Home » Articles » மிகப்பெரும் வெற்றிக்குப்பின் கர்வம் கொள்ளுவது தவறா?

 
மிகப்பெரும் வெற்றிக்குப்பின் கர்வம் கொள்ளுவது தவறா?


ராமசாமி R.K
Author:

சூரியன் மறைந்ததும் இரவில் தென்படுகிற மின்மினிப் பூச்சிகள் உலகத்திற்கு தாங்கள்தான் வெளிச்சம் தருவதாக நினைத்துக் கொள்கின்றன.

ஆனால் நட்சத்திரங்கள் பிரகாசிக்கும் போது மின்மினிப்பூச்சிகளின் கர்வம் அடங்கி விடுகிறது

ஆனால் முன்இரவில் சந்ரோதயம் ஆனதும் சந்திரன் ஒளியில் நட்சத்திரங்கள் மங்குகிறது அப்போது உலகம் முழுமைக்கும் வெளிச்சம் கொடுப்பது  தான்  தான் என்று சந்திரன் கர்வம் அடைகிறான்

சூரியன் உதயம் ஆகும் போது  சந்திரன் மறைந்து மங்கிப் போகிறான் நமது செல்வம் குறித்தோ வேறு செல்வாக்குகள் குறித்தோ செல்வந்தர்கள் செருக்குற வேண்டாம்.

“நம்மைக்காட்டிலும் பெரியோர் இந்த உலகில்  இருக்கின்றார்கள் என்று நினைக்க வேண்டும் என சொல்லித் தருகிறார்  பகவான்  இராம கிருஷ்ண பரமஹம்சர்” மித மிஞ்சிய தன்னம்பிக்கை தோன்றும் போது எனது கடந்த கால தொல்விகளை எண்ணுவேன் வரம்பில்லாது  எதையும் அனுபவிக்கும் நிலையில் எனது கடந்த கால பசியை எண்ணிக் கொள்வேன்;

மெத்தனமாக இருப்பதை உணரும் போது எனது களத்திலுள்ள போட்டிகளை நினைவில் கொள்வேன்;

எனது பெருமைகளை எண்ணி  மகிழும் போது  நான் அவமான  அடைந்த தருணங்களை  நினைவிற்கு கொண்டு வருவேன்; நான் வல்லமை மிக்கவன் என்றஉணர்வு வரும் போது வீசுகின்றகாற்றை நிறுத்த முயல்வேன்; அதிகளவு செல்வம் சேரும் போது உணவு கிடைக்காத வாய் ஒன்றை எண்ணிக் கொள்வென்;

என்னைப்பற்றி கர்வப்படும் போது எனது பலவீனமான  குணங்களை நினைவில் கொள்வேன்; எனது திறமைகள் இணையற்றவை என பெருமைப்படும் போது உயரத்திலுள்ள நட்சத்திரங்களை நோக்குவேன்  என தன் அனுபவத்தைப் பதிவு செய்கிறார் ஓக் மாண்டினோ.

நான் உங்களைவிட பணக்காரன் எனவே நான் உங்களை விடவும் உயர்ந்தவன்;

நான் உங்களைவிட பேச்சாற்றல் மிக்கவன் ஆகையால் நான் உங்களை விடவும் உயர்ந்தவன் எனச் சொல்வது முரண்பாடனதாகும். வாதத்திற்கும் ஒவ்வாததும்கூட நான் உங்களை விடவும்  பணக்காரன் எனவே  எனது சொத்து  உனது

சொத்தைவிட உயர்ந்தது எனவும், நான் உங்களை விட  பேச்சாற்றல் மிக்கவன் ஆகையால்  “எனது உரை உனது உரையை விடவும் மேலானது” .என்று சொல்வதே பொருத்தமானதாகும்.

இத்தகைய செல்வத்தை விடவும்  பேச்சாற்றலை விடவும் மனிதன் சிறிதளவு உயர்ந்தவன் என்பதை அறிய வெண்டும் என வழிப்படுத்துகிறார் –

ஞானி எபிக் டேட்டஸ்

ஒரு மனிதன் தன் வாழ்வில் ஏதாவது ஒரு சாதனையைச் செய்து முடிக்கும் போது  வெற்றியின் களிப்பிலிருக்கும் போது விருதுகளை பெறும் போது  மற்றவர்களின் பாராட்டுக்கள் கிடைக்கும்  போது அறிவார்ந்த  தன்மனைவி, மக்கள் இவர்களால் பெருமை பெறும் போது கடுமையான போட்டிகளிலே வெல்லும் போது தான் நிர்வகிக்கும்  நிறுவனம் தர வரிசையில் தன்னால்  முதலிடம் பெறும் போது தான் சொன்ன யோசனைகள் ஒத்துக்கொள்ளப்பட்டு அமல்படுத்தும் போது  தன்னை ஊடகங்கள் படம் போட்டு  பாராட்டும் போது அரசு பல விருதுகளினால் கௌரவிக்கும் போது

கல்வியில் சிறந்தவர்கள் தன் திறமைக்கான அங்கீகாரம் தரும் போது, தன் அறிவுக்கூர்மையால்  அவிழ்க்க முடியாத சிக்கல்களை எளிதாக தீர்க்கும் போது, வரலாற்றில் தன் பெயரை பதிவு செய்த  போது, சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தும்  அங்கீகாரமும் கிடைக்கும் போது, தன் உதவியால் உயிர் ஒன்று  காப்பாற்றப் பட்ட போது,  தன்னால் தான் சார்ந்த நிறுவனத்திற்கு பல கோடி  ரூபாய் லாபம் கிடைக்கும் போது  தன் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒழுக்கத்தினால்  பெருமைப்படும் போது,  விலை உயர்ந்த  உடைகள் அணியும் போது சொந்தமான விலை உயர்ந்த  கார்களிலே பயணிக்கும் போது விலை மதிக்கமுடியாத ஆபரணங்களை அணியும் பொது நீ அழகாக இருக்கிறாய் என்று மற்றவர்கள் நம்மை சொல்லும் போது மனதளவில்  ஒவ்வொருவரும் கர்வம் கொள்வது இயல்பாகும்.

இப்படி வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பல காரணங்களில் ஒவ்வொரு மனிதனும்  தன்னைப்பற்றி கர்வப்பட்டுக் கொள்வதுண்டு  இதைப் போன்று பெருமையில் வருகிற கர்வங்கள்  கண்டிப்பாக மனமகிழ்ச்சியையும் சந்தோஷ   அதிர்வுகளையும் உண்டாக்கும்.

ஒரு மனிதனுடைய  கர்வம்  தனக்கோ, தன் குடும்பத்திற்கோ,   தான் சார்ந்துள்ள துறைக்கோ பணி புரியும் நிறுவனத்திற்கோ ஒரு மகிழ்ச்சியும், ஆனந்ததையும் தரும் என்றால் அதில்  எள் முனை அளவு கூட தவறில்லை.

ஆனால் ஒரு மனிதனுடைய கர்வத்தினால்  மற்றவர்களுக்கு துன்பமும், தீங்கும் உண்டாகுமேயானால் சமுதாயத்திற்கு ஒரு பாதிப்பு உண்டாகுமேயானால் தான் சார்ந்துள்ள துறைக்கும்,  தான் பணி புரியும் நிறுவனத்திற்கும்  அதனால்   ஏதாவது ஒரு வகையில் இழப்பு  ஏற்படுமேயானால்  அந்த கர்வம் தவறானது.  தீங்கு  விளைவிப்பது,  தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. பாரத யுத்தம் முடிந்த பிறகு தர்மர் மாமன்னர் ஆக பதவியேற்றப்பிறகு ஒரு மாபெரும் விழா எடுக்கப்படுகிறது.  போரில் வெற்றி பெற்று, சாதனை புரிந்த வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழா  அது.  பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் அரங்கத்திலே நடக்கும் விழா.  ஒவ்வொரு பிரிவு  சாதனை புரிந்த போர் வீரர்களுக்கும் அவர்களது  முகமுன் கூறி அவரின் சாதனை முன்மொழியப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

தேர்ப்படையில் தேரில் நின்று போர் புரிபவனுக்கு  அதிரதன் என்று பெயர் அதிரதர்கள் மைதானத்திற்கு தேரோடு வருவார்கள். கூட்டத்தில் தேர் வந்து நின்றதும் தேரோட்டி முதலிலே  இறங்கி தேரிலிருக்கும் வீரன் இறங்குவதற்காக கைதாங்கல் தர வேண்டும். தேரில் இருந்து இறங்கும் வீரன் இந்த தேரோட்டியினுடைய  இரு கரங்களின் மேல்  கால் வைத்து இறங்குவது மரபு.

அர்ஜுனின் முறை  வருகிறது. இப்போது அர்ஜுனன் மனதிலே ஒரு சிறு கர்வம் உண்டாகிறது . மரபுபடி தான் இறங்கும் போது தனக்கு முன் தேரோட்டி  கண்ணன் இறங்கி  தான் இறங்குவதற்கு கைதர வேண்டும். தனக்காக கண்ணன்  தேரிலிருந்து முன்னதாகவே இறங்கி கையில் தாங்கு கொடுப்பதாக எதிர்பார்த்து சற்று மகிழ்ந்து கர்வம் கொள்கிறான்.

தேர் நிற்கிறது.  தேரோட்டி கண்ணன் தேரை விட்டு இறங்கவில்லை.  முக்காலமும் அறிந்த கண்ணன் அர்ஜுனனுடைய மனத்தில் இருக்கும் கர்வத்தையும்  அறிந்து கொள்கிறான். கண்ணன் அர்ஜுனனை நோக்கி “அர்ஜுனா தேரை விட்டு இறங்கு”  என்கிறான்.  இதை சற்றும்  எதிர்பாராத அர்ஜுனன் திகைத்து

“கண்ணா  மரபுப்படி நீ தானே முதலில் இறங்க வேண்டும்”  என்று கேட்கிறான்.

“நீ முதலில் இறங்கு  மற்றதை பின்னால் பார்க்கலாம்” என்று கண்ணன் சொல்கிறான்.

சற்று ஏமாற்றத்தோடு அர்ஜுனன் தேரிலிருந்து இறங்குகிறான். அர்ஜுனன் இறங்கி சற்று தள்ளி நின்றதும், தேரோட்டியான கண்ணபிரானும்  தேரை விட்டு இறங்குகிறான். கண்ணன் தேரை விட்டு இறங்கியதும்  தேரின் கொடியில் அமர்ந்திருந்த அனுமனும் தேரிலிருந்து  இறங்கி விடுகிறான்.  இவர்கள் இறங்கிய ஒரு வினாடியில் திடிரென்று தேர் தீப்பற்றி முழுவதுமாக எரிகிறது. அர்ஜுனன் அதிர்ச்சி அடைகிறான். கண்ணன் அமைதியாக சொன்னார்.  “அர்ஜுனா நீ சற்று கர்வப்பட்டதையும்  நான் அறிவேன் . நீ எதிர்பார்த்தப்படி  நான் தேரிலிருந்து  முதலில் இறங்கி இருந்தால் தேரின் கொடியிலிருந்த அனுமனும்  இறங்கி விடுவான்.  நாங்கள் இருவரும் இறங்கி விட்டால் போரின் போது இந்தத் தேரின் மீதும் உன் மீதும் வீசப்பட்ட  அஸ்திரங்கள் இந்தத் தேரை  எரித்து விடும் என்பது எனக்கு  தெரியும். நாங்கள் முன்பு இறங்கி இருந்தால்  தேரில்  இருந்த நீயும் தேரோடு எரிந்து இருப்பாய்.   அதனால்தான் உன்னை காப்பதற்காகத்தான்  தேரிலிருந்து  உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்”  என்று  சொன்னான்  கண்ணன்.

இது போல  நாம் மனதளவிலே கொள்கிற கர்வங்கள்  மற்றவர்களுக்கு துன்பம் உண்டாகும் போது  நம்மை அது முழுமையாக பாதிக்கும். நம்மை விட திறமைமிக்கவர்கள்   இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்து சாதனையாளர்கள் சற்று  கர்வத்தை  குறைத்துக் கொண்டு  பணிவோடு இருப்பது நலம்  தரும்.  கர்வத்தை தருகிற தன்னம்பிக்கையை விட அடக்கமான ஆற்றலை பெருக்குகின்ற, உந்து சக்தியையும்   உத்வேகத்தையும் தருகின்ற,  வெற்றியின் உச்சத்தை தொட்டுப்பார்க்கிற தன்னம்பிக்கையே மேன்மையானது.

மிகப்பெரும் வெற்றிக்குப் பின் அதைப்பற்றி அளவுக்கு அதிகமான கர்வம்  கொள்ளாமல்  பெருமிதம் கொள்ளலாம்.  மகிழ்ச்சி அடையலாம்.  அளவுக்கு  மீறிய கர்வம் ஆபத்தை உண்டாக்கும்.  அடுத்து நாம் இறங்கும் முயற்சியில்  ஏற்கெனவே இதைப் போன்று வெற்றி பெற்று விட்டோம்  அதனால் இதையும்  வெற்றி அடைந்து விடுவோம்  என்றகர்வம்  ஒரு மெத்தனத்தை உண்டாக்கி அடுத்த முயற்சிகளில் ஒரு தொய்வினை ஏற்படுத்தி வெற்றி வாய்ப்பினை தடுக்கும்.

அளவோடு கர்வம் கொள்வது ஆபத்தில்லை. அளவுக்கு மிஞ்சினால்  அமிர்தமும்

நஞ்சாகும்.

“வெற்றியோ தோல்வியோ எது வரினும் கடமையைச் செய்வொம்.

கர்வம் கொள்ளாமல் இருப்போம்.

யார் பாராட்டினாலும் பாராட்டா விட்டாலும் கவலை வேண்டாம்

நமது திறமையும் நேர்மையும் வெளிவரும்  போது பகைவனும்  நம்மை  பாராட்டி   மதிக்கத்  தொடங்குவான்”.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2015

என் பள்ளி
காலத்தின் காதலர்கள்
அஜந்தாவா எல்லோராவா
அனுபவம்… ஆனந்தமாகட்டும்
வெற்றி உங்கள் கையில்-19
அதிவிரைவு செயல்திறன் குறைபாடு
மிகப்பெரும் வெற்றிக்குப்பின் கர்வம் கொள்ளுவது தவறா?
வெற்றித் திருமகள் ஆரத்தழுவுகிறாள்
இடைவெளியை பூஜ்யமாக்கும்
நிதானம்
தொல்லைகளை விட்டுவிடு! எல்லைகளைத் தொட்டுவிடு!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்