Home » Articles » விரதம் முடிப்போம்

 
விரதம் முடிப்போம்


அனுராதா கிருஷ்ணன்
Author:

 நாம் காலையில் சாப்பிடும் உணவை ஆங்கிலத்தில் பிரேக்பாஸ்ட் (Breakfast) என்று கூறுவதன் அர்த்தத்தை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் முன்னாள் இரவு எட்டு மணிக்கு இரவு உணவைச் சாப்பிட்டு தூங்கப் போகிறோம். அதன்பிறகு காலை எட்டு மணிக்குத்தான் நாம் சாப்பிடுகிறோம். ஆக, நாம் 12 மணிநேரம் உண்ணாமல் விரதம் இருக்கிறோம். அந்த விரதத்தை முடித்து வைக்கும் காலை உணவைத்தான் நாம் பிரேக்பாஸ்ட் என்கிறோம். அப்படியில்லாமல் நாம் நம் காலை வேளையின் அவசரச் சூழலுக்கு ஆட்பட்டு காலை உணவை சாப்பிடாமலோ அல்லது தள்ளியோபோடும்போது நம் உண்ணாவிரதம் நீட்டிக்கப்படுகிறது. நாம் இரவு சாப்பிடாமல் இருக்கும்போது நாம் முழு ஓய்வில் இருக்கிறோம். ஆனால், அதுவே

காலையில் நாம் வேலை பிஸியில் இருக்கிறோம். காலையில் சாப்பிடாமல் இருப்பது மிகவும் கெடுதலான விளைவைத் தரும். ஆகவே, நாம் காலையில் அவசியம் சாப்பிடவேண்டும். அதாவது விரதம் முடிக்க வேண்டும். நமக்கு காலை வேளையில் நம் வேலைதான் முக்கியமாக முன்வந்து நிற்கிறது என்றால், அதற்கு முன்னதாக நாம் அதிகாலையில் எழுந்து தயாராகும் பழக்கத்திற்கு வர வேண்டும். அப்படியில்லாவிட்டால், பிற்பாடு உடல் நலம் கெட்டு இப்பொழுது நாம் செய்துவரும் வேலையையும் செய்ய முடியாமல் போகும். இது பரவாயில்லையா?

நாம் உண்ணாவிரதம் முடிக்கும்போது முதலில் எடுப்பது பழச்சாறாகத்தான் இருக்கவேண்டும். அப்படியில்லாமல், காலை எழுந்தவுடன் காப்பி அல்லது டீ குடித்தால்தான் வேலையே ஆகும் என்றால் நாம் மோசம்தான். அப்படிக் காலையில் நாம் குடிக்கும் காப்பியும், டீயும் நம் செரிமான சக்தியை காலி செய்கிறது. அப்புறம் மிச்சம் மீதி இருக்கும் செரிமான சக்தியைக் கொண்டுதான் அன்றைய நாளை நாம் கடந்தாக வேண்டும். ‘சரி, அதெல்லாம் இருக்கட்டும், டீ காப்பியை விடுவதெல்லாம் ஆகாத காரியம், வேறு வழி ஏதேனும் இருந்தால் கூறுங்கள் ‘ என்று நீங்கள் கேட்டால் என் பதில் இதுதான். நான் உங்களுக்கு ‘அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்  ‘ பற்றித்தான் சொல்ல வந்தேன், ‘அன்றாட வாழ்வில் அழிச்சாட்டியம்’ பற்றி அல்ல.

நாம் காலையில் எழுந்து பல் துலக்கி, சவரம் செய்து, காலைக்கடன் முடித்து, எனிமா எடுத்து, தொட்டிக் குளயல் செய்து பின் குளத்து, எளய உடற்பயிற்சி முடித்து, பிராணயாமம் பயின்று, பின் தியானம் இயற்றிய பின், நாம் எடுக்கும் முதல் உணவு பழச்சாறாக இருந்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்.  அதற்கு நாம் கேரட் ஜூஸ் தயாரித்து அருந்தலாம். நான்கு பேருக்கு செய்யும் அளவு முறை பற்றி பார்ப்போம். கால்கிலோ கேரட்டைத் துருவி, அதனோடு ஒரு மூடித் தேங்காயையும் துருவிச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனோடு இயற்கை வெல்லம் தேவையான அளவில் சேர்த்து இரண்டு ஏலக்காய்களையும் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் ஓட்டிய பின்னர் வடிகட்டி அருந்தலாம். இப்படிக் காலையில் நீர்த்தன்மையோடு எடுக்கப்படும் கேரட் ஜூஸானது நம் மண்ணீரலைப் புத்துணர்வாக்கி அன்றைய செரிமானத் தன்மையை உத்வேகம் கொள்ளவைக்கும்.

அடுத்து, நாம் காலையில் எடுக்கும் உணவானது செரிக்க இலகுவாகவும், வயிற்றை கெடுக்காததாகவும் இருக்க வேண்டும். காலையிலேயே நொறுக்குத் தீனிகளையும்  எதிர்மறை உணவுகளையும் எடுக்க ஆரம்பித்தால் அன்றைய தினமும் மற்றொரு மோசமான தினமாகவே கழியும். அப்புறம் காலை அவசரத்திற்கு பிரட்டையும் சாஸையும் சாப்பிடுவதும் நம் செரிமானத்திற்கு நாமே சங்கு ஊதுவதற்குச் சமமாகும். நாம் அதிகாலையில் எழுந்து பொறுமையாக நம்மைத் தயார்படுத்தி, தரமான காலை உணவை மெதுவாக உண்டு காலை வேலையை ஆரம்பிப்போமேயாயின் அன்றைய நாள் முழுமையும் உற்பத்தி திறன் வாய்ந்த நாளாக விளங்கும். ஆகையால் அன்றைய இரவில் நாம் நிம்மதியாகத் தூங்குவோம். ஆக, நல்ல தொடக்கம் என்பது பாதி வேலை முடிந்ததற்குச் சமம் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். இது வேண்டும்தானே?

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment