Home » Articles » என் பள்ளி

 
என் பள்ளி


ஆசிரியர் குழு
Author:

முனைவர் கு. கிரிஜா ராஜராம்

குமாரசாமி ராஜராம் அறக்கட்டளை

மதுரை.

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற

விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”.

– பாரதியின் வரிகளை உண்மையாக்கியவர் முனைவர் திருமதி கு.கிரிஜா ராஜராம் அவர்கள் ‘என் பள்ளி’ நினைவுகள் குறித்து அவரிடம் நாம் கேட்டபோது அவர் பகிர்ந்து கொண்ட சாதிப்பு வரிகள்….…

சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் என்னும் அழகிய கிராமம். தந்தை குப்புசாமி, தாய் தனலட்சுமி ரங்கநாயகி இருவரும் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்றார்போல் எனது உடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர் 6 சகோதர்கள்   5 சகோதரிகள். எனது குடும்பம் பெரியதாக இருந்தாலும் என்பெற்றோர்கள் எவ்வித கஷ்டமுமின்றி எங்களை வளர்த்தார்கள்.

நான் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை போடிநாயக்கனூரிலுள்ள “ஜமீன் தாரணி காமுலம்மாள்” துவக்கப் பள்ளியில் பயின்றேன். அடுத்து 5ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தேனி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றேன். எனது பள்ளி வாழ்க்கை முழுவதும் தமிழ் வழிக் கல்வியாக பயின்றேன். என்னுடைய பத்தாம் வகுப்பிலே பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன்.

இதற்குக் காரணம் என்பள்ளி ஆசிரியர்களில் ஒருவரான சமூக அறிவியல் ஆசிரியர் திருமதி ஆண்டாள் என்பவர். இவர் என்னுடைய வகுப்பு ஆசிரியராக இருந்தார். இவர் பாடம் நடத்தும் போது பாடத்துடன் தங்களின் வாழ்க்கையையும் பாடமாக சொல்வார். அது மட்டுமல்லாமல் கடந்த வந்த பாதையில் சந்தித்த இன்ப துன்பமான நிகழ்வுகளை வகுப்பில் சொல்வார் இது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பள்ளியில் இவர் எப்பொழுதும் நம்பிக்கை உரிய வார்த்தைகளை மட்டுமே பேசுவார். இவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு உந்துகோலாக  இருக்கும்.

என் தாய், தந்தை இருவரும் ஆசிரியர்கள் என்பதால் எனக்கும் அந்த ஆசிரியர் பணியின் மீது திவிர ஈடுபாடு வந்தது. அதனால் பி.ஏ. ஆங்கிலம் மீனாட்சி மகளிர் கல்லூரி மதுரையில் படித்தேன். பிறகு எனக்கு திருமணம் நடந்து முடிந்தது. என் கணவர் ஓ. ராஜாராம், அழகப்பா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமணத்திற்குப் பிறகு என் குடும்பம் மற்றும் கணவர் துணையுடன் ஆங்கிலத்திலும், வரலாற்றிலும் மூன்று எம்.ஏ. பட்டங்கள் வாங்கினேன்.

என்னுடைய தீராத அறிவுத் தேடலினால் படிப்பை மேலும் தொடர விரும்பினேன். இதனால் 1988ம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பில் பயின்று அதில் தங்கப்பதக்கம் வாங்கினேன். அதன் பிறகு பி.எட், எம்.எட்,  இரண்டு பி.எச்.டி, மூன்று பி.ஜி டிப்ளமோ என கிட்டத்தட்ட 12 பட்டங்களைப் பெற்றேன்.

படிப்பை முடித்த பிறகு சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் சீதாலட்சுமி ஆச்சி பெண்கள் கல்லூரியிலே ஆசிரியராகக் கல்விப் பணியைத் துவங்கி  மூன்று வருடம் இந்தக் கல்லூரியில் பணிபுரிந்தேன். பின்பு புதுக்கோட்டை ஜே.ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓராண்டு பணி புரிந்தேன்.  பின்பு நாடார் சரஸ்வதி கல்லூரி தேனியிலே முதல்வராக 12 வருடம் பணியாற்றினேன்.

அதன் பிறகு சுமார் 6 வருடம் கோவை ஓ.எ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணி செய்து எனது 62 வது வயதிலே ஓய்வு பெற்றேன். கிட்டத்தட்ட 22 வருடம் கல்லூரியில் மாணவ மாணவிகளுடன் பணியாற்றியதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

ஓய்வு பெற்ற பிறகும் தற்போது பல கல்லூரிகளின் பி.எச்.டி ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டியாகவும்,  கரூர் மாவட்டத்திலுள்ள வள்ளுவர் அறிவியல் மற்றும், மேலாண்மை கல்லூரிக்கு சிறந்த ஆலோசகராகவும் என்னுடைய கல்விச் சேவையைத் தொடர்ந்து கொண்டுயிருக்கிறேன்.  என் கணவர் அமரர் ஆகிவிட்டார். அதனால் அவரின் நினைவாக ஒரு அறக்கட்டளை மற்றும் கல்வி நிலையத்தை உருவாக்கி வருகின்றேன். இந்த அறக்கட்டளை மற்றும் கல்வி நிலையம் பல ஏழை, எளிய மாணவர்களுக்கு நல்ல வாழ்க்கை வழிகாட்டியாக அமையும். எனது பணியைப் பாராட்டி புது டெல்லியில்  இரண்டு முறை சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது. இது மட்டும் இன்றி என் ஆசிரியர் பணியைப் பாராட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் இரண்டு முறை வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய தன்னம்பிக்கை, கடின உழைப்பு, பொறுமை, இறை நம்பிக்கை இவைகளே, இந்த வெற்றிப் பாதையைக் கடக்க பெருந்துணையாக அமைந்தது.

எதிர்கால மாணவ சமுதாயத்திற்கு நான் கூற விரும்புவது “முடியும் என்ற நம்பிக்கை, கடின உழைப்பு, நேரங்களை திட்டமிட்டு சரியாகப் பயன்படுத்துதல், நம் மேதைகளின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்துக்கொண்டு அதைக் கடைபிடித்தல் மேலும் வெறும் புத்தகப் படிப்பு மட்டும் ஒருவரை சிறந்த நிலைக்கு கொண்டு செல்லாது. ஒவ்வொரு தனிமனிதனுக்குள் ஒரு தனித் திறமை உண்டு. அந்தத் திறமையை அறிந்து அதற்கான தீவிர பயிற்சி மேற்க்கொள்ள வேண்டும்.  இவை அனைத்தும் எனது மாணவ, மாணவிகள் கடைபிடித்தால் வெற்றியின் சிகரத்தை எட்டிவிடலாம்.

“ஒரு ஆண் மகன் கல்வி கற்றால் அவனுக்கு மட்டுமே நன்மை தரும். ஆனால், ஒரு பெண் கல்வி கற்றால் சமுதாயம் முழுவதும் நன்மை பெறுகிறது”  என்பதை உணர்த்தி இருப்பதுடன்,

காலத்தை கடந்து பல சாதனை மனிதர்களை உருவாக்கி இச்சமூகத்தில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் திருமதி கிரிஜா ராஜராம் அவர்களை தன்னம்பிக்கை வாழ்த்துகிறது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2015

அவதூறு அவசியமல்ல
மனதில் உறுதி வேண்டும்
இந்த உலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும்
மனித வாழ்வில் துலங்காத மர்மங்கள்
பஞ்சதந்திரம் புத்தகங்களுக்கான நேரம்
சத்தும் சக்தியும்
ஓட்டம்
தன்னம்பிக்கையை நாளும் விதையுங்கள்
அறிவார்ந்த அனுபவசாலிகள் ஆலோசனை பெறுதல் அவசியமா?
எழுத்து இதயத்தின் மொழிபெயர்ப்பு
காய்ச்சலால் வரும் வலிப்பு
மாற்றம் தேவையா?
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி
எண்ணத்தில் புதுமை…! சாதிப்பில் பெருமை…!!