– 2015 – April | தன்னம்பிக்கை

Home » 2015 » April (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  வெற்றி ஒரு முற்றுப்புள்ளி!

  கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் வாசவி கிளப் நட்சத்திரா, கோவை இணைந்து வழங்கும் 315-வது சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள் : 19.4.2015; ஞாயிற்றுக்கிழமை

  நேரம் : காலை 10.00 மணி

  இடம் : கன்னிகா காம்பளக்ஸ் மீட்டிங் ஹால் (நியூ வாசவி & கோ)

  ராஜவீதி சார்பதிவாளர் அலுவலகம் எதிரில்,

  தேர்முட்டி, கோவை  1.

  தலைப்பு :“வெற்றி ஒரு முற்றுப்புள்ளி!”

  சிறப்புப் பயிற்சியாளர் : பேரா. Dr. ரங்கராஜன், PSG கலை அறிவியல்

  கல்லூரி, கோவை

  போன்: 98420 84281

  தொடர்புக்கு: தலைவர் திரு. A.G.மாரிமுத்துராஜ் 98422 59335

  செயலாளர்  திரு. E. விஜயகுமார்  94426 10230

  பொருளாளர் திரு. AD. A.  ஆனந்தன்  74026 10108

  PRO விக்டரி விஸ்வநாதன்  97877 44533

  என் பள்ளி

  மனிதன் காலங்காலமாக அடைந்துவரும் நாகரிக மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் கருவியாகச் செயல்படுவது கல்வி என்னும் அழியாச் சொத்து என்றால் அது சாலப் பொருந்தும். கல்வி ஒன்று தான் மனிதனின் பகுத்தறிவைப் பயணப்பட வைக்கிறது. புதிய புதிய சிந்தனைகளை உருவாக்கி புதிய கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள வழிகோலுகிறது. அதுமட்டுமல்லாமல் மனிதனை மனிதனாக வாழச் செய்யும் மகத்துவமும் கல்வியில் மட்டுமே அடங்கியுள்ளது என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. அவ்வகையில் கல்வி என்னும் வற்றாத நதியின் மூலம், தான் பெற்ற அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் இந்திய வனத்துறையில் திரிபுரா மாநிலத்தில் வனஅதிகாரியாக பணியாற்றிவரும் திரு. அருண்குமார் அவர்கள்.

  என்னுடைய பெயர் த. அருண்குமார். நான் பிறந்து வளர்ந்த சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகில் உள்ள அழகாபுரி என்றசிறு கிராமம். என்னுடைய தந்தை பெயர் இராஜகோபால். தபால் அலுவலராக (Post Master) பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். என்னுடைய தாயார் திருமதி. வசந்தி. இல்லத்தரசி. என் உடன்பிறந்தோர் ஒரு அண்ணன், ஒரு தங்கை.

  என்னுடைய பள்ளிக்கல்வி ஆரம்பித்தது காயல்பட்டினம் உயர்நிலைப் பள்ளியில் தான். இப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றேன். அதன்பின்பு KAHSS என்று வழங்கப்படும் காயல்பட்டினம் ஆறுமுக நேறியன் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்தேன். அதற்கு பின்பு LK மேல்நிலைப்பள்ளியில் 11, 12ம் வகுப்பினைப் படித்தேன். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் கல்வி தான் நம்முடைய வாழ்க்கையின் எதிர்காலக் கனவை நிர்ணயிக்கிறது. என்னுடைய பள்ளிப்பருவத்தில் இருந்தே என்னுடைய வளர்ச்சிக்குத் துணைநின்றவர்கள் நண்பர்கள் தான்.

  அதற்குப் பின்பு என்னுடைய வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்கள் எனது பெற்றோர்கள். நான் பள்ளியில் பயிலும்போது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் என் நலனில் அக்கறைகொண்டு சரியான வழியில் வழிநடத்தியவர் சமூக அறிவியல் ஆசிரியர் தான். அதற்குப் பின்பு மேல்நிலைப் பள்ளியில் இதேபோன்று எனக்கு வழிகாட்டியவர் தமிழாசிரியர் திரு. ஜோசப் அவர்கள் தான். இதில் குறிப்பிடத்தக்க விசேசம் என்னவென்றால் என் தந்தைக்கும் அவர் ஆசிரியராக இருந்துள்ளார்.

  பள்ளிப்பாடம் என்பது வெறும் தேர்வுக்கு மட்டும் உரியது அல்ல. அது பிற்கால வாழ்க்கையையும் செம்மைப்படுத்தும் செல்வம் என்னும் நோக்கில் பாடங்களை மிக விருப்போடு கற்றுத்தருவார். நானும் எனது நண்பர்களும் இணைந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தனியாக அறைஎடுத்து தங்கிப்படித்தோம். எங்களுடைய வீடுகளில் அனுமதியும், ஒத்துழைப்பும் இருந்தது. இதன் காரணமாக எங்களால் குழுவாக எப்பொழுதும் படிக்கும் வாய்ப்பை அமைத்துக் கொள்ள முடிந்தது.

  சரியாக எங்களுடைய பள்ளிக் கல்வியை அமைத்துக் கொண்டதன் பலன் தற்போது ஒவ்வொருவரும் பெயர் சொல்லும் அளவிற்கு நல்ல பணியில் உள்ளோம். நான் படித்த பள்ளியில் மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் இருந்ததால் போட்டிகள் எப்போதுமே கடுமையாக இருக்கும். மற்றபள்ளிகளில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொண்டு பல நிலைகளில் பரிசுகளையும் பெற்றுள்ளேன்.

  அதற்குப் பின்பு என்னுடைய படிப்புத் தேர்வும், கல்லூரி வாழ்க்கையும் தான் எனது படிப்படியான வெற்றிக்கு வித்திட்டது. மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வனத்துறைக் கல்லூரியில் தான் எனது இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பைப் பெற்றேன். என்னுடைய வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த தருணம் நான் வனத்துறைக் கல்லூரியில் சேர்ந்தது தான். கல்லூரிப் படிப்பு என்பது யாராலும் எப்போதும் மறக்க முடியாத பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது. அந்த வகையில் என்னுடைய கல்லூரிப் படிப்பும் எனது வாழ்க்கைக்கு வெற்றி என்னும் கலங்கரை விளக்கத்தைக் (Light House) காட்டியது.

  என்னுடைய கல்லூரியில் சீனியர், ஜூனியர் என்ற நட்புறவு மிகச்சரியாகவும், முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் உறவாகவும் இருக்கும். எங்களுடைய கல்லூரியின் முதல் IFS அதிகாரியான அன்வருதீன் அவ்கள் தான் எனக்கு ரோல் மாடலாக விளங்கினார். அவரைப் பார்த்து அவரிடம் பழகிய பின் எனக்குள்ளும் IFS அதிகாரியாக வேண்டும் என்ற அடங்காத ஆசை வேரூன்றியது. எந்த நேரத்தில் சென்று சந்தேகம் கேட்டாலும், புதிய செய்திகளை அறியும் ஆவலில் சென்றாலும் முகம் சுழிக்காது அவருடைய பரபரப்பான நேரத்திலும் எங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவார்.

  IFS-ல் அடுத்ததாகக் குறிப்பிட வேண்டியவர் என்னுடைய நண்பன் கர்ணன் அவர்கள் தான். அவர் முதல் முயற்சியிலேயே தேர்வாகிவிட்டார். அவரைப் பார்த்த பின்புதான் எனக்குள்ளும் படிக்கவேண்டும் என்ற வெறி அதிகமாகியது. எனக்கு அவர் தேர்வு பற்றியும், நேர்முகத் தேர்வு பற்றியும் பல்வேறு விதமான ஆலோசனைகளை வழங்கினார். அவரின் ஆலோசனைகளே என்னுடைய வெற்றிக்கு வித்திட்டதில் ஒரு பகுதி என்று குறிப்பிடலாம்.

  என்னுடைய சீனியர் நேசமணி அவர்கள் மற்றும் என்னுடன் பயின்ற நண்பர்கள் பல்வேறு விதமான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். நம்பிக்கை இருந்தால் நிச்சயம் வெற்றி பெறமுடியும் என்பதை புரிந்து கொண்டேன். விடாமுயற்சியும், கடின உழைப்பும் நேரத்தை சரியாகக் கையாளும் ஆற்றலும் இருந்தால் எந்தவிதமான படிப்பாக இருந்தாலும் நம்மால் நிச்சயம் வெற்றியடைய முடியும்.

  2009ம் ஆண்டு IFS பட்டம் பெற்றேன். இரண்டு ஆண்டுகள் டேராடூனில் பெற்றபயிற்சிக்குப் பின்னர், தற்போது திரிபுராவில் பணிபுரிந்து வருகிறேன். ஆரம்பத்தில் ஹிந்தி பேசுவதும், அதற்கு பின்பு பெங்காலி பேசுவதும் சிரமமாக இருந்தது. இரண்டு, மூன்று மாதங்களில் எந்த மொழியையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் எளிமையாகக் கற்றுக்கொள்ளலாம். தற்போது ஹிந்தி மற்றும் பெங்காலி மொழியை என்னால் சரளமாகப் பேச முடிகிறது.

  ஒவ்வொருவருடைய வெற்றிக்கும் அடிப்படையானது அர்ப்பணிப்பு மற்றும் தன்னம்பிக்கை மட்டுமே. இந்த இரண்டும் இருந்தால் நாம் எந்தத் துறையானாலும் நிலைத்து நிற்கவும் முடியும். அதேபோல் சாதனை படைக்கவும் முடியும். தற்போதுள்ள நிலையில் எந்தத் துறையாக இருந்தாலும் போட்டிகள் மிகமிக அதிகம். ஆகவே, அதற்கு சரியான முறையில் மாணவர்கள் தயாராக வேண்டும். உலகைப் பற்றி அன்றாடச் செய்திகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

  எந்த ஒரு செயலையும் பயமின்றி, விடாமுயற்சியுடன் செய்யும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும். எதிர்மறையான சிந்தனைகளை எண்ணி ஒருபோதும் வருந்தக்கூடாது. நல்ல எண்ணங்கள் மனதை மட்டும் அல்ல வாழ்க்கைகையையும் ஜொலிக்க வைக்கும். தோல்விகளை மட்டுமே எண்ணி துவண்டு போனால் வெற்றி தூரமாக்த தெரியும். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி மிக அருகில் என்பதை மிகச்சிறப்பாக பதிவு செய்து இன்றைய இளைய தலைமுறையினருக்கு முன் மாதிரியாக திரு. அருண்குமார் அவர்கள் திகழ்கிறார்.

  இந்த இதழை மேலும்

  என்னமோ இருக்குது இதிலே!

  உன்னை நீ உணர்: உன்னை நீ உணரும், உன்னத நிலையை முதலில் நீ அடை உன் பலத்தை, பலவீனத்தை, மனதார நீ அறி உண்மை எது என்று உனக்குப் புரியும். புரிந்த பின் அதைநோக்கிப் புறப்படு! இதுவரையில் நீ அடைந்திடாத  அமைதியை, ஆனந்தத்தை அனுபவிப்பாய்.

  அந்த உணர்வை நீ வெளிப்படுத்த முடியாமல் நீ தவிக்கும் தவிப்பிற்குப் பெயர்தான் இறைநிலை. இறைநிலையை அடைய இதைவிட சிறந்தவழி வேறில்லை. இதற்காக, எவன் பின்னாலும் சென்று உன்னுடைய காலத்தை  நீ விரயம் செய்து விடாதே!  உனக்குள்ளே இருக்கும் அந்த உன்னதத்தை உன்னால் மட்டுமே உணர முடியும்! உழை. அதற்காக உழைத்துக் கொண்டே இரு! உன் உழைப்பால் வருவதே உண்மையான உயர்வு! நிச்சயம் உன்னால் முடியும் சஞ்சலம் கொள்ளாதே சாதித்துக் காட்டு!

  அகமும் புறமும்:

  தேவைகள் நிறைந்த உலகில், பிறரது உதவி இல்லாமல் அதை அடைய முடியாது என்பது உறுதி. மனிதன் இவ்வுலகில் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு, புறத்தில் புத்திசாலியாக வாழ்ந்து, பொன், புகழ், பொருள், அறிவு, அந்தஸ்தென அனைத்தையும் சம்பாதித்து அரசனாக இருக்கின்றான். இல்லை என்றால் தேவையைத் துறந்து, தெய்வ நிலையை நோக்கி, அதிர்வில்லாத அமைதி நிலையில் செல்கிறான்.

  பொருளற்ற முதல் சொன்ன புறவெற்றி பெற்றவர்கள் இறுதியில் புண்பட்டு புலம்புவது பயன் அற்றதாகும். இரண்டாவதாக சொன்ன அகநிலைக்குள் அடங்கி, அதுவாக மாறிவிடுவது என்பதும் அவ்வளவு எளிதானது அல்ல. ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் அந்நிலை போகப்போக அடையக் கூடியதாகவே இருக்கும்.

  இங்கே நிர்பந்தத்திற்கு உட்பட்ட புறவாழ்வைத் தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை உணரும் பொழுதுதான், அதிலிருந்து விடுபடுவது எப்படி என்ற எண்ணம் தோன்றும்.

  பரந்துபட்ட அந்த வெளிப்பிரகாரத்தில் (புறவாழ்வில்) நடந்து நடந்து, கடந்து கடந்து, மெல்ல மெல்லத்தான் சின்னஞ்சிறிய உட்பிரகாரத்துக்குள் (அக வாழ்வுக்குள்) உள்ள உயிர் மையத்தை அடைய முடியும் என்பதே கோயில் அமைப்பின் தத்துவம் மட்டும் அல்ல வாழ்வின் தத்துவமும் கூடத்தான்.

  புறவாழ்க்கை என்றைக்குமே நிறைவான, சமாதானத்தை, சந்தோசத்தை, நம்பிக்கையை, திருப்திகரமான மனநிலையைத் தருவதில்லை. அகவாழ்வை மேற்கண்ட அத்தனையையும் தரும்.புறத்திலே புரண்டு புரண்டு, புண்ணான பின்புதான் பலர் அகத்தைப் பற்றி அறிய விளைகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

  அகத்தில் வாழும் ஆனந்தத்தை அனுபவித்துவிட்டால் அதைவிட பேரின்பம் வேறேதும் இல்லை என்பதை உணர முடியும். வாழ்க்கை அகத்திலே ஆரம்பித்து அகத்திலேயே முடிய வேண்டும் என்பது இயலாது. புறத்தில் இருந்து எவ்வளவு சீக்கிரம் அகத்திற்கு செல்வது என்பது வேண்டும் என்றால் நம் தீவிர முயற்சியினால் சாத்தியமாகலாமே ஒழிய, முழுக்க முழுக்க முற்றிலுமான அகவாழ்க்கை என்பது மனித குலத்திற்கு சாத்தியமற்றஒன்றாகும்.

  புறவாழ்வு என்பது எல்லாவற்றுடனும் சேர்ந்து இருப்பது. அகவாழ்வு என்பது அனைத்திலிருந்தும் விடுபட்டு நிற்பது. அதாவது ஆன்மிக மொழியில் சொல்வதென்றால் அது ஒரு முழு நிர்வாண நிலை (வெட்டவெளி போல) என்று கூறலாம்.

  சுயபலம்:

  சுயபலம் எப்போது சுக்குநூறாகிப் போகிறதோ அப்போது  மனம் மறைபொருளோடு மன்றாடுகின்றது… அதுபோல் செல்வாக்கு செயலற்றுப் போகும் இடமெல்லாம் சிந்தனை செத்துப்போயி – மறைபொருளிடம் மண்டியிடுகின்றது. காப்பாற்று, காப்பாற்று என்று  அதுவோ காலம் இருந்தால் கை கொடுக்கின்றது! காலம் இல்லை என்றால் அதுவும் கைகழுவி விடுகின்றது!  ஆம் முடிவை மாற்றயாராலும் முடியாதபோது நடப்பதை ஏற்றுக்கொள்ள நாம் ஏன் தயாராகக் கூடாது என்று யோசிப்போமா? எதையும் முடியும் மட்டும் முயற்சிப்போம்! முடிவு எதுவாக இருந்தாலும் மனமுவந்து அதை ஏற்றுக்கொள்ள பழகுவோம்!

  அனுசரிப்பு:

  அனுசரித்துச் செல்ல, என் மனம் அனுமதிக்கவில்லை என்றால் எல்லாவற்றிலும், தோல்வியைக் காண்பதைத் தவிர வேறு வழியில்லை. பிறரை அண்டிப்பிழைக்கும் வாழ்வில் ஒண்டிக்கட்டையாய் நான் உயர முடியாது! என் உயர்வுக்கு அடியில் பல வேர்கள் என்னை தாங்கிப்பிடிக்க வில்லை என்றால் நான் வீழ்ந்து போவேன்! என்கின்ற தத்துவம் என் அடிமனத்தில் ஆழப்பதிந்திருந்தால் நான் என்றும் வெற்றியாளனே!

  உயர்வு:

  என்னைச் சார்ந்திரு! உன்னை உயர்த்திவிடுவேன் என்று தானே எல்லா மதமும், மனமும், மனிதரை ஈர்க்கின்றன சொன்னவனை ஒரு கேள்விகேட்போமா? உன்னைச் சார்ந்திருந்தால், நான் உயர்வேன் என்றால் நீ யாரைச் சார்ந்திருந்து உயர்ந்தாய்? அவர் யாரைச் சார்ந்திருந்து உயர்ந்தார்? ஆரம்ப ஆளை, நீ அடையாளம் காட்டினாய் என்றால் நான் உன்னைச் சார்ந்திருக்கத் தயார்! அது உன்னால் முடியாது! ஏன் தெரியுமா? இறுதியில் நீ என்னிடத்திலே வந்துவிடுவாய் எப்படித் தெரியுமா?

  உன்னால் தான் உன்னை உயர்த்த முடியும் என்று…

  இந்த இதழை மேலும்

  சிகரமே சிம்மாசனம் நீ நிமிர்ந்தால் நிலவே நெற்றிப் பொட்டாகும்

  சிறிதளவு சாதுர்யம், சிறிதளவு சகிப்புத்தன்மை, சிறிதளவு நகைச்சுவை உணர்வு இருந்தாலே போதும். இந்த பூமியில் நம்முடைய வாழ்க்கையை வசதியுடையதாகச் செய்து கொள்ளலாம் என்பார் சாமர்ஸெட் மாம்.

  “ஒருநாள் இரவு மாவீரன் நெப்போலியன் தன் படைவீரர்கள் தங்கியுள்ள பாசறையினை வலம் வந்து கொண்டிருந்தார். வருவது யார் என்பதை அறியாத காவலன், யார் அது? என்று வினவ, நான் பிறப்பால் கார்சிகன், தொழிலால் ஒரு போர்வீரன், சாதனையால் ஒரு சக்கரவர்த்தி” என்றான் நெப்போலியன் என்ற மாவீரனின் உயரம் 4 அடி 10 அங்குலம். ஐந்தடிக்கும் குறைவு தான் 18 மணிநேரம் ஓயாது உழைத்தவன். தூக்கத்தைக் கூட சவாரி செய்யும் குதிரையின் மீதே வைத்துக் கொண்டவன். குறைந்த நேரமே தூங்கும் இயல்பு கொண்டவன். ஒருவனின் உயரத்தையோ, நிறத்தையோ, உடலையோ வைத்து அளப்பதைவிட அவனை அவன்தன் சாதனைகளால் அளக்க வேண்டும்; நம்மை நம்முடைய சாதனைகளே அடையாளம் காட்ட வேண்டும். அடையாளம் காட்டமுடியும். நம்முடைய முகவரிக்கு வெளிச்ச விதைகளைத் தூவ வேண்டும்

  நிமிர்ந்து நில்லுங்கள்

  நிலவே உங்கள்

  நெற்றிப் பொட்டாகும்

  கடந்த காலச் செருப்புகளைக் கழற்றி எரிந்துவிட்டு எதிர்காலத்திற்கான இறகுகளைச் சேகரியுங்கள். உங்களின் வெற்றி உலாவிற்கென வானங்களின் விதானங்களே விரிவடையும். நடந்தவற்றையும், கடந்தவற்றையும் கட்டி மூட்டைகளாகப் போட்டுவிட்டு உங்கள் முகவரியை உலகிற்கு அறிவிக்கும் வழியினைத் தேடுங்கள்.

  சம்பிரதாயங்கள், மனித மேம்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடும் தடைக்கற்கள். அத்தடைகளையும் மீறி சாதித்தோர் பட்டியல் ஏராளம்.

  போற்றுவார் போற்றினும்

  புழுதிவாரி தூற்றுவார் தூற்றினும்

  ஏற்றதொரு கொள்கையை

  என்மனம் என்றால்

  எவர் வரினும் அஞ்சேன்

  நில்லேன் செல்வேன்

  என் வழியே…

  என்று கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.

  ஒரு காட்சி: மையிருட்டும் நேரம். ஆர்ப்பரிக்கும் கடல் அதன் நடுவே அலைமோதும் கப்பல் ஒன்று. அதிலிருந்து மாலுமிகளின் மனப்போராட்டம் கடல் கொந்தளிப்பையும் மிஞ்சி நின்றது. உற்றவரையும், மற்றவரையும் விட்டு பல நாட்கள் ஆகியும் கரை காண இயலாத ஏக்கம். உணவுப் பொருட்களும், குடிநீரும் இல்லாதது போன்ற நிலை. பிணியும், நோயும் பல்கிப் பெருகின. “திரும்பிப் போ! திரும்பிப் போ!” ஆழ்கடலின் ஆரவாரத்தையும் மீறி விண்ணை பிளந்தது மாலுமிகளின் ஆவேசக் கூச்சல். பெரும் சோகத்தையும் சுமந்து நின்ற கிறிஸ்டோபர் கொலம்பஸின் முகத்தில் அறிவார்ந்த சிந்தனை சுடர்விட்டது. கூத்தாடும் கடலுக்கும் கொக்கரிக்கும் மாலுமிகளுக்கும் மத்தியில் அவர் எதையோ தேடிக் கொண்டிருந்தார். உறுதியான அவரின் உதடுகள் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்தன.

  “SAIL ON,SAIL ON” எத்துணை இடர்வரினும் நில்லோம் முன்னேறிக் கொண்டே இருப்போம். இதுவே அவருடைய தாரக மந்திரமாக இருந்தது. பொழுதும் புலர்ந்தது; கரையும் தெரிந்தது. வெற்றித் திருமகன் கொலம்பசின் வாழ்வில் சாகா வரம் பெற்றுநிற்கும் இந்நிகழ்ச்சி நமக்குச் சொல்லும் பாடம்.

  1. வெற்றிக்கு அடிப்படை இலக்கு;
  2. எத்துணை இடர்வரினும் அவற்றை நேர்கொண்டு செல்லும் மனத்திட்பம்.

  இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இலக்கு நமக்கு என்னவெல்லாம் செய்யும். அதை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும். இதைப்பற்றி ஆய்வாளர்கள் இலக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் உருவாக்க வல்ல மந்திரக்கோல். அதை நெருங்க நெருங்க அது நம்மிடமிருந்து அபரிமிதமான சக்தியை வெளிப்படுத்த வல்லது. ஏற்றுக்கொண்ட இலக்கினை அடைதல் மேலும் பல இலக்குகளை அடைய உரிய ஊக்கத்தினை வழங்கும். வாழ்வில் உயர உயரச் சென்று கொண்டுள்ளோம் என்ற உணர்வே உங்களின் சுயமதிப்பீட்டை அளவின்றி உயர்த்தும்.

  விளைவு உங்களின் தன்னம்பிக்கையைத் தடையின்றி தழைத்தோங்கச் செய்யும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இலக்கினை எவ்வாறு உருவாக்குவது? உங்களின் நீண்டகால இலக்குகளைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். எத்தகைய வாழ்வினை நீங்கள் வாழ நினைக்கின்றீர்கள் என்பதைக் குழப்பமின்றி நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குப் பின் உங்கள் தொழில், குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்க்கை ஆகியவை எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் இனிய கனவுகளுக்கும் இதில் முக்கியப் பங்கினை அளியுங்கள். அவையே உங்களின் உண்மையான விருப்பங்களாக இருக்கலாம்.

  இலக்கினை அடைவதற்கு ஏற்ற முறையில் பல குறுகிய கால இலக்குகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் நீண்டகால இலக்கினை நோக்கிய பயணத்தில் ஏற்படும் வெற்றிகள், தடுமாற்றங்கள் ஆகியவற்றை இவை படம்பிடித்துக் காட்டும். அவை எட்டப்படும் போது அளவற்ற உற்சாகத்தையும், இணையற்ற நிறைவையும் வழங்கும். நியூயார்க் நகரத்துப் பேராசிரியர் டோரதி சொல்லுவார். உங்களின் கண்களைச் சற்றே மூடிக்கொள்ளுங்கள். உங்களுக்கு என்னென்ன குணாதிசயங்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அவையெல்லாம் இருப்பதாகவும், எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று கற்பனை செய்து மகிழ்ந்து இருப்பீர்களோ அப்படியே வாழ்வதாகவும் கற்பனையில் பாருங்கள். நீங்கள் அடைய விரும்பும் இலட்சிய நிலைக்கு வேண்டிய குணாதிசயங்களை வரிசைப்படுத்துங்கள்.

  இப்போது வருவது மிகமிக முக்கியமான கட்டம். இந்நிலையில் ஒரு சுயபரிசோதனை செய்து பாருங்கள். உங்களின் இலட்சிய எல்லைக்கும், நடப்பு நிலைக்கும் இடைவெளி உங்களுக்குத் தெரியவரும். இந்த இடைவெளியை குறைக்க நீங்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

  உங்கள் திறமையின் எல்லைகளைச் சரியாக தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக முடியாது என்பவற்றை இலக்காக ஏற்றுக்கொள்ளாதீர்கள். ஒரே சமயத்தில் பல காரியங்களைச் செய்ய முற்படாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி அவற்றைச் செய்ய முயலுங்கள்.

  உங்களுடைய திறனுக்கும் வயதிற்கும் ஏற்ற இலக்குகளை பெற்றுக் கொள்ளுங்கள். காலத்தின் போக்கில் அவ்வப்போது உங்களின் இலக்குகளை மறுபரிசீலனை செய்யுங்கள். அறிவார்ந்த சிந்தனை வழங்கும் மாற்றங்களைத் துணிவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். முதலில் நீங்கள் திட்டங்களை உருவாக்குங்கள். திட்டங்கள் உங்களை உருவாக்கும் என்பது அறிவார்ந்தோரின் கூற்று.

  இப்படித்தான் வாழ வேண்டும். இவ்வளவு சம்பாதிக்க வேண்டும். இவரைத் தான் சந்திக்க வேண்டும். இதைத்தான் விற்க வேண்டும். இன்றைக்கு தான் பார்க்க வேண்டும். இதைத்தான் பேசி இப்படித்தான் விற்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

  கொடுக்கப்பட்டதை வைத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் வாழ்பவை பறவைகளும், விலங்குகளுமே! கொடுக்கப்பட்டதை வைத்துக்கொண்டு தான் அடைய விரும்புவதை எல்லாம் திட்டமிட்டு அடையும் வல்லமை படைத்தவனே மனிதன்.

  நீங்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒரு பொறுப்பின் தளத்தில் இருந்தே உங்களுடைய வாழ்க்கை உயரும்” என்பார் எமர்சன். “யார் தங்களுக்கு என்ன தேவை என்று தெரிந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு அதை அடைய தேவையான மனவலிமையையும் இந்த உலகம் மகிழ்ச்சியுடன் வழங்கி வழிகாட்டும்”.

  உயர்ந்த சாதனைகளைச் செய்து முடித்த ஆண்களும், பெண்களும் ஒரே ஒரு பொதுத்தன்மையை உடையவர்கள் அவர்களால் அது முடியுமென்று நம்பினார்கள். இந்த நம்பிக்கையும், மிகமிக உறுதியான தீர்மானமும், அதனுடைய வசீகரமும் வெற்றிக்குத் தேவையான உட்கூறுகள்.

  மனித மூளை என்பது தனிப்பட்ட தன்மை உடைய உயிரியல் கம்ப்யூட்டர். அதற்குத் தனிப்பட்ட வகையிலான செயல் தூண்டலும், திசை காட்டலும் தேவை. பெரும்பாலானோர் இலக்குகளை அடைய முடியாததற்கு காரணம், அவர்கள் அவற்றை வரையறுக்கவில்லை. அவை பற்றிக் கற்றுக்கொள்ளவில்லை அல்லது அவை நம்பக்கூடியவை என்றோ, அடையக் கூடியவை என்றோ தீவிரமான கருத்து கொண்டிருக்கவில்லை.

  வெற்றியாளர்கள் தாங்கள் எங்கே செல்கிறார்கள் என்பதையும், அவர்களுடைய பாதையில் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பதையும், அவர்களுடைய தீரச் செயலில் யாரெல்லாம் பங்குகொள்கிறார்கள் என்பதையும் சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். “இந்த உலகில் நாம் எங்கு இருக்கிறோம் என்பது அவ்வளவு முக்கியமல்ல. ஆனால் எந்தத் திசையை நோக்கி நகர்கிறோம் என்பதே முக்கியம்”.

  ஒரு பக்கத்தை

  பார்த்துக் கொண்டிருப்பவனே

  திருப்பிப் பார்

  மறுபக்கத்திலும் இருக்கிறது

  சத்தியத்தின் தரிசனம்

  என்பார் கவிக்கோ அப்துல் ரஹ்மான்.

  சிகர சிம்மாசனத்தையும் சொந்தம் கொண்டாடு

  நிலவின் நெற்றியில் பொட்டிடு!

  இந்த இதழை மேலும்

  உள்ளே பார் உன்னைத் தெரியும்

  ஒரு யானைக்குட்டியை யானைப் பாகன் மேய்ச்சலுக்கு கொண்டுபோய் திரும்பிவருகையில் ஒரு சிறிய கொம்பு நட்டு அதில் அந்த யானைக்குட்டியை கட்டிவைப்பானாம். சிலவேளை அவன் மேய்ச்சலுக்குப் போக தாமதமாகையில் யானைக்குட்டிக்கு பசியெடுத்து தனைக் கட்டப்பட்டுள்ள கயிற்றை இழுத்து இழுத்து அறுத்துப்பார்க்க முயன்று அறுக்கமுடியாமல் தோற்றுப்போகுமாம். இப்படி எத்தனையோமுறைப் போராடியும் அந்தக் கயிற்றை அறுக்க முடியவில்லை என்பதால் அவன் வந்து அவிழ்த்து விடும்வரை அந்த யானை அந்த இடத்திலேயே பசியோடு காத்திருக்குமாம்.

  பின் வளர்ந்து பெரிதாகிப்போன அந்த யானையை காட்டிற்கு கொண்டுபோய் விட்டால் போதும், வெறி வந்தாற்போல் பெரியப் பெரிய மரங்களையெல்லாம் சர்வசாதரணமாகப் பிடுங்கி தரையில் எறியுமாம். அட்டகாசம் தாங்கமுடியாமல் யானைப்பாகன் அந்த யானையை ஓட்டிவந்து அந்தச் சிறிய கொம்பில் கட்டிவைத்துவிட்டு வீட்டிற்குப் போய்விடுவானாம். அந்த யானை மீண்டும் தன்னை பழையதுப்போலவே கருதிக்கொண்டு மறுநாள் அந்த யானைப்பாகன் வந்து யானையை அவிழ்த்துவிடும்வரை அந்தக் கயிற்றை இழுத்துக்கூட பார்க்காதாம்.

  காரணம், அதைப் பொறுத்தவரை, அந்தக் கயிறு ஒரு அறுக்கமுடியாத கயிறு. சிறு வயதிலிருந்து இழுத்து இழுத்துப் பார்த்து அறுக்க முடியாமல் போகவே ஒரு கட்டத்தில் இனி அதை அறுக்கவே முடியாதென்று எண்ணிக்கொண்டே அந்த யானை வளர்ந்து வந்ததால், அந்த யானைக்கு தான் வளர்ந்து காட்டையழிக்கும் சக்தியைப் பெற்றபோது கூட அந்த சிறிய கொம்பை பிடுங்கிக்கொண்டு ஓடமுடியாது என்றே எண்ணம் இருந்துள்ளது.

