Home » Articles » குடும்ப நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பை யாருக்கு தருவது

 
குடும்ப நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பை யாருக்கு தருவது


ராமசாமி R.K
Author:

இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

 -குறள்

மனிதனுக்கு வெளியே என்ன மாதிரியான உருவம் இருக்கிறது என்பது முக்கியம் அல்ல. மூத்தவனா? இளையவனா? என்பது முக்கியம் அல்ல. அவனுக்குள் என்ன இருக்கிறது என்பது தான் அவனை உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்லும். ஏனெனில் எல்லாம் மனிதருக்குள்ளும் சாதிப்பதற்கான திறன் இருக்கிறது. எல்லாம் மனிதருக்குள்ளும்  பெரிய சாதனைக்கான  விதை இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் எழுதப்படாத சுயசரிதை ஒன்று இருக்கிறது.

உறவுகளை ஒப்பந்தங்களின் மூலம் உருவாக்க முடியாது.  புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே உருவாக்க முடியும்.

அடுத்தவருக்கு உதவி செய்பவராக இருக்க முடியாவிட்டால் பரவாயில்லை. தொந்தரவு தராதவராக ஆறுதல் அளிப்பவராக இருந்தாலே போதும்.

“அடுத்தவரின் குற்றங்களைப் பார்த்து, ஆராய்ந்து நிரூபிப்பதன் மூலம் நம் வாழ்க்கை சரியாகாது. அடுத்தவரின் குறைகளை கண்டறியப்பயன்படுத்தும் அறிவையும், நேரத்தையும் நம் வாழ்க்கையை சரிசெய்ய பயன்படுத்தலாம்” என்கிறார் மஹாத்ரயாரா.

குடும்ப நிறுவனத்தின் மேலாண்மையின் பொறுப்பை யாருக்கு தருவது? என்பது இந்த கால சூழலுக்கு பொறுத்தமான கேள்வியாகும்.

ஒருவர் மிக கடினமாக உழைத்து, அரும்பாடுபட்டு ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதற்கு கிளைகளையும் தோற்றுவித்து உயர்ந்த நிலைக்கு கொண்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அந்த தனிமனிதனின் கடின உழைப்பாலும், புத்திசாதுரியத்தினாலும் சாமார்த்தியத்தினாலும் நிர்வாக  திறமையின் காரணமாகவும், சரியான முடிவு எடுக்கும்  ஆளுமையின் காரணமாகவும் அந்த நிறுவனத்தை மற்றவர்கள் போற்றி வியந்து பார்க்கிறஅளவு புகழ்பெற்றநிறுவனமாக அதை உருவாக்குவார். அந்த நிறுவனத்தின்  அடித்தளமாக அவரது முயற்சியும், கழன உழைப்பும், தியாகமும், சகல ஆளுமை திறனும் அமையும். அந்த நிறுவனர் இருக்கும் காலம் வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நிறுவனம் நடக்கும். அவருக்கு மூன்று மகன்கள் வாரிசாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த நிறுவனரின் காலத்திற்கு பிறகு அந்த நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பை யார் ஏற்பது? என்பதில் தான் பிரச்சனை எழும். நமது கடந்த தலைமுறை கலாச்சாரத்தின்படி மூத்தவருக்கு முன்னுரிமை என்றவகையில் நிர்வாகப் பொறுப்பு முதல் மகனுக்கு தரப்பட்டு வந்தது. மூத்தவர் என்றமுறையில் நிர்வாகப் பொறுப்பு தரப்பட்டு அவர் திறமை இல்லாதவராக இருந்த காரணத்தினால்  பல நிறுவனங்கள் நொடிந்து போனதைப் பார்த்திருக்கிறொம்.

இரண்டாவது மகனுக்கோ அல்லது மூன்றாவது மகனுக்கோ பொறுப்பை தருவதால் குடும்பத்தில் பிரச்சனை உருவாகின்றன. குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இன்னும் பிரச்சனைகள் அதிகமாகின்றன. குடும்பத்தினுடைய கட்டுகோப்பு குலைகின்றன. ஒற்றுமை சிதைகின்றது. மனவருத்தங்களும், மனகசப்புக்களும், மனக்காயங்களும் அந்த ஒட்டுமொத்த குடும்பத்தை உலுக்கி எடுக்கிறது.

இதோடு மட்டுமல்லாமல் அந்த மகன்களின் மனைவிகளும்  இந்தப் பிரச்சனையில் கலக்கும் போது குடும்பத்தில் பூகம்பமே வெடிக்கிறது. சந்தேகப் பார்வைகள் படர ஆரம்பிக்கிறது. வருமானத்தில் கணக்கு கேட்க ஆரம்பிக்கிறார்கள். பல திசைகளிருந்து பல கேள்விக்கனைகள் வீசப்படுகின்றன. இந்த குழப்ப நிலையில் நிர்வாகம் செயலிழந்து போகிறது. அந்த நிறுவனம் தள்ளாட ஆரம்பிக்கிறது. அதன் உற்பத்தி திறன் மெல்ல மெல்ல குறைகிறது. பேரும் புகழும் மங்குகிறது. பணியாளர்களுக்குள் கோஷ்டி பூசல் உண்டாகிறது. திறமையான அலுவலர்கள் வெளியேறும் சூழல் உருவாகிறது. ஆக நல்ல நிலையில் இருந்த ஒரு குடும்ப நிறுவனம் நிர்வாகப் பொறுப்புக்கு ஒரு சரியான பொறுத்தமான நிர்வாகத் திறனுள்ள  ஒருவரை தெரிவு செய்யாமல் விட்டதால்தான் இந்த குறைகள் வந்தன.

இதை சரிசெய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன

1)         இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல் என்ற குறளுக்கேற்ப குடும்ப உறுப்பினர்களுள் நல்ல திறமைசாலி ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் பொறுப்பில் நிர்வாக மேலாண்மையை விடவேண்டும். வருமானத்தை சமமாக பங்குதாரர்கள் பங்கிட்டுக் கொள்ளும் வசதிகளையும், ஒப்பந்தங்களையும் ஏற்படுத்த வேண்டும். நிர்வாகத்தில் மற்றகுடும்ப உறுப்பினர்களுடைய தலையீட்டை முழுமையாக தடுக்க வேண்டும். அந்த நிறுவனத்தின் மேலாண்மை பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் குடும்ப நலன் கருதி, குடும்ப ஒற்றுமை கருதி  தன்னலம் இல்லாதவராக தன்னை சேவைக்கு அர்ப்பணித்து கொள்பவராக மாற்றிக் கொள்ள வேண்டும்.

நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தவறுசெய்ய மனம் போகாத வகையில்  கணிசமான தனிப்பட்ட ஊதியம் அவருக்கு  தரப்பட வேண்டும். குடும்ப இலாப பங்குத் தொகை நீங்கலாக இந்த ஊதியம் அவருக்கு அமைய வேண்டும். இது பற்றிய ஒப்பந்தங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியாக இருத்தல் வேண்டும். இந்தமுறை எதிர்பார்த்த பலனைத்தரும். நிர்வாகம் சீரடையும். அடுத்தவர்களின் தலையீடு இருக்காது. குழப்பங்கள் குறையும். தன் சொந்த நிறுவனம் என்பதால் அவர் உயிரைக் கொடுத்துப் பாடுபடுவார். உற்பத்தியையும், இலாபத்தையும் அதிகமாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார். இரவு பகல் பாராமல் உழைக்க முயற்சிப்பார். நிறுவனத்தின் வளர்ச்சியும், குடும்ப வளர்ச்சியும் இரு கோடுகளாக வளரும். துணை தொழில்களும் பெருகும். கிளை நிறுவனங்கள் தோன்றும். அடுத்து வரும் வாரிசுகள் இதே முறையை பின்பற்றவேண்டிய அவசியம் உண்டாகும். ஒரு புதிய வழக்க முறை உருவாகும். பலன் சில சமயங்களில் எதிர்பார்த்ததைவிட அதிகமாகும்.

2)         குடும்ப உறுப்பினர்களின் நிர்வாக திறமையும், மேலாண்மை திறமையும் யாருக்குமே இல்லாத பட்சத்தில் இரண்டாவது வழியை பின்பற்றுதல் நலம்.

நிறுவனத்தை நல்ல முறையில் நடத்த திறமைபடைத்த தொழில் அனுபவமும், தொழில் சார்ந்த ஆழ்ந்த அறிவும், நிர்வாக மேலாண்மையும், உயர்ந்த படிப்பும் கொண்ட  ஒருவரை (Professionals) தேர்ந்தெடுத்து அவரை  CEO-வாக அல்லது நிர்வாக இயக்குநராக நியமித்து முழுபொறுப்பையும் அவரிடம் தந்துவிடுவது. திறமைமிக்க வெளியாட்களை தேர்ந்தெடுத்து பொறுப்பினை தந்து விட வேண்டும். நிறுவனத்தினுடைய முழுபொறுப்பும் அவரை சார்ந்ததாகும். அவருக்கு ஒரு இலாபகுறியீடு தரப்பட வேண்டும். அவருக்கென்று கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரமும், அவருக்கு தரப்பட வேண்டும். பணியாளர்களை நியமிக்கும் அதிகாரமும் அவருக்கு தரப்பட வேண்டும். அவருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். இயக்குனர் கூட்டங்களில் அவர் கேள்விகளுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர். இலாபத் தொகையில் அவருக்கும் பங்கு இருத்தல் வேண்டும். அவருக்கு எல்லா வசதிகளும் தரப்பட வேண்டும். இந்த நிலை இருந்தால் அந்த நிறுவனம் வளர்ச்சி காணும். துணை நிறுவனங்கள் தொடங்குவதற்கு வழிவகுக்கும். கிளைகள் விரிவுபடுத்தப்படவும் வாய்ப்புகள் உண்டாகும். நிறுவனத்தில் ஆரோக்கியமான சூழல் உண்டாகும். கோஷ்டி பூசல்களுக்கு இடம் இல்லாமல் போகும். அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும், வெற்றியும், தோல்வியும் அந்த தனி நபர் திறமை பொறுத்து அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பல பெரிய நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் இவ்வாறு வெளியாட்களை தொழில் சார்ந்த துறைநிபுணர்களை CEO-வாக நியமிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. அந்த நிறுவனங்கள் எல்லாம் மிகச்சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. தொழில்சார்ந்த துறைநிபுணர்களை CEO-வாக நியமிக்கும் போது அந்த நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டியிட்டு வெற்றி பெறுகின்ற சூழ்நிலைகளையும் நாம் பார்க்கிறோம்.

அவருக்கு கீழே இருக்கின்ற இரண்டாம் நிலை அலுவலர்களுக்கும், அந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் நல்ல வழிகாட்டுதலும், பயிற்சியும், அனுபவமும் அவர்களுக்கு கிடைக்கிறது. பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது. நிறுவனம் வணிக ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் ஆரோக்கியமான வளர்ச்சியை  எட்டுகிறது. வியாபார சிக்கல்களையும், நிர்வாக சிக்கல்களும் அந்த அனுபவமிக்க  அரிய முறையில் சீராக்கப்படுகின்றன. இதனால் காலதாமதம் தவிர்க்கப்பட்டு உடனடியாக  முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மற்றநிறுவனங்களுடைய அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. நிறுவனங்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டி உருவாகிறது. மூலப்பொருட்களின் விரையமும் தவிர்க்கப்படுகிறது. உற்பத்தி சதவீதம் அதிகமாகிறது. உற்பத்தியாகும் பொருட்களுடைய தரமும் உயர்கிறது. எல்லா துறைகளிலும் நிறுவனம் முன்னிலை வகிக்கும் சூழல் உருவாகிறது. ஆகவே தற்கால சூழலுக்கேற்ப Professional Managment தான் சிறந்தது என்றமுடிவு வரவேற்கப்படுகிறது.

ஆக நிறுவனங்களுடைய மேலாண்மை பொறுப்பு காலம்காலமாக இருந்து வருகிற மூத்தவருக்கே முன்னுரிமை என்பதை மாற்றி தற்கால சூழலுக்கேற்ப தொழில்சார்ந்த துறைநிபுணர்களில் திறமையுள்ளவருக்கே முதலிடம் என்பது காலம் கற்றுத்தரும் பாடமாகும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment