Er. ரா.ஜெயப்பிரகாஷ் & Er. ரா. ராஜசேகர்
மேலாண்மை இயக்குநர்கள்
E.S. ராமசாமி & கோ
(இன்ஜினியர்ஸ் & பில்டர்ஸ்), கோவை
- உழைப்பால் உயர்ந்தவர்கள் இங்கு ஏராளம். அவர்களுள் சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பார்கள். அப்படியாய் மக்களில் மனதில் இடம்பிடித்த நன்மதிப்பிற்குரியவர்கள்.
- தோல்விகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்து சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருபவர்கள்.
- சவால்கள் நிறைந்திருக்கும் கன்ஸ்ட்ரக்சன் தொழிலில் திறமைமிகு செயல்பாடுகளால் நாளும் நாளும் முன்னேற்றத்தையே முழு மூச்சாகக் கொண்டு செயல்படுபவர்கள்.
- இல்லறம் நல்லறமாக அமைய, குடும்பத்தில் குதூகலம் பிறக்க அவரவர் எண்ணம் அறிந்து ‘அழகு மிகு’ கட்டிடங்களைத் திறம்பட உருவாக்கி வருபவர்கள்.
- உழைப்பையே மூலதனமாக்கி கட்டுமானத் தொழிலில் முதன்மை என்கிற பெருமைக்குரிய இடத்தை பெற்றிருப்பவர்கள் இவர்கள். பணிப்பளு ஒருபுறம் என்றாலும் கற்ற, பெற்ற அனுபவங்கள் அடுத்த தலைமுறைக்கு உதவ வேண்டும் என்று நம்மோடு பல்வேறு விசயங்களைப் பகிர்ந்து கொண்டார் E.S ராமசாமி & கோ, மேலாண்மை இயக்குனர்களில் ஒருவரான Er. ரா.ராஜசேகர் அவர்கள். இனி அவரோடு நாம்….!
உங்களின் இளமைக் காலம் குறித்து?
பிறந்தது கோவை. என்றாலும் படித்தது வளர்ந்தது எல்லாம் ஊட்டியில் தான். ஊட்டியில், புகழ்மிக்க கேத்தி ஜார்ஜஸ் ஹோம்ஸ் பள்ளியில் படித்தேன். இப்பள்ளியில் கல்விக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் விளையாட்டுக்கும் கொடுத்தார்கள். அதனால் பள்ளிக்காலத்தில் எனக்கு விளையாட்டு மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. விளையாட்டில் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றேன்.
12 ஆண்டு பள்ளிப்படிப்பை எவ்வித தடையும் இன்றி வெற்றிகரமாக முடித்தேன். படிக்கின்ற காலத்தில் பொறியியல் படிப்பில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இதனால் பொறியியல் கல்வி கற்க கோவையிலிருந்து பெங்களூர் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. முதன்முதலாக குடும்பத்தைப் பிரிந்து செல்வது சற்று மனத்தில் சஞ்சலத்தை அப்போது ஏற்படுத்தியது. எனினும் பிடித்த கல்விகற்கத் தானே செல்கிறோம் என்று மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு செல்ல என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்.
பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படக் காரணம்?
அடிப்படையில் எனது தந்தை ‘கட்டிட கன்ஸ்ட்ரக்சன்’ தொழில் தான் செய்து கொண்டிருந்தார். அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் வசித்து வந்தார்.கல்வியறிவு மிகவும் குறைவு என்பதாலும், ஏதேனும் சுயவேலை செய்ய வேண்டும் என்று விரும்பியதாலும் இந்தக் கட்டிடத் தொழிலை மேற்கொண்டார். இதற்கு அச்சாணியாக கிருஷ்ணகிரியில் ஓர் அணைக்கட்டில் வேலையை முதன்முதலாகத் தொடங்கினார்.
அந்த அணைக்கட்டில் அவர் செய்த வேலைகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அணைக்கட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல இடங்களிலும் எனது தந்தை தனது தனித்திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் பில்லூர் அணைக்கட்டு, குந்தா, அவலஞ்சி, எமரால்ட், காரமடை அணை என்று பல அணைக்கட்டுகளைக் கட்டும் வாய்ப்பும் இவருக்கு அடுத்தடுத்து கிடைத்தது. கோவை மேம்பாலத்தைக் கட்டும் பணியும் அப்போது அவருக்குக் கிடைத்தது.
ES ராமசாமி & கோ நிறுவனம் உருவான விதம் குறித்து?
கன்ஸ்ட்ரக்சன் தொழிலில் எனது தந்தை மிகுந்த பரபரப்பாகப் பணியாற்றிய சமயம் அது. நானும் எனது மூத்த சகோதரர் இருவரும் பெங்களூரில் பொறியியல் கல்வியை முடித்து கோவைக்கு வந்து அரசுப்பணிக்காக காத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அந்த நேரத்தில் இனியும் அரசு வேலைக்காக காத்துக்கொண்டிருந்தால் எவ்வித பயனும் இல்லை என்கிறமுடிவுக்கு வந்தோம். எங்களின் மீதிருந்த நம்பிக்கையை மட்டுமே முன்னிறுத்தி சொந்தமாக தொழிலைத் தொடங்கலாம் என்று நினைத்தோம். அதன் பயனாக வடவள்ளி என்றஇடத்தில் கட்டிடங்களைக் கட்டி சிறுசிறு வீடுகளாக விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.
எங்கள் வீடுகளை வாங்கியவர்களுக்கு எங்களின் மீது நல்ல நம்பிக்கையும், நன்மதிப்பும் ஏற்பட்டது. இதனால் சீரநாயக்கன்பாளையத்திலுள்ள பவர் ஆபீஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய கட்டிடங்களைக் கட்டினோம். சிறுக சிறுக எங்களின் வளர்ச்சியைப் பெருக்கிக் கொண்டு இன்று எங்களுக்கென்று ஒரு தனிப்பெயருடன் தொடர்ந்து நடத்தி வருவது தான் உந ராமசாமி & கோ.
தந்தையின் அனுபவ அறிவுக்கும், நீங்கள் கல்வி கற்று வளர்த்துக்கொண்ட அறிவுக்கும் மாறுதல் இருப்பதாக உணர்கிறீர்களா?
என்ன தான் கல்வி கற்று என் அறிவை வளர்த்துக் கொண்டாலும் என் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட வேலை நுணுக்கங்கள் தான் என்றும் எனக்கு உறுதுணையாக இருக்கின்றது. எனது தந்தை இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர் தான் என்றாலும் அவருடைய வேலையின் நேர்த்தியும், தொழில் ஈடுபாடும் இந்த தொழிலில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கச் செய்தது.
அனுபவம் ஒரு மனிதனுக்கு சிறந்த ஆசான். அதைச் சிறப்பாகவே எனது தந்தையிடம் கற்கும் வாய்ப்பைப் பெற்றேன். அவரிடம் தொழில் கற்றஅனுபவமும், அதைப் பார்த்துத் தெளிந்த அறிவும் தான் எனது தொழிலுக்கு உறுதுணையாகவும், பலமாகவும் இருக்கின்றது.
எனது தந்தை இந்தத் தொழிலிலேயே இருந்ததால் தான் என்னாலும் இதைச் சிறப்பாக செய்ய முடிகின்றது. இல்லையென்றால் இந்த அளவிற்கான வேலைகளை கற்றுத்தெளிய சற்றுத் தடுமாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
பொறியியல் துறையில் பல பிரிவுகள் இருந்தாலும் இந்த சிவில் பிரிவைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?
ஆரம்பத்தில் சொன்னதுபோல் பொறியியல் படிக்க வேண்டும் என்று பள்ளிக்காலங்களிலேயே எண்ணம் இருந்தது. பள்ளியில் படித்த சமயத்தில் விடுமுறைக்காக ஊருக்கு வந்தபோது, காரமடை அணை கட்டுமானப் பணியில் அப்பா வேலை செய்து கொண்டிருந்தார். அப்பகுதியைப் பார்ப்பதற்கு அப்பொழுது அப்பாவுடன் செல்வேன்.
வேலை நேரத்தில் அப்பாவுடன் கட்டிட மேஸ்திரியும் உடன் இருப்பார். அடிக்கல் போடும் முன் வரைபடம் வரைய வேண்டும். அதற்காக என் தந்தை மேஸ்திரிக்கு பல்வேறு கட்டிட நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுப்பார். அவருடன் சேர்த்து எனக்கும் சில அறிவுரைகளைச் சொல்லித் தருவார். அதுவே இந்தத் துறையில் எனது ஈடுபாட்டை இன்னும் அதிகப்படுத்தியது. இப்படிப் படிப்படியாக ஏற்பட்ட ஆர்வமே என்னை இத்துறையில் முழுவதுமாக விருப்பம் ஏற்படச் செய்தது.
ஆரம்பத்தில் பெரிய கட்டிடங்கள் கட்டியதற்கும், இப்பொழுது அதே அளவில் கட்டிடங்கள் கட்டுவதற்கும் வேறுபாடுகள் இருப்பதாக நினைக்கிறீர்களா?
ஆரம்ப காலம் பொற்காலமாக இருந்தது. ஏனென்றால் எனது தந்தை 400 வேலையாட்களைக் கொண்டு வேலை நடத்தினார். அப்பொழுது அனைவரும் ஒற்றுமையுடன் வேலையை முடிப்பதில் ஆர்வமாகவும், ஈடுபாட்டோடும் வேலையைச் செய்வார்கள். ஆனால் இப்பொழுது மனிதர்களின் வேலையை விட பணத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அனைவரையும் குறைகூறவில்லை. ஒருசிலர் எந்த வழியில் சுலபமாக பணம் சம்பாதிக்கலாம் என்பதையே நினைத்து வேலையில் ஈடுபடுகிறார்கள்.
ஆரம்பத்தில் வேலை செய்தவர்கள் எல்லாம் நல்ல விசுவாசிகளாகவும், உழைப்பில் ஓயாத ஆர்வம் உடையவர்களாகவும், நம்பிக்கையானவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது அந்த அளவிற்கு இருக்கிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை. ஒரு தொழிலில் வெற்றி பெறவேண்டுமென்றால் அந்தத் தொழிலைப் பற்றிய அனைத்து அறிவும், நுணுக்கங்களும் அவரவர் பெற்றிருத்தல் அவசியம். அடுத்தவரை நம்பி எந்தத் தொழிலில் ஈடுபட நினைத்தாலும் அதில் சாதனையை எட்டுவது இயலாத காரியம்.
ES ராமசாமி & கோ நிறுவனம் எது மாதிரியான வடிவமைப்பை இப்பொழுது செய்து கொண்டிருக்கிறது?
நாங்கள் இப்பொழுது செய்கின்ற அனைத்து கட்டிடங்களும் சாதாரண சிறிய அளவில் தான் செய்து கொண்டிருக்கிறோம். இன்னும் பெரிய அடுக்குமாடி கட்டிடங்களைக் கட்டுவதற்கு சில காலம் தேவைப்படும்.
எனது இரண்டு மகன்களும் இப்பொழுது சிவில் இன்ஜினியரிங் படிப்பு படித்து வருகிறார்கள். அவர்கள் படித்து முடித்த பிறகு, அவர்களின் முயற்சியால் இதை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என நம்புகிறேன்.
இத்துறையில் மிகவும் கடினமானது என்று எதைச் சொல்வீர்கள்?
எல்லாத் துறைக்கும் அடிப்படைக் காரணமானது ஒன்று தான், அது பொருளாதாரம். ஒவ்வொரு துறைக்கும் முதல் சவாலாக இருப்பது பொருளாதாரம் தான். இச்சவால்களை முறையாக எதிர்கொண்டால் வெற்றி பெறலாம்.
போட்டிகள் நிறைந்த இத்துறையில் சவால்களை எதிர்கொள்வது எப்படி?
கட்டுமானத் தொழில் என்றாலே நிறைய சவால்களைச் சந்தித்தாக வேண்டும். ஆனால் சவால்களைக் கண்டு பயந்தாலோ, பின்வாங்கினாலோ எதையும் சாதிக்க முடியாது என்பதை எனது அனுபவ வாயிலாகத் தெரிந்து கொண்டேன்.
எங்கள் நிறுவனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வேலையாட்களை எவ்வாறு திருப்திப்படுத்த வேண்டும் என்பதை முறையாக தெரிந்திருக்கிறோம். பணியாட்களுக்கு வேலை செய்யும் இடத்திலேயே தங்குவதற்கான ஏற்படுகளைச் செய்து கொடுக்கிறோம். அவர்கள் அனைவரும் தினக்கூலி பணியாட்கள் என்பதால் அவர்களின் சம்பளத்தை சரியான நாட்களில் கொடுத்துவிடுவோம். சம்பளம் முறையாக கொடுப்பதால் அவர்களது ஈடுபாடும் ஒரே மாதிரியாக, சிறப்பானதாக இருக்கிறது.
சில நிறுவனங்களில் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு ஆட்களை வைத்து வேலை வாங்குவார்கள். இப்படி வேலைக்கு வைக்கப்படும் ஆட்களில் யாரேனும் ஒருவர் வேலையை முறையாக செய்யவில்லை என்றாலும் அங்கு முற்றிலும் எல்லா வேலைகளும் தடைபடும் சூழல் ஏற்படும். மார்க்கெட்டிங் முதல் விற்பனை வரை நாங்களே செய்வதால் எங்களை நாடி வருபவர்கள் தொடர்ச்சியாக எங்களிடமே வருகிறார்கள். “எந்த வேலையையும் முறைப்படிசெய்தால் எல்லாசவால்களையும் திறம்பட எதிர்கொள்ளலாம்”.
கோவைப்பகுதியில் கட்டுமானத் தொழில் ஆரம்பித்ததன் நோக்கம்?
நான் பிறந்த மண் என்பதால் இங்கிருந்தே தொழிலை ஆரம்பித்தோம். அது முதல் காரணம் என்றாலும், தொழில் செய்யத் தேவையான அனைத்துச் சூழல்களும் கோவைப்பகுதிக்கு உண்டு. வாடிக்கையாளர்களுக்கும், எங்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுகிறது.
இந்தத் துறையில் புதியதாய் தொழில்நுட்ப கருவிகள் வருகிறது. இதில் உங்களின் பயன்பாடுகள் குறித்து?
பெரிய பெரிய பலமாடிக் கட்டிடங்கள் இப்பொழுது கட்ட வேண்டும் என்றால் சாதாரணமாகக் கட்ட முடியாது. எல்லாவற்றிக்கும் தொழில் நுட்ப கருவிகள் நிச்சயம் தேவைப்படுகிறது. சாதாரண மனிதனை மட்டுமே நம்பி பெரிய கட்டிடங்களைக் கட்ட முடியாது.
இனிமேல் வருகின்ற காலங்களில் புதியதாய் வரும் தொழில்நுட்ப கருவிகள் இல்லாமல் பெரிய மாடிக் கட்டிடங்களை நிச்சயம் கட்ட முடியாது. கட்டிடத் தொழிலில் இனி எல்லாமே இயந்திரமாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
தந்தையிடம் கற்றுக்கொண்டது…தந்தைக்காக நீங்கள் செய்ய விரும்புவது?
எந்த ஒரு தொழிலைச் செய்தாலும் அதில் நம்பிக்கை ஏற்படும் வகையில் தான் செய்ய வேண்டும்.அப்பொழுது தான் மக்களின் நன்மதிப்பு கிட்டும். அந்த வகையில் என் தந்தை மக்களின் நல்லாதரவைப் பெற்றவர். அவர் இந்த நிலையை அடைய எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை நான் உடன் இருந்து பார்த்திருக்கிறேன். இந்தத் துறையில் ஒவ்வொரு நாளும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். சவால்களை அவர் கையாண்ட விதம் எனக்கு பலவாறான அனுபவங்களைக் கொடுத்தது.
அவர் எங்களது குடும்பத்திற்கு ஒரு மேன்மையான பாதையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அப்பாதையில் எவ்வித தடையும் இன்றி பயணம் செய்வது எங்களது கையில் தான் இருக்கிறது என்பதால் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறோம்.
அவரின் பெயருக்கு எவ்வித கலங்கமும் இல்லாத அளவிற்கு தொழிலை உண்மையாக செயல்படுத்துவதே அவருக்கு நாங்கள் செலுத்தும் மரியாதையாகும்.
கல்லூரி வாழ்வில் கற்றுக்கொண்ட அனுபவம் குறித்து?
கல்லூரி வாழ்க்கை எனக்கு பல அனுபவங்களைக் கற்றுக்கொடுத்தது.குடும்பத்தைப் பிரிந்து நானும் எனது அண்ணாவும் தனியாக வீடு எடுத்து தங்கிப்படித்தோம்.
மாநிலம் விட்டு மாநிலம் சென்று படித்ததால் நிறைய இன்ப துன்பங்களைச் சந்தித்தோம்.மொழிவாரியாக பிரிந்திருந்ததால், மொழி தெரியாத நபர்களிடம் பேசுதல் சிரமமாக இருந்ததால் ஒருவருக்கொருவர் பழகும் சூழல் மிகவும் குறைவாகத் தான் இருந்தது.
இருந்தும் எங்களுக்கு முன் படித்த சீனியர்கள் நிறைய ஆலோசனைகளையும், புத்தகங்களையும் கொடுத்து உதவினார்கள்.அது எங்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்தது.
உங்களின் அடுத்த கட்டம்…
ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு திட்டத்தை வரையறுத்துக் கொண்டு அதை முறையாகச் செயல்படுத்த வேண்டும்.அதுபோல தான் எங்களின் எதிர்காலத் திட்டம் நிறைய இருக்கிறது.அதை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வர சிறந்த திட்டங்களை வகுத்து அதைச் செயல்படுத்துவோம்.
எங்களுக்கு அடுத்து எங்களது பிள்ளைகளும் இதை திறம்பட வழிநடத்தி செல்ல வேண்டும்.
சிவில் படிக்கும் இளைய தலைமுறைக்கு நீங்கள் சொல்வது?
எந்தத் தொழில் செய்தாலும் அதில் கடுமையாக உழைக்க வேண்டும்.உழைப்புடன் ஈடுபாடு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை சரியாக பின்பற்றவேண்டும்.
முதலில் வைக்கும் காலடியை முறையாக எடுத்து வைக்க வேண்டும்.வைத்த பின்னர் கவலைப்படக் கூடாது.முடியும் என்று முன்னேறிக் கொண்டு சென்றாலே வெற்றியைத் தொட்டு விடலாம்.
வெற்றி வெகுவிரைவாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது.வெற்றிக்குக் காத்துக் கொண்டிருப்பதில் எவ்வித தவறுமில்லை.
வெறும் பாடத்தை மட்டுமே படித்துக் கொண்டு தேர்வில் வெற்றி பெறுவதில் எவ்வித பயனும் இல்லை.படிப்பையும் செய்முறையையும் ஒன்று சேர்த்துப் படிக்க வேண்டும்.அவ்வாறு கற்றால் வெற்றி பெறலாம்.
விரும்பி ஒரு பாடத்தை எடுத்துக் கொண்டால் அதிலேயே தொழில் செய்ய வேண்டும்.படித்தது ஒன்று வேலை செய்வது ஒன்றாக இருக்கக் கூடாது.
சிவில் இன்ஜினியரிங்கில் வேலை வாய்ப்பு எந்த அளவில் உள்ளது?
வேலை வாய்ப்பு அதிகம் ஏற்படுத்தி கொடுக்கும் துறை இந்த சிவில். சிவில் இன்ஜினியரிங் இல்லாமல் எதுவுமில்லை என்ற நிலை மிகவும் விரைவாக வரும். இன்னும் 10 ஆண்டுகளில் இதில் நிறைய வேலை வாய்ப்புகள் நிச்சயம் ஏற்படும்.
உங்கள் நிறுவனத்திற்கே உள்ள தனிச் சிறப்பு என்றால்…
ஒரு நிறுவனத்தை தொடர்ந்து பல காலம் ஒரே இடத்தில் நடத்தி வருகிறோம் என்பதே பெரிய சிறப்பாக நினைக்கிறேன்.24 ஆண்டுகளாக எவ்வித தங்கு தடையின்றி எங்களை நம்பி வரும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறோம். அவர்களும் எங்களை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு நன்மதிப்பு அளித்து வருகிறார்கள்.
நாங்கள் இத்தனை ஆண்டுகளில் நிறைய அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஒருமுறைகூட ஒரு சிறிய பிரச்சனை வந்திருக்கிறது என்று எங்களிடம் யாரும் புகார் சொல்லியதே இல்லை.
