுமை காலம் துப்பிய அனுபவ குப்பை. கூட்டுக்குடும்பம் சிதைந்து போனதின் அடையாளச் சின்னமே முதியோர் காப்பகங்கள்.

நிழல் தரும் குடை

வெயில் காய்ந்தே

நிழல் தருகிறது!

பழம் கொஞ்சம்

மரம் கல் அடிபட்டே

முதிர்கிறது!

உன் வாழ்க்கையும்

உணரப்படும் நீ

முதிரும்போது

நீராய், நிழலாய் கனியாய்

குடையாய்… என்பார் ராசை நேந்திரன். அப்பா ஒற்றைச் சொல்லின் உலகம் உற்றுப்பார்.  அம்மா மடியில் படுத்துப்பார் அன்பு ஒழுகும். ஆத்தா, தாத்தா, அம்மா, அப்பா சுமையல்ல சும்மாடுதான்.

முதியோர் காலம் பிசைந்த காகிதச் சிற்பங்கள். சூரியனின் ஒட்டுமொத்த வெளிச்சங்கள். 60  வயதை, பூர்த்தியானவுடனே இவர்கள் மூத்த குடிமக்களாக முடிசூட்டிக் கொள்கிறார்கள். வேடிக்கையான வார்த்தைக்குள்ளும் வாடிக்கையாய் சொல்லுவதுண்டு. “60 வயதிற்குள் நாம் இறந்தால் நம் குடும்பத்திற்கு பிரச்சனை. 60 வயதிற்கு மேல் நாம் இருந்தால் நமக்கே நாம் பிரச்சனை”

இவர்களின் பொக்கை வாய்ச்சிரிப்பு குழந்தைகளின் ஆனந்தக் குதிப்பு. இவர்களின் மனசுக்குள் மடிப்பு விழாமல் பார்த்துக் கொண்டால் நடிக்காத வாழ்க்கை நாளை நமக்கும் கிடைக்கும். வார்த்தைகள் அனுபவ வாய்ப்பாடுகள்; உலக வரைபடத்தின் உண்மை வெளிப்பாடுகள்.

முதுமை காலம் துப்பிய சக்கைதான். இனியேனும் அந்த சக்கையை உங்கள் தோள்களில் சாய்ந்து கொள்ள தூண்களாக இருங்கள் அப்பொழுதுதான் நாளை நீங்கள் சாய்ந்து கொள்ள தூண்கள் துணையாக கிடைக்கும்” என்பார் பேராசிரியர் க.இராமச்சந்திரன்.

முதியோர் காப்பகத்தில் இருந்தவர் புதிதாக வந்தவரிடம் கேட்டார். “எப்போதாவாது முன்பு இங்கு வந்திருக்கிறாயா? ஆம்  வந்திருக்கிறேன்  20 வருடத்திற்கு முன்பு என் பெற்றோரை சேர்க்க வந்திருக்கிறேன். “நீ விதைத்ததை நீதான் அறுவடைச் செய்ய வேண்டும்” என்று சொல்வது போல் இருந்தது.

கிழட்டுப்பசு  உயிர் போய்விடும் நிலையில் படுத்திருந்ததைப் பார்த்து வெள்ளாடு கவலையோடு கேட்டது ‘உன் வீட்டுக்காரன் முன்பெல்லாம் இதமாக தடவிக் கொடுப்பானே, குளிப்பாட்டி கம்பீரமாய் நிற்க வைப்பானே  இப்போது உன்னை திரும்பிக் கூட பார்ப்பதாக தெரியவில்லையே அது ஏன்?

பசு ஆட்டுக்குப் பதில் சொன்னது ‘என்னால் இனி பயனில்லை  பயனில்லாத என்னை ஏன் பார்க்க வேண்டும்? கொடுக்க பாலும் இல்லை. ஏற்க ஆளும் இல்லை’ என்றது என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கதையில் கருத்தாழம் உண்டு. தாய்ப்பால் விற்பனைக்கு வந்தாலும் தாயின் அன்பான அரவணைப்பை புட்டிப்பாலால் கொடுக்க முடியுமா? வயதானவர்களுக்கு தேவை காசு பணமில்லை. அவர்களுக்கு அன்பையும் கொடுக்க வேண்டும். இதமான அரவணைப்பையும், ஆறுதலையும் எப்போதும் அதிகமாகவே கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

முதியோர் காப்பகத்தில் இருக்கும் தாய் மகனுக்கு கடிதம் எழுதினாள் “நீ குடியிருக்க என் வயிற்றில் இடம் இருந்தது. நான் குடியிருக்க உன் வீட்டில் சிறு அறை கூடவா இல்லை” இதயம் இருப்போருக்காக இறக்கி வைக்கப்பட்ட வார்த்தை வரப்புகள் இவை. சாட்டையடி கொடுத்தாலும் திருந்துவோரும் உண்டு. திசைமாற்றம் செய்வோரும் உண்டு. எதிர்காலம் அவர்களுக்கும் ஈர்ப்புவிதி படி முதியோர் காப்பகத்தின் வாசற்படி திறந்தே இருக்கும் நாள் தொலைவில் இல்லை.

