Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

ஒரு மனிதன் எப்படி வாழ்ந்து மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்…?

– சுரதா, பாலக்காடு

சுமார் 2 லட்சம் ஆண்டுகளாக மனித இனம் (Homo sapiens) வாழையடி வாழையாக, வாழ்ந்து வருகின்றது.  நமது பெற்றோரிடமிருந்து நாம் வந்திருக்கிறோம்; ஆனால் நாம் மட்டும் நவீன உலகில், விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட நிலையில், இன்றைய தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். முன்னர் வாழ்ந்தவர்கள் மறைந்துவிட்டார்கள்.

நமது சந்ததிகள் பிறந்து வளர்ந்த நிலையில் நாம் மறைந்து விடுவோம். நமது வாழ்நாள் சுமார் 25,000 நாட்கள்தான், மிஞ்சிப்போனால் இன்னும் 5000 நாட்கள் அதிகமாக வாழ்வோம், அவ்வளவுதான். 100 ஆண்டுகள் கழித்து இந்தப் பூமியில் வேறு ஆட்கள் ஜீவித்திருப்பார்கள். ஆனால், அவர்களுடைய உடலில் நமது இரத்தம் இருக்கும்.

அதாவது, விஞ்ஞான ரீதியாகச் சொல்லப்போனால் நமது மரபணுக்கள் (Gene) நிலைத்து இருக்கும். மனிதனின் மரபணுக்கள் மரிப்பதில்லை; அது அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடந்து சென்று கொண்டிருக்கும். நமது உடல் அழிந்தாலும் நமது மரபணுக்கள் நமது பிள்ளைகள் மூலமாக பல நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும். மரபணுக்களுக்கு மரணமில்லை…! இது விஞ்ஞான உண்மை; அதைப்பற்றி இன்னும் தெரியவேண்டுமானால், இயற்கை உயிரியல் விஞ்ஞானி ரிச்சர்டு டாக்கின்ஸ் எழுதிய “ “The Selfish Gene” என்ற விஞ்ஞான காவியத்தைப் படியுங்கள்.

ஆக, நாம் பிறந்தது ஒரு உயிரியல் சம்பவம் அவ்வளவுதான். ஆனால், எப்படி வாழ்வது என்பது அவரவர் சூழ்நிலை தீர்மானிக்கும் அல்லது அவரே தான் தீர்மானிக்க வேண்டும். பிறக்கும்போது இவரது வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்;இப்படிப்பட்ட வேலைதான் செய்வார், இப்படிப்பட்டவரைத்தான் திருமணம் செய்வார், இன்றைய தினம்தான் இறப்பார் என்றெல்லாம் முன்னரே முடிவானது என்று சொல்லுவதை நம்ப முடியவில்லை. ஏனென்றால், அதற்கு ஆதாரம் இல்லை. மறைந்த மாமனிதர், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம்  “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார். இது எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமான, உற்சாகமூட்டும் ஒரு யதார்த்த வாசகம்…?

நாம், நாமாக சரித்திரம் படைக்க வேண்டும். ஆக, வாழ்க்கையை சரித்திரம் ஆக்குவதும் சாதாரணம் ஆக்குவதும் அவரவர் விருப்பத்தையும் முயற்சியையும் பொறுத்தது, அவரது தலை எழுத்தைப் பொறுத்து அல்ல…

ஒருவர் இறக்கும்போது அவரைப்பார்த்து எவரும் பொறாமைப்பட மாட்டார்கள்; ஆனால், டாக்டர் அப்துல்கலாம் இறந்தபோது, அப்படி ஒரு ஏக்கம் பலருக்கு வந்தது என்று ஒரு குறுஞ்செய்தி உலா வந்தது.. அப்படி ஒரு நல்ல மரணம்; அவர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார். அவர் மறைந்த போது வருத்தப்படாத மனிதர்களே இல்லை எனலாம்…! வாழ்க்கை என்றால் அப்படி வாழவேண்டும்; அல்லது அப்படி சாகவேண்டும். டாக்டர் அப்துல்கலாம் மரித்தபோது நாம் அனைவரும் அழுதோம். ஒருவர் மரித்தபோது எத்தனைபேர் அழுதார்கள் என்பதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு எனலாம்…

ராபின் சர்மா என்பவர் இந்திய வம்சாவளி அமெரிக்கர், சிறந்த நூலாசிரியர்; அவரது அனைத்து நூல்களையும் படித்து விட்டேன். “ Who will cry when you die…? என்பது அவரது முன்னணி புத்தகம். நீ இறந்த பின் யார் அழுவார்கள்…? என்ற நூலில், வாழ்நாள் முழுவதும் எப்படி வாழ்ந்தோம் என்பது தினம்தினம் எப்படி வாழ்ந்தோம் என்பதைப் பொறுத்து அமைகிறது என்கிறார். எனவே, இன்றைய தினத்தில் எப்படி வாழ்வது என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் திறவுக்கோல் எனலாம்.

