Home » Cover Story » எழுந்து நட! சிகரம் தொட!

 
எழுந்து நட! சிகரம் தொட!


ஆசிரியர் குழு
Author:

திரு.  V.S.N. ஆறுச்சாமி M.A.,

நிர்வாக அறங்காவலர்

பொன்னு மெட்ரிகுலேசன்  மேல்நிலைப் பள்ளி,

தாராபுரம்

  • யாரும் வெறுக்காத வாழ்க்கை – எப்போதும் யாரும் மறக்காத வாழ்க்கை யார் ஒருவர் வாழ்கிறாரோ  அவரை நல்லோர்கள்  தேடி வருவார்கள் என்பதற்கு உதாரணம்  இவர்.
  • செய்யும் காரியங்களை உறுதியோடு செய்யும்போதுதான், நம்பிக்கையை எல்லோரிடமும் பெற முடியும் என்று எடுத்த செயல்களை உறுதியோடு செய்து முடிப்பவர்.
  • தன் நலம் மறந்து பிறர் நலம் பேணுவதில் முன் நிற்பவர்.
  • கால வயதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்.  மனவயதை மட்டுமே எடுத்துக்கொண்டு எப்போதும் இளைஞரைப் போல் உற்சாகமாய் உழைத்துக் கொண்டே இருப்பவர்..
  • பல பணிகள் புரிவர் என்றாலும் நேரத்தைக் கடைப்பிடிப்பதிலும் நட்புகளை உயர்த்திப் பாராட்டுவதிலும் உயர்ந்தே இருப்பவர்.
  • இப்படி பல்வேறு சிறப்புகளை தான் வாழந்த காலத்தில் பெற்றிருந்த தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர் வள்ளல் பி.எஸ். தங்கவேலு முதலியார் அவர்களின் நம்பிக்கைக்குரியவரான அரிமா  திரு. V.S.N. ஆறுச்சாமி அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி நாம்…

இந்தப் பள்ளி யாரால் எப்போது தொடங்கப்பட்டது…?

இப்பள்ளி 1967 ஆம் ஆண்டு திரு. தங்கவேல் முதலியார் அவர்களால் தொடங்கப்பட்டது. அன்றைய காலத்தில் தாராபுரம் அதைச் சுற்றியுள்ள பகுதியில் ஆங்கிலப் பள்ளிளே இல்லாத சூழ்நிலைதான் இருந்தது. ஆர்வம் இருந்தும் பள்ளி இல்லாததால்  குழந்தைகள் படிக்க முடியாத நிலையில் இருந்தார்கள்.

இதைக் கருத்தில் கொண்டு 1967 ஆம் ஆண்டு தாராபுரம், பூங்கா சாலையில் வாடகைக் கட்டிடத்தை அமைத்து ஏழை மாணவர்களைக் கொண்டு வெறும் தமிழ்வழியாக மட்டும் இல்லாமல் கிராமப்புற மாணவர்களும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் “பொன்னு இங்கிலீஷ் ஹோம் ஸ்கூல்” என்ற பெயரில் ஏழு மாணவர்களை மட்டும் கொண்டு ஆங்கிலக் கல்வியை தாராபுரத்தில் முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளிக்காக ஐந்து ஏக்கர் நிலத்தில் குறுகிய அளவில் கட்டிடத்தை அமைக்க நிதி பற்றாக்குறை காரணமாக சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று பள்ளிக் கட்டிடத்தை நிறைவு செய்து 1984 ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியைத் தொடங்கினார்.

இப்பள்ளி இப்பகுதியிலுள்ள பெற்றோரை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்தது. படிப்பை விட ஒழுக்கத்திற்கு அதிகளவில் இப்பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்படுவதால், மாணவர்களின் கல்வித் தரமும் உயர்ந்தது. பள்ளித் தரமும் வெகுவாக உயர ஆரம்பித்தது.

பள்ளியின் நிர்வாகம் தங்களிடம் வந்தது குறித்து?

வள்ளல் பி.எஸ். தங்கவேல் முதலியார் அவர்கள் நேர்மையாலும், அர்ப்பணிப்பாலும் இப்பள்ளியை மிக உயர்ந்த கல்விச்சாலையாக தரம் உயர்த்தினார். இவரும் இவரின் துணைவியார் திருமதி த. பொன்னம்மாள் அவர்களும் தங்களுக்கு  குழந்தைகள் இல்லாவிட்டாலும் தம் பள்ளி மாணவச் செல்வங்களையே தங்கள் குழந்தைகளைப் போல் பாவித்து பள்ளியை அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தி வந்தனர். ஒரு கட்டத்தில், வயது உடல்நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு நமக்கு பின் யார் நிர்வகிப்பது என்பதில், மனக்குழப்பம் எழுந்திருக்கிறது. சேவை மனப்பான்மையோடு தொடங்கிய இப்பள்ளியை தாராபுரத்தை சார்ந்த நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் நிர்வாகத்தை ஒப்படைத்து சீரிய முறையில் காலம் காலமாய் நன்முறையில் நடத்திட வேண்டும் என்று எண்ணியவர், என்னுடைய பிறந்த நாளில் என்னை வரவழைத்து எனக்குப் பின்னர் இப்பள்ளியை நீங்கள் தான் நிர்வகிக்க வேண்டும் என்று கூறினார். நான் அப்பொழுது அரிமா சங்கத்தின் தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன அந்த நிமிடம் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சற்று மன தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டேன்.

இதற்காக ஸ்ரீஇராமகிருஷ்ணா மடம் டிரஸ்ட் என்னும் அமைப்பினை 1992ம் வருடம் துவக்கி என்னை தலைவராக்கி அவரும், அவரது மனைவி த. பொன்னம்மாள் அவர்களும் உறுப்பினர்களாக இருந்து வழிநடத்தினார்கள். 1994ம் வருடம் அவரது மறைவிற்கு பிறகு அவருடைய வழிகாட்டுதலின் பேரில் இன்றளவும் செயல்பட்டு வருகிறேன்.

கே : சொந்தமாக தொழில் செய்த உங்களால் முற்றிலும் மாறுப்பட்ட கல்வித்துறையை எவ்வாறு எதிர் கொண்டீர்கள்?

கல்வி என்பது ஒவ்வொரு மனிதனை நிர்வகிக்கும் மிகப்பெரிய பொக்கிஷம். அந்தக் கல்வித்துறையை ஏற்று நடத்துவது என்பதை நான் சற்றும் எதிர்ப்பார்க்காமல் இருந்த நேரத்தில் அய்யா என்னிடம் கொடுத்தார்.

ஆனால் எனக்குள் நம்பிக்கை இருந்தது. எத்தொழில் செய்தாலும் அதில் உண்மையாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணி இதை முறையாகச் செய்தேன்.

எனக்கு உறுதுணையாக, வள்ளல் பி.எஸ். தங்கவேல் முதலியார் அவர்களின் துணைவியார் திருமதி த. பொன்னம்மாள் அவர்கள் பள்ளி தாளாளராகவும், திருப்பதி வெங்கடேஸ்வரா கட்பீஸ் உரிமையாளர் திரு வி. ராமசாமி அவர்களும், திரு. மோகன் அவர்களும் அறங்காவலர்களாக எனக்கு பலவகையில் உறுதுணையாக இருந்து வருகிறார்கள். முன்னாள் நகரத்தந்தை திரு. வெங்கிடுசாமி பி.எஸ்.சி., அவர்கள் பல ஆண்டுகள் பல வகையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.முதல்வர் திரு பெ. மணியரசன் அவர்கள் எனக்கு பக்கபலமாய் இருந்து கவனித்து வருகிறார்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும் தங்கம் பொன்னு கருணை அறக்கட்டளையின் உறுப்பினரும், மருத்துவருமான புலவர் மா. தங்கரசு B.S.M.S.,   அவர்கள் பள்ளியின் அனைத்து நிகழ்வுகளிலும் தன்னுடைய மேலான கருத்துக்களையும், ஒத்துழைப்பையும் நல்கி பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருகிறார்.

கே : போட்டிகள் நிறைந்த கல்விச் சூழலில் இக்கல்வி நிறுவனத்தை நன்முறையில் திறம்பட நடத்துவது குறித்து?

எங்கள் கல்வி நிறுவனத்தின் தாராக மந்திரமே!  “  தரமான கல்வி மற்றும் நல்லொழுக்கம் என்பதுதான்   ”

கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் இக்கல்வி நிறுவனத்தில் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் மூலம் வரும் வருமானத்தில் நானோ மற்ற குழு நிர்வாகிகளோ ஒரு ரூபாய் கூட எதிர்பார்ப்பதில்லை, எடுக்கவும் கூடாது. இப்பள்ளியின் மூலம் வரும் வருமானம் அனைத்தும் முழுக்க முழுக்க இப்பள்ளியின் வளர்ச்சிப் பணிக்கே செலவிட்டு விடுகிறோம். இதனால் இந்நிறுவனத்தை எங்களால் மேலும் மேலும் தகுதியுடையதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்குள் இருக்கிறது…

அது மட்டுமல்லாமல் எங்கள் கல்வி நிலையம் குறித்து அதிக விளம்பரங்கள், தட்டிகள், வைப்பதில்லை. தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்திற்கு விளம்பரம் அவசியமில்லை என்று கருதுகிறோம்.

கே : பெரிய நகரங்களில் இருக்கும் கல்விநிலையத்திற்கும், இது போன்ற கிராமப்புற பின்னணியில் இருக்கும் கல்வி நிலையத்திற்கும்  உள்ள வேறுபாடு என்பது…?

நகர்ப்புறங்களில் இருக்கும் கல்விநிலையத்திற்கு அந்தக் கல்வி நிலையத்தைச் சுற்றியிருக்கும் மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளியிலிருந்து நிறைய மாணவர்கள் வந்து படிப்பார்கள். அதற்கேற்றாற்போல் கட்டணம், பேருந்து வசதி, விடுதி வசதி போன்றவை ஆடம்பரமாக இருக்கும்.  ஆனால் தாராபுரம் போன்ற சிறிய பகுதியில் இருக்கும் கல்வி நிலையங்களில் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் படிக்கும் குழந்தைகள் மட்டுமே வருவார்கள். இவர்களுக்கு பேருந்தோ, விடுதியோ தேவைப்படாது. முழுக்க முழுக்க விவசாயம் செய்யும் குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகளே அதிகம் என்பதால் பெற்றோர்களுக்கு நம்பிக்கை தான் தேவைப்படுகிறது. அதனை எங்கள் பள்ளி தந்து விடுகிறது.

கே : ஒரு கல்விநிறுவனம் மேன்மை பெற வேண்டுவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு எந்த அளவில் இருக்க வேண்டும்?

ஒரு குழந்தைக்கு பெற்றோர் எவ்வளவு முக்கியமோ அதைப்போல் ஒரு கல்வி நிறுவனத்திற்கு ஆசிரியர்கள். ஒரு பள்ளியின் முதுகெலும்பு என்றே அவர்களைச் சொல்லலாம். இப்பள்ளியிலுள்ள ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பணியில் மிக சரியாக பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் முதன்மையானவராய் இருப்பவர் பள்ளியின் முதல்வர் நல்லாசிரியர் திரு. பெ. மணியரசன் அவர்கள்.  இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எளிமை, நேர்மை, உழைப்பு, கண்டிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படக் கூடியவர். இவருக்கு 2009 – 2010ம் ஆண்டு தமிழக அரசின் உயரிய விருதான நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

எந்நேரமும் பள்ளியின் வளர்ச்சிக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டே இருப்பவர். இவரின் உந்துதல்தான் இப்பள்ளியின் வளர்ச்சிப் படி நிலைகள் என்றே சொல்லலாம்.

இவருக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்களும் கடினமான உழைப்பைக் கொடுத்து மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றி வருபவர்கள்.

கே : இங்கு பயின்ற மாணவர்களின் உயர்நிலைக்குறித்து…?

ஒருமுறை நானும் எனது நண்பரும் டெல்லி செல்வதற்காக விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் இருக்கையின் பக்கத்தில் இருந்து ஒரு இளைஞன் எங்களைப் பார்த்து மிகவும் முகமலர்ச்சியுடன் ஐயா, நான் பொன்னு மெட்ரிக் பள்ளியில் தான் படித்தேன். இப்பொழுது டெல்லியில் ஆர்தோ டாக்டராக இருக்கிறேன் என்று அவரை அறிமுகம் செய்தார்.  அந்நேரம் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

இதுபோல நிறைய மாணவர்கள் வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் நல்ல சம்பளத்தோடு வேலை பார்க்கிறார்கள் என்று அந்த மாணவர்களின் பெற்றோர்கள் எங்களிடம் சொல்கிறார்கள். குறைந்த வருமானம் உடைய நாங்கள் மிகுந்த சிரமத்துடன் இப்பள்ளியில் சேர்ந்தோம். தற்போது எங்கள் குழந்தைகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று கூறும்போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது.

