Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களோடு பழகிய அனுபவம் குறித்தும், அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது….? அவரின் இறப்பின் துயரம் இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கு எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.சரவணக்குமார்

மூக்கனூர், சேலம் மாவட்டம

இந்தியாவில் ஏவுகணை நாயகனைப்பற்றிக் கேள்விப்பட்டதும் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அப்போது நான் சென்னை மாநகர காவல் இணை ஆணையர் என்பதால் அவர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க எந்தச் சிரமமும் ஏற்படவில்லை. அவரது உதவியாளர் காலை 8 மணிக்கு அண்ணாப் பல்கலைக்கழக வளாகத்திற்கு வரச் சொல்லியிருந்தார். 8 மணிக்கு கதவைத்திறந்து புயலாக வெளியில் வந்தார். Hello Mr. Sylendra Babu, How are you? என்றார். நான் இருக்கையை விட்டு எழுந்து அவருக்கு மிடுக்காக ஒரு சலூட் மரியாதை செய்தேன்.

அதைப்பார்த்த அவர் அதற்கு பதிலாக ஒரு சிவில் சலூட் அடித்துப் புன்னகைத்தார். I am pleased to meet you என்று கூறியவாறு என்னுடன் கை குலுக்கினார். அது ஒரு உறுதியான கை குலுக்காக இருந்தது. உங்களைச் சந்திப்பதில் உண்மையாகவே எனக்கு மகிழ்ச்சி என்பது போன்ற கை குலுக்கல் அது. இவ்வாளவு Friendly ஆக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அவரைப்பற்றி நிறைய படித்ததாலும், அவரது பெருமைகளைப் பலர்சொல்லக் கேட்டதாலும் அவர் எனக்கு மிகவும் பழக்கமானவர் போன்றே தெரிந்தது. காவல் துறையில் எனது பணிகள் என்ன? எனது தினசரி கடமைகள் என்ன என்று கேட்டறிந்தார். ஒரு முறை கூட அவர் குற்றங்கள் கூடிவிட்டது என்றோ, காவல்துறை பணி கடுமையானது என்றோ, மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை குறைந்தது என்றோ சொல்லவே இல்லை. நான் பார்க்கும் பெரிய மனிதர்கள் பலர் இதைத்தான் சொல்லுவார்கள். பேச ஒன்றும் இல்லை என்றால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டது, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை என்பார்கள். ஆனால் நெகட்டிவாக ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து வரவில்லை என்பதைக் கவனித்தேன். இவர் உண்மையில் உயர்ந்தவர்தான். திருவள்ளுவர் சொன்ன “”சான்றோர்” இவர்தான் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் அவரிடமிருந்து விடை பெறும்முன் அவர் கேட்ட கேள்வி என்னை வாரிப் போட்டது. காவலர்களுக்கு 24 மணி நேர பணியாமே, அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்க கூடாதா என்று கேட்டார்.  இது எனது மனதில் இருந்த முக்கிய கேள்வி, இவருக்கு எப்படித் தெரியும்…? என்று ஆச்சரியப்பட்டேன். எனது மனதில் இருப்பது அவருக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அடிமட்ட ஊழியர்களின் கஷ்டம் பற்றி சிந்தனைச் செய்யும் அவர் காவலர்களின் கஷ்டங்களையும் சிந்தித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.

அவரது உதவியாளர் பி.எம். நாயர் தனது அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதியிருந்தார். அப்துல்கலாம் போன்ற ஒரு மாமனிதரை நாம் இனி பார்க்க போவது இல்லை எனத் தொடங்கிய கட்டுரை “கலாம் இபக்ட்” என்ற நூலாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. அதில், அவரது 50 உறவினர்கள் வந்துதங்கியபோது அவர்களுக்கான ஜனாதிபதி  பவனில் அறை வாடகையைக் கணக்கு செய்து அந்தத் தொகையினைச் சொந்த பணத்தில் கட்டி விட்டார் என்பதையும், எத்தனையோ வாகனங்கள் ராஷ்ட்ரபதி பவனில் இருந்தும், ஒரு பேருந்தை வாடகைக்கு அமர்த்தி அதற்கு தனது பணத்தைச் செலவு செய்து உறவினர்களுக்கு டில்லி மாநகரை சுற்றிக்காட்டினார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அயல் நாடுகளில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளைப் புகைப்படம் எடுத்த பின்னர் அப்பரிசுகளை அரசு அருங்காட்சியத்திற்கு தந்தார். இவை அனைத்தும் அரசு ஊழியர்களாகிய எங்களுக்கு ஒரு நல்ல முன் மாதிரியாக இருந்தது. இந்திய ஜனாதிபதி நடத்த வேண்டிய “இப்தார்” விருந்தை நடத்தாமல் அந்த 22 லட்சம் ரூபாயை அனாதை இல்லத்திற்கு அளித்துள்ளார். அத்துடன் தனது பணம் 1 லட்சம் ரூபாயையும் சேர்த்து 23 லட்சமாக அந்த இல்லத்திற்கு தந்துவிட்டு, நாம் அழைக்கும் விருந்தினர் தினமும் மூன்று வேளை சாப்பிடுவார்கள்; ஆனால் அனாதை இல்ல குழந்தைகள் சாப்பிடாதவர்கள், எனவே அவர்கள் சாப்பிடட்டும் என்றாராம். தாம் 1 லட்சம் பணம் தந்தது யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார்.

சக ஊழியர் “Yes Sir” என்று மட்டுமே சொல்லுவதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஒருமுறை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் தனது அபிப்பிராயம் கேட்டபோது “No Sir, I don’t agree with you”  என்று உதவியாளர் பி.எம். நாயர் சொன்னபோது, அவர் அதை வரவேற்று ஏற்றுக் கொண்டார் என்று பி.எம். நாயர் கூறுகிறார். கலாம் அவர்கள் சக ஊழியர் நலனில் அக்கறை கொண்டுள்ளார் என்பதையும் அவர் விவரமாக விளக்கியுள்ளார். தனது மனைவி கைமுறிந்து படுக்கையில் இருந்த போது இவருடைய வீட்டிற்கே வந்து மனைவியின் நலம் விசாரித்தார் என்ற செய்தியை அவர் பகிர்ந்துள்ளார்.

முன்பு ஒருநாள், இளம் விஞ்ஞானி ஒருவர் தனது குழந்தைகளை பொருட்காட்சிக்கு அழைத்துச் செல்லுவதாகக் கூறி கலாமிடம் அனுமதி வாங்கியிருந்தார். ஆனால் அவர் அலுவலகத்தில் தொடர்ந்து பணியில் இருந்ததை கலாமே கவனித்து விட்டார். அந்த விஞ்ஞானி வீட்டிற்கு அவரே சென்று அந்தக் குழந்தைகள் திட்டமிட்டருந்த பொழுதுபோக்கு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த விஞ்ஞானி வருத்தத்துடன் வீட்டிற்கு சென்ற போது குழந்தைகள் வீட்டில் இல்லை. கலாம் வீட்டிற்கு வந்து குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார் என்று மனைவி கூறியிருக்கிறார்.

உயர்ப் பதவிகளில் இருந்தவர்கள் இப்படியெல்லாம் தனது அன்றாட வேலைகளை உயர்வுடன் செய்து சக விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி தலைமைப் பண்புகளை நிரூபித்திருக்கிறார்கள் என்ற செய்தி நமக்குக் கிடைக்கிறது. நமது நெஞ்சம் உருகுகிறது. நமக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. எனவே தான் கலாமும் நமது மனதில் நிரந்தர இடம்பிடிக்கிறார்.

கலாம் அவர்களின் India 2020 நூல் வெளிவந்ததும், அதையும் படித்துவிட்டேன். அவரின் கனவுகளை நனவாக்க lead 2020 என்ற அமைப்பு கோவை நகரில் மிகவும் தீவிரமாக இருந்தது. அப்போது நான் கோவை போலிஸ் கமிஷ்னர், ஆகையால் அந்த இயக்கத்தோடு இணைந்து செயல்பட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதில் சதீஸ் என்ற கம்ப்யூட்டர் எஞ்ஜினியர் முதலானவர், அவரது நண்பர்கள் பத்மநாபன், பிரசன்னா, சி.ஆர். சாமிநாதன் ஆகியோர் மிகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றினர். இவர்களோடு சேர்ந்து சிறுதுளி வனிதாமோகன் அவர்களும் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-யை மையபடுத்தி பிறந்தநாள் வாழ்த்து சொல்ல 6000 மாணவர்களை ஒரே இடத்தில் திரட்டிக் காட்ட வேண்டும் என்று கூறி எங்களது காவலர் பயிற்சி பள்ளி (PRS) மைதானத்தில் இடம் கேட்டனர். கலாமின் பிறந்தநாள் கொண்டாட்டம் கின்னஸ் சாதனையாகச் செய்ய வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார். அதற்கு நான் இசைவு தந்தேன்.

இந்த நிகழ்ச்சி கோவையில் மிக பிரபலமாக நடந்தது. நான் அதில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் வனிதாமோகன் என்னை சந்தித்து PRS மைதானத்தை ஒரு வனமாக மாற்ற வேண்டும், அதுவும் கலாம் அவர்கள் நினைவாக செய்தாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்பேரில் ஜனவரி 09, 2011 அன்று மாபெரும் மரம் நடும் விழா PSR மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்மூலம் முட்புதராக இருந்த PSR மைதானத்தின் அவிநாசி ரோடு பகுதியில் பல நூறு மரக்கன்றுகள் ஐயாவின் நினைவாக நட்டோம். இன்று அந்தப் பகுதி ஒரு நந்தவனமாகக் காட்சியளிக்கிறது. இதனைச் செய்தவர்கள் கோவை காவல் துறையின் காவலர்கள், இன்றும் அந்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறார்கள்.

வாழ்வில் ஒரு குறிக்கோள் வேண்டும் என்றும், லட்சியம் இல்லை என்றால் வாழ்வில் சாதிக்க முடியாது என்றும், பலரும் கூறினார்கள். ஆனால் அந்தக் கருத்தையே “கனவு காணுங்கள்” என்று கலாம் சொன்னதும் அது மாணவர்கள் மனதில் பற்றிக் கொண்டது. பின்னர் அவர் அதற்கு விளக்கமும் தந்தார்,

“கனவு என்பது தூங்கும்போது வருவது அல்ல,

தூங்க விடாமல் தடுப்பதுதான் அது”

இதுவே மாணவர்களுக்குள் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியது.

“அப்துல் கலாம், இந்தியாவின் தங்கமகன்”

இந்தியாவை வல்லரசாக்கும் அவரது கனவை நனவாக்க இன்றே செயலில் இறங்குவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் வீர வணக்கம்.

.எம் நாயர் சொன்னதைப் போன்று அவரைப் போன்ற ஒரு உன்னத மனிதர் நமக்கு கிடைப்பது மிக அரிது. அவரின் இழப்பு ஈடுகட்ட முடியாதது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2015

என் பள்ளி
உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்
இளைய தலைமுறை எழுச்சி பெற
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்
பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
வெற்றி தரும் விஜய தசமி
இரத்தசோகை
இசையும் இசைவும்
புத்தக சவால்
குழுநிலவு
வெற்றி பயணங்கள்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…