  நாமும் இப்படித்தான், இந்த மரத்தில் கட்டிவைத்த யானையைப் போலவே சிறுவயது எண்ணங்களையே மனதில் சுமந்து வாழ்ந்து கொண்டுள்ளோம். வளர வளர அறுபடவேண்டிய பல நம்பிக்கைக்குரிய கட்டுகளை அறுத்துக்கொண்டு சுதந்திரமாகப் பயணிக்காமல், காதால் கேட்டதையும் யார்யாரோ சொன்னதையுமே நமக்கான கடைசி வட்டமென்று எண்ணிக்கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

  சாமி.. வழிபாடு… பண்டிகை… கலாச்சாராமெல்லாம் மனிதரின் நன்மைக்கானதும், மேன்மையை எதிர்நோக்கி நாம் கட்டமைத்ததும் மட்டுமே. பிறகு அந்தந்த வேளை வருகையில் அததற்கான விளக்கங்களை எடுத்துச் சொல்லி வளரும் குழந்தைகளை “விடுதலை உணர்வோடும்’ போதுமான பண்போடும், பகுத்தறியக் கூடியத் தெளிவோடும்” மனித மற்றும் உயிர்களின் மீதான மதிப்பும் மரியாதையோடுமாய் வளர்க்க வேண்டியது நமது கட்டாயமாகிறது.

  அங்ஙனம் அவிழ்க்க வேண்டிய கட்டில் ஒன்றும், புரியவேண்டிய உண்மையில் ஒன்றுமானதுதான் அந்த “நம் ஆத்தா கண்ணை குத்தும்” என்று சொன்ன பொய்யும். எல்லாம் அவன் செய்வான் என்று நம்பவைத்த நம்பிக்கையுமாகும். ஏனெனில் இன்று அத்தகையப் பொய்யில் வளர்ந்த மூடப்பழக்க வழக்கங்களும், அவசியமற்ற நம்பிக்கைகளும் பயமும் மாற வேண்டுமெனில் குறைந்தது ஆயிரமிரண்டாயிரம் வருடங்களாவது இனியும் நமக்குத் தேவைப்படும்போல்.

  “”கோவில்… சாமி… என்று காட்டும் அக்கறையை இன்று நாம் நம் மனிதரிடத்தே காட்ட மறுக்கிறோம். எதெல்லாம் இயற்கையிலிருந்து வந்ததோ அதெல்லாம் தெய்வீகமானது தான். கல்லை நம்பி கையெடுத்து வணங்கினாலும் கல் நம்மைக் காப்பாற்றும். மரத்தை நம்பினாலும் மரம் நமைக் காப்பாற்றும். அத்தகைய நம்பிக்கைக்குரிய வகையில்தான் இயற்கையெனும் இறைசக்தி நம்முள் எங்கும் பரவியுள்ளது” என்று சொன்னதை நாம் வெறும் ஒரு கல்லும் மரத்திலும் மட்டுமே உண்டென்று நம்பிக்கொண்டது பிழை.

  கையெடுத்து வணங்கி உள்ளே பேசும் சொற்கள் ஆழ்மனதுள் பதியுமெனில் அதற்கு செயல்வடிவம் ஏற்பட்டு நம்பியது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அமைவதென்பது இயற்கைச் சக்தியின் இயல்பிற்கு உட்பட்டதே. இதைத்தான் எண்ணங்களே செயலாகும் என்றார் விவேகானந்தர்.

  தனை தானுணர்ந்து, தனக்குள் பேசி, தான் வளர வளர பூரண அன்புகொண்டு பிறருக்காய் வாழ்வதையே ஆன்மிகம் போதிக்கிறது. உள்ளே கடைந்து வெளியே தெரியும் காட்சியின் சூட்சுமத்தை அறியவே “நானே கடவுள்” என்றது மதம். ஆனால் நாமென்ன செய்தோம்? நானே கடவுள் என்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தன்னைத்தான் முழுதாக நம்பாமல், எங்கும் நிறைந்த இறைத்தன்மையை சுயநலமறுத்துக் காணாமல், வெறுமனே கடவுள் எங்கென்று தேடித் தேடியே காலத்தை கழித்துவிடுகிறோம். எது உண்மை என்று புரிவதற்குள் மரணம் நெருங்கி வாழ்நாள் முடிந்து மீண்டும் மறுபிறப்பெடுத்தும் உண்மையறியாமலே மரணிக்கவும் தயாராகிவிடுகிறோம்.

  ஆக பிறருக்காக, பிறரின் அனுபவத்தின் பாடத்திற்காகக் காத்திருந்ததையெல்லாம் விட்டுவிட்டு விழிப்பென்னும் வெளிச்சத்திற்கு நாமெல்லோரும் வரவேண்டும். எதைக் குறித்தும் சுதந்திரமாய் தனது அறிவிற்கு புரியும்வகையில் சிந்திக்க வேண்டும். பிறருக்கும், மொத்த உலகிற்கும் நல்லதை ஏற்படுத்தும் வகையில் மட்டுமே நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். எங்கு நமது அசைவால் ஒரு நன்மை நடக்குமோ’ அங்கு அந்த இறைசக்தி நிறைந்திருக்கும் என்பதை அனுபவத்தால் புரிந்துணர வேண்டும்.

  சிந்திப்போம். எல்லாவற்றையும் சிந்திக்கும் சமயத்தில் நமைப் பற்றியும் நாமறிந்து கொள்ள முயற்சிப்போம். நமையறிந்து கொள்ளல், நம் பலத்தை, நமக்குரிய பண்பை, இயல்பான நற்குணங்களை அறிந்து கொள்ளல் நமது கடன். பிறகு, தனை தானறிந்து கொள்வதெனில் வேறென்ன செய்வது?

  தனைப் பார்க்க வேண்டும். எந்த மதமும் போதனையும் அறிவில் முடிவாகச் சென்று ஏறிக்கொள்ளாதளவில் அமைதியாக அமர்ந்து, தனக்குள்ளே முழுவதுமாய்ச் சென்று, தனை முற்றிலுமாக நான் யார் என்று அறியுமாறு பார்க்க வேண்டும். தான் மாறிக்கொண்டே இருப்பதையும், இந்த உலகம் மாறிக்கொண்டே இருப்பதையும் பார்த்துணர வேண்டும். அது முயன்றால் அறிவுள்ள ஒவ்வொரு உயிருக்கும் முடியும். நமக்குள் ஏற்படும் மாற்றத்தையும் நாம் பார்க்க முடியும். உள்ளே சென்று பார்த்தால் உள்ளிருக்கும் சாமி மட்டுமல்ல வெளியிருக்கும் உலகத்தின் மொத்தத் தோற்றமும்கூட நிதர்சனமாய் தெரியும்.

  ஆக, தனை தானே அறிவதென்பது யாது? அதெப்படி தனைத்தானே உள்ளே பார்ப்பது?

  இப்படி கேள்வி வரும் வேளை; உள்ளே சென்று நம்மை நிரப்பிக் கொண்டுள்ளது யார் என்றும் யோசியுங்கள். உடம்பெல்லாம் காய்ச்சல் அடிக்கையில் வெப்பத்தை நீக்க உடம்பெல்லாம் தண்ணீர் ஊற்றுகிறோமா அல்லது நெற்றியில் மட்டும் துணி நனைத்துப் போடுகிறோமா? யோசியுங்கள். ஒரு அடி அடிக்க பொருள் உடைவதில்லை, அடிக்க அடிக்க எதுவும் உடைகிறது. யோசியுங்கள். நூறடி நடக்கவேண்டும். கடக்கவேண்டும். ஒரு ஒரு அடியாய் நடக்கையில் நூறடியை மெல்ல மெல்ல கடந்தேவிடுகிறோம். யோசியுங்கள்.

  இப்போ நம்மை நாம் அறிய நாமென்ன செய்யலாமென்பது  ஓரளவேனும் புரிந்திருக்கும். ஆம், மெல்ல மெல்ல நகர்ந்தால், உறுதியாகத் தொடர்ந்தால், உண்மையை அறிந்துவிடலாம். விபாசனா எனும் முறையில் புத்தர் மிக அழகாக இந்த தன்னைத் தான் அறிதலைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த வேதமான ரிக் வேதம் இதைக் குறிப்பிடுவதாய் புத்தர் சொல்கிறார். அதுதான் நம் உடனுள்ளே செல்லும் காற்று வழியே உள்புகுந்து வெளியிருக்கும் புறஉலகை கண்கொட்டாமல் பார்ப்பது.

  விடிகாலையில் அல்லது எப்போதெல்லாம் மனதொத்துப் போகிறதோ, அமைதியாக அமர நேரமும் இடமும் கிடைக்கிறதோ அப்போதெல்லாம், கண்மூடி முதுகெலும்பை நேராக்கி அமர்ந்து, நாசி முனையிலோ அல்லது நெற்றியின் நடுவிலோ சிந்தனையைக் குவித்து, தனது எல்லா வெளிஉலகத் தொடர்பையும் இந்த உடலிலிருந்து, சிந்தனையிலிருந்து மெல்ல மெல்ல அறுத்துவிடுகையில், இயற்கையோடு இயற்கையாக நாம் முற்றும் ஒன்றிநிற்கையில்; நமை நாம் எத்தனை பெரிய சக்தி என்று உண்மையாய் அறியவும் உணரவும் முடிகிறது.

  அதுபோல், உள்செல்லும் காற்று வழியே, அதாவது நாசி துவாரம் வழியே சென்று மனதின் மொத்த எண்ணங்களையும் நாசிமுனையில் குவித்து, எண்ணங்களின் கூட்டாக இருக்கும் மனத்தை மெல்ல அசைத்துப் பார்த்து, அசைவது உணரக் கிடைக்கையில் அதை நெற்றிக்கு மாற்றி பின் நெற்றியிலிருந்து கழுத்தில் கொண்டுவந்து பின் கழுத்திலிருந்து மார்பு நடுவே வைத்து பின் முதுகெலும்பின் அடியில்’ உச்சந்தலையிலென மாறி மாறி முகம், காது, கழுத்து, உடம்பு என உச்சி முதல் உள்ளங்கால் வரை வேறெங்கும் தொடர்பின்றி உள்ளேயே பார்த்து வருகையில், உலகின் மொத்தப் படைப்புமே மாற்றத்திற்கு உரியது என்பதையும், அசையாமல் அமர்ந்திருக்கும் நாம் எப்படி கணத்திற்கு கணம் மாறிவருகிறோம் என்பதையும் அறியமுடிகிறது.

  அங்ஙனம் தொடர்ந்து செய்துவர, மாற்றத்திற்குட்பட்ட அனைத்தின் மீதான பற்றும் பேராசையும் மெல்ல மெல்ல குறைகிறது.  நாளடைவில் எல்லாம் பொது எல்லாம் ஒன்றென்று மனதுள் அமைதி நிறைந்த எண்ணம் வருகிறது. பிறகும் எண்ணம் ஓரிடத்தில் குவியக் குவிய நமக்கான நாம் கொண்டுவந்துள்ள நம் சக்தி மெல்ல மெல்ல வெளிப்படத் துவங்குகிறது.