கே : ஆரம்பத்தில் இருந்த கல்வி நிலையம், பொறுப்பேற்ற பின்னர் இருக்கின்ற  கல்விநிலையம்  எப்படி உணர்கிறீர்கள்?

காலத்திற்கு ஏற்றாற்போல் தொழிற்நுட்பமும் மாறுகிறது. ஐய்யா ஆரம்பித்தபோது கட்டிடங்கள் அனைத்தும் ஓடுகள், பனைமரம், தென்னைங்கைகளை கொண்டு கட்டினார். ஆனால் இப்பொழுது இந்த முறையை எதிர்பார்க்க முடியாது. அரசாங்கமும் ஓடு வேய்ந்த கட்டிடங்களில் பள்ளி இயங்கக் கூடாது என்று கூறுவதால், நாகரீக வளர்ச்சிக்கு ஏற்றாற்போல், நிறைய கட்டிடங்களை ஏற்படுத்தியிருக்கிறோம்.

கணினி இயந்திரங்கள் , தொழிற்நுட்பக்கருவிகள் என்று நிறைய மாறுதல்கள். மாணவர்களுக்கென்று சிறந்த கணினி ஆய்வகங்கள், தனித்தனியான அறிவியல் ஆய்வகங்கள் என நிறைவாக கொண்டு வந்திருக்கிறோம்.

நான் பொறுப்பேற்ற காலத்தில் அதாவது 1994ம் ஆண்டு பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 561 இருந்தது… தற்போது 3250 மாணவர், மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

கே : உங்களின் தந்தையிடம் நீங்கள் கற்று கொண்டது? 

எந்தவொரு குழந்தைக்கும் பெற்றோர்களே முதன்மையானவர்களாக இருப்பார்கள். அதுபோலதான் எனக்கும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வகைப்பாடு உண்டு. எனக்கு  மாதா, பிதா, குருவாக இருந்தவர் என் தந்தைதான். என் தந்தை V.S. நாச்சிமுத்து முதலியார் அவர் வாழ்ந்த காலத்திலேயே பிரிக்கப்படாத கோவை மாவட்ட அரிசி ஆலை சங்கத்திற்கு தலைவராக இருந்தார். நிறைய கோவில்களுக்கு பொறுப்பு ஏற்று சிறப்பாக நடத்தி கொண்டு இருந்தவர். நிறைய தான தர்மங்கள் செய்தவர். அதே போல் எனது மூத்த தமையனார் V.S.N. பழனிவேல் அவர்கள் ஈரோடு அரிசி ஆலை சங்கத்தலைவராக இருந்தார்.  இவர்கள் இருவருமே எனக்கு முன்னுதாரணமாய் இருந்தார்கள். அவர்களின் இந்த குணாதிசயங்கள் என்னுள்ளும் பிரதிபலிப்பதால் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது…

என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர். நாங்கள் மதிய வேளையில் உணவு உண்ணும் போது ஒன்றாக அமர்ந்துதான் உண்ணுவோம்.

அப்படி உண்ணும் போது எனது தந்தையார், அன்றாட நிகழ்ந்த நிகழ்வுகளையோ அல்லது அவர் கற்ற அனுபவ நிகழ்வுகளையோ எங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அது எங்கள் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்து விடும். அவர் அடிக்கடி எங்களிடம் சொல்லும் வார்த்தை “சந்தர்ப்ப வசத்தால் நீ ஏமாறலாம் ஆனால், யாரையும் ஏமாற்றி விடாதே” என்பதுதான். அதனை நான் இன்றளவும் பின்பற்றி வருகிறேன்.

கே : காங்கயம் அதைச் சுற்றியுள்ள பகுதியில் அரிசி ஆலை அதிக அளவில் வந்தது குறித்து?

காங்கயத்தில் 1951ம் ஆண்டு எங்கள் சம்பந்தி K.V. அய்யாவு முதலியார் அவர்களும், எனது தந்தை திரு V.S. நாச்சிமுத்து முதலியார் அவர்களும் முதன் முதலில் அரிசி ஆலையைத் துவங்கினார்கள். அத்துறையில் நாங்கள் முதன்மை பெற்று விளங்கினோம். தாராபுரம், காங்கேயம் போன்ற பகுதிகளில் வேறு மாற்று தொழில் எதுவுமில்லை. தெரிந்த தொழிலான அரிசி ஆலையையே அதிகளவில் நடத்துகிறார்கள்..

கே : பள்ளி, அரிசி ஆலை, சமூகசேவை, கிளப், மன்றம் என பன்முகத்திறமையாளராக உள்ள உங்களின் காலநேரங்களின் செலவீடு குறித்து?

நான் இந்தத் தொழில்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு 45 ஆண்டுகள் ஆகின்றன.  எனது  அனைத்து தொழில்களிலும் நம்பிக்கையும், முயற்சியும் உடைய தகுதியான நபர்களை நியமித்து அவர்களுக்கு முழு சுதந்திரமும் அளித்து கவனித்துக் கொள்கிறேன்.

நான் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை. சந்தையில் புதுமையாக எது வருகிறதோ அதை நானும் செய்வேன். மனவயது, காலவயது என்று இருக்கிறது. கால வயது என்பது ஆகிக்கொண்டே இருக்கும். ஆனால், மனவயது எப்பொழுதும் எனக்கு ஒரு இளைஞன் போல் மேலும் மேலும் உற்சாகமும்,  ஊக்கமும் கொடுத்துக் கொண்டே இருக்கும். நான் என்றும் மனவயதில் இளமையானவன் என்பதை நினைத்துக் கொண்டே இருப்பேன். அதே போல் என்னிடம் வேலை பார்ப்பவர்கள் என்னை மதிக்கிறார்கள், என்னை நம்புகிறார்கள்.

கே : இப்பள்ளியின் தனித்தன்மைகள் என்று எதைச்சொல்வீர்கள்?

இப்பள்ளியில் கல்விக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விட ஒழுக்கத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெருநகரங்களில் கொடுக்கும் கல்வி தரத்திற்கு இணையாக நிறைவான கல்வியைக் கொடுத்து வருகிறோம். எங்கள் பள்ளியில் காப்பு நிதியோ, நன்கொடையோ வசூலிப்பதில்லை. படிப்பில்  பின்தங்கிய மாணவர்களையும் ஊக்குவித்து சிறப்பு பயிற்சிகளை அளித்து நன்மதிப்பெண்களைப் பெற வைக்கிறோம். கடந்த 22 வருடங்களாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியும், கடந்த 12 ஆண்டுகளாக 12ம் வகுப்பு பொதுத்தேர்விலும் 100 சதவீத தேர்ச்சியும் பெற்று நன்மதிப்பெண்களும் பெற்று வருகின்றனர்.

1997ம் ஆண்டிலேயே எமது பள்ளி மாணவி த. சேதுபர்வதவர்த்தினி வணிகவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். மேலும் 12 மற்றும் 12ம் வகுப்புகளில் தொடர்ந்து வட்டார மற்றும் மாவட்ட அளவில் முதன்மை மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 மாணவ, மாணவிகள் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ம் இடம் பெற்றனர்.

சென்ற 2014 -2015 கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பா. செல்வநாயகி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றதுடன் பள்ளி மாநில அளவில் முதல் 7 இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

அய்யா பி.எஸ். தங்கவேல் முதலியார் அவர்கள் சிந்தித்து பள்ளியின் லோகோ என்று சொல்லக்கூடிய முத்திரையில் மூன்று மதங்களையும் குறிக்கும் உருவவழிபாட்டு முத்திரையை பதித்துள்ளார். அதாவது ராமரின் உருவமும், மசூதி மற்றும் சிலுவையின் உருவங்களும் இணைந்துள்ளது. மதச்சார்பின்றி நமது நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரம், ஒழுக்கத்தை மாணவர்கள் கடைப்பிடிக்க மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது..

கே : தன்னம்பிக்கை வாசகர்ளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

தன்னம்பிக்கை என்ற சொல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பினருக்கும் ஏற்ற ஒரு சொல்.

என்னிடம் வறுமை, வசதியின்மை என்று வரும் இளைஞர்களிடம் நான் சொல்லும் வார்த்தை என்னைவிட வசதியில் நீதான் சிறந்தவன் என்று சொல்வேன். அந்த இளைஞனுக்கு மனக்குழப்பம் ஏற்படும். எப்படி என்று என்னிடம் கேட்பான். அதற்கு நான் சொல்வேன், உனக்கு இன்னும் வயதிருக்கிறது, என் வயது வருவதற்குள் நீ பணத்தாலும், புகழாலும் உயர்ந்து விடுவாய் என்று சொல்லுவேன். இன்றைய இளைஞர்களிடம் நான் எதிர்பார்ப்பது ஈடுபாட்டுடன் கூடிய கடின உழைப்பும், நேர்மையும் மட்டும்தான்.

கே : கடந்து வந்த பாதையில் உங்களால் மறக்கமுடியாத நிகழ்வு என்று எதைச் சொல்வீர்கள்?

தோல்வியைச் சந்திக்காத மனிதர்களே இருக்க மாட்டார்கள். தோல்வியை நினைத்து மனம் வருந்தவோ, கண்ணீர் வடிக்கவோ கூடாது.

வாழ்க்கையில் தோற்றுவிட்டால் அதை நினைத்து கொண்டே இருக்கக்கூடாது. அதையும் தாண்டி அடுத்த நிலைக்கு முன்னேற வேண்டும்.

எத்தனை முறை செய்தாலும் முதல் முறை செய்வது போல் ஒரு செயலைச் செய்ய வேண்டும். என்னிடம் பழகிய நண்பர்கள் எனக்கு பலவகையில் மறக்க முடியாத நினைவாக இருந்திருக்கிறார்கள்.

கே : சொந்தமாக தொழில் தொடங்க வரும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம், திட்டமிடுதல், உழைப்பு ஒழுக்கம் ஆகியவை எந்த அளவிற்கு இருக்கிறதோ அதைவிட தொடங்கிய பின்னர் இரண்டு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். எதிர்பார்ப்பு இருந்தாலும் அதிகம் ஆசைப்படக்கூடாது. தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை ஒரு போதும் இழக்கக் கூடாது.

உழைப்பு உழைப்பு, கடின உழைப்பு இதுவே நீங்கள் எப்பொழுதும் உச்சரிக்கும் நாடித்துடிப்பாக இருக்க வேண்டும்.

கே : சுயமாக தொழில் தொடங்குவோரின் சிறப்பியல்புகள் என்னவாக இருக்க வேண்டும்?

நேர்மை, திட்டமிடுதல், செயல்படுத்துதல், தொழில் மீது பற்று இருந்தால் போதும் தொழில் முனைவோன் ஆகிவிடலாம். எந்நேரமும் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டே இருத்தல் வேண்டும்.

அதிகம் பணம் சம்பதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இயல்பை மீறீயோ, நேர்மைத் தன்மையை இழந்தோ செயல்பட்டால் எத்தனை சம்பதித்தாலும் நிலையாக இருக்காது.

கே : எதிர்காலத்திட்டம்

வள்ளல் பி.எஸ். தங்கவேல் முதலியார் தொடங்கிய சேவை, கல்வி நிறுவனம் மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும்.

இன்னும் பள்ளிக்கட்டிட வசதி, பேருந்து வசதி போன்றவைக் கொண்டு வர வேண்டும். பள்ளியின் நிறுவனர் 36 ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரிகள் துவங்க வேண்டும் என்ற கனவினை தாளாளர் த. பொன்னம்மாள் அவர்களும், அறங்காவலர்கள் திருப்பதி வெங்கடேஸ்வரா வி. ராமசாமி எஸ். மோகன் பி.காம்., பள்ளி முதல்வர் பி. மணியரசன் ஆகியோரின் ஒத்துழைப்போடு நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி வருகிறேன்.

கே : பள்ளி நிறுவனரிடம் நீங்கள் கற்றுக் கொண்டது?

அய்யா பி.எஸ். தங்கவேல் முதலியார் அவர்களைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால்,  ஒரே வார்த்தையில் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு அவரின் சாதனை அளப்பறியது.

நேர்மைக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர். அவரின் நோக்கு அனைத்தும் அப்போது செய்தால் மட்டும் போதும் என்ற அளவில் மட்டும் இருக்காது. எதிர்வரும் காலத்திற்கு ஏற்றாற் போல் அந்தச் செயல் அமைந்திருக்கும்.

அவர் கட்டிட ஒப்பந்தப்பணியினை மேற்க்கொள்ளும் போது ஒரு கிணறு தோண்டினால் கூட அதன் அருகே ஒரு தொட்டி, துவைக்கும் கல் மற்றும் அந்த நீர் விணாகாமல் இருக்க ஒரு மரமும் வைத்து விடுவார்.

செய்யும் உதவிகளை உடனுக்கு உடன் மறந்து விடுவார். தேடிச் சென்று உதவிகள் செய்யக்கூடியவர். ஆரம்பத்தில் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். கணக்குப்பார்ப்பதில் துல்லியமாக இருப்பார். சுதந்திரப்போராட்டங்களில் கலந்து கொண்டவர். நல்ல சிந்தனைவாதி. யாரிடம் கடுஞ்சொல் எப்போதும் பேசாதவர்.

தன் வாழ்நாள் முழுவதும் சைக்கிளில் மட்டுமே பயணம் செய்தார். எந்த ஒரு மகிழுந்துவையும் பயன்படுத்தியதே இல்லை. கடைசி வரை வாடகை வீட்டில் மட்டுமே குடியிருந்தார். இவரின் நேர்மை, அயராத உழைப்பு, சேவை மனப்பான்மை ஆகியவை தான் என்னை மிகவும் ஈர்த்தது.

கே: தங்களின் பிற சேவைகள் குறித்து…?

பள்ளியின் நிறுவனர் தெய்வதிரு பி.எஸ். தங்கவேல் முதலியார் அவர்கள் தான் வாழும் காலத்திலேயே இரண்டாவதாக தங்கம் பொன்னு கருணை சேவை அறக்கட்டளையை 10 பட்டதாரி இளைஞர்களைக் கொண்டு நிறுவியுள்ளார். தற்போதைய தலைவராக ஆடிட்டர் கே. சிதம்பரம் B.com., FCA., சிறப்பாக பணியாற்றி  அதில் தனது சேமிப்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்பு நிதியாக வைத்து அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பொது சேவைகளை செய்ய பணிந்தார். நிதியின்றி தவிக்கும் ஏழை எளிய மருத்துவ படிப்பு மற்றும் மேற்படிப்பு  பயில விரும்பும் மாணவ, மாணவியருக்கு உதவுதல், எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்த்துவ கோவில்களுக்கு முறையே சிவன் இராத்திரிக்கு அன்னதானம், இரமலான் நோன்பிற்கு கஞ்சி அளித்தல், ஈஸ்டர் திருநாளன்று ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நற்காரியங்கள் இன்றளவும் சிறப்பாக நடத்திக் கொண்டு உள்ளோம்.

பள்ளி நிறுவனர் காலம்தொட்டு கல்வியில் மட்டுமின்றி பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறோம். இளைஞர்கள் சிறு தொழிலில் முன்னேற்றம் காண தற்போதைய மதிப்பின் படி 6 கோடி ரூபாய் மதிப்பிலான 50 சென்ட் இடத்தினை இலவசமாக அரிமா அறக்கட்டளைக்கு அளித்திருந்தார். அது பல்தொழில் பயிற்சி மையம், அரிமா திருமண மண்டபமாக மாறி இன்றளவும் சிறப்பாக இயங்கி வருகிறது.

அய்யா அவர்களது துணைவியார் திருமதி த. பொன்னம்மாள் அவர்களின் தலைமையில் ஒவ்வொரு வருடமும் நிறுவனர் நினைவுநாளன்று இலவச கண்சிகிச்சை முகாமும் மற்றும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பொது மருத்துவ முகாமும் சிறப்பாக நடைபெறுகிறது. சமுதாயத்தின் அடிமட்ட மக்களுக்கு அத்தியாவசிய உதவிகள் செய்து வருகிறோம். இந்த ஆண்டு நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் சுமார் 600 பேர் கலந்து கொண்டார்கள். 125 பேருக்கு கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

                           நேர்முகம் : பேராசிரியர் செந்தில் நடேசன்

                                     ஜெ. விக்ரன்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2015

என் பள்ளி
மனித வாசத்திற்கு அஞ்சும் பாம்புகள்
காலக் கணித மாமேதை
இரவா பகலா?
எழுந்து நட! சிகரம் தொட!
விடுதலை நெருப்பில் பூத்த தியாக தீபங்கள்
தாய்ப்பாலின் மகத்துவம்
வெற்றி உங்கள் கையில் 20 நேரம் இல்லையே…!
தானியங்கள் உதிராமல் இருக்க காரணமானதும் இரையை தேடி அலைந்த மனிதனை விவசாயம் செய்ய வழிவகுத்ததுமான ஜீன் (Gene) கண்டுபிடிப்பு
குணம் நாடி… குற்றம் நாடி…
தூண்டில்
இடைவெளியை பூஜ்யமாக்கும்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்