“தாத்தா செத்தும்

ஒலக்க ஒரல்

அம்மி ஆட்டுகல்லுன்னு

ஒவ்வொருவருக்கும் போட்டி

கறமை மாடும் கன்றும் எனக்கு

காளையும் கிடாரியும் எனக்கு எனக்குன்னு

அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும்

அத்தனை அடிதடி

பாயில சுருண்டு கிடக்கம் பாட்டியை

எனக்கு எனக்கென்று

யாரும் சொல்லக் காணோம்”

விஜிலா தேரிராஜன் கவிதையா எழுதியிருக்கிறார்; முதியோரின் அவல் ஓலங்கலை கண்ணீராய் அல்லவா கலக்கி இறக்கியிருக்கிறார்.

சொர்க்கம் எங்கே இருக்கிறது என்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்டபோது, அம்மாவின் காலடியே இனிய சொர்க்கம் என்றாராம் பெருமானார். காலையில் எழுந்தவுடனே மகன் அம்மாவிடம், காபி கொடுக்கச் சொல்லவா வாயும் முகமும் கழுவ வாளியில் தண்ணீர் தரவா என்று நேரிடையாகவே சென்று தலைமாட்டில் தலைகோதி கேட்க வேண்டும். மகனிடம் தேர்வு எழுதச் செல்லும் முதல் நாளிலே அப்பா சொல்வார், ஆத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கோ என்று அம்மாவிடம்அழைத்துச் செல்ல வேண்டும். வேறு ஊருக்கு செல்லும் போதெல்லாம் ஆத்தாவிடமும்,  தாத்தாவிடமும் ‘போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் செல்’ என்றெல்லாம் முகவுரையை நாம் தான் எழுத வேண்டும். முகவுரை நன்றாக இருந்தால் தான் முடிவுரை நன்றாக இருக்கும் என்று ஞாபகப்பேழையில் செருகி வைக்க வேண்டும்.

இதுமட்டுமல்ல, நீ சாப்பிடும் போதொல்லாம் ‘அம்மா வா சாப்பிடுவோம் ஆத்தா வா, தாத்தா வா சாப்பிட என்று அவர்கள் அருகிலே அமர்ந்து சாப்பிடக் கூப்பிடு. கடைக்கு செல்லும் போதெல்லாம் உன் உதடுகள் உச்சரிக்கும் வார்த்தையில், அம்மா பிடித்ததைச் சொல், ஆத்தா உனக்கு எது பிடிக்கும் சொல் நான் வாங்கி வந்து தருகிறேன் என்றெல்லாம் கூச்சல்போட்டு கேட்டு கடைக்கு செல்ல வேண்டும். அப்போது இவர்களின் மனதுக்குள் தென்றலின் சுகமும், தேமதுர ஓசையும் பொங்கி ததும்பி வழியும். அது வேண்டும். இங்கே பல முகமூடிகள் தான் உலாவிக் கொண்டு இருக்கிறது.

என் எழுத்தில் இதயத்தின் கசிவை முன் மொழிந்திருக்கிறேன் என்ற ஆறுதலோடு என் ஆன்மா விடைபெற்றால் அதுவே போதும்.

நீ கடவுளைக் காண வேண்டுமா? உடனே ஓடு உன் பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களுக்கு பணிவிடைச் செய்ய ஓடு, ஓடு உடனே ஓடு அங்கே கடவுளைக் காணலாம் என்றாராம் உலகத்தை விட்டு ஓடிய உலக சினிமாவின் உயரத்தை தொட்ட வரலாற்று சின்னமாய் நிற்கும் மைக்கேல் ஜாக்சன். அவர்களை காலம் அல்லவா கௌரவித்துக் கொண்டே இருக்கிறது.

திருமணம் முடிந்த இரண்டொரு தினங்களில் காதல் வசனங்கள் கவிதைகளாய் கொட்டும். சிலருடைய வார்த்தைகளோ தேளாய் கொட்டும். மானுட சமுத்திரம் நானென்று கூவு என்ற கொக்கரித்த பூமியில் சில கண்கொத்திப் பாம்புகளும் இருக்கத்தான் செய்கிறது.

இரவு வேளையில் இருமினால் கூட என்னம்மா பண்ணுது? தண்ணித் தரவா? தலையைப் பிடிக்கவா? பாயை விரிக்கவா? போர்வையைப் போர்த்தவா? இப்படி, இப்படி – பாதுகாப்பு வேலியை பக்குவமாய் நட்டுவை. இதய சிம்மாசனத்தில் சிகர சிம்மாசனத்திற்கான இடத்தை விட்டுவை.

“ஒவ்வோர் அதிகாலையிலும்

வீடு வீடாக பாலூற்றும்

அந்த முதியவருக்கு

கஞ்சி ஊற்றத் தவறிய பிள்ளைகள்

கடைசியில் அவருக்கு

ஊற்றும் பால்

தீர்ந்திருக்கும் அல்லது பிரிந்திருக்கும்”

என்ற கவிதையில் கண்கள் குளமாயின. பாலுக்குக் கூட வேதிவினை வாய்ப்பாடும் தெரிந்திருக்கிறது.

வீட்டில் உள்ளோர்க்கு பிறந்தநாள் வரும் போதெல்லாம் ஆசீர்வாதம் கேட்டால் அகமும் முகமும் மலர்ந்து ஆசீர்வாதமும் கிடைக்கும் ஆயுளும் அதிகரிக்கும், அற்புதமும் நடக்கும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் புத்தாண்டு இப்படி விதவிதமாய் வருவதே மனிதம் – புனிதமடையவே வருகிறது. அந்த நாட்களிலும் அவர்களை ஆசீர்வதிக்க அன்போடு அவர்களின் பாதமலர்களில் விழுந்தால் ஆசைமழை அன்போடு கொட்டும். அவர்களின் பாதங்களில் பள்ளி கொள்வோம்; பாரோர் போற்றும் வாழ்வை அள்ளிக் கொள்வோம்.

பணத்தை மையமாக வைத்து உறவுகளின் ஊர்வலம் தந்தையின் வியர்வையிலும் தாயின் தாய்ப்பாலிலும் வளர்ந்து அயல்நாட்டில் அமோகமாய் பணம் பார்க்கும் போதே இன்பத்திலும் இதயத்தை விற்று பெற்றோரை புறக்கணிக்கும் அவலம் இங்கே ஏராளம் அப்படி புறக்கணிக்கப்பட்ட பெற்றோரின் கண்ணீரில் வரைந்த கவிதை வரிகள் இதோ…

மகனே…

நீ பிறந்த அன்று

தோட்டத்தில் வைத்தோம்  

ஒரு தென்னங்கன்று

நீ உயர்ந்தாய்

நாங்கள் வார்த்த தண்ணீரில்

தென்னை வளர்ந்தது

எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்

உனக்கு இன்பம் தருகிறது

இங்கே இருக்கும் தென்னை மரம்

எங்கள் இருவருக்கும்

சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது

ஒரு நாள்…

நீ ஈமெயிலில் முழ்கியிருக்கும்போது

எங்களை ஈமொய்த்த செய்தி வந்து சேரும்

இறுதி பயணத்தில்

நீ இல்லாமற் போனாலும்

தென்னை ஓலை

எங்கள் கடைசி மஞ்சமாகும்.

தமிழகத்தின் தலைசிறந்த தமிழருவி மணியனின் கவிதை ஈடு செய்ய முடியாத இழப்பை இறக்கி வைத்திருக்கிறது. முதியோர் வார்த்தையோடு முரண்படுகிறேன். இனி முதியோர் காப்பகம்   இல்லாத உலகை காண்பது எந்நாளோ? என்று முனகலுக்கு முற்றுப்புள்ளி வைத்து மனிதம் காப்போம்; மனித நேயம் காப்போம். இனி பெரியோர் என்பதையே என் பேனாவின் உதடுகள் உச்சரிக்கும், முதியோர் வார்த்தையோடு முரண்படுகிறேன். கற்பக மரங்களாம் அவர்தம் கால்தொட்டு வணங்கி பாரதத்தின் பண்பாட்டு மரம் செழிக்க வழிவகுப்போம் – சிகர சிம்மாசனத்தில் சிறகடிப்போம்; இடம் பிடிப்போம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2015

என் பள்ளி
உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்
இளைய தலைமுறை எழுச்சி பெற
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்
பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
வெற்றி தரும் விஜய தசமி
இரத்தசோகை
இசையும் இசைவும்
புத்தக சவால்
குழுநிலவு
வெற்றி பயணங்கள்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…