Home » Articles » நெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்

 
நெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்


சொக்கலிங்கம் சிவ
Author:

தேடிச் சோறு நிதம்தின்று – பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பலர்

வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவம் எய்திக் – கொடும்

கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் – சில

வேடிக்கை மனிதரைப்போல – நான்

வீழ்வேன் என நினைத் தாயோ?

என்ற பாட்டுப் புலவன் பாரதி கனல் கக்கும் கவிதை வரிகளைக் கொட்டி வைத்தவன். ஆனாலும் வறுமையோடு இவனும் வாதிட்டிருக்கிறான்.

ஒருவர் முன்னேறாமல் இருப்பதற்கு வறுமை ஒரு காரணமாக எப்போதும் இருந்ததில்லை; இருப்பதுமில்லை. வெற்றி எண்ணங்களின் அலைவரிசையில், வெற்றி எண்ணங்களை உருவாக்கி, அதை அடைய முயற்சி செய்யாததே உண்மையின் காரணம். ஏழையாகப் பிறந்தது குற்றமல்ல; ஏழையாக இறப்பேன் என்பதே மாபெரும் குற்றமாகும்.

பணம் சம்பாதிப்பதுடன் இணைந்து வேறு ஒரு உயரிய நோக்கம் உங்களுக்குள் இருக்குமானால் நீங்கள் தேடும் பணம் உங்கள் மடியில் வந்து விழுந்து கொஞ்சும். அந்தப் பணத்திற்காக அலைந்து திரிய வேண்டிய அவசியமே இல்லை.

எடிசன் உலகிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் விளக்கேற்ற எண்ணியதால் அவர் வாழ்க்கை ஒளிவிளக்கானது; பணமழையும் இவரிடமே பத்திரமாய் கொட்டியது. உலகின் ஒவ்வொருவரிடமும் ஒரு கணினி இருக்க வேண்டுமென்று பில்கேட்ஸ் நினைத்தார்; பணம் முகவரியை விசாரித்துக் கொண்டு அவர் வீட்டுக் கதவைத் தட்டியது. உலக பணக்கார அலைவரிசையில் இன்றளவும் இவர் பேரும் சேர்ந்தே வாசிக்கப்படுகிறது.

உங்கள் வருமானம் குழாய்த் தண்ணீரைப் போன்றது. இதில் பணம் கொட்டு கொட்டுவென்று கொட்டினால் தான் சரிப்படும் என்பது சரியில்லை. அதில் எவ்வளவு நீங்கள் பிடித்து வைத்துக் கொள்கிறீர்கள்? எவ்வளவு செலவழிக்கிறீர்கள்? எவ்வளவு பாதுகாக்கிறீர்கள்? இதுதான் ஒரு ஏழை பணக்காரன் ஆகும் இரகசியப்புள்ளிகள். யார் இந்தப் புள்ளியை நோக்கி காயை நகர்த்துகிறார்களோ அவர்களுக்கே பணமழை பெய்யும் பாதை திறக்கும்.

‘வறுமையைக் கண்டு பயந்து விடாதே; திறமை இருக்கு மறந்து விடாதே’ என்றபாடல் வரிகளே இதற்குச் சான்று காட்டி கூத்தாட வைக்கும். உலகின் முதல் ஆங்கில அகராதியை தொகுத்த சாமுவேல் ஜான்சன் வறுமையில் வாழ்ந்த ஒரு புத்தக வியாபாரியின் மகனாக பிறந்தாலும் உலகம் போற்றும் இலக்கிய மாமேதையாகத் திகழ்ந்தார். இலக்கியம் வாழ்க்கை வசந்தத்தை அவருக்கு வாரிக்கொடுத்தது. இலக்கிய வீதியில் தெறித்து விழுந்த இந்தி நட்சத்திர நாயகனை இன்றளவும் சிகர சிம்மாசனத்தில் நிறுத்தி வைத்து அழகு பார்க்கிறது.

மனதில் வளமையை, செழுமையைப் பற்றிய எண்ணங்களை எண்ணினால் நம்பிக்கையுடன் சிந்தித்தால், அவை நம்மிடம் படைப்பாற்றலை உண்டாக்கி செல்வ வளத்தை ஆயிரமடங்காய் அதிகரிக்கச் செய்துவிடும். வறுமை இதற்கு ஒரு தடையல்ல. செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், உயர்வையும் நம்பிக்கையுடன் சிந்திக்கும் பழக்கமே தலைவிதியை முதல் விதியாய் முகிழ்க்கச் செய்யும்.

