Home » Articles » மனித வாசத்திற்கு அஞ்சும் பாம்புகள்

 
மனித வாசத்திற்கு அஞ்சும் பாம்புகள்


ஆசிரியர் குழு
Author:

அ. செல்வராஜீ. M.Sc (வனவியல்)

வனஉயிரின ஆராய்ச்சியாளர்,

வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 

மேட்டுப்பாளையம்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் மனிதன் என்றால் எல்லா உயிர்களுகம் நடுங்குகின்றன. வீட்டில் திரியும் கரப்பான் பூச்சியில் இருந்து கடலிலுள்ள திமிங்கலம் வரை இடையூறு மற்றும் ஆபத்து என்றபெயரில் மனிதன் உயிர்களை கொன்று கொண்டிருக்கிறான். அவற்றுள் மிகப் பரிதாபமான நிலை பாம்புக்கே. “ஆம், பாம்பு என்று கண்ணில் பட்ட உடனேயே எல்லா மனிதரும் கத்தி கூச்சலிட்டு கையில் கிடைத்த கம்பு தடி ஏதேனும் ஒன்றைஎடுத்து அதனை அடித்து கொல்ல முயற்சிப்பது தான்.”

“அதோ, அங்கே, இதோ, இங்கே” என்று ஒரேகளேபரமாக்கி இறுதியில் பாம்பைக் கொன்று, செத்த பாம்பை ஏதோ சாதித்து விட்ட கணக்காய் கம்பில் தூக்கி வரும் ஆட்களை தான், நாம் எல்லோரும் கண்டிருப்போம். ஆனால், அந்த பாம்பு பற்றிய அறிவோ, எந்த பாம்புக்கு விஷமுண்டு, எந்த பாம்புக்கு விஷமில்லை, பாம்பு கடித்தால் என்ன முதலுதவி செய்ய வேண்டும், பாம்பு இருப்பிடத்திற்கு வராமல் இருக்க  என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஒரு தெளிவான புரிதல் நம்மில் பலருக்கு இல்லை என்பதே ஒத்துக் கொள்ளக் கூடிய உண்மை. பாம்பு என்ற உயிரின் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் பாம்புகளின் பங்களிப்பு பற்றியும் பாம்புக்கடிக்கான முதலுதவி பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன், இந்தக் கட்டுரையில் பயணிப்போம்.

நான் சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் என்னும் ஊரில் பிறந்தேன். பெற்றோர் விவசாயம் பார்த்து வருகிறார்கள். எனது பள்ளிப்படிப்பு அனைத்தும், தாரமங்கலத்திலுள்ள செங்குந்தர் மஹாஜன மேல்நிலைப்பள்ளியில் பயின்றேன். பள்ளிப்படிப்பை படிக்கும் போதே, இயற்கையின் மீதும், விலங்குகள் பறவைகள் மீதும், அளவறியா பற்று இருந்தது. இதனால், எப்பொழுதும் இயற்கையோடு இணைந்தே இருப்பேன்.

நான் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, எனக்கு பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்து, மேட்டுப்பாளையத்திலுள்ள, வனக்கல்லூரியில் பி.எஸ்.சி., வனவியல் பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். இத்துறைஎனக்கு மிகவும் பிடித்து விட்டது. காரணம், நான் தினமும் பார்த்து வளர்ந்த சூழல், அதனால் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., ஆராய்ச்சி படிப்பு ஆகிய பட்டத்தை முடித்தேன். இக்கல்லூரியில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறேன்.

பாம்புகளின் பரிணாமம்

உலகில் சுமார் 3400 வகையான பாம்பினங்கள் காணப்படுகின்றன, ஊர்வனத்தில் பாம்புகள்தான் அதிக இனங்களைக் கொண்டுள்ளன. சுமார், 10 முதல் 15 கோடி வருடங்களுக்கு முன்பு, பாம்புகள் தோன்றின. (ஆனால், மனிதன் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன்புதான் தோன்றினான்.) பாம்புகள், பல்லியினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தன.

