Home » Articles » இடைவெளியை பூஜ்யமாக்கும்

 
இடைவெளியை பூஜ்யமாக்கும்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

ஆசையின்றி வாழ முடியுமா…? நிச்சயமாக முடியாது…

ஆனால், ஆசையே துன்பத்துக்குக் காரணம் என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செல்லியுள்ளார்களே…!

ஆசைப்படாதவர்கள் யார் என சிந்திப்போம். இதுவரை பிறக்காதவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் ஆசை தேவையில்லை. இதில் கூட, இறந்தவர்களின் நிறைவேறாத ஆசைகள் தொடரும் என்று சொல்கிறார்கள். நாம் இதைப்பற்றி சிந்திக்க வேண்டியதில்லை.

தற்போது வாழ்ந்து வரும் அனைவருக்குமே ஆசைகள் அவசியம் தேவை. நம் முன்னோர்களே மண், பெண், பொன் என மூன்று வகையாக ஆசைகளைக் கூறியுள்ளனர்.

ஆணுக்கு மட்டும் பெண் ஆசை தேவை; பெண்ணுக்கு ஆண் ஆசை வேண்டாமா? என்றகேள்வியும் எழும்.

மண் என்பதை வசிப்பிடம், விளைநிலம்; பெண் என்பதை பருவத்தில் வாழ்க்கைத் துணை;

பொன் என்பதை பொருட்கள் மற்றும் பணம்;

என்றும் நாம் சுருக்கமாகச் சொல்லுவோம். உயிருடன் வாழ வேண்டும் என்பதே அப்படை ஆசை தானே.!

இதிலிருந்து ஆசை என்பது கட்டாயம் தேவை ஆனால், நிறைவேறாத ஆசைகளோ, பிறருக்குத் துன்பம் தரும் ஆசைகளோ அனைத்தும் தனக்கே வேண்டும் என்றபேராசையோ துன்பம் தருபவை. இவை தேவையற்றவை.

மனிதராய் பிறந்து வாழும் எல்லோருமே உயிர்வாழ ஆசைப்படுகிறோம். அதே சமயம், ஏதேனும், சிறு விபத்து அல்லது வியாதி என்றாலும் சாவுக்கு பயந்து கொள்கிறோம். சிறு உதாரணம் மூலம் விளக்கம் பெறுவோம்.

ஒரு மனிதன் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக அடுத்த ஊருக்கு நடந்து செல்கிறான். இவனது போறாத காலம், கரடி ஒன்று இவனைப்பார்த்து துரத்துகிறது. எப்படியோ, ஓடி ஒரு பெரிய மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொள்கிறான்.

ஆசுவாசப்படுத்திக் கொண்டு மரத்தைப் பார்க்கிறான். வேறு ஒரு கிளையில் ஒரு குரங்கு இரு குட்டிகளுடன் உட்கார்ந்து இவனையே பார்த்துக் கொண்டிருந்தது, இவனுக்கோ பயம்.

கண்களை இறுக மூடி, மரக்கிளையைக் கைகளால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். பகல் மறைந்து இரவானது, இரவு கரைந்து பகலானது. மீண்டும் இரவு வந்தது.

பயம் இருந்தாலும், பசி வயிற்றைக் கிள்ளியது. இந்த இடைப்பட்ட நேரத்தில், இவனால் துன்பமில்லை என்று முடிவு செய்த குரங்கு, அந்த மனிதனிடம், “மனிதா” இரு நாட்களாக நீ பசியோடு இருக்கிறாய்.  கரடியும் கீழே காத்திருக்கிறது. என் குட்டிகளைப் பார்த்துக்கொள். உனக்கு சில பழங்கள் பறித்து வருகிறேன் என்று கூறிச் சென்றது.

மனிதனுக்கு ஆச்சரியம், குரங்கு பேசியது. அதுவும் இவன் பசிபோக்க பழங்களை கொண்டு வருவதாய், சொன்னதும், சிறிது தெம்பு வந்தது.

குரங்கும் பழங்களுடன் திரும்பி வந்தது. அந்த மனிதனும் அவற்றை சாப்பிட்டு நன்றி கூறினான்.

இடைப்பட்ட நேரத்தில் இவனுடன் கரடியும் பேசியது. “மனிதா” நீ எத்தனை நாள்தான் மேலே உட்கார்ந்து இருப்பாய். எனக்கும் பசியாக இருக்கிறது. அந்தக் குரங்குக் குட்டிகளையாவது கீழே தள்ளி விடு. நான் சாப்பிட்டுவிட்டு என் வழியே செல்கிறேன். நீயும் சென்று விடலாம் என்றது…

பழங்களைச் சாப்பிட்டு விட்டு தோலைக் கீழே வீசினான். கரடியும் சாப்பிட்டு, காத்திருந்தது. மேலும் ஒரு நாள் கடந்தது. குரங்கு இவனுக்கு பழங்கள் பறித்து வரச் சென்றது. கரடி, மீண்டும் இவனிடம், “மனிதா! இப்போதாவது அந்தக் குரங்குக் குட்டிகளைக் கீழே தள்ளி விடு” என்றது. மனிதன் யோசித்தான்.

தான் உயிர் பிழைத்துத் தப்பிச் செல்ல வேறு வழியே கிடையாது. எனவே, குரங்குக் குட்டிகளைச் கீழே தள்ளி விட்டு, அவற்றைத் தின்று விட்டு, கரடி சென்றால் தான் தப்பமுடியும் என நினைத்தான்.

திட்டமிட்டு செயல்படுத்தினான். கரடியும் நன்றி கூறி, காரியத்தை முடித்துவிட்டு, மரத்தடியிலிருந்து சென்றது.

அவசரமாக மனிதன் மரத்திலிருந்து இறங்கி ஓட ஆரம்பித்தான். திரும்பி வேகமாக வந்த கரடி இவனையும் கொன்றது.

மனிதனுக்குப் பழங்களைப் பறித்து வந்த குரங்கு, மரத்தில் குட்டிகளையும், மனிதனையும் காணாமல் திடுக்குற்றது. கீழே பார்த்தது, எலும்புகள் சிதறிய உடல்

துண்டுகளைக் கண்டு, அந்த மனிதனின் மிருக புத்திக்கு கண்ணீர் வடித்தது.

இந்தச் செய்தியிலிருந்து நாம் தெரிந்து சொள்வது என்ன? யோசியுங்கள்.

உயிர் மேலுள்ள ஆசை, மனித நேயத்தை மறக்கடித்தது. விபத்தென்றால், தன் அன்புக்குரிய மனைவி, குழந்தைகளை விடவும் தனது உயிர் முக்கியம் எனச் செயல்படும் குணம் மேலோங்குவதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆசை என்பதை திருவள்ளுவர் எல்லா உயிர்களுக்கும், எக்காலத்திலும் தொடர்ந்துவரும் பிறவித் துன்பத்தை உண்டாக்கும் விதை என்றார்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும்

தவாஅப் பிறப்பீனும் வித்து    – குறள் 361

ஆசை, பற்று, இச்சை, வேட்கை, விருப்பம், அவா காமம் எனப் பல சொற்களால் சொல்லுகிறோம். ஆசைக்கும் துன்பத்துக்குமான இடைவெளியை பூஜ்மாக்குவது வெகு சுலபம்.

ஒரு தேவை நிறைவேறும் போது பெறும் உணர்வு இன்பம், (உ-ம்) பசி – தேவை: நிறைவேற்றம்  உண்ணுதல், இந்த இன்பத்தில் திருப்தியில் நம் மனம் (உயிர்) மயங்கி விடுகிறது. பிறகு உண்மையான தேவையில்லாமலேயே ஆசைப்படுகிறது. இந்த ஆசைக்குப் பெயர் செயற்கை ஆசை: இதைக் கட்டுபடுத்தி விட்டால் துன்பமே கிடையாது. (உம்) பசியை போக்கி நிறைவைத் தந்த உணவின் ருசி மீண்டும் தேவையென, பசியில்லாமலேயே அங்கு சென்று ருசிக்காக உண்ணுதல்.

இன்னும் எளிமையாக விளக்கலாம், பசி நீங்க ருசியான உணவைச் சாப்பிட்டோம். உணவு என்பது பொருள்: உணர்வு என்பது திருப்தி (இன்பம்).

நாம் மனமானது (எண்ணம்) உணர்வை விட்டு விட்டு, உணவைப் பிடித்துக் கொள்வதுதான் துன்பம் தரும்: இது பற்று ஆகும்.

எப்படி நிறுத்துவது?

வாங்கிய பாலை வீட்டில் அடுப்பில் வைத்துக் காய்ச்சுகிறோம். சரியான நேரத்தில் இறக்கினால் நல்லது. இதேபோல சாதம் சமைக்கிறோம். பாத்திரத்தின் அடிப்பகுதியில் அந்த சாதம் தீய்ந்து விடாமல் (அடிப்பிடிக்காமல்) சரியான நேரத்தில் இறக்கினால் சிறப்பு.

இதற்குத் தேவை விழிப்பு நிலை:

செய்யும் செயலில் ஆர்வத்ததுடன் கூடிய செயல்பாடு.

நெருப்புக்கும் பாத்திரத்துக்குமான (உறவை) தொடர்பை, சரியான நேரத்தில் நிறுத்துவதுதான் துறவு என்பார் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி.

விழிப்பு நிலை தவறி, உறவைத் தொடரவிட்டால், பால் பொங்கும். அவசரப்பட்டு, பால் பாத்திரத்தை, கையில் எடுப்போமா? மாட்டோம்.

ஒரு துணியால் பிடித்து, அந்தப் பாத்திரத்தின் சூடு நம்மைப் பாதிக்காமல் தான் எடுக்கிறோம்.

இந்த அளவு விழிப்பு நிலையில் நாம் நமக்குத் தேவையான நாம் ஆசைப்படும் பொருள், உறவுகள், செல்வாக்கு, அதிகாரம் மற்றும் புகழ் இவை ஐந்தில் (துறவு மனப்பான்மை) தேவையளவில் துண்டிக்கும் மனநிலைதான் ஆசைக்கும் துன்பத்துக்குமான இடைவெளியை பூஜ்யமாக்கும்.

இடைவெளி இருக்கும் வரை, அதாவது அந்த ஆசை நிறைவேறாத வரை துன்பம் நீடிக்கும். அருவி நீரில் குளிப்பது இன்பம்தான். ஆனால், அதிலே மூழ்கி விடக்கூடாது.

பயிற்சி: ஆசைகளை வரிசைப்படுத்தி, பயிற்சி மூலம் தெளிவு பெற்று, தேவையான ஆசைகளை நிறைவேற்றியும். தேவையற்ற தீய ஆசைகளையும் நிறைவேற்றவே முடியாத (நிராசை) ஆசைகளையும் மனதிலிருந்து நீக்கி விடலாம்.

ஓர் ஆசையை எடுத்துக் கொள்வோம். கார் வாங்க வேண்டுமென்ற ஆசை.

இதை நான்கு கோணங்களின் ஆராய்வோம்.

தேவை : கார் நமக்குத் தேவையா ? நிறுத்துவதற்கு இடம், கார் ஓட்டத் தெரிந்திருப்பது, காருக்கு எரிபொருள் நிரப்ப தேவைப்படும் பணம், இவைகளை ஆராய்ந்து சரியென்றால், அடுத்த நிலைக்குச் செல்லலாம்.

வசதி : கார் வாங்கப் போதிய பொருளாதார வசதி உள்ளதா? கடன் வாங்கினால், மாதாமாதம் திருப்பிச் செலுத்த முடியுமா? இவற்றை ஆராய்ந்து அடுத்த நிலையை ஆராய்வோம்.

விளைவு : கார் வாங்கியபின் வீட்டிலுள்ள அனைவருமே இன்பமும், திருப்தியும் அடைகின்றனரா? உங்களுக்கும், எதற்காக வாங்கினீர்களளோ, அந்த நோக்கம் நிறைவேறுகிறாதா? அல்லது போக்குவரத்து நெரிசலில் காரில் செல்வது தாமதமாகிறதா? என ஆராய்வது.

சமுதாய ஏற்பு : நீங்கள கடன் வாங்கி, கஷ்டப்பட்டு கடனைக் கட்டினாலும், உங்களைச் சுற்றியுள்ளவர்களும், உறவுகளும் இதை இயல்பாக ஏற்றுக் கொள்வார்களா? அல்லது பிரச்னை வருமா? என ஆராய்தல்.

இந்த நான்கு கோணங்களின் ஆராய்ச்சியும் துன்பமில்லை கார் வாங்கலாம் என்றால், தாராளமாக ஆசையை செயல்படுத்தலாம். இல்லாவிட்டால் ஒத்தி வைக்கலாம் அல்லது நீக்கி விடலாம்,

இம்மாதிரி செயல்படாமல் மிகப்பெரும்பாலானவர்கள் நிறைவேறாத ஆசைக் குப்பைகள் பலவற்றை மனதில் குவித்து, குப்பை மேடாக்கி வாழ்க்கையை கடனுக்கு வாழ்ந்து கொண்டுள்ளனர்.

விதைப்பது தானே முளைக்கும்

மனித ஆசை : ஒருமுறை கடவுள் கழுதை, நாய், குரங்கு மற்றும் மனிதனுக்கு ஆயுட் காலத்தை நிர்ணயிக்க முடிவு செய்து வரவழைத்தார்.

முதலில் கழுதைக்கு 60 வருடங்கள் வழங்குவதாய் கூறினார். கழுதை எனக்கு 30 வருடங்களே போதும் என்று பெற்று கொண்டது; பிறகு நாய்க்கு 40 வருடம் என்றார்; அதுவும் பாதி போதுமென 20 ஆண்டுகள் பெற்றது. பின் குரங்கு, கடவுள் வழங்கிய 40 வருடங்களில் 20 மட்டும் போதுமெனத் திருப்தியடையுடன் பெற்றது.

கடைசியில் மனிதனுக்கு 20 வருடங்கள் என கடவுள் சொன்னார். திருப்தியடையாத மனிதன் மற்றஉயிரினங்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய 70 வருடங்களையும் சேர்த்து வழங்கிமாறு வேண்டிய பெற்று மகிழ்ந்தான்.

மனிதனின் வாழ்க்கை முதல் 20 வருடங்கள், எவ்விதப் பொறுப்புமில்லாமல் பெற்றோர் அரவணைப்பில் மகிழ்ச்சியாகக் கழிகிறது.

அடுத்த 30 வருடங்கள் வேலை, திருமணம், குடும்பம், குழந்தைகள் எனக் கடுமையாக கழுதைபோல் உழைத்துப் பொருளீட்டும் பருவமாகிறது.

அடுத்த 20 ஆண்டுகள் ஈட்டிய பொருளை நாய் எலும்புத் துண்டை விடாமல் கவ்வியிருப்பது போல் பராமரிப்பதும், சொத்துக்களை பத்திரப்படுத்திவதிலும் கழிகிறது? ச்சே! என்ன நாய்ப் பிழைப்பு எனப் பலர் புலம்புவது காதில் விழும்.

அடுத்த 20 ஆண்டுகள், மரத்துக்கு மரம்தாவும் குரங்குகள் போல், முதுமையில் சொத்து, உறவுகள் இருந்தும், தனது பராமரிப்புக்கு மகன் வீடு, மகள் வீடு என இங்கும் அங்கும் மாறிமாறி அலைந்து அல்லல்படும் நிலை இன்றைய வாழ்க்கை முறை ஓரளவு இதுபோல் தான் உள்ளது.

எனவே, ஆசைகள் துன்பம் தராமலிருக்க பயிற்சி செய்து பலனடைவோம்.

அது சரி! மனித வாழ்வின் நோக்கம் தான் என்ன? பொறுத்திருப்போம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2015

என் பள்ளி
மனித வாசத்திற்கு அஞ்சும் பாம்புகள்
காலக் கணித மாமேதை
இரவா பகலா?
எழுந்து நட! சிகரம் தொட!
விடுதலை நெருப்பில் பூத்த தியாக தீபங்கள்
தாய்ப்பாலின் மகத்துவம்
வெற்றி உங்கள் கையில் 20 நேரம் இல்லையே…!
தானியங்கள் உதிராமல் இருக்க காரணமானதும் இரையை தேடி அலைந்த மனிதனை விவசாயம் செய்ய வழிவகுத்ததுமான ஜீன் (Gene) கண்டுபிடிப்பு
குணம் நாடி… குற்றம் நாடி…
தூண்டில்
இடைவெளியை பூஜ்யமாக்கும்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்