எந்த வயதிலும் சாதிக்கலாம்; வறுமையைப் போல் வயதும் ஒரு தடையல்ல. சாதிக்க வேண்டும் என்ற ஒரு நெருப்புக்குளியலைத் தம் இருப்புக்கூட்டில் நடத்த வேண்டும். ஹென்றிக் இப்சன் நார்வே நாடு தந்த நல்ல கவிஞர்; நாடக ஆசிரியர். இவரையும் வறுமை தழுவிக்கொள்ள துடித்தாலும், நாடகம் என்னும் நந்தவன வயல்களாம் மனதின் மனங்களில் உலகம் உள்ளவரை உச்சரிக்கப்படும். தம் 30 வயதில் வாழ்வு முடிந்தது என்று இப்சன் நினைத்தாலும் கவிதைகளில் களிநடனம் புரிந்தான்; இதய வாசல்களின் கதவுகளைத் திறந்தான்; கவிதையாகவே வாழ்ந்தான்; கவிதையில் வாழ்ந்தான். மரித்தான் என்பதை எழுத என் பேனாக்கிறுக்கி எழுத மறுக்கிறான். பொருளாதாரத் தடையை நினைக்காமல் உயர்ந்த இலட்சியத்தை உள்ளுக்குள் தேர்வு செய்து முயற்சியை மட்டுமே முதலீடாகக் கொண்டால் வாழ்க்கையும் மாறும்; வளமும் சேரும்.

ஷேக்ஸ்பியர் குதிரை லாய மேற்பார்வையாளரின் மகன். ஷேக்ஸ்பியர் இலக்கியம் தந்த கொடை; ஆங்கில இலக்கியத்தின் அடையாளம்; மனித மனங்களின் இதயத்துடிப்பு அமர காவியங்களை அவனிக்கு கொடுத்தவர்; இந்த நாடகத்தின் நயாகரா நீர்வீழ்ச்சியை உலகம் கொண்டாடி மகிழ்கிறது.

ஒன்பது வயதில் வறுமையின் கிடுக்கிப்பிடியில் சிக்குண்டு, பதினொரு வயது என்று கூறி இசைக்குழுவில் இணைந்த சார்லிசாப்ளினை ‘நடை சரியில்லை நடிக்க வராதே’ என்று தடைவிதித்தாலும், எதிர்காலத்தில் மக்களின் மனதில் மயக்கத்தை ஏற்படுத்திய நகைச்சுவை நடிகராகவும், இயக்குநராகவும் திரைப்படம் மாற்றியது என்பது  திரைப்படம் தந்த வரலாற்று உத்தரவு.

மெழுகுவர்த்தி செய்து விற்கும் வியாபாரியின் மகனாகப் பிறந்த பெஞ்சமின் ஃப்ராங்ளின் மக்களுக்காக தானே உருகினார் என்பதை வரலாறு கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறது. மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்தார். மின்னலில் மின்சாரம் இருப்பதை பறைசாற்றினார். இயர்புக் இப்படி பலப்பல கண்டுபிடிப்பு. விஞ்ஞானியாகவும், அமெரிக்க இராஜதந்திரியாகவும் உயர்ந்தார்; மக்களின் மனங்களில் நிறைந்தார். வறுமையை தூர ஓட்டினார். நான்கு மொழிப்புலமை. இவர் அரசியலின் அதிசயமாக திகழ்ந்தார் என்பது இவரிடமிருந்து வந்த மன உறுதியே என்பதை வரலாற்று உண்மைகள் தெளிவுப்படுத்துகிறது. தடைகளையும், உடன் குறைகளையும் வைத்து எண்ணி வருந்தாமல் உழைப்பது ஒன்றே இலட்சியம்’ என்பதை மனித மனங்களுக்கு சொல்லி வைப்போம்.

இத்தாலி நாட்டில் ஒரு மீனவரின் மகனாகப் பிறந்த கரிபால்டி, புரட்சிப் பூபாளம் பாடிய எரிமலைக் குழம்பு. இந்த அக்னி நெருப்புதான் பிற்காலத்தில் இத்தாலியை அடைகாத்தது; அர்த்தப்படுத்தியது. உலக வரலாற்றை எழுதி முடித்த ஒரு பெரிய சரித்திர ஆசிரியரிடம் மனித வரலாற்றில் அவர் அறிந்த மிகச்சிறந்த பாடம் எது என்று கேட்டார்கள். அவர் சொன்னார், “எப்போது வானம் இருள்படர்ந்து மிகக் கறுப்பாகிறதோ, அப்போது நட்சத்திரங்கள் தலைகாட்டுகின்றன.”

மறைத்து விட்டார்களா?                 நல்லது தான்                            விதையாக விழித்துவிடு!

ஒடித்துவிட்டார்களா?                   நல்லது தான்                      பலகிளைகளாக துளித்துவிடு!

புறக்கணித்து விட்டீர்களா?            நல்லது தான்                      எரிமலையாய் எழுந்து விடு!

என்ற கவிதாசன் கைபிடிப்போம்; சிகரசிம்மாசனத்தில் இடம் பிடிப்போம்!

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2015

முதல் மதிப்பெண் சாதனை மங்கைகள்
சந்தோசம்
எண்ணங்களின் வலிமை
உயர்வுக்கு மூலதனம் இப்பொழுதே
மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவ-மாணவியரின் வெள்ளிவிழா சந்திப்பு!
இளம் பருவத்தில் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள்
தோல்விகள் தொடர் கதையா?
மனச்சோர்வை போக்குவது எப்படி?
நெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்
உழைப்பும் ஆரோக்கியமும்
இடைவெளியை புஜ்யமாக்குவோம்
ஆலோசனை
எண்ணம் விண்ணைத் தொட்டிட வியர்வை மண்ணைத் தொடட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்