Home » Articles » கறுப்பு வெள்ளை

 
கறுப்பு வெள்ளை


அனந்தகுமார் இரா
Author:

கறுப்பு எல்லா நிறங்களும் உறிஞ்சப்படும் நிலை.வெள்ளை எல்லா நிறங்களும் உமிழப்படும் நிலை. வெள்ளைக்குள் எல்லாம் அடக்கம். கறுப்புக்குள் எல்லாம் அடங்கும்.ஒன்று ஒருபுற எல்லை என்றால், மற்றொன்று மறுபுறஎல்லை.இவ்விரண்டில் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கின்ற நிலைமையோடு ஒப்பிடலாம்.

கறுப்பு வெள்ளையை முதலில் கருப்பு வெள்ளை என்றுதான் எழுதினார் கதிரேசன். பின்னர் எந்த கறுப்பு சரி என்று, கங்கை புத்தக நிலையம் வெளியிட்ட,  ‘நல்ல தமிழ் அறிவோம்’ என்னும் புத்தகத்தில் படித்தது ஞாபகம் வந்தது. அந்தப் புத்தகம் டாக்டர் முத்து கண்ணப்பன் அவர்கள் எழுதியது. கறுப்பு தான் சரியானது. கருப்பு என்றால் ஏழ்மை அல்லது வறுமை என்று பொருள் என்று மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்திக் கொண்டார். கதிரேசனது இந்த முயற்சியால் “நல்ல தமிழ் அறிவோம்’ புத்தகத்திலிருந்து வழக்கமாக செய்யும். மேலும் பல எழுத்துப் பிழைகளைத் திருத்திக்கொள்ள இயன்றது. புத்தகங்கள் இதுதான், இவ்வளவுதான் என்று வரையறுத்துவிட முடியாத வகையில் அறிவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  படிக்கப்படிக்க கறுப்பு வெள்ளைக்கு இடையில் வெவ்வேறு அடர்த்தியிலான நிறங்களைப்போல, பகுத்து ஆராய்கின்ற பண்பு தோன்றுகின்றது.

லேட்டரல் திங்கிங் என்பது தற்பொழுது “அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ யோசனைகள் என்கின்ற பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு கண்கட்டு வித்தையைப் போல கண்ணை மூடிக்கொண்டு கறுப்பு வெள்ளையாய் இருந்த உலகை, பல வண்ணமயமாக மாற்றுகின்றது, மாற்றி யோசிக்கும் வழிமுறைகள். கறுப்பு வெள்ளையில் இரண்டே முடிவுகள் தான். ஆனால் நிறங்கள் என்று  வந்துவிட்டால், என்ன நிறம் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்கின்ற கேள்வி, ஒருமையில் இருந்து கேள்விகள் என்ற பன்மையாக மாறிவிடும். இரண்டு பேர் கருத்து மாறுபாடு கொள்கின்றனர் என்றால் புதிதாவதாக மூன்றவாது ஒரு கருத்தை இருவருமே ஏற்றுக்கொள்கின்ற வகையில் கண்டுபிடித்தால் அதுதான் அவுட் ஆஃப் தி பாக்ஸ் சிந்தனை.

வரலாறு அல்லது பின்புலம் ஒரு கருத்தை குறித்த புரிந்துணர்வை மாற்றவல்லது. உலகக்கோப்பை 2015-ல் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு அரை இறுதியில், மிகவும் உயரக் காரணம், அவர்களது தோல்வியில்லாத ஏழு தொடர் வெற்றியே. இந்தப் பின்னனி தகவல் தெரியாதவர்கள் ஆஸ்த்ரேலிய அணியுடன் மோதுகிறார்கள் என்று தெரிந்திருந்தால் அவர்களது எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருந்திருக்கலாம். மனிதகுல வரலாறு குறித்து இராகுல சாங்கிருத்தியாயனின் “கங்கை முதல் வால்கா வரை” என்னும் புத்தகம் கூறுகின்ற கருத்துக்கள் தற்கால நிகழ்வுகளோடு பொருத்திப் பார்த்தால்,  நிறைய தெளிவினை அளிக்க வல்லவை.

கதிரேசன், பூ.கோ.சரவணன் என்னும் ஆளுமையை சமீபத்தில் சந்தித்தார்.  அவரை எழுத்தாளர் என்பதா, பொறியாளர் என்பதா, ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர் என்பதா, சமூகவியளாளர் என்பதா? என்று குறிப்பிட குழம்பும் அளவு பன்முக பர்ஸனாலிட்டி ஆக இருந்தார். விகடன் பிரசுரத்தில் “வரலாற்று மனிதர்கள்” என்னும் அறுநூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ‘கனமான’ புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் வரலாற்றில் நிலையான இடம்பெற்ற மனிதர்கள் குறித்தும் அவர்களது கறுப்புவெள்ளைக் காலம், அதாவது கடந்த காலம் குறித்தும், சுவையான படைப்புக்கள், நிகழ்வுகள் குறித்தும் அலசி ஆராய்ந்து, அதிசயமான அருமையான பொக்கிஷமான நினைவுகளை எல்லாம் இரசித்து எழுதியிருக்கிறார். உதாரணமாக கிரிக்கெட் வீரர் இராகுல் டிராவிட்டின் பொறுமை மற்றும் நம்பிக்கை குறித்த பக்கங்கள் அதைப்படித்த ஒரு வாசகியின் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டன. இந்த செய்தியை நண்பர் கூறினார். ஏன் எனில், இராகுல் டிராவிட் நீண்ட காலம் காத்திருக்க நேர்ந்தது போல வாசகியின் வாழ்விலும் காத்திருப்பு நிகழ்ந்ததாம்.

கறுப்பு எதிர்ப்பை, துக்கத்தை காட்டவும் வெள்ளை அமைதி, சமாதானம், உடன்பாடு முதலியவற்றைகாட்டவும் சின்னமாக பயன்படுத்தப்படுகின்றன. கறுப்பு வெள்ளை நினைவுகள் நிறைந்த வாழ்க்கையை, சாதனை செய்தவர்கள் எப்படி கடந்தார்கள் என்று படிக்கக் கொடுத்த சரவணன், மழைபோல பேசுகின்றார். வெயில்போல பல திசைகளிலும் நிறைந்த அறிவுக்கதிர்களை வீசுகின்றார். இதனை ஒரு தேர்வு என்னும் புள்ளியை நோக்கி குவித்தார் என்றால் சுடச்சுட ஒரு இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி தயாராகிவிடுவார் என்று தோன்றியது.

“னேஸிக்கின்றேன்!” என்று கதிரேசனுக்கு தமிழ் ஒருகடிதம் எழுதினாள் அவரின் எட்டு வயது மகள். தமிழ் பாடம் இல்லாத பள்ளியில் படிப்பதால் அவளுக்கு தமிழாசிரியர் ஆகும் பாக்கியம் கிடைத்தது, கதிருக்கு. தமிழோடு தமிழ் படித்த போது இருவருமே நிறைய கற்றுக் கொண்டார்கள். தமிழ், படைப்பாற்றல் மிகுந்தவளாக தெரிந்தாள். நேசிக்கின்றேன் என்பதன் நிறம் நிறைந்த வடிவம்தான் னேஸிக்கின்றேன்.  கறுப்பு வெள்ளையாய் சாதாரணமாக கண்கள் கடந்து போகும் ‘நேசிக்கின்றேன்’ என்கிற வார்த்தை குழந்தையின் மனதில் நிறைந்து வண்ணமயமாக கிடைத்த எழுத்துக்களை சேர்த்துக் கோர்த்து அப்பாவை நேசிப்பதை சொல்லிவிட வேண்டும்.  வார்த்தைகள் வராவிட்டால் கூட பரவாயில்லை என்று நினைக்கும்,  இதயத்தை புரிய வைத்து இருக்கின்றாள். கதிர், அவளை நீண்ட நாட்கள் கழித்து, அவள் பார்க்க ஆசைப்பட்ட, மாடு பால் பீச்சும் காட்சி, இளங்கன்று பால் ஊட்டும் நிகழ்வு போன்றவற்றைபார்ப்பதற்காக சென்னையிலிருந்து திருநின்றவூர் அழைத்துச் சென்றதை, தொடர்ந்து கிடைத்த பாராட்டுக்கடிதம் இது. பல்வேறு வங்கிப் பணி சாதனைகளுக்காக கிடைத்த பாராட்டு பத்திரங்கள் சான்றிதழ்களுக்கு சரிசமானமாக மனதிருப்தியை இந்த பென்சில் எழுதப்பட்ட கறுப்பு வெள்ளை கடிதம் கொடுத்தது.

தமிழன் மனதில் பசுக்கள், ஆட்டுக் குட்டிகள் உண்டாக்கும் பரவசத்தை கதிரேசனும் ‘னேஸிக்கிறேன்’ மாடல்தான் வார்த்தைகள் கண்டுவித்து எழுதி புரியவைக்க இயலும்.அவள் முகம் அவ்வளவு சந்தோஷமடைவதை முகம் எல்லா தசைகளிலும் பூரிப்பை பூசிவிட்டு காட்டுகின்றது. நாள்கணக்கில் அந்தக் குழந்தை முகம் பார்த்து கடத்தி விடலாம்.இதெல்லாம் குழலினிது யாழினிது குறள் காலத்து கறுப்பு வெள்ளை சமாச்சாரம். சிறுகை அளாவிய கூழ்

சாப்பிட்டு வளர்ந்த கலாச்சாரம்.

கறுப்பு வெள்ளை என்பதற்கு அரதப்பழசான விஷயம் என்று கூட ஒரு பொருள் உண்டே. வயதானவர்களின் புகைப்படங்கள் அதை நினைவூட்டுவது போல் எக்காலமும் நிலைத்து நிற்கும். ஆனால், இன்னும் தமிழ் தானாக, இளங்கன்றையோ, பசுவையோ தொட்டுப் பார்க்க துணியவில்லை என்பது உண்மை. அதற்குள் அவள் பூரண திருப்தி அடைந்து நன்றி கடிதம் எழுதி கொடுத்துவிட்டாள். கதிரேசனின் நாட்குறிப்புக்குள், நடு நாயகமாக ஒட்டப்பட்டுவிட்டது அது. பேங்க் மீட்டிங்குகளில் காட்டமாகும் கட்டங்களில் பக்கங்கள் திருப்புகையில் பார்வைக்கு தட்டுப்பட்டு வருத்தத்தை மட்டுப்படுத்துவது, இதுபோல மகள்கள் கூட்டும் மகுடங்கள்தான் என்பது கூட்டத்தில் மாட்டிக்கொண்டுள்ள மற்றையோர்களுக்கு தெரியாததால், அவர்கள் திட்டப்படும் பொழுதெல்லாம் தீட்டப்படுகின்றோம் என்று வரிகளுக்கிடையே படித்துத் தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

கறுப்பு வெள்ளை புரிந்து கொள்ளலிலுள்ள ஒரே விளைவுதான் இருக்கின்றது. சட்டப்பள்ளிகளில் “வண்ணம்பூசிய புரிந்துகொள்ளுதல்” என்று ஒரு வார்த்தையை பல நீதிமன்றதீர்ப்புக்களில் இருந்து எடுத்துவிளக்குவார்கள். ஆங்கிலத்தில் “கலருடு இன்டர்ப்ரட்டேஷன்” என்றுசொல்வார்கள். அதாவதுசிவப்புநிறகண்ணாடி அணிந்து பார்த்தால் பார்க்கும் பொருளெல்லாம் சிவப்பாக தெரிவதுபோல ஒருவிதிமுறையை தனக்குபிடித்த வண்ணம் புரிந்துகொண்டுவிளக்கம் கொடுப்பதுதான்.  அஸ்வத்தாமன் மறைந்துவிட்டான் என்று தர்மரை மஹாபாரதத்தில் சொல்ல வைத்த கதையை ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம். ஒரு நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமையைக் கொண்டு வழக்குகளை வழக்கறிஞர்கள் வெல்லும்  கதைகள் தமிழ் மற்றும் ஆங்கில திரைப்படங்களில் நிறைந்து இருக்கின்றன. “ப்யூகுட் மென்” என்பது அப்படி ஒருதிரைப்படம். கலருடு இன்டர்ப்ரட்டேஷன் என்பது பொதுவாக எதிர்மறை அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். ஒரு செய்தியை ஒரே கோணத்தில் மட்டும் பார்ப்பது கறுப்பு வெள்ளை பார்வை என்றும் பல கோணங்களில் அலசிப் பார்ப்பது வண்ணம் நிறைந்த பார்வை என்றும் சொல்கின்றார்கள். சமஸ்கிருத இலக்கியத்தில் இதனை ‘தொனி’ என்று கூறி விளக்குவார்கள்.

“உடம்புக்கு எப்படியிருக்கு?” என்கின்றகேள்வியை கேட்கின்றதொனியை வைத்து, அப்படி கேட்பவரின் வலுவை வைத்து, கேட்ட இடத்தை வைத்து, கேட்டு பதில் கிடைத்த பத்து நிமிடங்களுக்கு பிறகு நடக்கவிருக்கின்ற சம்பவத்தை பொறுத்து பொருள் கொள்ள வேண்டும். பேசப்பட்ட வார்த்தைகளும், பேசாமல் விடப்பட்ட வார்த்தைகளும் சேர்ந்துதான் ஒரு வாக்கியத்தினை முழுமைப்படுத்துவதாக ‘தொனி’ என்கின்றஇலக்கிய விமர்சன கருவியை குறித்து படிக்கும் பொழுது கதிரேசன் புரிந்து கொண்டார்.

            பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜாக்குவஸ் இலக்கான் என்னும் மொழியியலாளர்  “முழு வார்த்தை” என்னும் தத்துவத்தை கண்டறிந்துவிளக்கினார். அவரும் தொனி என்கின்றசமஸ்கிருத தத்துவத்தை குறித்தும் பேசி, அது ஆழமான கருத்து என்று பாராட்டியிருப்பார்.தமிழ் இலக்கியத்திலும் இத்தகைய சூழ்நிலைக்கேற்ப பொருள் கொள்ளக்கூடிய உத்தியை நிறைய இடங்களில் பயன்படுத்தியுள்ளனர். சொல்வதை புரிந்துகொள்வது நிகழ, சொல்பவரிடத்தில் எவ்வளவு முயற்சி உள்ளதோ அதே அளவு அல்லது அதைவிட அதிகமான அளவு கேட்பவரிடத்திலும் உள்ளது. இலக்கான் இதனை கான்ஸியஸ் (நனவு, மேல் மனம்)  மற்றும் அன்கான்ஸியஸ் (உள்மனம்) இரண்டும் கலந்த ஒரு செயல்பாடு என்று கூறியுள்ளார். தர்க்கம் (டிபேட்) செய்பவர்கள் பயன்படுத்தும் உத்தியும் இதுவே ஆகும்.

நகைச்சுவை பெரும்பாலும் கலருடு இன்டர்பிரட்டேஷன் மூலமாகவே செய்யப்படுகின்றது.

ஒரு அர்த்ததின் மூலம் கறுப்பு வெள்ளையாய் முடிவெடுத்து கோபப்பட்டுவிட கூடாது. அதன் “உள் அர்த்தம்”என்ன என்று ஆராய, ஆராய ‘உள் குத்து’ எதாவது இருந்தால் தெரியவரும். பரவலாக சாதாரண அன்றாட சமூக வாழ்க்கையில் பொறுமையும் நிறைய படிக்கும் இலக்கிய பரிட்சயமும் இருந்தால் சொற்கள் வண்ணமயமாக நடனமாட காணலாம். இரமண மஹரிசி கூறிய ஒரு கதையை கதிரேசன் படித்தார். நாய் ஒன்று இருந்ததாம், அதற்கு ஒரு எலும்பு துண்டு கிடைத்தது. அதை கடித்து உண்ண முயற்சித்தது. அதன் மூலம் தான் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நினைத்து கொண்டதாம். ஆனால் அது ஒரு காய்ந்த எலும்பு.  அதன் கீறல் பட்டு உதட்டில் உதிரம் வந்தது. அதன் சுவையில் நாய் மகிழ்ந்தது. ஆனால் உண்மையில் உதிரம் நாயினுடையதுதான் எலும்பினுடையது அல்ல என்று அதற்கு அதன் நண்பன் வந்து விளக்கம் கூறியது. அதன் பிறகு நாய் அமைதியானது. எனவே மகிழ்ச்சிக்கான காரணங்கள் மனத்துள்ளே இருக்க வெளியில் இருந்து வரும் வார்த்தைகள் மீது தகுந்த பொருள் என்னும் சாயம் பூசிக்கொள்ள வாய்ப்பு இருக்கின்றது. உதாரணமாக மதுவிலிருந்து பெறும் இன்பத்தை கூறலாம்.

இலக்கான் சொல்கிறப்படி பார்த்தால், முழு பொருளை எடுத்துக்கொள்ள பாதி வெளியிலிருந்து வந்த வார்த்தையோடு நமது ஆழ்மனதில் உள்ள புரிதலையும் சேர்த்தோம் என்றால் முழு பொருள் உருவாகின்றது. கறுப்பாய் வந்தால் அதன்மீது எதாவது ஒரு நிறம் போட்டு சரி செய்துகொள்ள முயற்சிக்க வேண்டாமா?குழந்தைகள் இதனை செம்மையாக செய்கின்றன.களங்கமில்லாத திறந்த வெள்ளை மனதோடுதான் இருக்கின்றன. தமிழுக்குத் தமிழ் கற்றுத்தருகின்றேன், பேர்வழி என்று கதிரேசன் தினந்தோறும் தன் மனதில் பட்ட கறுப்பு சாயங்களைத்தான் வெளுத்துக்கட்டிக் கொண்டிருக்கின்றார். கனவுகள் கறுப்பு வெள்ளை நிறத்தில்தான் வரும் என்று உளவியல் அறிஞர்கள் கூறியுள்ளதாக கதிரேசன் படித்தார். தான் வளர்ந்த கிராமத்தை நினைத்துப் பார்த்தால் பச்சை வயல்வெளியும், பரம்பிக்குளத்தின் நீர் பாயும் வாய்க்காலும் வண்ண வண்ணமாகத்தான் அச்சுஅசலாக நெஞ்சில் நிற்கின்றன. ‘கிரியேட்டிவ் விசுவலைசேஷன்’  என்று ‘சக்தி காவெய்ன்’ உடைய புத்தகம் ஒன்றைபரிந்துரை செய்த பேராசிரியர் வகுப்பில் கண்ணை திறந்துகொண்டு தூங்கினால் மெமோ கிடைக்காமல் இருக்கும் என்றார். கண்ணை திறந்துகொண்டு கனவு காண்பதால் கலர் கனவுகள் கிடைக்கும்தான்.

சட்டென்று ஒரு முடிவெடுத்து வெட்டப்படும் உறவுகள் அதீத நினைவலைகளை ஏற்படுத்த வல்லன. லியோனார்டா டாவின்ஸி வேண்டாத இடங்களை ஒரு கல்லில் இருந்து நீக்கிவிட்டால் சிலை வடிக்கலாம் என்றார். இரண்டு துண்டாக வெட்டிவிடுவதை விட்டால், நிறைய கிடைக்கலாம். பொறுமை வளர பெருமை வளரும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தார். தமிழ், கழல், அவர்களின் மாமா பெனடிக்ட், எல்லோரும் சேர்ந்து, வீட்டில் பிஸ்ஸா செய்தனர். அதை மைக்ரோவேவ் ஓவனில் கொஞ்சம் நேரம் தான்  வைத்தனர். மொஸ்ஸொரெல்லா சீஸ் முதல் பேஸ் வரை பொருட்கள் வாங்க நாள் கணக்கில் ஆனது.  அதுபோல பரிட்சை  ஹாலில், அல்லது பேசும் இடம் என்பது ஓவன் போல பல நாட்களாக படித்து தயாரித்து வைத்திருந்ததனால் வார்த்தைகள் கறுப்பு வெள்ளையாய் இன்றி “னேஸமுடன்” வண்ண வண்ணமாய் வரையப்படலாம்; பேசப்படலாம்; பேசப்படும்!

இந்த இதழை மேலும்

இணையதளத்தில் படிக்க

மொபைலில் படிக்க

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2015

என் பள்ளி
முயன்றேன்… வென்றேன்!
இதய வங்கியில் நிரம்புகின்ற அனுபவ இருப்புகள்
விரதம் முடிப்போம்
எந்த படிப்பு யாருக்கு பொருந்தும்?
எதிர் வரும் காலம் வேளாண்மைப் படிப்புக்கு ஏற்ற காலம்
முறையான உழைப்பு நிறைவான வெற்றி வெற்றி உங்கள் கையில் – 17
ஈகோ என்கிற அகம்பாவம்
குடும்ப நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பை யாருக்கு தருவது
இடைவெளியை புஜ்யமாக்குவோம்
குழந்தைகள் கல்வி கற்க ஏற்ற சூழ்நிலை
கறுப்பு வெள்ளை
உழைப்பை அர்த்தப்படுத்து! வாழ்க்கையை வளப்படுத்து!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்