Home » Articles » சந்தோசம்

 
சந்தோசம்


மாரிமுத்துராஜ் A.G
Author:

மனிதனால் உருவாக்கப்பட்டதிலிருந்து அவனுக்கு கிடைப்பதல்ல உண்மையான சந்தோசம். ஒருவரது மனப்பதிவுகளுக்குத் தகுந்தாற் போன்றும், அதே வேளையில், அவரின் சூழலுக்கேற்ற எண்ண ஓட்டங்களைப் பொறுத்தும், ஒரு விசயத்தைக் குறித்த அவர் பார்க்கின்ற பார்வை, கண்ணோட்டம் மாறுபடும் என்பதால் சந்தோசத்திற்கான அளவுகோல்கள், மனிதருக்கு மனிதர் மாறுபடும். அது நிமிடத்திற்கு நிமிடம் வேறுபடுவதும் தவிர்க்க முடியாததாகும். உண்மையான சந்தோசம் என்பது இறையருள் நமக்குள் ஏற்படுத்தியுள்ள ஆழ்ந்த அமைதி நிலையாகும். அதை அடைவதே மனித குலத்தின் இறுதி நோக்கமாகும்.

இதுவரை மனித சந்தோசத்தைக் குறித்து, நிறைய படித்தாகிவிட்டது. நிறையப்பேர் பேசியும் கேட்டாகி விட்டது. என்றாலும் மனமானது தினம் அதைத் தேடுவதை நிறுத்தியபாடில்லை. தொடர்ந்து அதைத் தேடிக்கொண்டே இருக்க என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தோமானால், ஒரு விசயம் தெளிவாகப் புரிகின்றது.

சந்தோசம் என்பது மனித இதயத்திற்கு ஒப்பானதாகும். அது ஏதோர் வகையில் மனிதனுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் அவன் வாழ்வு அர்த்தமற்றதாக அவனுக்குத் தோன்றத் தொடங்கும். சந்தோசமே, மனித வாழ்வை அளக்கின்ற அளவுகோலாக இன்றைக்கு கருதப்படுகின்றது என்றால் அது மிகையாகாது.

ஒருவர் சந்தோசமாக இருந்தால், அவரை பாக்கியவான் என்றும், சந்தோசமாக இல்லை என்றால் பாவி என்றும் இந்தச் சமூகம் சித்தரிக்கின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் சந்தோசத்தின் மகிமையை.

உண்மையான சந்தோசம் என்பது, உயர்ந்த பண்புள்ள தெய்வீகத் தன்மை வாய்ந்த, மேன்மையான குணாதிசயங்கள் மூலமாக வருவதே. உள்ளத்துள்ளே வஞ்சத்தை வைத்துக்கொண்டு, உதட்டளவிலே சந்தோசத்தை வெளிப்படுத்தும் தன்மைதான் இன்றைக்கு அதிகரித்துள்ளது. நிறைவானதொரு மகிழ்வு நிலையை, உயர்வானதொரு சந்தோசத்தை, ஆத்மார்த்தமாக அனுபவிப்பது என்பது மிகுந்த கடினமானதொரு செயலாகவே இன்று இருக்கின்றது.

சந்தோசம் குறித்து நம்மில் பெரும்பாலானோர் முடிவு என்ன என்றால், நாம் எண்ணியது எல்லாம் நடந்துவிட்டால், நம்முடைய பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிட்டால், நம்முடைய கையில் பெரும் பணம் வந்துவிட்டால், நாம் பலர் நடுவில் பேர், புகழ், அடைந்துவிட்டால், நாளுக்கு நாள் நம் வாழ்வில் உயர்வு ஏற்பட்டுவிட்டால், நாம் மிகுந்த சந்தோசம் உடையவராக மாறிவிட்டோம் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்கண்டதல்ல உண்மையான சந்தோசம் என்பது. இந்த உலகத்தில் பலரிடம் அளவுக்கு அதிகமான, பொன், பொருள், புகழ் உள்ளது. ஆனால் அவர்கள் உண்மையானதொரு சந்தோசத்தை, மனநிறைவை, அனுபவிக்காதவர்களாகவே அலைகின்றார்கள் என்பது யாவரும் அறிந்த மிகப்பெரிய உண்மையாகும். இப்படிப்பட்டவர்களில் பலர் இறுதி வரை, அந்த உண்மையான சந்தோசத்தை அடைந்து அனுபவிக்காமலே போய்விடுகின்றார்கள் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

ஒவ்வொருவரின் சந்தோசமும், அவர்களின் சிந்தனையில் இருந்தே தோன்றுகின்றது என்பது அனுபவத்தில் உணரப்படவில்லை. அதுபோல், எளிமையான ஒன்றாக இல்லாமல் போவதும் தான் சந்தோசத்தை அவ்வப்போது இழக்க நேரிடுகின்றது என்பதையும் தெரிந்து கொள்வதில்லை. நான் மேலானவன், எனக்கு நீ கீழ்படிந்து நடக்க வேண்டும் என்கின்ற நினைப்பே நம் சந்தோசத்தைச் சீர்குலைக்கத் தொடங்கி, நம்மை சின்னாபின்னமாக்கி விடுகின்றது. ஒன்றை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். சர்வாதிகாரம் படைத்தவன் இந்த உலகில் எவனும் இல்லை என்று சர்வாதிகாரம் சஞ்சலத்திற்கே வழிவகுக்கும். சாந்தமும், சமத்துவமும், சகோதரத்துவமே என்றைக்கும் சந்தோசத்தைத் தரும்.

அதுபோல் மனம் விடுதலை அடைந்த நிலையிலும் சந்தோசம் சீர் குலையாது. மனம் விடுதலை அடைந்த நிலை என்றால் நம்மிலும் மேலோன் நம்மை இழிவுபடுத்தும் போதும், நம்மாலும் கீழோன் நம்மை மீறிச்செல்லும் போதும், நாம் மனம் வருந்தக்கூடாது. யாருடைய கவுரவத்தையும், மரியாதையையும் எதிர்பாராத ஒரு எளிய நிலையை அடையக்கூடியதாகும்.

மேற்கண்ட நிலையை எப்படி நாம் அடைவது என்ற கேள்வி எழுகின்றது இயல்பே. தன்னிலை உணர்கின்ற தன்மையினால் மட்டுமே அது நிகழக்கூடியதாகும். தன்னில் காணப்படும், பலம், பலவீனம் மற்றும் எளிமைத்தன்மையை அறிந்து கொள்வது ஒன்றேஅதற்கான வழியாகும்.

தன்னிலை உணர்ந்தவன் என்றாலும் அவன் தன்னைத் தானே மிகுதியாக நம்பிவிடுவதும் கூடாது. அதுபோல் தன்னைத்தானே மிகுதியாக நம்பாது இருத்தலும் கூடாது. மேற்கண்ட இரண்டு காரணத்தால் வரலாற்றில் தோற்றுப்போனவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எப்போதும் சமஅளவு, நாம் நம்மை நம்பும் தன்மை இருக்க வேண்டும். அதற்கு மேல் இறைத்தன்மையையும் இருக்கின்றது என்கின்ற எண்ணத்துடன் எளிமையாக இயங்கக் கற்றுக்கொண்டால் என்றைக்கும் சந்தோசத்திற்கு குறையிருக்காது.

உங்கள் சந்தோசத்தை உங்களைத் தவிர எவராலும் அழித்துவிட முடியாது. நீங்கள் எத்தகைய நேரத்திலும் எல்லாம்வல்ல இறையாற்றலுடன் இரண்டக் கலந்திருக்கும் வல்லமை பெற்று இருந்தால், என்றைக்கும் உங்கள் சந்தோசத்திற்கு குறையிருக்காது.

சந்தோசமாய் இருங்கள்!

சர்வமங்களம் உண்டாகும்!

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2015

முதல் மதிப்பெண் சாதனை மங்கைகள்
சந்தோசம்
எண்ணங்களின் வலிமை
உயர்வுக்கு மூலதனம் இப்பொழுதே
மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவ-மாணவியரின் வெள்ளிவிழா சந்திப்பு!
இளம் பருவத்தில் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள்
தோல்விகள் தொடர் கதையா?
மனச்சோர்வை போக்குவது எப்படி?
நெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்
உழைப்பும் ஆரோக்கியமும்
இடைவெளியை புஜ்யமாக்குவோம்
ஆலோசனை
எண்ணம் விண்ணைத் தொட்டிட வியர்வை மண்ணைத் தொடட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்