Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

படித்து முடித்து ஆசிரியர், கிளார்க் போன்றவேலை கிடைத்ததும்  ‘டென்ஷன்’ இல்லாத வேலை, பரவாயில்லாத சம்பளம், இதுவே போதும் என்று சிலர் அப்படியே வாழ்க்கையை ஓட்டிவிட நினைக்கிறார்களே, அவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன…?

எஸ். மோகன்,15 பாரத் நகர் மெயின் ரோடு,கோவில்பட்டி – 628501.

ஒவ்வொரு இளைஞனும் பெரியதாக ஆசைப்பட வேண்டும்; தனக்கு என்று ஒரு மிகப்பெரிய இலட்சியத்தை உருவாக்கி அதை அடைய ஒவ்வொருநாளும் முயற்சிக்க வேண்டும்; வசதிகளும், வாய்ப்புகளும் குறைந்த குடும்பத்தில் பிறந்த சிலர் உயர்ந்த நிலையை அடைந்து விட்டார்கள் என்பதை மேற்க்கோள் காட்டி பேசியும், எழுதியும் வருகிறேன். சில தினங்களுக்கு முன் இறந்த மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் அவர்களைப்பற்றியதொரு செய்தி. அவர் பிறந்த சில ஆண்டுகளிலேயே அவரது தந்தையார் இறந்து விட்டார். துயரமான சூழ்நிலை, ஆனால் அவர்  இசையைக் கற்றுக்கொண்டு இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். அவரையே அவர் உருவாக்கி இருக்கிறார். அவரது பாடல்கள் பலவற்றை மக்கள் மனமுவந்து முணுமுணுத்துக் கொண்டிருகிறார்கள். இந்த சூழ்நிலையில் உங்களது கேள்வியை ஆராய்வோம்….

பெரும்பாலும் நடுத்தரக்குடும்பம் அல்லது ஏழைக்குடும்பத்து பிள்ளைகள் ஆசிரியர், கிளார்க் போன்றவேலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கு காரணம், அதில் ‘டென்ஷன்’ இல்லை என்பதற்காக மட்டும் அல்ல, இந்த வேலைதான் நம் போன்ற வசதியில்லாதவர்களுக்கு அல்லது திறமையில்லாதவர்களுக்கு உரியவை என்றஎண்ணமும், நமது முயற்சிக்கு இதுதான் கிடைக்கும் என்ற ஒருவித நம்பிக்கையும் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

எதுவாக இருந்தாலும் ஆசிரியர், கிளார்க் போன்ற வேலை ‘டென்ஷன்’ இல்லாத வேலை என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். இந்த வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை அல்லது உயர்ந்த அந்தஸ்து இல்லை என்பதைப் போன்ற ஒரு எண்ணம் நிலவி வருகிறது. உங்களது கேள்விகள் மறைமுகமாக அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. இதை நான் மறுக்கிறேன். நாடக கம்பெனிகளில் ஒன்று சொல்வார்கள், ‘no rule is a small role’. அதாவது எந்த கதாப்பாத்திரமும் சிறிய கதாப்பாத்திரம் அல்ல என்பதுதான் அது. ஆக சமுதாயத்தில் பல வேலைகள் இருக்கும் போது சில வேலைகளைக் குறைவாக எடை போட முடியாது. எல்லா வேலைகளிலும் ஒரு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கிறது. வேலைகளுள் வேற்றுமை இருக்கலாம், ஏற்றத்தாழ்வு இல்லை என்பது ஆழ சிந்தித்தால் புரிந்து விடும்.

ஒரு பணியில் சேர்ந்த பிறகு அந்த பணி சிறந்ததா, இல்லையா என்பது அவர் அந்த வேலையைச் செய்யும் விதத்தில்தான் இருக்கிறது. சில கிளார்க்குகள் தங்கள் பணிகளை கண்ணும் கருத்துமாகச் செய்து, அதில் நிபுணத்துவம் பெறுகிறார்கள். சட்டங்களைக் கற்றுத்தெரிந்தும், பல உத்தரவுகளை படித்தும் தங்களது குறிப்புகளை கோர்வையாக நல்ல மொழிப்புலமையுடனும், கருத்துடனும் எழுதி விடுவார்கள். இவர்கள் நிர்வாகத்திற்கு மிகவும் இன்றியமையாதவர்களாக உள்ளார்கள். பணி ஓய்வு பெற்றபின்னரும் இந்த கிளார்க்குகளுக்கு மதிப்பு உண்டு; அவர்கள் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை. இதை நாம் கண் கூடாகப் பார்க்க முடியும். ஒரு கம்பெனியில் கிளார்க்காக வேலை செய்தவர்தான், ரிலைன்ஸ் கம்பெனி நிறுவனர், திரூபாய் அம்பானி. இவர்தான் இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தார். ஒரு வங்கியில் கிளார்க்காக சேர்ந்து எனது கல்லூரித்தோழர் சந்திரசேகர் வெளிநாட்டு வங்கியின் உபதலைவராக இருந்தார். ஒரு ஆசிரியர், ஒரு காலத்தில் இந்திய திருநாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்தார், அவர்தான் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள்…

கல்விப்பணி செய்யும் ஆசிரியர் வெறும் பாடங்களை மட்டும் மாணவர்களுக்கு சொல்லித்தருபவர்கள் அல்ல. மாணவர்களுக்கு அந்தப் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் பொறுப்பில் இருப்பவர். தான் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்; எனவே, அவர் கல்வி கற்க நிறைய உள்ளது. ஒரு நூல் படிக்கும் மாணவராகவும், சிந்தனையாளராகவும், நூல் எழுதிய நூலாசிரியராகவும், ஒரு மனநல ஆலோசகராகவும் ஒரு தாயாகவும், தந்தையாகவும், ஆசிரியர் திகழ்கிறார்.  இது சாதாரணமாக வேலை என்று சொல்ல முடியுமா…? இதில் எவ்வளவு முயற்சி தேவைப்படுகிறது…? எவ்வாறு போராட வேண்டியுள்ளது…? இப்படிப்பட்ட வேலையை ‘டென்ஷன்’ இல்லாமல் செய்துவிட முடியுமா….? 50 மாணவர்களுக்கு பொறுப்பு ஆசிரியர் என்கிறபோது, அதில் பல சிரமங்கள், சிக்கல்கள் ஆபத்துக்கள் இல்லாமல் இல்லை. அப்படியே ஒரு தலைமை ஆசிரியாராகும் போது ஆயிரம் மாணவர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அது மிகவும் பொறுப்பு மிக்க பணி அல்லவா? ‘ஆசிரியர் பணி மற்றஅனைத்துப்பணிகளையும் உருவாக்கும் பணி’ என்பது உலக பழமொழி.

தனது பணித்திறமையை மேம்படுத்த நினைக்கும் எவரும் உயர்ந்த பதவியில் இருப்பவர்தான். அது, டாக்டரானாலும் சரி,  துப்பரவு தொழிலாளியானாலும் சரி, இராணுவத்தளபதி ஆனாலும் சரி; அவர்கள் கடுமையாக போராட வேண்டியது இருக்கும். அவருடைய அந்த போராட்டத்தை (அல்லது நீங்கள் கூறும் ‘டென்ஷனை’)

 விரும்பி வரவேற்றால், அதுவே ஒருவித சுகமாகக்கூட மாறி விடலாம். ‘டென்ஷன்’ இல்லாத வாழ்க்கை ஒரு சவால் இல்லாத வாழ்க்கை என்றே கூறுவேன்.

சின்ன வேலைகளில் கைதேர்ந்தவர்களுக்குத்தான் பெரிய வேலையே கிடைக்கும் என்றார் – தியோடர் ரூஸ்வெல்ட், அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி.

நீங்கள் குறிப்பிடும் ‘வாழ்க்கையை ஓட்டிவிட நினைப்பவர்கள் ஒவ்வொரு பதவியிலும், எல்லாத்துறையிலும் உள்ளனர். அவர்களுக்கு நான் கூறும் அறிவுரையே ‘வேலையில் வளருங்கள்’ என்பதுதான். அதாவது வேலையில் சேர்ந்த அன்றிலிருந்து தினமும் முதிர்வு அடைய வேண்டும். முதிர்வு என்பது வயதாகிக்கொண்டிருப்பது ஆகாது…! 25 வயதில் ஆசிரியராகச் சேர்ந்தவர் 30 ஆண்டுகள் கழித்து 55 வயதான ஆசிரியராகி விடுவார். அதைச் சொல்லவில்லை. 30 ஆண்டுகளில் எவ்வளவு நூல்களை படித்தார்? எவ்வளவு பிறகலையைக் கற்றார்? எத்தனை  மாணவர்களை திருந்தினார்? எத்தனை பேருக்கு கதாநாயகன் ஆனார்? எத்தனை மரம் நட்டார்? எத்தனை நூல்கள் எழுதினார்? என்பதை வைத்து வளர்ச்சியின் அளவை கணக்கிட வேண்டும்.

முதிர்வு என்பது வளர்ச்சியைக் குறிக்கும்; ஆற்றலால், சிந்தனையால், மனப்பான்மையால், மனிதநேயத்தால், உடல் உறுதியால், வளர்ச்சி அடைய வேண்டும் என்பது அவசியம்…

எப்போது நாம் முதிர்வு அடைகின்றோம்…?

  1. நம்மோடு நாம் சமாதானம் செய்து கொள்ளும் போது.
  2. மற்றவர்களை மாற்றப் புறப்படுவதை விட்டுவிட்டு, நம்மை மாற்றமுயற்சி செய்யும்போது.
  3. பிறரது குறைகளைப் பார்க்காமல், நமது குறைகள் மீது, கவனம் செலுத்தும் போது.
  4. பிறர் நம்மை எப்பொழுதும் பாராட்ட வேண்டும் என்றஎதிர்பார்ப்பு இல்லாத போது.
  5. நமக்கு கிடைக்காததைப்பற்றி வருத்தப்படாமல், கிடைத்திருப்பதை நினைத்து திருப்தி அடையும் போது.
  6. நமது அமைதியையும், மகிழ்ச்சியையும் நாம் செய்யும் செயலைப் பொறுத்து என்று உணர்ந்த போது.
  7. ஒரு செயலை ஒருவர் ஏன் செய்கிறார் என்றபுரிதல் ஏற்படும் போது.
  8. ஒவ்வொரு மனிதனும் ஒருவிதம், அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வளர்ந்த போது.
  9. நாம் நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை நிறுத்திக் கொள்ளும் போது.
  10. உலக பொருட்களில் மட்டும் மகிழ்ச்சி இல்லை என்பதை உணர்ந்த போது.

ஆக சம்பளம் குறைவான வேலை என்றால் சின்ன வேலை என்ற எண்ணத்தை கைவிடுங்கள்.  எல்லா வேலைகளிலும் வளர்ச்சி அடைய, கணக்கிலடங்கா வாய்ப்புகள் உண்டு. நல்ல மனப்பான்மையில் விரும்பி வேலை செய்யுங்கள், அப்போது சின்ன வேலையாக கூறும் பணியும் பெரிய வேலை ஆகும்; அந்தப்பணி ‘அறப்பணி’ ஆகிவிடும்.

படித்து முடித்து ஆசிரியர், குமஸ்த்தா வேலைக்கு சேர்வது நல்ல முடிவு, ஆனால் அதற்குப் பிறகு ‘இதுபோதும்’ என்று அப்படியே ஓட்ட நினைப்பவர்கள் உடலால், மனதால் அறிவால் பொருளால், ஈகையால் வளர முடியாது. அவர்களுக்கு நல்ல வரவேற்பு சமூதாயத்தில் இருக்காது. எனவே அவர்களுக்கு நான் தரும் அறிவுரை; இந்த வேலைகள் உயர்ந்தவை, நீங்களும் உயருங்கள். அதற்கு நீங்கள் தொடர்ந்து கல்வி கற்றுக் கொள்ளுங்கள். ‘சுயகல்வி’ தான் நான் அதற்கு ஒரே வழி…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2015

என் பள்ளி
மனித வாசத்திற்கு அஞ்சும் பாம்புகள்
காலக் கணித மாமேதை
இரவா பகலா?
எழுந்து நட! சிகரம் தொட!
விடுதலை நெருப்பில் பூத்த தியாக தீபங்கள்
தாய்ப்பாலின் மகத்துவம்
வெற்றி உங்கள் கையில் 20 நேரம் இல்லையே…!
தானியங்கள் உதிராமல் இருக்க காரணமானதும் இரையை தேடி அலைந்த மனிதனை விவசாயம் செய்ய வழிவகுத்ததுமான ஜீன் (Gene) கண்டுபிடிப்பு
குணம் நாடி… குற்றம் நாடி…
தூண்டில்
இடைவெளியை பூஜ்யமாக்கும்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்