Home » Cover Story » வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…

 
வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…


ஆசிரியர் குழு
Author:

திருமதி. நிர்மலா பெரியசாமி

செய்தியாளர்

வாய்ப்புகள் நம் கதவைத் தட்டும்போது நாம் திறப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அத்தகையவர்கள்தான் வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்” என்பார் டாக்டர் இல.செ.க. அவர்கள். அதுவாய் தனக்கு கிடைத்த வாய்ப்பில் தனிமுத்திரை பதித்திருக்கும் சிறப்பிற்குரியவர் இவர்.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு பயணப்பட்டாலும் பயணப்பாதையைப் பிறருக்கு ‘பயன்படும் பாதையாக’ மாற்றிக் கொண்ட பெருமைக்குரியவர் இவர்.

‘வணக்கம்’ என்ற ஒரே சொல்லில் அழுத்தமான பதிவை எல்லோருக்குள்ளும் உண்டாக்கியவர் இவர்.

உறுதியான தீர்மானங்களை எடுக்க வைத்து பிரிந்திருந்த பல குடும்பங்களை இணைத்து வைத்து ஊடகத்துறையில் புதுமையை புகுத்தியவர் இவர்.

“நல்ல நூல் நிலையம் பெரியோரின் ஆன்மாக்கள் வாழும் புண்ணிய ஸ்தலம்” எனக் கற்றுணர்ந்து மக்கள் நலம் சிறக்க பேசிவரும் செய்தியாளர் இவர்.

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட திருமதி. நிர்மலா பெரியசாமி அவர்களை நாம் நேரில் சந்தித்த சந்திப்பிலிருந்து இனி…

உங்களைப் பற்றி…?

அன்புக்கும், பாசத்திற்கும், கடுமையான உழைப்பிற்கும், விருந்தோம்பலுக்கும் பெரிதும் பெயரெடுத்த கொங்கு நாட்டுப் பகுதியில் விவசாயத்தை உயிர்மூச்சாகக் கொண்டு விளங்கும் கரூர் மாவட்டத்தில் வாங்கல் பசுபதிபாளையம் என்ற எழில் மிகு கிராமத்தில் பிறந்தேன்.

இப்பகுதியில் எங்கள் குடும்பம் நல்ல பாரம்பரியமுள்ள குடும்பம். என்னுடைய தந்தையார் ஒரு சிறந்த மார்க்சீயவாதியாகவும், காந்தியவாதியாகவும் திகழ்ந்தவர். அவரின் சிந்தனைகள் அனைத்தும் முற்போக்குத் தன்மையாக  இருக்கும். குழந்தைப் பருவத்திலிருந்து அவரின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் பார்த்து வளர்ந்த காரணத்தால் எனக்குள்ளும் இச்சிந்தனைகள் வந்துவிட்டது என்று கருதுகிறேன்.

மிகச்சிறிய வயதிலேயே காந்திஜியின் ‘சத்தியசோதனை’ புத்தகத்தை மிகவும் விருப்பமாக பலமுறைபடித்திருக்கிறேன். ஒரு நாளைக்கு 1000 பக்கங்களுக்கு மேல் படிப்பேன் என்று அப்பா கூறுவார்கள்.  எங்கள் கிராமத்திற்கு அருகில் ஒரு பழமை வாய்ந்த நூலகம் இருந்தது. அந்த நூலகத்தில் நான் படிக்காத புத்தகங்களே இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவிற்கு புத்தகத்தின் மீது பற்றுதலும், ஈர்ப்பும் இருந்தது. இதற்கு முதன்மைக் காரணம் என் தந்தை மட்டுமே.

பள்ளிக் காலங்களில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி என்றால் நான்தான் முதல் பரிசை வெல்வேன். எல்லாப்பாடத்திலும், நனி நன்று, நனிமிகு நன்று என்ற பாராட்டுக்களைத்தான் பெறுவேன்.

பெண்கள் அவ்வளவாக பொதுவாழ்க்கைக்கு வர ஈடுபாடு காட்டுவதில்லையே ஏன்?

பொதுவாழ்க்கைக்கு வர ஆண், பெண் பாகுபாடு தேவையில்லை என்று நினைக்கிறேன். பொதுவாழ்க்கைக்குள் வர வேண்டுமென்றால் மற்றவர்களை நேசித்தாலே போதுமானதாக இருக்கும். தன் குடும்ப உறவுகளை மட்டுமே பார்க்காமல் மற்றவர்களையும் தன் உறவுகளாக நினைத்துப் பார்க்க வேண்டும். அதன் மூலம் மனிதநேயத்தின் மகத்துவம் தோன்றும்.

பிறரின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். என்னுடைய தந்தை பொது வாழ்க்கைக்காக அவரையே அற்பணித்துக் கொண்டவர்.

ஆம், அவர் தன்னுடைய சொந்த விவசாய நிலத்தை, சொத்துக்களை விற்று இல்லாதவர்களுக்கு இயன்றவரை உதவிகள் செய்து வந்தார். ஒருமுறை மற்றவர்களுக்கு உதவி செய்து அதன்மூலம் அவர்களின் முகம் மலர்ந்தால் மீண்டும், மீண்டும் சேவை செய்வதை விடவே முடியாது என்றார்.

ஆனால், இன்றைய சமுதாயத்தில் அனைவரும் அமெரிக்க சிந்தனைகளோடு வாழ்ந்து வருகிறோம். தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தும் இந்நிலை மாறவேண்டும். மற்றவர்களை மதிக்க வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் பொது வாழ்க்கைக்கு வரும் பெரும்பாலானவர்கள் பெரிதும் எண்ணுவது பதவி, அதன்மூலம் தன்னை, தன் குடும்பத்தை மட்டும் எவ்வாறு வளப்படுத்திக் கொள்ளலாம் என்பதை மட்டுமே. இது மிகவும் பரிதாபமான நிலை. பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் சேவை, தொண்டு செய்யும் மனம் கொண்டவர்களாக, இவற்றின் உன்னதம் புரிந்தவர்களாக வாழ வேண்டும்.

நம் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்வோர் மீண்டும் தாயகம் திரும்பத் தயங்குகிறார்ளே…?

அங்குள்ள சுத்தம், சுகாதாரம், ஆடம்பரம், பருவநிலை எல்லாவற்றுக்கும் மேலாக அங்கு கிடைக்கும் பணம் முழு சுதந்திரம்  போன்றவை காரணமாக இருக்கலாம், என்ன கிடைத்தாலும் அது நம் தாய் நாடாகாது.

இன்றைய சூழலில் குழந்தைக் கல்வி எவ்வாறு இருக்கிறது…?

மிகவும் நன்றாக இருக்கிறது. என்ன ஒன்றே ஒன்று, இன்று குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் என்னும் கல்விமுறை சுத்தமாகவே இல்லை. விளையாட அனுமதியில்லை. வெறும் மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். மிகவும் வேதனையான நிலை இது.

நாம் படிக்கின்ற காலத்தில் நீ முதல் மதிப்பெண் பெறவேண்டும். இவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் வற்புறுத்தியது கிடையாது. நான்றாக படி என்று மட்டுமே சொல்வார்கள். ஆனால், இன்று எல்.கே.ஜி படிக்கும் குழந்தையிடம் கூட நீ இவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களே கட்டாயப்படுத்துகிறார்கள். இது குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே மன அழுத்தத்தைக் கொடுக்கும்.

தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே “ரோல் மாடலாக” பெற்றோர்கள் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதன்படி தாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். இது மட்டுமே சரியான வழி.

பல்துறைகளில் பல ஊடகங்களில் பணியாற்றியுள்ளீர்கள், அதில் பிடித்தது, சவால் நிறைந்தது என்றால்…?

நான் இளமைக் காலத்திலிருந்து இன்றுவரை ஒரு சுதந்திரம் மிக்க பெண்மணியாகத்தான் வாழ்ந்து வருகிறேன். நான் எதைச் செய்தாலும் பிடித்தமானதை மட்டுமே செய்ய விரும்புவேன். எந்த வேலையையும் வேண்டா, வெறுப்பாக நான் செய்ததில்லை.

என்னுடைய திறமை முழுவதையும் வெளிப்படுத்தும் அளவிற்குத்தான் நான் ஒவ்வொரு பணியையும் செய்வேன். நிறைய சவால்களைச் சந்தித்திருக்கிறேன். சவால்களை சந்திக்கும் மனநிலையும், நுட்பமும் என்னுள் இருக்கிறது என்று நான் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். இது என்னுடைய தன்னம்பிக்கையை பெருமளவில் வளர்த்தது.

