Home » Articles » பிராணயாமம்

 
பிராணயாமம்


அனுராதா கிருஷ்ணன்
Author:

யோக முறையில் மூச்சு பயிற்சியையே பிராணயாமம் என்று குறிப்பிடுவர். பிராணயாமத்தில் முக்கியமான ஒன்று யாதெனில் நாம் நம் மூச்சை கவனிக்க வேண்டும். அப்படி மூச்சை விழிப்புணர்வோடு கவனிக்கும் போதுதான் நாம் இதுவரை சுவாசம் என்று ஏதோ செய்து வந்துள்ளோம் என்ற உண்மை புரியும். நாம் உள்ளே கவனிக்க ஆரம்பிக்கும்போது நம் உயிர் மூச்சானது ஆழமாகிறது. ஆழமான மூச்சானது நம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பிராண சக்தியை (O2) அளித்து அங்குத் தேங்கியிருக்கும் கரியமில வாய்வை (CO2) வெளியேற்றுகிறது. இதனால் நம் உடல் புத்துணர்வாகிறது. மனம் தெளிவாகிறது. நாம் நம் மூச்சை விழிப்புணர்வாக கவனித்தாலே நம் எண்ணங்கள் நேர்படும்.

பிராணயாமத்தை நாம் பல விதங்களில் பயிற்சி செய்யலாம். நான் இங்கு பிராணயாம பயிற்சியை உங்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியாது. அதை நீங்கள் தகுந்த யோக அமைப்பில் குருவின் வழிகாட்டுதலில் பயின்று செய்வதால் மட்டுமே முழுமையான பலனைப் பெற முடியும். ஆனால், அதுபற்றிய விழிப்புணர்வை நான் உங்களுக்கு அளிக்க முடியும். உதாரணமாக, நாம் சௌகரியமாக அமர்ந்துகொண்டு நம் கைகளை மேல் முகமாக நம் தொடையின் மீது வைத்துக்கொண்டு மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். அதுவே நம் கைகளை கீழ்முகமாக பார்த்து நம் தொடை மீது வைத்து மூச்சை உள்ளிழுத்து வெளியிடும்போது அது இன்னொரு விதமாக இருக்கும். ஆக, சுவாசம் செய்யும்போது நம் கைகள் எவ்விதம் இருக்கிறது என்பதைப் பொறுத்து நம் சுவாசத்தின் ஆழமும் ஊடுறுவும் இடமும் மாறுபடும். அதே போல் நம் கை விரல்களை எந்த முத்திரையில் வைத்து சுவாச பயிற்சி செய்கிறோம் என்பதைப் பொறுத்தும் நம் உடல் பகுதிகளுக்கு பிராண சக்தி பாய்வது மாறுபடும்.

பிராணயாமம் பலவிதங்களில் பல்வேறு யோக அமைப்புகள் கற்றுக்கொடுக்கின்றன. அதில் குறிப்பிட்ட ஒன்றுதான் சிறந்தது என்று நாம் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலனை அளிக்கின்றன. இன்னும் சில யோக அமைப்பில் மூச்சு பயிற்சியோடு கூடிய யோகாசனங்களை பயிற்று விக்கின்றனர். அப்படிச் செய்வதால் உடற்பயிற்சியுடனான பிராணயாமமும் ஆயிற்று. பிராணயாமத்தால் நம் மனம் அல்லது எண்ணம் நேர்படும் அல்லது நிதானப்படும். நாம் யாதொன்றையும் ஆழமாக யோசித்து செயலாற்ற பிராணயாமம் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

இதுவரை யாதொரு மூச்சு பயிற்சியும் செய்யாதவர்கள் நாடி சுத்தி பிராணயாமத்தை செய்யலாம். இது நம் மூச்சில் விழிப்புணர்வை அதிகப்படுத்தி, இரு நாசி சுவாசங்களையும் சமநிலைக்கு கொண்டுவரும். இந்த பிராணயாமத்தால் நாம் யாதொன்றையும் சமநோக்கு பார்வையில் கையாளும் தன்மைக்கு மாறுகிறோம். இந்த மூச்சு பயிற்சியால் நம் உடலின் ஆண் பெண் சமநிலை நிலைபெறும். நாம் பொதுவாக நம் மூச்சை கவனித்தோமேயானால், நம் மூச்சு 45 நிமிடங்களுக்கு ஒரு முறைதான் வலதும் இடதுமாக மாறுகிறது. ஆனால் இந்த நாடி சுத்தி பிராணயாமம் செய்வதால் நம் மூச்சு எப்பொழுதும் சமமாக நடைபெற்று நாம் நம் எண்ணங்களில் சமநிலை பெறுகிறோம்.

அடுத்து உடல் சோம்பலில் இருப்பவர்கள் உஜ்ஜை மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் உடல் சுறுசுறுப்பை பெற முடியும். இந்த உஜ்ஜை மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் நம் சுவாசமானது உடல் முழுமைக்கும் நிரம்பி நம்முள் உத்வேகத்தையும் அளக்கும். அப்புறம், நம் மூளை புத்துணர்வு பெற நாம் பஸ்திரிகா பிராணயாமம் செய்யலாம். இது நம் மூலாதாரம் முதல் மூளை வரை பிராண சக்தியை அள்ளக் கொடுக்கும். அடுத்து நம் மனதின் குப்பைகளை அள்ள வௌயே கொட்ட சுதர்ஷன கிரியா என்ற மூச்சு பயிற்சியை செய்யலாம். முடிவாக நாம் எப்போதெல்லாம் ஓய்வாக இருக்கிறோமோ அப்போதெல்லாம் நாம் நம் மூச்சை கவனிக்க ஆரம்பித்தால் அதுவும் கூட குட்டி குட்டி பிராணயாமம் தான். நம் பேச்சைக் குறைத்து மூச்சை கவனித்தால் நமக்கு வாழ்க்கையில் என்றும் உயர்வுதான்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2015

என் பள்ளி
பயப்படாதே
வரலாற்றில் ஒளிவீசும் தைரியத் திலகங்கள்
நாளைய விடியலுக்கான நம்பிக்கைக் கதவுகள் திறக்கப்படும்!
படித்தால் பெரியாளாகி விடுவாய்
யாரிடம் வேலையை ஒப்படைப்பது
தன்னம்பிக்கை விஞ்ஞானிகள்
பன்றிக்காய்ச்சல்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
வெற்றி எங்கே?
பிராணயாமம்
கண்ணா மூச்சு
உழைக்க உறுதி எடு! உலகம் போற்றப் பெயரெடு!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்