விஷமுள்ள மற்றும் விஷமற்ற பாம்புகள்…

பாம்புகளின் விஷத்தன்மையைப் பொறுத்து, வீரிய விஷமுள்ளவை, கடுமையில்லா விஷமுள்ளவை, விஷமற்றவை என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். உலகில் காணப்படும் 3400பாம்பினங்களில் சுமார் 560 வகையான பாம்புகளே விஷத்தன்மை கொண்டவை. இந்தியாவில் காணப்படும் 276 பாம்பினங்களில், 62 பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை. 42 வகையான பாம்புகள் கடுமையில்லாத விஷமுள்ளது மற்றும் 171 பாம்பினங்கள் விஷமற்றவை. இந்தியாவிலுள்ள 62 வகையான விஷப்பாம்புகளில்,  42 இனங்கள் நிலம், நீர்நிலைகள் மற்றும் முகத்துவாரப்பகுதிகளில் இருப்பிடமாகக் கொண்டுள்ளது.

20 இனங்கள் கடலில் வசிக்கின்றன. இந்தியாவிலுள்ள விஷப்பாம்புகளில் அவற்றில் பரவல், மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் காணப்படும். விஷத்தன்மை மற்றும் கடியின் தன்மை ஆகியவற்றை அளவுகளாகக் கொண்டு பார்க்கும் போது, 4 வகையான பாம்புகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

 1. நல்லபாம்பு,
 2. கட்டுவிரியன்,
 3. கண்ணாடி விரியன்,
 4. சுருட்டை விரியன்

பாம்புக்கடி

21st Centary Tropical Necleched Desouse(Klho) உலக சுகாதார அமைப்பு பாம்புக் கடியை ஒரு கண்காணிக்கப்படாத வியாதியாக இந்த 21-ம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 1 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள். அவற்றில் சரியான முதலுதவி மற்றும் மருத்துவம் இல்லாத காரணத்தால் 10 ஆயிரம் பேர் பாம்புக்கடியால் இறக்கின்றார்கள். பொதுவாக நம் நாட்டில், பாம்புக்கடி இரண்டு வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

 1. நரம்பு மண்டலத்தைப் பாதித்தல் (நல்ல பாம்பு மற்றும் கட்டுவரியன்)
 2. திசுக்களைப் பாதித்தல் (கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன்)

பாம்புக்கடியின் வீரியம் மற்றும் அறிகுறிகள்…

பொதுவாக, பாம்பு மனிதனை கடித்ததை கீழ்க்கண்ட அறிகுறிகளை வைத்து அறியலாம். அவை, பாம்பு பற்கள் பதிந்த அடையாளம், கடிபட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியேறுதல், வீக்கம், நிறமாறுதல், தசைகள் இறத்தல், பாம்பின் விஷம் மனித உடலில் உள்ளே சென்றவுடன் பார்வை மங்குதல், காதுகேட்காமல் இருத்தல், அதிகமாக வேர்த்தல், மூச்சுத்திணறல், நடுக்கம், பார்வை நிலைகுலைதல், கண் சொருகுதல், வாயில் நுரைவருதல், தலைச்சுற்றல், அதிகப்படியான இதயத்துடிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். ஒருவரை பாம்பு கடித்தால் எவ்வளவு நேரம் உயிருடன் இருப்பார்கள் என்பதை பின்வரும் காரணிகளைப் பொறுத்து பாம்புக்கடியின் வீரியம் வேறுபடும். அவை கடிபட்டவரின் வயது, பாலினம் மற்றும் ஆரோக்கியம், பாம்பின் நீளம், பாம்பின் வயது, பருவகாலம், பாம்புத்தோலுறிப்பு காலம், கடிபட்டவரின் மனநிலை, கடிபட்ட இடத்தை அதிகமாக அசைத்தல், பயம், கடிபட்ட இடம், பாம்பின் பல்லின் தன்மை மற்றும் முதலுதவி சிகிச்சை.

“பாம்பின் கடியை கூட நீங்கள் பொருட்படுத்தாமல் இருந்து விட்டால் அந்த விஷம் கூட பயன்னற்றதாகி விடும்”-  சுவாமி விவேகானந்தர்

பாம்புகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள சில முன்னெச்சரிக்கை வழிமுறைகள்

 • நம் சுற்றுப்புறத்திலுள்ள, பாம்புகளைப்பற்றியும், அதனுடைய வாழ்விடங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
 • வீடு, தொழிற்சாலை, வேலை செய்யும் இடங்களையும் அதனை சுற்றியுள்ள இடங்களை எலிகள், குப்பை, கற்குவியல், கட்டுமான பொருட்கள், விறகு, உணவுக் கழிவுகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • பாம்புகள் அதிகமாக உள்ள இடங்களில் தரையில் படுப்பதை தவிர்க்க வேண்டும்
 • இரவில் வெளியே செல்லும் போது டார்ச் லைட், கம்பு, குச்சியால் தரையை தட்டிச் செல்லவும்.
 • வீடுகளில் & வேலை செய்யும் இடங்களில் பாம்பை பார்த்தால் அடிப்பதை தவிர்த்து தப்பித்து செல்ல வழிவகை செய்யவும் அல்லது வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
 • பாம்புகளைக் கையாளுவதை முற்றிலுமாக தவிர்க்கவும். மேலும் பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவிகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது..

பாம்பு கடிக்கான முதலுதவிகள் செய்யக்கூடாதவை

 • கடிப்பட்டவர் நடக்கவோ, ஒடவோ கூடாது.
 • கடிப்பட்ட இடத்தை வாய்வைத்து உறியவோ, கயிறு கட்டவோ, பிளேடால் கிழிக்கவே கூடாது.
 • கடிப்பட்ட இடத்தில் இராசயனப்பொருள் மற்றும் மருந்துப்பொருள் வைக்கக் கூடாது.
 • பாடம் போடுதல், வேப்பிலை அடித்தல், நாட்டு மருந்து முதலானவற்றைநாடக்கூடாது.
 • வரி நிவாரணத்திற்காக எவ்வித மாத்திரையே, மதுவோ எடுத்துக் கொள்ளக்கூடாது.
 • அதிகமாக தண்ணீர், சோடா, மற்றும் குளிர்பானம் அருந்தக்கூடாது.
 • கடித்த பாம்பினை அடித்தோ (டிச) பிடிக்கவேண்டிய அவசியமில்லை. உடலில் ஏற்படும் முதற்கட்ட அறிகுறியைக் கொண்டே சிகிச்சை வழங்கிடமுடியும்.

பாம்புகளைப்பற்றிய மூடநம்பிக்கை….

 1. நல்ல பாம்பு மகுடியின் இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.
 2. நல்லபாம்பும், சாரைப்பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண்பெண் பாம்புகள்.
 3. நல்ல பாம்பு மிகவும் வயதானவுடன், தன் தலையில் மாணிக்ககல் வைத்திருக்கும்.
 4. நல்லபாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்று விட்டால், அதன் ஜோடியைக் கொன்றவரை பலிவாங்கும்.
 5. பச்சைப்பாம்பு கண்களைக் கொத்தும்.
 6. கொம்பேறி மூக்கன் மனிதனைக் கடித்துக் கொன்று விட்டு, மரத்தில் ஏறி மனிதனின் உடல் எறிவதை பார்க்கும்.

இவையெல்லாம், முற்றிலும் தவறான நம்பிக்கையாகும்.

செய்யக்கூடியவை

 • கடிப்பட்ட நபரை பயமின்றி அமைதியான மனநிலையில் வைத்திருக்க வேண்டும். பயத்தால் இரத்த ஓட்டம் அதிகமாகி விஷம் வெகு விரைவாக உடல் முழுவதும் பரவும்.
 • பாம்பு கடித்தால் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைக்கவும் அல்லது அது வருவதற்குள் கடிப்பட்டவர்க்கு முதலுதவி சிகிச்சை அளித்திட வேண்டும்.
 • பாம்புக் கடிக்கு அரசுத் தலைமை பொது மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை உண்டு. தனியார் மருத்துவமனையை நாடினால் பணமும், உயிர்காக்க மிக அவசியமான நேரமும் விரையமாகும்.
 • கடித்தது எந்தவகை பாம்பு என்று தெரிந்திருந்தால் நல்லது. இல்லையென்றால் கடியின் அறிகுறியை வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
 • கடிப்பட்டவர் மோதிரம், வளையல், இறுக்கமான காலணி போன்றஅணிகலன்கள் அணிந்திருந்தால் கழற்றி விடவும். மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.

முதலுதவி (நல்ல பாம்பு, கட்டுவரியன்)

Pressure Immobilization Method

பிரசர் இம்மொபல்லைஸேசன் மெத்தேடு

 1. முதலில் கடிப்பட்ட இடத்தின் மீது சுத்தமான பஞ்சு (அ) துணி கொண்டு மூடவேண்டும்
 2. கடிப்பட்ட இடத்தில் துவங்கி மேற்புறமாக பேண்டேஜ் கொண்டு கட்ட வேண்டும். (போண்டேஜ் இல்லாத போது, சேலை. வேட்டி, துப்பட்ட (அ) ஏதாவது துண்டை பயன்படுத்தலாம்.
 3. கால் முறிவிற்கு கட்டுப் போடும் அளவிற்கு இருக்கமாக இருக்க வேண்டும். தேவையற்றஅசைவுகளைத் தவிர்க்க வேண்டும்.
 4. பிறகு ஒரு குச்சியை கட்டின் மீது வைத்து கடிப்பட்ட இடத்தின் மேல் மற்றும் கீழ் புறமுள்ள மூட்டுகள் அசையாதவாறு கட்ட வேண்டும். பிறகு நடக்கவோ, ஓடவோ கூடாது.
 5. கைகளால் கட்ட நேர்ந்தால் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம். கைமுறிவிற்கு போடும் கட்டுபோல கை அசையாதவாறு கழுத்துடன் இணைத்துக் கட்ட வேண்டும்.

பாம்புகளைப் பாதுகாப்போம்….

நம் சுற்றுப்புறசூழலில், சமன்பாட்டில் பாம்புகள் முக்கிய பங்கு வகிக்கும் உயிரிகள் ஆகும். பாம்பினத்தில் எந்தவொன்றைக் கண்டாலும், நம் உயிருக்கு ஆபத்து என்று அடித்து கொல்ல செய்ய முற்படுகிறோம். மனிதனின், மனிததன்மையற்ற செயல்களால், பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. வேட்டையாடுதல், மக்கள் தொகைப் பெருக்கம், இயற்கை வளங்கள் அழிதல், தொழிற்சாலைகளில் கட்டிடங்கள், பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மாசுபட்டு பாம்பினங்கள் அழிகின்றன.

பாம்பின் வாழ்விடமான புற்றுகளை மூடநம்பிக்கையுடன் பூஜைபோட்டு சடங்குகள் செய்வதால், பாம்புகள் பெரும் தொல்லைகளுக்கு ஆளாகின்றன.

பாம்புகள் சில தவிர்க்க முடியாத நிலையில்தான் நம்மைக் கடிக்கிறது. அதுவும் கூட தற்காப்பு செயல்தான். உலகில் பாம்புக்கடிக்கு அதிகமாக இறப்பவர்களின் பட்டியலில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. விஷப்பாம்பு அதிகம் உள்ள நாடு ஆஸ்திரேலியா, அங்கு மக்களிடம் பாம்புகள் பற்றி சரியான விழிப்புணர்வும், முதலுதவி பற்றிய அறிவும் உள்ளது. அதனால், வருடத்திற்கு பத்திற்கும் குறைவான மக்களே இறக்கின்றனர். மனிதர்களுக்கு இந்த உலகில் வாழ எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே

போலவே, இப்பூமியில் உருவான ஒவ்வொரு உயிரினமும் வாழ உரிமை உள்ளது. மின்சாரம், ஆபத்தானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவற்றைஅறிவியல் பூர்வமாக கையாளுகிறோம். இதைப்போலவே, நாம் பாம்புகளையும் பாதுகாக்க வேண்டும்.

பாம்புகளையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்போம்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2015

என் பள்ளி
மனித வாசத்திற்கு அஞ்சும் பாம்புகள்
காலக் கணித மாமேதை
இரவா பகலா?
எழுந்து நட! சிகரம் தொட!
விடுதலை நெருப்பில் பூத்த தியாக தீபங்கள்
தாய்ப்பாலின் மகத்துவம்
வெற்றி உங்கள் கையில் 20 நேரம் இல்லையே…!
தானியங்கள் உதிராமல் இருக்க காரணமானதும் இரையை தேடி அலைந்த மனிதனை விவசாயம் செய்ய வழிவகுத்ததுமான ஜீன் (Gene) கண்டுபிடிப்பு
குணம் நாடி… குற்றம் நாடி…
தூண்டில்
இடைவெளியை பூஜ்யமாக்கும்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்