  அங்ஙனம் நமது சக்தி வெளிப்பட்டு, எல்லாம் ஒன்றே, இயற்கையின் அணைத்துப் படைப்பும் மாற்றமெனும் ஒரு நியதிக்கே உட்பட்டது என்று புரிந்து போகையில், அந்தப் புரிதல் வரும் அமைதி முழு ஞானத்தை கொடுக்கிறது. அங்ஙனம் மீண்டும் மீண்டும் அடையும் அமைதியில் மனம் லயித்துப்போய்; மனமானது எல்லையில்லாததொரு தனையறிந்துவிட்ட ஆனந்தத்தில் ஆழ்ந்துவிடுகையில்; உயிர்களின் மீதான புரிதலும், உயிர்கள் அனைத்தும் சமம் எனும் உண்மையும், எல்லோரும் நலமாக வளமாக வாழ வாழ நாமும் நலம் பெறுவோம்; வளம் பெறுவோம் எனும் மொத்த இயற்கைச் சக்தியின் நெருக்கமும் மானசீகமாக விளங்க ஆரம்பிக்கும்.

  இப்படி ஒன்றன்பின் ஒன்றாக எல்லாமே இயற்கைச் சக்தியின் இயல்புக் கூறுகளிலிருந்து நமக்குக் கிடைப்பது மட்டுமே என்று புரிந்துபோகையில் அதைப் புரிவதற்கான ஏற்பாடு மட்டுமே மதங்களின் வழி கற்ற சடங்குகளும் சாஸ்திர முறைகளும் என்பதும் புரியவரும். அது தெள்ளத் தெளிவாகிய பின்னர் மனது அங்கே போட்டியிடுவதை விட்டுவிட்டு அவசியமற்ற மூடநம்பிக்கைகளிலிருந்து விலகிக்கொள்ள தானே முற்படுவதை அறியவருவோம்.

  ஆக இப்படி மெல்ல மெல்ல அவசியமற்ற எல்லா கட்டுகளும் விலகி, சமமாக இருத்தல், நடுநிலையோடு வாழ்தல் எனும் நிலை உள்புகுந்து, எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்று, நன்மை நடத்தல் எனில் அது எல்லோருக்கும் நடத்தல் வேண்டும். ஒன்று நன்மைக்கென புரிதலெனில் அது எல்லோருக்கும் புரிதல் வேண்டும். மகிழ்ச்சி என்பது அனைத்து உயிர்க்கும் பொதுவானது எனும்’ உலக உயிர்களின் பாகுபாடற்ற நன்மை குறித்து சிந்தித்து வாழும் நற்தன்மையானது தானே எல்லோருக்கும் ஏற்பட்டுவிடும்.

  மனிதனுக்கு உண்மையில் அந்த நிலைதான் வேண்டும். தன் கையிலிருப்பது பிறருக்கும் உரியதென்பதை மனிதன் ஏற்க வேண்டும். எனக்கு நாளைக்கு வேண்டுமே என்று எடுத்து வைத்துக் கொள்வதைக் கூட போகட்டும் மனிதன் மெல்லத்தான் மாறுவான் என்று விட்டுவிடலாம். ஆனால் அடுத்த வருடத்திற்கு வேண்டும், அடுத்த தலைமுறைக்கு வேண்டும், அதுவரை எனக்கருகில் எவன் செத்தால் எனக்கென்ன எனும் சுயநலகுணமெல்லாம் புழு பூச்சிக்குக் கூட இருக்காது. இருக்கக் கூடாது. இருக்காது.

  நம் பக்கத்தில் பட்டினியோடு ஓருயிர் அமர்ந்திருக்க நாம் முழு வயிறு நிறைய உண்போமானால்; நாம் மனித தன்மையை இழந்து நிற்கிறோம் என்றே அர்த்தம்.

  எனவே, தனைப் பற்றி அக்கறை கொள்ளும் அதே அளவில் பிறர் பற்றிய வருத்தத்தையும் ஏந்தி நடத்தல் வேண்டும். பிறருக்கும் சேர்த்து சிந்தித்து வாழும் வாழ்க்கையை அனைவரும் பழக்கிக்கொண்டால் நமக்கான பசியை யாரோ தீர்த்துவைப்பதற்கு முயல்வதையும் நம்மால் காணமுடியும். அப்படியொரு சமதர்மம் இம்மண்ணில் மலரவேண்டும். அதற்கு நாம் நடுநிலைத் தன்மையை அடைய வேண்டும்.

  நடுநிலைத் தன்மையை அடைய எண்ணத்தை ஒன்று கூட்டுங்கள். ஓரிடத்தில் கூட்டி, மெல்ல மெல்ல ஏற்றயிறக்கத்தைக் களைந்து யாதுமற்ற ஓருயிராய் அமைதியோடு உட்காரப் பழகுங்கள். அப்படி உட்கார உட்கார சுயநலம் தீர்ந்து, தன் மீதான, தனது என்றிருக்கும் அதாவது நான் என்றிருக்கும், எனது கடவுள்’ எனது வீடு’ எனது நாடு’ எனது பொருள் எனும் தனதான அத்தனைக் கவலையும் நீங்கி, எல்லோருக்குமாய் வாழும் நிம்மதி முழுதாய்…

  இந்த இதழை மேலும்

  வெற்றி வேண்டுமா?

  முன் சுருக்கம்: படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் வேலை வேலை தேடும் வேலையை விடுத்து வேலை அளிப்போராக மாறி சொந்தமாக தொழிலோ, வணிகமோ, தனக்குப் பொருத்தமானதாகத் தேர்ந்தெடுத்து, சிறந்த நிறுவனங்களில் அதற்கான பயிற்சி எடுத்து, தொழில் ஆரம்பிக்க சிறந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து, சிறந்த ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து, முதலீட்டுக்கான வழிவகைகளை ஆராய்ந்து சிறப்பான நிறுவனத்தை அமைக்க வேண்டும் என்பதை முன்பகுதியில் தெரிந்து கொண்டோம். அதைத் தொடர்ந்து…

  தொழிலுக்கான பொருட்களை கொள்முதல் செய்தல்:

  நாம் எந்தத் தொழில், வணிகம் ஆரம்பிக்க இருக்கிறோமோ அதற்கான மூலப்பொருட்கள், எந்திரங்கள், தளவாடச் சாமான்கள் ஆகியவற்றைநமது தொழிலுக்குத் தகுந்தபடி திறன், தரம், உழைப்பு, கையாளும் வகையில் தொழில்நுட்பம் இலகுவான தன்மை, உதிரி பாகங்கள் எளிதில் கிடைக்கும் தன்மை ஆகியவற்றைஆராய்ந்து தேர்ந்தெடுத்தல் நல்லது. கொள்முதல் செய்து விற்பனை செய்யும் வணிகத் துறையாக இருந்தால் கூடுமான வரை இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாது நேரடிக் கொள்முதல் சிறப்பானது. முடியாத பட்சத்தில் சிறந்த நம்பிக்கையான நிறுவனங்களிடம் தரமான பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனைக்குக் கொண்டு வருதல் சிறப்பு. மலிவான விலை என்று குப்பைப் பொருட்களை வாங்கிக் குவிப்பதைவிட தரமான தெளிவான பொருட்களை கொள்முதல் செய்து விற்பதே சிறப்பு. எப்பொழுதும் நமது சிந்தனைகள் யாவும் நமக்கும் நமது வாடிக்கையாளர்களுக்கும் நன்மை பயப்பதே கொள்கையாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர் திருப்தியே “நமது தொழில் வளர்ச்சிக்கு ஏணிப்படி!”

  இலாப நோக்கு:

  வாணிகமோ, தொழிலோ எதுவாக இருப்பினும் செலவைத் துல்லியமாகக் கணக்கிட்டு, குறைந்த அளவு இலாபம் சேர்த்து பொருள் ஈட்டுதல் சாலச் சிறந்தது.

  உண்மையாய் உழைப்போம்! உழைத்து உயர்வோம்! உயர்ந்து உயர்விப்போம்!

  இன்பமும், துன்பமும் தொடர்கதை. அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் என்றும் தோல்வி கிடையாது. தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கற்கள். பட்டுத் தெளிந்து, அறிந்து, புரிந்து பலப்படிகள் கடந்து, பலன்கள் பெற்று நமக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும், உலகிற்கும் பயனுள்ளவர்களாக வாழ்ந்து, வளர்ந்து, வழிகாட்டியாய் இருந்து வெற்றி பெறுவோம். வீறுநடை போடுவோம்!

  “”ஊழையும் உப்பக்கம் காண்பார் உலைவுஇன்றித்

  தாழாது உஞற்று பவர்”     

   

  “”வினைக்கண் வினைக்கெடல் ஓம்பல் வினைக்குறை

  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு”

  என்ற வள்ளுவனின் வழி அறிந்து வாழ்வோம்! வளர்வோம்!

  இந்த இதழை மேலும்

  ஒருவர் தன்னுடைய சுயமதிப்பை வளர்த்துக் கொள்வது எப்படி?

  வெள்ளத்  தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

  உள்ளத்  தனைய உயர்வு

  நீருக்குள் இருக்கும் பூக்களினுடைய தண்டின் நீளமானது நீரின் அளவின் படியே அமையும். நீரின் உயரத்திற்கேற்ப தண்டின் உயரமும் இருக்கும். அதுபோலவே மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவைப் பொருத்தே அமையும்.

  உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல் மற்றது

  தள்ளினும் தள்ளாமை நீர்த்து

  உயர்ந்த நிலைகளையே எல்லோரும் எப்போதும் எண்ணுதல் வேண்டும். அந்த நிலை கை விடாத போதும் உயர்வாக எண்ணுவதை மட்டும் கைவிடுதல் கூடாது.

  வெற்றியை, மகிழ்ச்சியை, ஈர்க்க மனிதர்க்குள்ளே ஒரு காந்தம் இருக்கிறது. அண்டத்தின் காந்தப்புலம் சரியாக ஒத்து இருந்தால் தான் அண்டம் பிரச்சனை இல்லாமல் இயங்கும். அது போல மனிதன் தனது காந்தபுலனைச் சரியாக வைத்துக் கொண்டால்தான் அவனது வாழ்க்கை பிரச்சனையின்றி நடக்கும்.

                                                      -மஹாத்ரயாரா

  உங்களுடைய சுயமதிப்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் உங்களின் வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்ள முடியும். அதுவே உங்களை உயர வைக்கும். நம்மைப் பற்றி நாமே தாழ்வாக எண்ணிக் கொண்டால் நமது வாழ்க்கையின் வளர்ச்சியும் வளமும் குன்றும். நம்மைப் பற்றி நாமே உயர்வாக எண்ணிக் கொள்வதும், உயர்ந்த எண்ணங்களை வளர்த்துக் கொள்வதும், சுய மதிப்பை வளர்த்துக் கொள்வதும் தான் வெற்றிக்கான வழிகள் ஆகும்.