“பிறந்தபோது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது மற்றவர்கள் அழுதால் உன் ஆத்மா மகிழும்” எனப் பேசும் ராபின் ஷர்மா இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் பரவலாகப் பேசப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது. அவற்றை உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும் வைக்கின்றேன். இன்று, இப்போது இங்கே அறிவுப்பூர்வமாக வாழ்ந்தால் ஒருவருடைய வாழ்வும், சாவும் நல்லதாகவே இருக்கும் என்பதை அவை உணர்த்துகின்றன.

 1. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றைக் கற்றுத்தருகிறார். எனவே, நீங்கள் சந்திப்பவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள்.
 2. எந்தத்துறையில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் செலுத்துங்கள். மற்றவிஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
 3. கவலைப்படாதீர்கள், மிகவும் அவசியம் என்றால் கவலைப்படுவதற்கென ஒவ்வொரு நாளும் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகளையும் போக்குவது குறித்து சிந்தியுங்கள்.
 4. அதிகாலையில் 5 மணிக்கு எழுங்கள், வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே. ஒரு நாளின் நல்ல நாளும் காலைப்பொழுதான்.
 5. நிறைய சிரியுங்கள், அது நல்ல ஆரோக்கியத்தையும், உற்ற நண்பர்களையும் பெற்றுத் தரும்.
 6. எண்ணற்ற புத்தங்களைப் படியுங்கள் எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள் காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள் (ஆனால் நல்ல புத்தகங்களை மட்டும் தேர்வு செய்யுங்கள்)
 7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் வரிசையாக எழுதுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போது மனபாரம் கணிசமாக குறையும். பிரச்சனைகளுக்கான தீர்வு மனதில் உதிக்கும். இதன்மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
 8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக நினையுங்கள். அவர்களுக்கு தரும் நேரம் தான் நீங்கள் தரக்கூடிய சிறந்த பரிசு.
 9. தனக்கு வேண்டியதைக் கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாள் போலத் தெரிவான் கேட்கக்தவறியவன் வாழ்நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும். வேண்டியதைக் கேளுங்கள், கேட்பதில் தவறில்லை. கேட்பது என்பது ஒரு கலை.
 10. உங்கள் பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள் உதாரணமாக நல்ல புத்தங்கள் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் பற்றி சிந்திப்பதிலோ செலவழிக்கலாம்.
 11. எந்த ஒரு புது பழக்கமும் தொடங்க, பின்னர் அது உங்கள் வாடிக்கையாகக் குறைந்தது 21 நாட்களாவது ஆகும். அதுவரை பொறுத்திருந்து, தொடர்ந்து அந்த நல்ல செயலை செய்து நல்ல பழக்கங்களைப் பழகுங்கள்.
 12. உங்களுக்கு பிடித்த இசையைக் கேளுங்கள். மனதுக்கு இதமான இசை புன்னகையையும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும்.
 13. புது மனிதர்களிடம் தயங்காமல் பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கக்கூடும்.
 14. பணம் மட்டும் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன் பலருடன் பழகுங்கள்.
 15. எதிலும் வித்தியாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
 16. நீங்கள் படிக்கத் துவங்கும் எல்லாப் புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணி நேரத்தில் அந்த நூல் உங்களை ஈர்க்கா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
 17. உங்கள் கைபேசி உங்கள் வசதிக்காக தான் அது அடிக்கும் போதெல்லாம் பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேலைகளில் இருக்கும் போது தொலைபேசியை எடுத்து பேசாதீர்கள்
 18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்றவர அவை உதவும்.
 19. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு கிளம்பும் போது மனைவி / குழந்தைகளுக்கு ஏதாவது எடுத்துச் செல்லுங்கள். சின்னச் சின்ன பரிசுகள் பெரிய பெரிய ஆனந்தத்தைத் தரும்.
 20. எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான மனிதராயிருங்கள் டாக்டர் அப்துல்கலாம் போன்று வெற்றி பெற்றசிறந்த மனிதர் எளிமையானவர்களே.

மேற்கண்ட ஆலோசனைகளில் ‘ஆற்றல் உண்டு’ என்று நீங்கள் கருத்தினால் அவற்றைசெயல்படுத்திப் பாருங்கள்; உங்கள் வாழ்க்கை சிறப்பாகும், மரணம் கூட.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2015

அவதூறு அவசியமல்ல
மனதில் உறுதி வேண்டும்
இந்த உலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும்
மனித வாழ்வில் துலங்காத மர்மங்கள்
பஞ்சதந்திரம் புத்தகங்களுக்கான நேரம்
சத்தும் சக்தியும்
ஓட்டம்
தன்னம்பிக்கையை நாளும் விதையுங்கள்
அறிவார்ந்த அனுபவசாலிகள் ஆலோசனை பெறுதல் அவசியமா?
எழுத்து இதயத்தின் மொழிபெயர்ப்பு
காய்ச்சலால் வரும் வலிப்பு
மாற்றம் தேவையா?
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி
எண்ணத்தில் புதுமை…! சாதிப்பில் பெருமை…!!