March, 2015 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2015 » March (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  என் பள்ளி

  ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு உயர் பள்ளியில் 8ம் வகுப்பு 1964-65ல் படித்த போது என் வாழ்வின் இலக்குகள் படிப்பில் பட்டம் பெறவேண்டும்; வெளிநாடு சென்று வர வேண்டும்.

  சுமார் 50 ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கிறேன். என் சிறு வயது இலக்குகள், வாழ்வின் குறிக்கோள் என எல்லா நிலையிலும் நிறைவாக வாழ்ந்து வருவதற்குக் காரணம் சிறு வயது முதலே உள்ளத்திலே நன்கு பதிந்துவிட்ட நல்ல குணங்களும், அவைகளைப் பழக்கமாக்கியதும் தான்.

  சித்தோடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்தபோது ஒருமுறைபள்ளியிலிருந்து ஒருநாள் உல்லாசப் பயணமாக லாரியில் அருகிலுள்ள ஈரோட்டுக்குச் சென்று காவிரியாறு பார்த்து, ராஜாராம் தியேட்டரில் சினிமா பார்த்து வந்தது நினைவில் உள்ளது.

  6ம் வகுப்பு படிக்கும்போது வகுப்பாசிரியை திருமதி. சரஸ்வதி துரைசாமி அவர்கள் கூறியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு மாமிச உணவு, டீ, காபி ஆகியவைகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டேன்.

  இன்றும், என்றும் அவரைப் பற்றி எங்கும் சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

  1965ல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களும் பங்கேற்றோம். அப்போது பள்ளி மாணவர் தலைவனாயிருந்த சி. லோகநாதனுடன் கடைசிவரை இருந்து, ஒன்றாகவே பள்ளிக்குத் திரும்பினோம்.

  11ம் வகுப்பில் ஆங்கில ஆசிரியர் திரு. வெங்கட்ராமன் நடத்திய ஆங்கில இலக்கணம் தான் இன்று தடையில்லாமல் பேசுவதற்கு அடிப்படை என்றால் மிகையாகாது.

  விஞ்ஞானப் பாடம் நடத்திய திரு. விவேகானந்தன், சமூகப் பாடம் நடத்திய திரு. பொன்னுசாமி, தமிழாசிரியர்கள் திருவா. ஆறுமுகம் மற்றும் சிவராமன் என எல்லோருமே குடும்ப உறுப்பினர் போல் பழகினர். இன்றும் தொடர்பில் உள்ளனர்.

  பள்ளிப் படிப்பில் T. சண்முகசுந்தரம், L. பாலமுருகேசன் மற்றும் நான் என கடும்போட்டி. எதிர்பாராத விதமாக 1968ல் பள்ளி இறுதித் தேர்வில் 458 / 600 எடுத்து முதலிடம் பெற்றது என்றும் மகிழ்ச்சியையும், என்னால் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தை இன்றும் வழங்கிக் கொண்டே இருக்கிறது.

  என் பெற்றோர் இருவருமே பள்ளிக்கல்வி இல்லாதவர்கள், படிப்பில் நான் தான் முதல் தலைமுறை. என் உடன் பிறந்தவர்களிலும் நான் மட்டுமே ஈரோடு சிக்கைய மகாஜன கல்லூரி சென்று PUC  வகுப்பு படித்தேன்.

  ஈரோடு நகரவை காமராஜ மேல்நிலைப் பள்ளியில் மகன் கமல் 10ம் வகுப்பு தேர்வில் கணக்கில் 100% மார்க் வாங்கியதும், மகள் யோகதா கோவை நிர்மலா கல்லூரியில் B.Sc.Plant Biotech-ல் யுனிவர்சிட்டி ரேங்க் பெற்றதும் விதை விதைத்தவன் அதன் விளைச்சலை அறுப்பான் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகும்.

  டாக்டராக வேண்டுமென்ற ஆசை. அதனால் தான் PUC-யில் நேச்சுரல் சயின்ஸ் படித்தேன். D+ மதிப்பெண் பெற்றும், வழிகாட்டுதலும், பொருளாதார வசதியும் இல்லாததால் மருத்துவராக மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழந்தேன். ஆனால், இன்று மருத்துவம், மக்கள் தொடர்பு, யோகா எனப் பல பட்டங்கள், பட்டயங்கள் தபால் மூலம் முடித்து, பெயருக்குப் பின்னால் M.A.,B.A.,BGL.,PGDPR,PGD Yoga,DMT,DHYN,DAC,D.Accu என A to Z எழுத்துக்களின் எண்ணிக்கையைவிட அதிகம் பெற்று, பலரும் பல நோய்களிலிருந்து முழுமையாக குணமாகி, டாக்டரய்யா என்று நன்றி கூறும் நிலையில் உள்ளேன். இதனால் பெறும் மனநிறைவு வேறு எதிலுமே இல்லை என உறுதியாகச் சொல்கிறேன்.

  திருமணத்தின் போது 9ம் வகுப்பு பாஸ் செய்திருந்த என் மனைவி திருமதி முத்துலட்சுமி இன்று பல மருத்துவப் பட்டயப்படிப்புகள் முடித்து டாக்டராகிவிட்டார். அவரால் உடல், மன நோய்களிலிருந்து விடுபட்டவர்கள் ஏராளம். அவர் டாக்டர் நான் கம்பவுண்டர் என்று சொல்வேன்.

  உயர்நிலைப் பள்ளியில் கற்று, வாழ்க்கையில் பழக்கமாகிக் கொண்ட அதிகாலை எழுதல், தண்ணீரில் குளித்தல், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, படிப்பில் கவனம், பெரியோருக்கு மரியாதை, உறவினர்களிடத்தில் அந்நியோன்னியம், காலம் தவறாமை, எளிய வாழ்க்கை பேராசைப்படாதது, மற்றவர்களுக்கு உதவுவது, சட்டத்தை மதிப்பது என்ற இதுபோன்ற பல நல்ல பண்புகள் தான் இன்றும் என்னை 15 வயது மனமுள்ள இளைஞனாகச் செயல்பட வைத்துக் கொண்டுள்ளன.

  பள்ளியில் நடித்த யார் படித்தவர்? என்றநாடகம் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. மதுப்பழக்கம் கொடியது என்பதை வலியுறுத்திய அந்நாடகத்தில் கதாநாயகன் வேடத்தில் நடித்தது பெரும் வாய்ப்பாகும். பல போட்டிகளிலும் கலந்து கொண்டேன்.

  PUC படிக்கும்போதே தவளை, கரப்பான் பூச்சிகளை சோதனைக் கூடத்தில் வெட்டுவது, மாமிச உணவு சாப்பிடாத எனக்கு அருவெறுப்பாக இருந்தது. சோதனையாக B.Sc.Zoology தான் கிடைத்தது. B.Sc.Chemistry கிடைக்கவில்லை. B.A.Economics-க்கு மாற்றி ஒருநாள் பாடத்திலேயே பட்டப்படிப்பைத் தொடரவில்லை என எழுதிக் கொடுத்து  TC  வாங்கிவந்தேன்.

  PUC படிக்கும்போது வீட்டிலிருந்து 5 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று வருவேன். தன்னைப் படிக்க வைக்கவில்லையே என்றbஉணர்வில் ஒருநாள் காலை என் சைக்கிளை மறைத்து வைத்த என் அண்ணனை சமாதானப்படுத்தி, சில நாட்களில் பெற்றோர் பெற்றுத் தந்ததும் பசுமையாக நினைவில் உள்ளது.

  தமிழ்நாடு அரசு வணிகவரித் துறையில் சுமார் 38 1/2 வருடங்கள் பணிபுரிந்து 2009 சூன் மாதம் உதவி ஆணையர் நிலையில் நேர்மையானவர் என்றபெயருடன் பணியை நிறைவு செய்தேன்.

  சங்கப் பொறுப்புகளில் உண்ணாவிரதமிருந்து 1981ல் ஒருமாத காலம் கோவை மத்திய சிறையில் வாழ்ந்தது அரிய வாய்ப்பு என்றே மகிழ்கிறேன்.

  ஜேஸி இயக்கத்தில் ஏழு ஆண்டுகளில் கற்றவைகள், பெற்றநண்பர்கள் இன்றும் என்னுடன் உள்ளனர்.

  மனவளக்கலையில் 1987 முதல் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதுடன் கற்பிக்கும் ஆசிரியராகவும் இருப்பது மனநிறைவைத் தருகிறது.

  சென்னை Dr. அண்ணாதுரை, கோவை Dr. கிருஷ்ணசாமி, மும்பை Dr. தேவேந்திரவோரா எனப் பலரிடமும் பயின்றதால் இன்று மருத்துவம் சார்ந்த பல புத்தகங்கள் எழுதி, ஆலோசனைகளும் வழங்கி வருகிறேன்.

  தன்னம்பிக்கை இதழின் வாசகர்வட்டங்களைத் தமிழ்நாட்டின் பல நகரங்களில் ஆரம்பித்து, சுயமுன்னேற்றப் பயிலரங்களை மக்களுக்கு மாதம் ஒருமுறை இலவசமாக நடத்தி வருவது, ஜேஸியில் பெற்ற பயிற்சியாளர் தகுதியின் வெளிப்பாடுதான்.

  நோய் தீர்க்கும் முத்திரைகள் என்றபுத்தகம் தமிழ், ஆங்கிலம், கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. 30 புத்தகங்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

  தங்கப்புதையல், விரும்பும் வாழ்க்கை விரல் நுனியில், உங்கள் நலம் உங்கள் கையில், வாழ்க்கை உல்லாசப்பயணம், உறவிலே தெளிவு, ஒளிமயமான எதிர்காலம், சட்டைப்பையில் சந்தோசம், நீங்களே சாதனையாளர் உட்பட பல தலைப்புகளில் அனைத்து பிரிவினருக்கும் தனிமனித, சுயமுன்னேற்றபயிற்சிகளை வழங்கி வருவதை, சமுதாயக் கடமையாகவே விரும்பிச் செய்கிறேன்.

  2008 முதல் 2 ஆண்டுகட்கு ஒருமுறை  11ம் வகுப்பில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தி ஆசிரியர்களை கௌரவித்து நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் உருவாக்கி வருகிறேன்.

  இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் சென்று வந்துள்ளேன். ஏப்ரல் 2015ல் அமெரிக்காவுக்கு மகன் கமல் அழைப்பின் பேரில் 5 மாத காலப்பயணம் செல்ல உள்ளேன்.

  அங்கும் தமிழ் சங்கங்கள், மனவளக்கலை மன்றங்கள், பல தமிழ் குடும்ப குழுக்களிடையே பேசும் வாய்ப்பும் வரிசையில் காத்துள்ளன.

  என் பலம் என் அம்மா பவுனம்மாள். நான் என் வாழ்க்கைத் துணை முத்துலட்சுமிக்கு பலம். மகள் யோகதா ஈரோட்டிலும், மகன் கமல் அமெரிக்கா சியாட்டிலிலும் இப்போது சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். 2 பேத்தி, ஒரு பேரன் என எங்கள் குடும்பம் இடையூறின்றி இன்பமாக அமைதியாக வாழ்க்கைப் பயணத்தில் சென்று கொண்டுள்ளதற்கு அருட்பேராற்றலுக்கு நன்றிகள்.

  இந்த இதழை மேலும்

  பயப்படாதே

  பயம் ஒரு விலங்கு போல நம்மை அறிவற்றதன்மையாக மாற்றிவிடுகிறது. நம்முடைய சிந்தனைக்குத் தடையாக முயற்சிக்க முட்டுக்கட்டையாக மூடநம்பிக்கைக்கு மூலமாக உண்மையை மறைக்கும் திரையாக இருக்கிறது.

  “உலகத்தில் மனித முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது பயம் தான். பயத்திலிருந்து விடுதலை அடைவதே உண்மையான லட்சியமாகும்” என்கிறார் தாகூர்.

  பயமே முன்னேற்றத்தின் முட்டுக்கட்டையாக நிற்கிறது. பழக்கவழக்கங்களுக்கு அடிமையாக இருப்பது பயமே!

  பரம்பரையாக வந்த பழக்கங்களை எப்படி விடுவது? வழி வழி வந்த வழக்கங்களைக் கைவிடுவது எவ்வாறு? இந்த பயத்தினால் தான் அறிவற்றப் பழக்கவழக்கங்களை உதறித்தள்ள முடியாமல் தவிக்க வேண்டி இருக்கிறது.

  அதனால் நம் முன்னேற்றம் தடைபடுகிறது. அறிவு வளர்ச்சி குன்றுகிறது. சிந்தனையும் செயலும் ஒடுங்குகிறது.

  எங்கு மனதிலே பயமின்றி தலைநிமிர்ந்து நிற்க முடிகிறதோ, எங்கு சிந்தனை சுதந்திரமாகச் செயல்படுகிறதோ, எங்கு ஓய்வற்ற முயற்சி உயர்வைக் காட்டுகிறதோ அங்குதான் வெற்றி பெறமுடியும்.

  இவ்வுலகம் தோன்றியதில் இருந்து எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் பிறந்து வாழ்ந்து இறந்து போய் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலரை மட்டும் நாம் நினைவில் வைக்கிறோம். போற்றுகிறோம். காரணம் என்ன?

  உண்டு உறங்கி, மாண்டு போவதில் எந்த உயர்வும் இல்லை. விலங்கினங்கள் கூட இப்படித்தானே மடிகின்றன.

  அப்படியானால் நமக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடு இல்லையா? விலங்கு போன்ற வாழ்வுதான் நமக்கு அமைய வேண்டும்? செயற்கரிய செயலைச் செய்யும் அளவுக்கு உடலைப் பெற்ற நாம் அதனுடைய பயனைப் பெறவேண்டாமா?

  கரும்பின் ருசி அதன் இனிப்பான சாறாகும். அந்தச் சாறு இல்லை என்றால் அது வெறும் சக்கையாகும்.

  உடம்பினால் உழைக்க முடியும் என்ற உறுதி ஏற்படும் பொழுது பயம் அகன்று போய்விடும். உடம்பு என்ற கரும்பில் இருந்து வெற்றி என்ற சாற்றைப் பிழிய முடியும்.