குடும்பப் பிரச்சனை சார்ந்த நிகழ்ச்சிகள் பல நடத்தியுள்ளீர்கள், இந்நிகழ்ச்சியின் மூலம் குடும்ப உறவுகளின் நிலை என்பது எப்படி உள்ளதாக நினைக்கிறீர்கள்?

இந்நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு பிரச்சனைகள் உள்ள மனிதர்களை சந்திக்க நேர்ந்தது. மனிதர்களாய் பிறந்து விட்டால் பிரச்சனைகள் வருவது இயல்பு. இந்தப்பிரச்சனைகளிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது நிறையப் பேருக்குத் தெரியவதில்லை.  எளிய வழிகாட்டுதல் மூலம் பலநூறு குடும்பங்களுக்கு உதவி செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது

இந்நிகழ்ச்சியின் மூலம் நான் கற்றுணர்ந்த உண்மை என்னவென்றால் பிரச்சனை என்பது இயல்பு. இதில் உயர்வு, தாழ்வு ஏதுமில்லை. தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று எதுவுமில்லை.. எந்த மனிதனும் முழுமையான குற்றவாளி இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். ஏதேனும், தவிர்க்க முடியாத சூழலில் ஒருவன் தவறு செய்கிறான்,  அந்தத்தவறால் சமூகத்திற்கு முன் குற்றவாளியாக நிற்கிறான். அவனுள் இருக்கும் நல்ல தன்மைகளைத் தூண்டி விட்டால், அவனும் மனிதனாகி விடுகிறான்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது.

நமக்கு நாமே எதிரியாகக் கூடாது. அகங்காரம், சுயநலம், பேராசையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதுவும் நிலையானது அல்ல என்னும் ஆன்மீகத் தத்துவத்தை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தங்களின் குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு வளர்க்க வேண்டும்…?

இன்றைய நாகரீக உலகில் வளரும் குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, வேகமாகவும் சிந்திக்கவும், செயல்படவும் செய்கிறார்கள். அவ்வாறு வளரும் குழந்தைகளை இப்படி வளர்க்க வேண்டும். இதுவாக ஆக வேண்டும் என்று சொல்லி கட்டாயப்படுத்தாமல், அன்பால் அறிவூட்ட வேண்டும். சின்னக் குழந்தைகளிடம் தங்களின் ஆசைகளைத் திணித்தால், அவர்கள் குழம்பி விடுவார்கள். அவர்களின் எதிர்கால ஆசைகளை, கனவுகளை அவர்களின் போக்கில் விட்டு, எல்லை மீறும் போது, எடுத்துச் சொல்லி வழி காட்டுவதுதான் பெற்றோரின் கடமை.

பொய் சொல்லாதே என்று குழந்தையிடம் சொல்லி வளர்ப்பதைவிட, பொய்யே சொல்லாத பெற்றோர்கள் இருந்தால், குழந்தைகளும் பொய் சொல்லாது.

எல்லாத் தவறுகளையும் தம்மிடம் வைத்துக் கொண்டு வெறுமனே, வெற்று வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தால் அந்தக் குழந்தை ஏற்றுக் கொள்ளாது.

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பெற்றோர்கள்தான் முன்மாதிரியாக விளங்க வேண்டும். குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்வது பெற்றோர்களிடம்தான்.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அதற்கு ஏற்றார்போல், கணவன் மனைவிக்குள்ளே ஒரு நல்ல புரிதல் வேண்டும். விட்டுக்கொடுக்கும் மனநிலை இருவரிடமும் இருந்தாலே குழந்தைகள் நல்ல சான்றோராக வளர்வார்கள்.

நமக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு நாம் ‘பாஸ்’ (BOSS) அல்ல அதிகாரம் செலுத்துவதற்கு, அவர்களை அன்போடு, பொறுமையாக வழி நடத்துவதற்கு மட்டுமே இறைவன் நம்மிடம் அனுப்புகிறான் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.

ஆண் பெண் உறவு முறையின் இன்றைய நிலை…?

நம் நாட்டின் வலிமையே குடும்பம் அமைப்புதான். அதை சிதைத்து விட்டால் சமூதாயம் சீரழியும். ஒரு நாட்டின் வளர்ச்சி ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியிலும், வாழ்க்கையிலும் இருக்கிறது. மனிதன் சமூகத்துக்குக் கட்டுப்பட்டவன். தனி மனித சுதந்திரம் என்றபெயரில், குடும்ப சமுகக் கட்டமைப்புக்கு கேடு விளைவிக்கும் எந்த செயலையும் அவன் செய்யக் கூடாது.

ஆணும், பெண்ணும் சேர்ந்து பழகும் சூழ்நிலை சர்வ சாதாரணமாகி விட்ட இன்றைய கால கட்டத்தில் தங்கள் எல்லைகளை உணர்ந்து ஒருவரை ஒருவர் மதித்து நல்ல நட்போடு பழகினால் நல்லது. நட்புக்கோ, காதலுக்கோ, உறவுகளுக்கோ உண்மையாக இருப்பது மிக முக்கியம்.

ஆன்மீகத்தின் மீது தங்களுக்கு உண்டான ஈடுபாடு குறித்து?

நம் நாடு ஆன்மீக பூமி. வெளிநாடுகளிலெல்லாம் உடலையும், பொருளையும் முன்னிலைப்படுத்தி வாழ்ந்தபோது, நம் முன்னோர்கள் மனதையும் அதன் எல்லையில்லா ஆற்றலையும் உணர்ந்து, அவற்றின் துணை கொண்டு உட்கார்ந்த இடத்திலிருந்தே அண்ட சராசரங்களையும், அவற்றையெல்லாம் படைத்த அந்த மாபெரும் சக்தியையும் உணர்ந்தவர்கள்.

மனித வாழ்க்கையின் இறுதி இலட்சியம் இறைவனை அடைவது. அந்த இறுதி இலட்சியத்தை எவ்வாறு அடைய வேண்டும் என்பதற்கான ஆன்மீகக் கருத்துக்களை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அதன் விளைவாகத்தான் வெளிநாட்டினர் கூட்டு நுண்ணோக்கி, ராக்கெட், செயற்கைக்கோள் என்று பல்லாயிரம் கோடி டாலர் பணம் போன்றவைகளின் துணையோடு நிகழ்த்தும் கண்டுபிடிப்புகளை நம் ரிஷிகளும், முனிவர்களும் செலவே இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு, எந்தவொரு தொழில் நுட்ப வசதியும் இல்லாமல் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

நொடிக் கணக்கில் துல்லியமாகக் கணிக்கப்படும் ஜாதகம், பஞ்சாங்கம், கிரக அமைப்புகள் இவையெல்லாம் சாதாரண காரியம் அல்ல. ஜோதிட சாஸ்திரம் உண்மையானது. மிகப்பெரிய விஞ்ஞானம். ஆனால் இங்கே இருக்கும் ஜோதிடர்களெல்லாம் உண்மையானவர்களா? முழுமையாகக் கற்றுணர்ந்தவர்களா? என்பதில்தான் பிரச்சனையே.

நம் முன்னோர்கள் எதையும் ஆன்மீக ரீதியான உணர்வை, உள்ளுக்குள்ளையே உணர்ந்து வழி நடக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் எதைச் செய்தாலும், கருவிகள் கொண்ட செய்முறையாகப் பார்த்தார்கள். இது அனைத்தும் புற உலகத்திற்காகச் செய்யப்படும் சிந்தனையாகவும், தேடலாகவும் இருந்தது. அதுவே வளர்ந்து, வளர்ந்து இன்று வளர்ந்த நாடாக வலம் வருகிறார்கள். நாம் அவர்களின் பிரமாண்டத்தைப் பார்த்து பிரமிக்கிறோம், பின்பற்றுகிறோம்.

நம் நாட்டில் அறிவியல் கல்வி எவ்வாறு இருக்கிறது…?

ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது. நாம் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தவர்கள், வான சாஸ்திரத்தில் கரை கண்டவர்கள், அறுவை சிகிச்சைகளில் நிபுணர்கள், கட்டிடக் கலையில் வல்லுநர்கள், ஆரியபட்டா, சுசுருதர் தொடங்கி, சர்.சி.வி.இராமன், இராமனுஜன், சமீபத்தில் மறைந்த ஏவுகணை நாயகன், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் வரை கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத எத்தனையோ அறிவியலாளர்களின் பங்களிப்பில் நம் நாட்டின் அறிவியல் வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

வெறும், சில நூறு கோடிகளில் பொக்ரான் அணுகுண்டு சோதனையை நடத்தி, பல்வேறு விதமான ஏவுகணைகள் தயாரித்து அமெரிக்காவை அதிர வைத்தோம். பாகிஸ்தானை பயந்து போக வைத்தோம். இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருந்தாலும், அறிவியல் வளர்ச்சியில் நாம் எவருக்கு சளைத்தவர் அல்ல.