  சுயமதிப்பை வளர்த்துக் கொள்ள சில மனப்பயிற்சிகளை நாம் பின்பற்றவேண்டும்:

  • உங்களைப் பற்றி நீங்களே உயர்வாக எண்ணிக் கொள்ள வேண்டும்

  இந்த நிமிடம் முதல் உங்களைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள்ள ஆரம்பித்தால் சில நாட்களிலேயே உங்களுக்குள் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். உங்களை மற்றவர்கள் மதிப்பதைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

  • எதிர்மறை எண்ணங்களை விட்டு நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்

  எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதுதான் உங்களிடம் உள்ள ஒரே குறை. உடனடியாக அந்த எதிர்மறைஎண்ணங்களை வளர்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் அதிகமானால் உங்கள் வளர்ச்சி குன்றும். நேர்மறை எண்ணங்கள் அதிகமாக அதிகமாக உங்கள் வளர்ச்சி அதிகமாகும்.

  • மிகப்பெரிய கனவுகளை காணுங்கள். உயர்ந்த எண்ணங்களை எண்ணுங்கள்

  நமது முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்பமை அப்துல்கலாம் அவர்கள் சொல்வதைப் போல கனவு காணுங்கள். உயர்ந்த நிலை அடைவதாக கனவு காணுங்கள்.

  உச்சத்திற்கு முன்னேறுவதாக கனவு காணுங்கள். உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல் என்பதைப் போல உயர்ந்த எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு தூரம் உயரமாக முன்னேற வேண்டுமென்று நினைக்கிறோமோ அந்த அளவு எண்ணத்தை அதிகமாக வளர்த்துக் கொள்ளுங்கள். முன்னேறுவதற்குரிய வாய்ப்புகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்

  • வெற்றி பெற்றதைப் போல மனதிலே படம் வரைந்து கொள்ள வேண்டும்

  நீங்கள் யாரைப் போல வளர வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அவரைப் போல வரைப்படத்தை மனதிலே வரைந்து கொள்ளுங்கள். இதற்கு உங்களின் கற்பனை வளத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றி முகம் நோக்கி உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • இலக்கினை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்

  அந்த இலக்கினை நோக்கி முன்னேற நாளை என்ன செய்ய வேண்டும். அடுத்த வாரம் என்ன செய்ய வேண்டும். அடுத்த மாதம் என்ன செய்ய வேண்டும். அடுத்த வருடம் என்ன செய்ய வேண்டும் என்பதை எழுதிக் கொள்ளுங்கள். எழுதி வைத்துக் கொண்டபடி திட்டமிட்டு முன்னேறுங்கள். இலக்கு இல்லாத வாழ்க்கை வெற்றி பெறாது.

  • நேர்மறையான தன்னம்பிக்கை தருகின்ற ஊக்கத்தை தருகின்ற உற்சாகத்தை தருகின்ற புத்தகங்களைப் படியுங்கள். ஒலி நாடாக்களைக் கேளுங்கள்

  தன்னம்பிக்கை தருகின்ற புத்தகங்களை படிக்கின்றபோதே பாதி ஜெயித்து விட்ட எண்ணம் உண்டாகும். நீங்கள் படிக்கும் செய்திகளும், கேட்கும் செய்திகளும் உங்களுக்குள் ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும், மன தைரியத்தையும், விடா முயற்சியையும், வைராக்கியத்தையும் உங்களுக்குள் வளர்க்கும். இந்த எண்ணங்கள் உங்களுக்குள் வளர்வதைக் கண்டு நீங்களே உங்களை ரசிப்பீர்கள்.

  • புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்

  ஒவ்வொரு நாளும் சுமார் 30 நிமிடங்கள் உங்களது மொழித்திறனை வளர்த்துக் கொள்ள புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளுங்கள். இந்தப் பழக்கம் வித்தியாசமாக எண்ணுவதற்கும் உதவும். வித்தியாசமான எண்ணங்களை உருவாக்கும் தன்னம்பிக்கையை வளர்க்கும்.

  • மனசாட்சிப் படி வாழ பழகுங்கள்

  உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள். உங்களை சுறுசுறுப்பாக்கிக் கொள்ளுங்கள்.  எதிர்மறை எண்ணங்களை உங்களை கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். மனம் என்ன சொல்கிறதோ அதன்படி உண்மையாக வாழுங்கள்.

  • பயனுள்ள வாழ்க்கை வாழுங்கள்

  கனவுகள் நனவாகும்படி வாழப் பழகுங்கள். உங்களின் வாழ்க்கைப் பாதையை நீங்களே மாற்றிக் கொள்ள முடியும். வெற்றி என்பது விபத்து அல்ல என்பதையும், அது கடினமான முயற்சியின் விளைவு என்பதையும் உணருங்கள். உங்கள் வாழ்வு உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

  • சறுக்கல்கள், தோல்விகள், சோதனைகள் உங்களின் முன்னேற்றத்தை தடுத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

  ஒருவரின் வாழ்க்கையில் வெற்றி, தோல்விகள் சகஜம். சறுக்கல்களும், சோதனைகளும் இயற்கையின் நியதி. இந்த தோல்விகளோ அல்லது சோதனைகளோ உங்கள் முன்னேற்றத்திற்கு ஒரு  முட்டுக்கட்டையாக அமையும். சோர்ந்து போய் விடாதீர்கள். உங்கள் மனோத்திடத்தின் மூலம் சோதனைகளை சாதனைகளாக மாற்றி முன்னேறவேண்டும். முயற்சிகளைத் தளர விடாதீர்கள். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக் கொள்ளுங்கள்.

  • உங்களையே முழுமையாக நம்புங்கள்

  நம்பிக்கைதான் வாழ்க்கை. நீங்கள் எதுவாக மாற நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறமுடியும். தாழ்வு மனப்பான்மையைக் கைவிட்டு என்னால் முடியும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். என்னால் முடியாவிட்டால் யாரால் இது முடியும். நானே செய்து முடிப்பேன் என்ற வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

  • வெற்றிக்கான குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். பாதையை மாற்றிப் பயணியுங்கள். வெற்றிப் பாதை எது என்று கண்டறியக் கூடிய திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். தெரிந்த பாதை தெரியாத பாதையை விட மேலானது.
  • வெற்றி அடைந்ததாகவே எண்ணிக் கொள்ளுங்கள்

  நீங்கள் செய்கின்ற முயற்சியில் வெற்றிக் கோட்டைத் தாண்டி விட்டதாகவும், வெற்றி கோப்பை பெற்று விட்டதாகவும் எண்ணத்தை பதிய வையுங்கள். மனதில் அது போன்று தோற்றத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்தப் பதிவு உங்கள் மனநிலையில்  ஒரு நல்ல  மாற்றத்தைத் தரும்.

  • மற்றவர்களை நேசிக்கவும். சேவை செய்யவும் பழகுங்கள்

  வாழ்க்கையின் உண்மையான ரகசியம் என்னவென்றால் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது தான். மற்றவர்களை மகிழ்ச்சியடைய செய்வதுதான் உண்மையான மகிழ்ச்சி ஆகும். எந்த வெற்றி மற்றவர்களைத் தலை நிமிரச் செய்கிறதோ அதுதான் உண்மையான வெற்றியாகும். மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்க முடியும்.  மற்றவர்களுக்கு கருணை காட்டி உதவும் போதும் மகிழ்ச்சியை உண்டாக்க முடியும்.  பெறுகிறவர்களுக்கும் அது மகிழ்ச்சியைத் தரும். தருபவர்களுக்கும் அது மகிழ்ச்சியைத் தரும். மற்றவர்களுக்கு சேவை செய்வதும், உதவி செய்வதும் மகிழ்ச்சியை உண்டாக்கும் என்றகருத்தை உங்கள் குழந்தைகளுக்கும் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் புரிய வையுங்கள்.

  • ஆபத்தானது என்று தெரிந்தும் துணிந்து செயல்படுங்கள் (Take Risk)

  ஒருவன் வெற்றி பெறுவதற்காக சில சமயங்களிலே ஆபத்தான முடிவு எடுக்க வேண்டியதாக இருக்கும். அதற்கு பயப்படாமல் முன்னேறுவதற்கு துணிந்து செயல்படுதல் தவறில்லை. தோல்வி வரும் என்று அஞ்ச வேண்டாம். வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருவதுண்டு. அபாயகரமான முடிவு பல நேரங்களில் மிகப்பெரிய வெற்றியைத் தருவதுண்டு.

  • ஒரு சுவாரசியமான மனிதர்களாக மாறுங்கள்

  உங்களுடைய புறத்தோற்றம் உங்களுடைய பேச்சு, பாவனைகள், நடத்தைகள், உடை, நடை இவைகளை மற்றவர்கள் விரும்பும் படியாக மாற்றிக் கொள்ளுங்கள். உடைகள் உங்கள் தோற்றத்தை எடுப்பாக எடுத்துக்காட்டும். சூழ்நிலைக்கேற்றவாறு நேர்த்தியாக உடைகளை அணியப் பழகுங்கள். ரசனையை அதிகப்படுத்த பழகிக் கொள்ளுங்கள். ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பது பழமொழி.

  • நண்பர்களை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்

  மற்றவர்களோடு மனப்பூர்வமான நட்போடு பழகுங்கள். வியாபார நோக்கோடு பழகாமல் ஆழமாகப் பழகுங்கள். உங்களின் அன்பும், நேசமும் மற்றவர்களை வசீகரிக்கும். உங்களோடு நட்பு பாராட்ட மற்றவர்கள் விரும்பும்படியாக பழக கற்றுக் கொள்ளுங்கள்.

  • யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்று வாசகத்தின்படி எல்லா ஊர்களும் நம்முடைய ஊர்களே. எல்லா மக்களும் நம் சொந்தங்களே என்று சமத்துவ எண்ணத்தோடும் பாசத்தோடும் சேவை உள்ளத்தோடும் பழகுங்கள். உங்களுக்கு மதிப்பு கூடும்.
  • எந்த நேரமும் கலகலப்பாக இருந்து கொண்டே இருக்க பழகுங்கள். உங்களைச் சுற்றி எப்போதும் மகிழ்ச்சி அலைகளும், ஆனந்த அதிர்வும் இருக்கட்டும். இருக்கும் இடத்தை கலகலப்பாக்குங்கள்.

  மகிழ்ச்சி ஒரு தொற்றுநோய். அது உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் பரவும்.  உங்களால் ஏற்படும் மகிழ்ச்சி அலையும் ஆனந்த அதிர்வும் உங்களை சுற்றியுள்ள அனைவருக்கும் பரவட்டும். மற்றவர்களை தன்பால் ஈர்க்கும் உங்களுடைய காந்த சக்தி உங்களை சுற்றி ஒரு வட்டத்தை உருவாக்கும். அப்போதுதான் எப்போதும் உங்களை சுற்றி 10 பேர் இருப்பார்கள்.

  இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு ஒரு புன் சிரிப்புக்கூட இல்லாமல் இருந்தால் நம்மைச்சுற்றி ஒருவரும் இருக்க மாட்டார்கள். நம்மை இருள் சூழ்ந்து  விடும். தனிமையைப்  போல ஒரு கொடுமை எதுவும் இல்லை.

