Home » Articles » தோல்விகள் தொடர் கதையா?

 
தோல்விகள் தொடர் கதையா?


கவிநேசன் நெல்லை
Author:

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளிவந்த நாள்.

காலை 10.15 மணி.

அவசரமாக எனது அலைபேசி அலறியது.

எதிர்முனையில் பரபரப்பான குரலில் ஒரு நண்பர்.

“நெல்லை கவிநேசன் சார்….. அவசரமாக உங்களிடம் பேச வேண்டும்” – என்றார் நண்பர்

“சொல்லுங்கள்….” என்றேன்.

“என் மகன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500க்கு 494 மார்க் வாங்கியிருக்கிறான்” – என்றார்.

“மகிழ்ச்சி. பாராட்டுக்கள் சொல்ல வேண்டும். உங்கள் மகனிடம் செல்போனைக் கொடுங்கள்” – என நான் சொல்லி முடிப்பதற்குள் அவர் பதற்றத்தை அதிகரித்துப் பேசினார்.

“சார்…. அவன் அழுதுகிட்டே இருக்கிறான். அவனால் பேச முடியாது. ஏங்கி, ஏங்கி அழுகிறான்”.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன பிரச்சனை? ஏன் அழுகிறான்” – மெதுவாகக் கேட்டேன்.

“சார்…. அவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500க்கு 499 மார்க் கிடைக்கும் என எதிர்பார்த்தான். கிடைக்கவில்லை. கதறி அழுகிறான். எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கவில்லை. வேறு ஸ்கூலுக்கு என்னை மாற்றிவிடுங்கள் என திரும்பத் திரும்பச் சொல்லுகிறான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை” – என்றார் நண்பர். குரல் நடுக்கமும், வேதனையும் கலந்ததை புரிந்துகொண்டேன்.

அவரை சமாதானப்படுத்த முயன்றேன். முடியவில்லை.

“சார்…. பிறகு பேசிக்கொள்வோம்” – பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

ஒரு மணி நேரம் முடிவதற்குள் மீண்டும் செல்போனில் வந்தார் நண்பர்.

“சார்…. என் மகன் பிளஸ் 1 படிப்பை நாமக்கல்லில் படிக்க விரும்புகிறேன் என்கிறான். ராசிபுரம் நல்லது என்று என் மைத்துனர் சொல்கிறார். சென்னை தான் சிறந்தது என்கிறார். என்ன செய்யலாம் சார்? எனக்கு குழப்பமாக இருக்கிறது. அவனை ஸ்கூல் மாற்றி வேறு புதிய ஸ்கூல் படிக்க வைக்கலாமா? – கேள்விகளால் துளைத்தார் நண்பர்.

நண்பரது மகனின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்பினேன்.

“இப்போது உங்கள் மகனிடம் பேசலாமா? அவனிடம் போனைக் கொடுங்கள்” – என்று சொன்னேன்.

வாழ்த்தையும், பாராட்டையும் பரிமாறினேன்.

அவன் மகிழ்ந்தான்.

“தம்பி…. உனக்கு இந்தப் பள்ளியில் படிக்க விருப்பம் இல்லையா? ஸ்கூல் மாற்றி படிக்க வேண்டுமா? கவலைப்படாதே! அப்பாவிடம் சொல்லி ஏற்பாடு செய்வோம்” – எனது ஆறுதலால் அவன் மகிழ்வதை அவனது குரல் ஒலிபரப்பியது.

“மீண்டும் பிறகு பேசுவோம்” – என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

மதிய நேரத்தில் மீண்டும் அழைத்தார் நண்பர்.

“சார்….. உங்கள் ஆலோசனை என்ன?” – நண்பர் தொடர்ந்து ஆலோசனை கேட்டார்.

தந்தை, மகன் இருவரிடமும் தொலைபேசிமூலம் அவர்களது விருப்பத்தை அறிந்துகொண்டேன்.

“இரவுக்குள் ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். இப்போது அமைதியாக இருங்கள்” – என சொன்னபோதும் “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” – என ஆர்வ மிகுதியால் கேட்டார் நண்பர். எனது கருத்தை நண்பரும், மகனும் சேர்ந்து கேட்டால் நல்லது என எனக்குத் தோன்றியது. “செல்போன் ஒலியை அதிகப்படுத்தச் சொல்லி, அவர்கள் இருவருக்கும் கேட்கும்படி ஒரு குறிப்பை விளக்கினேன்”.

அது இதுதான்.

