Home » Articles » இடைவெளியை பூஜ்யமாக்கும்

 
இடைவெளியை பூஜ்யமாக்கும்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

ஏணி என்பது ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பயன்படுகிறது. பொதுவாக சுமார் 40 ஆண்டுகளுக்கு  முன் ஆசிரியர் சமுதாயத்தை ஏணிப்படிகளாய் இருந்து மாணக்கர்களை வாழ்க்கையில் முன்னேற்றி விடுகிறார்கள் என்று கூறினர், இன்று?

எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையின் சிற்பி நல்ல சிற்பி என்றால், அவர் வடிக்கும் சிலை கட்டாயம் நன்றாகத்தான் இருக்கும்.

இதுவே சுமாரான சிற்பி அல்லது மோசமான சிற்பி என்றால், அவர்கள் வடிக்கும் சிலைகள் சுமராகத்தான் இருக்கும்.

அதனால்தான் எண்ணங்களைச் சிற்பி எனக் கூறியுள்ளனர். இதை வாழ்க்கையில் கடைப்பிடித்தோரெல்லாம் வெற்றியாளர்களாக வாழ்கிறார்கள்.

எண்ணத்துக்கும் எதற்குமான இடைவெளியைக் குறைப்பது.? இருகைகள் உள்ளன, கண்ணுக்குத் தெரிகின்றன, இரண்டையும் இணைத்தால் இடைவெளி இல்லை.

ஆனால், எண்ணங்களுக்கு உருவமில்லையே அரூபமான ஒன்றை எப்படி இன்னொன்றுடன் சேர்ப்பது. வெகு சுலபம் ஏற்கனவே இணைந்துதானே உள்ளது.

காற்று எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது நறுமணத் திரவம் ஒன்றைத் தெளித்தால் காற்றில் அது கலந்து அந்த இடத்தைச் சுற்றிலும் மணம் வீசுகிறது, இது போலதான் எண்ணமும்.

தோன்றுகின்ற எண்ணம் பேச்சாகவோ செயலாகவோ மாறுவது தான் இடைவெளியை பூஜ்யமாக்கும் நிலை.

எண்ணம் தோன்றுமிடம் மனம், மனம் எங்கே உள்ளது? நமக்குள்தான் உள்ளது. ஆனால் அரூபமாக உள்ளது. வெண்ணெய் எங்கே உள்ளது? தயிருக்குள் உள்ளது. வெண்ணெயைப் பெற தயிரைக் கடைய வேண்டும்.

இதுபோல தானா எண்ணமும்?

எண்ணம் உருவாக தயிரைக் கடைவது போன்ற செயல் தேவையில்லை, சிந்தனை, விழிப்பு, தூக்கம் என்ற எந்த நிலையிலும் சரி மனித மனதில் எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.

நெய் எங்கே உள்ளது?

வெண்ணையில் உள்ள நெய்யைப் பெற என்ன செய்ய வேண்டும்? வெண்ணையை நெருப்பில் காய்ச்ச வேண்டும். கசடுகள் நீங்கி சுத்தமான நெய் கிடைக்கும்.

இதுபோல எண்ணங்களைக் கையாண்டால் செயல்களுக்கான இடைவெளி பூஜ்யமாகி எல்லோருமே என்றுமே வெற்றியாளர்களாகவே வாழ முடியும்.

“தீயவை தீய பயத்தலால் தீயவை

 தீயினும் அஞ்சப் படும்” – குறள் 202

தீய செயல்கள் தீயை விடக் கொடியவை என்றார் திருவள்ளுவர்.

தீய செயல்களுக்கு அடிப்படை தீய எண்ணங்கள்தான்

“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்”                     – குறல் 282

மனம் என்பது பகுதறிவா? மனம் தான் நம் மனித இனத்தின் சிறப்பே.

இந்த மனம் என்பது இருப்பதால்தால் தான் நாம் மனிதர்கள் எனக் கூறிக் கொள்கிறோம்.

இதுவே பகுத்தறிவாகும் உலகில் மற்ற உயிரினங்களுக்கு இல்லாதது இது.

இந்த மனம் செம்மையாக இருக்க வேண்டும்.

மனதின் செயல்பாட்டுக்கு ஒருவரின் பெற்றோர், அவர் கற்கும் கல்வி, அவரது நட்பு வட்டம், பழக்க வழக்கம், வாழும் சுற்றுச் சூழல், உண்ணும் உணவுகள் மற்றும் இயற்கை ஆகியன காரணமாக உள்ளன.

எனவே தான் மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்றனர் ஞானிகள். இந்த எண்ணங்கள் செயல்களாக மலரும் போது உண்டாகும் பதிவுகளும் மனதில் உள்ளன.

“எண்ணமே இயற்கை தன் சிகரமாகும்

இயற்கையும் எண்ணத்தில் அடங்கிப் போகும்

எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை

 எண்ணத்துக் கப்பாலும் ஒன்றுமில்லை”

என்பார் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி. இதனால் தான் ஒருவரது எண்ணங்களை அவரது வாழ்கையின் சிற்பி என்றனர்.

தோன்றக் காரணம்:

தேவைகளின் அடிப்படையில் (பசி, தூக்கம் போன்றவை) பழக்கத்தின் காரணமாக பிறருடன் ஒப்பிடுவதால், சிந்திப்பதால், படிப்பதால், பார்ப்பதால், கேட்பதால் நமக்கு எண்ணங்கள் எப்போதும் தோன்றிக் கொண்டே உள்ளன.

இந்த உடலில் உயிர் உள்ளவரை இந்த எண்ணங்கள் உண்டாகும். உயிர் பிரிந்த பின் எண்ணமே அந்த உடலுக்கு இல்லை. அது போலவே, உயிருடன் இருந்தாலும் இந்த உடலுக்குள் ஓடி நம் உறுப்புகளின் வழி வெளியேறிக் கொண்டிக்கும் சீவ காந்தம் தன் ஒட்டத்தை நிறுத்தி விட்டாலும் எண்ணமிருக்காது. இந்த நிலையை “கோமா” நிலை என்று மருத்துவத்தில் கூறுகின்றனர்.

எண்ணங்கள் பேச்சாகவோ, செயலாகவோ மாற்றம் பெறுமிடம் தான் இடைவெளியில்லா பூஜ்ய நிலை என்று பார்த்தோம்.

இதில் தடை கூடாது இதை

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு”    -குறள் 467

என்றார் திருவள்ளுவர்.

செயலை தொடங்கும் முன்பே, சரியாகத் திட்ட மிட்டுத் துவங்காவிட்டால், இடையில் குழப்பத்துக்கு உள்ளாகி பலன்கள் எதிர் மறையாக அமைந்துவிடும்.

“நினைப்பு தான் பொழைப்பைக் கெடுக்குது” என்று கிராமத்தில் கூறுவார்கள்.

“கொப்பளிப்பது பன்னீர்,

 குடிப்பது கூழ்”

என்றும் சொல்வார்கள், இதெல்லாம் எண்ணங்கள் சரியாக இருந்தால் செயல்களும் மிகச் சரியாகவே இருக்கும் என்பற்காகக் கூறப்படும் சொற்கள்.

வீட்டில் சமைக்கிறோம் ஒருவருக்குமே பசி என்ற உணர்வே இல்லை, அதனால் யாருமே சாப்பிடவில்லை, சமைத்த சாப்பாடு என்ன ஆகும்?

வீணாகி விடும் தானே,இது போன்றது தான் நாம் எண்ணும் எண்ணங்களும்.

உணவு தான் மட்டும் கெட்டு விடும். ஆனால் நமது எண்ணங்கள் செயலுக்கு வராவிட்டால் நம் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக்களையும் கெடுத்து விடும்.

கெட்ட மோசமான எண்ணங்கள்: “திருடனைத் தேள் கொட்டியது போல”  என்று நாம் சொல்லுகிறோம். மற்றவர்கள் அயர்ந்து தூங்கும் போது அல்லது அஜாக்கிரதையாக இருக்கும் போது சப்தம் செய்யாமல் எடுத்துக் கொள்வது திருட்டு.

சப்தம் வந்தால் பொருளுக்குரியவர் உஷாராகி விடுவார், இந்த நிலையில் தேள் கொட்டினால், திருடன் சப்தம் போட்டால் பிடிபடுவான். எனவே தான் தேள் கொட்டின வலியையும் பொறுத்துக் கொண்டு தன் தொழிலை முடிப்பதில் கவனமாயிருப்பான் என்பதற்காக சொல்லப்பட்டது இது.

நாம் எண்ணும் எண்ணங்கள் எல்லாவற்றையும் மற்றவர்களிடம் சொல்ல முடியுமா என யோசித்தால் சிலவற்றை மிக நெருக்கமாயுள்ள கணவன் மனைவியிடம் கூட அல்லது மிக நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்ல முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. எனவே இது போன்ற எண்ணங்களை ( உதாரணமாய் மற்றவர்களது பொருளைத் தனதாகக்கும் எண்ணம் (பொருள் என்பது இங்கு ஆண், பெண் என்றும் கொள்க)) நம் மனதில் தோன்றவே இடம் தர கூடாது.

நான் செய்யவா போகிறேன்? நினைத்துப் பார்ப்பதில் என்ன தவறு? என்ற சமாதானம் விரைவில் செயலுக்குள் தள்ளி விடும்.

நண்பர் சிலர் உள்ளனர் மதுப் பழக்கம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் கலந்த குழு இது.

பழக்கமில்லாதவர்களும் நாளடைவில், ஒரு நாள் குடித்துத் தான் பார்க்கலாமே என்ற எண்ணத்துக்கு அடிமையாகி விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தான் உள்ளத்தால் உள்ளலும் தீதே சேருமிடமறிந்து சேர்  என்றனர்.

நட்பு என்பது முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலை என்கிறது குறள்  789

வீடுகளில் இன்று சிறுவர், சிறுமிகள் கூட செல் போன் வைத்துள்ளனர். இவர்கள் சில சமயம் பேசும் போது தனியே சென்று பேசுவதைப் பார்க்கலாம் தவறில்லை என்றால் பெற்றோர் முன் பேசாமல் ஏன் தனியே சென்று பேசுகிறார்கள்.

ஏதோ தப்பு நடக்கிறது எனப் பெற்றோர் எச்சரிக்கையுணர்வுடன் விழிப்பாகச் செயல் பட வேண்டும்

பொதுவாகச் சொல்லுவோம் நம் மகிழ்ச்சிக்குத் தடை மனம் தான் என்று, இங்கு மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்பதால் எண்ணமே நம் மகிழ்ச்சிக்குத் தடை என உறுதியாக நம்பலாம்.

அதனால் தான் “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என கணியன் பூங்குன்றனார் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றார்.

எண்ணங்கள் செயல்களாக மலர்ந்து நமக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்சியைத் தர கீழ்க் கண்டவைகளைச் செய்ய வேண்டும்.

  1. அவரவர் உருவத்தை நன்கு நினைவில் வைக்கவும்
  2. சான்றோர் உருவப்படங்களை வீடுகளில் மாட்டவும்
  3. அதிகாலையில் கண்ணாடியில் முகம் பார்த்து தன்னை நேசிப்பதாய் கூறவும்

மகா கவி பாரதி –

“எண்ணிய முடிதல் வேண்டும்  நல்லவே எண்ணம் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும்” என்று கூறியதை என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனைய துயர்வு”   – குறள் 595

என்ற குறளுக் கேற்ப நல்ல எண்ணங்கள் நிறைந்துள்ள மனம் ( உள்ளம்) அந்த மனிதனை மகிழ்ச்சியிலேயே மூழ்க வைக்கும்.

ஆசையின்றி வாழ முடியுமா? முடியாதே

ஆசை என்பது தான் என்ன?

                            தொடரும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2015

என் பள்ளி
காலத்தின் காதலர்கள்
அஜந்தாவா எல்லோராவா
அனுபவம்… ஆனந்தமாகட்டும்
வெற்றி உங்கள் கையில்-19
அதிவிரைவு செயல்திறன் குறைபாடு
மிகப்பெரும் வெற்றிக்குப்பின் கர்வம் கொள்ளுவது தவறா?
வெற்றித் திருமகள் ஆரத்தழுவுகிறாள்
இடைவெளியை பூஜ்யமாக்கும்
நிதானம்
தொல்லைகளை விட்டுவிடு! எல்லைகளைத் தொட்டுவிடு!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்