இதுவே எங்களுக்கு ஒரு சிறந்த தர மதிப்பீடு தான்.
தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் இந்தக் கட்டுமானத் தொழில் சிறப்பாக இருக்கிறது?
கோவை மாவட்டம் எல்லாத் துறைக்கும் ஒரு சரியான இடமாக இருக்கிறது. விரைவாக வளர்ந்து வரும் மாவட்டத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ளது என்றால் அது கோவை மாவட்டம் தான். கோவை மாவட்டம் தான் வெளியிலிருந்து வருபவர்களுக்கு விரும்பிய மாவட்டமாக இருக்கிறது. காரணம் தொழிற்சாலை, காலச்சூழல் போன்றவை.
உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என்றால்…
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் கசப்பான நிகழ்வு என்ற ஒன்று இருக்கும். வாழ்க்கை என்பது இன்ப துன்பங்களால் செய்யப்பட்ட பிணைப்புதான். அப்படி ஏற்பட்ட ஒரு நிகழ்வு தான் எங்கள் அப்பாவிற்கு தொழிலில் ஏற்பட்ட சில நெருக்கமான பழகியவர்களால் ஏற்பட்ட நெருடல்கள்.
தொழிலில் தனது நண்பர்களால் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் கலங்கியது என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. கஷ்டங்களைப் புரிந்து கொள்ளும் வயது தான் எங்களுக்கு, ஆனாலும் அவர் முடங்கிவிடவில்லை.
மீண்டும் இழந்ததை பிடிக்க வேண்டும் என்பதற்காக அவரின் கடுமையான பணி எங்களால் இன்னும் மறக்க முடியாத ஒரு வடு.
முதன்முதலில் திருப்பூர் கட்டிடம் கட்டுதல் பணிநடை பெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது எங்கள் குடும்பத்தில் அவ்வளவாக வசதியில்லை. இதனால் தினமும் பேருந்து, இரயில் பயணம் தான். தினமும் செல்ல வேண்டும் என்பதால் இருவருக்கும் அதிகம் செலவாகும் என்பதால் பஸ் பாஸ் எடுத்துக்கொண்டு செல்வோம்.
காலை வேளையில் உணவு உண்பதற்கு நேரம் கிடைக்காது. இதனால் காலை உணவு, மதிய உணவு இரண்டையும் பையில் போட்டுக் கொண்டு சரியாக உண்ணாமல் பல நாட்கள் உழைத்திருக்கிறோம்.
குடும்பக் கஷ்டத்தை நாங்கள் இருவரும் நன்றாகப் புரிந்துகொண்டதால் தான் இன்று இந்த நிலையில் இருக்கிறோம்.
கட்டுமானத் தொழிலில் உள்ள நீங்கள் குடும்பத்தோடு செலவிடும் நேரத்தைப் பற்றி?
இந்நிறுவனத்தைத் தொடங்கி 24 ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. வாழ்க்கையில் பாதிநாள் தொழிலியே போய்விட்டது.
என் மகன்களோடு இருந்து அவர்களோடு செலவிட்ட காலம் மிகவும் குறைவு
சில சந்தோஷங்களை இழந்தால் தான் வாழ்க்கையில் மேன்மை பெறமுடியும் என்று நம்புகிறேன்.
தன்னம்பிக்கை வாசகர்களுக்கு…
‘தன்னம்பிக்கை’ இதழின் பெயரை ஒவ்வொருவர் உள்ளத்திலும் பதிய வைத்தாலே போதும். நம்பிக்கை கொண்டு ஒவ்வொருவரும் ஜெயித்துவிடுவார்கள். தன் மீது மட்டும் நம்பிக்கை வைத்து உழைப்பால் உயர்ந்தவர்கள் ஏராளம்.
முயற்சி… பயிற்சி… உழைப்பு – வெற்றி!
வாழ்க்கை என்பது ஏணியைப் போல ஒவ்வொரு படியையும் பார்த்து கால் வைக்க வேண்டும் என்கிற மனப்பக்குவம் வந்துவிட்டாலே தினம் தினம் வாழ்வு திருவிழா தான்.
இந்த இதழை மேலும்