“இந்தப் பாருங்க….. எந்தத் தேர்வு முடிவு வந்தாலும் மாணவ, மாணவிகள் மனதுக்குள் ஒரு ‘பதற்றம்’ அல்லது ‘மகிழ்வு’ வந்துபோகும். இது இயற்கைத்தான். மிக அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்தவர்கள், தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்றால், ‘அடுத்து என்ன நடக்கும்?’ என வேகமாக சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள். இதனை ‘Anxiety’ என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இந்த அவசியமற்றஎதிர்பார்ப்பு அதிகமாவதால்தான் இவர்கள் கவலைப்படுகிறார்கள். பயப்படுகிறார்கள். இவர்களுக்கு கோபம் அதிகமாக வருகிறது. ‘சாப்பிடமாட்டேன்’ என்றுகூட அடம்பிடிக்கிறார்கள். அழுது கண்ணீர் வடிக்கிறார்கள். இரவைக்கூட ‘தூங்காத ராத்திரிகளாக’ மாற்றுகிறார்கள். ‘தாங்கள் தவறு செய்துவிட்டதாக முடிவுசெய்து’ இவர்களே ‘தாழ்வு மனப்பான்மை’யை வளர்த்துக் கொள்கிறார்கள்.

உங்கள் மகன் கொஞ்சம் அதிகமாக மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்துவிட்டார். விரும்பியது கிடைக்கவில்லை என வருத்தப்பட வேண்டாம். 5 மார்க் தானே கிடைக்கவில்லை. 494 மதிப்பெண்கள் பெற்றஉங்கள் மகன் சிறந்த வெற்றியாளன்தான்.

பள்ளியை மாற்றினால் அவனது எதிர்கால பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால், பள்ளியை மாற்றும்போது அதிக பிரச்சனைகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. பள்ளியை மாற்றி உங்கள் மகனை படிக்க வைப்பது என்பது ஒரு ரோஜா செடியை வேறு இடத்திற்கு மாற்றிக்கொண்டு செல்வதுபோல மிக முக்கியமான ஒன்றாகும். ரோஜா செடியை, வேறு இடத்துக்கு மாற்றும்போது வேர்களோடு ‘பிடிமண்’னை எடுத்துச் செல்வதுபோல, உங்கள் மகனுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் நீங்கள் செய்ய வேண்டும்.

வேறு ஊரில் புதிய பள்ளியில் படிக்க வைத்தால், விடுதியில் தங்கிப்படிக்க வைக்க வேண்டும். அதிகப் பணம் செலவாகும். விடுதி பிடிக்கவில்லை என்றால் நீங்கள் குடும்பத்தோடு பள்ளி இருக்கும் இடத்திற்குபோய் தங்க வேண்டும்;. உங்கள் இன்னொரு மகன் உங்கள் ஊரில் படிக்கிறான். அந்த இளையமகனின் படிப்பு என்ன ஆகும்? நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு உங்களால் ‘லீவு’ போட முடியாது. உங்கள் மனைவியின் மதுரை வேலையை விட்டுவிட வேண்டியநிலை உருவாகும். எனவே, உங்கள் மகனிடம் விவரங்களைத் தெளிவாகப் பேசுங்கள். 5 மார்க் குறைந்ததற்காக அடுத்த இரண்டு ஆண்டுகள் பல்வேறு குழப்பங்களை குடும்பத்தில் இணைக்க வேண்டுமா?” – எனது கேள்வி கலந்த பதிலுக்கு மாலைக்குள் பலன் கிடைத்தது.

மாலையில் தொலைபேசியில் அழைத்து “என் மகன் இந்தப் பள்ளியிலேயே தொடர்ந்து படிப்பதாக சொல்லிவிட்டான்” – என மகிழ்ந்தார் நண்பர்.

இந்த நிகழ்வு நமக்கு சில உண்மைகளை உணர்த்துகிறது.

வெற்றி பெறுவது முக்கியமல்ல. அந்த வெற்றியை ஏற்றுக்கொள்ளவும், கொண்டாடவும் தெரிய வேண்டும். ஆனால், தக்கவைப்பதும், மனநிறைவு கொள்வதும், மகிழ்ச்சி கொள்வதும் அவரவர் மனநிலையில்தான் இருக்கிறது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றஒரு மாணவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். ‘தோல்வி அடைந்துவிடுவேன் என நினைத்தேன். வெற்றி கிடைத்துவிட்டது’ – என ஆனந்தக் கூத்தாடுகிறான். ஆனால் 98 சதவீத மதிப்பெண்கள் பெற்றவன் அழுது புலம்புகிறான். வெற்றியைக் கொண்டாட முடியாத மனநிலையில் கண்ணீர் வடிக்கிறான்.

மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் ‘வாழ்க்கையில் வெற்றி கிடைக்காது’ என்ற எண்ணத்தை கண்டிப்பாக இளைய உள்ளங்கள் மாற்றவேண்டும்.

மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் அல்லது தோல்வி அடைந்துவிட்டால் மனதிற்குள் வேண்டாத சிந்தனையை வளர்க்காமல், பிரச்சனைகளை பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் சொல்லி பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும். மனதுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களிலும் ஈடுபடலாம். நூலகத்திற்குச் சென்று நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். நல்ல நண்பர்களிடம் கலந்துபேசி எதிர்காலத் திட்டத்தை வகுக்கலாம். தேவைப்பட்டால் ‘சினிமா’ பார்க்கக்கூடச் சொல்லலாம். டி.வி.யில் நல்ல நகைச்சுவை காட்சிகளைப் பார்க்கலாம்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வுகள் வாழ்க்கையில் மிக முக்கியத் தேர்வுகள் என்பதால் தேவையில்லாத ‘மன அழுத்தம்’ மனதில் ஏற்படாதவாறு அவர்கள் பார்த்துக்கொள்வது நல்லது.

மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் கலங்கிப்போவதை முதல் தவிர்க்க வேண்டும்.

அது ஒரு மிகச்சிறந்த நாடு.

திடீரென அந்த நாட்டின் பிரதம மந்திரி இறந்துவிட்டார். புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். மிகச் சிறந்த அறிவாளியைத்தான் பிரதமராக நியமிக்க ஆட்சிப் பொறுப்பாளர்கள் விரும்பினார்கள்.

பல்வேறு விதத்தில் சிலரை ‘மதிப்பீடு’ செய்தார்கள். முடிவில் இறுதிகட்டத் தேர்வில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க ஒரு போட்டி வைத்தார்கள். மூன்றுபேரையும் ஒரு தனி அறையில் வைத்து உட்புறமாக பூட்டினார்கள். அறையின் கதவில் நம்பர் பூட்டு பொருத்தியிருந்தார்கள்.

“இந்தக் கதவிலுள்ள பூட்டின் மூன்று எண்களை ஒன்று சேர்த்தால் பூட்டை நீங்கள் திறந்து வெளியே வரலாம். பூட்டைத் திறந்து யார் முதல் வெளியில் வருகிறாரோ அவர்தான் நாட்டின் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார்” – என்று போட்டி நடத்தியவர்கள் தெளிவாகச் சொல்விட்டார்கள். பின்னர் கதவைப் பூட்டிவிட்டார்கள்.

போட்டியில் கலந்துகொண்ட 3 பேரில் இரண்டுபேர் தீவிரமாக சிந்தித்து தன் சட்டைப்பையில் இருந்த பேப்பரை எடுத்து கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘இப்படி செய்யலாமா? அப்படி செய்யலாமா? இந்த நம்பரா? அந்த நம்பரா? – என்றெல்லாம் சிந்தித்து நேரத்தைக் கடத்தினார்கள்.

மூன்றாவது போட்டியாளர்கள் எதையும் சிந்திக்கவில்லை. கதவை ஓங்கித் தட்டினார். பூட்டப்படாத அந்தக் கதவு உடனே திறந்துகொண்டது.

கதவைப் பூட்டாமலே போட்டி வைத்தார்கள். தைரியமுடன் கதவைத் திறந்து வெளி வந்தவருக்கு பிரதம மந்திரி பதவி தானாக வந்தது.

“கதவு பூட்டப்பட்டிருக்கிறதா?” – என்பதைக்கூட சரிபார்க்காமல் பிரச்சனையைப் பற்றியே சிந்தித்தவர்களைவிட பிரச்சனையை நேரடியாக சந்தித்தவர் வெற்றியடைந்தார்.

இதைப்போலத்தான் இல்லாத பிரச்சனைகளைப்பற்றி அதிக நேரம் சிந்தித்து மனம் கலங்குவதைவிட, பிரச்சனைகளை சந்திக்க எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிகள்கூட எளிதில் நம் வசமாகிவிடும். தொடர் கதையாகும் தோல்விகளைத் துரத்த இயலும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2015

முதல் மதிப்பெண் சாதனை மங்கைகள்
சந்தோசம்
எண்ணங்களின் வலிமை
உயர்வுக்கு மூலதனம் இப்பொழுதே
மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவ-மாணவியரின் வெள்ளிவிழா சந்திப்பு!
இளம் பருவத்தில் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள்
தோல்விகள் தொடர் கதையா?
மனச்சோர்வை போக்குவது எப்படி?
நெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்
உழைப்பும் ஆரோக்கியமும்
இடைவெளியை புஜ்யமாக்குவோம்
ஆலோசனை
எண்ணம் விண்ணைத் தொட்டிட வியர்வை மண்ணைத் தொடட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்