மன அழுத்தத்தை எவ்வாறு போக்கிக் கொள்வது…?

உடல் சோர்வு போன்று மனதுக்கு சோர்வு வரும். அதற்கான முக்கிய காரணம் தங்களுக்கு பிடிக்காத வேலைகளைச் செய்வது எதைச் செய்தாலும், முழுமனத்தோடு, விருப்பத்தோடு திட்டமிட்டு செய்ய வேண்டும். தவிர்க்கவே முடியாத வேலைகளையும், சூழ்நிலைகளையும் விருப்பமானதாக மாற்றிக் கொள்ள மனதைப் பழக்க வேண்டும். மனிதனால் ஆகாதது எதுமில்லை. மனம் போகும் போக்கெல்லாம் போகக்கூடாது. நம் மனம் நம் கட்டுப்பாட்டில்தான் இயங்க வேண்டும்.

பெரும்பாலும் பணம், வேலை, காதல், உடல்நிலை இவற்றால்தான் மனஅழுத்தம் வருகிறது. யாருக்கும் இங்கு எதுவும் இல்லாமல் இல்லை. விரும்பியது கிடைக்க நேர்மையாக, கடுமையாக உழைக்கலாம். கிடைப்பதை ஏற்று நிறைவாக வாழலாம்.

குப்பை கூடங்களும், தூசியும், இருளும் நிறைந்த அறையை யாராவது விரும்புவார்களா? அதை சுத்தம் செய்து ஒரு விளக்கும் மணமான ஊதுபத்தியும் ஏற்றி வைத்தால் எப்படி இருக்கும்? அதைப்போல நம் மனதையும் இறுக்கமாக மூடி வைக்காமல், பேராசை, அகங்காரம், சுயநலம், பொறாமை போன்ற நெகடிவ் எண்ணங்கள் இல்லாமல் தூய்மையாக திறந்து வைக்க வேண்டும். இன்பதையும் துன்பத்தையும் ஒன்று போல ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விரும்பியது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விரும்பினால் மன அழுத்தம் காணாமல் போகும்.

கிராமப்புற பின்னணியில் பிறந்த நீங்கள் நகரத்தில் வசிக்கும் போது பெற்றது, இழந்தது…?

நகர வாழ்க்கையில் பெற்றது ஏராளம், எனக்கான முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் கிடைத்தது. தேவையற்ற விமர்சனங்கள் குறைந்தது. என் அக வளர்ச்சியிலும் புறவளர்ச்சியிலும் முழு கவனம் செலுத்த முடிந்தது. என் வாழ்வின் எல்லைகள் மிகப்பெரிதானது. நிறையப் புகழ் பெற்ற சாதனை மனிதர்களின் சந்திப்பும் நட்பும் கிடைத்தது என்று ஏராளமாகச் சொல்லலாம்.

இழந்தது என்றால் காவிரித் தண்ணீர்,  நல்ல காய்கறிகள், நல்ல காற்று, கோவில் திருவிழாக்கள், உறவினர் வீட்டு விஷேங்கள் இவற்றில் அடிக்கடி கலந்து கொள்ள முடியாமல் இருந்தது.

இன்றைக்கு என் பெயரைச் சொன்னால் தெரியுமளவுக்கு வளர்ந்திருப்பது, பெயர் வாங்கிக் கொடுத்தது எல்லாம் நகர வாழ்க்கைதான்.

ஆங்கிலத்துறையில் பயின்று ஊடகத்துறையில் நுழைந்த விதம் குறித்து…?

மொழிகளின் மீது இயல்பாகவே எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. எனக்குள் இருந்த தாய்மொழிப் பற்று, உச்சரிப்பு, பேசும்திறன் இவற்றை என் அப்பா சிறு வயதிலிருந்தே கவனமாக வளர்த்தார்கள். பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே கட்டுரை, பேச்சு, நாடகம், பட்டிமன்றம், கவிதை, வினாடி வினா போன்ற போட்டிகளில் பெரும்பாலும் முதல் பரிசு பெறுவேன். அந்த ஆர்வம்தான் ஊடகத்தில் நுழைய உறுதுணையாக இருந்தது.

கிடைத்த வாய்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி இத்துறையில் முன்னேற்றம் அடைந்தேன். நம்முடைய தனித்திறமையை வெளிக்காட்டுவதன் மூலம், தானாக பிடித்தமான பணிகள் தேடி வரும். எதற்கும் காத்திருப்பு அவசியம்.

இன்றைக்கு, இளைய தலைமுறையினரிடம் தீயபழக்கவழக்கங்கள் குடிகொண்டுள்ளது, அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்…?

இன்றல்ல, எந்தத் தலைமுறையினரிடம் கேட்டிருந்தாலும் அன்றைய இளைய தலைமுறையைப் பற்றி இதே விமர்சனத்தைத்தான் வைத்திருப்பார்கள்.

கால மாற்றத்தில் இது சகஜமான ஒன்று. மேலை நாட்டினரை கண்மூடித்தனமாக பின்பற்ற முயற்சிப்பதால் ஏற்படும் அவலம் இது. நம் நாட்டுப் பருவநிலைக்கேற்ற உடை எவ்வளவு முக்கியமோ அதேபோலத்தான் உணவும், காலாச்சாரமும். அதை மீறுவதால் நிச்சயமாக நன்மை கிடைக்காது. மாறாக பெருந்தீமையே விளையும் என்பதை இளைய தலைமுறையினர் புரிந்து கொண்டால் தீய பழக்கங்கள் காணாமல் போகும்.

ஒருவன் குடிகாரன், ஸ்தீரி லோலன் என்று பெயர் எடுப்பது சிறப்பானதா? இவற்றை ஆண் செய்தால் தானும் செய்வேன் என்று எத்தனிக்கும் பெண்களுக்கு மதிப்பிருக்குமா?

எது பெருமைக்குரியதோ, சமூகத்தில் மதிப்பானதோ அதைத்தானே செய்ய வேண்டும்? அதற்காகத்தானே மனிதனுக்கு ‘ஆறாவது அறிவு’.

 தமிழ் மொழியின் நிலை இப்பொழுது?

தமிழ் மொழியின் நிலை என்றும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், பார்க்கும் பெண்களை எல்லாம் தாயாக நினைத்துப் போற்றவது நல்ல பண்பென்றாலும் பெற்றதாயை இன்னும் சிறப்பாகப் பேணுவது கடமை அல்லவா? அதைப் போலத்தான் ஆங்கிலமும். பிறமொழிகளைத் தேடிக் கற்றாலும் தாய்மொழியாம் தமிழை ஆழ்ந்து கற்பது நமது இன்றியமையாக் கடமை. இதை பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எல்லோரும் சேர்ந்து முழு முனைப்புடன் தங்கள் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். இதைச் செய்தால் நம் மொழியின் நிலை இன்னும் நன்றாக இருக்கும்.

இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…?

“சோதனை இல்லாத வாழ்க்கை இல்லை

தடைக்கற்கள் இல்லாத பாதை இல்லை

வெற்றி தோல்வி இல்லாத பயணம் இல்லை”

தன்னைவிட பலவீனமானவர்களை துன்புறுத்துவதில் ஆண்மையின் கம்பீரம் இல்லை.

பெண்ணை சக ஜீவனாக மதிக்கத் தெரியாதவன் ஆணுமில்லை.

பெண்மையின் மென்மையை கைவிட்டவள் பெண்ணுமில்லை.

கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தத் தெரியாதவனுக்கு வெற்றிகள் இல்லை.

வெற்றிக்கு பொறுமை வேண்டும். கவனம் சிதறாத உழைப்பு வேண்டும்.

வெற்றி வரும், நிச்சயம் வரும், வரும்வரை காத்திருக்க வேண்டும்!…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2015

என் பள்ளி
உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்
இளைய தலைமுறை எழுச்சி பெற
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்
பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
வெற்றி தரும் விஜய தசமி
இரத்தசோகை
இசையும் இசைவும்
புத்தக சவால்
குழுநிலவு
வெற்றி பயணங்கள்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…