  • எந்தக் கூட்டத்தில் இருந்தாலும் ஒரு ஏங்ழ்ர் போல உங்களைப் முதன்மைப் படுத்திக் கொள்ளுங்கள். எப்போதுமே முன் இருக்கையில் அமரப் பழகுங்கள். பின் இருக்கைக்கு போவதை தவிர்க்கப் பாருங்கள்.
  • உங்களுடைய உள் மனதினுடைய சக்தியை புரிந்து கொள்ளுங்கள்

  உங்களுடைய உள் மனதினுடைய சக்தியைப் புரிந்து கொண்டால் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கீறர்கள் என்று பொருள். உள் மனது பலமானது ஆச்சரியமானது.  பல அற்புதங்களை அது நிகழ்த்தும்.

  • கவலைப்படுவதற்காக உங்கள் சக்தியை வீணாக்க வேண்டாம்

  கண்டதற்கெல்லாம் கவலைப்படும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். கவலைப்படுவதால் உங்கள் சக்தி வீணாகிறது. கவலைப்படுவதால் நடந்ததை மாற்றமுடியாது. முடிந்து போன நிகழ்வை கவலைப்படுவதால் மாற்றமுடியும் என்றால் கவலைப்படலாம். ஆனால் கவலைப்படுவதால் அந்த நிகழ்வை மாற்றமுடியாது. கவலையை விடுங்கள்.  உங்கள்  சக்தியை விரயமாக்க வேண்டாம்.

  மனக்கவலை ஒரு மிகப்பெரிய நோய். உங்களின் உற்சாகத்தை குறைத்து உங்களை முடக்கிவிடும். உச்சியில் நின்று உரக்க சப்தமிடும். உங்களை அது வீட்டு சிறைக்குள் அடைத்து விடும்.

  ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று வள்ளுவம் சொல்வதைப் போன்று துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல், அதை நினைத்து ஏளனமாக சிரிக்க பழகுங்கள்.

  • பயத்தை விட்டொழியுங்கள் நடப்பதெல்லாம் நல்லதாகவே முடியும்

  நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். நல்லது நடக்கும். தோல்வி பயத்தை முழுமையாக மனதை விட்டு நீக்குங்கள். நன்மை ஒன்றே எதிர்பாருங்கள், எதிர்பார்ப்பு எதுவோ அது நடக்கும்.

  மேலே சொன்ன வழிமுறைகள் ஒவ்வொருவரும் நீங்கள் பின்பற்றினால் உங்களுக்குள் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரும். மனதளவிலே ஏற்படுகின்ற இந்த மாற்றம் உங்களுக்குள் ஒரு ஆக்கபூர்வமான சக்தியை உருவாக்கும். அந்த சக்தி அளவிடற்கரியதாக இருக்கும். அந்த மாபெரும் சக்தி. உங்கள் உள்ளத்திலே ஒரு நெருப்பினை ஒரு தீ பொறியினை உண்டாக்கிக் கொண்டெ இருக்கும். அந்தப் பொறி உங்களுக்கு வழிகாட்டும் விளக்காக அமையும். அது இருட்டில் இருந்து உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். உயர்ந்த சிகரத்தினுடைய உச்சிக்கு இட்டுச் செல்லும். எப்பொழுதும் தளராத தன்னம்பிக்கை உங்களுக்குள் உருவாக்கும். உங்களின் சுயமதிப்பு நம்பமுடியாத அளவு உயரும். சுயமதிப்பு உயரும் பொது சமுதாயத்தில் உங்கள் மரியாதையும், மதிப்பும் அதிகமாகும்.

  இந்த இதழை மேலும்

  சிஜெல்லோசிஸ்

  வயிற்றுப்போக்குடன் சீதம் மற்றும் இரத்தம் கலந்து வருவது இதன் அறிகுறியாகும்.

  உயிரிகள்; காரணிகள்

  சிஜெல்லா என்பது கிராம் நெகடிவ் பேசில்லை. இக்கிருமி என்டிரோபோக்டிரியேசி (Enterobacteriaceae) என்கிற குடும்பத்தை சேர்ந்தது.

  நோய் பரவல் தன்மை

  • சிஜெல்லா உயிர்கள் உலகம் முழுவதிலும் பரவி மனிதர்களை தங்கும் இடமாகக் கொண்டுள்ளது.
  • ஆறு மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளை இது பாதிக்காது என்றாலும், இக்கிருமி குழந்தைகளைத்தான் அதிகமாகத் தாக்குகிறது.
  • குடும்பங்களல், பகல் நேரக் குழந்தை பராமரிப்பு இடங்களல், முதல்நிலை பள்ளகளல் திடீர் கிருமி பரவுதல் ஏற்படுகிறது.
  • உலகம் முழுவதிலும் குழந்தை இறப்பிற்கு முக்கியக் காரணம் சிஜெல்லோசிஸ் என்று கருதப்பட்டது.

  பரவுதல்

  • சிஜெல்லா உயிர்கள் மிகவும் அதிகமாக நோய்களைப் பரப்பக்கூடிய ஒன்று.
  • மனிதக் கழிவுகள் – கிருமி பரவுவதற்கான முக்கியக் காரணி, கழிவு – வாய் தொடர்பின் வழியாக.
  • சில சமயங்களல் உணவு, குடிநீர்  ஆகியவை கழிவுகளால் அசுத்தமாவதால் கிருமிகள் பரவும் காலம்.

  நோய்க்கிருமி பரவுதல்

  அறிகுறிகள் தொடங்கும் நேரம் முதல் 4 வாரம் வரை (சிகிச்சை எடுக்காத நபர்களுக்கு) பரவும் என்றாலும்  வயிற்றுப்போக்கு குறையும் (அல்லது) நிற்கும் போது குறைந்து விடும்.

  நோய்க்கிருமி தாக்கியபின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்காகும் காலம்  (incubation Period)

  1-3 நாட்கள் (ஒரு சில நேரங்களில் அதிகமான நாட்கள்).

  அறிகுறிகள்

  உணவுப்பாதையில் ஏற்படும் பாதிப்பினால் தோன்றும் அறிகுறிகள்

  • வயிற்றுப்போக்கு
  • வயிற்றுப்பிடிப்பு
  • வயிற்றுப்போக்குடன் சீதம் மற்றும் இரத்தம் கலந்து வருதல்
  • தண்ணீர் போல வயிற்றுப்போக்கு இரத்தத்துடன் கலந்து வருதல்

  மற்ற அறிகுறிகள்

  • காய்ச்சல் – காய்ச்சலினால் ஏற்படும் வலிப்பு
  • தலைவலி
  • உடல் சோர்வு

  கண்டறியும் முறைகள்

  மலத்தினை பரிசோதனை செய்தல் மூலம் கண்டறிதல்

  சிகிச்சை முறைகள்

  சரியான ஆன்டிபயோடிக் சிகிச்சையின் மூலம் அறிகுறிகளையும், கிருமிகளையும் கட்டுப்படுத்த முடியும்.

  அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்பட்டால் தனியாகவும், கிருமிகள் பரவாமல் இருப்பதற்கான பாதுகாப்பு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

  மலம் வெளியேறுவதைக் குறைக்கும் மருந்துகளைத் தவிர்த்தல் முக்கியமானது.

  ஏனென்றால், அது கிருமிகள் தாக்கும் காலத்தை அதிகப்படுத்தும்.

  பாதுகாக்கும் முறைகள்

  • நல்ல சுத்தம் மிகவும் அவசியம்.
  • கை கழுவுதல் மிகவும் முக்கியமானது.

  மிகவும் முக்கியமான பாதுகாப்பு முறை

  • சரியான கழிவறைகளை ஏற்படுத்தித் தருதல்
  • சுத்தமாக கை கழுவுதல்
  • சாப்பிடும் முன்பு சோப்பையும், மிதமான சூடுள்ள தண்ணீரைப் பயன்படுத்தி கையைக் கழுவுதல்
  • எந்தச் சூழ்நிலைகளல் சுத்த நடவடிக்கைகளைக் கடைபிடிக்க இயலவில்லையோ, அங்கே ஆன்டி பயோடிக் திரப்பி மூலம் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துதல்
  • உணவுகளைக் கையாள்பவர்களாய் இருந்தால் அவர்கள் கிருமிகள் அற்றவர்கள் ஆகும் வரை அவர்களைப் பணியிலிருந்து விலக்கி வைத்தல்.
  • மருத்துவர்களன் ஆலோசனைகளை அணுகுதல்.இந்த இதழை மேலும்

  வெற்றிக்கான காலங்கள்

  ஏப்ரல் மாதம் முடிந்து ‘மே’ மாதம் வந்துவிட்டால் பலருக்கும் மகிழ்ச்சிதான்.

  ‘மே’ மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கொடுத்துவிடுவார்கள். கல்லூரித் தேர்வுகளும் பெரும்பாலும் முடிந்துவிடும்.

  மொத்தத்தில் இளைஞர்களுக்கு விடுமுறைக் காலமாக ஏப்ரல், மே மாதங்கள் மாறிவிடுகின்றன.

  “இந்த வருஷம் பெரிய லீவுக்கு எங்கே டூர் போகிறீங்க?” என ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதை இன்றும் காணலாம்.

  “எஸ்.எஸ்.எல்.சி.யில் ஆரம்பித்த கஷ்டம் மூன்று வருஷமாய் தொடர்ந்து வந்தது. பிளஸ் 2 தேர்வு இன்று முடிந்துவிட்டது. இப்போதுதான் அந்தக் கஷ்டம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது” என பெருமூச்சு விடுபவர்களும் இருக்கிறார்கள். படிப்புக் காலத்தை சோதனைக் காலமாக எண்ணுபவர்களும் உண்டு.

  “எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 படிக்கும்போது மட்டும் தீவிரமாக படிப்பில் கவனம் செலுத்தினால் போதும், வெற்றி பெற்றுவிடலாம். அதன்பின்னர் மற்றநேரங்களில் படிப்புக்காக அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை” என்றும் சிலர் நினைக்கிறார்கள்.

  இன்னும் சிலர், “கல்லூரியில் 3 அல்லது 4 வருடங்கள் மட்டும் படிப்பில் கவனம் செலுத்தினால்போதும், வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக இருக்கலாம். வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகள் பெற்றுவிடலாம்” எனவும் முடிவுசெய்து செயல்படுகிறார்கள்.

  வேறுசிலர் சிறப்பாக செயல்பட வேண்டிய பருவம் டழ்ங் – ஓ.எ., க.ஓ.எ., மற்றும் ம.ஓ.எ. என்கிறார்கள். சிலர் “6, 7, 8 ம் வகுப்புகளில்தான் பிள்ளைகளை நன்கு கவனித்து படிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்” என்றும் சொல்லுகிறார்கள்.

  வெற்றிக்கான காலம் எது? வெற்றிக்கான காலத்தை யாராலும் எளிதில் முடிவு செய்ய முடியாது? ஏனென்றால் வெற்றியின் வடிவங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது.

  “பணம் இருந்தால் போதும். அதுவே என் வாழ்க்கையின் வெற்றி” என சிலர் நினைக்கலாம்.

  “மன நிம்மதிதான் வெற்றி வாழ்க்கைக்கு பக்கபலம்” என்றும் சிலர் எண்ணலாம்.

  “எப்போதும் சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் வெற்றி” என இன்னொருவர் யோசிக்கலாம்.

  இதனால்தான் வெற்றிக்கான காலத்தை யாராலும் தீர்மானம் செய்ய முடியாதநிலை உருவாகிறது.

  வாழ்க்கையில் உருவாகும் சின்னச்சின்ன வெற்றிகள்தான் வாழ்க்கை முழுவதும் கை நிறைய பணத்தையும், மன நிறைவையும், மன மகிழ்வையும் நமக்குத் தருகிறது. எனவே “வெற்றிக்கான காலம் இதுதான்” என ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சுட்டிக்காட்ட முடியாது.

  வாழ்க்கை முழுவதும் மனதில் வெற்றிக்கான எண்ணங்களை நிரப்பி வாழ கற்றுக் கொள்வது அவசியம்.

  பள்ளியில் படிக்கும் சுமார் 14 வருடங்களும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் 3 முதல் 8 ஆண்டுகளும் மட்டுமே படிப்பதற்கான காலம் என சிலர் தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

  உண்மையில் ‘படிப்பு’ என்பது வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும். பள்ளி, கல்லூரி படிப்புகளைப் போலவே ‘அனுபவ படிப்பும்’ மிக முக்கியமான ஒன்றாகும். இந்த அனுபவ படிப்புதான் ஒருவரின் சிறப்புக்கும் அடித்தளமாக அமைகிறது.

  “இந்த வருடத்தில் 10 மாதங்கள் தொடர்ந்து படித்துவிட்டேன். இனி 2 மாதங்கள் நன்றாக ‘ரெஸ்ட்’ எடுக்க வேண்டும்” என்று வீட்டில் ‘சும்மா’ சிலர் இருக்கலாம். வேறுசிலர் ‘டூர்’ என்று ஊர்சுற்றி வரலாம். உறவினர் வீடுகளுக்குச்சென்று உறவைப் புதுப்பிக்கலாம். கம்ப்யூட்டர், விளையாட்டு என்றும் கவனம் செலுத்தலாம்.

  விடுமுறையில் குதியாட்டம் போட்டு, எல்லை மீறி அலையும் மனதை சற்று கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

  “படிக்கும் நேரத்தில் நன்றாகப் படித்துவிட்டேன். இனி கட்டுப்பாடுகள் எனக்குத் தேவையில்லை” என்று எண்ணி விடுமுறைக் காலங்களில் சிலர் மனம்போல திரிகிறார்கள். டி.வி. பார்ப்பதில் மிக அதிக நேரம் செலவழிக்கிறார்கள். ஊர் சுற்றுகிறார்கள். தேவையில்லாத செலவை உருவாக்கும் பழக்கத்தையும் பழகிக் கொள்கிறார்கள்.

  விடுமுறைக் காலத்தை திட்டமிட்டு செலவழிக்கப் பழகிக் கொள்ளாதவர்களுக்கு பிரச்சனைகள் தானாக உருவாகும்.

  “லீவில் போரடிக்கிறது” என்று வீணான செயல்களில் ஈடுபட்டு வீணாகிப் போனவர்களும் உண்டு.

  “விடுமுறைக் காலம்” முழுவதும் வீணாக விளையாடி கழித்தவர்கள் இரண்டு மாத இடைவெளியில் படிப்புக்குத் தொடர்பில்லாத தேவையற்ற பழக்கங்களை பழகிக்கொள்வதால் வெற்றிக்கான ‘இடைவெளி’ அதிகமாகிவிடுகிறது. எனவே  தேவையான செயல்களுக்கு முன்னுரிமைக் (Priority) கொடுத்து செயல்படுவது முக்கியமான ஒன்றாகும்.

  “உங்களது திட்டத்தில் முன்னுரிமையான செயல்கள் இடம் பெறவில்லை என்றால், மற்றவர்களின் முக்கிய செயல்கள் உங்கள் திட்டத்தில் இடம்பெறும்” என்பது அறிஞர்களின் கருத்து ஆகும்.

  ஒரு புகழ்மிக்க ‘சிற்பி’ தனது சிலை வடிக்கும் திறமையால் நாட்டில் சிறந்து விளங்கினான். ஒருநாள் நாட்டின் மன்னர் அந்த சிற்பியை அழைத்தார்.

  “உங்களுக்கு வயது சுமார் 95 ஆகிறது. இந்த வயதிலும் நீங்கள் நாட்டின் சிறந்த சிற்பியாக விளங்குகிறீர்கள். சிலை வடிக்கும் திறமை உங்களுக்கு பிறவியிலேயே உருவானதா? அல்லது நீங்கள் ஏதேனும் சில நுணுக்கமான யுக்திகளைப் பயன்படுத்தி சிறப்பான சிற்பி என்னும் வெற்றி வாழ்க்கையை அடைந்தீர்களா? எனக் கேட்டார் மன்னர்.

  அதைக்கேட்ட சிற்பி அமைதியாகப் பதில் தந்தார்.

  “எனது வெற்றிக்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். மிகவும் கவனமாக எனது வேலையைச் செய்வதுதான் எனது சிறப்புக்குக் காரணம். நான் சுமார் 15 வயதில் சிலை வடிக்கும் வேலையைப் பழக ஆரம்பித்தேன். சிலையை உருவாக்கும்போது எனது கையிலுள்ள உளி மற்றும் கல் மீதுதான் கவனம் செலுத்துவேன். வேறு எந்த விதத்திலும் ‘கவனச் சிதறல்’ ஏற்படாமல் பார்த்துக்கொள்வேன். அப்போது நான் எதைப் பற்றியும் கவலைப்படவும் மாட்டேன். இப்போது மிகச்சிறந்த சிலையை உருவாக்குவது என்பது எனது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக மாறிவிட்டது. இதுவே எனக்கு மகிழ்ச்சியானதாகவும், விருப்பமானதாகவும், மனநிறைவைத் தருவதாகவும் அமைந்துவிட்டது. எப்போதும் எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இதுவே எனது வெற்றிக்குக் காரணம்” என்றார் சிற்பி.

  இது கதையல்ல. வாழ்க்கை வெற்றிக்கான வழிமுறை.

  எனவே உங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்குத் தகுந்த துறையை இளம்வயதிலேயே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் துறையில் வெற்றி பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்குங்கள்.

  விடுமுறைக் காலங்களில்கூட வெற்றிக்கு வழிவகுக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். அப்போதுதான் விடுமுறைக் காலங்கள்கூட வெற்றிக்கான காலமாக மாறும்.

  இந்த இதழை மேலும்

  தினம் தினம் தியானம்

  நாம் தரமான உணவைத் தரமாக செரிக்கும்படி பார்த்துக் கொண்டால் நமக்கு திடப் பொருளிலிருந்து சக்தி கிடைக்கும். நாம் நம் தாகம் மற்றும் உடல் குளியலை சரியாக பார்த்துக் கொண்டால் நமக்கு நீரிலிருந்து ஆற்றல் கிடைக்கும். நம் உடலின் வெப்பத்தை முறையாகக் கையாண்டால், நெருப்பின் ஆற்றலை நாம் சரியாகப் பயன்படுத்துவோம். பிராணயாமத்தைக் கடைபிடித்தால் காற்று சக்தியை நாம் முழுமையாகப் பயன்படுத்த முடியும். அதுபோலவே, முறையான தியானப் பயிற்சி மூலம் நாம் ஆகாச சக்தியை முழுமையாக உள்வாங்க முடியும். இதில் விசேஷம் என்னவென்றால், திடப்பொருள், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாசம் ஆகிய  ஐந்து  பூதங்களில் ஆகாச சக்தியே அதிகமான ஆற்றலை நமக்கு அள்ளக் கொடுக்கும்.

  அதிகமாக திடப்பொருள் சக்தியை நம்பி வாழ்ந்தால் நாம் பொருளயல் சார்ந்த உலகை அதிகமாக நம்பியிருக்க வேண்டும். அதுவே ஆகாச சக்தியைக் கிரகித்துக் கொள்ளும் நுட்பத்தைக் கைகொண்டால், நமக்கு நாமே, நமக்குள்ளேயே, நமக்கான சக்தி தேவையைப் பார்த்துக் கொள்ள முடியும். எது பரவாயில்லை என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

  தியானம் என்பது நாம் இதுவரை வௌப்புறமாக ஐம்புலன்கள் (கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல்) வழியே உயிர்ச்சக்தியைச் செலவாக்கம் செய்து வருவதை குறைத்து, உள்முகமாகத் திருப்புதலாகும். இதனால், நாம் நம் உயிரையும், அதன் படற்கைத் (நிழலான) தன்மையான மனதையும் மற்றும் உயிரும் மனதும் ஒன்றும்போது காணும் ஆத்ம தரிசனத்தையும் உள்ளுணர்வாக உணர முடியும். நம் உடலின் ஏழு ஆதார சக்கரங்களன் உயிர் சுழற்சியைத் தியானம் மூலம் உணர்ந்துகொள்ள முடியும்.  இந்த ஏழு சக்கரங்களுக்கும் நம் குணத் தன்மைக்கும் சம்பந்தம் உண்டு. நாம் தியானம் மூலம் அவற்றை ஒன்றுக்கொன்று இணக்கமாகவும், சமன்பட்டும் இயக்க முடியும். அப்படி சமன்படவில்லையாயின் அவற்றின் வேண்டாத குணத் தன்மைகள் நமக்கு கிடைக்கும். ஆக, இந்த இருவேறு நிலைகளைப் பற்றி நாம் இப்பொழுது பார்ப்போம்.

  அன்பு நண்பர்களே! முறையான யோக அமைப்பின் மூலம், குருவின் துணைகொண்டு தியானப் பயிற்சியைக் கற்றுப் பயின்று தினந்தோறும் தியானம் செய்து வந்தால், நம் உடல், உயிர், மனம் மற்றும் ஆன்ம நலம் மேம்படும்.  நம் உடல் ஆரோக்கியமாகும். நம் உயிர் விழிப்புணர்வு பெறும். நம் மனம் அழுத்தமில்லாதிருக்கும். நம் ஆன்மாவை தரிசனம் செய்ய முடியும். ஆன்ம தரிசனமே இறைநிலையோடு  தொடர்புகொள்ள இணைப்பு தரும். அன்பு நண்பர்களே! நாம் தியானம் பயிலவில்லையாயின் நம் ஏழு மையங்களன் எதிர்மறைத் தன்மைகள் அதிகப்பட்டு உலகியல் சேற்றுப் புதைக்குழிக்குள் சிக்குண்டு யாராவது வந்து தூக்கிவிட மாட்டார்களா என்று வெறுத்துக் கிடப்போம். சேற்றிலிருந்து மீள தியானம் உதவும்.

  இந்த இதழை மேலும்