Home » Articles » விடுதலை நெருப்பில் பூத்த தியாக தீபங்கள்

 
விடுதலை நெருப்பில் பூத்த தியாக தீபங்கள்


சொக்கலிங்கம் சிவ
Author:

உலகம் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்தியா விழித்திருந்த காலம் நாம் காணாத வரலாற்றுக் காலமாகும். விழிமூடி இருந்தோர் விழித்தெழுந்து விரைந்து உலகை வலம் வந்தபோது நாம் கண்ணுறக்கம் கொண்டோம். அதன் விளைவாக ஆங்கிலேயர்கள் ஆள வந்தவர்களாகவும் ஆகிவிட, இந்தியர்கள் ஆண்டானின் அடிமைகளாய் வாழ நேர்ந்தது. நமது துயில் கலைந்து உலகை உள்ளவாறு உணரத் தொடங்கியபோது நமது நிலைமையையும் உணர்ந்தோம். அப்போதுதான் விடுதலை என்ற வேட்கையையும் சுதந்திரம் என்னும் காற்றையும் சுவாசிக்க புறப்பட்டோம்.

காலவெள்ளத்தால் அழிக்க முடியாத, உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும் புகழ், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், மானம் காத்த மாவீரர்களுக்கும் பூமியில் என்றைக்கும் ஒரு இடமுண்டு. இதைப்பற்றி ஓரிடத்தில் ரஸ்கின் கூறுவார் “எவனுடைய இதயம் மிருதுவாகவும் இரத்தம் வெதுவெதுப்பாகவும், மூளை வேகமாகவும், ஆன்மா அமைதியாகவும் ஆகிக் கொண்டுள்ளதோ அவனே வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டுள்ளான்” என்பார். . “வரலாறு எப்போதும் வடுக்களை வரவு வைத்துக்கொள்கிறது. அடித்தவர்களின் பெயர்களை அடித்துவிட்டு அடிப்பட்டபவர்கள் பெயரை அடிக்கோடிட்டு கௌரவப்படுத்துகிறது” என்பார் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் இறையன்பு.

“சொல்கிறார்கள் கிளியின் கூண்டை

திறந்து விடு! முரண்படுகிறேன்…

‘உடைத்து விடு’ – இது உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் கோபக்கொப்பளிப்பு.

“போராளிகள்  செத்துக் கொண்டிருக்கும்

‘மண்’ என்றார்கள் என் மண்ணை திருத்தினேன் போராளிகள்  பிறந்து கொண்டிருக்கும் மண்” – என்று காசி ஆனந்தன் கவிதை முழக்கம் செய்வார்.

“தங்க வளையலைக் கழற்றி போராளியிடம் தந்தாள்

செலவுக்கு வைத்துக்கொள் உங்களில் பலருக்கு கைகளே இல்லை ….

எனக்கு எதுக்கு வளையல்?”

இப்படி கனல் தெறிக்கும் கவிதைகளை காசி ஆனந்தன் கனன்றிருக்கிறார்.

விடுதலை வித்திட்ட குதிராம் போஸ் என்ற வீரமகனை தூக்குத்தண்டனை கைதியாக்கி சிறைக்கொட்டத்தில் அடைத்திருந்தார்கள். அறையின் சுவற்றில் கறிக்கோடுகளால் இப்படி கிறுக்கியிருந்தான்.

“ஒருமுறைவிடை கொடு அம்மா

சிரித்த முகத்தோடு உன் மகன்

தூக்குக் கயிற்றை ஏற்றுக்கொள்வதை

இவ்வுலகம் பார்க்கும்…

ஒருமுறைவிடைகொடு அம்மா

மீண்டும் நான் சித்தியின் வயிற்றில்

மகனாக பிறப்பேன். பிறந்திருப்பது

நான்தான் என்பதையறிய

குழந்தையின் கழுத்தைப் பார்

தூக்குக் கயிற்றின்

தழும்பு அதில் இருக்கும்”

இப்படி வீரம்செறிந்த விடுதலை

வீரர்களின் களமே நம் பாரதம்.

“தியாகத்திற்கு லாபக்கணக்கு தெரியாது. தியாகம் என்பது மேகத்தைப் போன்றது. அது ஊருக்காகவே பொழிகிறது; ஊருக்காகவே அழுகிறது. தியாகம் என்பது வெறும் அலங்கார வார்த்தை அல்ல. அது மானுட தர்மத்தின் ஆணிவேர்”.

பதினெட்டாம் நூற்றாண்டுத் தமிழகம் ஒரு வால்டேர் ஒரு ரூஸோ, ஒரு மாண்டஸ்கு என அறிவுலக அறிஞர்கள் எவரையும் பெறவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் கொடுமை கண்டு கொதித்தெழுந்த ஒரு கட்டப் பொம்மனை பெறத்தவறவில்லையே? இந்த மண்ணின் மைந்தர்களது அவலம் கண்டு மானங்காத்திட மக்களை தட்டி எழுப்பிய மருதுபாண்டியர்களைப் பெறத் தவறவில்லையே? புவியாளப் பிறந்தோர் பூனைகளால் நடத்தப்படுவதைக் கண்டு புலியென பாய்ந்திட்ட பூமித்தேவனை பெறத்தவறவில்லையே?

சுதந்திரப் போருக்கான முதல் தீ தமிழகத்திலிருந்து தான் பரவியது என்பதை யாரும் மறத்திட முடியாது. பதினைந்து வயதுச்சிறுவன் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக 1921-ல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். ‘உன் பெயர் என்ன? இது நீதிபதி, அவன் ‘சுதந்திரம்’ என்றான். எங்கே வீடு? அவன் ‘சிறைச்சாலை’ என்றான். இதற்காய் இந்த வயதிலும் 15 கசையடிகளைப் தண்டனையாக பெற்றவர், ஒவ்வொரு கசையடிக்கும் மகாத்மா காந்திக்கே ஜே! என்று முழக்கமிட்டவன்.

நாடாளுமன்ற குண்டுவீச்சு வழக்கில் பகத்சிங்குக்கும், தத்துக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. லாகூர் சதி வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. வழக்கு விசாரணை நடந்த 18 மாதங்களில் பகத்சிங்கும் தோழர்களும் அரசியல் கைதிகளுக்கான உரிமைகளுக்காக நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்கள் இரக்கமில்லா அரக்கனையும் உருக வைக்கக் கூடியவை.

சுதந்திர போராட்ட வரலாற்றில் 1931, மார்ச் 23 துயரம் தோய்ந்த துக்கநாள், கறுப்புநாள். அதுதான் பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் மூவரும் ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட நாள். நம் தேசம் விடுதலை பெறஇப்படி; இப்படி எத்தனை தூக்கு; கசையடிகள்; துப்பாக்கித் தோட்டாக்களின் நாக்குகள்…

ஆயுள்தண்டனைப் பெற்ற பகத்சிங்கிடம் தன் நண்பர்களில் ஒருவனான ஜெயதேவ் கபூர் கேட்கிறான், ‘சர்தார் (பகத்சிங்) நீ மரணத்தை நெருங்கிவிட்டாய் இதற்காக நீ கவலைப்பட வில்லையே? என்று கேட்டதும் உரக்கச் சிரித்தவன் பகத்சிங். தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல ஆட்கள் வந்து அவசரப்படுத்திய போது லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த பகத்சிங், ‘ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனோடு பேசிக் கொண்டிருக்கிறான் – கொஞ்சம் பொறுங்கள்’ என்றார்.

தன்னுடைய தம்பி குல்வீருக்கு பகத்சிங் எழுதிய கடைசி கடிதத்தில், ‘நாளை காலை மெழுகுவர்த்தியின் ஒளி மங்குவதுபோல் நானும் காலை ஒளியில் கரைந்து போவேன். ஆனால் நம் நம்பிக்கைகளும், குறிக்கோள்களும் உலகுக்கு என்றும் ஒளியூட்டும். இன்றுபோய் நாளை மீண்டும் பிறப்போம்… எண்ணற்ற இந்நாட்டின் வீரர்கள் வடிவில் என்று எழுதினான்.

மனிதருள் மாணிக்கம் பண்டித ஜவஹாலால் நேருவும், உத்தமர் மௌலானா அபுல்கலாம் ஆசாத்தும் சுதந்திரப் போராட்ட காலத்தில் எரவாடா சிறைச்சாலையில் வெள்ளைய அரசாங்கத்தால் அடைக்கப்பட்டிருந்தார்கள். ஆசாத்தின் மனைவியார் திருமதி சுலைகாவும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். மனைவி மரணத்தருவாயில் இருக்கும் செய்தி கேட்டபோதும் பரோல் சென்று மனைவியை பார்க்க வெள்ளையர்களிடம் கையேந்தமாட்டேன் என்று நேருவிடம் கூறினார்.  இறுதிக்கட்டத்தில் அன்னையார் இறந்த செய்தி கேட்டும் இறுதிச்சடங்கிற்கு கூட பரோல் கையெழுத்திட்டு பார்க்க செல்லவில்லை. விடுதலையாகி, தண்டனைக்காலம் முடிந்து தம்முடைய மனைவியின் கல்லறைக்கு சென்று வழிபாடு செய்கிறார்.  இது மானத்தைப் போற்றி வாழ்ந்த ஒரு மாமனிதன் புதிய வரலாறு.

மனைவியின் மரணத்தைக் கூட பார்க்காத மானங்காத்த வரலாற்று புருஷர்கள் வாழ்ந்த பூமியிது. இந்த கர்மபூமியில் நாம் பிறந்தது என்பதே நமது பெரும்பாக்கியம், கருணையுள்ள இதயம் படைத்தவர்கள் விரல்களை நீட்டினால் வித்தகம் விளையும், விழிகளைக் காட்டினால் வித்தைகள் நிகழும் தருகிறபழக்கத்தை விண்ணிலிருந்தும் தக்க வைத்துக் கொள்கிறபழக்கத்தை மண்ணிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் சுதந்திர கீதத்தை வீதிதோறும் வீசிவந்தவன் பாட்டுப் புலவன் பாரதி”.

மதுரைக்கு நேர் கிழக்கே

மழை பெய்யாக் கானலே

மடிப்பிச்சை கேட்டு எங்கள்

மண் அழுத காரணத்தால்

பருவ மழை பந்தலிட்டு

வந்தவன் நீ !

சிற்பியின் கவிதைகளே இதற்கு சான்றுகாட்டி நிற்கிறது. ஒருமுறைகவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி மேடையில்

பாரதி மீண்டும் பிறக்க நீ தயாரா?

உன்னை சுமப்பதற்கு என்

கருப்பை தயார் என்று கூறியபோது பலரும் கவிஞரோடு சேர்ந்தே கண்கலங்கினார்கள் என்றசெய்தியைப் படித்தபோது நானும் கலங்கித்தான் போனேன்.

காந்தி… பாரதத்தாய் பெற்றெடுத்த தலைமகன். சுதந்திரம் பெற்றுத்தந்த சூரியபுத்திரன். காந்தியம் என்பது ஒரு வறட்டு சித்தாந்தமில்லை அது ஓர் வாழ்க்கைமுறை. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தியடிகள் 2089 நாட்கள் சிறைவாசம்; தென் ஆப்பிரிக்காவில் 249 நாட்கள் சிறைவாசம். காந்தியடிகள் மறைந்தபோது “இந்த பூமியில் இத்தகைய மகாபுருஷர் ஒருவர் வாழ்ந்தாரா என்பதை வருங்காலத்தலைமுறையினர் நம்புவது கூட சிரமமானதாக இருக்கும்” என்று ஜன்ஸ்டீன் கூறியுள்ளார். சுதந்திரக்காற்றை சுவாசிக்க வைத்த பெருமகனுக்கு சுதந்திரமாய் விடைக்கொடுத்தான் நாதுராம் விநாயக் கோட்சே ‘பேரட்டா’ என்றகைத்துப்பாக்கியால் சுட்டான் அப்போது “ஹேராம்” என்று இறைவனின் பெயரை உதட்டுக்குள் உச்சரித்தவாறே மரணத்தின் பள்ளத்தாக்கில் மடிந்துப்போனார்.

விடுதலை வேள்வியில் தன்னை முழுவதும் அர்ப்பணித்தவர் ஜவஹர்லால் நேரு விடுதலையின் பயனை நேருயுகம் கொஞ்சம் கொடுத்தது; முழுவதும் கொடுக்கவில்லை. ஆசிய ஜோதி அணைந்தது.  அவர்தம் உயிலின் ஒருபகுதி… “”என் அஸ்தியில் பெரும் பகுதியை வேறு விதமாகக் காலி செய்ய வேண்டும்; அதை ஒரு விமானத்தில் வைத்து ஆகாயத்தில் வெகு உயரே எடுத்துச்சென்று இந்தியாவின் குடியானவர்கள் பாடுபட்டு உழைக்கும் வயல்கள் மீது அந்த உயரத்திலிருந்து தூவ வேண்டும் என்று விரும்புகிறேன்; இதன்மூலம் (அஸ்தி) இந்தியாவின் மண்ணுடனும் புழுதியுடனும் ஒன்று கலந்து, வேறுபடுத்த முடியாதபடி இந்தியாவின் பாகமாகிவிடும்”. இப்படி முடிகிறது”.

நம் தேசம் கடந்து வந்த பாதைகளையும், சுதந்திரம் பெறுவதற்கு எண்ணிலடங்கா மான மறவர்கள் சிந்திய இரத்தமும், தூக்கு கயிற்றை முத்தமிட்டவர்களின் முழு வரலாற்றையும், கல்லடியும், சொல்லடியும் பட்ட தழும்பு முத்திரைகளும், அவர்கள் நம்பிக்கையை நட்டு வைத்தார்கள்; சுதந்திர கீதத்தை சுவாசிக்க வைத்தார்கள் என்பதை இளைய சமுதாயம் எண்ணிப்பார்த்தாலே சிகரத்திலே சிம்மாசனம் கிடைக்கும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2015

என் பள்ளி
மனித வாசத்திற்கு அஞ்சும் பாம்புகள்
காலக் கணித மாமேதை
இரவா பகலா?
எழுந்து நட! சிகரம் தொட!
விடுதலை நெருப்பில் பூத்த தியாக தீபங்கள்
தாய்ப்பாலின் மகத்துவம்
வெற்றி உங்கள் கையில் 20 நேரம் இல்லையே…!
தானியங்கள் உதிராமல் இருக்க காரணமானதும் இரையை தேடி அலைந்த மனிதனை விவசாயம் செய்ய வழிவகுத்ததுமான ஜீன் (Gene) கண்டுபிடிப்பு
குணம் நாடி… குற்றம் நாடி…
தூண்டில்
இடைவெளியை பூஜ்யமாக்கும்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்