Home » Articles » என் பள்ளி

 
என் பள்ளி


ஆசிரியர் குழு
Author:

வசதி இருந்தும் வாய்ப்புகளைத் தவிர விட்டவர்கள் இவ்வுலகில் எத்தனையோ பேரை கண்கூடாகப் பார்க்கலாம். வாய்ப்புகள் ஒருமுறைதான் வரும் அதைச் சரியாகக் கடைபிடித்தவர்கள் எல்லையை அடைகிறார்கள். தவறியவர்கள் வாழ்க்கையில் தடுமாறிப் போகிறார்கள். கல்வி மட்டுமே ஒவ்வொருவரின் அழியாச் சொத்து. இந்த சொத்தை சரியான நேரத்தில் சரியான வகையில் கையாண்டால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அவ்வாறு வெற்றி பெற்றுவரும் திரு. பாரதிவாசன் அவர்களின் கல்விக்கால அனுபவங்களை பகிர்கிறார் நம்மோடு.

திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் கிராமத்தில் பிறந்தேன். கிராமம் என்றால் எப்படி இருக்குமோ அதில் சற்று மாறாவகையில் எங்கள் கிராமம் இருக்கும். அன்று பார்த்த என் கிராமம் எங்கள் மரங்கள், ஊரைச்சுற்றி ஓடைகள், எல்லா வீட்டிலும் இயந்திர ஓசை எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கும். ஊரிலிருந்து சற்று தொலைவில் தான் பள்ளி அமைந்திருக்கும்.

என்னுடைய குடும்பம் பெரியது. என் உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். என் தந்தை கோபால்சாமி. வீட்டிலேயே நெசவுத்தொழில் செய்கிறார். தாயார் பூவாத்தாள். தந்தையின் வருமானம் என் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கு மட்டுமே இருந்தது. இதனால் எங்களை படிக்க வைக்கமுடியாத சூழல் இருந்தது.

இருந்தும் வறுமையை வெளிகாட்டவில்லை என் தந்தை.  தென்னம்பாளையத்திலுள்ள அரசுப்பள்ளியில் தான் கல்வி கற்றேன். இப்பள்ளியில் ஆசிரியர்களின் அரவணைப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. ஒரே சீருடை, பள்ளியில் மதிய உணவு, மாலை வேளையில் அப்பாவிற்கு உதவிகரமாக இருப்பேன்.

ஒருநாள் வகுப்பில் ஏழ்மை சம்பந்தமான பாடத்தை ஆசிரியர் நடத்தினார். அப்பொழுது உணவு, உடை, இருப்பிடத்தில் இல்லை; ஏழ்மையும், இயலாமையும் அவரவர் மனதில் தான் இருக்கிறது என்றார். இந்த வார்த்தை எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது.

பள்ளி காலங்களில் ஆசிரியர் கூறும் அறிவுரைகளைக் கேட்க தவறியவர்கள், நிச்சயம் வாழ்க்கையில் மேன்மை அடைய முடியாது என்பதை புரிந்து கொண்டேன். எனது ஆசிரியர் கூறும் வழிகளைப் பின்பற்றினேன். அவர்களின் கைகளும், கடமைகளும் என்னை ஒரு ஒளிமிக்க வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றது. இதனால் நேரத்தை சரியாக அமைத்து வாழ்க்கை முறையாக அமைக்க பழகினேன். காலப்போக்கில் ஒழுக்கம், பண்புடைமை இவற்றை எப்பொழுதும் தவறாமல் வாழ்ந்து வருகிறேன்.

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் மேற்படிப்பை தொடங்க இழுபறி ஏற்பட்டது. இதனால் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். வேலை தேடத் தொடங்கினேன். வேலைகளும் கிடைத்தன. எனக்கு சொந்தத் தொழில் ஏதேனும் தொடங்க வேண்டும், அதில் எனது சுவடுகளைப் பதிக்க வேண்டும் என்ற ஆவலும், வேகமும் எனக்குள் ஏற்பட்டது.

அவரவர் திறமை அவரவர்க்கே தெரியாமல் இருந்தாலும், மற்றவர் நமது செயல்பாட்டைப் பாராட்டும் பொழுது நிச்சயம் தெரியவரும்.அப்படி வெளிப்பட்டது தான் எனது புகைப்படத்திறன். ஒரு துறையில் சாதிக்க வேண்டுமானால் தனக்கு எதில் திறமை அதிகம் என அறிந்து அந்தத் துறையை தேர்ந்து முயற்சிகளை மேற்கொண்டோமானால் வெற்றி நிச்சயம் என்பதை புரிந்து கொண்டேன்.

எத்தனையோ புகைப்படக் கலைஞர்கள் இருந்தாலும் என்னுடைய தனித்திறமையை  இதில் எப்படி புகுத்துவது என்ற சிந்தனையில் ஆழ்ந்தேன். வேறுபட்டு சிந்திக்க ஆரம்பித்தேன்.வெறும் புகைப்படங்கள் மட்டும் போதாது, இந்தத் துறையில் வேறென்ன புதுமைகளைச் செய்யலாம் என்பதை கற்றுக்கொண்டேன்.

பின்னர் குறும்பட தயாரிப்பு முறைகளைப் பற்றி தெரிந்து கொண்டு, ஒளிபரப்பு முறைகளையும் அறிந்து கொண்டு “ஒரு நாள்” என்ற குறும்படத்தை இயக்கினேன். இந்தப் படத்தை பாராட்டி உலகளவில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றேன். அமெரிக்கா, பிரான்ஸ் போன்றநாடுகளின் கவுரவத்தை அடையப் பெற்றேன். இது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம் ஆகும்.

எனது திறமைகளை என்னோடு நிறுத்திக் கொள்ளாமல் குறும்படத்தின் நுணுக்கங்களைப் பற்றிய ஆய்வுகளையும் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளேன். இப்புத்தகத்திற்கும் நிறைய பாராட்டுக்களும், அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இந்த ஊக்கங்களை அடித்தளமாகக் கொண்டு மேலும் சாதனைகள் செய்ய என்னை தயார்படுத்தி வருகிறேன்.

நவீன மயமான இவ்வுலகில் எந்த ஒரு தொழிலையும், யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். அதில் தனக்கென தனித்திறமைகளையும், துறைசார்ந்த நுணுக்கங்களைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்டு பல்வேறு புதுமைகளைப் படைக்கலாம். அவ்வாறு முயற்சிகளை மேற்கொள்ளும்போது வெற்றி என்னும் விண்ணை தொடுவது சாத்தியமே!

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment