ஆலோசனை
எனக்கு வாழ்க்கைல பிடிக்காத ஒரே வார்த்தை “அட்வைஸ்”. அப்படி பலபேர் சொல்லிக் கேட்டிருப்போம். வங்கிப்பணிகளுக்கான நேர்முகப் பயிற்சி தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. விஜயன் ஒரு உயர்அதிகாரி. அவரை அடுத்த மாதம் நடைபெறும் நேர்காணலில் தேர்வு ஆகியிருக்கின்ற மாணவர்களை பயிற்றுவிக்க ஒரு நிறுவனம் அழைத்திருந்தது. விஜயன் அறிவுரை வழங்குவதில் அதிகம் நம்பிக்கை இல்லாதவர். நேர்முக தேர்வுக்கான பயிற்சியில் எவ்வாறான இளைய தலைமுறை வருகின்றது என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்குமே என்பதற்காகவே கலந்து கொண்டு தன் பங்கிற்கு கேள்விகளைக் கேட்பார். சில நேரங்களில் மறக்க முடியாத அனுபவமாக அந்த கலந்துரையாடல்கள் அமைந்து விடுவதுண்டு. தனது பணிக்கு தேர்வாகி பன்னிரண்டு வருடங்கள் ஆன பின்பும் அரிச்சுவடியைப் படிப்பவர்களோடு பழகுவதில் அவ்வளவு மகிழ்ச்சி. எதிர்காலத்தில் தனது கட்டமைப்பு எப்படிப்பட்ட சிந்தனையோட்டம் உள்ளவர்களால் கட்டியாளப்படும் என்று தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம். எதிர்பார்ப்புகளோடு மாக் இன்டர்வியு அறையுள் பதட்டமும் படபடப்பும் கலந்து நுழைந்து பேசும் இளைய தலைமுறையைப் பார்க்கையில் தனக்கும் அந்த வாய்ப்பு ஒருமுறை கைநழுவிப் போனது குறித்து ஞாபகம் வந்தது.
அப்பொழுது பயிற்சி நிறுவனம் அண்ணா நகரில் இருந்தது. வாயிலில், முழுக்கை சட்டை, காலணி அணிந்து டையை இருக்கி கட்டி முழு கட்டமைப்போடு காத்துக்கொண்டு இருந்தான் விஜயன். கடந்த 2003ல் அவனுடைய வாய்ப்பு வந்தபாடில்லை. ஒவ்வொருவருக்கும் அரைமணி நேரம், அல்லது கொஞ்சம் அதிக நேரம் கூட ஆகலாம். ஐந்து பேர் போர்டில் இருப்பார்கள். ஆளுக்கு ஐந்து நிமிடம். ஒன்றிரண்டு கேள்விகள் வந்தாலே அரைமணி நேரம் ஆகிவிடுகின்றது. ஐந்து மாணவர்கள் போனாலே இரண்டரை மணி நேரம் ஆகிவிடுகின்றது. கூட பத்து நிமிட இடைவேளை, கொசுறு நேரம் என்று காலம் கடந்து விடும். விஜயன் இரண்டு மணிக்கெல்லாம் வந்துவிட்டாலும் மூன்று மணி சுமாருக்குத்தான் போர்டு தொடங்கி முதல் மாணவன் உள்ளே சென்றான். அடுத்து செல்லப்போவது யாரென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அலுவலக உதவியாளர், அசட்டையாக அந்த பட்டியலைக் கொண்டு வந்தார். அமைதியாக கொடுத்தார். அவருக்கு எல்லா இன்டர்வியூக்களும் ஒன்றே. அதன் முடிவுகள் அவரை பாதிப்பது இல்லை. தன்பெயர் கடைசியாக இருப்பதை விஜயன் தெரிந்து கொண்டார். அந்த வரிசையில் மாலையாகி விடும் என்கின்றசெய்தி விஜயனுக்கு கிடைத்தது. சரி, பராவாயில்லை காத்திருப்போம் என்று காலம் கடந்தது. மூன்றாவதாக போன பெண் நிறைய பதில்கள் நன்றாக சொல்லியிருப்பார் போல முழுதாக ஒரு மணி நேரம் ஆன போது மணி ஐந்தைத் தொட்டிருந்தது. ஐந்தே முக்கால், ஆனால் சென்னையின் கடிகாரமுள் வீட்டை நோக்கி ஓடத்துவங்குகிறதோ? இல்லையோ அலுவலகங்கள் அடங்கத் தொடங்கிவிடும் சூழல்.
தான் எதிர்கொள்ளப்போகும் நேர்முகத் தேர்விற்கு ஏற்கனவே தேர்வாகியிருக்கும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் ஆலோசனை தருவார்கள் என்று ஏக்கத்தோடு இருந்த விஜயனின் எதிர்பார்ப்பு ஆட்டம் கண்டது. எப்படியும் நீண்ட நேரமாக காத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் இருக்கும் என்று தோன்றியது. அந்த அதிர்ஷ்டம் இன்றைக்கு அடிக்காதா? என்று மனது ஏங்க ஆரம்பித்தது. இன்னும் இரண்டு பேர்தானே, பார்த்துவிடுவார்கள். கொஞ்சம் குறைவான கேள்விகள் குறைவான நேரத்தோடு முடிந்தாலும் பரவாயில்லை என்ன கேள்வி கேட்பார்களோ? என்று இருந்த பதட்டம் போய் கேள்வி கேட்கப்படும் வாய்ப்பு கிடைக்குமோ? இல்லையோ? என்று ஏக்கப்படும் சூழ்நிலை வந்துவிட்டது.
அந்த அலுவலக உதவியாளர் மாணவர்களை அடுத்து உங்கள் டர்ன் என்று சொல்லி பெல் அடிக்கப்பட்டதும் உன்ளே அனுமதித்துக்கொண்டு இருந்தார். அவர் ஏதோ ஐ.ஏ.எஸ் சீட்டையே அளிக்க இருப்பதுபோல விஜயனுக்கு தோன்றியிருந்தது. அப்போதைக்கு, அதுதானே இலக்கு என்றும் தோன்றியது. தன்னுடைய அவஸ்தை எல்லாம் தெரிந்தும் ஒரு புத்தர் முகம் போல சமாதான சமநிலையோடு முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் அந்த அலுவலக உதவியாளரோடு நட்பு வளர்க்கும் பேச்சு முயற்சி தோல்வியில் முடிவடைந்தது இன்னும் நினைவிலிருந்து தொலைக்கின்றது.
படித்த கேள்விகள் தன்னைப்பற்றிய தகவல்கள், தமிழ்நாட்டில் அப்போதைக்கு பரபரப்பாக நிலவும் பொது அறிவு கரண்ட் அஃபேர்ஸ் என எல்லாவற்றையும் ஒரு முறை அசைபோட்டுத் திருப்பிப் பார்க்கலாம் என்று நினைத்து இருந்தது எல்லாம் போய் நமக்கு மாக் இன்டர்வியு இவ்வளவு அனுபவம் வாய்ந்த அதிகாரிகளால் நடத்தப்படுமா? அதன்மூலம் பணியில் சேரும் வாய்ப்பு உயருமா? என்றெல்லாம் யோசனை அலைபாய்ந்தது. ரெஸ்ட்லஸ் ஆனது நினைவிருக்கிறது.
அதோ நான்காவது ஆளும் வெளியேற, மணி ஆறை நெருங்குகிறது. ஐயோ இறுதிவாய்ப்பு அன்றைக்கு பொதுவாக ஒரு கேன்டிடேட்டுக்கு ஐந்து நிமிடம், போர்டு மெம்பர்கள் மார்க் போட எடுத்துக் கொள்வார்கள். அதன்பிறகு அடுத்த கேண்டிடேட்டின் சிவிஐ எடுத்து பயோடேட்டாவைப் பரிசீலனை செய்து கேள்விகளை ஃப்ரேம் செய்வார்கள். அந்த நொடிகள், அந்த நொடிகள் பதட்டத்தோடு கடந்தன. விஜயன் மயக்கம் போடாத குறை. பீ.பி எகிறியது. கதவு சொர்க்க வாசல் போல தெரிந்தது.
அந்த சமயத்தில் ஒரு அசாத்திய சம்பவம். பயிற்சி நிறுவன டீன், பிரின்ஸ்பால் ஒரு மாணவியைக் கையோடு அழைத்துவந்து அறைக்கதவைத் திறந்து அவரோடு உள்ளே செல்ல, கையறுநிலையை அடைந்து கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கிய இலங்கை வேந்தன் நிலையடைந்ததால் புத்தர் மட்டுமே அக்கம் பக்கத்தில் அதே மந்தகாச புன்னகையோடு காட்சியளித்தது தெரிந்தது. அவர்களுக்கு உங்களைவிட முன்கூட்டியே இன்டர்வியு டேட் இருக்கு. அதனால் நாளைக்கு காலைல முதல் ஆளா ஒரு போர்டில் போடலாம் என்கின்ற பதிலை யார் சொன்னார்கள். எப்படி சென்னார்கள் என்று தெரியவில்லை. அடுத்த நாளும் வேறேதோ இடத்தில் மாக் இன்டர்வியுவிற்காக சென்றிருந்தார் விஜயன். இன்றைக்கு மேசையின் இந்தப்பக்கம் அமரப் போகின்றார். பன்னிரண்டு வருடங்கள் ஆகிறது.
அந்த இழப்புக்கு?! பின்பு நேர்முக தேர்வுக்கு, இருமுறைதேர்வாகி, பணியிலும் தேர்வாகி அன்று பயிற்சி கொடுத்த அதிகாரிகளுடன் பணியாற்றும் வாய்ப்பும் பெற்றிருக்கிறார் விஜயன். தேர்வு அறைக்குள் நுழைந்த நினைவு போல வாய்ப்பை இழந்த சம்பவமும் நினைவில் நிற்கின்றது. அதனால் அடுத்து தேர்வாக போகும் மாணவர்களை சந்தித்து இயன்றளவு ஆலோசனை வழங்கலாம் என்று தோன்றியது.
பணிக்கு தேர்வானவர்களோடு பேசுவதும் ஆலோசனை பெறுவதும் அதற்காக காத்திருப்பதும் இயல்பாக நடப்பதே. தனக்கு கிடைக்காத வாய்ப்பை தந்துவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார் விஜயன். ஒரு மாணவனது பதில் சுவாரஸ்யமாக இருந்தது.
விஜயன் அவரை இதற்கு முன்பு இன்டர்வியு போனதன் மதிப்பெண்கள் என்ன என்று கேட்டார். முன்னூறுக்கு தொன்னூறு வாங்கியிருந்தார். எதுகை?! எகிறியது! பணி கிடைத்திருக்க வேண்டிய திறமைசாலி. தம்பி ஏதோ கம்பர் எல்லா பாத்திரங்களையும் நல்லவர்களாக படைத்திருக்கின்றார் என்று சொன்னதால் அதை வலுகூட்ட வாதிடுகின்றாயா? அல்லது நீ எப்போதுமே இப்படித்தானா?” என்று கேட்டால் அப்படித்தான் என்று பதில் வந்தது.
சரி இன்டர்வியூவில் மதிப்பெண் பெறுவது முக்கியமா? அல்லது கொள்கை முக்கியமா? என்றொரு கேள்வி கேட்டால் “மார்க்?! என்ன சார் வரும், போகும், மனுசனுக்கு வேல்யூ முக்கியம் சார்!” என்று பதில் வந்தது. மூன்றாவது இன்டர்வியூ சூடாக நடந்துவிடக் கூடாது என்று அவரை புத்தரின் நடு வழிக்கு அழைத்து வர தீர்மானித்தோம்.
நீங்கள் பேசுவது இலக்கிய கூட்டத்திற்கு ஏற்றது. ஆனால் கம்ப இராமாயணத்தை அதன் எல்லைவரை ஏன் அழைத்து செல்கின்றீர்கள். விளிம்பு வரை யோசித்து பதில் சொன்னால் போர்டில் உள்ளவர்கள் சீட்டு நுனிக்கு வந்துவிடுவார்கள் என்று கூறினார் விஜயன். வேல்யு முக்கியம் என்று நீங்கள் சொன்ன பதில் நல்ல பதில். ஆனால் ஒரு வங்கிப் பணி என்று வந்துவிட்ட பிறகு அதன் கொள்கைகளுக்கும் உங்கள் தனிப்பட்ட கொள்கைகளுக்கும் முரண்பாடு வரும் பொழுது வங்கியின் கொள்கைகளுக்கு முன் உரிமை அளிக்க வேண்டிய சூழல் வரும் என்று கூறினார் விஜயன்.
ஒரு இன்டர்வியூவில் இரண்டு எக்ஸ்ட்ரீம் பதில்களையும் கூறவே கூடாது என்று எதுவும் சட்டம் இல்லை. ஆனால் நடுநிலை எடுத்துக்கொண்டு இப்படியும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர் என்கின்ற அலசல் முயற்சியாக ஒரு கருத்தை முன் வைக்கலாம். நீங்கள் சொல்வது போல், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிரூபிக்க முயல்பவர் போன்று காட்டிக்கொள்வது நல்லதா? என்று முடிவு செய்துகொள்ள கூறினோம்.
கிட்டத்தட்ட நூறு கேள்விகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டு அதற்காகச் சிறந்த பதில்களை எழுதிக்கொண்டு மாக் இன்டர்வியூவில் கிடைக்கின்ற பதில்கள் குறித்த கருத்துக்கேற்ப சிறு சிறு வார்த்தைகளைக் கோர்த்து மாற்றி சரி செய்து நல்ல பதில்களைத் தயாரித்து கண்ணாடி முன்னாடி நின்று பேசிப்பார்த்து, திணறும் இடங்களை சரிசெய்து கொண்டு மாக் இன்டர்வியூவில் கலந்து கொள்ள வேண்டும். அதிக ஐடியாக்களைத் தனக்குரிய பாணியில் பரிட்சித்து பார்த்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
டெல்லியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில், கடந்த 2003ல், விஜயன் கூட ஒரிஜினல் தேர்வான நேர்முக தேர்வுக்கு நான்கு நாள் முன்பு, “நீங்கள் சாய்ந்து உட்காருவது சரியில்லை, வார்த்தை பிரயோகம் வரவில்லை மாற்றி கொள்ள வேண்டும்,” என்றனர். வீடியோகிராஃப் எடுத்தும் சீடியும் கொடுப்பதாக கூறினர். மாற்றிக் கொள்கிறேன். மீண்டும் வருகிறேன்! என்று, சொல்லி, வெளியே வந்து, முன்பணம் கூட திரும்ப பெறாமல் அங்கு பயிற்சி பெறும் முடிவை மாற்றிக்கொண்டு, மீண்டு!? வந்தார்! விஜயன். அந்த மாதிர் மாக் இன்டர்வியூக்களில் சொல்லும் எல்லாவற்றையும், எல்லாரும், கண்ணை மூடி கடைபிடித்துவிட முடியாது.
