Home » Articles » நிதானம்

 
நிதானம்


அனந்தகுமார் இரா
Author:

கதிரேசனுக்கு மாறுதல் ஏற்பட்டுள்ளது.  மாறுதல் என்பது ஒரு நிரந்தரமான விஷயம் தான்.  சந்தோஷம் என்னும் பொருளைப் போல மாறுதலும் நிரந்தரமானது தான்.  வங்கியில் வாடிக்ககையாளர் சேவை பிரிவில் இருந்து வெளியே வந்து கிராமப்புறங்களை எல்லாம் சுற்றி வளர்ச்சி கடன் கொடுத்த பணிகளை பார்வையிடுவதைப் போன்ற பணி எனலாம்.  சற்றேறக் குறைய சரியாக இருக்கும்.

பணி நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது வாழ்க்கையும் அதற்குள்ளாகவே அடங்கிப் போய்விடுகின்றது.  பணியினை நேசிக்கத் தொடங்கினால் வாழ்வு நம்மை நேசிக்க தொடங்கிவிடுகின்றது.  ஒரு அறிவியல் அறிஞருடைய வாழ்வு, போர் வீரருடைய வாழ்வு, சமூக தேவையை தீர்க்க போராடும் சேவகருடைய வாழ்வு என எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை எடுத்துக் கொண்டால் பணிக்குள்ளேயான வாழ்க்கையை அவர்கள் அடையாளம் கண்டுபிடித்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.  உறவுகளுக்கு ஆன நேரத்தை பகிர்ந்தளித்திருக்க வேண்டும்.  இயற்கையாகவே உறவுகள் அவ்வாறான ஒரு சமநிலையை எய்திவிடுகின்றன.

கதிரேசன் தன் இரு குழந்தைகளோடு போதுமான அளவு நேரம் செலுத்தும் பொழுது தன் வாழ்வை நிதானமாக மீண்டும் வாழ்ந்து பார்ப்பதாக உணர்ந்தார்.  திருவள்ளுவர் வாழ்க்கைத்துணை நலம், மக்கட் பேறு என்று அதிகாரங்களை அடுக்கி விட்டு துறவு என்கின்ற அதிகாரத்தையும், தவம் என்று இன்னொரு அதிகாரத்தையும் சேர்த்து வைத்து எல்லா வகையான வாழ்க்கைக்கும் பொதுவான வாழ்க்கையை வைத்து எடுத்துக்காட்டு கொடுத்து இருக்கின்றார்.

மிக நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் போதும் அதற்குப் பிறகு ஒருவருக்கு இல்லாதது என்ன?  எல்லாமே அமைந்துவிடும்.  அப்படி ஒரு மனைவியைப் பெற்றபின்பு அவசரமாக மேலும் மேலும் பொருளை ஏன் தேடி நிதானம் இழக்க வேண்டும் . . .  என்று பொருள்படும் வண்ணம் . . .  இல்லதென். . .  என்கின்ற வார்த்தையில் தொடங்கும் குறட்பா எண்.53ல் அளித்திருக்கின்றார் அதற்கு நேர்மாறாக,  மனைவி இறந்த பின்னரும் குழந்தைகளை சீராக வளர்த்து நற்பெயர் பெற்ற காங்கேயம் பெரியவர் ஒருவர் நினைவு வருகின்றது.

மனைவி குறித்தும், இல்லறம், துறவறம் குறித்தும் மட்டும் அன்றி பல்வேறு பொருட்களின் இருவித வேறுபட்ட தன்மைகள் குறித்தும் முப்பால் நிலவும் குறள் பொருள் குறித்தும் அவ்வப்போது அலசுகையில் வாழ்வு ஒரு நேர்கோட்டு வரையறைக்குள் தன்னை சிறையிட்டு விடுவதில்லை  எண்ணற்ற வளைவுகளை திருப்பங்களாக, கொண்டே செயல்படுகின்றது என்று கதிரேசனுக்கு தோன்றியது.

