Home » Articles » இடைவெளியை புஜ்யமாக்குவோம்

 
இடைவெளியை புஜ்யமாக்குவோம்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

உடல் எடுத்து வந்ததே உழைப்பதற்குத் தான்.ஆனால் உழைக்காமலேயே பொருளீட்டும் ஆசை பரவலாகிவிட்டது. பொருளின்றி வாழ முடியாது; பொருள் என்பது வாழ்வின் அர்த்தம் என்று கூறலாம்.

உழைப்பு என்பது எங்கே முடிகிறது என்று பார்த்தால் நம் தேவைகளை நிறைவு செய்வதிலே தான் முடிகிறது.

பசியை நீக்க உணவுக்கான தானியங்களை விளைவிக்கும் விவசாயம்;

தட்ப, வெப்ப நிலையிலிருந்து உடலைப் பாதுகாக்க உடைகளைத் தயார் செய்யும் நெசவுத் தொழில்;

பிறஉயிர்களிடமிருந்து பாதுகாப்பாக வாழ்வதற்குத் தேவையான வசிப்பிடங்களைக் கட்டும் கட்டுமானத் தொழில்;

இவைகளை அமைப்பதற்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்தல், இயக்குதல், பழுது நீக்குதல்

என்ற நான்குடன் அன்று வாழ்ந்தோர் வாழ்க்கை நிறைவடைந்தது.

இன்று பொழுதுபோக்கு, ஆடம்பரம், அரசியல் என்றவகையில் ஏராளமான தொழில்கள் உண்டாகிவிட்டன.

கலைகள் என்றவகையில் டி.வி., சினிமா, சொகுசு என்ற வகையில் வீடு, உடை, ஒப்பனை என இன்று கற்பனைக்கு எட்டாத வகையில் பொருட்களை உற்பத்தி செய்து அனுபவிக்கிறோம். சேவை என ஆரம்பிக்கப்பட்ட அரசியல் இன்று முதலீடில்லாத, மிகுந்த லாபம் தரும் தொழிலாகவே மாற்றப்பட்டுவிட்டது.

வர்ணாசிரமம் என்ற வகையில் முன்பும் மக்களைத் தொழில் அடிப்படையில் பிரித்தனர்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் சத்திரியர்;

அறிவை அறியச் செய்வோர் அந்தனர்;

விளைந்த, உற்பத்தி செய்த பொருட்களை விற்போர் வைசியர்;

மற்றதொழில் புரிந்தோர் அனைவரும் சூத்திரர்.

இதில் சூத்திரர் பிரிவினர் மேற்கொண்ட அனைத்துத் தொழில்களுமே அத்தியாவசியமானவை.

சூத்திரதாரி என்று ஒரு சொல் நாம் அறிவோம். இயக்குபவன் என்று பொருள் சொல்லலாம்.எனவே இவர்களே முதன்மை நிலையில் போற்றப்பட்டனர் அன்று. பாரம்பரிய முறையில் பெற்றோர் செய்த தொழிலை அவரது வாரிசுகளும் செய்தனர். அதை ஒப்புக்கொண்டு நிறைவாக, இன்பமாக வாழ்ந்தனர்.

பரிணாம வளர்ச்சியில் கல்வி கற்கும் வாய்ப்பு வந்தபின் முன்பிருந்த குலத்தொழில் கலாச்சாரம் முடிவிற்கு வந்தது.

கல்வி கற்று, அந்தத் தகுதியின் அடிப்படையில் பல பணிகள் பார்க்கும் வாய்ப்பு உருவானது.

வாழ்வதற்கு பணம் வேண்டும். பணம் பெற உழைக்க வேண்டும். சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாம். அல்லது மற்றவர்களிடம் பணிபுரிந்து அதற்கு ஊதியம் பெறலாம்.

இந்த உழைப்பு மட்டுமே நம் வாழ்வில் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும். எந்த உழைப்பானாலும், இறுதியான அதன் வெளிப்பாடு, அவற்றை நுகரும் பொதுமக்களையே அடைகிறது என்பதை மறவாமல் செய்ய வேண்டும். இதனால் பெறும் ஊதியம் உபயோகமானதாகி நல்ல மனநிலைக்கு மனிதனை உயர்த்தும்.

“ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை”                                                                      -குறள் 656

இந்தக் குறளை நாம் எல்லா நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும், கண்ணில் படுமாறு வைத்து, இதன்படி பணிபுரிந்தாலே ஊழல், லஞ்சம் போன்ற சொற்கள் காணாமல் போய்விடும்.

அன்னை என்பவள் தான் ஒவ்வொருவருக்கும் நடமாடும் தெய்வம். அந்த தெய்வமே பசியோடு இருந்தாலும், அவள் வயிற்றில் பிறந்த மக்கள், சமுதாயம் பழிக்கும் செயல்களைச் செய்யக்கூடாது என 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் சொல்லியுள்ளார்.

இன்று சிலர் அன்னையையே பராமரிப்பதில்லை, இந்தக்குறள் இருப்பதே தெரியாது என்போரும் உள்ளனர்.

பழிச் செயல்கள் செய்து, ஊரை அடித்து உலையில் போட்டு, கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள், இந்த உலகைவிட்டுச் செல்லும்போது அவர்கள் சம்பாதித்ததில் ஒரு பைசா கூட எடுத்துச் செல்ல முடியாது என்பதை, சம்பாதிக்கும்போது மறந்துவிட்டனர்.

கோவையில் என் நண்பர் அசோகன் உள்ளார். “நாகர்கோவிலிலிருந்து பல ஆண்டுகளுக்குமுன் கோவைக்கு விற்பனைப்பிரதிநிதியாக வந்தபோது 2 பாய், 2 தலையணை, சில தட்டுமுட்டுச் சாமான்கள் தான் எங்கள் சொத்து”.

“இன்று 40 குடும்பங்களை வாழவைக்கும் மனநிறைவுடன் வியாபாரம் செய்கிறேன். சம்பளம் போதவில்லை என்ற எண்ணம் உண்டாகாதவாறு தேவைக்கேற்ப தருவதுடன், மருத்துவச் செலவுகள், வருடாந்திர ஊதிய உயர்வு என எல்லாவற்றிலுமே தாராளமாய் இருப்பதால், நாளுக்கு நாள் வியாபாரம் அமோகமாய் வளர்கிறது. நானும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்”.

“என் நிறுவனப் பணியாளர் குடும்பங்களிலும் அடிப்படை மகிழ்ச்சிக்கு உதவுகிறேன்”

இது அவர் சொற்கள்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்”                                                                                      -குறள் 666

இந்தக் குறளுக்கு உதாரணமாய் வாழும் அவர் சொல்வது, “சோம்பல், தாமதம், கலக்கம்  நீக்கிதுணிச்சல், நேர்மறைநினைப்பு, நேர்மையுடன் வியாபாரம் செய்வது நம் வாழ்வின் இலக்குகளை அடைவதற்கு எளிய வழி”

பொருளாதார நிலையை மேம்படுத்த உழைப்பில் முழுக்கவனத்துடனும், ஆர்வத்துடனும் ஈடுபட வேண்டும். பலருடன் இணைந்து பணிபுரியும்போது கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான எளிய நடைமுறைகள் எவை எனத் தெரிந்து கொண்டால், பணிக்கும் விருப்பமின்மைக்கும் இடையிலான வெளியை பூஜ்யமாக்கிவிடலாம்.

  • நாம் செய்யும் பணி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொதுமக்களுக்கான சேவை தான். எனவே விருப்பத்துடன் செயல்படுவதுடன் தேடிவரும் பொதுமக்களிடம் இன்சொல் பேசி, இயன்றவரை உதவி செய்ய வேண்டும்.
  • பணிபுரியமிடத்தில் ஆக்கபூர்வமான நட்பு அலைகள் அவசியம் தேவை. உடன் பணிபுரிவோருடன் ஒத்தும், உதவியும் செயல்பட வேண்டும்.
  • தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது, மனமுவந்து நன்றி கூறி, திருத்திக் கொள்வதுடன், உடன் பணிபுரிவோருக்கு வழிகாட்டியாகவும் பணியாற்றவேண்டும்.
  • நேரம் உயிர் போன்றது என்பதால் ஒவ்வொரு மணிநேரத்தையும் திட்டமிட்டு பணிபுரிய வேண்டும்.
  • உற்பத்தி நிறுவனங்களை நடத்துவோர், மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை மட்டுமே தயாரிப்பது.

இவைதான் இன்று பணிபுரிவோர் கடைபிடிக்க வேண்டிய இடைவெளி ஜூரோவுக்கான செயல்பாடுகள்.

பொருள் உற்பத்தி மனித உபயோகத்துக்காகத்தான். ஆட்சி, அதிகாரம், காவல், நீதிமன்றம் அனைத்துமே மக்கள் பிணக்கின்றி பாதுகாப்பாக, தைரியமாக, ஆரோக்கியமாக வாழும் சூழலை உறுதிப்படுத்துவதற்குத்தான். இவர்களுக்கு வழங்கும் ஊதியம் மக்களிடமிருந்து வசூலிக்கும் வரிப்பணம் தான்.

எனவே, தேசத்தந்தை காந்திஜி கூறியதுபோல் ஒவ்வொருவரும் தம் சகமனிதருக்கே சேவை புரிவதாகவும், அதற்கு ஈடாக, குடும்பத்தை சிரமப்படாமல் பராமரிக்கவே ஊதியம் பெறுவதாகவும் நன்றியுடன் நினைவுகூறவேண்டும்.

ஆறறிவு இருப்பதால் தான் மனிதர்களுக்கிடையே வெறுப்பு, பகை, பொறாமை, உணர்வுகள் உண்டாகின்றன. சாதாரண எறும்பு, காகம் போன்றவை கூடத்தான் இனத்துடன் ஒத்து வாழ்வதைப் பார்த்தும் ஏன் நாம் மாற மறுத்து வாழ்கின்றோம்.

வாழ்க்கை என்பது முடிவில்லாத பயணம் என்றும், அதில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதது என்றும் ஞானியர் கூறியுள்ளனர்.

இதைத் தெரிந்து கொண்டவர்களும், சாதாரண மனிதர்போல், தாம் மாறாமல், மற்றவர்கள் தான் மாறவேண்டுமென அடம்பிடித்து இடைவெளியை அதிகரித்துக் கொள்கின்றனரே!

உழைப்பு என்பது சோர்வில்லாமல் தொடர்ந்து முயற்சித்துச் செய்வதுதான் என திருவள்ளுவர்,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்                                                                                          -குறள் 620

என்ற குறள் மூலம் மனிதனின் செயலுக்கு (மதி) இடையூறாக வரும் தெய்வத்தின் விருப்பத்தையும் (விதி) ஒரு காலத்தில் வெற்றி கொள்வர் என உரைத்துள்ளார்.

தொழிற்சாலைகளில் தொழிலாளர், உரிமையாளர் என்றஇரண்டு பிரிவினர் உள்ளனர். தொழில் துவங்குவதன் முதல் நோக்கம் பணம் சம்பாதிப்பது தான். அதன் தொடர்ச்சியாய் வருவது பலருக்கு பணிவாய்ப்பைத் தருவது.

பொருள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் தம் உழைப்பால், அந்த நிறுவனத் தலைவருக்கும் லாபம் ஈட்டித்தருகின்றனர். அதற்காக ஊதியம் போனால் மருத்துவச் செலவுகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

எல்லா இடங்களிலும் மனதி நேயம் மேலோங்கி இருக்க வேண்டும். ஆனால் இன்று மனிதர் வாழ்க்கை எதிர்பார்ப்பிலேயே ஓடுகின்றது. இந்த ஓட்டத்தை மகிழ்ச்சியாக்கும் வழிகளைப் பார்ப்போமா…

(தொடரும்)

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment