Home » Articles » அனுபவம்… ஆனந்தமாகட்டும்

 
அனுபவம்… ஆனந்தமாகட்டும்


கோவை ஆறுமுகம்
Author:

உலக மனித குல அறிவியல் ஆராய்ச்சிகளில், முதன்மையானதும், சிறந்ததும் எது?” என்றகேள்விக்கு, “மனிதன் தன்னை அறிந்து கொள்ள செய்யும், ஆராய்ச்சியே அறிவியல் ஆராய்ச்சிகளில் முதன்மையானது, சிறந்தது. அதுமட்டுமல்ல, மனித குல வளர்ச்சிக்கு மிக முக்கியமானதும் கூட” என்ற உண்மையே  பதிலாகிறது.

‘தன்னை ஆராய்தல்’ எனும் இந்த நிகழ்வு, உண்மையான ‘அனுபவத்தை’ குறிக்கிறது. ஆராய்தலை ஆரம்பித்ததும், நம் உள் மனதின் இயற்கைத் தன்மையில் சில மாறுதல்கள்  ஏற்பட  ஆரம்பிக்கும்.

பல சமயங்களில் பெரியதொரு மனப் போராட்டமும் ஏற்படலாம். ஏனெனில், நாம் ஏற்கனவே உருவாக்கியுள்ள கட்டிடத்தின் அஸ்திவாரமே ஆடத் துவங்கும். அதாவது, நம்முடைய ஆழமான அபிப்ராயங்கள், கொள்கைகள், திட்டங்கள் வலுவிழக்கச்  செய்யும், நம் சூழ்நிலைகளை நண்பர்களாலும், உறவினர்களாலும்,  நாம் போட்டுக்கொண்டுள்ள முகமூடி கிழியத்துவங்கும். நம் பாதுகாப்பிற்காக பற்றிக் கொண்டுள்ள, நிலையற்ற மனிதர்கள் அல்லது பொருட்கள் மீதுள்ள இறுக்கமானப் பிடிப்புத் தளர துவங்கும். இப்போது இதுபற்றிய சில ‘உண்மை’ அல்லது ‘சத்தியம்’ என்னவென்று பார்ப்போம்.

அனுபவ மாற்றத்தால் விடுதலை எப்படி சாத்தியமாகும் என்பதைப் பார்ப்போம். ‘அனுபவ மாற்றம்’ என்பதே, விடுதலைக்கான ஓர் பயணம் தான். நமக்கு, சில சமயங்களில், வாழ்வதற்கே ஆர்வமில்லாமல், ஏதோ ஒன்றைஇழந்து விட்டது போலவும், முழுமை அடையாததது போலவும் தோன்றும்.

இதயத்தில், ஒரு வெறுமையும், அன்னியப்பட்டு விட்ட தனிமை உணர்வும் மேலோங்கிவிடும். பலருடன் வேலை செய்து கொண்டோ, நண்பர்களுடன் இருக்கும் போதோ, எதையும் மனம் நாடாமல், அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்று  தோன்றும்.

பல சமயங்களில் குடும்ப உறவினர்களுடன், சந்தோஷமாக இருக்கும் போது கூட, இந்த ‘தனிமை’ உணர்ச்சியாலும், மன எரிச்சல் தன்மையாலும் பாதிக்கப்படுகிறோம்.  ஏதோ ஒன்று, நம்மையும், பிறரையும் பிரிக்கிறது.

நாம் மற்றவர்களோடு, சில விஷயங்களைத்தான் பகிர்ந்து கொள்ள முடியும். பல விஷயங்களைப்  பகிர்ந்து கொள்ள முடியாமல் மனதில் புதைந்து விடுகிறது. ‘தான் ஒரு தனி மனிதன்’ என்றஉணர்வு, ஆழமாக நம்முள் இருப்பதே இதற்குக் காரணம்.

நம்மில் பலர், ‘நான் ஆன்மீகவாதி, அறிவாளி, எல்லாம் தெரிந்தவர்கள்’ என்று நமக்கு நாமே கூறிக்கொண்டும், நடந்தும் கொள்கிறோம். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். ஏனென்றால், அதிகம் அறிந்து கொள்வதால் தவறில்லை. ஆனால், அறிந்து கொள்வதன் மூலம், ‘அபிப்பிராயங்கள்’ என்னும் கட்டிடத்தை மேலும், பெரிதாக கட்டுகிறோம் என்பதுதான் உண்மை.

வாழ்க்கை என்பதே அனுபவங்களால் கற்றுக் கொள்ளும் வழிமுறை தான். ‘கற்றுக் கொள்வது’ என்பதன் பொருள், நாம் கற்றுக் கொண்டவைகளிலிருந்து தெளிவு பெறுவதுதான். விடுதலை என்பதும் கூட இதுதான். ஆகையால் .நாம், கற்றுக்கொண்டவைகளிலிருந்து தெளிவு பெறாவிட்டால் அதாவது, நாம் கட்டிய கட்டிடங்களை இடித்துத் தள்ளாவிட்டால், நம் வேஷத்தை, முகத்திரையைக்  கலைக்காவிட்டால், நாம் வாழவே இல்லை என்று அர்த்தம்.

“கற்றுக் கொண்டவைகளிருந்து தெளிவு பெறுவது எப்படி?” என்பதைப்பற்றி நாம் இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போம்.

நம்முடைய கடந்த கால அனுவங்களைப்பற்றிய சில நினைவுகள், ஆழமான சில உணர்ச்சிகளை ஏற்படுத்தும், சக்தி வாய்ந்தவை. சில, சாதாரண அனுபவங்களால் இது போன்ற உணர்ச்சிகள் எதுவும் தோன்றுவதில்லை.

நினைத்தால் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த உணர்ச்சிகள், நம்மை நிகழ்காலத்திலும் பாதிக்கின்றன. நம் வாழ்க்கையில் சில நல்ல அனுபவங்களையும், சில துயர அனுபவங்களையும், அனுபவித்துள்ளோம். இந்த அனுபவங்கள், நம் குழந்தைப் பருவத்தில், பள்ளி பருவத்தில் அல்லது அதன் பிறகு கூட ஏற்பட்டிருக்கலாம்.

இது போன்றஅனுபவங்கள், நம் கண்ணோட்டங்களை, அபிப்பிராயங்களை, நிர்ணயிக்கின்றன. நிகழ்காலத்தில் நாம் வாழ்க்கையை உள்ளதை உள்ளபடி அனுபவிக்க வேண்டும். அதற்கு, கடந்த கால அனுபவங்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளிலிருந்து நாம் முதலில் விடுதலை அதாவது, தெளிவைப் பெறவேண்டும். இதன் மூலம் நம் தேவையற்றபயங்கள், கவலைகள், எதிர்மறைஎண்ணங்கள் விலகும். நாம், ஈடுபடும் செயல்களில் நம் முழுத்திறமையும் வெளிப்படும்.

இந்த ஆராய்ச்சியால் ஏற்படும் அனுபவ மாற்றம் நிகழும் போது, நாம் அனுபவிப்பது என்னவென்றால், நம்மை விட்டு நம்முடைய பற்றுகள், முகத்திரைகள், நாம் பிடித்து வைத்துள்ள தவறான கண்ணோட்டங்கள், நம்மை விட்டு விலகும். தேவையில்லாதவைகள் யாவும், நம்மை விட்டு விலகி, நம் மனமும், வாழ்க்கையும் இலேசாகி, சுதந்திரமாக, ஆனந்தமாக செயல்படும்.

மன இயல்பு

‘மனம் ஒரு குரங்கு’ அங்கும், இங்கும் தாவிக்கொண்டே இருக்கும். ‘மனம் ஒரு குதிரை’ திக்குதிசை தெரியாமல், கட்டுப்படாமல் ஓடிக்கொண்டே இருக்கும்.         ‘மனம்

ஒரு கழுதை’ முன்னால் சென்றால் கடிக்கும். பின்னால் சென்றால் உதைக்கும்.  பக்கவாட்டில் நின்றால் உரசும்.

ஆக, மொத்தத்தில், மனம் அடங்காதது என்பதோடு, மிருக குணங்களோடு ஒப்பிட்டு சொல்லப்படுகிறது. மனம், நிகழ்காலத்தில் இல்லாமல், தொடர்ந்து,  நடக்காத எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி, நடந்து முடிந்த இறந்தகால நிகழ்வுகளைப் பற்றி மாறி, மாறி சிந்தனை செய்தபடியே இருக்கிறது.

ஆனால், நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும், உணர்ச்சியும் திட்டமிட்டோ,

தீர்மானித்தோ நடப்பதில்லை. அனைத்து உணர்ச்சிகளும், தன்னிச்சையாகவே எழுகின்றன. அதாவது, ‘நான் இப்போது கோபப்படப் போகிறேன், இன்று கவலைப்படப் போகிறேன், சந்தோஷப்படப் போகிறேன்’ என திட்டம் போட்டு செயல்படுவதில்லை.

இவ்வுணர்ச்சிகளில்  கண்ணோட்டங்களில்,  நோக்கங்களில்,  அபிப்பிராயங்களில்,மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அது நம்முடைய முயற்சிகளால் முடியாது என முதலில் உணர வேண்டும்.

நம் அனைத்துப் பிரச்சனைகளுக்கும்,  துயரங்களுக்கும், தோல்விகளுக்கும் முக்கிய

காரணமே, நமக்கு அனுபவம் ஏற்படாததும், அனுபவமாக ஏற்றுக் கொள்ளாததும் தான்.   அனுபவம் நமக்கு கற்றுக் கொடுக்க விரும்புவதை கண்டு பயப்படுகிறோம்.

அதனால், அதை விரும்பாமல், அந்த அனுபவித்தின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுகிறோம். அனுபவங்களைக் கற்றுக்கொள்ள, ஏற்றுக்கொள்ள முடியாமல்தான்,  அதிலிருந்து தப்பிப்பதற்காக, மனம் முதலில் சொன்னதைப் போல குரங்காக தாவி, குதிரையாக ஓடி, கழுதையாகத் திரிந்து கொண்டிருக்கிறது.

ஆகவே, ‘உண்மையான மாற்றம்’ நிகழ வேண்டுமானால், நமக்கு நடக்கும் அனைத்தையும் அனுபவமாக, அனுமதிக்கவும், அனுபவிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு அரசன், ஒரு ஏழையானவனைச் சந்தித்தான்.

“உனக்கு வேண்டியதைக் கேள்” என்றான்.

அதற்கு, ஏழை “என் அடிமைகளில்  ஒருவனிடமே, நான் உதவி கேட்பது எனக்கு பிடிக்காது” என்றான். உடனிருந்த தளபதிக்கு கோபம் வந்து விட்டது.

“மரியாதையின்றி இவ்வாறு அரசனிடம் பேசுவதற்கு என்ன தைரியம் உனக்கு? நீ கூறியதற்கு தகுந்த விளக்கம் கூறாவிட்டால் மரணமடைவாய்” என்றான். ஏழையானவன் சற்றும் பயப்படாமல், “என்னிடம் உள்ள ஒரு அடிமைதான், உங்கள் அரசனின் எஜமானன்” என்றான்

“யார் அந்த எஜமான்?”

“எதிரி நாட்டவனுக்கு, வரி கட்ட வைத்துக் கொண்டிருக்கும் அரசனின் பயம் தான் அது” என்றான் ஏழையானவன்.

நம், இதயத்தின் ஆழத்தில் சென்று பார்த்தால், நாம் வெறும் பூஜ்யம் என்ற உண்மையை நேருக்கு நேர் சந்திக்கலாம். நம்முள் வெற்றிடம் உள்ளது. அது, பிரதமரானாலும் சரி அல்லது ஒரு சாதாரண தொழிலாளியானாலும் சரி, எந்த ஒரு மனிதனையும், வெறுமையை உணர வைக்கிறது.

நம்மால், இதை எதிர்கொள்ள முடியாமல், தன்னைப் பற்றி, பல உருவகங்களை உருவாக்குகிறோம். நாம் செய்யும் வேலைகளிலும், இடங்களிலும், உறவு முறைகளிலும், சமூகம் முழுவதிலும், ஏன் நம்மிடம், நெருக்கமானவர்களிடம் கூட நாம் ஒரு நல்ல மனிதன்  என்று  உருவகப்படுத்திக் கொள்கிறோம்.

ஆனால், வாழ்க்கை விநோதமானது. பொய் என்னும் அடித்தளத்தில். நாம் உருவாக்கியவை. ஓர் அடியை கொடுத்து உண்மையை நோக்கி நம்மை தள்ளுகிறது. அதனுடைய இடைவிடாத முயற்சியே, “நம்மை ஒரு பூஜ்யம்” என்று நமக்கு உணர்த்துவதுதான்.

நமக்கு உள்ளேயும், வெளியேயும் உருவாக்கி வைத்துள்ள உருவகத்திற்கு அழிவு ஏற்படும், அபாயம் வந்தால், அப்போது, நமக்குள் பய உணர்வு எழுகிறது.

பயம் என்பது செயலில் ஒருபோதும் இல்லை. அது, எதிர்பார்ப்பில், ஏமாற்றத்தில் நிகழும் உணர்வுதான் பயம். அது, மனதை அடக்கி ஆள்கிறது. பெரிதாக்கி காட்டுகிறது.

அனுபவங்கள் பல வகையானவை. இவை அனைத்தும் படித்த  அறிவை  விட மேலானவை.  ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. அற்புதமானவை.  இந்த அனுபவங்கள் நமக்குள் ஆழப்பதிந்துள்ள நம்பிக்கையை, தன் முயற்சித் தன்மைகளைக் கண்டுபிடிக்கும் சக்தியைத்  தருகிறது.

மனிதனுக்கு, அனுபவங்கள் தான் உண்மையான, முழுமையான, மாற்றத்தை தெளிவை, விடுதலையைக் கொடுக்கும். எல்லோருக்குள்ளும்,  இந்நிலை  வந்துவிட்டால்  சமூகத்தில், ஒருவருக்கு, மற்றவர்கள் மீது அக்கறை ஏற்படும்.

இதனால் மதசம்மந்தமான சமூக ரீதியான, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும் பிளவுகள் விலகி, ஒற்றுமை வளரும். தான் தனி மனிதன் அல்ல. முழுமையின் ஓர் அங்கம் என்று உணர முடியும். ஆகவே, வாழ்க்கையில் ஏற்படும் இன்பதுன்பங்களை, வெற்றி தோல்விகளை, இலாப நஷ்டங்களை, அனுபவங்களாக  ஏற்றுக்கொள்ளுங்கள்.

படித்து வரும் அறிவைவிட, பட்டு வரும் அனுபவம் சிறந்ததாகும். ஆக, அனுபவங்களை ஒதுக்காமல், அனுமதித்து அனுபவித்தால், அந்த அனுபவமே சிறந்த  ஞானமாகும். அதன்பின் பார்க்கும் அனைத்தும் ஆனந்தமாகும்.

அனுபவத்தை அனுமதிப்போம்! ஆனந்தத்தை அனுபவிப்போம்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2015

என் பள்ளி
காலத்தின் காதலர்கள்
அஜந்தாவா எல்லோராவா
அனுபவம்… ஆனந்தமாகட்டும்
வெற்றி உங்கள் கையில்-19
அதிவிரைவு செயல்திறன் குறைபாடு
மிகப்பெரும் வெற்றிக்குப்பின் கர்வம் கொள்ளுவது தவறா?
வெற்றித் திருமகள் ஆரத்தழுவுகிறாள்
இடைவெளியை பூஜ்யமாக்கும்
நிதானம்
தொல்லைகளை விட்டுவிடு! எல்லைகளைத் தொட்டுவிடு!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்