சமீபத்தில் ‘குறள் வானம் ‘ என்கின்ற சுப வீரபாண்டியன் அவர்களது குறள் விளக்க புத்தகம் படிக்க நேர்ந்தது.  திருக்குறளுக்கான இருபது உரையாசியர்கள் கொடுக்கும் பொருள் விளக்கத்தின் சரிவிகித சாரமாக அமைந்திருந்தது புத்தகம். பரபரப்பாக சரசரவென குறளின் நெளிவு சுழிவுகளில் எல்லாம் புகுந்து ஒரு புத்துணர்ச்சியோடு வெளிவர முடிகின்றது.  பார்க்கின்ற கோணத்தில் எல்லாம் வார்த்தைகள் வளைந்தும் வளைக்கும் வாய்ப்பை உணர்த்தியும் இப்படியும் கூட வள்ளுவப் பெருந்தகை நினைத்திருப்பாரோ?  என்னும் அளவுக்கு பொருள் பரிமாறப்பட்டு உள்ளது.

படிக்கும் பழக்கம் நிதானத்தை ஊக்குவிக்கின்றது.  நிறைய படித்துவிட்டு கொஞ்சமாக எழுதவேண்டும் என்று “”சிறுகதை மன்னன்” சொன்னதாக பூ.கோ.சரவணனின் ‘வரலாற்று மனிதர்கள்’ புத்தகத்தில் இருக்கின்றது.  இருநூறு வரலாற்று ஆளுமைகள் குறித்து குறிப்பு தேடி தொகுத்து முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதப்பட்டு உள்ளது.  நாமே தேடி தனித்தனியாக ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாக படித்து முக்கியமானதை மட்டும் சத்து எடுத்து இடையே சலிப்படைந்துவிடாமல் சேகரித்தால் அடைய கூடும் மாபாசானில் இருந்து பப்லோ நெருடா வரை வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்த எடுத்துக் காட்டுக்களைத் தொகுத்து அவர்களைத் தனித்துக் காட்டும் மேற்கோள்களோடு எழுதிக் குவித்திருக்கின்றார்.  அண்ணா பல்கலைக்கழக சுற்றுச் சுவரை தாண்டி இன்னும் வெளியே வராத இந்த இளம் வயதிலேயே . . . .

இவ்வளவு நிதானமாக கடும் உழைப்பை கட்டுரைகளில் காட்டியிருக்கின்ற இவரது சிரத்தையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  அதற்கு பதில் இவரது புத்தகத்தை நிதானமாக வாசிப்பதும் நன்றாக தகும்.

கதிரேசன் ஒரு இந்திய ஆட்சிப்பணி நேர்முகத் தேர்விற்கு செல்ல உள்ள மாணவன் குறித்து தெரிந்து கொள்ள நேர்ந்தது.  படித்தது ஏரோநாடிகல் எஞ்சினியரிங்  ஆனால் பெர்னௌ தியரம் தெரியவில்லை.  இது ஒரு துயரமான நிலைதான்.  வேகம் அதிமாக இருக்கும் இடத்தில் காற்றழுத்தம் குறையும் அவ்வளவுதான்.  இதில் அழுத்தம், வேகம் இரண்டு தான் எதிர்மறை உறவின் தொடர்பில் உள்ளது.  ஆனால் நமது நண்பர் வேறேதோ பதட்டத்தில் புதுக் கோணத்தில் பதில் சொல்லியபிறகு, தெரியவில்லை மறந்து போனது என்றும் கூறினார்.  நிதானம் நினைவலைகளை நெறிப்படுத்துகின்றது.  அது வாசிப்பதை வார்த்தைகளோடு நிறுத்தி விடாமல் படிப்பது வரை எடுத்துச் செல்கின்றது.

ஆங்கிலத்தில் “செமான்டிக்ஸ்’ என்றால் வரிக்கு வரி பொருள் என்பார்கள்.  பிராக்மாடிக்ஸ் என்றால் வரிகளுக்குள்ளே மறைந்திருக்கின்ற பொருள் குறித்துப் படிப்பது ஆகும்.  நிதானம் மட்டுமே இரண்டையும் வேறுபடுத்தி, புரிதலின் ஆழத்தை நீட்டிக்கும்.  புரிதன் மீது மேலும் மேலும் அடுக்கப்படும் தகவல்கள் சிமெண்ட் கம்பிகள் கொண்டு கட்டுவது போன்று இணைந்து ஏரோநாடிகல் எஞ்சினியரை பறக்கச் செய்கின்றன.  எந்தப்படிப்புக்கும் சில அடிப்படையான கொள்கைகள் ஆதாரமாக இருக்கின்றன.  அவை நிதானமாக புரிந்துகொள்ள வேண்டியவை.  அவை எவ்வளவு வருடங்களானாலும் திரும்ப தவறாக புரிந்து கொண்டதையெல்லாம் துப்புறவாக மறந்துவிட்டு மீண்டும் படிக்கப்பட வேண்டுபவை.  அதற்கு நிதானம் வேண்டும் அது இருந்தால், அடிப்படையை செப்பனிட ஆகும் காலவிரயத்தால் வரும் சேதத்தை சற்றும் பொருட்படுத்தி கவலைப்பட வேண்டாத சூழல் வரும்.

அதாவது, எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, செலவிடலாம், ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் நினைவில் வைத்துவிட கூடாது.  எபிஃபேனி என்றொரு சந்தர்ப்பத்தை ஆங்கிலத்தில் சொல்வார்கள்.  அதாவது, புரிதனால் ஏற்படும் மகிழ்ச்சிக் கீற்று என்று மொழி பெயர்க்க கதிரேசன் விரும்புகின்றார்.

மின்னல் கீற்று மாதிரியானதொரு மகிழ்ச்சி வேட்டை மூளையில் ஏற்படுத்தும் பரவசமான உணர்வு அது.  கதிரேசன் ஒரு சில விஷயங்களை  புரியவில்லை என்று விசனப்பட்டு, விட்டுவிட்டு, மீண்டும் பல நாட்கள் குறுகுறுப்போடே கழிந்த பிறகு  திடீரென ஒருநாள் புரிய வருகையில் ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது.  அதை அனுபவித்திருப்பீர்கள் நிறையப் பேர்.   “” நவில் தொறும் நூல் நயம்” என்று தொடங்கும் குறள் எழுநூற்றி எண்பத்து  மூன்றாவது நட்பு என்கின்ற அதிகாரத்தில் வைக்கப்பட்டு உள்ளது.  படிக்கும் பொழுதெல்லாம் புது புது அர்த்தங்களை தருகின்றது புத்தகம் என்று கூறியிருப்பார்.

அந்த சந்தோஷத்தைப் பெரியவர்களுடன் பழகும்பொழுது கிடைக்கின்ற இன்பத்தோடு ஒப்பிட்டுப் பார்த்திருப்பார்.  ஒருமுறை படிக்கவே நமக்கு பொறுமையும் நிதானமும் வேண்டும்.  பலமுறை படிக்க வேண்டும் என்றால் எவ்வளவு நிதானம் வேண்டுமோ? தெரியவில்லை.  நிதானம் இருந்தால் நூல் படிக்கலாம், நூல் படித்தாலும் பொறுமை வரக்கூடும்.  புத்தகத்தை பலமுறை படிப்பது ஆனந்தத்தை அடைய வழிகோலும்.  கோலூன்றும் வயதில் . . .  திருநாவுக்கரசரின் . . . பாலனாய் கழிந்த நாளும் என்றொரு பாடல் . . . . குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்து வீணாகிவிட்டது என்று நிதானமாக யோசிக்காத வாழ்வைக் குறித்து பேசி இருப்பார்.  எனவே நிதானம் இளமையில் வரவேண்டும்.  சரியான காலத்தில்  பயிர் செய்ய – காலத்தே பயிர் செய் என்று சொல்வது போல.. . .

ஐந்திலே வளைந்து பொறுமை காக்க வேண்டும்.  கதிரேசன் செய்தித்தாளில் துரித உணவொன்று சர்ச்சைக்குள்ளாவது குறித்து படித்தார்.  உணவில் மட்டுமல்ல வாழ்வே துரிதத்தை நோக்கிச் செல்லும் பொழுது நிதானமாக ஒரு தலைப்பில் அவர் கருத்துக்களைச் சொல்ல முற்படுவது சாலச் சிறந்தது என்று கருதினார்.

நீடித்து நிலைக்கக்கூடிய விஷயங்களை அவசரகதியில் ஒருநாளும் உருவாக்கிவிட முடியாது என்று தோன்றியது.  குறைந்தபட்சமாக, இயற்கை, அவ்வாறு அவசரப்பட்டு எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்து விடுவதில்லை.  கதிரேசன் கள ஆய்வின் பொழுது சந்தனமரம் நடப்பட்டு இருந்த நிலத்தின் ஊடாக நடந்து கொண்டு இருந்தார்.

ஈரோட்டில் அமராவதி நதிக்கரையைத் தாண்டிப் பயணித்த பொழுது கண்ட ஒரு தோட்டம்.  சந்தன மரங்களை பயிரிட்டு வளர்ப்பது விசித்திரமானது.  அது ஒரு ஒட்டுண்ணி வேர் கொண்ட மரம் என்று வேளாண்மை அறிவியல் படித்த நண்பர் ஒருவர் சொல்லக்கேட்டார்.  உடன் நான்கைந்து மரக்கன்றுகளைக் (சவுக்கு மரங்கள்) கூட நடவேண்டுமாம்.  சந்தன மர வேர் அவ்வாறு அருகே உள்ள மர வேரில் இருந்து நீர் மற்றும் சத்துக்களை உறிஞ்சி வளருமாம்.  ஆச்சரியமாக இருந்தது.  இதில் நிதானம் சொல்ல எதுவுமில்லை . . . . ஆனால் இன்னொரு தகவல் . .

சந்தனமரம் நன்றாக வாசனை தைல எண்ணெய் பிடித்து செழிக்க வேண்டுமெனில் சுமார் 40 வருடங்கள் ஆகிவிடுமாம்.  பெரும்பாலான நிகழ்வுகளில் மரத்தை நட்டவர் அது வளர்ந்து முதிர்ந்து நல்ல பலன் தரும் வயதும் பருமனும் அடையும் வரை உயிர் வாழ்வார் ? என்பது சந்தேகமே.  அவ்வளவு நிதானமாக சந்தனம் பயிராகின்றது.  அடுத்த முறை ஊதுபத்தியிலும், சோப்பிலும் சந்தன வாசனையை நுகரும் பொழுது நாம் ஒரு தலைமுறையைத் தாண்டிய தியாக உணர்வின் வாசனையை நிதானமாக உணர வேண்டும் தான்.

நிதானம் மாறுதல்களை வரவேற்கின்றது.  புதுப்புது வார்த்தைகள் அமைதியான மனதிலிருந்தே பிறக்கின்றன.  நிர்மலமான அதிகாலை சலனமில்லாத காலைக்காற்று மகிழ்ச்சிக்கு அடித்தளம் அமைக்கின்றது.  சட்டென உதட்டைத் தாண்டிவிழும் சொற்களை சற்றே வளைத்து சந்தனம் பூசி அனுப்பி வைக்குமளவு நிதானம் நமக்கு இருக்குமேயானால் கேட்பவர்களின் காது குளிர்கின்றது.  நிம்மதி பரவுகின்றது.  நம்பிக்கை பிறக்கின்றது. வெளிச்சம் நடக்கின்றது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2015

என் பள்ளி
காலத்தின் காதலர்கள்
அஜந்தாவா எல்லோராவா
அனுபவம்… ஆனந்தமாகட்டும்
வெற்றி உங்கள் கையில்-19
அதிவிரைவு செயல்திறன் குறைபாடு
மிகப்பெரும் வெற்றிக்குப்பின் கர்வம் கொள்ளுவது தவறா?
வெற்றித் திருமகள் ஆரத்தழுவுகிறாள்
இடைவெளியை பூஜ்யமாக்கும்
நிதானம்
தொல்லைகளை விட்டுவிடு! எல்லைகளைத் தொட்டுவிடு!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்