Home » Articles » என் பள்ளி

 
என் பள்ளி


ஆசிரியர் குழு
Author:

திரு.ராம்சங்கர்

பி.டெக் தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்

ஈரோடு

ஒருவனின் எதிர் காலத்தை ஏற்றமிகு ஏணிப்படிகளாக மாற்றும் மிகப்பெரிய சக்தி கல்விக்கு உண்டு. கல்வி கற்கும் ஓவ்வொருவரும் ஏதேனும் ஒரு வழியில் சாதிப்பைப் பெறுகிறார்கள்.

அந்த சாதிப்பு அவர் பயின்ற பள்ளிக்கும் கல்லூரிக்கும் மிகப்பெரிய அங்கீகாரதை கொடுக்கும் என்றால் அது மிகை ஆகாது. அந்த வகையில் இந்த ஆண்டு நடந்து முடிந்த தேசிய அளவிலான ஜெஎன்யு (JNU) நுழைவுத் தேர்வில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர் திரு.ராம்சங்கர் முதலிடம் பிடித்து அவர் பயின்ற பள்ளிக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஆண்டுத்தோறும் பயோடெக் துறையில் முதுகலை பட்டப்படிப்பு பயில்வதற்கென டெல்லியில் உள்ள ஜெஎன்யு பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு நாடு முழுவதிலும் உள்ள 12 வேளாண் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பயிலும் வாய்ப்பும் மாதத்தோறும் 4500 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

“நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பாளையம் என்ற சிறிய கிராமத்தில் தான். தந்தை சந்திரசேகர் அரசு சுகாதாரத் துறையில் நிர்வாக அதிகாரியாக(AO) பணிபுரிகிறார். தாய் மீனாட்சி ஓய்வுப் பெற்ற தபால் துறைஅலுவலர். என் சகோதரி ஜெயந்திஸ்ரீ ஓர் வீணை இசைக்கலைஞர் ஆவார்.

சிறு வயதில் இருந்தே என் தாய் செய்தித்தாள்களில் இடம் பெற்றிருக்கும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றிக் கூறி என்னை வியப்பில் ஆழ்த்துவார். நானும் ஓர் விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற ஆசை அப்போதுதான் முளைத்தது. எனவே என் இல்லமே என் முதல் பள்ளியாகும்.

என்னுடைய ஆரம்பக்கல்வியை ஈரோட்டில் இருக்கும் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன். கல்வியை மதிப்பெண்களுக்காக அல்லாமல் அறிவிற்காக போதனை செய்யும் பள்ளி அது. அங்கே நான் பயின்ற அறிவியல் பாடங்கள் இன்றும் என் கண் முன்னே நிற்பவை. அறிவியல் உண்மைகளைப் பற்றியும் அறிவியல் சாதனங்கள் இயங்கும் முறை பற்றியும் மிக எளிய முறையில் போதித்தார்கள். அதுவே என் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டியது. புத்தகப் பாடத்தோடு நின்று விடாமல் விளையாட்டு மற்றும் இசையையும் பயில ஊக்குவித்தார்கள். பேட்மிண்டன், செஸ், மிருதங்கம், கீபோர்ட் போன்றவற்றில் ஆர்வம் காட்டி வந்தேன். மாணவர்களின் முன்னேற்றங்களை மேடை மேல் அறிவித்து பாராட்டுவார்கள். அந்த கரகோசங்களே மேலும் பல சாதனைகலைப் புரியத் தூண்டும்.

அதன் பின் என் பெற்றோர்களின் அலுவலக இடமாற்றம் காரணமாக என் படிப்பை திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர் (KSR) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தேன். ஆங்கிலத்தில் வல்லமை பெற உதவியதோடு எனது வாழ்க்கையின் இலக்கைத் தேர்வு செய்ய வைத்ததும் இப்பள்ளிதான். அப்பள்ளியே உயிரியலின் பால் நான் பெற்ற ஈடுபாட்டை உணரவைத்தது.

டாக்டர் இஞ்சீனியர் தவிர உலகத்தில் வேறு மதிப்புக்குரிய தொழில்களே கிடையாது என்ற பொய்யான மாயையைக் கலைத்தார் எனது உயிரியல் ஆசிரியர் திரு. கார்த்திக் ராமலிங்கம் அவர்கள். பயோடெக் பட்டதாரியான அவர் பள்ளி ஆசிரியராக பணியில் சேருவதற்கு முன் லக்னோவில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சிக் கழகத்திலே (CDRI) ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்தார். அதன் காரணமாக அவர் நடத்தும் பாடங்கள் தனிச்சுவையை பெற்றிருக்கும். பாடத்தோடு சேர்த்து அவரின் ஆராய்ச்சி அனுபவங்களையும் பகிர்வார். அதுவே என்னை பயோடெக் துறையில் பட்டபடிப்பு படிக்கத் தூண்டியது. வேளாண் பல்கலைக் கழகத்திலே தாவரம் சார்ந்த பயோடெக் படிப்பு உள்ளதெனவும் அது மருத்துவ படிப்பிற்கு நிகரானது எனவும் எடுத்துக் கூறி என்னை அங்கே சேர வைத்தார்.

இப்பல்கலைக்கழகத்தின் பாடங்கள் அனைத்தும் செயல்முறை(project) படிப்பாகவே நடத்துவார்கள் துறைத்தலைவர் டாக்டர் சுதாகர் அவர்கள் எங்களுக்கு பாடம் சார்ந்த அன்றாடம் நடக்கக்கூடிய நிகழ்வுகளை எங்களுக்கு சொல்லி விளக்குவார். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பயோடெக்னாலஜியின் தாக்கம் எந்தளவிற்கு இருக்கிறது என்று விவாதமாக விளக்குவார். பேராசிரியர் டாக்டர் செந்தில் அவர்கள் கல்லூரியில் பயிலும் போது ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு புராஜெக்ட் கொடுத்தார். நான் மகரந்த சேர்க்கை பற்றிய தலைப்புகளில் ஆய்வு செய்தேன். இது எல்லா விதத்திலும் புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது. இவ்வாறு இங்கு பயில்வித்த ஒவ்வொரு பேராசிரியர்களும் ஒரு நல்ல அனுபவத்தை கற்றுக் கொடுத்தார்கள்.

சிறுவயதில் இருந்து விவசாயத்தில் நான் கொண்ட ஈடுபாடும் மக்களுக்குதவும் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகமும் என்னை பயோடெக் படிப்பை உணர்ந்து படிக்க வைத்தது. பயோடெக் துறையில் டாக்டர் பட்டம் பெறவேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்தது. எனவே மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகளைப் பற்றி என் மூத்த மாணவர்களிடம் கேட்டறிந்தேன். அவற்றிற்கு முதலாம் ஆண்டு முதலே தயார் செய்து கொள்ள எத்தனித்தேன்.

மிகுந்த ஆர்வத்துடன் நடத்தப்படும் தினசரி வகுப்புகளும் நுழைவுத் தேர்வுக்கான விடுமுறை நாட்களில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்புக்களும் ஆசிரியர்கள் பரிந்துரைந்த சிறந்த புத்தகங்களும் எனக்கு வெற்றிக்கான பாதையை அமைத்தது. நண்பர்களுடன் நேர்ந்த பாடம் சம்பந்தமான காரசாரமான விவாதங்களும், கலந்துரையாடல்களும் பாடத்தில் உள்ள சந்தேகங்களைப் போக்கி ஆழமான புரிதலை ஏற்படுத்தியது. ஆசிரியர்கள் சேகரித்துத் தந்த வினாத்தாள்களும் அவர்கள் கற்பித்த செயல் முறைக்கல்வியும் தேர்வை எதிர் கொள்ள அரிய பொக்கிசமாய் அமைந்தன.

ஜெஎன்யு நுழைவுத் தேர்வில் நான் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்ததைக் காட்டிலும் இத்தேர்வின் மூலம் பயோடெக் படிப்பின் மேல் எழுந்த ஆர்வமும் புரிதலுமே என்னைப் பெருமைப் பட வைக்கிறது.

“கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு” ஆகையால் மேற்படிப்புகளின் மூலம் மேலும் இத்துறைசார்ந்த அறிவைப்பெற்று மக்களுக்குதவும் கண்டுபிடிப்புகள் செய்து விவசாயத்திற்கு தொண்டாற்றுவதே என் லட்சியம்’.

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2015

என் பள்ளி
மனித வாசத்திற்கு அஞ்சும் பாம்புகள்
காலக் கணித மாமேதை
இரவா பகலா?
எழுந்து நட! சிகரம் தொட!
விடுதலை நெருப்பில் பூத்த தியாக தீபங்கள்
தாய்ப்பாலின் மகத்துவம்
வெற்றி உங்கள் கையில் 20 நேரம் இல்லையே…!
தானியங்கள் உதிராமல் இருக்க காரணமானதும் இரையை தேடி அலைந்த மனிதனை விவசாயம் செய்ய வழிவகுத்ததுமான ஜீன் (Gene) கண்டுபிடிப்பு
குணம் நாடி… குற்றம் நாடி…
தூண்டில்
இடைவெளியை பூஜ்யமாக்கும்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்