  வெற்றியைப் பெற தவறிவிட்டால் நாளடைவில் நம் உடம்பு சாறு வற்றிய கரும்பு போல ஆகிவிடும். உடம்பை வருத்தாமல், உழைக்காமல் உயர்ந்துவிட முடியாது. உழைப்பு தான் உயர்வு தரும்.

  அழிந்து போகக்கூடிய உடம்பு, மண்ணோடு மண்ணாகிப் போகும் உடம்பு என்று எல்லாம் கூறினாலும் கூட, உடம்பு இல்லாமல் நம்மால் எந்தச் செயலையும் செய்ய முடியாது.

  அதனால் தான் உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்கிறார் திருமூலர். வைரக்கற்கள் எங்கிருந்து தோண்டி எடுக்கப்பட்டாலும், எந்தக் காலத்தில் பட்டை தீட்டப்பட்டாலும் அதன் மதிப்பு குறைவதில்லை.

  வைரத்தின் மதிப்பு அதன் ஒளிவீசும் தன்மையால் தான். அது ஒளிந்து கிடந்த சுரங்கத்தால் அல்ல! உடம்பினால் ஒன்றும் செய்ய முடியாது என்பதில்லை. உடம்பைக் கொண்டு செயல்படும்பொழுது வெற்றி பெற முடியும்.

  முயற்சியும் கொள்கைப்பிடிப்பும் இல்லாவிட்டால் எப்படி முன்னேற முடியும்? நம்முடைய வெற்றியை எப்படிப் பறை சாற்றமுடியும்?

  “மனிதனே, மலைத்துவிடாதே! எட்டாத வானத்தில் பறக்கும்படி உன்னைக் கேட்கவில்லை. பூமியில் புழுவாய் நீநெளிய வேண்டாம். மனிதனாக நிமிர்ந்து நட” என்பது தான் உபநிஷத்தின் முக்கியக் கருத்தாகும்.

  முன்னேற வேண்டும் என்ற ஆசை இருந்தால் ஒளியுள்ள எதிர்காலத்தை உருவாக்க முடியும். உள்ளே இருக்கும் சக்தியை உணர்ந்து கொள்ள இயலும்.

  உலகை வியக்கச் செய்த பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை, மரபை எல்லோரும் அறியும்படிச் செய்யும் ஆற்றல் நமக்கு இருக்கிறது. அந்த ஆற்றலின் சக்தியை உணர்ந்து கொண்டால் எப்படியும் வெற்றியைப் பெற்றுவிட முடியும்.

  தங்கம் எடுக்க வேண்டுமென்றால், பூமியை ஆழமாகத் தோண்டத்தான் வேண்டும். நாம் உயர்வதற்கு நோக்கத்தை முதலில் வைத்து அந்த எல்லையை அடைய முயற்சி செய்வது முக்கியம்.

  நோக்கம் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது திக்குத் தெரியாத காட்டில் பயணம் செய்வது போலாகும். குறிக்கோள் இல்லாது கெட்டேன் என்கிறார் அப்பரடிகள்.

  செயலைச் செய்து இருப்பதோடு எந்த அளவு நாம் முயற்சி செய்திருக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். சரியானவை தானா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

  எந்தப் பணியை எவ்வளவு திருத்தமாகச் செய்கிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியமே அடங்கியிருக்கிறது.

  இந்த இதழை மேலும்

  வரலாற்றில் ஒளிவீசும் தைரியத் திலகங்கள்

  வாழ்வில் துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள்தான் நமக்கு போராடும் எண்ணத்தைத் தருகிறது. ஒருவரின் மன தைரியத்தின் அளவுதான் அவர்களது வாழ்வு விரிவடைவதையோ, சுருங்கி விடுவதையோ தீர்மானிக்கிறது.

  சிக்கலான தருணங்களில் வலி, வேதனை, ஆபத்து, பயம் யாவற்றையும் எதிர்த்து நிற்கும் திறனே தைரியமாகும். இடர்பாடுகளை பயமின்றி சந்திக்கத் தயாராகும் மனதைரியம் லட்சியத்தை வென்று முடிக்கிறது. ‘ரிஸ்க்’ எடுக்க போதுமான தைரியம் இல்லாதவர்கள் வாழ்வில் என்றும் எதையும் செய்து முடிப்பதில்லை. வேகமாக பாய்ந்து ஓடும் நீரில் செத்த மீன் கூட எளிதாக மிதந்து செல்லலாம். ஆனால், எதிர்நீச்சல் போட்டு செல்ல வேண்டும் என்கிறஇலக்கிற்குத் தான் உறுதியும் முயற்சியும் தைரியமும் தேவை.

  தைரியம் என்கிறநெருப்புதான் வாழ்வின் இடர்களை பொசுக்கி சாம்பலாக்குகிறது. தைரியம்தான் நம்மை எதிரியிடம் புறங்காட்டி ஓடாமல் போராடச் செய்கிறது. படை வலிமையைவிட வெற்றிக்கு முதலிடம் வகிப்பது போர் வீரனின் தைரியமே. பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு அவர்களது தைரியம்தான். தைரியமிக்கவர்கள் சவாலை ஏற்றுக் கொள்கிறார்கள். அழுது புலம்புவதில்லை. புதிய பாதையில், வித்தியாசமாக சிந்தித்து, சிக்கலான சவால்களை வெல்கிறார்கள். தான் செய்த தவறைஒத்துக்கொள்ளும் வருந்தும் தைரியம் ஒருவருக்கு இருந்தால் அந்த தவறு மன்னிக்கப்படக் கூடியதே.

  நம்மைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடியும் நல்ல விடியலுக்கான வாய்ப்புகள். சவால்களற்ற வாழ்க்கை சுவையற்ற உணவைப் போன்றது. விறுவிறுப்பில்லாத திரைப்படம் போன்றது. மன தைரியம் இல்லாதவர்களால் எந்த ஒரு விஷயத்தையும் எதிர்கொள்ள முடிவதில்லை. சங்கராபரணம் பாடினால் தைரியம் வரும் என்கிறார்கள். தன்னம்பிக்கையின் மறுபெயர் தைரியம். கோழையாக பல ஆண்டுகள் வாழ்வதை விட வீரனாக ஒரு நாள் வாழ்வதே மேலானது என்பர். நம் தந்தைதான் நமக்கு தைரியத்தைத் தருவது. உண்மையை உரக்கச் சொல்லும் தைரியம் பலருக்கும் இருப்பதில்லை. மனஉறுதி உடையவர்களே நிமிர்ந்து நிற்கிறார்கள்.

  நிலவில் முதலில் காலடி வைத்தவர் ஆம்ஸ்ட்ராங்க். அவரது துணிச்சல் வெற்றியின் அடையாளமாகும். நிலவில் முதலில் காலடி வைத்திருக்க வேண்டிய ஆல்டிரின் அரிய வாய்ப்பை தைரியமின்மையால் தவறவிட்டார். பகைநாட்டின் ராணுவ ஊடுருவலை, ஆக்ரமிப்பை தடுக்கும், எதிர்க்கும் தைரியம் தாய்நாட்டு வீரர்களுக்கு, குடிமக்களுக்கு எப்போதும் தேவை. எதுவும் அழிந்து போவதில்லை. ஆனால் மாறும். மாற்றம் ஒன்றேமாறாதது. காலத்திற்கேற்ப மாறாதது எதுவும் நிலைப்பதில்லை. பல நேரங்களில் எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று நொந்து கொள்பவர்கள் எப்போதாவது பல மகிழ்ச்சியான தருணங்களில் எப்படி இது சாத்தியமானது என சிந்தித்து பார்ப்பதில்லை. மனம் நிறைவடைவதில்லை.

  தைரியம் என்பது விழாமல் போராடியவர்கள் பற்றியல்ல, வீழ்ந்தும்  போராடி எழுந்தவர்களையே குறிக்கிறது. உங்கள் இலட்சியத்தை தைரியமாக பின்தொடரும்போது உங்கள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். இவ்வுலகில் நாம் எதையும் தைரியமின்றி சாதிக்க முடியாது. பத்தோடு பதினொன்றாக, கூட்டத்தில் ஒருவராக நிற்பது எளிதானது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல ஆற்றலும் தைரியமும் தேவை. நாம் கலங்குவதற்கு கண்ணீர் சிந்துவதற்கு சில சூழலைத் தரும் வாழ்வுதான் நாம் புன்னகைப்பதற்கு, மகிழ்வதற்கு பல வழிகளைக் காட்டி இருக்கிறது. நான் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றேன், பெரிய கட்டிடத்தைக் கட்டி முடித்தேன். பெரிய நிறுவனத்தை உருவாக்கி விட்டேன் என்பதல்ல அற்புதம். அதை நம்பிக்கையுடன் தைரியமாக தொடங்கிய முதற்படியே அற்புதமான தருணமாகும்.

  நாம் எதிர்த்து போராடும்போதெல்லாம் எப்போதுமே வெற்றி பெறுவதில்லை என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் எதிர்த்தே நிற்கவில்லையெனில் நாம் நிச்சயம் தோல்வியடைவோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. நம்மில் எல்லோருக்குமே திறமையில் தனித்தன்மை நிச்சயமாக உள்ளது. இருளடைந்த, சிக்கலான, எதிர்பாராத, தருணங்களில், உடனடியாக தைரியமாக முடிவெடுத்து யாரொருவர் தலைமை தாங்குகிறார், வழி நடத்துகிறார் என்பதுதான் தைரியம். பயமும், தைரியமும் இரட்டை சகோதரர்கள். சில நேரங்களில் தீமையை வெல்வதைவிட, எதிர்த்து நிற்பதே மிக முக்கியமானதாகி விடுகிறது. வரலாற்றில் மிகப்பெரிய தலைவர்கள் பல துறைகளில் நின்றார்கள். நிற்கிறார்கள். ஏனெனில் அதுவே சரியானதாகும். தீமைகளைக் கண்டு எதிர்த்து நிற்கும் போது அவை பின்வாங்கி ஓடுகின்றன. அப்படி துணிவுடன் நிற்பவர்களை அதைரியப்படுத்தி நாம் இருக்கிறஇடத்திற்கு அவர்களை இழுக்கக் கூடாது.

  சூழ்நிலை புயலில் சிக்கிக்கொண்ட பலரது அழகிய வாழ்க்கை கப்பலில்  உடைந்து சிதறி இருக்கிறது. தோல்விகள் வாழ்வில் சாதாரணமானது. அது தரும் பாடம் நமது வாழ்க்கையை அழகாக்குகிறது. போராட்டமே இல்லாத வாழ்வு வாழத் தகுந்ததாக ஒருபோதும் இருக்காது. வாழ்க்கை தைரியமற்றகோழைகளுக்கு மகத்தான இடம் தருவதில்லை.

  கிரேக்கத் தத்துவஞானி சாக்ரடீஸ் தனது கருத்துக்களை, நம்பிக்கைகளை கைவிடுவதற்கு, மாற்றிக் கொள்வதற்கு பதிலாக, அரச தண்டனையை சாவை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்ததால்தான் விஷக் கோப்பையை ஏந்தினார். சாக்ரடீஸ் போன்ற தைரியசாலிகள் உலக வரலாற்றில் மிகக் குறைவு.

  துணிவுடன் பிரிட்டனை எதிர்த்து அமெரிக்க புரட்சிக்கு தலைமை தாங்கிய ஜார்ஜ் வாசிங்டன் தான் பின்னாளில் அமெரிக்காவின் முதல் அதிபரானார். பேரலைகள் போல் வந்த எதிர்ப்புகளை  கண்டு அஞ்சாமல் தைரியமாக நின்று அடிமை முறையை ஒழித்தவர் அமெரிக்காவின் 16-வது அதிபர் ஆபிரகாம் லிங்கன்.

  அபாயங்களைக் கண்டு அஞ்சி அநீதிக்கு எதிராக, மௌனமாக பலர் இருக்கலாம். எதிர்த்து தைரியமாக குரல் கொடுக்கும் போதுதான் மார்டின் லூதர் கிங், நெல்சன் மன்டேலா போன்ற தலைவர்கள் உருவாகுகிறார்கள். சூழ்நிலையை மாற்றுகிறார்கள். ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து, வலிமை வாய்ந்த பிரிட்டிஷாரை காந்தியடிகள் அகிம்சை, சத்தியாகிரக வழியில் தைரியமாக எதிர்த்து போராடியதால்தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது.

  பெண்களும் ஆண்களுக்கு இணையான வீரத்தில் தாழ்ந்து போனதில்லை என்பதை வரலாறு உணர்த்தி இருக்கிறது. பிரிட்டிஷாருக்கு எதிராக சிவகங்கை ராணி வேலு நாச்சியார், பேகம் ஹசரத் மகால், ஜான்சி ராணி லட்சுமிபாய் போன்றோர் போராடியது விவேகத்துடன் கூடிய தைரியமாகும். தன் நாட்டின் மீது அவர்களுக்கு இருந்த நாட்டுப்பற்றும் தைரியமும்தான் அவர்களை ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு அரண்மனையில் முடங்காமல் போராட வைத்தது. சுதந்திரம், உரிமைக்கு அவர்கள் கொடுத்த விலை அவர்களது வாழ்க்கை.

  நாட்டை ஆளும் மன்னனாக இருந்தாலும் பாண்டிய நாட்டு மன்னன் அவையில் கையில் காற்சிலம்புடன் குற்றம் குற்றமே என்று உண்மைக்காக, நேர்மைக்காக துணிந்து தைரியமுடன் போராடிய கண்ணகி இலக்கியத்தில் போற்றப்படுகிறார். குழந்தைப் பருவத்தில் நோய் தாக்கியதால், குருடாகவும், செவிடாகவும், ஊமையாகவும் இருந்தே தீர வேண்டிய நிலையிலும், ஹெலன் கெல்லர் ஊனத்தையும் வெற்றி காண முடியும் என உலகுக்கு காட்டினார்.

  ஆசிட் தாக்குதலுக்கு ஆளான லட்சுமி என்ற இந்திய பெண் அமெரிக்காவின் மதிப்பு மிகுந்த சர்வதேச மகளிர்க்கான தைரியசாலி விருதினை பெற சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். டெல் பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்கு காத்திருந்த போது அவளது முகம் ஆசிட் வீச்சால் நிரந்தரமாக அகோரமாகி போனது. பொதுவாக ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பலர் சகஜ நிலைக்கு திரும்புவதில்லை. முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். வேலைக்கு போவதில்லை. வீட்டில் முடங்கி விடுகிறார்கள். பொது இடங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. ஆனால் ஆசிட் வீச்சுக்கு ஆளான லட்சுமி ஒளிந்து கொள்ளவில்லை. தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றினார். 27000 பேர்களிடம் கையெழுத்துப் பெற்று ஆசிட் விற்பனையை தடுக்க நீதி மன்றத்தில் மன உறுதியுடன் புகார் செய்தார். உச்சநீதிமன்றம் அதை ஏற்று, விசாரித்து, மத்திய, மாநில அரசுகள் ஆசிட் விற்பனையை ஒழுங்குப்படுத்த உடனடியாக உத்திரவிட்டது.

   இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி வங்கிகளை தைரியமாக தேசியமயமாக்கினார். பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா பெண் கல்விக்காக சற்றும் தயங்காமல் தைரியமாக தாலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்தார். அவரது மனித உரிமை போராட்டத்திற்கு தைரியத்திற்கு நோபல் பரிசு கிடைத்தது. உயிரை துச்சமாக நினைத்து தைரியமாக போராடுபவர்கள் பயத்தை வெல்கிறார்கள். ஈரம் இருக்கும் வரை மரத்தை விட்டு இலைகள் உதிர்வதில்லை. மனதில் தைரியம் இருக்கும் வரை மனிதன் தோற்பதில்லை. வாழ்வின் இடர்களை தைரியமுடன் எதிர்கொண்டால் நம் வாழ்க்கையும் நாளை ஒரு புத்தகமாகலாம். அநீதி கண்டு சிங்கம் போல் சீறி எழுந்தவர்கள் வரலாறு படைக்கிறார்கள். அவர்களது தைரியம் எப்போதும் மறக்கப்படுவதில்லை. எலி போல் வலைக்குள் பயந்து பதுங்கியவர்கள் புதைந்து போகிறார்கள். எவரெஸ்ட் சிகரத்தை மனிதனால் எப்படி தொட முடிந்தது? தைரியம் என்றமுதுகெலும்பு, வாழ்வில் மனிதனை நிமிர்ந்து நிற்க வைக்கிறது. முடிவெடுக்காமல் இருப்பதைவிட சில சமயங்களில் தவறான முடிவுகள் கூட மேலானதாக இருக்கிறது. தைரியத்திற்கு இணையான பொருள் உலகின் எந்த சந்தையிலும் இல்லை. தைரியசாலி காந்தக்கல் போல அனைவரையும் கவர்ந்து இழுக்கிறான். அவர்களது மகத்தான செயல்பாடுகளால் உலகமெங்கும் அவர்களது புகழ் பரவுகிறது. என்றென்றும், எப்போதும் மக்களை நன்றியுடன் நினைக்க வைக்கிறது.

  இந்த இதழை மேலும்

  நாளைய விடியலுக்கான நம்பிக்கைக் கதவுகள் திறக்கப்படும்!

  நேற்று வண்ணத்தோடும், எண்ணத்தோடும் போட்டி போட்டவன் மனிதன். கனவு வாழ்க்கையில் காணாமல் போனவன் நிஜத்தின் நிழலை நிராகரித்தவன். வாழ்க்கையோடு வாதிட்டவன். பூக்களோடு போரிட்டவன். காற்றோடு கராத்தை நடத்தியவன். இன்று காலசுழற்சியோடு கைகோர்த்து பொறுமை என்னும் பூவாடை அணிந்து சுதந்திரம் சுவாசித்து இப்பூமி பந்தில் வலம் வருகையில் இவன் எத்தனை மனிதரின இதயத்தை தொட்டு இருப்பான்? எத்தனை மனித உள்ளத்தில் ஒளியாய் வீசி இருப்பான்? இவன் வாழ்க்கை வழி நெடுக பயணத்தில் எத்தனை வசந்தங்களை தரிசித்திருப்பான்? இவனின் வாழ்க்கையில் வரலாறு வேண்டாம். வருங்கால சந்ததிக்கு இவன்  தொடுக்கும் நம்பிக்கை வெளிச்சம் மட்டுமே போதும்.

  ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஈர்க்கும் சக்தியாய், கவரும் காந்தமாய் இருப்பதையே ஆளுமை என்கிறோம். இதை ஆங்கிலத்தில் பெர்சனாலிட்டி என்போம். இதை “ஒரு மனிதனின் மொத்த பழக்கவழக்கங்களை மற்றவர் செய்யும் மதிப்பீடே அவரின் ஆளுமை” என்பார் சிலர். ஒரு மனிதன் மற்றவர்களுடன் இணைந்துசெயல்படும் போது காண்பிக்கும் வெளிப்பாடுகளின் மொத்த உருவமே ஆளுமை.

  இந்த ஆளுமையின் அளவுகோல் தான் என்ன? சுருக்கமாய் சொன்னால் எவர் ஒருவர் தன்னை மற்றவர்கள் முழுமையை ஏற்றுக்கொள்ளும் வகையில் செயல்படுகின்றாரோ அவரே சிறப்பான ஆளுமை படைத்தவர் எனலாம்.

  நமது தாய்த்திரு நாட்டின் தவப்புதல்வன் ஜவஹர்லால் நேரு அவருடைய தங்க நிகர் நிறமும் உயர்ந்த தோற்றமும் எவரையும் கவரும். நேருவையொத்த நேருவிற்குப் பின் பிரதமரானவர் லால்பகதூர் குள்ளமான உருவம், கவர்ச்சியற்றதோற்றம். இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்த மக்களின் மனங்களில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. எங்கும் ஒரு ஏளனப் பார்வை. இந்நிலையில் வந்தது இந்தியா பாகிஸ்தான் யுத்தம். நம் நாடு பெற்றமகத்தான வெற்றி சாஸ்திரிக்குப் பேரும் புகழையும் சேர்த்துக் கொடுத்தது. அங்குள்ள மனிதனின் உயர்ந்த திறனுக்குச் சரியான சான்றாக அமைந்தது அந்த வெற்றி, செய்திப் படங்களில் சாஸ்திரி வந்த போதெல்லாம் மக்கள் காட்சிய அலட்சியப்பாங்கு, ஆரவாரத்துடன் கூடிய அங்கீகாரமாக உருவெடுத்தது.

  மேலும் ஒரு நிகழ்ச்சி. ஒரு பேச்சாளரின் வரவுக்காக பெரும் எதிர்பார்ப்புடன் கூடிய மாபெரும் கூட்டம். காலம் கடந்து கொண்டே இருக்கிறது. கூட்டத்தினர் பொறுமை இழந்துவிட்டனர். வந்துவிட்டார் வந்து கொண்டே இருக்கிறார்… என்றஅறிவிப்புகள் கூடியிருந்தோரின் எரிச்சலைக் கூட்டவே செய்தன. ஒரு வழியாக பேச்சாளரும் வந்துவிட்டார். எரிச்சலோடிருந்த கூட்டத்தினரின் கோபம் குறைவதற்குப் பதிலாக அதிகமாகிறது. வந்த பேச்சாளரின் தோற்றம் கூட்டத்தினரின் ஏமாற்றத்தை இருமடங்காயிற்று.

  இவருக்காகவா இவ்வளவு நேரம் காத்திருந்தோம் என்ற உணர்வு எங்கும் எழலாயிற்று. குழிவிழுந்த கன்னங்களும், பொலிவிழந்த தோற்றமும் வாளிப்பான வறுமைக்கு எடுத்துக்காட்டாய் அமைந்திருந்தது. கணுக்காலுக்கு மேல் ஏறிய காற்சட்டையும், கசங்கிய உடையும் அமைந்திருந்தது. அவரை அலங்கோலத்தின் அவதாரமாகக் காட்டின. அவர் பேசத் தொடங்கியதும் தங்களையே மெய் மறந்தனர். வந்தவரின் பேச்சாற்றல் கேட்போரை மெய்மறக்கச் செய்தது. பல மணிநேரம் பேசியவர், பேச்சை முடித்ததும் எழுந்த ஆரவாரம் முடியவே அதிக நேரமாயிற்று.

  இவ்வாறு தன் பேச்செனும் மந்திரத்தால் மக்களை மயங்கச் செய்தவர் “ஆபிரகாம் லிங்கன்” என்ற மாமனிதர். அவருக்கு அவருடைய உருவம் தராத ஆளுமையை அவருடைய பேச்சாற்றல் தந்தது தன் பேச்செனும் மந்திரத்தால் மக்களை மயங்கச் செய்தவர் “ஆபிரகாம் லிங்கன்” என்ற மாமனிதர். அவருக்கு அவருடைய உருவம் தராத ஆளுமையை அவருடைய பேச்சாற்றல் வழங்கியது. அவருடைய உடைகள் மேம்படுத்தாத ஆளுமையை அவருடைய பேச்சிலே நிலைத்த கருத்துக்கள் வாரி வழங்கியது.

  “உங்களுக்காக உணவு உண்ணுங்கள். ஆனால் மற்றவர்களுக்காக ஆடை அணியுங்கள்” என்பார் பிராங்ளின். “உங்களுடைய முகம் என்பது ஒரு புத்தகத்துக்கு ஒப்பானது. அதில் மனிதர்கள் பலவித விந்தையான செய்திகளைப் படிக்கிறார்கள்” என்பார் ஷேக்ஸ்பியர்.

  ஒரு மனிதன் முதலில் தன்னை விற்க வேண்டும். தன் வாழ்வில் அடையும் வெற்றி தோல்விக்கு அடித்தளமாக அமையும். இவ்வாளுமை நமக்கு எங்கிருந்து வருகிறது? நம்மை நிர்ணயிப்பவர்கள் நமது முன்னோர்கள். தாயைப்போல் பிள்ளை நூலைப் போல சேலை என்பார்கள். நமது உயரம், நிறம், முகத்தோற்றம், குணநலன்கள், உடல் வலிமை ஆகியவற்றைநமக்கு வழங்குபவர்கள் நம்முடைய முதாதையர்கள். நாம் வளரும் சூழ்நிலை நம்முடைய ஆளுமைத் திறனை பாதிக்கும்.

  நமது சமுதாயத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை வாழ்வில் நம் மதிப்பீடுகளை நிர்ணயிக்கும். பல்வேறு சந்தர்ப்பங்கள் ஒரு மனிதனின் மாறுபட்ட ஆளுமைத் திறனை வெளிப்படுத்த உதவும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமையை நாம் வளர்த்துக் கொள்ள முடியுமா? என்றால் முடியும். நிச்சயமாக முடியும். ஆளுமையை வளர்த்துக்கொள்ள சில துறைகளில் கவனத்தை ஆழமாய் செலுத்த வேண்டும். உடலியல், மன இயல், சமூகத் தொடர்புகள், நடத்தை இவைகளில் முழுக்கவனமாய் இருந்தால் ஆளுமையால் மேன்மை பெறலாம்.

  உடலியலை பொறுத்தவரை, உங்களின் தோற்றத்தை முடிந்தவரை அழகுடன் வைத்திருங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கைக்கொள்ளுங்கள். உடல் மற்றும் வாய்நாற்றம் இல்லாது பார்த்துக் கொள்ளவும். எல்லோரும் ஏற்புடைய உடல் பாவனைகளை மேற்கொள்ளல் நலம்.

  மன இயலை பொறுத்தவரை, நிறைந்த கற்பனை வளத்துடன் செயல்படுங்கள். மற்றவர்களை தூண்டுவிக்கும் அல்லது செயல்படுத்தும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளல் நமக்கு பயன் அளிக்கும். மற்றவர்கள் பேசுவதையும் செயல்படுவதையும் உற்றுக் கவனித்தாலே ஓராயிரம் கற்பனைகள் நமக்குள்ளே ஓடிவரும். நீங்கள் உங்கள் நினைவாற்றலோடு நீச்சல் அடிக்க வேண்டும். மற்றவர் தம் கருத்தை நாம் ஏற்றுக்கொண்டாலே நம் கருத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் தானே! உங்கள் அறிவின் ஆற்றலை விசாலப்படுத்தினால் ஆளுயர மாலைகள் உங்களுக்குச் சூட்டப்படும். நீங்கள் உற்சாக ஓடு நதியாய், தன்னம்பிக்கையின் தலைக்கவசமாய் மிளிர வேண்டும்.

  எவனொருவன் சமூகத் தொடர்புகளை விரிவாக்கிக் கொள்கிறானோ அவனுக்கு அதுவே சிகர சிம்மாசனம் ஆகும். பழகும் விதத்திலும் ஆற்றல் பெருக்கெடுக்கும்  அற்புதங்கள் உண்டு. பேச்சாற்றல் மிக்க மனிதனாய் நீ திகழ்ந்தால் உலகம் என்னை உச்சந்தலையில் கொண்டாடும். உங்களின் உரையாடும் திறனும் அதுவாய் ஒட்டிக் கொள்ளும். நீ பிறரைப் பாராட்டு, உனக்குப் பாராட்டு தட்டு தானாய் பறந்து வரும். மாற்றும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளல் ஒரு உன்னத கலை. நம் கருத்தை பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும்போது நாமும் அக்கருத்தை ஏற்றுக் கொண்டால் இதயத்தால் ஈர்க்கப்படலாம்.

  சகிப்புத்தன்மை என்னும் தாளக்கதியோடும், ஒற்றுமை என்னும் உயர்ந்த கோபுரத்தோடும் வாழப் பழகும்போது தித்திப்பூதேசம் வளமடையும். உதவும் கரமாய் நீயிருந்தால் ஓரணி ஒன்று உனக்காய் புறப்படும். மகிழ்ச்சி விழா நிகழ்ச்சி நிரலில் நீயும் சிரிப்பாய். பிரச்னைகளை நீயே உடை, திறந்த உள்ளமே அதன் அச்சாணி.

  ஒரு மனிதனின் நடத்தையே அவனின் வாழ்க்கை. எண்ணம், சொல், செயல் இவற்றின் பிரதி பிம்பமாய் நீங்கள் இருக்க வேண்டும். “நம்பிக்கைக்குரியவன்” என்று மக்களின் மனதில் பதிய வேண்டும். நேர்மையின் மூச்சாகவும், கடும் உழைப்பின் சிகரமாகவும், விடாமுயற்சியின் வேதமாகவும் இருக்கும்போது நாளைய விடியலுக்கான நம்பிக்கைக் கதவுகள் திறக்கப்படும்.

  ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது எந்த விஷயத்தில் உன் சிந்தனை மூழ்கி இருக்கிறதோ அந்த விஷயத்தில் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நீ நிபுணன் ஆகிவிடுவாய் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. மனிதன் தனக்கு என்ன வேண்டும் என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டிருக்கிறானோ அதை மட்டும்தான் அவன் பெற்றவனாக இருப்பான் என்பது உறுதி.

  இவ்வாறு ஒருவர் தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளல், தோற்றப் பொலிவு, பேச்சுக்கலை இன்னும் பல சேர்ந்த மொத்தக் குறியீடே ஆளுமைப்பண்பு. எந்த ஒரு மனிதனையும் மற்றவர்கள் எடைபோட 7 (ஏழு) நொடிகள் மட்டுமே பிடிக்கின்றன. ஆளுமைப் பெறுவோம் – சிகரத்தின் சிம்மாசனம் தொடுவோம்.

              உன் தலையைப் புகழலால் அலங்கரி

              மகுடங்களில் அலங்கரிக்காதே

              ஏனென்றால்

              மகுடங்கள் தலைமாறக் கூடியவை

              உன் நெற்றியை சிந்தனையால் அலங்கரி

              திலகத்தால் அலங்கரிக்காதே

              ஏனென்றால்

              திலகம் கலையக் கூடியது

  என்று கவிக்கோ அப்துல் ரஹ்மான் இப்படிச் சொல்வார்.

             நீ உன்னை உன்னால் அலங்கரி

             பொன்னால் அலங்கரிக்காதே

             மரணக் காற்றில்

             ஒரு விளக்கைப் போல்

             அணைந்து போகாதே!

             ஓர் ஊதுவத்தியைப் போல்

             கொஞ்சம் நறுமணமாவது

             விட்டு விட்டுப்போ!

              உன் சாவில் சாம்பலை அல்ல

              நெருப்பை விட்டுச் செல்!

              மண்ணில் ஒரு காயத்தை அல்ல

              ஒரு மருந்தை விட்டுச் செல்!

  என்றவரிகளை வாசிக்கும்போது “வாழ்க்கையில் உன்னை அர்த்தப்படுத்து” என்று எழுதியதாக எனக்குப்படுகிறது.

               தெரிந்து கொள்

               உன்னைப் பிரசவிப்பது

               உன் பெற்றோர்கள் அல்ல

               நீ தான் உன்னைப்

               பிரசவித்துக் கொள்ள வேண்டும்

               வாழ்க்கை என்பதே உண்மையில்

               மனிதன் தன்னைத் தானே

               பிரசவிக்க முயலும் முயற்சிதான்.

               இந்த உலகத்திற்கு நீ வெறும்

               வெள்ளைத் தாளாகவே வருகிறாய்

               அதில் நீதான்

               உன்னை எழுதிக்கொள்ள வேண்டும்

               சிலர் இந்தத் தாளில் கிறுக்குகிறார்கள்

               சிலரோ படிக்கப்பட்ட பின்

               குப்பைக் கூடையில் எறியப்படும்

               கடிதமாகிறார்கள்

               சிலரோ வெற்றுத் தாளாகவே

               இருந்துவிடுகிறார்கள்

               சிலர் மட்டுமே

               காலத்தால் அழியாத

               கவிதையாகிறார்கள்

               எச்சரிக்கை…

               உன்னை நீயே எழுதிக்கொள்

               இல்லையென்றால்

               நீ பிறரால்

               எழுதப்பட்டுவிடுவாய்!

               பெற்றோர் இட்ட பெயர் அல்ல

               உன் பெயர்

               அது ஒரு வண்ணான் குறி

               மேகத்திலிருந்து மழையைப் போல

               மலரிலிருந்து மணத்தைப் போல

               உன் பெயர்

               உன்னிலிருந்து உதிக்கட்டும்

               மீண்டும் சொல்கிறேன்

               உன்னை நீயே தான்

               பிரசவிக்க வேண்டும்

               ஆளுமை பண்பை அர்த்தப்படுத்து!

               வாழும் காலத்தை வளப்படுத்து!

               சிகர சிம்மாசனத்தில் நிலைப்படுத்து!

  இந்த இதழை மேலும்

  படித்தால் பெரியாளாகி விடுவாய்

   ஒரு நூலகம் கட்டுதல் என்பது காடமைப்பதற்கு சமம். காடு தோறும் வளர்ந்த மரங்களைப்போல் நூலகம் நிறைந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் சிந்தனையின் விதைகளைத் தாங்கிக் கொண்டுள்ளதைப் படிக்கப் படிக்கவே உணரமுடியும். படித்தலில் கிடைக்கும் அறிவு சாதுர்யம் மிக்கது. படித்தலில் வரும் தெளிவு வாழ்வை மிளிரவைக்கத் தக்கது. படிப்பவரால் தான் மனதுள் ஊக்கத்தை விதைத்துக் கொள்ளமுடிகிறது. நிறையப் புரிந்து ஆழ்ந்து சிந்தித்து சட்டென தெளிய படிப்போரால் முடிகிறது.

  நடுத்தரத்தன்மையை மனதுள் நிலைக்கச் செய்தல் படித்தலால் கைவரப்படுவதை தொடர்ந்து படிப்போரால் அறியமுடிகிறது. விதைத்தால் விளையும் நிலம்போல படிப்பினால் உதிக்கும் ஞானம் வெளியெங்கும் நன்மையின் வெளிச்சத்தைப் பரவச்செய்யும். மகிழ்ச்சியை எதுவென்று அறியக்கூடிய அறிவுக்கூர்மையை படிப்பு மேம்படுத்தும். அதன்பொருட்டாக ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சிந்தித்து நாம் தாள்களை புத்தகங்களை கண்டறியும் முன்னரே ஓலையில் எழுதத் துவங்கிய நமது முன்னோர்களையும் நாம் எடுத்துணர வேண்டும்.

  படித்தலின் இன்றியமையாமையைப் பின்னோர் அறிய ஓலையிலேனும் எழுதிவைத்துச்சென்ற முன்னோர்களின் பிரயத்தனத்திற்கு முன் புத்தகங்களை அடுக்கிவைத்துக் கொண்டு அதைப் பிரிக்காமலே கடந்து சென்றுவிடும் நாம் நம் நிகழ்கால நன்மையினை தொலைப்பதோடு மட்டுமில்லாது எதிர்காலப் பிள்ளைகளுக்கான வாழ்வியலையும் மாற்றியமைக்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டிய கட்டாயமுள்ளது.

  படிப்பு என்பது வெறும் புத்தகத்தில் படிப்பதில் மட்டுமில்லை; வாழ்க்கையின் சிறப்புகளை மனிதர்களின் மூலமும், தீமையின் நன்மையின் விளைவுகளை அளவிட்டுப் பார்ப்பதிலும், நடப்புகளை அதனதன் போக்கில் அதனதனை கவனித்து வருவதன் மூலமும், இயற்கையை அகக்கண் திறந்து பார்ப்பதிலும், உள்ளே உற்றுநோக்கி நோக்கி வெளியை இயக்கப் பழகுவதிலுமென, “படிப்பென்பது அசைவதிலும் அசையாததிலுமாய் ஏகமாக இருந்தாலும், அந்த மொத்த படிப்பினைக்கான முதலுரத்தை இடுவது புத்தகங்களே”.

  புத்தர் வாசித்த ரிக் வேதத்திலிருந்து தான், காற்றுவழி உள்ளே பயணித்து கல்லுக்குள்ளும் இருக்கப்பெரும் கடவுளின் சக்தியை அறியமுடிந்தது. ஆய்ந்து ஆய்ந்து அறிவதற்கான முதல் புள்ளி புத்தகங்களிலிருந்து நமக்கு எளிதாக கிடைத்துவிடுகிறது. உலகம் முழுதும் சுற்றிவந்து எல்லா ஊரிலும் மண்ணெடுத்து அதை மொத்தமாக கலந்து அதிலிருந்து ஒரு பிடி மண்ணெடுத்து அந்த ஒரு பிடிக்குள் இந்த ஒய்யார உலகத்தைப் பார்க்கக் கிடைப்பதற்குச் சமம்தான் சங்கிலி வழியாக வந்த உலகளாவிய மொத்த அறிவும் ஏதோ ஒரு புத்தகத்தினுள் அடங்கிப் போதலும்.

  அத்தகையப் புத்தங்களை அடுக்கிவைத்திருக்கும் ஒவ்வொரு அகமும் அறிவு விளக்கேற்றும் கோவிலின்றி வேறில்லை. நூலகத்திலிருந்து உருவான நிறைய மேதைகள் நம் நாட்டிலுண்டு, வெளிநாடுகளிலும் உண்டு. இவ்வுலகம் ஒரு புள்ளியில் அடங்கத்தக்கது எனும் நம்பிக்கை நமக்கெல்லாம் எவ்வளவு வலிமையானதாக உள்ளதோ, அதேயளவு இந்த ஒரு பிறப்பின் அறிவினுள்ளோ அல்லது ஒரு பிறவியின் காட்சிக்குள்ளோ அடங்கிப்போவதும் கூட இல்லை இந்த உலகு. அத்தனையத்தனை அற்புதங்களை இயற்கை காணுமிடமெல்லாம் அடக்கி வைத்திருக்கிறது.

  அண்ணாந்துப் பார்க்கும் வானத்திலும், அளந்திட இயலாது வியந்துநோக்கும் கடடமும் வேறென்ன சூழ்ச்சுமத்தின் ஈர்ப்பிலிருந்துவிடும் நமக்கெல்லாம்? கடலைப் பார்க்கையில் ஏதோ ஒரு தாய்ப்பாசம் போல மதிப்பும், அதேநேரம் எத்தனை எத்தனை மர்மங்களை அடக்கிக்கொண்டுள்ள பயமும் நமக்கு வராமலில்லையே? வானத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் எல்லையை அறியவில்லையே? பூமியைச் சுற்றிச் சுற்றி வருகிறோம் மொத்தத்தையும் காணவில்லையே? அதெல்லாம் ஏன் அத்தனைக் கோடான கோடி மர்மங்களும், வியப்புகளும், நடப்புகளுமென எல்லாம் சூழ்ந்துள்ள இப்பிரபஞ்சத்தின் ஒரு சிறிய புள்ளிதான் நாம். நாம் அத்தனையையும் ஒரு கையில் அடக்கிக் கொள்ளும் முடுச்சிகளின் மூலத்தை அறிவதெனில் நம் கையினுள்ள பல புத்தகங்களைப் படித்துணருவதால் அது முடியும்.

  எனவே வெற்றிகளின் மூலத்தை, தோல்வியில் தாங்கும் பக்குவத்தை, தோல்வியை வென்றெடுக்கும் தந்திரத்தை, வெற்றி தோல்வியின் சரிசமத்தை இப்படி அனைத்தையும் கொஞ்ச கொஞ்சமாக வாழ்வின் நகர்விற்கேற்ப படித்தறிய நம்மால் இயலுமெனில் அதற்கு பேருதவியாய் அமைவதே நூலகங்கள்.

  நூலகங்களைப் பயன்படுத்தப் பழகுங்கள். தெருவின் ஓரத்தில் ஒரு மாங்காய் மரம் வளர்ந்து நான்கு மாங்கணி கைக்கெட்டும் தூரத்தில் தொங்கினால் பறித்துண்ணவும், எட்டாத உயரத்தில் இருந்தால் கல்லெறியவும் அறிவிருக்கும் நமக்கு; கால்நடக்கும் தூரத்திலுள்ள அறிவுக் கோயில்களான நூலகங்களை அவ்வப்பொழுது அணுகி பயன்படுத்திக் கொள்ளும் எண்ணம் ஏன் பொதுவாய் எல்லோருக்கும் இருந்திருக்கவில்லை?

  சினிமாவிற்குப் போகவும், பூங்காவிற்கு சென்று விளையாடவும், மாலைநேரத்தில் சிற்றுண்டிக் கடைகளுக்குச் சென்று செலவிடவும் முடிகிற நாம் நம் பிள்ளைகளுக்கு இலவசமாக திறந்து வைத்துள்ள நூலகத்திற்குச் செல்வதையும் இன்றியமையாததாக எண்ணி பழக்கவேண்டும். படிப்பதை புத்தகத்தின் வழியேவும் நம் பிள்ளைகளுக்கு நாம் சிறுவயதிலிருந்தே பழக்கித் தரவேண்டும். புத்தகம் என்பது அலமாரியில் வைத்துக்கொள்ள பிறரால் தரப்படும் பரிசுப்பொருளாக மட்டும் பிள்ளைகள் அறிந்து வைத்துக் கொள்ளாதிருக்க அவைகளை படித்துணரும் பழக்கத்தையூட்டி, இலக்கிய அறிவை பெருக்கி, கலையின் கலாசாரத்தின் சாரம்சங்களை முன்னெடுத்து, நாளைய தலைமுறையின் இன்றைய முன்னுதாரண பிறப்புகளாகவே நாம் வாழயிருக்கிறோம் என்பதை அறிவுணர சொல்லித்தர வேண்டும்.

  எதையும் கற்று அலசி ஆய்ந்து உலகின் நன்மைக்கென ஆலோசித்து சிறந்ததை ஏற்று வருத்தத்தையும் இன்னலையும் தீர்க்கத் தக ஆற்றலை, ‘படிப்பதன்மூலமும் வளர்த்துக் கொள்ள முடிவதை’ ஒவ்வொரு வளர்ச்சியின் இடையிலும் புகட்டி பிள்ளைகளை நாம் நடைமுறை அறிவோடு வளர்க்க வேண்டும்.

  நேற்றைய வரலாற்றைக் கண்டு இன்றைய காலத்து வாழ்க்கையை நிமிர்த்திக் கொள்ள புத்தகங்கள் உதவும் என்பதை அறியத்தரும் முதல்புள்ளி நமது வளர்ப்பிலும் வார்த்தையிலுமே உள்ளது.

  ஒவ்வொரு நூலகத்திற்குள்ளும் ஆயிரமாயிரம் மனிதர்களின் கதையும் வாழ்வும் ஏக்கமும் இழப்பின் சுவடுகளும் கொட்டிக்கிடக்கிறதென்பதை நம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி பழக்கிவிட்டால், அடுத்தநாள் நூலகம் தேடி அவர்களாகவே போவார்கள்.

  நல்லதை அதன் விளைவோடு அறிந்து, தீயதை அதன் விளைவோடு எச்சரிக்கையுறும் அளவிலுணர்ந்து தனை செதுக்கி செதுக்கி சுதந்திரப் பிறவியாக இம்மண்ணில் நம் குழந்தைகள் வளம்வர படிப்பினை உதவும் என்பதை எடுத்துச் சொல்வது பெற்றோராகிய நமது கடமையாகவே முன்னிற்கிறது.

  அரிசி விளையும் ஒவ்வொரு விளைநிலத்தின் ஈரத்திலும் ஒரு விவசாயியின் வியர்வையினுடைய ஈரம் மட்டுமில்லை, கண்ணீரும் சுடச்சுட இருக்கிறது. இனிக்கும் பழங்களுக்குள்ளே அந்தத் தோட்ட முதலாளியின் சிரிப்பும் வேலைக்காரனின் அழுகையும் ஏக்கமும் நிறைந்துகிடக்கிறது. விண்ணளந்து நிற்கும் அத்தனை கட்டிடங்கள் அழகழிய வீடுகள் என ஒவ்வொரு கல்லுக்குள்ளும் ஒரு கதை வதை வாழ்க்கை கொட்டி அடைக்கப் பட்டிருக்கிறது. அதுபோல் கோடானகோடி கேள்வியும் பதிலுமாய் அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்குப் பின்னேயும் ஒரு படைப்பாளியின் கண்ணீரும் கவலையும் அழுகையும் ஏக்கமும் வலியும் உறுத்தலும் நிராசையாய் உரைந்துப்போயுள்ளது. அவைகளையெல்லாம் துடைப்பதற்கு நாம் படிக்கவேண்டும். இதோ உன் அழுகை எனது சிரிப்பிற்கான பாதையைக் காட்டியுள்ளது பாரென்று அவர்களுக்குக் காட்டவேண்டும். நீ செலவிட்ட நேரத்தில் நான் எனது அறிவுக்கண்ணை திறந்து கொள்வேன் கவலையுராதே என்று நம்பிக்கையூட்ட வேண்டும்.

  புத்தகங்களை அடுக்கியுள்ள நூலகத்திற்கு ஆயுதபூசையன்று பொட்டு வைப்பதோடு நில்லாமல் அவைகளின் கனம் உணராமலிருக்கும் அறிவு நோக்கி ஒரு செல்லக் குட்டு வைத்துக்கொள்வோம். குட்டு வலித்த இடத்திலிருந்து இனி நூலகத்திற்கான கதவுகள் வெகுவாய் திறக்கட்டும். புத்தகங்களின் ரசிக்கத்தக்க உள்பக்க நறுமணத்தைப் போல நம் வாழ்க்கையும் செம்மையுற்று நல்லெண்ணத்தின் மணம் இனி உலகெங்கும் பரவலாய் வீசட்டும்.

  புத்தகதிற்குப் பின்னேயும் நூலகங்களின் பின்புறமும் நின்றழும் படைப்பாளிகளின் கண்ணீரை நம் படிக்கும் பழக்கத்தைக் கூட்டிக்கூட்டி மெல்ல துடைப்போம். அவர்களின் சிரிப்பினால் இச்சமூகம் தெளிந்த சமூகமாய் அறிவு மிளிரும் மனிதர்களோடு கூடியதாய் அமையட்டும்.

  புத்தகங்கள் வாழ்க.. அச்சிடுவோர் வாழ்க.. எழுதுவோர் வாழ்க.. எழுதியதை எடுத்தடுக்கி காத்து நூலகமமைத்துத் தருவோர் வாழ்க.. படிப்போரும் படிக்க பள்ளிக்கூடம் அமைத்தோரும் வாழ்க.. எல்லோரும் படித்து, விடுதலையைப் பெறும் அறிவோடும் தரும் அறிவோடும் இருந்து ஒவ்வொரு உயிரும் சிறந்தோங்கி’ நன்னிலந்தோறும் நலமே நலமே விழையப் பெறுக.

  இந்த இதழை மேலும்

  யாரிடம் வேலையை ஒப்படைப்பது

  செய்வானை நாடிவினை நாடிக் காலத்தோடு

  எய்த உணர்ந்த செயல்

  செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து செய்யும் செயலையும் ஆராய்ந்து செய்யத் தகுந்த காலத்தோடு பொருந்தி செயலைச் செய்ய வேண்டும்.

  அன்பறிவு தேற்றம் அவாவின்மை இன்நான்கும்

  நன்குடையான கட்டே தெளிவு

  அன்பு, அறிவு, தெளிவு, பேராசை இல்லாமை என்னும் இந்த நான்கு குணங்களும் நன்றாக கொண்டவனையே செயலுக்கு உரியவனாக தெளிய வேண்டும்.

  “ஒருசூழ்நிலையை எப்படிவெற்றிகொள்வது என்பதுதெரிந்திருக்க வேண்டும். சூழ்நிலைகள் தேவைக்கேற்ப மாற வேண்டும் என எதிர்பார்க்காமல் அணுகுமுறைகளை சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றிக் கொள்வது தான் சூழ்நிலைமைக்கேற்ப தலைமைப் பண்பு. நொடியில் ஏற்படும் சமயயோஜிதம் தான் சூழ்நிலைக்கேற்ற தலைமைப் பண்பு. இருப்பதை வைத்து சிறப்பாக செயல்படுவது தான் சூழ்நிலைக்கேற்ற தலைமைப் பண்பு.

  – மஹாத்ரயா

  பொதுவாக நம்மில் பலர் ஒரு வேலையை அல்லது செயலைத் தானே செய்யும் பேர்வழி என்ற விதத்தில் அந்த வேலையைத் தானே செய்யும் பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.

  வேலை பற்றிய மிகக்குறைந்த பட்ச அடிப்படை அறிவும், மிகக்குறைந்த அளவு அனுபவமும் பெற்று இருந்தாலும் கூட தானே அந்தச் செயலைச் செய்யும் திறமை படைத்தவர்களாக தங்களை பறைசாற்றிக் கொண்டு முன்நிறுத்திக் கொள்கிறார்கள்.

  அனுபவமே இல்லாதவர்களும், அடிப்படை அறிவும், திறமையும், நுணுக்கமான தொழில்நுட்ப அறிவும் இல்லாதவர்கள் கூட, தானே அந்தப் பணிக்கு முன்வந்து அந்தச் செயலைச் செய்ய முற்படுகிறார்கள். இது மிகவும் தவறானதாகும்.

  சீக்கிரம் முடியக்கூடிய அளவில் உள்ள ஒரு சாதாரண சின்ன வேலையாக இருந்தால் அவர்கள் செய்வதில் தவறில்லை. ஏனென்றால் அதனால் வரக்கூடிய இழப்புகளும், பாதிப்புகளும், பின்விளைவுகளும் மிகக்குறைவாகவே இருக்கும். இதை எளிதாக தாங்கிக் கொள்ள முடியும்.

  செய்யப் போகிற பணி அல்லது செயல் நுணுக்கமான அறிவு தேவைப்பட்டதாக அல்லது தொழில்நுட்பம் சார்ந்ததாக அல்லது ஒரு நிபுணத்துவம் தேவைப்பட்டதாக அல்லது துறை சார்ந்த அனுபவம் வேண்டுவதாக இருந்தால் அப்பணியை அத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களே செய்ய வேண்டும்.

  ஒரு சாதாரண பணி என்று சொல்ல முடியாமலும் ஒரு நிபுணத்துவம் தேவைப்படும் பணி என்று சொல்ல முடியாமலும் இடைப்பட்ட நிலையில் அமைந்துள்ள பணிகள் தான் நம்மை சிரமத்துக்கு உள்ளாக்குகின்றன. ஏனெனில் அதில் நாம் நிபுணர்களை பயன்படுத்த யோசிக்கிறோம். நாமே செய்துவிட்டால் என்ன? என்ன ஆகிவிடப்போகிறது என்று எண்ணுகிறோம். இதன் பலனாக இழப்பை சந்திக்கிறோம்.

  ஒரு சட்ட சம்பந்தமான பணியாக இருந்தால் அதை சட்ட நிபுணர்தான் செய்ய வேண்டும். ஒரு கணக்கு தாக்கல் செய்யக்கூடிய வரி சம்பந்தமான பிரச்சனை என்றால் ஒரு ஆடிட்டரைத் தான் அணுக வேண்டும். நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால் ஒரு டாக்டரிடம் தான் செல்ல வேண்டும். ஒரு பத்திரப்பதிவு சம்பந்தமான பிரச்சனை என்றால் அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் தான் ஆலோசனை தர முடியும். இதைப்போன்று எலக்ட்ரிசியன், கார்பெண்டர், பிளம்பர், மெக்கானிக், டிசைனர்ஸ், டெக்கரேட்டர்ஸ், பேங்க் சம்பந்தமான பணிகள், ரியல் எஸ்டேட் மற்றும் இன்வெஸ்டர்ஸ் போன்ற பணிகளில் அந்தத் துறை சார்ந்தவர்கள் மட்டுமே செய்ய முடியும். தானே செய்யும் பேர்வழி என்ற வகையில் அந்தத் துறையைப் பற்றி அடிப்படை அனுபவமும் இல்லாதவர்கள் அந்தப் பணியை செய்ய முயல்வது என்பது தனக்குள்ள ஒரு குறைந்த அறிவை வைத்துக்கொண்டு ஒரு சட்ட யோசனை சொல்வது போலவும், தனக்குத்தானே மருந்து எடுத்துக் கொள்வது போலவும் தவறானது.

  இப்படிச் செய்வதால் மிகப்பெரிய அளவிலான இழப்பும் மோசமான தோல்வியையும் வருந்தக்கூடிய வகையிலான துன்பத்தையும் உண்டாக்கும். அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் மிகப்பெரிய அளவிலும் இருக்கும். அந்தச் செயலின் முடிவு, முழுமையானதாக இருக்காது. சரியான தீர்வாகவும் இருக்காது.  திருப்தியும் தராது. மீண்டும் அதைத் திருப்பிச் செய்யக்கூடிய சூழல் உண்டாகும். இதனால் பண நஷ்டமும், மனக் கஷ்டமும் உண்டாகும். அரைமணி நேரத்தில் முடிய வேண்டிய வேலை ஆறு நாட்களுக்கு இழுக்கும். அரைகுறையாகவும் முடியும். இதனால் பொன் போன்ற நேரம் வீணாகிறது; விரையமாகிறது. இழப்புகள் மட்டுமல்லாமலும் ஆபத்துக்களும் அதிகமாகும். வேலை சரியாக முடியுமா? முடியாதா? என்ற எதிர்பார்ப்பும் முடியாவிட்டால் மனக்கவலையும் ஏமாற்றமும் உண்டாகும். தேவை இல்லாத பதற்றமும், படபடப்பும் ஏற்படும். பிரச்சனைகள் முடிவதற்கு பதிலாக மீண்டும் அதில் சிக்கல்கள் அதிகமாக உண்டாகும் வாய்ப்பு ஏற்படும். செய்த வேலையை மீண்டும் செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். இதனால் நேரமும் அதிகமாகும். இரட்டிப்பு செலவும் உண்டாகும். அரைகுறை வைத்தியன் ஆயிரம் பேரைக் கொல்வான் என்பதைப் போல ஆபத்தில் முடியும்.

  நிபுணத்துவம் தேவையான பணிகளை நிபுணர்களை நியமிப்பதால் அவரிடம் பணியை ஒப்படைப்பதால் பணத்தையும் நேரத்தையும் சேமிக்க முடியும். மனக்கவலையையும், தோல்விகளையும் அநாவசியமான பதற்றங்களையும் மற்றும் படபடப்புகளையும் முழுமையாக தவிர்க்க முடியும். பணச்சுமையும், மனச்சுமையும் இல்லாமல் போகும். என்ன நடக்குமோ என்ற பயம் இருக்காது. பணி முழுமையாக முடியும். பலன் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுக்கும். பணவிரயத்திற்கு பதிலாக பண வரவு அதிகரிக்கும். சரியான முழுமையான திருப்தி தரக்கூடிய தீர்வாக அது அமையும்.             நிபுணத்துவம் பெற்றவர்களின் சேவையை பெறும்போது நாம் அவர்களுக்காக செலவு செய்யும் தொகையைவிட பெறுகிற பலன் அதிகமாக இருக்கும். ஒரு வல்லுனரை பணிக்கு நியமித்த பின்பு நாம் அதில் தலையிடுவதும், யோசனை சொல்வதும் தவறான வழிமுறையாகும். அந்த செயலைப் பற்றி மேலும் செய்திகள் தேவைப்பட்டால் அந்த நிபுணர்கள் உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.

  ஒரு திறமையான டாக்டர் ஒரு குறிப்பிட்ட நோய் குறித்த சந்தேகங்களை தன் சக டாக்டரிடம் ஆலோசித்து அறிவுரை பெற்றுக் கொள்வதைப் போல, நிபுணர் தன் சந்தேகங்களை இன்னொரு சக நிபுணர்களிடம் ஆலோசித்து அறிவுரை பெற்றுக் கொள்வார். உங்களிடம் ஆலோசனையும் அறிவுரையும் பெற்றுக் கொள்ள மாட்டார்.

  நிபுணர்களை அதற்குரிய பணியில் நியமிக்கும்போது மிகப்பெரிய பலன் உங்களுக்கு உண்டாகும். என்ன முடிவு வருமோ எப்படி முடிவு இருக்குமோ என்ற எதிர்பார்ப்பிலிருந்தும், பதற்றத்திலிருந்தும் பெரிய கவலையில் இருந்தும் உங்களை முழுமையாக விடுவிக்கும். நிபுணருக்குரிய பணியை கொடுப்பதுதான் உங்கள் வேலை. முடிவு சரியா வருமா? வராதா? என யோசிப்பது அந்த நிபுணரின் வேலை. மன அழுத்தமும், மனக்கவலையும், பதற்றமும் இனி அவருக்குத்தான். அதற்காகத்தான் நீங்கள் அவரை பணியில் அமர்த்தியிருக்கிறீர்கள்.

  உளவியல் தத்துவஞானி வில்லியம் ஜேம்ஸ் அவர்கள், “ஒருமுடிவு எடுத்த பின்பு பணிதொடங்கிய பிறகு எல்லாப் பொறுப்புகளையும், கவலைகளையும், எதிர்பார்ப்புகளையும், மன அழுத்தங்களையும், பதற்றங்களையும் முழுமையாக நீக்கிவிடுங்கள். முடிவு வரும் வரை அதைப்பற்றிதிரும்பத்திரும்ப நினைக்க வேண்டாம். கொஞ்சம் கூட சந்தேகம் கொள்ள வேண்டாம். முழுமையான நம்பிக்கையை நிபுணர்மேல் வையுங்கள். உங்கள் முழு நம்பிக்கையையும் அவருக்குத் தெரியப்படுத்துங்கள் என்று சொல்கிறார்.

  கவலைகள் இருப்பின் அது நிபுணருடையது. நீங்கள் ஓய்வெடுங்கள். அமைதியாயிருங்கள். நம்பிக்கையோடு இருங்கள். இனி பணியை நிபுணர் செய்யட்டும். முடிவு உங்களுக்கு மிகப்பயனுள்ளதாக அமையும்.

  பணி சரியாகப் போய்க்கொண்டு இருக்கிறதா? காலக்கெடுவுக்குள் நடந்து கொண்டு இருக்கிறதா? அனைத்தும் சுமுகமாக நடைபெறுகிறதா? என மேற்பார்வை இடுவதுதான் உங்கள் வேலை. நீங்கள் ஓர் மேற்பார்வையாளர்களாக மட்டுமே இருங்கள். வெற்றிக்கனியைக் கொண்டு வந்து உங்கள் கையில் தருவது நிபுணரின் வேலை.

  ஆதலின் பணியை ஒரு சரியான நிபுணரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் ஒப்படையுங்கள்.

  இந்த இதழை மேலும்

  தன்னம்பிக்கை விஞ்ஞானிகள்

  “நார்மன் போர்லாக்”

  விஞ்ஞானிகள் என்பவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துபவர்கள். பல்வேறு பிரிவுகளில் பலர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே சொல்லக்கூடிய அளவில் புதிய கண்டுபிடிப்புகளை வழங்குகிறார்கள். அதிலும் ஒரு சிலர் மட்டுமே நினைவில் நிற்கும் அளவு விஞ்ஞான சாதனைகளை நிகழ்த்துகிறார்கள்.

  அப்படி என்றால் மற்றவர்கள் உண்மையில் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லையா? அல்லது, அவர்களுக்கு விஞ்ஞான ஆராய்ச்சியில் திறமை குறைவாக உள்ளதா? இல்லை, அனைவரும் முழு மூச்சுடனும், ஈடுபாட்டுடனும் தான் ஆராய்ச்சி செய்கின்றனர். ஆனால் ஆராய்ச்சி செய்யத் தேவையான உபகரணங்கள், மூலதனங்கள் போன்றவை ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அப்படி கிடைக்கப் பெற்றாலும் சிலர் மட்டுமே அவற்றை உரிய வகையில் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறார்கள்.

  இந்தக் கட்டுரையை தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நான் எழுதுவதன் காரணம், சிலர் தாங்கள் சிறந்த விஞ்ஞானியாக வரலாம் என்றதுடிப்புடன் இருக்கலாம். அவர்களுக்கு சரித்திரம் படைத்த விஞ்ஞானிகளின் சரித்திரத்தைத் தெரிவிப்பதன் மூலம் அவர்களது எண்ணம் மேலும் மெருகேறும் என்ற நம்பிக்கை தான்.

  ஒரு சிறந்த விஞ்ஞானியாக வருவதற்குத் தேவையான திறமைகளைக் காண்போம்…

  • தான் தேர்ந்தெடுக்கும் ஆராய்ச்சி துறையில் முழுவதுமாக தேர்ச்சி பெறுதல்
  • ஆராய்ச்சி செய்ய மிக உயர்ந்த அளவில் உள்ள ஆராய்ச்சி கூடத்தை தேர்ந்தெடுத்தல்
  • தன்னுடன் பணியாற்றும் சக ஆராய்ச்சியாளர்களுடன் எளிமையான முறையில் கருத்துக்களை     திறந்த மனத்துடன் பகிர்ந்து கொள்ளுதல்
  • ஆராய்ச்சியை முழுநேர தொழிலாக மேற்கொள்ளுதல்
  • தோல்விகள் ஏற்பட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து எடுத்துக்கொண்ட ஆராய்ச்சியை விட்டு    விலகாமல் அந்த ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்துதல்

  இப்படி, தான் செய்த ஆராய்ச்சிகளில் மனம் ஒருமைப்பாட்டுடன் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகளே உண்மையில் சாதனை விஞ்ஞானிகளாக உருவாகுகிறார்கள்.

  இந்த இதழில் உங்களுக்கு, என்னைக் கவர்ந்த வேளாண்மை விஞ்ஞானி, இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு முக்கிய பங்களிப்பைத் தந்த “நார்மன் போர்லாக்” பற்றிதெரியப்படுத்த உள்ளேன்.

  இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குக் காரணமாகிய டாக்டர் எம்.எஸ். சாமிநாதன், திரு. சுப்ரமணியம் ஆகியோரைப் பற்றி தான் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு மட்டும் அல்லாமல், உலகில் உள்ள பல ஏழை நாடுகளையும் பட்டினியின் பிடியிலிருந்து மீட்ட பெருமைக்குரியவர் டாக்டர் நார்மன் போர்லாக்.

  இவர் அமெரிக்காவில் பயிர் இனப்பெருக்க நிபுணராக தனது ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கி விவசாயத்திற்கென இதுவரையில் யாரும் பெறாமல் இருந்த நோபல் பரிசு பெற்ற மிகச்சிறந்த விஞ்ஞானி ஆவார்.

  இவர் தனது பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சியைத் தொடங்கும்போது ஆராய்ச்சிக்கு வழங்கப்படும் நோபல் பரிசு விவசாய விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படாமல் தான் இருந்தது. “நான் ஏன் இந்தத் துறையில் ஆராய்ச்சிசெய்ய வேண்டும்? அப்படியே ஆராய்ச்சிசெய்தாலும் நோபல் பரிசு இதுவரையில் கிடைக்காத துறை விஞ்ஞானம். அதை ஏன் நான் தேர்வுசெய்ய வேண்டும்?” என்று அவர் நினைத்திருந்தால் இந்த உயரிய பரிசு எப்படி அவரைச் சென்றடைந்திருக்கும்.

  கோதுமையில் மிகவும் சிறப்பான முறையில் தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார். அந்தக் காலகட்டங்களில் கோதுமை ரகங்களுக்கென உரங்களை செடிகளுக்கு இட்டால் அதை எடுத்துக்கொண்டு வளரும் பக்குவம் கொண்டதாக இல்லை. அதன் விளைச்சல் திறனும் மிகவும் குறைந்த அளவில் ஹெக்டருக்கு 1500 கிலோவாக தான் இருந்தது.

  இவர் தான் மேற்கொண்ட ஆய்வின் மூலம், குறைந்த உயரமுடைய, சாயாத தன்மையுடைய, உரத்தை இட்டால் அவற்றை நன்கு எடுத்துக்கொண்டு வளரும் புதிய இரகங்களைக் கண்டுபிடித்தார்.

  “மற்றவிஞ்ஞானிகள் இவற்றை கண்டுபிடிக்கவில்லையா? ஏன் இவருக்கு மட்டும் இந்த தனிச்சிறப்பு?” என்றுநீங்கள் நினைக்கலாம்.

  இவர் தனது கண்டுபிடிப்பினை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது மட்டும் அல்லாமல், ‘ராக்ஃபெல்லர்’ (Rockefeller) என்ற நிறுவனத்துடன் இணைந்து பட்டினியால் வாடிய மற்ற நாடுகளுக்கும் தனது புதிய ரகத்தை அறிமுகப்படுத்தி அதிக விளைச்சல்களைக் கொடுக்க ஆவண செய்தார். இதனால் தான் நோபல் பரிசு பெற்ற சிறந்த விஞ்ஞானி என்று போற்றப்படுகிறார்.

  இந்தியாவின் அப்போதைய விவசாய அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் மற்றும் அப்போதைய இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் எம்.எஸ். சாமிநாதன் ஆகியோருடன் தொடர்பு கொண்டு குட்டைரக கோதுமையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.

  இவர்களது கூட்டு முயற்சியால் இந்தியா, மூன்றாண்டுகளில் கோதுமை உற்பத்தியில் இரட்டிப்பு பயிர் வளர்ச்சியைப் பெற்றது. உணவு தானியப் பற்றாக்குறையும் சீர்செய்யப்பட்டது.

  தன் ஆராய்ச்சி பணியில் கிடைத்த புதிய கண்டுபிடிப்பை உலக மக்களிடம் எடுத்துக் கொண்டு சென்ற நார்மன் போர்லக் போற்றுதலுக்கு உடையவரே.

  டெல்லியில் நடந்த அகில உலக பயிர் ஆராய்ச்சி மாநாட்டில் இவர் ஆற்றிய உரையை கேட்கும் வாய்ப்பும், அவருடன் கலந்துரையாடும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. என் மனதில் தோன்றியவற்றை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  இன்று அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதியாக ஆன பிறகு தான் விஞ்ஞானிகள் இவ்வளவு சாதனை படைக்க முடியுமா என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டது. சாதனை படைத்த இன்னும் அறியப்படாத பல்வேறு விஞ்ஞானிகள் தன்னலமில்லாமல்,  தன்னம்பிக்கையுடன் உழைத்து, உலகிற்கு பல்வேறு கண்டுபிடிப்புகளை வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின் பட்டியலில் நமது வளரும் சமுதாயமும் ஆராய்ச்சியில் சாதனை படைக்கும் என்ற நோக்கத்தில் தான் இந்தக் கட்டுரையை அவர்களுக்காக சமர்ப்பணம் செய்கிறேன்.

  இந்த இதழை மேலும்

  பன்றிக்காய்ச்சல்

  பன்றிக்காய்ச்சல் என்பது ஏ இன்ப்ளூயென்சா (Influenza A) வகை வைரஸ் கிருமியினால் பன்றிக்கு வரக்கூடிய சுவாச நோய். ஆர்.என்.ஏ (RNA)வை அடிப்படையாகக் கொண்ட இந்த நுண்ணுயிர்களுக்கு உருமாறும் திறன் உண்டு. இந்நோய் ஏற்கனவே பன்றிக்காய்ச்சல் வந்த ஒருவரைத் தொடுதல் அல்லது அவருக்கு அருகில் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

  பன்றிக்காய்ச்சல் ‘சுவைன் புளூ’ (Swine Flu) என்ற வைரஸால் பரவுகிறது. இது ஆர்த்தோமைசோவெரிடே (Orthomyxoviridae) என்ற வைரஸ் ஆகும். இவ்வாறு மனிதனிட மிருந்து மனிதனுக்குப் பரவும் இந்தப் பன்றிக் காய்ச்சல், பன்றியின் மாமிசத்தை உண்பதால் பரவாது என்பது குறிப்பிடத்தக்கது.

  சுவைன் புளூ வைரசிலேயே 5 வகை உள்ளன.

  எச் – 1 என் 1 (H1N1),  எச் – 1 என் 2 (H1N2), எச் – 2 என் 1 (H2N1), எச் – 3 என் 1 (H3N1), எச் – 3 என் 2 (H3N2) மற்றும் எச் – 2 என் 3 (H2N3).

  அதில் இப்பொழுது பரவியுள்ள வைரஸை எச்1 என்1 என்று பட்டியலிட்டு உள்ளனர்.

  வகைகள்

  மூன்று வகையான இன்ஃபுளூயன்சா வைரஸ்கள் மனிதர்களைத் தாக்குகிறது. அவை,

  • இன்ஃபுளூயன்சா ஏ (A)
  • இன்ஃபுளூயன்சா பி (B)
  • இன்ஃபுளூயன்சா சி (C)

  இன்ஃபுளூயன்சா ஏ (A)

  இன்ஃபுளூயன்சா (A) பல துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

  • எச் 1 என் 1,     எச் 1 என் 2, எச் 2 என் 3, எச் 3 என் 1, எச் 3 என் 2

  முக்கியமாக பன்றிகளில் மூன்று முக்கிய இன்ஃபுளூயன்சா வைரஸ்கள் காணப்படுகின்றன. அவை,

  • எச் 1 என் 1
  • எச் 1 என் 2
  • எச் 3 என் 2

  இதில் (எச் 1 என் 1) மட்டும் அதிகமான நோய் தாக்குதலுக்குக் காரணமாகிறது.

  இன்ஃபுளூயன்சா பீ (B)

  இந்த வகையான இன்ஃபுளூயன்சா பன்றிகளில் காணப்படுவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இன்ஃபுளூயன்சா சி (C)

  இந்த வகையான வைரஸ் மனிதர்கள் மற்றும் பன்றிகளையும் பாதிக்கிறது. பறவைகளை இது பாதிப்பதில்லை இந்த வகை வைரஸ் மிகக் கொடுமையான நோய்த் தாக்குதல்களை ஏற்படுத்துவதில்லை.

  பரவும் முறைகள்

  மூன்று முறைகளில் இந்நோய் மனிதனைத் தாக்குகிறது.

  • பன்றிகளுக்கிடையில் பரவுகிறது.
  • பன்றியிலிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது.
  •  மனிதர்களுக்கிடையில் பரவுகிறது.

  பன்றிகளுக்கிடையில் பரவும் முறை

  இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்கிலிருந்து பாதிக்கப்படாத விலங்கிற்கு நேரடித் தொடுதலின் மூலம் பரவுகிறது. முக்கியமாக விலங்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கூட்டாக ஒன்று திரட்டிக் கொண்டு செல்லும் போது பரவுகிறது. இதன்மூலம் விலங்குகளுக்கு வைரஸ் நேரடியாக பரவுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்குத் தும்மல் ஏற்படும் போது காற்றின் மூலமாக எளிதாகப்பரவுகிறது. குறிப்பிட்ட நாட்களில் அல்லது ஒரு சில நாட்களில் அனைத்து விலங்குகளுக்கும் பரவுகிறது.

  பன்றியிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் முறை

  முக்கியமாக மனிதர்கள் விலங்குகள் (பன்றிகள்) வளர்க்கும் இடத்தில் வேலைபார்க்கும் பொழுதோ, அவற்றிற்குப் பராமரிப்புக் கொடுக்கும் போதோ பன்றியிலிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது.

  அறிகுறிகள்

  • காய்ச்சல்
  • மூக்கிலிருந்து நீர் வடிதல்
  • இருமல்
  • தொண்டை வலி
  • மூச்சுவிடுதலில் சிரமம்
  • பசி இல்லாமை
  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு
  • தசைவலி
  • நீலம் மற்றும் சாம்பல் நிறத் தோல்
  • தோல் எரிச்சல்
  • தண்ணீர் குடிக்க முடியாத நிலை
  •  உடல் எடை குறைதல்
  • உடல் சோர்வு

  மனிதர்களுக்குப் பரவுதல்

  இருமல் மூலம் வைரஸ்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் காற்று வழியாக பரவும். வைரஸ் உள்ள இடங்களைத் தொட்ட பின்னர், வாய் மற்றும் மூக்குப் பகுதியைத் தொடும் போது நமக்கு வைரஸ் பரவி விடும்.

  சிகிச்சை முறைகள்

  பன்றிகளுக்கு

  சுவைன் இன்ஃபுளூயன்சா பன்றிகளின் மூலமாகப் பரவுகிறது. பன்றிகளுக்குத் தகுந்த சிகிச்சை அளப்பதன் மூலமாக இந்நோய் பரவுதலைத் தடுக்கலாம்.

  முதலில் பாதிக்கப்பட்ட விலங்கை தனிமைப் படுத்த வேண்டும். விலங்குகளுக்குத் தகுந்த முறையில் தடுப்பூசிகளைப் போடுவதன் மூலமாகவும் கிருமிகளைத் தாக்கும் மருந்துகளைப் பாதிக்கப்பட்ட விலங்கிற்குக் கொடுப்பதன் மூலமாகவும் இந்நோய் பரவுவதைத் தடுக்கலாம்.

  மனிதர்களுக்கு

  பாதிக்கப்பட்ட மனிதர்களுக்குப் பன்றிக்காய்ச்சலிற்கான அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தி முக உறையை அணிவித்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

  மருத்துவர்களன் ஆலோசனைப்படி ஒசல்டாமிவிர் (Oseltamiviri) மற்றும் ஜனாமிவிர்  (Zanamivir), அதாவது வைரஸ்களைக் குறைக்கக்கூடிய மருந்துகள் கொடுக்கப்படுகின்றது.

  இதன்மூலம் பின்விளைவுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

  மற்றும் முன்கூட்டியே சுவைன் ஃபுளூவிற்கான தடுப்பூசியைப் போடுவதன் மூலமாகவும் இந்நோய் வராமல் இருக்கலாம்.

  தடுப்பு முறைகள்

  பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு அளக்க வேண்டும்.

  பன்றி வளர்ப்புத் தொழிலாளர்கள் பன்றிக்கு நோய் தாக்கப்பட்டதை அறிந்திருந்தால் அந்த விலங்கினைத் தனிமைப்படுத்த வேண்டும்.

  பராமரிப்பு முறைகளைக் கையாளும் போது முகத்தில் முக உறை மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

  பாதிக்கப்பட்ட விலங்கிற்குத் தடுப்பூசி போட வேண்டும்.

  மனிதர்களுக்குப் பரவும் முறையைத் தடுத்தல்

  இந்நோய் மனிதர்களுக்குப் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட நபரைத் தனிமைப்படுத்த வேண்டும்.

  பாதிக்கப்பட்ட நபர் மற்றவர்களைத் தொடுவதன் மூலமாகவோ தும்முவதன் மூலமாகவோ, இருமுவதன் மூலமாகவோ பரவுகிறது.

  இதனால் அவர்கள் மற்றவர்களிடம் நேரடி தொடர்பு கொள்வதைத் தடுக்க வேண்டும்.

  தொற்று ஏற்பட்ட முதல் ஐந்து நாட்களில் இந்நோய் எளிதாக மற்றவர்களுக்குப் பரவுகிறது.

  குழந்தைகளும் இந்நோயினால் அதிகளவு பாதிக்கப் படுகின்றனர்.

  முக்கியமாக முறையான கை கழுவும் முறையினைப் பின்பற்றுவதன் மூலமாக இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

  தேவையில்லாமல் மற்றவர்களைத் தொடுவதோ கைகளைக் குலுக்கவோ கூடாது.            மற்றவர்களுக்கு முன்னால் இருமல் ஏற்படும் போதோ, தும்மல் ஏற்படும் போதோ கைக்குட்டையினை உபயோகப்படுத்த வேண்டும்.

  தடுப்பூசி போடுதல்

  தடுப்பூசி போடுவதன் மூலமாக இந்நோயினைத் தடுக்கலாம்.

  இதற்காக சுவைன் ஃபுளூ தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  தடுப்பூசி போடுவதன் மூலமாக உடலுக்குத் தேவையான பிறபொருளெதிரி (ஆன்டிபாடி) கிடைக்கிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகிறது. இதனை வருடம் ஒருமுறை போட வேண்டும்.

  இந்த இதழை மேலும்

  இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!

  பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ என்று 247-வது குறளில் இவ்வுலகில் பிறந்து வாழ்பவர்கட்கு பொருள் இல்லாவிட்டால், நாம் வாழ்வது, வாழ்க்கையே அல்ல என்றார் செந்நாப் போதர்.

  நாம் வாழ்வதற்கு பொருளாதாரம் அவசியம். எதுவுமே இங்கு இலவசமாகக் கிடைக்காது; ஆனால் இன்றைய ஆட்சி முறையில் இலவசங்கள் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டதைப் பார்க்கிறோம். பொருள் + ஆதாரம் = பொருளாதாரம். ஆதாரம் என்றால் அடிப்படை.

  பொருளாதாரத்தில் இன்று நாம் உள்ள நிலைக்கும், நமது மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கைக்குத் தேவையென நாம் நினைக்கும் எண்ணத்துக்குமான இடைவெளியை பூஜ்யமாக்க வேண்டும்.

  இது வெகு சுலபம்; பொருட் செலவில்லாமல் நம்மால் நம் பொருளாதார நிலையை, நாம் விரும்புமளவு உயர்த்திக் கொள்ள முடியும்.

  பொருள் என்பதை மெட்டீரியல் (material) என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம். பொருட்களை வாங்கத் தேவையான பணத்தை (currency) என்று கூறலாம்.

  “ஒன்றைக் கொடுத்துத்தான் வேறு ஒன்றைப் பெறமுடியும்” என்பது இயற்கை விதி. இந்த விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

  பணம் பெறநாம் நமது நேரம், உழைப்பு, பேச்சு இவற்றில் ஏதாவதொன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ கட்டாயம் செலவழிக்க வேண்டும். பணமும் பணியும் ஒன்றைஒன்று சார்ந்தே உள்ளது.

  பணி என்பது நம் திறமைகளின் வெளிப்பாடு என்பதால், முழுத்திறமையும் வெளிப்படும்போது நமது தேவைக்கும் மேலாகவே பணம் நமக்குவரும். குறைவாகவே திறமை வெளிப்பட்டால், அதற்கேற்ப குறைவான பணமே வரும் என்பதை மறந்துவிடக் கூடாது.

  பணம் என்பது நம் வளத்தின் வெளிப்பாடு என்பதால் யாரிடம் பணம் அதிகமாக உள்ளது? யாரிடம் குறைவாக உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம் தான்.

  சிலரது படாடோபமான வாழ்க்கை முறையைப் பார்த்தால், அவர் செல்வச் செழிப்புடன் இருப்பதாய் தெரியும். ஆனால், உண்மையில் அவ்வாறில்லாமல் சமுதாய அந்தஸ்த்துக்காகவோ, வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ இதுபோல் நடிக்கலாம்.

  பலரிடம் பணம் நிறைய இருக்கும். அவர்களது வாழ்க்கை முறையைப் பார்த்தால், கஷ்டப்பட்டு வாழ்கிறார்களோ என எண்ணத்தோன்றும்.

  எளிமையாக வாழ்வது தவறில்லை. அதேசமயம் இருப்பதை மறைத்து, மற்றவர்கள் தம்மை நிதி உதவிக்கு அணுகக்கூடாது என்பதுபோல இருக்கக்கூடாது.

  செல்வம் என்பது செல்வதற்காகவே வருவது என்றனர். அது ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் விவசாயிகள், உழைப்பாளிகள், பொருள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் எனப் பலரும் கஷ்டப்படாமல் வாழ முடியும்.

  பணமானது எங்காவது தேங்கி நின்றுவிட்டால், அதனால் ஒருவருக்கும் பயனில்லாமல் போய்விடும். பயன்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

  இது மின்சாரம் போல் சேமிக்க முடியாதது அல்ல; ஆனால் மின்சாரம் உற்பத்தியான பின் உடனே செலவழிக்கப்பட்டே ஆக வேண்டும்.

  பணமானது, தேவைக்குமேல் கூடுதலானால் சேமிப்பு பல வகையில் இருக்கும். பொதுவாக நம் பகுதியில் இடம், வீடு, நகை, டெபாசிட் எனப் பல வழிகளிலும் வருமானம் வரும் வகையில் தான் கூடுதலான பணம் முதலீடு செய்யப்படுகிறது.

  முதலீடு என்றசொல்லே அற்புதமானது. யுரேகா என்று ஒரு நிறுவனம் கோவையில் உள்ளது. இவர்கள் சொல்வது “எங்கள் முதல் நோக்கம்  உங்கள் முதலீட்டுக்கான உத்திரவாதம்”.

  ஒரு தொகையை மூலதனமாக (அசலாக) முதலீடு செய்தால், அது பல மடங்கு உயர வேண்டும். அதிகரிக்க வேண்டும். ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் எதுவுமே நிரந்தரமில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இடம், வீடு வாங்கினால் அதன்மூலம் ஒரு வருமானம் வாடகை என்றபெயரில் கிடைப்பதுடன், நாளுக்கு நாள் இந்தச் சொத்தின் மதிப்பு அதிகமாகும்.

  வாடகைக்கு வசிப்போர், காலி செய்யாதது, இடத்தை போலிப்பத்திரம் மூலம் விற்றுவிடும் கயமைத்தனம் இன்று பரவலாகி வருகிறது.

  நகைகள் வாங்கிவைத்தால், அவைகளைப் பாதுகாப்பது என்பது சவாலுக்குரிய பணி தான். விலை ஏறி, இறங்குவதும் நம் கையில் கிடையாது.

  டெபாசிட் என்பதை தனியார் மற்றும் பொதுத்துறைஎன இரண்டாகச் செயல்படுத்தலாம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியாரிடம் டெபாசிட் செய்தால், திரும்பக் கிடைப்பது நிச்சயமல்ல. உறுதியாகத் திரும்பக் கிடைக்கும் என பொதுத்துறைநிறுவனங்களில் டெபாசிட் செய்தால், வட்டி குறைவாக கிடைத்தாலும் முதல் கட்டாயம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

  ஆனால் நாணயத்தின் மதிப்பு சர்வதேச அளவில், அடிவாங்கினால், முதலுக்கே மோசம் தான். இது நம் கையில் (நல் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்தல்), நல்ல நாட்டுப்பற்றில், ஊழல் இல்லாத நிர்வாகத்தில் தான் உள்ளது.

  இது சாத்தியம் தான்.

  இவை தவிர பணத்தை அப்படியே பதுக்கி வைப்பதாலோ, கணக்கில் காட்டாமல் வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்வதாலோ எவ்விதப் பயனுமில்லை.

  நம்மிடம் உள்ள பணம் நமக்கு உதவ வேண்டும். இல்லாவிட்டால் மற்றவருக்கு உதவ வேண்டும்.

  எதற்குமே உதவாத பணம் இருந்தென்ன? இல்லாவிட்டால் என்ன? பலவிதமான சேவைகளுக்கு என ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதும் அளிப்பதும் சமுதாய சிந்தனையின் வெளிப்பாடு ஆகும்.

  திருவள்ளுவரும் ஒப்புரவறிதல் என்ற அதிகாரத்தில்,

              தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

              வேளாண்மை செய்தற் பொருட்டு

   என குறள் 212ல் கூறியுள்ளார்.

  கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தைத் தகுதியானவர்களுக்கு உதவுவதற்குச் செலவிட வேண்டும் என்பது பொருள்.

  எப்படிச் செலவிடுவது?

  முதலில் வருவது தனக்கு என்பது தான். ஒருவருக்குரிய அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது பசி தான். இதைப் பசிப்பிணி என்றனர். இது கொல்லும் நோய்.

  வாகனம் இயங்க எரிபொருள் (Fuel) எப்படித் தேவையோ அதுபோல் நம் உடல் இயங்க உணவு தேவை. எரிபொருள் இல்லாத வாகனத்தை இயக்க முடியாது. உணவில்லாத உடலையும் இயக்க முடியாது.

  வாகனத்தைப் பராமரிப்பது (Service) போல, உடலையும் பராமரிப்பது முக்கியம். தினமும் 3 வேளை உண்ணும் நாம் வாரம் ஒருநாள், ஒருவேளை உண்ணாமல், நம் சீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பது தான், நாம் உடலைப் பராமரிப்பது.

  இதேபோல் பேசாமல் மவுனமாக இருப்பதும், நம் பேச்சு, செயல்களைப் பரிசீலித்து, அதாவது தற்சோதனை செய்து, தேவையான மாற்றங்களைச் செய்வதும் மனதுக்கான பராமரிப்பாகும்.

  உணவு முரண்பட்டால், அளவு முறைமாறினால் செரிமாணம் குளறுபடியாகி, உடல் புத்துணர்ச்சி இழந்துவிடும்.

  நமது உடல் 2 மாடி கட்டிடம் போல் இயற்கையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் என்பது பாதம் முதல் தொப்புள் வரை, முதல் தளம் என்பது அதற்கு மேல் கழுத்து வரை, 2ம் தளம் என்பது கழுத்துக்கு மேல்.

  ஒரு வீட்டை நம் உடலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அதேபோல் இருப்பதைத் தெளிவாக உணர முடியும். எனவே வீட்டைப் பராமரிப்பது போல் குறிப்பிட்ட கால இடைவெளியில் எண்ணெய் தேய்த்து குளிப்பது, பேதி மருந்து சாப்பிடுவது, உண்ணாவிரதம் இருப்பது என்பவைகள் அவசியம் செய்ய வேண்டும்.

  உணவு கிடைக்காமல் இறப்பதைப் பட்டினிச் சாவு என்று சொல்லுகிறோம். குழந்தைகள், நோயாளிகள், முதியோர் பலர் இந்த வகையில் உலகின் சில நாடுகளில் மரணமடைவதை அறிந்துள்ளோம்.

  உடல் பலம், வாலிபம் இருந்தும் உழைத்துப் பொருளீட்டாமல், தவறான வழியில் பிறர் பொருளைக் கவரும் கயவர்கள் இருந்தும் இறந்தவரே என்றார் பண்டைய ஞானியர்.

  சிலர் குறைவான அளவே உண்பார்கள்; அதிக எடையுடன் குண்டாக இருக்கிறார்கள். சிலர் அதிக அளவு உண்பார்கள்; ஆனால் ஒல்லியாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் நம் உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளின் முரண்பட்ட செயல்பாடு தான்.

  இந்தக் குறைபாட்டைச் சரி செய்வதற்கு இறைவன் கொடுத்துள்ள மூலிகை தான் அருகம்புல். இதைப் பச்சையாக அரைத்துச் சாறு எடுத்து அல்லது பொடியாக வாங்கி வெந்நீரில் கலந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்துப் பருகி வந்தால், குறைதீர்ந்துவிடும்.

  விதை, விதையாகவே இருக்கும் வரை அதற்குப் பாதுகாப்பு தான். ஆனால் விதை இதற்காகப் படைக்கப்படவில்லையே.

  விதை முளைத்து, செடியாகி, மரமாகி, பூத்து காயாகி, கனியாகி, மற்றஉயிரினங்களுக்கு உதவுவதற்குத்தான்.

  நாம் ஈட்டும் பொருளும் நமக்கு மட்டுமே பசியாற்றாமல், நம்மோடு இணைந்து வாழும் குடும்பத்தினர், நமது உற்றார், உறவினர், நாம் வசிக்கும் ஊரில் உள்ளோர், உலக மக்கள் எனப் பலரது துயரத்தையும் துடைப்பதற்கு உபயோகிப்பதே பொருளாதாரத்திலுள்ள இடைவெளியை பூஜ்யமாக்கும்.

  காஷ்மீரில் வெள்ளம் என்றவுடன், நன்கொடை வழங்குகிறோம். ஆப்கானிஸ்தானில் இயற்கைப் பேரிடர் என்றபோது, நாம் நம் நாட்டுக்குச் செலுத்தும் வரித் தொகையில் ஒருபகுதி அவர்கட்கு உதவித்தொகையாக நமது அரசாங்கத்தால் அனுப்பப்படுகிறது. இது போன்றவை தான் உலக மக்களுக்கு உதவுவது.

  ஏழையாக பிறந்தது தவறல்ல; ஏழையாகவே வாழ்வது தான் தவறு” என்பதை அறிவோம். தேவைக்கும், வரவுக்குமான இடைவெளியை பூஜ்யமாக்கினால், நாம் விரும்பியது கிடைக்கும்.

  திட்டமிடல், இடைவிடா முயற்சி, செயல்பாடு இவை மூன்றும் யாரிடமுள்ளதோ, அவர்களிடம் பொருளாதாரம் கைகட்டி நிற்கும்.

  கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. எனவே, அந்தச் செயலைக் கஷ்டம் என்று சொல்லாமல் நம் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு என எண்ணிச் செயல்பட்டாலே போதும்.

  பணம் பத்தும் செய்யும். அது என்ன பத்து? நம் இரு கைகளிலும் உள்ள விரல்களின் எண்ணிக்கை 10. இந்த 10 விரல்களும் இணைந்து செயல்பட்டால் முழுமையான பலன் கிடைப்பது போல், பணமிருந்தால் அதை வைத்து எதையும் செய்யலாம் என்பதற்குக் கூறிய சொற்கள் தான் இவை.

  ஆற்றில் போட்டாலும் அளந்துபோடு” என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.

   “அளந்து” என்பது நம் பகுத்தறிவாகும். யார் தம் அறிவைப் புறந்தள்ளாமல், உணர்ச்சி வயப்படாமல் வாழ விரும்புகிறாரோ, அவருக்குத் தேவை கல்வியறிவு.

  அறியாமைக்கும் அறிவுக்குமான இடைவெளியை பூஜ்யமாக்கும் வழிகளைக் காண்போம்.

  இந்த இதழை மேலும்

   

  வெற்றி எங்கே?

  பணம் இருந்தால் எல்லாவற்றையும் பெற்றுவிடலாம்” என இன்றைய மாறிவரும் உலகில் சிலர் நினைக்கிறார்கள்.

  எல்லாப் பொருளையும் பணம் இருந்தால் விலைக்கு வாங்கிவிட முடியுமா?

  “பணத்தைக் கொடுத்து நாயை வாங்கிவிடலாம். ஆனால், நாயின் அன்பை விலைக்கு வாங்க முடியாது” என்பதுசீனப் பழமொழியாகும்.

  நாம் உபயோகப்படுத்தும் சில பொருட்களுக்கு விலை உண்டு. ஆனால் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான அன்பு, நட்பு, வெற்றி போன்ற பலவற்றிற்கு விலை நிர்ணயம் செய்ய இயலாது. இவற்றையெல்லாம் பணம் கொடுத்தும் வாங்க முடியாது. அப்படி வாங்கினாலும் மனம் மகிழ்ச்சியோடு வாழ முடியாது.

  “உண்மையான வெற்றி” என்பது கடையில் விலைகொடுத்து வாங்கும் பொருளல்ல. பெற்றவெற்றியை மனநிறைவோடும், மன மகிழ்வோடும் அனுபவித்துக் கொள்பவர்கள்தான் உண்மையான வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள்.

  “என் பிரண்ட் சுரேஷ் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய செல்போன் வைத்திருக்கிறான். என்னிடம் பழைய செல்போன்கூட இல்லை”.

  “என் கிளாஸ் மேட் கவிதாவிலை உயர்ந்த காரில்வந்து இறங்குகிறாள். அதிர்ஷ்டசாலி எனக்கு விலையில்லா சைக்கிள்தான்”.

  “எங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மார்ட்டின் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். அந்தப் பாக்கியம் எனக்கில்லை” என மற்றவர்களது புதிய செயல்பாடுகளை வெற்றியாக எண்ணி வருத்தப்படுபவர்களும் உண்டு.

  “அவர்கள் வைத்திருக்கும் பொருள் நம்மிடம் இல்லையே?” என ஏங்கித் தவித்து“வெற்றி நமக்குக் கிடைக்கவே கிடைக்காது” என சோர்ந்துபோனவர்களும் உண்டு.

  சமீபத்தில் கல்லூரி மாணவரான சங்கரின் பெற்றோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

  சங்கர் பிளஸ் 2 தேர்வில் 996 மதிப்பெண்கள் பெற்ற மாணவன். ஆனால், முதல் செமஸ்டர் தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்திருந்தான். தோல்விக்கான காரணத்தை அவனோடு என்னைப் பார்க்க வந்த சங்கரின் அம்மா விளக்கினார்.

  “சார், எங்க பையன் சங்கர் ரொம்ப நல்லவன். வீட்டைவிட்டுதேவையில்லாமல் வெளியே போகமாட்டான். அநாவசியமாக ஊர் சுற்றமாட்டான். ஆனால் இந்த ‘செல்போன்’ வாங்கிய பிறகுதான் படிப்பில் அவனது கவனம் குறைந்துவிட்டது” என்றார் அம்மா.

  சங்கர் கையில் 20,000 ரூபாய்க்குமேல் மதிப்புள்ள ‘லேட்டஸ்ட்’ செல்போன் எப்படி வந்தது?

  “சார், எங்க வீட்டுக்காரர் இவனுக்கு 5 வயசு நடக்கும்போதே இறந்துபோய்விட்டார். இவன் எனக்கு ஒரே பையன். இவனுக்கு எல்லாமே நான்தான். காலேஜில் சேர்ந்தவுடன் ‘செல்போன்’ வாங்கிக் கேட்டான். ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டிகட்ட முடியாமல் தவிக்கிறேன். நான் என்ன செய்ய முடியும்? என் நிலைமையைச் சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. பிடிவாதம் பிடித்தான். பிறகு ஒருவாரம் கல்லூரிக்கு லீவுபோட்டான். கல் சுமக்கும் கூலி வேலைக்குப் போனான். ஒருநாள் சம்பளம் 600 ரூபாய். 10 நாளில் செல்போன் வாங்கினான். இப்போ மாதத்திற்கு ஒருமுறைபுதுசு புதுசா கலர் கலரா செல்போன் வாங்கிவைத்து ஏதோ செய்கிறான். நான் படிக்காதவள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள்தான் உதவவேண்டும்?” என்றார் சங்கரின் அம்மா.

  நான் திகைத்துப்போனேன்.

  கல்லூரி மாணவர் சங்கர் தனக்கு ‘செல்போன்’ வேண்டுமென்று ஆசைப்பட்டது தவறில்லை.

  அந்த செல்போனை எப்போது வாங்க வேண்டும்? எப்படி வாங்க வேண்டும்? எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும்? எவ்வளவு நேரம் உபயோகிக்க வேண்டும்? என்று முறைப்படி சிந்திக்காமல் செயல்பட்டதில்தான் பிரச்சனை உருவாகிறது.

  விலை உயர்ந்த ‘செல்போன்’ வைத்திருந்தால்தான் மற்றவர்கள் மதிப்பார்கள் என்று போட்ட ‘தப்புக்கணக்கு’ அவரது படிப்பையே பாழாக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது. ‘விலை உயர்ந்த செல்போன் வைத்திருப்பவர்கள்தான் வெற்றியாளர்கள்’ என்று நினைத்து அந்த வெற்றியை செல்போன்மூலம் பெற்றுவிடலாம் என்று செயல்பட்டதுதான் வேதனையின் கருக்களமாக மாறிவிட்டது.

  “பிறரைப்போல நன்றாக வாழவேண்டும்” என நினைப்பது தவறில்லை. ஆனால் விலை உயர்ந்த செல்போன் வைத்திருப்பதும், காரில் செல்வதும், புதிய வீடு கட்டுவதும்தான் ‘வெற்றியின் அடையாளம்’ என நினைப்பதில்தான் சிக்கல்கள் உருவாகின்றன.

  “அடுத்தவர்களின் பொருட்கள்தான் அவர்களுக்கு மரியாதையையும், மகிழ்ச்சியையும் தருகிறது” என்ற எண்ணம் ஒருவரது மனதில் உருவாகும்போது பல்வேறு எதிர்பாராத நிகழ்வுகள் நிகழ்ந்துவிடுகிறது. இதனால்தான், நம்மிடம் இல்லாமல் இருக்கும் பொருட்கள் மற்றவர்களிடம் இருந்தால் அவை அவர்களின் ‘வெற்றி’யின் சின்னங்களாக நமக்குத் தோன்றுகின்றன.

  வெற்றியை அடைய விரும்புபவர்கள் “மற்றவர்கள் வைத்திருக்கும் விலை உயர்ந்த பொருட்கள்தான் அவர்களதுவெற்றியை உறுதி செய்கிறது” என்ற எண்ணத்தைத் தவிர்ப்பது நல்லது.

  “தகுதிக்குமீறி, அதிக வட்டிக்குக் கடன்வாங்கி, விலை உயர்ந்த ஏஸி (அ/இ) காரில் செல்பவர்களில் பலர் வாங்கிய கடனுக்கு வட்டிகூட கட்ட முடியாமல் பயத்தால் உருவாகும் வியர்வைத் துளிகளோடும், மன அழுத்தத்தோடும் அந்தக் காரில் செல்கிறார்கள்” என்ற உண்மையைப் புரிந்துகொண்டால் “விலை உயர்ந்த பொருட்கள் மட்டும் வைத்திருப்பது வெற்றி அல்ல” என்பதுவிளங்கும்.

  நாம் வைத்திருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் நமக்கு மகிழ்வைத் தரவேண்டுமென்றால் அந்த பொருட்கள் உழைப்பின் வெற்றியாலும், நேர்மையான எண்ணத்தினாலும் வாங்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். படிப்பைத் தியாகம் செய்து குறுக்குவழியில் வாங்குகின்ற பொருட்கள் அதிக அளவில் வேதனையைத் தந்துவிடும்.

  குறிப்பாக இளம்வயதில் சிறந்தமுறையில் பாடங்களைப் படித்து உண்மையான வெற்றியைப் பெறமுயலுவது பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு நல்லது.

  “மான அவமானங்கள், ஏமாற்றங்கள், நிலைகுலைந்துபோகச்செய்யும் கால சூழ்நிலைகள், நம்பிக்கைத் துரோகங்கள், செய்யும் காரியத்தில் நட்டங்கள், வஞ்ச சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர், நண்பர்களின் சூதுகள், அன்பின் இழப்புகள் இவையெல்லாம் மானிட வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள். இதுபோன்ற போராட்டங்களையெல்லாம் மன உறுதியுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்கின்ற மானுடன் எவனோ, அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணமிக்கிறான்” என்பது பகவான ஸ்ரீகிருஷ்ணரின் வாக்கு.

  வெற்றியாளராக ஒருவர் திகழ என்ன செய்யவேண்டும்? என்பதை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்குச் சொன்ன உபதேசம்மூலம் தெரிந்துகொள்ளலாம்.

  இல்லாததை நினைத்து ஏக்கப் பெருமூச்சுக்கள் விட்டு வாடுவதைவிட இருப்பதைக்கொண்டு மனநிறைவோடு செயல்பட்டு வெற்றியை நோக்கி, நேர்மையோடு பயணம் செய்தால் வெற்றி, நம் பக்கம் தானாக வந்து சேர்ந்துகொள்ளும்.

  இந்த இதழை மேலும்