Home » Articles » இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!

 
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

வாழ்க்கை என்பது என்ன?

பலரும் பலவிதமாய் கூறுகின்றனர்.

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’

இது நம் முன்னோர் அனுபவித்துக் கூறியது.

இந்த அரிய மனிதப்பிறவி எடுத்து வாழும் இந்தக் காலத்தில் காட்டில் நடப்பவைகள். வருத்தத்தையே தருகின்றன.

வாழ்க்கை என்பதை எப்படி வேண்டுமானாலும் வாழலாம். வாழ்வதற்கு பணம் கட்டாயம் தேவை. அப்பணத்தைப் பெற எதையும் செய்யலாம் என்ற மனநிலை இன்று மக்களிடம் மேலோங்கி வருகிறது.

”வாடிய பயிரைக் கண்டே வாடிய உள்ளங்கள்” வாழ்ந்த நம் நாட்டில், இன்று செல்வந்தர்கள் ஒருபுறம் வேகமாகத் தங்கள் செல்வ நிலையைக் கூட்டிகொண்டே செல்ல, வசதியற்றவர்கள் அப்படியே வாழும் பெரும் ஏற்றத்தாழ்வு தொடர் கதையாகவே உள்ளது.

“வாழ்க்கை என்ன வாழ்க்கை

வாழ்ந்து காட்டுவோம் சுலபமாக ‘

“நான் ஏன் பிறந்தேன்

நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் “

இந்தப் பாடல் வரிகள் நமக்குச் சொல்வது, வாழ்க்கை வெகு சுலமானதுதான்.

தான், தன் குடும்பம் மட்டும் என்றில்லாமல், தான் வாழும் இந்தச் சமுதாயத் (நாடு) துக்கும் ஏதாவது நல்லவை செய்ய வேண்டும்.

பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. பலவகையான பறவைகளின் வசிப்பிடம் அது. ஒருநாள் ஒருபறவை இட்ட எச்சத்தால், அந்த மரத்தின் அடியில் முருங்கை ஒன்று வளர்ந்தது. ஆலமத்தைப் பார்த்து முருங்கை நினைத்தது. தானும் 5 ஆண்டுகளில் வருடத்துக்கு 10 அடி உயரம் வீதம் 5 அடி உயரம் ஆலமரத்தை விட உயரமாக வளர வேண்டுமென்று. அதன்படி வளரவும் செய்தது. ஆனால், மக்கள் அவ்வப்போது வந்து முருங்கை இலை, காய், எனப்பறித்துச் சென்றதால் அது உயரமாக முடியவில்லை. அதனால் வருந்தியது.

இதையறிந்து ஆலமரம், முருங்கையிடம் கூறியது, “உனது உபயோகம் கணக்கிட முடியாதது, பல வியாதிகளைச் சரியாக்கும் மருத்துவ குணங்களுடன் நீ படைக்கப்பட்டிருப்பதால், என்னை விட உன்னை மக்கள் அதிகம் பயன்படுத்திப் பலனடைகிறார்கள். எனவே, நீ அதிகம் சந்தோசப்படு. உன் பிறப்பின் பலனே இதுதான்.

இதைக் கேட்டு முருங்கை மரம் சமாதானமடைந்தது, இந்த உலகில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணத்துக்காவே உள்ளன என்பது உறுதி.

வாழ்க்கை என்பதை இறப்பதற்குள் வாழ்ந்துவிட வேண்டும். இறக்கும்போது, இன்னும் கொஞ்ச நாள் நீட்டித்தால், இப்படியெல்லாம் வாழலாமே என்று எண்ணுவதில் பயனில்லை.

ஒவ்வொரு நாளையும், இன்றே நம் வாழ்வின் கடைசி நாள் என்ற உணர்வுடன் வாழ்பவர்கள் பிறவியின் நோக்கத்தை அறிந்து அனுபவிப்பவர்கள்.

பிறவியின் நோக்கம் தான் என்ன?

இரு சொற்களில் சொல்லி விடலாம்.

ஒத்தும் உதவியும் வாழ்தல்.

ஒத்து என்றால்  விட்டுக் கொடுத்து,

ஏற்றுக் கொண்டு,

மன்னித்து,

பாராட்டி – என்று அர்த்தம்

உதவி என்றால் நம் உடலாற்றல், மன ஆற்றல்,  பொருள் வளம், அதிகாரம் இவற்றால் மற்றவர்களுக்கு, பாகுபாடு பாராமல், தேவையான காலத்தே தேவைப்படுவதை மனமுவந்து கொடுத்துவிட்டு, அதை மறந்து விடுதல் என்று பொருள்.

இரண்டையும் சேர்த்துச் சொன்னால், வாழ்க்கை என்பது, நீ எதைச் கொடுக்கிறாயோ, அதுவே பல மடங்காக உனக்குத் திரும்பிவரும் என்பதுதான்.

“அர்ச்சனை இல்லாத ஆண்டவனுமில்லை

பிரச்சனைகள் இல்லாத மனிதனுமில்லை “

என்று நகைச் சுவையாகச் சொல்லுவார் நண்பர் ஒருவர், வாழ்க்கை என்பது நீண்ட பயணம் போன்றது. பயணம் மகிழ்ச்சியாக அமைய வாகனம், ஓட்டுனர், எரிபொருள், உடன் பயணிப்போர், இருக்கைவசதி போன்றவை எப்படி முக்கியமோ, அது போல், நாம் பிறந்த வீடு, பெற்றோர் வளர்ப்பு முறை, பழக்கமான நண்பர்கள், கல்வி சுற்றுச்சூழல் ஆகியன மிக முக்கியம்.

எங்கு வேண்டுமானலும் பிறந்திருக்கலாம். ஆனால், முன்னேறுவதற்கு பிறந்த இடமோ, பெற்றோரோ தடையல்ல என்பதைத் திடமாக நம்ப வேண்டும்.

முதலில் நாம் என்ன பணிக்குச் செல்ல விரும்புகிறோம். அதற்காக தகுதி என்ன என்பதை அறிதல் அடிப்படை.

பள்ளி, கல்லூரிக் கல்வி பெரும்பாலும் பணிசார்ந்திராமல், பொதுவாகவே உள்ளதால், பணிக்கான தகுதியைப் பெறுவது முக்கியம்.

இதற்கு ஆசை என்ற முறையைக் கடைபிடிக்க வேண்டும். ASAI  என்று ஆங்கில எழுத்துக்களாய் ஆசையை எழுதுவோம்.

A    Analyse – தகவல் சேகரித்து, ஆராய்தல்

S    Select – தேர்வு செய்தல்

A   ACT – திட்டமிட்டு செயல்படுதல்

I INFORM OTHERS -மற்றவர்களுக்கும் சொல்லுதல்

பிறக்கும் போது உடல் குறையுடன் பிறந்தவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று சொல்லுகிறோம். பெயரிலேயே சாதாரண மனிதர்களை விட திறமை அதிகமுடையவர்கள் என்பது தெளிவாகிறது.

அவர்கள் தங்கள் திறமைகளை உணர்ந்து அவைகளை வளர்த்து, தமது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உபயோகிப்பதை அறிவோம்.

இடையில் உடல் உறுப்புகளை விபத்தில் இழந்தாலும் கூட, முயன்றால் சாதிக்க முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு அருணிமா சின்ஹா என்ற மங்கை, சமீபத்தில் பாரத தேசத்தின் உயர் விருதுகளில் ஒன்றான பத்ம விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றார்.

தன் 20வது வயதில் பணியில் சேருவதற்கான ரயில் பயணத்தின்போது கொள்ளையர்களால் ரயிலிலிருந்து கீழே தள்ளி விடப்பட்டு ஒரு காலை இழந்தார். வாழ்க்கைத்தடம் புரண்டது.

பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து, செயற்கை கால் பொருத்தி, முதன் முதலில் இந்த வகையில் உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை ஏறிச்சாதனை படைத்தார். ஏன் மற்றவர்களால் முடியாது?

மற்ற உயிர்களான எறும்பு, சிலந்தி, காகம், போன்றவைகள் சுறுப்சுறுப்பாகத் தம்பணியை விடாமுயற்சியுடன் செய்யும் போது நம்மால் மட்டும் முடியாதா?

முடியும். வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என நிர்ணயம் செய்வதுதான். அடிப்படை. படகில் பயணம் செய்கிறோம். துடுப்பு இல்லை. நீரின் வேகத்திற்கேற்ப ஏதாவது ஓரிடம் சென்று சேருவோம். இது போலவே பலரது வாழ்க்கை அமைகிறது.

துடுப்பு கையிலிருந்தால், நாம் விரும்பிய இடத்துக்குச் செல்ல முடியும். துடுப்பு என்பது தான் வாழ்க்கையின் குறிக்கோள்.

ஆனால், இதற்குத் தடையாக இருப்பது பயமும் வலியும் ஆகும். அதாவது கடந்த கால அனுபவங்கள் என்ற வலி; எதிர்காலம் அல்லது கற்பனை பயம்.

இவற்றிலிருந்து விடுபட, நிகழ்காலத்திலேயே வாழ வே

ண்டும்.  மற்றவர்கள் ஏதாவது சொல்லுவார்களோ என்றேண்ணியே பலர் தம் திறமைகளைப் பூட்டி வைத்துள்ளனர்.

இவர்கள் அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து சிறிது நேரம் சிந்தித்தால்போதும், செய்கின்ற பணியிலேயே திருப்தியை உயர்வை அடைய முடியும்.

இதற்குத் தேவை: மூன்றிணைப்புப் பண்பாடு:

1)    விழிப்பு நிலை : நம் தேவைகள், பழக்கங்கள், சூழ்நிலை இவற்றால் நாமும் மற்றவர்களும்   பாதிக்காமல், துன்பமடையாமல் எச்சரிக்கையுடன் வாழ்தல்.

2)    திட்டமிட்ட செயல்பாடு : திட்டமிட்ட வாழ்க்கை தெவிட்டாத இன்பம். வீடு கட்டுவதற்காக   எப்படி ஒரு வரைபடம் தயாரித்து, அதன்படி கட்டி ஆனந்தப்படுகிறோமோ, அதுபோல் நம் வாழ்க்கை இப்படி இருக்க வேண்டுமெனத் திட்டமிடலாம்.

ஓராண்டுக்குள் செய்ய வேண்டியவை,

மூன்றாண்டுக்குள் முடிக்க வேண்டியவை

ஐந்தாண்டுகளில் உயர வேண்டிய நிலை

இதுபோல் இலக்குகளை நிர்ணயித்து, உழைத்து, செலவழித்து, சேமித்து இன்பம் காண வேண்டும். இதற்கு நம் எண்ணம் பேச்சு, செயல் மூன்றையும் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.

என்ன பலன் கிடைக்க வேண்டுமென எண்ணுகிறோமோ, அது அப்படியே வந்து சேரும். இதற்குத்தான் இந்த திட்டமிட்டாலும் கூட எப்படியாவது பின்னடைவு வரும். இதைத் தான் “”யானைக்கும் அடி சறுக்கும்’ என்றனர். எனவே, தினமும் இரவு படுக்குமுன், அன்று பேசிய பேச்சுகள் செய்த செயல்கள், எண்ணிய எண்ணங்கள் இவைகளை ஒருமுறை நினைத்துப் பார்த்து, தவறுகள் தெரிந்தால் திருத்திக் கொள்வதும், சரியென்றால் தொடர்ந்து செய்யவும் பழகிக் கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் வாழும்போது, வாழ்க்கை ஐஸ்கிரீம் போல சுவையுடையதாக இருக்கும். பெரும்பாலானவர்கள் ஐஸ்கிரீமை விரும்பிச் சாப்பிடுவார்கள். ஏதாவது விசேடங்களுக்குச் செல்லும் போது, சாப்பிடாதவர்கள் சிலரே என்ற அளவில் அதை சுவைப்பர். ஐஸ்கிரீம் வாங்கி, கையில் வைத்துக் கொண்டே சாப்பிட தாமதம் செய்தால் என்னவாகும்? இது உருகி விடும்,

உருகிவிட்டாலே சுவை குறைந்து விட்டது என்ற உணர்வு உண்டாகும். திட நிலையில் ஸ்பூனால், சிரமப்பட்டு எடுத்து வாயிலிட்டு கரைத்து உண்ணுவதிலுள்ள ஆனந்தமே, ஆனந்தம்.

இது போன்றதுதான் நம் வாழ்க்கையும், ஒவ்வோர் பருவத்திற்கும் உண்டான இயல்பான பேச்சு, செயல் இவைகளை அறிந்து, எவருடைய மனமும் வருந்தாமல், காலத்தே செயல்பட்டால் வாழ்க்கை சுவையாக அமையும்.

“பருவத்தே பயிர் செய்’ என்று கூறியுள்ளனர், உரிய காலம் என்பதை மறவாமல் எச்சரிக்கையுடன் வாழும் போது வாழ்க்கை வசந்தமாகவே இருக்கும்.

பொதுவாக இருவர் சந்தித்துக் கொண்டால், நல விசாரிப்புக்குப் பின் பேச்சு தொடர்ந்தால், தங்கள் உடல் வியாதி, வீட்டுப் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவது இயல்பு.

கேட்பவர்கள், சொல்பவருக்கு ஏராளமான இலவச ஆலோசனைகள் வழங்குவார்கள். இது தவறு, சொல்பவர் தம் மனதிலுள்ள பாரத்தில் சிறுப்பகுதியை இறக்கி வைக்கும் களமாக கேட்பவரை நினைக்கிறார் என்ற நினைவில் கேட்பது தான் சிறந்தது.

நாம் ஓரிடத்திலிருக்கிறோம். அந்த இடத்திலேயே வாழ்க்கை நம்மிடமிருந்து முன்னே சென்று நமக்காகக் காத்திருக்கிறது. இப்போது நமக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியைக் கடப்பது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை.

இடைவெளி பூஜ்யமானதா? இதோடு நின்று விடலாமா? மீண்டும் ஏதோ திட்டம், வாழ்க்கை முன்னே சென்று காத்திருக்கும்! மீண்டும் பூஜ்யமாக்க வேண்டும் அடேங்கப்பா! இத்தனை முறையா? ஆம் அப்போதுதான் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும்.

                          தொடரும்.

இந்த இதழை மேலும்

 


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2015

அவதூறு அவசியமல்ல
மனதில் உறுதி வேண்டும்
இந்த உலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும்
மனித வாழ்வில் துலங்காத மர்மங்கள்
பஞ்சதந்திரம் புத்தகங்களுக்கான நேரம்
சத்தும் சக்தியும்
ஓட்டம்
தன்னம்பிக்கையை நாளும் விதையுங்கள்
அறிவார்ந்த அனுபவசாலிகள் ஆலோசனை பெறுதல் அவசியமா?
எழுத்து இதயத்தின் மொழிபெயர்ப்பு
காய்ச்சலால் வரும் வலிப்பு
மாற்றம் தேவையா?
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி
எண்ணத்தில் புதுமை…! சாதிப்பில் பெருமை…!!