பணி கிடைத்தால் நம்மால் கிடைக்கட்டும், கிடைக்காவிடில் நமக்காக கிடைக்காமல் போனால் பரவாயில்லை. நமக்கு பயிற்சி அளித்தோரால் நமக்கு பணி கிடைத்தால் கூட நல்லதுதான் அவர்கள் தந்த இன்புட்டால் பணி அவுட் ஆனால் அது ஆபத்து. நம் சொந்த முடிவோடு இன்டர்வியூக்களை சந்திப்போம் என்று விஜயன் ஏற்று கொள்ள வேண்டியவற்றை ஏற்றுக்கொண்டு மாற்றுவதை?! மாற்றிக்கொண்டு தேர்வுகளை சந்தித்தார். நம்மால் முடியும் என்றநம்பிக்கை அவருக்கு இருந்ததை, இன்றைக்கு மற்றவர்களுக்கு தர முயற்சிக்கின்றார்.
“போர்டு, என்னை புரிந்து கொள்ளவில்லை அதனால்தான் தொன்னூறு போட்டார்கள்” என்றார், எல்லைக்கோட்டை தொட்ட போட்டியாளர். இல்லை “போர்டு என்னை முழுக்க முழுக்க புரிந்து கொள்ளும் என்றும், முன்பும் புரிந்து கொண்டது என்றும் நினையுங்கள். அவர்களை, மாற்றி, புரிந்துகொள்ள வையுங்கள் என்று கூறினார்” விஜயன். லீடிங் இன்டர்வியு என்று சொல்வார்கள். ஒரு பதிலில் இருந்துதான் அடுத்த கேள்வி பிறக்கும். நல்ல பதில்கள் பயிற்சி செய்து ஒப்பிப்பது போல செயற்கை சாயம் இல்லாமல் இயல்பாக வருவது போல கூறப்படுகின்றன. புத்தகங்கள், மேற்கோள்கள், இடைச்செறுகல் என்பது போல் இல்லாமல் இன்றியமையாத இடத்தில் தானாக உள்ளிருந்து எழுந்ததுபோல் சொல்லப்படுகின்றன. தெரியாது என்கின்ற பதிலும் ஊகித்து சொல்ல அனுமதி கிடைக்குமா? என்னும் கேள்வியும் அதற்குத் தகுந்த இடத்தில் சொல்லுக சொல்லை என்னும் குறளுக்கேற்ப சொல்லப்பட வேண்டும். உணர்வு கலந்து யதார்த்தமாக பேச்சு நீளுவது சிறப்பானது. வங்கி தேர்வு முதல், ஆட்சிப்பணி தேர்வு வரை இப்படித்தான் இன்டர்வியூவின் அடிநாதம் இருக்கின்றது என்றார் விஜயன்.
நிறைய கற்பனை செய்து பார்ப்பதன் மூலமும் பயிற்சி செய்து கண்ணாடி முன்பு பேசிப்பார்ப்பதன் மூலமும் அகத்தின் அழகை முகத்தில் தெரிய வைக்கலாம். அட்வைஸ் பிடிக்காது என்று சொல்லி ஆரம்பித்து ஏகப்பட்ட அட்வைஸ்களை அறிவுரைகளை குவித்துவிட்ட விஜயன், தன் ஏமாற்றத்தை தான் ஏமாந்த கதையை ஏன் நீளமாக எழுதினார் என்று தோன்றும்.
மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகின்றது. முடிவு சுபம் என்று தெரிந்தபிறகு முயற்சிப் பாதையில் சந்தித்த படங்கள், பிம்பங்கள், பாடங்களே ஒரு தேர்வுக்கு தயாராகும் மாணவனுக்கு சாதாரணமாக இதுமாதிரியான சிறுசிறு எதிர்பாராத தடுமாற்றங்கள் நிறைய நிகழலாம். அதனால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிட வாய்ப்பில்லை. இதேபோன்றசிறு நிகழ்வுகள் வாழ்வில் திருப்புமுனையாகவும் அமையலாம். எனவே எல்லா சந்தர்ப்பங்களையும் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளும் பண்பு இருந்தால் நன்று என்றார் விஜயன்.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles