Home » Articles » மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவ-மாணவியரின் வெள்ளிவிழா சந்திப்பு!

 
மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவ-மாணவியரின் வெள்ளிவிழா சந்திப்பு!


ஆசிரியர் குழு
Author:

25 ஆண்டுகள் கழித்து உடன்படித்த கல்லூரி நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் சந்தோசத்திற்கு கேட்கவா வேண்டும்? கோரமண்டல கடற்கரையோரம் அமைந்த அழகு நகரம் பாண்டிச்சேரியில் (இப்போது புதுச்சேரி) மே மாதம் நடந்ததுதான் இந்த சந்திப்பு!

மதுரை வேளாண்மைக் கல்லூரியில் 1986 முதல் 1990 வரை ஒன்றாகப் படித்த 36 பேர் தங்கள் குடும்பத்தினருடன் ‘ஆனந்தா இன்’ ஹோட்டலில் முதல் நாள் மாலையிலிருந்து அடுத்த நாள் காலை வரையில் வந்து சேர்ந்தனர். பிரிந்து சென்ற பறவைகள் மீண்டும் ஓரிடம் வந்து சேர்ந்தால் எத்தனை ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் இருக்குமோ அத்தனையும் காணமுடிந்தது. “ஹாய்’, “ஹலோ’, “நண்பா’ என்ற விழிப்புகளை  நிறையவே கேட்கமுடிந்தது. “இவள்தான் என் மகள்; +2 தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறாள்’, “இவன் என் இரண்டாவது பையன்; எட்டாம் வகுப்பு படிக்கிறான்; ஒரே வால்!!’ போன்ற உரையாடல் காட்சிகளையும் பார்க்கமுடிந்தது.

சரியாக 11 மணிக்கு ஆனந்தா இன்னின் வெர்சைல்ஸ் அரங்கத்திற்கு அனைவரும் வந்து சேர நிகழ்ச்சி தொடங்கியது. ‘எவர்கிரீன் பார்ம்ஸ்’ நிறுவனத்தை நடத்தும் திருமாவளவனால் வடிவமைக்கப்பட்ட பேனர் கண்களைக் கவர்ந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளராக குமார் (இவர் புதுடெல்யில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக உள்ளார்) அவருக்கு உதவியாக ‘ரெனர் ஹெல்த்கேர்’ல் மண்டல இயக்குனராக  இருக்கும் ரங்கநாதன் என்று நிகழ்ச்சி  தொடங்கியது. புதுச்சேரியில் வேளாண்மைப் பயிற்றுனராகப் பணியாற்றும் விநாயக வெங்கடாசலபதியின் “ஒன்றே குலம் என்று பாடுவோம்” என்ற பாடலுடன் நிகழ்ச்சி களைகட்டியது. திருச்சி வேளாண்மைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் திலகவதி வரவேற்புரை நிகழ்த்தியபின் ஒவ்வொருவரும் தத்தம் குடும்பங்களை மேடையில் அறிமுகம் செய்தனர்.

சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த பங்கஜம் அவ்வப்போது அடித்த ‘கமெண்ட்’களில் அரங்கமே சிரிப்பலைகளில் மிதந்தது. பங்கஜமும் மைதிலியும் கலாய்த்துக் கொண்டதுதான் ‘ஹைலைட்’!! அத்தனை கலாய்ப்புக்கும் இடையில் இந்துமதி தனது தாயாரை அறிமுகம் செய்துவைத்தார். கோவையில் பேராசிரியராக உள்ள வெங்கடேசன் எப்படி மாணவர்களுடன் அனுசரணையாக இருப்பது பற்றி விளக்க சிரிப்பலைகள் மீண்டும் எழுந்தன. இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ரமணிதரன் தான் இந்தியாவில் படிக்க கிடைத்த வாய்ப்பை பற்றிக்கூறி அனைவரையும் ஒருமுறை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்தார்.

‘கார்டா கெமிகல்’சில் மண்டல மேலாளராக இருக்கும் சுதாகர் முதல்முறையாக குளிர்காலத்தில் டெல்லி சென்றபோது ஸ்வெட்டர் போட மறந்ததால் பட்ட அவஸ்தைகளைச் சொன்னார். ‘கோத்ரெஜ் அக்ரோவெட்’டில் மேலாளராக உள்ள ஜெயராதாகிருஷ்ணன், தான் எப்படி ஒரே கம்பெனியில் தொடர்ந்து 25 வருடங்களாகப் பணிபுரிகிறார் என்பதைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார். ‘ரேஸ்’ நிறுவனத்தில் பணியாற்றும் குழந்தைவேல் அதிரடியாகப் பேசி அரங்கத்தில் ஆர்ப்பலைகளை ஏற்படுத்தினார். எல்ஐசியில் உயர்அதிகாரியாக உள்ள அசோகன் எல்லோரிடமும் நட்புடன் அளவலாவிக் கொண்டிருந்தார். வேளாண் அலுவலராகப் பணியாற்றும் சுரேஷும் அவரது மனைவியும் ஈஷா யோகாவின் மீதான ஈடுபாட்டைப் பற்றிச் சொன்னார்கள்.

பிரேமலட்சுமியின் கணவர் ஆறுமுகமும் கண்ணாமணியின் கணவர் முத்தமிழனும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருப்பதாகக்கூறி பாராட்டினர். சபீனாவின் கணவரும் இதை பற்றிச் சொல்லிப் பாராட்டினார். கேரளாவில் வசிக்கும் சந்தோஷ்குமார் மலையாளம் கலந்த தமிழில் பேசியது அனைவரையும் கவர்ந்தது.

காரைக்காலிலுள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் கிருஷ்ணன் வந்தபோது, “நீங்கள் என்ன டாக்டர்?’ என்று கேட்டு கலாய்த்தனர். வேளாண் அலுவலராகப் பணியாற்றும் சுப்புராஜ் தனது இரண்டு மகள்களையும் பெருமையோடு அறிமுகம் செய்தார். அதேபோல, வெற்றிச்செல்வியும் அவரது கணவரும் தங்கள் இரண்டு பெண்களையும் பெருமையுடன் அறிமுகப்படுத்தியது நினைவில் நின்றது. தேன்மொழி தனது மகளையும் மருமகனையும் அறிமுகப்படுத்தியபோது கரவொலிகள் எழுந்தன.

ஒரு தனியார் கல்லூரியில் இயக்குனராக இருக்கும் பார்வதி தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ஷீலா தன் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பையும் அதை எதிர்கொண்டு வெற்றிபெற்றதையும் சொல்லி கண்களை பனிக்கவைத்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்த சுஜாதா இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்குப் பாராட்டினார். அலைஸ் தான் முதுகலையில் முதல் மதிப்பெண் பெற்றதைச் சொன்னபோது “ஓ’ என்று ஓசை எழுந்து அடங்கியது. தாமதமாக வந்தாலும் சாந்தா எல்லோரிடமும் பேசி மகிழ்ந்தார்.

விழாவின்போது சுதாகரின் மகள் ரிவந்திகாஸ்ரீயின் பரதநாட்டியம் எல்லோர் மனதையும் கவர்ந்தது. கிறிஸ்டி நிர்மலா மேரியின் மகன் டேனி மார்டின் பாடிய பாடலும் அவரது கணவர் ஜெயசீலன் பாடிய பாடலும் மனதில் நின்றன. வேளாண் அலுவலராகப் பணியாற்றும் செல்வராஜ் டிஎம்எஸ் குரலில் “நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்” என்று பாட மற்றவர்கள் அதில் லயித்தனர். “காலங்களில் அவள் வசந்தம்’ என்று பாடிய அண்ணாஅரசு பொன்விழா சந்திப்பையும் அனைவரும் பார்க்க வேண்டும் என்று சொன்னது மனதில் நின்றது.

கத்தார் டோஹாவிலிருந்து (Doha) கண்மணிசெல்வியும், இலங்கையிலிருந்து பார்த்தசாரதியும் தொலைபேசி மூலம் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர். காரைக்குடியிலிருந்து முத்துக்குமரனும் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார்.

மதிய உணவுக்குப்பின் இரண்டு டீலக்ஸ் பேருந்துகளில் அனைவரும் சுன்னாம்பாறு காயல் (Chunnambar Backwaters) வந்து சேர்ந்தனர். அரைமணி நேரம் மெகா படகுகளில் பயணித்து பாரடைஸ் பீச் (Paradise Beach) சென்றதுவும் அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்து வங்காள விரிகுடா கடற்கரையை அடைந்ததுவும்தான் தெரியும். நேரம் போனதுதான் தெரியவில்லை!! ஆர்ப்பரிக்கும் அலைகள் கால்களைத் தொட்டுத்தொட்டுச் செல்ல நீல வானம் நினைவுகளுக்கு சாட்சியாக நின்று பார்த்தது. நண்பர்களின் அடுத்த தலைமுறை உற்சாகத்தில் திளைத்தது  கண்கூடாகத் தெரிந்தது. மதுரை வேளாண்மைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் செந்தில் மகள் மிருதுளாவிற்கு அலைகளை விட்டுவிட்டு வர மனதேயில்லை. திரும்பி வரும்போது ‘டபுள் டெக்கர்’ படகு. இளைய தலைமுறை மேல்தளத்தில் இடம் பிடிக்க, மூத்த தலைமுறைக்கு கிடைத்ததென்னவோ கீழ்தளம்தான்!!

இரவாவது? பகலாவது? இளையதலைமுறை ஏதாவது பொழுதுபோக்கு நிகழ்ச்சி வேண்டுமென்று சொல்ல, ரம்யாவும் ரங்கநாயகியும் சேர்ந்து ‘தம்போலா’ என்ற அதிர்ஷ்டப் போட்டியை நடத்த அது ஒரே உற்சாகத்தையும்  குதூகலத்தையும் அரங்கேற்றியது.

அடுத்தநாள். அரைமணி நேரம் பயணம் செய்து அனைவரும் வந்து சேர்ந்த இடம் ஆரோவில் (Auroville) என்கிற சர்வதேசக் குடியிருப்பு. கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள சாராபர்வின்பானு ஆரோவில் செல்லவிருப்பதை உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகச் சொன்னார். ‘எரீக்’ என்கிற பிரெஞ்சு நாட்டுத் தன்னார்வர், ஆரோவில்லின் வரலாறு, நிர்மாணம் மற்றும் அதன் சிறப்பைப் பற்றிச் சொல்லி மாத்ரிமந்திருக்கு (Matrimandir) அருகில் அழைத்துச் சென்று அதனுடைய சிறப்பையும் விளக்கினார். 1968ல் 124 நாடுகளிலிருந்து வந்த பிரதிநிதிகள் தத்தம் நாட்டு மண்ணை எடுத்துவந்து அங்கு வைத்ததைப் பற்றி சொன்னபோது மெய்சிலிர்த்தது. ஆரோவில்லின் நடுநாயகமாக அமைந்திருந்த 100 வருடங்களுக்கும் மேலான பெரிய ஆலமரம் எல்லோர் மனதையும் கவர்ந்தது.

ஆரோவில்லின் கண்காட்சியகத்தில் கொஞ்சநேரம் இருந்துவிட்டு அனைவரும் புதுச்சேரி தாவரவியல் பூங்காவை  வந்தடைந்தனர். கூடுதல் வேளாண்மை இயக்குனராக பணியாற்றும் ஜெயசங்கர் பூங்காவிலேயே  புகைப்படம்  எடுக்க  ஏற்பாடு  செய்திருந்தார். உத்திரப் பிரதேசத்தில் கலெக்டராக இருக்கும் சண்முக சுந்தரம் வந்திருந்த இளைய தலைமுறையினருடன்  Career Options மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் பற்றி சிறிதுநேரம் உரையாடினார். பிறகு அனைவரும் மீண்டும் ஹோட்டல் ஆனந்தா இன் நோக்கிப் புறப்பட்டனர்.

தலைவாழை இலையில் மதியஉணவு உண்டு மகிழ்ந்தபின் ஒவ்வொருவராக புறப்படத் தொடங்கினர். உடன்படித்த 19 ஆண்களும் 17 பெண்களும் தத்தம் குடும்பத்தாரோடு விடைபெற முடியாமல் கண்கள் பனிக்க விடைபெற்றனர். இனி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சந்திக்கவேண்டும் என்று எல்லோரும் ஒருமிதமாக கூறிக்கொள்வதைக் காணமுடிந்தது. பிறகென்ன? வாட்ஸப்பும், பேஸ்புக்கும் புகைப்படங்களால் நிறைந்தன!!

இந்த இதழை மேலும்

 

1 Comment

Post a Comment


 

 


June 2015

முதல் மதிப்பெண் சாதனை மங்கைகள்
சந்தோசம்
எண்ணங்களின் வலிமை
உயர்வுக்கு மூலதனம் இப்பொழுதே
மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவ-மாணவியரின் வெள்ளிவிழா சந்திப்பு!
இளம் பருவத்தில் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள்
தோல்விகள் தொடர் கதையா?
மனச்சோர்வை போக்குவது எப்படி?
நெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்
உழைப்பும் ஆரோக்கியமும்
இடைவெளியை புஜ்யமாக்குவோம்
ஆலோசனை
எண்ணம் விண்ணைத் தொட்டிட வியர்வை மண்ணைத் தொடட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்